பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - தருமி - 1

அந்த காலத்தில …
விலைவாசி அன்றும் இன்றும் … 1

- தருமி

அப்பா ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்த போது 20 ரூபாய் சம்பளமாம்; அதில் 10 ரூபாய் கொடுத்து மதுரை வெங்கலக்கடைத் தெருவில் இன்றும் உள்ள பாண்டியன் ஹோட்டலில் இரண்டுபேர் திருப்தியாக மதிய எடுப்புச் சாப்பாடு முடித்து விடுவோம் என்பார்கள். கேட்கும்போது ஆச்சரியாக இருந்தது. பவுன் விலை எட்டு ரூபாய் பத்து ரூபாய் என்னும்போதும் அப்படித்தான் தோன்றியது.


ஆனா இப்போ நான் கடந்து வந்த பாதையிலே அதேபோல பழங்கதையைப் பேசினா எனக்கே ரொம்பவே இன்ட்ரஸ்டிங்காகத்தான் இருக்கு. இந்தக் காலத்தோடு ஒப்பிட்டு பார்க்கிறதுக்கு ரெண்டு விஷயம் நினைவிலிருக்கு. அது இந்த நாட்டு வாழைப்பழமும் உப்பும். உப்பு வண்டிக்காரர் ரோடு வழியே தள்ளுவண்டி தள்ளிக்கிட்டு சத்தம் போட்டு கூவி வித்துட்டுப் போவார். 'ரூவாய்க்கு 20 படி உப்பே' அப்டின்னு கூவிக்கிட்டு போற சத்தம் இன்னும்கூட கேக்குது. கொஞ்ச நாள் கழிச்சி அதே வியாபாரி 'அணாவுக்கு ஒரு படி உப்பு' அப்டின்னு கத்திக்கிட்டு வித்தார். இந்த அணா விவரம் புரியாத பசங்களுக்கு விவரம் சொல்லணுமே; அதாவது ஒரு அணான்றது இன்னிய கணக்குக்கு 6 பைசா; ரூபாய்க்கு 16 அணா.


இந்த ஓரணாவுக்கு அப்போவெல்லாம் வாழைப்பழம் வாங்க அப்பா தெரு முக்குக்கடைக்கு அனுப்புவாங்க. போகும்போதே அணாவுக்கு எத்தனைன்னு கேளு; நாலு'ம்பான்; ஆறு கேளு; அஞ்சு தருவான்னு மொதல்லேயே திரைக்கதை வசனம் எல்லாம் சொல்லித் தந்துருவாங்க. கடைக்குப் போனா அதே மாதிரிதான் நடக்கும். அஞ்சு பழம் – அப்போ பொதுவா கிடைக்கிறது நாட்டுப் பழம்தான்; எப்போவாவது பச்சைப் பழம் கிடைக்கும் – அப்பா சொன்னது மாதிரி வாங்கிட்டு வருவேன். இன்னைய கணக்குக்கு ஒரு ரூபாய்க்கு 80 பழம் வாங்கிட்டு வர்ரது மாதிரி ! ஆனா இப்போ நிலவரம் நாட்டு வாழைப்பழம் ஒண்ணே ரெண்டு ரூபாயை நெருங்கியிருச்சி ! ம்ம்..ம் .. அது அந்தக் காலம்.


அது என்னவோ அந்தக் காலத்தில் குமுதம் பத்திரிகை வாங்குறவங்க கல்கண்டு பத்திரிகையையும் சேர்த்தே வாங்குவாங்க. ஏறக்குறைய மாதத்துக்கு ரெண்டு தடவையாவது வீட்டுக்கு வர்ர அண்ணன் ஒருத்தர் வாங்குற கல்கண்டுதான் நான் முதலில் வாசிக்க ஆரம்பித்த புத்தகம். துணுக்குச் செய்திகள் நிறைய இருக்கும். அதில் எத்தனை உண்மை இருந்திருக்குமே தெரியாது; ஆனா படிக்க படிக்க ஆர்வமா இருக்கிறமாதிரி துணுக்குகள். பாருங்களேன் இன்னும் என் நினைவில் இருக்கு ஒரு துணுக்கு. அதாவது மோட்டார் சைக்கிளில் வேகமா ஒருவர் போக, பக்கத்தில் சென்று கொண்டிருந்த லாரியில் இருந்து துருத்திக் கொண்டிருந்த தகரம் அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டியவரின் தலையை அப்படியே துண்டித்து விட்டதாம். ஆனாலும் தலையில்லாத அந்த உடலோடு மோட்டர் சைக்கிள் பல மைல் தூரம் சென்றதாம்!


'அந்த கரிய இருளில் கருப்பு நிற ப்யூக் கார் ஒன்று அந்த நீண்ட சாலையில் விரைந்து கொண்டிருந்தது. அதன் ஹெட்லைட் வெளிச்சம் கத்திபோல் இருளைக் கிழித்து …. ' இப்படியாகப் போகும் தமிழ்வாணனின் கதைகள். சங்கர்லாலும், மாணிக்கமும், கத்திரிக்காயும், மாதுவும், இந்திராவும், துணைக் கமிஷனர் வஹாபும் ரொம்ப வேண்டியவர்களாக , நெருக்கமானவர்களாக பலகாலம் இருந்தார்கள்.


அக்டோபர் 1966-ல் தஞ்சையருகில் உள்ள ஒரு கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்தேன். "சித்தாளு: வேலை. அதாவது அப்போதிருந்த demonstrator என்ற வேலை. விரிவுரையாளர் வேலைக்குரிய தகுதி இருந்தாலும் wire pulling போன்றவைகள் இல்லாமல் போவதாலோ, இல்லை நமது 'ராசியினாலோ' இந்த சித்தாள் வேலையில் சேருவதுண்டு. அப்படி சேர்ந்த போது முதல் மாதச் சம்பளம் 198 ரூபாய். அதில் வீட்டுக்கு வேறு கட்டாயம் 30 – 50 ரூபாய் அனுப்பணும். முடிவெட்ற கடை, சினிமா தியேட்டர்கள் தவிர எல்லாத்துக்கும் இருக்கவே இருக்க மாத அக்கவுண்ட். அதுனால கையில காசு இல்லாட்டியும் பிரம்மச்சாரி வாழ்க்கை நல்லாவே போச்சு. நானும் அறை நண்பனும் மாதச் சம்பளம் – கவரில் போட்டு ரூபாய்,பைசா கணக்கில் தருவார்கள் – வந்ததும் மாலை ரூமுக்கு வந்ததும் பெட்டை தட்டி விரித்துப் போட்டு ரூபாய் பைசா எல்லாத்தையும் அதில் பரப்பி, அதுக்கு மேல் ஹாயாக சாய்ந்து ஒரு 'தம்' இழுக்குறது அடிக்கடி நடக்கும். அதாவது, நாங்கல்லாம் அப்படி 'காசுல புரளுரோமாம்'! அடுத்த நாளிலிருந்து மறுபடி அக்கவுண்ட் தான்.


பொருட்களின் விலைகள் பற்றி பேசும்போது நினைவுக்கு வர்ர இன்னொரு விஷயம். இந்த பெட்ரோல் விலை. 1970 அக்டோபரில் ஜாவா பைக் வாங்கினேன். அப்போது ஒரு லிட்டர் விலை ஒரு ரூபாய் ஏழு காசுன்னு நினைக்கிறேன். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலையேறி மூன்று ரூபாய் சில்லரை ஆயிற்று. அதிலிருந்து முதல் தடவையாக ஒரு பெரிய ஜம்ப்; ஆறு ரூபாயும் சில்லறையுமாயிற்று. அது ஒரு பெரிய oil shock ஆக இருந்தது. பிறகு .. பழகிவிட்டது இன்றுவரை !


75-லிருந்து 90 வரை hard to meet both ends meet என்பார்களே அந்த நிலைதான். ஒரு மாதிரி வண்டி ஓடும். பல சிக்கன வழிகள் அது இதுன்னு செய்து பார்த்து வாழ்க்கையை ஓட்டணும். அதில் ஒரு முயற்சியாக ஒவ்வொரு தினச் செலவையும் எழுதி வைத்துப் பார்த்தோம். எல்லாம் ஒண்ணாதான் இருந்திச்சின்னு பிறகு அந்த முயற்சியையெல்லாம் விட்டுட்டு வாழ்க்கையை ஓட்டினோம் சந்தோஷமாக. அந்த சமயத்தில் எழுதிய கணக்கு நோட்டின் சில பக்கங்களை இன்னும் பத்திரமா வச்சிருக்கேன். அதைப் பார்க்கும்போது எனக்கே ஆச்சரியமா இருக்கு. போனா போகுது ஒண்ணுரெண்டை உங்களுக்கும் காண்பிக்கிறேன். பார்த்துக்கங்க. வேற யார்ட்டயும் சொல்ல வேண்டாம், சரியா?


படம்: 1

1975, ஜூலை சம்பளம் 600 வாங்கி 623 ரூபாய் செலவழித்து கணக்கை எப்பட்டியோ தங்கமணி டகால்டி வேலை செஞ்சு (எல்லாம் நம்ம நிதியமைச்சர்களெல்லாம் இவங்கள பாத்துதான் பட்ஜெட் போடுவாங்களோ?) 598.35-க்குக் கொண்டுவந்து பட்ஜெட்டைச் சரி கட்டியிருக்காங்க பாருங்க!








படம் 2:
அக்டோபர் 75 .. சம்பளம் 600 ரூபாய்.. முதல் தேதி அன்னைக்கி குடும்பத்தோடு வெளியே ஜாலியா போய் டிபன் சாப்பிட்டுட்டு காய்கறி வாங்கிட்டு வீட்டு வாடகை 85 ரூபாயை கொடுத்துட்டு …. அன்னைக்கி மொத்த செலவு = ரூ. 88



படம் 3 :

அந்த மாச நடுவில் இன்னொரு சினிமாவுக்கு டாக்டருக்கு அதுக்கு இதுக்குன்னு ஒரு 20ரூபாய் 60 பைசா செலவு.அனேகமா மூணு அல்லது அஞ்சு மாச தவணையில் வாங்கின சீலிங் ஃபேனுக்கு 45 ரூபாய்; ஜாவாவுக்கு பெட்ரோல் 7.50(அப்போ ஒரு காலன் ஃ 5 லிட்டர் போட்டிருப்பேன் ஆயிலோடு சேர்த்து!)



சே! பின்னிட்டம்ல … ஆகஸ்ட் மாசம் 7ரூபாய் 75 பைசா பட்ஜெட்டில் உபரித்தொகை இருந்திருக்கிறதே!

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - தருமி - அறிமுகம்

தருமி - அறிமுகம்

மனிதர்களின் தேடல்களும் அவர்களது வாழ்க்கை தரும் அனுபவங்களும் ஆளுக்கு ஆள் மாறுபடக் கூடியவை. அடுத்த மனிதனின் துயரம் கண்டு உணர்வுபூர்வமாக நாமும் அதில் பங்கு கொள்ள முடியும்போதுதான் மனிதனின் சுயம் வெளிப்படுகிறது. மனிதனின் சுயத்தை வெளிப்படுத்த அவனுக்குள் இருக்கும் குழந்தை எப்போதும் புன்னகைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்கு நமக்குக் குழந்தை உள்ளம் வேண்டும் அந்த உள்ளம் எழுத்துக்களிலும் வெளிப்பட வேண்டும் அத்தகைய எழுத்துக்குச் சொந்தக்காரரான தருமி ஐயாதான் இந்த வாரம் நமது நட்சத்திரம்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கடந்த 2003 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டாலும் உறங்கி விடாத உற்சாகத்துடன் எழுதும் இளைஞர். கடந்த காலத்தையும் இந்தக் காலத்தையும் அதனதன் நெறியோடு சீர்தூக்கி வாழ்க்கையை அனுபவிக்கின்றவர். புதிய தலைமுறையைப் புறக்கணிக்காமல் பழையவைகளைக் கழித்து விடாமல் தோளில் கை போட்டுக்கொண்டு ஒரு நண்பனிடம் உரையாடும் பாணியில் மிக இலகுவாக தனது நினைவலைகளை நம்மோடு பங்கு கொள்ள வரும் தருமி ஐயாவின் இயற்பெயர் சாம் ஜார்ஜ். மனைவியும் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். இரண்டு மகள்கள். 'நண்டும் சிண்டுமாக' மூன்று பேரக் குழந்தைகள். வசிப்பது மதுரையில். இதோ தருமி ஐயாவின் அறிமுகம் அவரது மொழியிலேயே ...............


ஒரு மணி நேர வகுப்பென்றால் முழுதாக 60 நிமிடமும் பாடத்தை மட்டும் பேசிவிட்டு, மணியடித்ததும் முடித்துவிட்டுச் செல்லும் நல்ல ஆசிரியனாக இல்லாமல், எதையும் பேசலாம் என்பதோடு, ஆண்டுமுடிந்து செல்லும்போது ஒவ்வொரு மாணவனிடமும் என் முத்திரை ஏதோ ஒன்றைப் போட்டு அனுப்ப வேண்டுமென நினைக்கிற ஆசிரியனாக 37 வருடம்….

வகுப்பு மட்டும் போதாது என்பதாக நினைத்து தனி மாணவர் குழுக்களை அமைத்து மரத்தடியில் அமர்ந்து எதையும் பேசலாம்; பேச வேண்டும் என களம் அமைத்துக் கொடுத்து என்னென்னவொ பற்றியெல்லாம் பேசி விட்டு பேச வைத்துவிட்டு … ஓய்வு பெற்ற பின் சின்னாட்கள்வரை 'பழைய நினைப்புடா பேராண்டி' என்பதாக பழகி வந்த பழைய வழி இல்லாமல் போனதால் ஏதோ ஒரு சூன்யம் கவ்வ …

நல்லநேரத்தில் வந்ததுதான் வலைப்பதிவுகள். நினைத்ததையெல்லாம் பேசிப் பழகியவனுக்கு அதையே எழுதுவதற்கு இப்போது பெரிய களம். மாணவர்களிடமிருந்து கற்றுக் கொண்டதுபோலவே இங்கும் தொடர்ந்து பாடம் பயில்கிறேன். நடு நடுவே வாத்தியார் புத்தியையும் காண்பிப்பதற்கும் வசதி. வேறென்ன வேண்டும்.

ஆனாலும் முதலிரண்டு ஆண்டுகளில் எழுதியது போல் இப்போது எழுதுவதில்லை. சட்டி காலியாகிவிட்டதா இல்லை அந்த அளவு நேரம் தருவதில்லையா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. இருந்தும் தொடருவதாகத்தான் எண்ணம், ஆசை.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஃபஹீமா ஜஹான் - 7

நஞ்சூட்டப்பட்ட மரம்
- ஃபஹீமா ஜஹான்


மலைச்சரிவின் பின்னால் இருந்து
சூரியன் தலைகாட்டத் தொடங்கியவுடன்
கதிர்களை இலைக் கரங்களில் ஏந்தி
நிழலை வழியவிடத் தொடங்குவாய்

எறும்புகள் போல நித்தமும் அலைகின்ற
எப்பொழுதேனும் உன் நிழலில் கூடுகின்ற
அந்தத் துடுக்குமிக்க சிறுமியரின் தலைமுடியைக்
கிளை தாழ்த்திக் கலைத்துவிட்டு
ஏதுமறியாத பாவனையுடன் அசைந்தாடுவாய்
மழை ஓய்ந்த வேளைகளில்
இலைகளில் தண்ணீரைத் தேக்கி வைத்து
அதே சிறுமியரின் முகமெங்கும்
தெளித்துக் கூத்தாடுவாய்

வானத்தைத் தாங்கிடவோவென
நெடிதுயர்ந்த கிளைகளினூடே
தூரத்திசைகளைப் பார்த்திருந்தாய்
உனது வேரடிக்கு
விஷமெடுத்து வந்த மனிதனை மட்டும் கவனியாது
கிளைகளை அசைத்தபடி மரம் போல நின்றிருந்தாய்

உனது வேர்களைத் தேடி ஆயுதங்கள் சூழ்ந்த வேளை
பற்றியிருந்த மண்ணை பறிகொடுக்கலானாய்
மண்ணையிழந்தவர் தம் படிமங்களையும்
மொழியையும் இழப்பார்களென்று
உனது நிழலில் அமர்ந்து அந்தச் சிறுமியர் படித்த
வரலாற்று நூலை
என்றோவொரு நாளில் நீயும் கேட்டிருந்தாய்

தோண்டிய கிடங்கிலிருந்தது
வேர்களால் கரையேறி வரமுடியாமற்போகவே
விஷத்தைத் திணித்து
மூச்சுத் திணறும் வரைக்கும் மண்ணிட்ட
மரணத்தின் முற்றுகைக்குள் மூழ்கினாய்

உனது வேர்களை ஒடுக்கி ஒடுக்கிச் சுருட்டிய பொழுதும்
அதிர்ந்து போயிருந்த வேர்க்கண்களுக்குப்
பதுங்கிக் கொள்ளும் இடமெதுவும்
புலப்படாமலே போயிற்றோ?

இரவுமுழுவதும் ஓடிக் கொண்டிருந்த அருவியிடம்
உனைச் சுழ்ந்திருந்த விஷத்தைக்
கழுவிக் கொண்டோடுமாறு
மன்றாடிக் கொண்டேயிருந்தாய்
எல்லைகளைத் தாண்ட முடியாத அருவி
இடர்மீட்புக் குழுவினரின்
நிராகரிக்கப் பட்ட உதவிகளைப் போல
மணற் கரைகளை நனைத்துத் திரும்பலாயிற்று

சுவர்க்கத்தின் வாயில்கள் மூடப்படட அதிகாலையில்
எங்கிருந்தோ மழையைச் சுமந்து வந்து
கருமுகில்கள் பொழிந்தன:
அந்த மழைக்குக் கருணையே இல்லாதிருந்தது

மழைநீரில் கரைந்தூறிய நஞ்சை
வேறு வழியற்று
உன் மெல்லிய வேர்களில் நிரப்பலானாய்
பின்னர்
அன்னையர் போலத் தாங்கிநின்ற கிளைகளுக்கும்
பருவமொன்றின் கனவுகளுடன் பூத்திருந்த மலர்களுக்கும்
விஷத்தை எடுத்துச் சென்றாய்
சின்னஞ்சிறு குழந்தையின் பிஞ்சுக் கரங்களை நிகர்த்த
பசிய தளிர்களுக்கெலாம் நஞ்சைப் புகட்டிய பொழுது
பிரலாபித்து அழத்தொடங்கினாய்

இரகசியமாக ஊடுருவும் உனது வேர்கள்
கட்டுமானங்களைத் தகர்ப்பதாயும்
அடர்ந்து வளர்ந்த கிளைகள்
விஷ ஜந்துக்களைப் பேணிக் காப்பதாயும்
புனையப் பட்ட கதைகளை எப்பொழுதும் ஏற்க மறுத்தாய்

உடலெங்கும் ஊர்ந்த செல்லும் மரணத்தின் எதிரிலும்
உறுதிகொண்ட வீரத்துடன் வீழாமல் நின்றாய்
வானம் கைவிட்டதையும்
பூமி சிறைப்படுத்தியதையும்
காப்பாற்றிட முடியாத சூரியன் பரபரப்புடன்
தெருவழியே அலைந்து திரிந்ததையும்
நீலம்பாரித்த இலைகளினூடாக
இறுதியாகக் கண்டிருப்பாய்

(பண்புடன் ஆண்டு விழாவுக்காக எழுதப்பட்ட கவிதை இது)

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஃபஹீமா ஜஹான் - 6

அவளை வழியனுப்பிய இடம்
- ஃபஹீமா ஜஹான்


பாதைகள் அழைக்கின்றன
ஆசைகள் நிரம்பிய உள்ளம் அழைக்கிறது
ஆனாலும்
அவளை ஆழிக்குள் புதைக்கிறாய்

நட்சத்திரக் கூட்டங்களெல்லாம்
அதே தரிப்பிடங்களில்
இன்னும் வழிபார்த்திருக்கின்றன
அன்பைக் கொன்ற நீயோ
அவளது வழிகளை மூடுகிறாய்

அதிகாலையில்
தூய அருவியொன்றிலிருந்து
அவளது எளிய குடிசை நோக்கிச்
சுமந்து வந்த தெள்ளிய நீர்க்குடத்தை -நீ
கல்லெறிந்து உடைத்த வேளை
தவத்தில் மூழ்கியிருந்த
அவள் கானகத்து மான்கள்
திகைத்தோடித் திசை மறந்தன

மீளவும் உடைத்திட முடியாக்
கலயம் சுமந்து புறப்பட்டவளைக்
கலங்கிய நீர் ஓடைகளில்
திரும்பத் திரும்ப இறக்கிவிட்டாய்
வீடடைய முடியாத
இருள் வழியெங்கும்
அவளது பாதங்களை அலைக்கழித்தாய்

அவள் நீர் ஊற்றிக் காத்திருந்த
செழிப்புமிகு பயிர் நிலங்களில்- உனது
அடங்காப்பிடாரி ஆட்டுக் குட்டிகளை
விளையாட அனுப்பினாய்

கதிர்களை நீ
நாசமறுக்காதிருந்திருப்பாயானால்
தானியக் களஞ்சியங்களை
வாழ்வின் ஆதாரங்கள் கொண்டு
நிரப்பியிருப்பாள்

இறுதியாக
உயிர் விடைபெறப் போகும்
துறைமுகமொன்றில் அவளைச் சந்தித்தாய்
சொல்,
மாபெரிய கண்ணீர்க் கடலில்
அவள் இறங்கிப் போன போது
நீ தானே வழியனுப்பி வைத்தாய்

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஃபஹீமா ஜஹான் - 5

எனது சூரியனும் உனது சந்திரனும்
- ஃபஹீமா ஜஹான்

பொன்னந்திக் கிரணங்கள் படியத் தொடங்கிய மாலையில்
குளிர்ந்த மலையைவிட்டு கீழிறங்கி
தும்பிகள் பறந்து திரிவதும்
தங்க நிறக் கதிர்களாடுவதுமான வயல் நிலங்களையும்
நீரோடைகளையும் தென்னந்தோப்புகளையும் ஊடறுத்து
மனிதர்கள் வடிந்து போன சந்தைக் கட்டிடங்களையும்
மஞ்சள் வண்ணப் பூச்சொரியும் பெரு விருட்சத்தையும்
தாண்டி நீ சந்திக்கு வந்தாய்

பணியை முடித்து
நகரத்தின் நச்சுக் கரும்புகையில் தோய்ந்து
வாகன இரைச்சல் செவியோரம் இரைந்திட வந்திறங்கி
வீடு நோக்கி நடந்த வேளை
திடீரென எதிரே வந்து வேகம் குறைத்தாய்

உன் வானிலொரு சூரியனையும்
என் வானிலொரு சந்திரனையும் கண்டோம்
கதைப்பதற்கு இருந்த எல்லாச் சொற்களும்
கண்களிலேயே தேங்கிடக் கண்டோம்
அன்றும்
தலை திருப்பி நான் பார்க்கும் கணம் வரை காத்திருந்து
புன்னகையை உதடுகளில் மறைத்து
ஏதோ ஒரு இராகத்தை மீட்டிய படியே வேகம் கூட்டிச் சென்றாய்

அன்பு பொங்கிப் பிரவகித்த அபூர்வ நாட்களில்
நிழல் போலப்
பிரிவைச் சொல்லிப் பின் வந்தது காலம்

நான் வரச் சாத்தியமற்ற இடங்களில் நீயும்
நீ வரத் தேவையற்ற இடங்களில் நானும்

வாழ்வின் விதிமுறைகள்
எனதுலகையும் உனதுலகையும் வேறு பிரித்த வேளையில்
விடைபெற்றோம்
ஒன்றித்துப் பறந்த வானத்தையிழந்தோம்
இறுதியாக அன்று தான் அழகாகச் சிரித்தோம்

எனது சூரியனும் தனித்துப் போயிற்று
உனது சந்திரனும் தனித்தே போயிற்று

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஃபஹீமா ஜஹான் - 4

ஒரு கடல் நீரூற்றி....
- ஃபஹீமா ஜஹான்

நட்சத்திரங்கள் பூத்த வானம் விரிந்திருந்தது!
எமக்குப் பின்னால்
பாதியாய் ஒளிர்ந்த நிலவு தொடர்ந்து வந்தது!
தூரத்து வயல் வெளியை மூடியிருந்தது
வெண்பனி
தென்னைகளில் மோதி குடியிருப்புகளை ஊடுருவி
எம் செவி வழி நுழைந்தது
வங்கக் கடலில் எழுகின்ற அலையோசை !
சந்தடி ஓய்ந்த தெரு வழியே
நீயும் நானும் விடுதிவரை நடந்தோம் !

இப்படியே
எத்தனையோ இரவுகளில்
விவாதிப்போம் நெடு நேரம்
முடிவில் ,எதிர்காலம் குறித்த அவநம்பிக்கைகளுடன்
பிரிந்து செல்வோம் !

பின் வந்த, பதற்றமான பொழுதொன்றில்
உன் விடுதலை வேட்கைக்குத் தடையாயிருந்த
அனைத்தையும் உதறி அடவி புகுந்தாய் !

பரணி...
உன் நினைவுகள் தேய்ந்து கொண்டிருந்த வேளை
மாரி கால அந்திப் பொழுதொன்றில்
நனைந்த சீருடைகளில் இருந்து நீர் சொட்டச் சொட்ட
மீளவும் நீ வந்தாய் !

அலையெழும்பும் கடல் பரப்பினில்
உனக்கான பணி முடிக்கவென விடைபெற்றுப் போனாய்:
வாழ்த்துச் சொல்ல வாயெழவுமில்லை!
ஆரத்தழுவிட நீ விரும்பவுமில்லை !
வெளியே பெய்த மழை என் கன்னங்களில் வழிந்தோட...
மழைப் புகாரினூடே மறைந்து போனாய் !

திரைகடல் சென்ற திரவியமானாய் !
ஆழிப்பரப்பெங்கும் ஊழித்தீ எழுந்து தணிந்தது-நீ
திரும்பி வரவே இல்லை !

இன்று வீரர்கள் துயிலும் சமாதிகள் மீது
காலத்துயரின் பெரு மௌனம் கவிழ்ந்துள்ளது !
சமுத்திரத்தையே சமாதியாகக் கொண்டவனே !
இங்கு ஏதுமற்ற உன் கல்லறையில்
ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ?

பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - அய்யப்ப மாதவன் - 2

சும்மா வினையாய்
- அய்யப்ப மாதவன்

சும்மா போன் பண்ணியிருந்தான் (ஒரு வேலையுமில்லாமல்)
சும்மா டாஸ்மாக்குக்கு போயிருந்தேன் ( காசில்லாமல்)
சும்மா அவனுக்கு போன் வந்தது ( அநேமதேயமாக)
சும்மா மயூரா ஓட்டலுக்கு வரச்சொன்னான் ( திட்டமில்லாமல்)
சும்மா அவனை பார்க்கப் போனோம் ( வெறுங்கையோடு)
சும்மா ஆட்டோவில் போனோம் ( காசு தராமல்)
சும்மா அவனை கைப்பேசியில் அழைத்தோம் ( ஓசியில்)
சும்மா அவன் எடுக்கவில்லை ( விளையாட்டாக )
சும்மா நாங்கள் கோபப்பட்டோம் ( எரிச்சலில்லாமல்)
சும்மா மயூராவின் பார் உதவியாளனை தொந்தரவு செய்தோம் ( தாட்சண்யமில்லாமல்)
சும்மா உதவியாளனும் தேடினான் ( நடிப்பாக)
சும்மா வெளியில் வந்தோம் (வீணாக )
சும்மா படிக்கட்டுகளில் இறங்கப் பார்த்தோம் ( பொழுதுபோக்காக)
சும்மா மூடியிருந்தது படிக்கட்டு வழி ( வெறுமையாக )
சும்மா லிப்டிக்காக காத்திருந்தோம் ( வேறு வழியின்றி)
சும்மா நின்றது கூட்டம் ( வெட்டியாக)சும்மா லிப்டிக்குள் ஏறி விட்டோம் ( காரணமின்றி )
சும்மா இரண்டு பேர் சுமை தாங்காமல் வெளியே போயினர் ( ஏமாற்றமாக)

சும்மா நாங்கள் சிரித்துக்கொண்டோம் ( மகிழ்ச்சியில்லாமல்)
சும்மா தரை வந்தது ( எதிர்பார்க்காமல்)
சும்மா வெளியேறினோம் ( களங்க்மில்லாமல்)
சும்மா நண்பன் கோபப்பட்டு அலைய விட்டவனை திட்டினான்( கோபமில்லாமல்)
சும்மா பாருக்கு போனோம் ( வேடிக்கையாக)
சும்மா மனைவி பேசினாள் ( உண்மையாக)
சும்மா விசு வந்தான் ( பொறுப்பாக)
சும்மா ஃபுல் வாங்கினோம் ( காசு தந்து )
சும்மா அறைக்கு வந்தோம் ( எதிர்பார்ப்போடு)
சும்மா குடித்தோம் புகைத்தோம் ( பழக்கமாக)
சும்மா பேசினோம் பேசிக்கொண்டிருந்தோம் ( இயல்பாக)
சும்மா இரவு போய்க்கொண்டிருந்தது ( நிற்காமல்)

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஃபஹீமா ஜஹான் - 3

தீவில் தனித்த மரம்
- ஃபஹீமா ஜஹான்

தூர தேசப் பறவையொன்று
தங்கிச் சென்ற மரம்மீளவும்
அந்தப் பறவைக்காகக்
காத்துக் கிடக்கிறது

தன் கிளைகள் எறிந்து தேடும்
வான் பரப்பில் பறவை
அதன் பாடலைப்
பதித்துச் செல்லவில்லை.
வேர்கள் ஊர்ந்து பரவும் மண்ணில்
அது
எந்த நிழலையும்
விட்டுச் செல்லவும் இல்லை

மலைகளிடமோ நதிகளிடமோ
பறவை தனது
பயணப்பாதை பற்றிய
செய்தி எதனையும்
பகன்றிடவே இல்லை

சூரிய சந்திரரும்
தாரகைக் கூட்டங்களும்
குருவியின் சேதிகளை
உரைத்திட மொழியின்றி மறையும்

வேர்களும் கிளைகளும்
நீளமுடியாமலொரு பெருங்கடல்
மெளனத்தில் உறைந்த
மரத்தைச் சூழ்ந்திருந்து
ஆர்ப்பரிக்கிறது நிதமும்

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஃபஹீமா ஜஹான் - 2

ஊற்றுக்களை வரவழைப்பவள்
- ஃபஹீமா ஜஹான்

தோட்டம்:

அறுவடை ஓய்ந்த வயல் வரப்புகளில்

மந்தைகள் மேயவரும் காலங்களில்

கோடை தன் மூச்சைக் கட்டவிழ்க்கும்

ஆற்றங்கரைத் தோட்டத்துப் பசுமையும் கருகும்.

"தண்ணீர் தேடிப் பாம்பலையும்

காட்டில் திரியாதே"

அம்மம்மாவின் கவனம் பிசகும் கணமொன்றில்

பதுங்கிப் பதுங்கி நோட்டம்விட்டுத்

தோட்டம் பார்த்து ஓட்டமெடுப்பேன்.

அச்சம் தவிர்த்திடவும் கொய்யா பறித்திடவுமாய்

கையிலே ஓர் தடி

அத் தடியையும் செருப்பொரு சோடியையும்

மரத்தடியில் விட்டுக்

கிளையொன்றில் அமர்ந்து கொள்வேன்.

கற்பனையும் பாடலும் தோட்டமெங்கிலும் பரவி

பள்ளத்தே பாய்ந்தோடும் ஆற்றிலும் கரைந்தோடும்.

ஆறு:

ஆற்றின் நீரோட்டம் படிப்படியாக வற்றி

கோடையின் உச்சத்தில் நரைத்த தேகம் பூணும்

மாலைப் பொழுதொன்றில்,

தாம்பூலமிடித்து வாயிலேதரித்து வீட்டைப் பூட்டிச்

சேலைத் தலைப்பில் சாவியை முடிந்து சொருகி இடுப்பில்

தீர்க்கதரிசனத்துடன் புறப்படுவாள் அம்மம்மா

மண்வெட்டியை ஊன்றி ஊன்றி.

காரணம் கேட்டு நிற்கும் என்னிடமோ

புதையல் அகழ்ந்திடப் போவதாய்க் கூறி நடப்பாள்.

நானும் தொடர்வேன்,

தோட்டத்து ஒற்றையடிப் பாதையின் சருகுகளைச்

சிறு மண் வெட்டியால் இழுத்தவாறு

அவள் பின்னே

புதையல்:

அத்திமரத்தின் கீழே

கருநிறப் பாசி படர்ந்து

நீர்ப் பூச்சிகள் சருக்கள் நிகழ்த்தும்

நீர் தேங்கிய மணலை அகழத் தொடங்குகையில்

வெண்ணிற மணலோடுசலசலத்து ஊறும் குளிர் நீர்

ஊறிவரும் நீரை வழிந்தோட வைக்கும்

கால்வாய் அமைப்பையும் அவளே அறிவாள்.

அத்தியின் கிளைகள் ஆடும்

தெள்ளிய நீர்ச்சுனையை

உருவாக்கிய பெருமிதத்துடன்

மாலை இருளை ஆற்றில் விட்டுக்

கரையேறி வீடடைவோம்

சிறுமியும் பாட்டியும்.

நாசகாரன்:

பின்னாளில்

எல்லோரும் வந்தங்கே துவைப்பர் குளிப்பர்.

இடையிடையே உயர்ந்த ஆற்றங் கரையின்

மூங்கில் மரங்களின் மறைவில் நின்று

வந்திருப்பவரை அடையாளங் கண்டு திரும்புவாள் பாட்டி.

பின்னும்

கண்காணிப்புத் தவறிய இடைவெளியில் வந்து

படுகுழி தோண்டி வைத்துப் போயிருப்பான்

அவளது வடிகாலமைப்பு ஞானத்தின் துளியும் வாய்க்காத

அற்பப் பயலொருவன்.

தெளிந்த நீர் ஊற்றுக் குட்டையாக மாறி

அழுக்கு நீர் சுற்றிச் சுழலுமங்கே

நாசமறுத்த பயலவனை முனிந்த படி

மீளவும் புணரமைப்பாள் வியர்வை வழிந்திட அம்மை.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஃபஹீமா ஜஹான் - 1

இரகசியக் கொலையாளி
- ஃபஹீமா ஜஹான்

பகல் முழுதும்
மலைகளின் சாம்பல் நிறப் போர்வைக்குள்
தேங்கிக் கிடக்கும் இருள்
மாலையில் பதுங்கிப் பதுங்கி மலையிறங்கி
ஊரின் திசைகளெங்கிலும்
உறைந்திட ஆரம்பிக்கும் கணங்களில்
எனை வழியனுப்பி வைப்பாய்

உன்னையும்எனது ஆனந்தங்களையும்
அந்த வீட்டுத் தனிமையின்
பசியுற்ற வாய்களிடம்
தின்னக் கொடுத்துவிட்டு
எதிர்க் காற்றில் மோதி மோதி
உற்சாகமிழந்த பாதங்களால்
மிதிவண்டியைச் செலுத்துவேன்

திரும்பித் திரும்பிப் பாராமல்
பக்குவமாய்ப் போய் வருமாறு
உனது பிரார்த்தனைகளையெல்லாம்
வழித்துணையாய்த் தொடரவிட்டு
நெஞ்சின் திரவியத்தை வழியனுப்பிவைப்பாய்

மெளனத்தில் மூழ்கிய
பரந்த வயல் வெளியின் கடைசி வளைவையும்
கடந்து மறையப் போகும் கணத்தில்
ஏக்கத்துடன் திரும்பிப் பார்ப்பேன்
நின்றிருப்பாய் அவ்விடத்தே
நீயொரு புள்ளியென

துயரம் தழுதழுக்கும் பெருமூச்சுக்களை
வீட்டினுள் அலையவிட்டு-நீ
கதவுகளை மூடிக் கொள்ளும் இரவில்
தூரத்து மலைகளில்
ஊமையாய்த் தீயெறியும்

நீ முத்தமிட்ட வாசனையும்
சேலைத் தலைப்பால் போர்த்தி எனைத்
தூங்க வைக்கும் கதகதப்பும்
நினைவில் மேவிட உறங்கி
மறுநாளும் உனக்கான பகல் உணவை
மாலையில் எடுத்து வருவேன்

உனைப் பிரிந்து நான்
நீள் தூரம் சென்ற காலங்களில்
உயிர் வதைபட வாழ்ந்திருந்தாய்
அனாதரவாய் விடப்பட்ட
உனதுயிரின் கரைகளை
அரித்தரித்தே அழித்தது
விதியென்னும் பெருவெள்ளம்


உனது இறுதி உணவுக் கவளமும்
வாந்தியாய்ப் போய்விட்ட இரவு
நீ இழுபட்டுச் சென்ற
தலையெழுத்தின் கதை
தடைப்பட்டு நின்றதா?
கண் மூடி விடமுன்னர்
எனைக் கண்டுவிட வேண்டும் என்பதே
உனதுயிர் கூட்டி உச்சரித்த
இறுதிச் சொற்களாயிற்றா?

உன் கடைசி நிம்மதியும்
நான் தான் என்பதை ஏன் மறந்தேன்?
கைசேதமுற்றுத் தவிக்கும் ஆன்மாவைச்
சாவு வரையும் சுமந்தலைய
ஏன் விதிக்கப் பட்டேன்?

நான் வந்தேன்
பாதையைத் திறந்து
ஆயுதம் தரித்த வீரர்கள்
குண்டுகள் அற்ற
பொதிகளிலும் வாகனங்களிலும்
மனிதர்களிடத்தேயும்
அதனைத் தேடித் தேடி
அனுப்பி வைத்த நாளொன்றில்
நான் வந்தேன்
உனைத் தவித்துச் சாகவிட்டு
எங்கோ பரதேசம் கிடந்தவளாக...
யாருமே அறியாத
இரகசியக் கொலையாளியாக

நீ உறங்கிய கட்டில்
காலியாகக் கிடந்தது
நீ நீரருந்தும் கோப்பை
காணாமற் போயிருந்தது
ஆலய வளவில்
புல்மூடிப் படர்ந்த இடமொன்று
எனக்காகக் காத்திருந்தது

அம்மம்மா...........................................
மலை அத்தனைச் சுமை மோதிடக்
கேவியழும் கண்ணீருடன்
கைகளை ஏந்துகிறேன்
விரலிடுக்கினூடு வழிந்தோடுகிறது
நீ காட்டிய பேரன்பு

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஃபஹீமா ஜஹான் - அறிமுகம்

தன் மன உணர்வுகளையும், தனது வாழ்வில் பார்க்கக் கேட்க அனுபவித்த நிகழ்வுகளையும் காத்திரமான கவிதைகளாக எழுதிவரும் முஸ்லிம் பெண் கவிஞர் ஃபஹீமா ஜஹான் இலங்கையைச் சேர்ந்தவர்.

இவர் 2002 இல் நடைபெற்ற உலக தமிழ், இஸ்லாமிய இலக்கிய சாகித்திய விருது வழங்கும் மாநாட்டில் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

அத்தோடு 2004 இல் உலகளாவிய ரீதியில் நடைபெற்ற 'யாத்ரா' கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசான வெள்ளி ரோஜா விருதையும், பணமுடிப்பையும் தனதாக்கிக் கொண்டார்.

சஞ்சிகைளில் மட்டும் எழுதி கொண்டிருந்த இவர் தற்போது வலைப்பதிலும் தனது கவிதைகளை பதிவு செய்ய தொடங்கியுள்ளார்.போட்டி போட்டுகொண்டு இவரின் கவிதைகளை பிரசுரம்செய்யவும், தங்களின் இணையதள சஞ்சிகைகளிலும் பதிவு செய்யவும் விருப்பம் கொண்ட இலக்கிய கூட்டத்துக்குள் முழுமையாக சிக்காமல் தனது தனித்துவான பதிவாக அமைய வேண்டும் என்ற விருப்பில் இவர் தனக்கென ஒரு வலைப்பதிவை உருவாக்கி அதில் தொடர்ந்தும் எழுதிவருகிறார்.

இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளைக் கொண்ட முதல் கவிதைத் தொகுப்பான ' ஒரு கடல் நீரூற்றி' பனிக்குடம் பதிப்பகத்தால் 2007 இல் வெளியிடப்பட்டது.1994 இலிருந்து பல கவிதைகள் எழுதிவரும் இவர் ஒரு கணித ஆசிரியையாகக் கடமையாற்றிவருகிறார்.

- ரிஷான் ஷெரீஃப்

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மிதிலா - 6

பீறிடல்

- மிதிலா

கவனமற்றுச் சரியாக மூடப்படாத

குழாய்வழி சொட்டிய ஒரு சிறு துளியை

அலட்சியமாய் நோக்கிய பின்

நடந்தேறின வழமையான வேலைகள்

பல நாள் சென்றபின் பெருகிய

பிரம்மாண்ட வெள்ளத்தினூடே

மூச்சுத் திணற துரும்பாய்

அடித்துச் செல்லப்படுகையில்

பகடியாய்ச் சிரித்தது

அன்று ஒழுகிய முதல் துளி.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மிதிலா - 5

கனவுகள் நெரியும் சாலை
- மிதிலா

சொட்டுச் சொட்டாய் உள்ளூர ஊறி
உப்பிப் பெருகும் புழுக்கங்கள்
இயல்பைப் போலிசெய்யும் அரிதாரம் உதிர்ந்து
பேச்சும் இசையும் தீர்ந்த வேளை
ஏக்கம் கசியச்செய்யும் நினைவுகளும்
இயந்திரமாய் இயங்கும் புலன்களும்
அதீத அறிவு கூர்தீட்டிய சிந்தனைகளோடு
கைநழுவிய கணங்களும் நீந்தும் தனிமையில்
சுவர்கள் பூதாகாரமாய் வளர்ந்து மேல்கவிய
ஆற்றாமை கிளப்பிய பேரோலமாய்
உயிரின் ஆழத்திலிருந்து வெடித்துக் கசியும்
கண்ணீராயும் கவிதைகளாயும்.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மிதிலா - 4

பிம்பங்கள் புழங்கும் அரங்கம்
- மிதிலா

செங்குத்தான கோணத்தில்
அவரவர்க்கான கண்ணாடியில் முகம்பார்த்தபடி நாம்
அலங்காரம் திருத்தம் மேற்பூச்சு மெருகூட்டல் என
தயாராயிற்று ஊரார்முன் காட்ட
அவரவர் பிம்பம்

இதழில் வழியும் பூரித்த குறுநகையுடன்
ஒன்றாய் அழகுபார்க்கிறோம் இப்பொழுது
உனது பிம்பத்தை நானும் எனது பிம்பத்தை நீயும்
எனது பிம்பத்தை நீயும் உனது பிம்பத்தை நானும்
விருப்பப்படி கட்டமைக்க முயலுகையில்

நொறுங்கிச் சிதறும் நிலைக்கண்ணாடி
ஒவ்வொரு சில்லிலும் பிம்பத்தைக் காட்டியபடி
பிம்பச்சிறையின் சாவி தொலைத்து
உண்மையைத் தேடுகையில்
கூர்த்த முனைகள் கீறி வழியும் குருதி
சிவப்பாக்கும் மனங்கள் புழங்கும் அறையை.

பண்புடன் ஆண்டு விழா - மீள்பதிவுகள் - 3

நான் பார்த்து ரசித்த சில படங்களைப் பற்றி....

http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/fab3259527e7f0a6

பாலு மகேந்திராவின் - யாத்ரா....
****
மனதை விட்டு நீங்க மறுக்கும் திரைப்படங்கள் அவ்வப்பொழுது வந்து கொண்டு தான் இருக்கின்றன. அத்தகைய திரைப்படங்களைத் தந்தவைகளுள் மலையாளத் திரையுலகும் அடங்கும். மொழிகளைத் தாண்டியும் கலைகள் படைக்கும் முனைப்புடைய கலைஞர்களை அது எப்பொழுதும் வரவேற்றிருக்கிறது. அமோல் பலேகர், கமலஹாசன், சலீல் சௌத்ரி, நௌசத், பாலுமகேந்திரா என பலரையும் அது கவர்ந்திழுத்திருக்கிறது. கிடைத்தது மிக அற்புதமான படைப்புகள் சில. பரிட்சார்த்தமான முயற்சிகளும் அங்கு அதிகம். மனித உறவுகளின் நுட்பத்தை அது அலசி ஆராயும் விதம் அம்மாநிலத்திற்கு வெளியே கொச்சைப்படுத்தப்பட்டாலும், மலையாளத் திரையுலகம் முன் வைத்த கதைக் களங்கள், இந்தியத் திரை உலகில் ஒரு சிலரால் மட்டுமே முடிந்திருக்கிறது. ஆனால், அம்மாதிரியான திரைப்படங்களுக்கு, ஒரு மாநிலம் முழுவதும் மக்கள் தங்கள் ஆதரவைத் தருகிறார்கள் என்றால், அது அம்மக்களின் சிறப்பு என்றே சொல்ல வேண்டும்.

அந்த வகையில் யாத்ரா ஒரு முக்கியமான படைப்பு என்றே சொல்ல வேண்டும். எத்தனை முறை பார்த்தாலும், ஒரு புத்துணர்ச்சியும், மனிதநேயத்தைக் கொஞ்சமேனும் சிந்திக்கவும் செய்யும் ஒரு நல்ல படைப்பு.

ஒரு காதல் கதையை எப்படி ஒரு கவிதை போல் மென்மையாகவும், அதே சமயம் அந்தக் காதல் நிகழும் தளம் - காலம் எப்படி கொடூரமாக ஒரு நிமிடத்தில் தன்னை மாற்றிக் கொள்கிறது என்பதை அழுத்தமாகவும் தெரிவிக்கின்றது. காலத்தைக் கடந்து ஒரு படைப்பு நிலைத்து நிற்க வேண்டுமானால், கதை நிகழ் காலத்தை அது வலுவாக படம்பிடித்துக் காட்ட வேண்டும்.

85ல் வந்த இந்த திரைப்படம், இன்றளவும் நம் நடைமுறை வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது என்றால், அது மிகையல்ல. இன்றும் போலிஸ் ராஜ்ஜியத்தில் தான் வாழ்கிறோம். ஒவ்வொரு சமயத்தில் ஒரு உத்தியைக் கையிலெடுத்துக் கொள்கிறது – காவல் துறை – தன் இருப்பை நிலைநாட்ட, அன்று கம்யூனிஸ சித்தாந்தவாதிகளுடன் பிரச்சினை. இப்பொழுது தீவிரவாதம். நாளை என்னவோ…?

உன்னி என்னும் உன்னிகிருஷ்ணன். ஒரு அநாதை. ஒரு வன அதிகாரியாக பணி. புதிதாக வந்த இடத்தில் துளசியைச் சந்திக்கிறான். அவளுக்கு ஒரு தந்தை உண்டு. மனைவியை இழந்து அந்த துக்கத்தில் குடிக்கும் பழக்கம் உள்ள தந்தை. துளசி அந்த மலைச்சாரலில் நடை பயிலும் தென்றலைப் போன்றவள். 'ஓணக்கோல்' பிடித்து சிலையாய் நிற்கும் கிருஷ்ணன் தான் பேசுவதை நிச்சயமாய் கேட்பான் என்று நம்பிக் கொண்டிருப்பவள். கோயில் திருவிழாவில் இனிமையாகப் பாடி ஆடவும் செய்வாள். சுழலும் விழிகளில் எப்பொழுதும் பாவங்கள் ஓடிக் கொண்டேயிருக்கும்.

ரம்மியான மலைக் கிராமச் சூழ்நிலையில், இருவரும் சந்திக்கும் பொழுது, இயல்பாக காதல் மலர்கிறது. அதிலும் உணர்ச்சி மிக்க வசனங்களோ, பாட்டுப்பாடி காதலைக் 'கொண்டாடும்' காட்சிகளோ இல்லாமல், இயல்பான காட்சி நகர்வுகளுக்கிடையில் பேச்சுக்கிடையில் காதல் வெளிப்படுகிறது. இருவரின் அப்பாவித் தனமே இருவரையும் ஒருவர் பால் ஒருவரை ஈர்க்கிறது. சிறு சிறு குறும்பாக காட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கையில், திருப்பம் வருகிறது.
தன் திருமணத்தை தன் வாழ்க்கையில் கிடைத்த ஒரே நண்பனுக்கு அறிவிக்கும் பொருட்டு, நகரம் நோக்கி பயணம் போகிறான். அத்துடன் நயவஞ்சமிக்க 'அரசு இயந்திரம்' செயல்படும் எல்லைக்குள்ளும்.

நண்பன் இறந்து போய்விட்டதை தெரிந்து கொண்டு, மீண்டும் தன் ஊருக்குத் திரும்பும் பொருட்டு, நடந்து கொண்டிருந்தவன் ஒரு பெட்டிக் கடையில் சிகரெட் வாங்குவதற்காக தாமதித்த ஒரு பொழுதில், காவல்துறையின் கண்களில் படுகிறான். கைது செய்யப்படுகிறான். ஒரே குற்றம் – காவல்துறை தேடும் ஒரு தீவிரவாதியை ஒத்திருக்கிறான் தோற்றத்தில். எத்தனை சொல்லியும் கண்டுகொள்ளாத காவல்துறை அவனை 'லாக்-அப்'பில் தள்ள, இங்கிருந்து வெளிப்படுகிறது – காவல்துறையின் 'சலவை செய்யப்பட்ட' மன நிலை. ஒரு கைதியாக இருந்தாலும் அவனுக்குக் கொடுக்க வேண்டிய அடிப்படை வசதிகளைக் கூட மறுக்கிறது. தாகித்தவன் தண்ணீர் கேட்ட பொழுது, ஒரு காக்கி அவனுக்கு மூத்திரம் பெய்து கொடுக்கிறது. அறியாமல் வாயில் விட்டுக் கொண்ட பின்னர், உணர்ந்து, ஆத்திரமடைந்து, தந்தவன் மூஞ்சியில் விட்டெறிய முனையும் பொழுது, அவன் விலகிக் கொள்ள அவனது அதிகாரியின் மூஞ்சியிலே விழுந்து விட, அவனுக்குப் பூசை நடத்த, கதவுகள் திறக்கப்படும் பொழுது, உன்னி தப்பி ஓட காக்கிகளுக்கும் உன்னிக்கும் ஏற்படும் போராட்டத்தில் ஒரு காக்கியைத் தூக்கி வீச, அவன் தலை சுவரில் மோதி மரணம்.

கொலையல்ல. திட்டமிடல் அல்ல. ஆனாலும் ஒரு உயிர் போய்விட்டது. ஆக, உன்னியின் பக்கம் எத்தனை தான் நியாயமிருந்தாலும், சிறை வாசம். கடிதம் மூலம் சிறையில் தான் இருப்பதைத் தெரியப்படுத்துகிறான். சிறை வாழ்க்கையின் அவலங்களின் மீது அடுத்ததாக கவனம் பதிக்கிறது கதை. கைதியாக வருபவனை அலட்சியமாக, அற்பமாக நோக்கும் சிறை பணியாளர்கள். அவர்களது நிர்வாணத்தைக் கூட ஏளனமாகப் பார்க்கும் வக்கிரம். மொட்டை அடித்தல்.

சிறையினுள் பல கைதிகளின் கதை சிறு சிறு காட்சிகளின் மீதாக வெளிப்படுத்தப்படுகிறது. சிறையில் பார்வையாளாராக வரும் பெண்கள் மீதான பாலியியல் துன்புறுத்தல்கள், பார்வையாளாராக அனுமதிக்க மறுக்கும் அவலம், கடிதங்கள் மூலம் நிகழும் உணர்ச்சி பரிவர்த்தனைகள், இரவின் நிசப்தத்தில் எழும் இசையற்ற பாடல்கள், கைதிகள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் குடும்ப பின்னணிகள் என்று பல இடங்களில் கண்களைப் பணிக்கச் செய்யும் காட்சிகள். நடுவே தப்பியோட முயற்சிக்கும் கைதிகள் பிடிபட்டு கொடூரமாக தண்டிக்கப்படுதல். அதையும் மீறி, வாழும் துடிப்புடன், தப்பிக்க நினைக்கும் உன்னி – துளசியைப் பார்த்துக் கொள்ள யாருமில்லை என்ற அதீத உணர்ச்சிப் பெருக்கு.. பிடிபட்டு 'லாடம்' கட்டப்படுகிறான். நடுவே துளசியின் தந்தை வந்து போகிறார். துளசியின் பரிதாப நிலையை எடுத்துச் சொல்கிறார். உன்னி துளசிக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். யாரையாவது திருமணம் செய்து கொள்ளச் சொல்லி. துளசியிடமிருந்து வரும் கடிதத்தை வாசிக்க மறுக்கிறான். ஒரு முழுதான சிறைவாசத்தை அனுபவித்து வெளி வருகிறான்.

சிறையிலிருந்து விடுபடும் நாள் வருவதை தெரிந்து துளசிக்கு கடிதம் எழுதுகிறான். இன்னமும் தனக்காகக் காத்திருந்தால், எப்பொழுதும் சந்திக்கும் அந்த ஒற்றை மரத்தடியில், ஒரு தீபத்தை ஏற்றி வைக்கவும். அவளுக்காக இறங்கி வருவதாய். இல்லையென்றால் அவளது நல்வாழ்க்கைக்காக ஒரு பிரார்த்தனையுடன், பேருந்தை விட்டு இறங்கி தொந்தரவு தராமல், தன் பிரயாணத்தைத் தொடர்வதாய்.

இந்த 'யாத்ரா' தொடருமா? இல்லை இத்துடன் முடிவுக்கு வருமா?

தன் பயணத்தில் நடக்கிறான். எவரும் அவனுக்கு வாகனங்களில் இடம் மறுக்க, ஒரு பள்ளிச்சுற்றுலா பேருதில் இடம் கிடைக்கிறது. இதுதான் படத்தின் முதல் காட்சி. இறுதிக் காட்சியும் இதே. பயணத்தில் அவன் சொல்லிய கதையில், அனைவரும் கலந்து, இறுதியில் துளசி அங்கு தீபத்துடன் நிற்க வேண்டுமே என்ற பிரார்த்தனையுடன் அனைவரும் பேருந்தின் சன்னல் வழியாக துடிக்கும் இதயத்துடன் காத்திருக்க…

துளசி நிற்கிறாள் – பெருகும் அன்புடன். ஆம். அவள் நிற்கிறாள் – ஒரு தீபத்துடன் அல்ல. ஆயிரமாயிரம் தீபங்களுடன். பிரகாசமாக. உன்னி இறங்கிக் கொள்ள, பள்ளிச் சிறுவர்களின் பயணம் தொடர்கிறது யாத்ரா பாடலுடன்.

நடித்தவர்களில் மனதைத் தொட்டவர்களின் பட்டியல் நீளம். உன்னியாக நடித்த மம்மூட்டி, துளசியாக ஷோபனா, பாலுமகேந்திராவின் காமிரா, இளையராஜாவின் இசை. அதிலும் பாலுமகேந்திரா, தனக்குப் பிடித்த மலைச்சரிவு கிராமத்தை ஒளிப்பதிவு செய்திருப்பதைக் காண கண் கோடி வேண்டும். ஏனென்றால், காமிரா என்பது ஒரு கண் என்ற அளவிற்கே மக்கள் அறிந்து வைத்திருந்த பொழுது, அதிலிருந்து எத்தனை வகையான பார்வைகளை மக்கள் முன் வைக்க முடியும் என்று அற்புதமாக காட்சிகளை வித்தியாசப்படுத்தி காட்டியவர் அவர். எல்லோரும், அவரது ஒளிப்பதிவுகளை மட்டுமே ரசித்துக் கொண்டிருக்க, அவரது பார்வைகள் காமிராவையும் தாண்டி, கதைக் களத்தில் விரிந்த பொழுது, சில அற்புத திரைப் படங்கள் கிடைத்தன. (இரண்டு பொண்டாட்டிக் காரன் கதை அவரிடத்தில் ஒரு obsession போல் பின்னர் ஒட்டிக் கொண்டது. அது அவருடைய குற்ற உணர்ச்சியினால் கூட இருக்கலாம்…)

மலைக்கிராமத்தில் புகை மூட்டங்களின் நடுவே விரியும் ஒளி வெள்ளத்தையும், இலைகளின் பசுமையையும், பூக்கள் பூத்து குலுங்குவதையும், இலைகள் பழுத்து சிவப்பதையும் படம் பிடிக்கையிலே நாம் தவறவிடுவது காலம் நகர்ந்து கொண்டிருப்பதை. வெட்ட வெளியில் வெளிச்சம் போடும் கோலத்தைக் காட்டினால், வெளிகளை வெட்டிக் கட்டப்பட்ட உள்புறத்தில், கசிந்து வரும் வெளிச்சம் என்னவோ, பாலுவின் காமிராவிற்காக மட்டுமே தாங்கள் அங்கு வருவதாக சொல்வது போலிருக்கின்றது.

வெளிச்சம், இருட்டு, வண்ணம் இந்த மூன்றினால் மட்டுமே காமிராவினால் பேச முடியும் என்னும் பொழுது, அதை குறித்து ஒரு புரிதல், அறிதல் இருந்தால் மட்டுமே அவற்றை உள்வாங்கிக் கொள்ள முடியும் ஒரு கலைஞனால். ஒரு சிறந்த திரைக்கதையும், அதை காமிராவின் மொழியில் சொல்லும் திறன் பெற்ற ஒரு கலைஞன் இருக்கும் பொழுது, அது நடிப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். மம்மூட்டி போன்ற நடிகர்களுக்கு இதை விட ஒரு நல்ல தளம் வேண்டுமா என்ன? இத்தனைக்கும் மம்மூட்டி அப்பொழுது ஒரு பெரிய நடிகர் கூட கிடையாது. அப்பொழுது தான் ஓடுடைத்து வெளியான சிறு பறவை போல் நடிப்புலகில் காலடி எடுத்து வைத்த நேரம். பறப்பதற்குச் சொல்லித் தர ஒரு அற்புத கலைஞன் கிடைத்த பொழுது, அதை மிகையற்ற தன் நடிப்பினால், எளிதாகக் கையாண்டிருக்கிறார். அது போன்றே, துளசியாக வரும் ஷோபனா. நாட்டியத்தில் பரிச்சியமுள்ள அவருக்கு விழி அசைவுகளும், உடல்வாகும் வெகுவாக ஒத்துழைக்கிறது. இவர்களுடன் இளையராஜாவின் இசையும் கூட்டணி அமைத்துக் கொள்கிறது.

இந்தக் கூட்டணியில், யாத்ரா ஒரு நதியாக, கரையுடைக்கும் பெருவெள்ளமாக இன்றி, அமைதியாக அமிழ்ந்து நீச்சலடிக்கத் தூண்டும் மென்மையுடன் பயணிக்கிறது.

படம் முடிந்து நீண்ட நேரமாகியும் துளசியும், உன்னியும் மனம் விட்டு நீங்க மறுக்கிறார்கள். காதலின் ஆழத்தைப் பார் – எங்கள் போல், உங்களால் ஒருவருக்கு ஒருவராகக் காத்திருக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டே…

நண்பன்

பண்புடன் ஆண்டு விழா - மீள்பதிவுகள் - 2

அளம்

http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/ffed8600743beba7/712f79bd81d252c7?lnk=gst&q=%E0%AE%85%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D#712f79bd81d252c7

பொதுவாகவே பெண் எழுத்தாளர்கள் என்பவர்களின் இலக்கிய எல்லையாக இதுவரை நான் கருதியது அவள் விகடன், கண்மணி, பாக்கெட்நாவல் போன்றவைதான். குடும்ப உறவுகளை விட்டால் வேறெதுவும் எழுத தெரியாத உப்புசப்பில்லாத கதைகளின் உற்பத்தியாளர்கள் என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன். அதற்கு ஏற்ப சிவசங்கரி அனுராதாரமணன் போன்ற எழுத்தாளர்களின் வாசிப்பில் உணர்ந்ததுதான்.ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கு ஒரு தனி அடையாளம், எழுத்து நடை இருப்பதை உணர்வது போல அனைத்து பெண் எழுத்தாளர்களுக்கும் ஒரே நடையிலிருப்பதை உணரலாம். தொழில் ரீதியாக நாவல்களை எழுதுகிறார்களோ என்று கூட எண்ணியிருந்தேன். எழுத்து என்பது ஆத்ம திருப்திக்காக இருக்க வேண்டும் என்ற நாஞ்சில் நாடனின் வார்த்தைகளை நம்புகிறேன்.

என்றாவது ஒருநாள் இக்குறைகளை தீர்ப்பது போல நம் பெண்கள் படைப்புகள் இருக்கலாம் என்று உள்ளுக்குள் எண்ணியிருந்தேன். அதற்கு தீனி போடுவது போல அமைந்த வாசிப்புதான் தமிழ்ச்செல்வியின் அளம். அளம் என்பது உப்பளத்தை குறிப்பது. முதலில் குழம்பிப்போனேன். என் வட்டாரத்தில் அதிக புழக்கத்தில் இல்லாத வார்த்தை இது.


"மாணிக்கம்", "அளம்", "கீதாரி", "கற்றாழை" என நாண்கு நாவல்களை தமிழுக்கு அளித்திருக்கும் சு.தமிழ்ச்செல்வி சமகால பெண் எழுத்தாளர்களில் முக்கியமானவர். இவரது "மாணிக்கம்" நாவல் தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருதினைப் பெற்றது. இவரது படைப்புகள் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

பொருள் தேட வெளிநாடு சென்ற கணவன் இறுதிவரை திரும்பாத நிலையில் தனது மூன்று பெண் குழந்தைகளுடன் வாழ்வை எதிர்கொள்ளும் சுந்தராம்பாள் எனும் எளிய தாயின் போர்க்குணத்தை காவியத்தன்மையுடன் விவரிக்கும் கதைதான் "அளம்" வாசகர்களின் ஏகோபித்த ஆதரவினை பெற்று தற்போது இரண்டாம் பதிப்பாக வெளிவந்திருக்கிறது,
சுந்தராம்பாள் என்ற தாய் வடிவாம்பாள், ராசாம்பாள், அஞ்சம்மாள் என்ற தனது மூன்று மகள்களை தனியொருத்தியாக வளர்த்து ஆளாக்க என்னென்ன சிரமப் படுகிறாள் என்பதுதான் மொத்தக்கதையும். பொதுவாகவே கதையின் உரையாடல்கள் அம்மண்ணின் பேச்சு வழக்கில் அமைவதுதான் பெரும்பாலாக கதைகளின் வெற்றி. அவ்வகையில் இந்நாவல் பூச்சுகளில்லாத அசல் கிராமத்து மண்ணின் வாசம்.

நாள் நட்சத்திரம் பார்த்து நமக்கு என்னதான் பெயர் வைத்திருந்தாலும் பெரும்பாலான வீடுகளில் செல்லப்பெயரை வைத்துதான் கூப்பிடுவார்கள் அதைப்போல இந்நாவலின் முக்கிய பாத்திரமான சுந்தராம்பாளின் மகள்களை பெரியங்கச்சி, நடுத்தங்கச்சி, சின்னங்கச்சி என்றே கதை முழுக்க இந்த பாத்திரங்கள் அழைக்கப்படுகின்றன. "ம்பாள்" என்றே எல்லா பெயர்களும் முடிவதால் வாசகர்களுக்கு எவ்வித குழப்பமும் வந்துவிடக்கூடாது என்பதை தவிர்க்கவே இந்த உத்தி என்று நினைக்கிறேன். அப்படி இருந்தால் அதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே அர்த்தம். கவனமான வாசிப்பிலும் முதலில் பெயர்க்குழப்பம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

"மோரயப்பாரேங் கரிப்பான சூத்துமேரி. வண்ணாஞ்சாலு கணக்கா தொப்பய மின்னாடி தள்ளிகிட்டு நிக்கி சனியங்" என்று பெற்றவனே மகளின் மீது எந்நேரமும் வெறுப்பை உமிழ்கிறான். இப்படி நாவல்முழுக்க அம்மண்ணின் பேச்சு வழக்கே நிறைந்திருப்பதால் வாசிப்பதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை என்றாலும் அதுதான் இந்நாவலின் ஜீவன்.

ஒருவேளைக்கும் போகாத சுந்தராம்பாளின் கணவன் சுப்பையாவின் வாழ்க்கையில் கப்பல்கார ராமையாபிள்ளை என்பவர் சுந்தராம்பாளின் குடும்ப சிக்கலை எண்ணி சிங்கப்பூர் அழைத்து செல்கிறார். அங்கு சென்று சுப்பையன் காணாமல் போகிறான். கடைசிவரை அவன் ஊருக்கே திரும்பவில்லை. கப்பல்கார ராமையா ஒவ்வொருமுறை ஊருக்கு வரும்போதும் தன் கணவன் பற்றிய தகவல் அறிய செல்லும்போது நமக்கே எரிச்சலாக இருக்கும்.

இந்நாவலின் வாசிப்பின்போது வைரமுத்துவின் கருவாச்சியை நினைவு வருவதை உணரலாம் ஆனால் கருவாச்சி காவியம் சினிமாத்தனமானது. ஒரு பெண் தனித்து வாழும்போது சமூகம் அவளுக்கு கொடுக்கும் இன்னல்கள், குறைந்தது மூன்று ஆண் கதாபாத்திரங்கள் முதல் ஊரே அவளுக்கு எதிராகவும் பல இன்னல்களும் கொடுக்கும். அதையெல்லாம் சமாளித்து பின் ஊர் உணரும் புண்ணியவதி ஆவாள் கருவாச்சி. எல்லாமே சுவாரசியங்களுக்காக திணிக்கப்பட்ட சம்பவங்களின் கோர்வையாக கருவாச்சி காட்சியளிப்பாள். சுந்தராம்பாளின் வாழ்க்கைப் பாதையில் துன்பங்களும், வருத்தங்களும் ஏராளமாக இருந்தாலும் எதுவுமே திணிக்கப்பட்டது போல தோன்றவில்லை.

புயலும், புயலுக்கு பின் வரும் வறுமையும் ஒவ்வொருமுறை விதைக்கும்போதும் இயற்கைக்கு பறிகொடுக்கும் சோகம் கதையாக இருந்தாலும் மனசு வேதனைப்பட வைக்கிறது. நாவல் முழுக்க ஏமாற்றங்களும் சோகங்களும் நிறைந்து இருந்தாலும் ஒருமுறை கூட சலிப்பை ஏற்படுத்தவில்லை.

மிகுந்த சிரமத்திற்கிடையில் மணமுடித்துக்கொடுத்த மூத்த பெண் வடிவாம்பாளின் மணவாழ்க்கை ஒரே மாதத்தில் முடிந்துவிட வாழாவெட்டியாக வீட்டிற்கு வருகிறாள். இரண்டாவது மகளும் இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு கணவனால் துரத்தப்பட்டு வீட்டுக்கு வருகிறாள். ஒரே வீட்டில் மூன்று திருமணமான வாழாவெட்டிகளால் கடைசிப்பெண்ணான அஞ்சம்பாளுக்கு வரன் அமைவதில் சிக்கல். அவளுக்கும் பூச்சிக்கும் மட்டுமே தெரிந்த நிறைவேறாத அந்த காதல் அழகு. காதல் என்ற வார்த்தையைக் கூட உபயோகப்படுத்தவில்லை.

இக்கதையை வாசிக்கும் நேரத்தில் உங்களது எண்ணங்களும் சற்று பின்னோக்கி அந்தக்கால கிராமமான கோயில்தாழ்விற்கு சென்று மக்களை நேரில் சந்திப்பது போன்று உணர்வீர்கள். அழுத்தமான கதையை விரும்புவோர் தாராளமாக ஒருமுறை வாசிக்கலாம்.
நூலின் பெயர்: அளம் ஆசிரியர்: சு.தமிழ்ச்செல்வி மருதா பதிப்பகம் விலை இந்திய ரூபாய் 100.
வாசிக்க கொடுத்த அய்யனாருக்கு நன்றி அய்யனாருக்கு கொடுத்த ஆசிப்புக்கும் நன்றி.

உமா கதிர்

பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - அய்யப்ப மாதவன் - 1

மழைக்காலம்
- அய்யப்ப மாதவன்

தூறல் மழை அடைமழை வராத காலத்தில்
சுவரின் சன்னல் வழியே பொட்டுப் பொட்டாய்
சிதறிய போது பசி பொதிந்த உடல்
நிறைந்தது மழையின் ஞாபகங்களாய்
குடையற்ற பொழுதுகளில்
நீர் கரைத்து நீராய் சாலையில் ஓடியிருந்தேன்
சுமை அழுத்திய வருடங்களில்
பொத்து ஒழுகும் வானம்தான் ஆறுதல்
அதன் கண்ணீர் என் கண்ணீர்
ஏன் என்று தெரியாத வயது
வானம் போல் ஒழுகுவது
பிடித்திருந்தது

விரிந்த பொட்டல்களில்
யாருமற்ற ஒரு அநாதைச் சிறுவனாக
தெருக்களில் திரிகையில்
திடீரென உடைத்துக் கொள்ளும் வான்வெளி
இமைகளில் படர்ந்து உள்ளுக்குள்
பட்டாசு கொளுத்திப்போடும்
உடல் பிடித்து நடந்து போகும்
துளிகளுக்குள் மறையும் பொற்காலத்தில்
பொன்பொருள் நிறைந்தவனாவேன்
தின்று திரியும் மனிதக்கூட்டத்தில்
ஒன்றுமறியாச் சிறுவனாய்
ஒரு அபலையாக வெகுளியாக
மழையிடம் சினேகம் வைத்திருந்தேன்
மழை எனக்குள் பெய்வது
மழைக்குள் நான் நுழைவது
சகஜம்.

பண்புடன் ஆண்டு விழா - மீள்பதிவுகள் - 1

http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/cbf4601201b33d4a/ead950446faad933?lnk=gst&q=%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+#ead950446faad933

நடுநிசியிலெனது தேசம்...!

பகல் மறையும் பொழுதுகளில்
ஆரம்பிக்கும்
எம்மக்கள் பதற்றம்...
மெல்ல இருட்ட ஆரம்பிக்கும்-எங்கள்
உவகையெல்லாவற்றையும்
உள்வாங்கி...!

குண்டு விழும்,
விழுந்த இடத்தைச் சிதறடிக்கும்,
இடி போலச் சத்தங்கேட்கும்,
தூரத்து அவலக்குரல்கள்
குண்டு போடப்படுவதை
உறுதிப்படுத்தி-தொடர்ந்து
எதிரொலிக்கும் !

துப்பாக்கிகள்
வீட்டுக்கதவு தட்டும்,
சகல குடும்பத்தினரதும்
கதறலுக்கப்பாற்பட்டு-இளைஞர்கள்
கடத்தப்படுவர் !

பௌர்ணமியும்
பார்த்து அழும்
வதைப்படுதல் கண்டு !

தினந்தோறும்
கடற்கரை,வயற்காடு,
வீதியோரம், களத்துமேடு,
பொதுமயானம், புளியந்தோப்பு,
எங்கும் கண்டிடலாம்...

எவர்க்கேனும் மகனாக,
கணவனாக,தந்தையாக,
சகோதரனாக,சினேகிதனாக
வாழ்ந்து வந்தவர்களின்
சடலங்களை...!

'இன்றைக்கெவர்க்குச் சாவோ..?"
பதுங்கு குழியிலிருந்தவாறே
உறவினரை எண்ணிப்பார்த்து
உயிர்துடிக்கும்.
மூச்சடக்கி, மூச்சடக்கி
உள்நெஞ்சுக்கேவல் எழும் !

அனைத்தும் முடிந்தநேரம்
வீட்டுச்சுவர் மேல் - சத்தமின்றி
வெயில் ஏறும் !

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மிதிலா - அறிமுகம்

இரெ. மிதிலா - அறிமுகம்

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையில் 'தமிழ்ப் பெண் எழுத்துகளின் வரலாறு 1901-1950' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம்.

'பனிக்குடம்' சிற்றிதழின் உதவியாசிரியர்.

'கண்ணாடியில் மிதக்கும் பிம்பம்' (பனிக்குடம் பதிப்பகம்) என்ற மொழிபெயர்ப்புக் கவிதை நூலின் ஆசிரியர்.

எமிலி டிக்கின்சன் (Emily Dickinson) என்ற 19ஆம் நூற்றாண்டு அமெரிக்க கவிஞரின் 90 கவிதைகளின் மொழிபெயர்ப்பு.

ஆங்கிலத்திலிருந்து கவிதை, சிறுகதை, கட்டுரை போன்றவற்றை மொழிபெயர்த்தல்
கவிதை எழுதுதல்

நவீன இலக்கிய வாசிப்புப் பயிற்சி (சற்றே) ஆர்வம்.

தற்போது கணவருடன் வசிப்பது குவைத்தில்.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மிதிலா - 3

எலும்புக்கு அருகே எழுதுதல்

யுவான் வேரா, ஜிம்பாப்வே (Yvonne Vera, Zimbabwe)

தமிழில் மிதிலா

ஒரு பெண் எழுத்தாளராக இருப்பதில் இன்றியமையாத உண்மை என்று எதுவும் இல்லை. சிறந்த எழுத்தானது எல்லைகளிலிருந்தும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பாலினமற்ற வெளிகளிலிருந்தும் வருகின்றது. நான் எழுதுவதைப் பற்றிச் சொல்கிறேன், கதையைப் பற்றியோ கதைக்கருவைப் பற்றியோ அல்ல. ஒரு கதையை அறிந்திருப்பது என்பதும் அதனை எழுதுவது என்பதும் வெவ்வேறானவை.

கட்டுக்குள் அடைபடாததாக, வாசகருடன் குறிப்பிட்ட எந்தத் தொடர்பும் – அதிலும் பாலின அடிப்படையில் - கொண்டிராததாக எழுதுதலை நினைத்துக்கொள்ள விரும்புகின்றேன். அடையாளமிடப்படாத அந்த அச்சமற்ற வெளியைக் கண்டடைந்த பிறகு நான் சுதந்திரமாக எழுதுவேன், ஒரு பெண்ணாக மேலும் சுதந்திரமாக எழுதுவேன். சில வேளைகளில் எனது ஜன்னலின் வழியே வரும் ஒளிக்கற்றை நான் ஒரு பெண்ணாக இருந்து எழுதுகிறேன் என்கிற உண்மையைவிட மிக முக்கியமாக இருந்துள்ளது.

எனது எழுத்துக்கு ஒரு தீவிரமான நோக்கம் இருக்கவேண்டும், அவ்வளவே. நான் இந்த மண்ணுடன் ஒட்டுறவாயிருக்கவேண்டும். உத்வேகத்தையும் ஆற்றலையும் தரும் அந்த மூலாதாரத்தைப் பாலினம் என்று ஒருபொழுதும் என்னால் தவறாக நினைக்க முடியாது, இது நம் அனைவருக்கும் பொதுவானது. இருப்பினும், ஒருவர் தமக்கு நெருக்கமான பொருண்மைகள், உணர்வுகள், செயல்கள், நெகிழுணர்வுகள் ஆகியவை பற்றி எழுதும்போது சிறப்பாக எழுதுகின்றார் என்பதென்னவோ உண்மையே. என்னைப் பொறுத்தவரையில் நான் எழுதுகிறேன் என நினைக்க விரும்புகின்றேன். நான் ஒரு பெண். நான் எழுதுகிறேன்.

நானாக (நான் என்பதாக) இருக்கும் பெண் எழுத்தினுள் இருக்கிறாள், எழுத்தால் அரவணைக்கப்படுகிறாள், சுதந்திரமாக விட்டுவிடுதலை ஆகிறாள். என்னைப் பொறுத்தவரை எழுதுதல் என்பது ஒளி, அனைத்தையும் அழகான வடிவில் வெளிச்சம்போட்டுக்காட்டுகின்ற ஓர் ஒளிர்வு. இந்த வெளிச்சமானது தேடி ஒளியூட்டுகின்றது. நமது அனுபவத்தின் உணர்ச்சிபூர்வமான அவலத்தைத் திறந்துகாட்டக்கூடிய பாதுகாப்பான ஓர் இடம். ஒளியானது காயத்தை ஆற்றும் ஒரு கதகதப்பான பிரகாசம். இவ்வகையான ஓர் ஒளியாக இருக்கக்கூடியது எழுத்து. அதனுள் நான் என்னை மறைத்துகொள்வதில்லை. அந்த வெளிச்சத்திற்கும் அப்பால், அந்த வெளிச்சம் உண்டாக்கும் நிழலுக்குள் நான் துணிவுடன் பயணம் செய்கிறேன். அந்த இருளிலும் சுதந்திரமாக இருக்கவும் எழுதவும் ஒரு பெண்ணாக இருக்கவும் சாத்தியம் உள்ளது.

சான்றாக, வான்கோ தீட்டிய குடியானவனர் சப்பாத்துகள் (Peasant Shoes) என்னும் ஓவியத்தை அதன் வெளிச்சக் குறைவுக்காகவே எனக்குப் பிடிக்கும். மறுஅச்சுகள் குறிப்பதைவிடவும் அவை மிக இருண்டிருக்கும், பின்னணியில் இருக்கும் தெளிவான ஒரு துண்டு நிலத்தைத் தவிர்த்து எந்த வெளிச்சமும் கிஞ்சித்தும் இருக்காது. உண்மையில் அதுவும் கூட வெளிச்சமாகாது. வெளிச்சம் இன்மையை இந்த ஓவியங்களில் நீங்கள் உணரலாம். மெய்யாகவே அது உங்களையும் உங்கள் உணர்வையும் அருகில் ஈர்க்கும்; நீங்களும் உண்மையில் அதனைப் பார்வையிட விரும்புவீர்கள், புதியதொரு மகிழ்ச்சியால் கனமாக உணர்வீர்கள். அந்தச் சப்பாத்துகளைப் பார்த்து அவை எங்கே சென்றிருந்தன, சென்றிருந்தவர் யார், என்ன நடந்திருக்கும் எனவும் ஒருவேளை தனக்குள் ஓர் உயிரைக் கொண்டிருக்கூடிய, மூச்சுவிடக்கூடிய, உலகத்தின் மீது ஒருவித ஒளியைப் பாய்ச்சக்கூடிய ஏதோ ஒன்றை இந்தச் சப்பாத்துகள் எப்போதேனும் வளர்த்துள்ளனவா என்று நீங்கள் அதிசயிக்கலாம். ஆம்ஸ்டர்டாமிலுள்ள கலைக்கூட விற்பனைக் கடையில் இந்தச் சப்பாத்துகள் ஓவியத்தைக்கொண்ட அஞ்சலட்டை இருக்கிறதா என்று தேடினேன்; அதிலிருந்த மறுஆக்கம் மிகவும் பிரகாசமாயிருக்க, இதென்ன கொடுமை என்று அந்த அட்டையை வாங்க மிக விரும்பினாலும் வாங்கக் கூடாது என சொல்லிக்கொண்டேன். கலைக்கூடத்துள் சென்று மீண்டும் அந்தச் சப்பாத்துகளைப் பார்த்தேன். ஒரு பெரிய எழுச்சிகரமான ஓவியப்பரப்பு தனது சோகத்தால் கிளர்ச்சியூட்டுவதைக் கண்டேன். இது ஒளி இல்லாமல் அன்று ஒளிக்கு அப்பால் தீட்டப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொண்டேன்.

இதேபோன்று 'உருளைக்கிழங்கு உண்போர்' (The Potato Eaters) ஓவியமும் மாசுமருவின்றிப் பிம்பத்தையும் உணர்ச்சியையும் தீட்டுவதைக் கண்டேன். 'குடியானவர் சப்பாத்துகள்' ஓவியத்தைவிடவும் இருண்டது. அதில் நாலைந்து கோப்பைகள் இருந்தன. களிமண் கரைசல் போன்றிருந்த ஏதோ ஒன்று அவற்றில் ஊற்றப்பட்டபடி இருந்தது. கோப்பைகள் வெள்ளையாக ஆனால் வெளிச்சமற்று இருந்தன. முன்னணியில் இருந்த உருவம், ஒரு சிறுமியாக இருக்ககூடும், பார்ப்பவருக்கு முதுகு காட்டியபடி இருந்தாள். நின்று அவளது முதுகை நோக்கியபடி, ஏறக்குறைய வெள்ளையாக இருக்கும் கோப்பையிலிருந்து களிமண் கரைசல் போன்ற அந்த ஏதோ ஒன்றை, உருளைக்கிழங்கைத் தின்ன வேண்டியவளாகிய அவள் அருந்தப்போகின்றாள் என்பதை நினைத்தபோது கஷ்டமாயிருந்தது. ஏதோ ஒரு வகையான விளக்கு உச்சியிலிருந்து தொங்கியது அந்தக் கூட்டத்தின்மீது, ஆனால் அதன் இருப்பு நிழல்களை உண்டாக்கியது – கதகதப்பையோ அங்கீகாரத்தையோ அல்ல. அந்த ஓவியம் தன் உணர்ச்சியை வெளிப்படுத்துவதில் மிக வல்லமையுடன் இருந்த அதே நேரத்தில் அழகாகவும் ரணமார்ந்ததாகவும் இருந்தது.

ஏறக்குறைய ஆறு வயதாயிருக்கும்போது நான் எழுதக் கற்றுக்கொண்டேன். அதே சமயம் எனது உடல் எழுதுவதற்கான ஒரு மாயப் பரப்பாய் இருப்பதையும் கண்டுகொண்டேன். என் தாய் தனது மேற்படிப்பைத் தொடரச் சென்றபோது பாட்டியுடன் நான் சில ஆண்டுகள் வாழ்ந்தேன். வேறு பல குழந்தைகளும் என் பாட்டியுடன் இருந்தனர். அந்த வீடு மிகவும் சிறியது. பெரும்பாலான மதியங்களில் நாங்கள் வெளியே கிடத்தப்பட்டு உறவுக்காரப் பிள்ளைகள் சிலருடன் விழித்தெழுவோம். பெரிய உலோகக் குப்பைத்தொட்டியின் மேல் ஏறி அமர்ந்துகொள்வோம். நிலத்தில் ஊன்றக் கால் எட்டாது.

என் காலிலுள்ள தோல் வறண்டும் இறுகியும் பாரமாகவும்கூட இருக்கும். எங்கள் குளிர்காலத்தின் சில்லிப்பை அது சுமந்திருந்தது. எனது நகங்களாலோ பாட்டியின் துடைப்பத்திலிருந்து ஒடித்த காய்ந்த கீற்றைப் பயன்படுத்தியோ எனது காலில் எழுதத் தொடங்குவேன். சின்னதாயிருக்கும் எனது தொடையில் எழுதுவேன் ஆனால் அங்கு சருமம் மென்மையாயிருக்கும், சொற்களும் நீண்ட நேரம் நிலைத்து நில்லாமல் மறைந்துவிடும். ஆனாலும் அங்கு எழுதுவது வித்தியாசமான ஓர் உணர்ச்சியாக இருந்தது; கூர்மையான குறுகுறுப்பான அந்த உணர்ச்சி எங்களைச் சிரிக்க வைத்தது, ஏதோ மறைவான இடத்தில் சொற்களைக் கொண்டுவைத்தது போல உணரச்செய்தது.

எங்களது நம்பிக்கை கூடிவிட கருத்த களிமண்ணாய் காலின் தோல் உடையும் பகுதிக்குக் கீழிறங்கி வந்தோம். அங்கு எங்கள் பெயர்களை முடிவற்ற அனந்தத்தில் எழுதினோம். இங்கே நாங்கள் எலும்புக்கு அருகே எழுதினோம், அப்படியே கணுக்கால் வரை சொற்களைப் பரப்பினோம். சொற்கள் தப்பிக்க முடியாதபடி தோலுள் ஆழமாகவும் தோலுக்கு அடியிலும் எழுதினோம். இங்கே தோலானது தாகமாயிருப்பதுபோல் தோன்றியது, எங்களுக்கும் அது பிடித்தது. சொற்கள் சமைத்த சாம்பல் நிறக் குறுக்கு மறுக்கான பாதைகள் எங்கள் கற்பனையில் ஏதோ பொருள்பெற்று எங்களை விடுவித்தன. அத்துடன் எங்கள் தாய்மார்களின் சிரிப்பொலி இல்லாத வெறுமையை அவை மறக்கடித்தன. படிப்படியான வலியின் வெடிப்புகளில் முதலில் எழுதிய எழுத்துகள் உணர்வு மங்கி அந்தக் கீறல் ஏற்படுத்திய வலி மங்கும். கடைசியாய் நாங்கள் ஆழக் குடைந்து சொற்களை எழுதிய இடம் அமைதியுறாமல் இன்னும் துடித்தபடி இருக்கும்.

நாங்கள் ஏறிட்டு நோக்கிச் சிரித்தோம். எங்கள் உடலை அங்கே வரைந்து எழுத்துகளின் இடையில் பாட்டிகளின் உருவத்தை நெருக்கி வரைந்தோம். சின்னஞ்சிறிய மரப்பட்டையை உங்கள் பேனாவாகப் பயன்படுத்துவதால் ஆங்காங்கே சிறு சிறு துளிகளாகக் குருதி துளிர்க்கும் சாத்தியம் உண்டு. அத்தகைய சொற்கள் ஒருபோதும் பிரியவோ மறக்கப்படவோ கூடாதவை. இது எழுதுதல் அன்று, இரத்தம் சிந்துதல். எழுதுவது அத்தனை முக்கியமானது. பின்னர், எங்கள் உடலின் நிறவேறுபாட்டைக் கண்டால் பாட்டி வருந்துவாள் என்பதால் உள்ளே ஓடிச்செல்வதற்கு முன்பு கையளவு எச்சில் தொட்டு உடம்பைத் துப்புரவாய்த் துடைத்துக்கொள்வோம். இந்த எச்சில் கதகதப்பும் அமைதியுமான ஓர் உணர்வை எங்கள் மேல் கவியச்செய்யும்.

உடம்பின் மேல் இல்லையென்றாலும் பிறகு நிலத்தில் எழுதக் கற்றுக்கொண்டேன். வண்டலான மண்ணை எங்கள் உள்ளங்கை கொண்டு அன்பும் அக்கறையுமான அசைவுகளால் சமதளமாகப் பரப்புவோம். பிறகு எங்கள் விரல்நுனியால் எழுதுவோம். பூமியில் மூக்கு படும்வண்ணம் குனிந்து எங்களை வேறொரு உணர்வுலகத்துக்கும் உலகத்தில் எங்களுக்கான இடத்தின் புரிதலுக்கும் இட்டுச்சென்ற பெரிய சொற்களை எழுதக் கற்றுக்கொண்டோம். நிறைவாய் வேலையை முடித்ததற்குப் பெருமிதம்கொண்டு தள்ளிநின்று நாங்கள் எழுதியதைப் பார்ப்போம். ஏதோ வண்டுகளைபோல மண்ணைக் குடைந்திருந்தோம். அதனைக் கண்டு நாங்கள் மிகவும் மனநிறைவு பெற்றோம். அந்த எழுத்துகளை அங்கேயே அந்த மண்ணிலேயே விட்டுவிட்டு எங்கள் வேலைகளைச் செய்ய ஓடினோம். மழைபெய்தபின் வெற்றுப் பாதத்துடன் ஒட்டிக்கொண்டு எங்களை முழுமையாகப் பற்றிக்கொள்ளும் ஈரமண்ணில் எழுதுவது எனக்கு எப்போதும் பிடிக்கும். பிறகு தொலைவிலிருந்தும் பார்க்கக்கூடிய உருவங்களை நிலத்தில் வரைந்தோம். எங்கள் உடல், நிலம், மழையின் வாசம், வண்டுகள், எங்கள் மூக்கு இவையே எழுத்து.

பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - அய்யப்ப மாதவன்

கவிஞர் அய்யப்ப மாதவன் - அறிமுகம்

சிவகங்கை மாவட்டம்- நாட்டரசன்கோட்டை எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். கவிஞர் மீராவின் 'அன்னம்' பதிப்பகத்தின் மூலம் இலக்கியம் அறிமுகமாகி இலக்கியத்திற்குள் வந்தவர். முதலில் தமிழில் ஹைகூ கவிதைகளால் பாதிப்படைந்து 'தீயின் பிணம்' என்ற முதல் நூலை தான் சொந்த பதிப்பில் 'அன்னம்' பதிப்பகத்தின் வழியாக வெளியிட்டார்.


அதன் பிறகு ' மழைக்குப் பிறகும் மழை' என்ற நூலை 'அகரம்' வெளியீடாக கொண்டுவந்தார். பிறகு நவீன கவிதையின் தாக்கத்திற்குட்பட்டு அதுமாதிரியான கவிதைகள் எழுதத் தொடங்கி, ' நானென்பது வேறொருவன்' என்ற நூலை அகரம் வெளியீடாக கொண்டுவந்தார். இந்த நூல் நவீன தமிழ் கவிதை உலகில் அவருக்கு பரவலான கவனத்தைப் பெற்றுத் தந்தது. பிறகு வரிசையாக ' நீர்வெளி' என்ற நூல் ' அகரம்' வெளியீடாக வந்தது.


' பிறகொருநாள் கோடை' என்ற கவிதை நூல் அவரின் மொத்த கவிதைகளின் தொகுப்பாகவும் பல புதிதான கவிதைகளுடனும் வெளி வந்தது. இந்த நூல் வந்தபொழுது ' இன்று' என்ற கவிதைக் குறும்படத்தையும் எடுத்து வெளியிட்டார். இது பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்சமயம் காலச்சுவடு பதிப்பகத்தின் வழியாக ' எஸ். புல்லட்' என்ற கவிதை நூல் வந்து நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.


இப்பொழுது சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார். மொத்தம் இதுவரை எழுதிய ஏழு கதைகளில் நான்கு கதைகள் வெளியாகிவிட்டன. வருகின்ற சென்னை புத்தகக் கண்காட்சியையொட்டி அவருடைய சிறுகதை தொகுப்பு ஒன்றும், கவிதைத் தொகுப்பு ஒன்றும் வெளிவரவிருக்கிறது. இது தவிரவும் நாவல் எழுதும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.


இவர் சினிமாத் துறையில் இயக்குனராகும் முயற்சியிலும் தொடர்ந்து இயங்கிக்கொண்டு அது சார்ந்த திரைக் கதைகளையும் எழுதிக் கொண்டிருக்கிறார்.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மிதிலா - 2

குற்றவுணர்ச்சி
- மிதிலா

கால்பதிக்கும் இடம்தோறும்
குறைவேயானாலும்
சிதைவின் சாயலொத்த ஒன்றை
மகரந்தம் பரப்பும் காற்றாய்
எடுத்துச்செல்லும் சாபத்தைப் பெற்றவள்

சோர்ந்த உடல் இளைப்பாறிய கணத்தில்
காலத்தை உறையவைக்கும் நொடியொன்றில்
பார்வைக்குத் தப்பிய வெளியில்
இசையின் ஊடறுக்கும் சுருதிபேதப் பிசிறலாய்
கூசும் ஓசையுடன் விழுந்து நொறுங்கியது

கழுகுகளாய் உருமாறிய கண்ணிணைகளின் குத்தலில்
குன்றிப்போய் நெளிகின்றது ஒவ்வோரணுவும்
அறியாமல் நிகழ்ந்ததுதான் எனினும்
மன்னிக்கப்படும் என்ற நம்பிக்கையுடைய
குற்றத்தின் ஆறாத ரணம்
தண்டிப்பின் மேலதிகமாய் உறுத்தும்
சுய இழப்புகளை நினைவுறுத்தும் பரிச்சய வலி
சமாதானப் பேச்சுக்களின் வாயை அடைக்கும்

புதிய போலியால் ஈடு செய்யப்படலாம் என்றாலும்
ஒருமனதாய் அதனை ஏற்கச் செய்யுமா
நினைவுகளின் மதிப்பைச் சுமந்திருந்த
பழையதன் இடத்தில்

நிணமும் குருதியும் பின்னிய உடலுயிரை
சிறிது சிறிதாய் அரித்தெடுக்கும்
கைநழுவிய பொருளின் மரணம்.


--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மிதிலா - 1

ஆனந்தக் கூத்து
- மிதிலா

இதழ் பிரியாத குறுஞ்சிரிப்புடனும்
ஒளிரும் மழலைக் கண்களுடனும்
தளர்நடைபோட்டு வந்தான் ஆனந்தன்
உபந்யாசம் கேட்க கூடிய பெருங்கூட்டத்தில்
அங்குமிங்கும் ஓடிச்சென்று
தவமின்றி வரமருளும் கடவுளாய்
தன் தொடுகையால் புத்துயிர் அளித்தான் அனைவருக்கும்
விடுத்தவர் கையை மீள வந்தடையும் பூமராங்காய்
எங்குச் சென்றாலும் தாயிடமே வந்து
அவள் முகம்பார்த்து விகசித்தான்
மடியில் ஏறி நின்று காதில் ரகசியம் பேசினான்
அதட்டிய அக்காளிடம் செல்லமாய்ச் சண்டையிட்டான்

சுருக்கிய புருவமும் சற்றே பிளந்த வாயுமாய்
கேள்வி உறைந்த பாவனையுடன் நோட்டமிட்டான்
சட்டென மீளவும் தாய்முகம் பார்த்து
பூரித்த சிரிப்புடன் கழுத்தைக் கட்டிக்கொண்டான்
தான் கவனிக்கப்படுவதை உணர்ந்து வெட்கி
தாயின் தோளில் முகம் மறைத்து
கண்ணாமூச்சி ஆடினான் சில கணங்கள்
தன்னைச் சீண்டிய பெண்ணின் கையைக் கடித்து
பொய்யாய் அவர் அழுதது கண்டு
அச்சம் மேவ திகைத்துப் பின் சகஜமானான்

விளையாட்டுகள் எல்லாம் அலுத்துப்போன கட்டத்தில்
நேரம் மிக நீண்ட சலிப்பின் உந்துதலால்
யாரும் கேட்கத் துணிவற்ற கேள்வியை
'முடிஞ்சுதாம்மா' என ஒற்றைச் சொல்லில்
மழலையாய் வினவி
பிரசங்கத்தில் கட்டுண்டிருந்த அனைவரையும்
நொடியில் விடுவித்துச் சிரிக்கவைத்தான்
இறுகிய சூழல் கலகலப்பாக
பரவிய அலையின் அதிர்வை உணராது
ஆழ அமிழும் கல்லாய்
உறங்கிவிட்டான்
ஆனந்தனின் குறு விளையாடல்களின் முன்
வசீகரமிழந்து போனது சமயப் பெருங்கதையாடல்.


--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மதுமிதா - 7

மரணமில்லா வாழ்வு வையகத்தில் உண்டா?


- மதுமிதா





மரணமில்லா பெரு வாழ்வு வாழும் உயிரினம் உள்ளதா உலகில்?


ஆமாம்.பொய்யில்லை.உண்மை.உள்ளது.



உலக உயிரினங்களின் இயற்கை நியதி எது?


ஜனனம்,வாழ்க்கை,மரணம்.



எல்லா உயிரினங்களுக்கும் பொதுவான விதி இது.



எல்லா உயிரினங்களும் பிறக்கின்றன,வாழ்கின்றன,மடிகின்றன.



மனிதர்களின் வாழ்க்கைப் பயணம் எப்போதும் மரணத்தை நோக்கியே செல்கிறது.மரணத்திற்கு முன் சந்ததிகள் வடிவில் வாழ இனப்பெருக்கம் இயல்பாய் நிகழ்கிறது.மரணம் நிச்சயம் என்பது மனிதர்கள் அறிந்தது. எனவே தான் சில மனிதர்கள் வாழ்வு முடியும் முன்பே நன்மை செய்து புண்ணியம் சேர்க்க நினைக்கின்றனர்.எனினும் சில மனிதர்கள் இருப்பது சில காலம் எப்படியேனும் வாழலாம் என்று பிறருக்கு துன்பம் சேர்க்கும் தீமையை மனமறிந்து செய்து விடுகின்றனர்.



மார்க்கண்டேயன் போல் மரணம் வென்றவர்கள் யாரேனும் இன்னும் இங்கே இருக்கின்றனரா?மரணம் இல்லையென்றால் இவ்வுலகம் தாங்காது.மரணத்திற்கு ஏழை,பணக்காரன்,ஜாதி,மத பேதம்,தலைவன்,தொண்டன்,படித்தவன்,படிக்காதவன்,அறிவாளி,முட்டாள்,கலைகளில் தேர்ந்தவன்,மூடன் என வேறுபாடு எதுவும் தெரியாது.



மரணம் என்பது இருப்பதாலேயே உலகம் நன்மை,தீமைகளை சரி செய்து சமச்சீராய் இயங்கிக்கொண்டிருக்கிறது.மரணம் இல்லையென்றால் கல்லறை,சமாதி,சுடுகாடு எதுவும் இருக்காது.(சுடுகாட்டு ஊழல் தோன்றியிருக்காது.)



இட பிரச்சினை காரணமாக எளிதாக கையில் கிடைக்கும் அஸ்தி அளிக்கும் எலக்ட்ரிக் சுடுகாடும் கண்டுபிடிக்கப்பட்டிருக்காது.





தாஜ்மஹால், எகிப்து பிரமிட் எதுவும் இல்லாது போயிருக்கும்.



சரி விஷயத்திற்கு வருவோம்.


மரணமில்லா வாழ்வு வையகத்தில் உண்டா?


ஆமாங்க.ஆமாம்.


மரணமில்லா வாழ்வு இருக்கிறது.புருடா இல்லை.


உண்மையா?


ஆமாம்.



மரணம் என்பதே இல்லாது கோடிக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் உயிரினம் உலகில் உள்ளது.அப்படி சாகாமலிருக்கும் வழியிருந்தால்,நாமும் அந்த உயிரினம் போல் மரணமில்லாமல்,என்றுமே சாகாமல் இருக்க இயலாதா?



முடியாது. இயற்கை நமக்கு அந்த வாய்ப்பைத் தரவில்லை.



அப்படியென்றால் அந்த உயிரினம் எது?


அமீபா



சாவே இல்லாமல் வாழ்ந்துவரும் உயிரினங்களில் ஒன்று ஒரு செல் உயிரினமான 'அமீபா'வேறு சில ஆரம்பகால உயிரினங்களும் இருக்கின்றன.



ஆனால் அவை தோன்றியது முதல் இன்று வரை சாகவில்லை என்று எப்படி கூற முடியும்?
அமீபா இனப்பெருக்கம் செய்யும் தன்மையைக் கொண்டு இப்படி ஒரு முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. புரோட்டோஸோவா பிரிவைச் சேர்ந்த உயிரினங்கள் இப்படியே பிரிகின்றன.மரணமில்லா வாழ்வு வாழ்கின்றன.அவைகள் பொய்க்கால்கள் மூலமாக இடம் பெயர்கின்றன.



அமீபாக்களின் இனப்பெருக்கம் மிகவும் எளிமையானது.ஒரு அமீபா ஓரளவு வளர்ந்ததும்,சரியான பருவத்திற்கு வந்தவுடன்,இரண்டாகப் பிரிந்து இரண்டு அமீபாக்களாகிவிடுகின்றன.



ஒரு உடல் இரண்டு உடல்களாகின்றன.இரு உடல்களாகின்றது என்கையில்,இரு உயிர்களாகப் பிரிந்து விடுகிறது. இங்கே எதுவும் சாகவில்லை!



அமீபா இரண்டாகப் பிரிவதற்கு அதன் உடலுக்கு வெளியே இருந்து யாருடைய உதவியும் தேவையில்லை.உடலுக்கு உள்ளே ஏற்படும் உந்துசக்தியே போதுமானது.முதலில் இருந்த அமீபா தானே தனியாக இருந்து எந்த குழந்தை அமீபாவையும் ஈன்றெடுக்கவில்லை.முதல் அமீபா தாய் என்றால் இரண்டாகப் பிரிகையில் இரண்டு தாய்களாகவே இருக்கின்றன.
எப்படி பிரிகின்றன என்பதை


இங்கே பாருங்கள்


சூடோபோடியா எனும் பொய்க்கால்களையும் காணலாம்.



அமீபாக்களில் ஆண் என்றும் பெண் என்றும் பேதமில்லை.ஆம் பால் வேறுபாடு இல்லை.அதுமட்டுமல்ல அமீபாக்களுக்கு வயது ஏறுவதும் இல்லை.அதற்கு மாறாக ஒவொரு தடவை பிரியும் போதும் இளமையடைந்து விடுகிறது.முதுமை என்ற பேச்சுக்கே இடமில்லை.



ஆம்


மாறாத இளமை.


மீண்டும் மீண்டும் இளமை.


ஓராண்டு ஈராண்டுகளல்ல. பத்தாண்டு நூறாண்டுகளல்ல.


ஆயிரம் லட்சம் ஆண்டுகளுமல்ல.கோடிக்கணக்கான ஆண்டுகள் குன்றா இளமை.



[பூமியில் ஆரம்பகால உயிர்கள் தோன்றி 100 கோடி ஆண்டுகளாகின்றன என்று விஞ்ஞானிகள் கதிரியக்க கருவிகளைக் கொண்டு கணக்கிட்டிருக்கின்றனர்.] அமீபாக்கள் முதுமையடைய மறுக்கின்றன. இளமையாக இருப்பதற்காகவே இரண்டாகப் பிரிகின்றன என்றாலும் தவறில்லை.உயிரியல் உண்மையும் அதுவே. (உயிர் வாழ்வதற்கு சாதகமான சூழ்நிலை இல்லாமல் அகால மரணமடைவது என்பதில் அமீபாக்களும் விதிவிலக்கல்ல. இயற்கையின் சீற்றங்களால் ஏற்படும் மடிவுகளை இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.)



முதுமையடைந்து, உடல் ஓய்ந்து, தள்ளாடி மடியும் இயற்கை மரணம் அமீபாவுக்கு இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்கையில் 100 கோடி ஆண்டுகளுக்குமேலான மரணமில்லா பெருவாழ்வு அமீபாக்களுடையது.இரண்டிரண்டாக பிரிந்து பிரிந்து சென்று கொண்டே இருக்கும் தொடர்ந்த உயிர்ப்பிரவாஹம் மட்டுமே இங்கிருக்கிறது.



சரிதானே?

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மதுமிதா - 6

மகிழ்ச்சியாய் வாழ்வது எப்படி?
- மதுமிதா

உலகில் வாழும் உயிரினங்களின் இலட்சியங்கள் பலவகையானவை.கடைசி பரிணாமமான மனிதன் வரை இதில் சேர்த்திதான். பிற உயிரினங்களின் மகிழ்வை விடுத்து மனிதனின் மகிழ்வை மட்டும் இங்கே எடுத்துக் கொள்வோம். மிருகங்களோடு அவனைச் சேர்க்கவேண்டாம்.அவைகளுக்கு சிரிக்கத் தெரியாது. மனிதர்களின் சாபக்கேடான கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் இவற்றையும் இங்கே கணக்கில் சேர்க்க வேண்டாம், நகைச்சுவை தேவை என்பதால். ஆறறிவு பெற்று உயர்ந்தவனை இன்னும் மிருகமாகவே நினைக்க மனசாட்சி தடுக்கிறது. எப்படியேனும் ஒரு இருநூறு நூற்றாண்டுகளில் அவன் முயன்று ஜாதி,மத,இன வெறியிலிருந்து மாறிவிடமாட்டானா என்ன?இந்த நம்பிக்கை கூட இல்லையென்றால் பிறகு எப்படி மகிழ்வாய் வாழ்வது?

மனிதனின் அடிப்படைத்தேவைகளைப் பூர்த்தி செய்தாலே மகிழ்வு சேருமெனும் நிலை இப்போது இல்லை. உணவு,உடை,உறைவிடம் இவை மட்டுமே தேவை என்னும் நிலையும் எப்போதோ மாறிவிட்டது.பழங்கள்,கிழங்கு,மாமிசம் உண்டவனின் விருப்பம் வகைவகையான 'பாஸ்ட்புட்' டுக்கு மாறியாகிவிட்டது. இதில் இயற்கை உணவு உட்கொள்பவர்களையும், பாம்பு, தேள், நண்டு ஆகியவற்றை விரும்புபவர்களுயும் சேர்க்கவில்லை.

இலை, மரப்பட்டைகளை உடுத்தியவன் இயன்ற அளவில் நாகரீகமாக 'டிரெஸ்ஸிங் ஸ்டைல்' லில் உடுத்த ஆரம்பித்தாகி விட்டது. இங்கே உள்ள நாடுகளில் வியர்த்துக் கொட்ட இழுத்து மூடி உடை அணிபவர்கள் அதிகமிருக்க,அங்கே உள்ள குளிர் தேசங்களில் குளிரில் முழங்கால் தெரிய துணிகளை அதிகமணிபவர்களை என்ன சொல்வது? இதில் அரைகுறை உடுப்பணிபவர்களைச் சேர்க்கவில்லை.

குகைகளில், சமவெளிகளில் வாழ்ந்த நிலைமாறி 'ப்ளாட் சிஸ்டத்' -திற்கு மாறியாகிவிட்டது. இதில் வீதிகளில்,ரோட்டோரங்களில் வீடுகளின்றி வாழ்பவர்களையும்,அரண்மனைகளில் வாழ்பவர்களையும் சேர்க்கவில்லை.குளிருக்கு ஹீட்டர்,வெயிலுக்கு ஏர்கண்டிஷனர் இருக்கிறதே இப்போது.

ஆக இவற்றையெல்லாம் கடந்து விஞ்ஞான வளர்ச்சி,ஆன்மீக வளர்ச்சி,நாத்திக வளர்ச்சி கடந்தும் (இவற்றை சேர்த்தெழுதுவதால் யாரும் கோபித்துக் கொண்டு, விவாதமென்று சர்ச்சைக்கு வந்துவிடக் கூடாது) மனிதன் மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி?

ஒருவர் டாக்டராக,இஞ்சீனியராக ஆக வேண்டுமென்பது முந்தைய தலைமுறையின் விருப்பமாக இருந்தது. பாங்க் ஆபீசராக,அரசுஅலுவலராக இருக்க வேண்டுமென்பது அடுத்த விருப்பம். சினிமா, அரசியல், ராணுவம், சேவை, கம்ப்யூட்டர், வானியல், ஜோதிடம், எழுத்து, இசை, நடனம், ஓவியம், சிற்பம் என்று பலதரப்பட்ட விருப்பங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவருக்கு விருப்பமாக இருக்கும்.

எந்த விரும்பிய லட்சிய துறையினை எடுத்துக் கொண்டாலும், அதில் சிறப்பாக செயல்பட்டாலும், மகிழ்ச்சியாய் வாழ்வதென்பது தனியான கலை. எனவேதான் வாழ்நாள் முழுமையும் மகிழ்ச்சியாய் வாழவேண்டுமென்பதே அனைவரின் அத்தனை லட்சியத்திற்கும் பின்னான இறுதி லட்சியமாய் இருக்கும். அதற்குண்டான வழிமுறைகள் என்னென்ன? பார்க்கலாம்.

1. பொய் சொல்லக்கூடாது

திருடன் ஒருவன் வலதுபக்க பாதை வழியே போவதைப் பார்த்து விட்டீர்கள் தவிர்க்க இயலாத சூழலில். கையில் கத்தி இருக்கிறது. காட்டிக் கொடுத்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று மிரட்டி விட்டுச் சென்றுள்ளான் திருடன். ஆனால் அவன் திருடன் இல்லை. திருடன் என்று தவறாகக் காவலர்கள் தேடுகின்றனர்.காவலர் வந்து இந்தப் பக்கமாய் திருடன் போனதைப் பார்த்தாயா என்று வலதுபக்கம் காட்டினால்,இந்தப் பக்கம் திருடன் சென்றதைப் பார்க்கவில்லை என்று இடது பக்கம் காட்ட வேண்டும். பொய்யும் சொல்லவில்லை. இப்போது இரு உயிர்களுக்கு சேதமுமில்லை. இந்த டெக்னிக்கை வேறு சிலவற்றுக்கும் உபயோகிக்கலாம். எதற்கெல்லாம் என்று அவரவர்களே யோசித்து முடிவெடுத்து மகிழலாம்.

பொய் சொல்லக் கூடாதென்பதற்கு முக்கிய காரணம் ஒன்றும் இருக்கிறது. நமக்கு மறதி என்பது கொடுப்பினை. முதலில் சொன்ன பொய்யை மேலும் தொடர்ந்து சொல்லும் வல்லமையும் நமக்கு இல்லை. ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய் வேறு சொல்ல வேண்டும். கற்பனைத்திறனும் கிடையாது. ஏன் ரிஸ்க் எடுக்கணும். பொய் சொல்லாமலிருப்பது ஏன் பெட்டர் என்பது இப்போது புரிந்திருக்குமல்லவா?

பொய் சொல்லாமலிருந்தால் மகிழ்ச்சி நிச்சயம்.

2. ஒன்றை சொல்லி விட்டால்,சொன்ன சொல்லை காப்பாற்றும் பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.

இது பல வழிகளில் பயன் தரும் விஷயம்.ஒரு பணி செய்ய வேண்டுமென்றால் முதலில் இரண்டு பேரிடமாவது இதனைச் செய்யப் போகிறேன் என்று சொல்லி விடவேண்டும். நாமோ பொய் சொல்ல மாட்டோம். பிறகு சொன்ன சொல்லைக் காப்போம். இந்நிலையில் இன்று இந்தப் பணி செய்யப் போகிறோம் என்று முடிவெடுத்தபின் செய்யாதிருக்க இயலாது. ஏனென்றால் அந்த இரண்டு பேர் வந்து என்ன இன்னும் செய்யவில்லையா என்று கேட்டால் எங்கே முகத்தை வைத்துக் கொள்வது. ஆகையினால் ஐந்து நாட்களுக்குள் முடிக்க வேண்டிய பணியென்றால் பத்து நாட்களுக்குள்ளாவது முடித்து விடுவோம்.

இதற்கு சந்திரமுகி திரைப்படம் பார்க்கப் போகிறேன் என்று இருவரிடம் சொல்லி,போனாயா,பார்த்தாயா என்று அவர்கள் வினவ, பத்து நாட்களுக்குள் பார்த்துவிட்டேன் என்று சொல்லும் பணிக்கு உபயோகப்படுத்துவதல்ல இந்த முறை. ஒரு கதை எழுதப் போகிறேன் என்று நண்பர்கள் இருவரிடம் சொல்ல, இருவரும் என்ன எழுதினாயா,எழுதி முடித்தாகி விட்டதா என்று கேட்டு கேட்டே எழுத வைத்து விடுவர். 'இவனெல்லாம் கதை எழுதி' என்று பின்னால்,பின்னால் சொல்வதை இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு நாள் மெகாசீரியல் கதாசிரியராகும் போது மூக்கின் மீது விரல் வைத்து, பிளந்தவாய் மூடாது பார்க்கப் போகிறவர்கள் இவர்கள்தான். நமக்கு செயல், செயல்தான் முக்கியம். ஆக சொன்ன சொல்லையும் காப்பாற்றி, செயலும் நிறைவேறி மகிழ்ச்சி நிச்சயம்.

3.புன்னகையுடன் இருக்க வேண்டும்.

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது வழக்கில் உள்ளது.உறவுகளிடையே பிரச்சினைகள் வரும் போது(நண்பர்களைக் கூட இதில் சேர்த்துக் கொள்ளலாம்) நேரடியாக, அல்லது மறைமுகமாக, சுமுகமாக பிரச்சினையினைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.இல்லை எனும் பட்சத்தில் மூன்றாவது மனிதரிடையே சொல்லும் வழக்கம் அறவே இருக்கக் கூடாது.கண்,கை,வாய்,மூக்கு,நாக்கு என விஸ்வரூபம் எடுப்பதனைத் தடுக்கத்தான்.மௌனமாக இருக்கும் பட்சத்தில் சுலபமாக இடையில் தோன்றும் விவகாரங்களைத் தவிர்க்கலாம். அவர்களை,அடுத்தவரிடம் எதுவும் குறைகூறாத பட்சத்தில் நம் மனமாவது அமைதியாய் இருக்கும்.

இதற்கு எந்த உதாரணமும் சொல்லப் போவதில்லை. நல்ல வேளையாக எதுவும் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் கொட்டிய வார்த்தைகளை எந்தக் கூடையில் அள்ளுவது எந்த தர்மசங்கடத்திலிருந்து தப்பிக்கலாம்.இல்லை என்றால் கூறிய வார்த்தைகளே விரல் நீட்டி குத்தி குத்திக் காட்டி ரணகளப்படுத்திவிடும். ஒரு புன்னகை எல்லாவற்றையும் தீர்க்கும் என்ற நம்பிக்கையோடிருக்கலாம்.அடுத்த ஜென்மம் வரையிலா என கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது.இளிச்சவாய் பட்டம் கிடைத்துவிடுமே என்று எள்ளளவும் தயங்கக் கூடாது.புன்னகை,சிரிப்பு என்று அனுதினமும் பழக்கப் படுத்திக் கொண்டால் அது நாம் அறியாமலேயே அனிச்சைச் செயலாய் எப்போதும் புன்னகைக்க வைத்துவிடும்.மரை கழண்ட லூசா என்றாலும் கேட்காததுபோல் சிரித்த வண்ணம் சென்று விடவேண்டும்.ஆக உறவுகளின் மேம்பாட்டிற்காக புன்னகையோடு இருந்தால் மகிழ்ச்சி நிச்சயம்.

4. மய்யமாய் தலையாட்டுதல்.

வாழ்க்கையின் எதிர்பாராத நேரத்தில், விவாதம் என்று எந்த விஷயத்திலாவது வருவது தவிர்க்கவே இயலாதது.அதுவும் யாரிடம் எந்த கணத்தில் என்ன விவாதம் ஏற்படும் என்பது அறுதியிட்டுக் கூற இயலா சிதம்பர ரகசியம். அதிலும் நம்மை சாட்சியாக வைத்து இரு பிரிவாகப் பிரிந்து எப்போது சர்ச்சை களைகட்டும் என்பதை பிரம்மனாலும் கணிக்க இயலாது. அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் உப்புப் பெறாத விஷயத்திற்கு சர்ச்சை தேவையா என்று அறிவார்த்தமாகப் பேசிவிடக் கூடாது.

உப்பு என்ன அவ்வளவு மட்டமா?உப்பு சத்தியாகிரஹம் தான் வெள்ளையனை வெளியேற்றியது என்று ஒரு பிரிவும், உப்பினால்தான் எல்லா பிரச்சினையும், உப்புச் சத்திற்கு கால் வீங்குதல்,மருத்துவத்தில் இன்னின்ன மருந்துகள் உள்ளன என ஒரு பிரிவுமாய்,சர்ச்சை திசை மாறிவிடும் அற்புதமும் நேரிடலாம். அதனால் அதுபோன்ற தருணங்களில், தொலைக்காட்சியின் நேர்காணலில் கேள்வி கேட்பவர், பதில் பெறுகையில் தலையாட்டுவதுபோல், மய்யமாய் தலையாட்டி வைக்கலாம். அவ்விதம் மய்யமாய் தலையாட்டி வைத்தலால் மகிழ்ச்சி நிச்சயம்.

5. சரி எனல்.

எந்த விஷயமானாலும் 'சரி' என்பது தப்பித்தலுக்குரிய வார்த்தை.சற்று நேரம் சென்ற பிறகு 'சாரி' செய்யத்தான் நினைத்தேன் செய்ய இயலவில்லை என்று கூறி தப்பித்துக் கொள்ளலாம். இல்லை என்னால் முடியாது என்று அந்த நேரமே கூறினால் சர்ச்சையே வலுக்கும். அதைவிட சிறிது நேரம் எடுத்துக் கொள்கையில் செய்ய இயலாதென்ற காரியம் நம்மாலேயே செய்து முடிக்கப் படலாம். அல்லது நமது பரிதாப நிலைக்கு இரங்கி யாராவது ஒருவரால் செய்து முடிக்கப் படலாம்.

உதாரணத்திற்கு துணி தேய்த்து (iron செய்து) வைக்க வேண்டும்.அப்போது வேறு வேலை இருக்கிறது இல்லை என்னால் முடியாது என்று சொல்லக் கூடாது.சரி செய்கிறேன் என்று சொல்ல வேண்டும். பிறகு கரண்ட் இல்லை என்பதால் தேய்க்க இயலவில்லை எனலாம்.வேலை முடிந்ததென்றால் நாமே தேய்த்து வைத்து விடலாம்.சலவைக்காரனிடம் தரலாம்.பாவமே என்று சொன்னவர் தானாகவே தேய்த்துக் கொள்ளலாம். அதை விடுத்து இல்லை என்னால் முடியாது என்கையில் multi options-களைத் தவறவிடுகிறோம். வில்லங்கத்திற்கு நாமே வித்திட்டு விடுகிறோம்.விவகாரமெனும் அவலம் கோரதாண்டவமாட அறியாமலேயே அனுமதிச்சீட்டளித்து விடுகிறோம். ஆகவே சரி என்றால் மகிழ்ச்சி நிச்சயம்.

இதனால் சகல ஜீவராசிகளுக்கும் தெரிவிக்கப் படுவது என்னவென்றால், இது வரையிலும் நன்றாக இருந்த மனுஷன் என்ன இந்தக்கோலமாகிவிட்டார் என்று காதுபடப் பேசினாலும் கலங்கிடவே வேண்டாம்.

இந்தக் கட்டுரை படிக்கவில்லை என்று பொய் சொல்ல வேண்டாம். விடாமுயற்சியாய் எந்த நேரத்திலும் புன்னகைப்பேன் என்று சொன்ன சொல்லைக் காப்பாற்றலாம். மந்தகாசப் புன்னகையுடன் சென்று விடலாம், மய்யமாய் தலையாட்டிக் கொண்டு,சரி என்று ஒப்புக் கொண்டு. மகிழ்ச்சி நிச்சயம்.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மதுமிதா - 5

அறிவியல் கொடைகள்...
- மதுமிதா

முதல் முதலாய்
குழாய்களில் தண்ணீர்
வர ஆரம்பித்ததும்
இருளிலும் பெண்கள்
தண்ணீர் பிடிக்க ஆரம்பிக்கையில்
ஊரின் பேய்களையெல்லாம்
தெரு மின்விளக்குடன் சேர்ந்து கொண்டுவிரட்டி
விரட்டி அடித்து விட்டது

ஆகாய விமானத்தில்
அருகருகே அமர்ந்துபயணிக்கச் செய்து
தீண்டாமையினை மறைமுகமாய்
ஒழித்தெடுத்து விட்டது

பிடி சாம்பலை
கணநேரத்தில்
கைகளில் அளித்து
சுடுகாட்டிற்காய்
சண்டை போட்டுக் கொண்டிருந்த
காலத்தினை மாற்றி விட்டது

நினைந்து நினைந்து
மகிழும் வண்ணமாய்
ஓரளவேனும் சில இடங்களிலேனும்
அறிவியல்
அதீத கொடையினை அளித்து வருகிறது
இன்னும் இன்னும்
உலகிற்கு வரப்பிரசாதமாய்...
*******

இரவு-விடியல்...
- மதுமிதா

ஒவ்வொரு இரவும்
தன்னுள் பதுக்கி வைத்திருக்கிறது
மறுநாளைக்கான
புத்துணர்ச்சியினை
சரியாக உபயோகிக்கையில்
வெற்றி பெறும் மனிதம்

தவறான பயன்பாட்டில்
துளிர்க்கிறது
தீவிரவாதம்

விழி திறக்கையில்
விடியும் காலை
மனரம்மியம் விடுத்து
பழியினை வளர்த்தெடுத்தல்
என்றும் செய்யாது

பயிற்சியற்ற மனமே
பழி தீர்க்கும் தாகத்தில்
அலைந்திடும்

அமைதியினைத் தேடி
பழிக்குணம் விடுத்தால்
அமைதி தானே நிகழும்
என்பதறியாது
வீழ்ந்திடும்

தீப ஒளியில்
விட்டில் வீழ்வதாய்

நல் மனம்
நாடி நிற்கும்
பிறர் நன்மையினை
விடியலுக்காய் காத்திருக்கும்
மலர்ந்திடத் துடிக்கும்
மணமிக்க மலராய்...

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மதுமிதா - 4

ஆத்மார்த்தமான‌ உரையாடலா நேர்காணலா?
- மதுமிதா

'குழந்தைக்கு ரெண்டு வயசு இருக்குமா?''


ஆமாங்க அக்டோபர் வந்தா ரெண்டு வயசு

''இங்கே வா இங்கே வா'

கைநீட்டி அழைக்க‌ குழந்தை சிரிக்கிறது.

குழந்தையை தாயிடமிருந்து வாங்கி ஜன்னல் வழியே பின்னால் ஓடும் மரங்களைக் காட்ட ஆரம்பித்தார் எதிரில் அமர்ந்திருந்தவர். குழந்தை அந்தப் பெரியவரின் கையில் உள்ள வாட்ச்சைத் தொட்டுப் பார்த்தான். அந்தத் தொடுகையில் நரைமுடியைக் கடந்தும் அவரின் விழிகளும் பல்வரிசையும் மின்னின. அதுவரை இரயிலில் இருந்த இறுக்கம் குறைந்து சுகமான, சுமுகமான சூழல் ஒன்று உருவாக ஆரம்பித்திருந்தது. குழந்தையின் அழுகை நின்றிருந்தது. தனியாக வந்திருந்த தாய் கொஞ்சம் இயல்பாக ஆரம்பித்தார்.

'நான் டில்லியிலிருந்து வர்றேன் மதுரைக்குப் போகிறேன். எஸ்.எஸ். காலனியில வீடு

''நாங்க திண்டுக்கல்லில் இறங்கணும்'

குழ‌ந்தை இப்போது பெட்டியில் இருந்த தங்களை நோக்கி அழைத்த‌ அனைவ‌ரையும் பார்த்து பின்பு திரும்பிக் கொண்ட‌து. சென்னையில் இர‌யிலில் ஏறிய‌வ‌ர்க‌ள் விழுப்புர‌ம் க‌ட‌ந்த‌போது ச‌க‌ஜ‌மாக‌ப் பேச‌ ஆர‌ம்பித்திருந்த‌ன‌ர்.

திருச்சியைக் க‌ட‌ந்த‌போது அப்பெண்ம‌ணி சொல்ல‌ ஆர‌ம்பித்திருந்தாள்:

'பைய‌ன் ச‌ரியாக‌ பேச‌மாட்டேனென்கிறான். ப‌ய‌மா இருக்கு.

''அவன் வயதையொத்த வேறு குழந்தைகள் பக்கத்தில‌ இல்லையா?'

'வீட்டுக்குப் ப‌க்க‌த்தில யாரும் சின்ன‌ப்ப‌ச‌ங்க‌ இல்லை.'

''நீங்க‌ பைய‌னிட‌ம் பேசிக்கொண்டிருங்க‌. தானாக‌ப் பேசுவான். பேசுறீங்கயில்லியா?''

'பேசறேன். எங்க மாமா பேரன் ஒன்னரை வயசில நல்லா பேசறான். இவன் மட்டும்தான் இப்படி இருக்கிறான். ப‌ய‌மாயிருக்கு. டாக்ட‌ரிட‌ம் காட்டினோம்.'

'இந்த‌மாதிரி குழந்தைங்க‌ இப்ப‌டிதான். இப்ப‌டி பேசாம‌ இருப்பாங்க‌. திடீருன்னு பேச‌ ஆர‌ம்பிக்கிற‌ப்போ ப‌டுஸ்பீடா பேசுவாங்க. நீங்களே பாருங்க‌. மெதுவா பேசுடான்னு பெற‌கு சொல்ல‌ப்போறீங்க‌.'

'இப்ப‌டிதாங்க‌ எங்க‌ எதிர்வீட்ட‌ம்மா சொன்னாங்க‌'

'என் பொண்ணோட‌ நாத்த‌னாரு பைய‌ன் இப்ப‌டிதான் இருந்தான். அவன் பேச்சை, கேக்கிற கேள்வியை, பதில் சொல்லி முடியாதுபோங்க. அதான் சொன்னேன்.'

திண்டுக்க‌ல் வ‌ந்த‌து. இற‌ங்க‌ப் போகையில் குழந்தை பெரியவரிடம் டாடா என‌ கைய‌சைத்தான். அடுத்த‌ சீட்டில் அம‌ர்ந்திருந்த‌ இஸ்லாமிய‌ப் பெண்ம‌ணி 'பாட்டிகிட்ட‌ வா. டாடா சொல்லிட்டுப்போ' என்றார். பைய‌ன் அனைவ‌ரிட‌மும் சிரித்த‌ப‌டி விடைபெற்றான்.

இரயில் சிநேகிதம்தான் இது. ஆனால், இது இர‌யில் சிநேக‌ம் ம‌ட்டுமேய‌ல்ல‌. ஆத்மார்த்தமாக நிகழ்ந்த சந்திப்பும் நிகழ்வும் இது. இய‌ல்பாக‌ நிக‌ழ்ந்த‌ ச‌ம்பாஷ‌ணைக‌ள்தான் என்றாலும் ந‌ம்மைய‌றியாத‌ கேள்விப‌தில்க‌ளுட‌னேயே ந‌ம‌து உரையாட‌ல்க‌ள் நேர்காணலைப் போலவே நிக‌ழ்கின்றன எப்போதும், நேரிலோ தொலைபேசியிலோ, தெரிந்த‌வ‌ர்களுடன் என்றாலும் தெரியாத‌வ‌ர்க‌ளுட‌ன் என்றாலும்.

ஒவ்வொரு நேர்காண‌லிலும் இது நிக‌ழ்கிற‌து.

*

நேர்காணல் அளிப்பவருக்கும் சில சிக்கல்கள் இருக்கின்றன. நேர்காணல்கள் எடுப்பவருக்கும் சில சிக்கல்கள் இருக்கின்றன.

நேர்காணல் அளிப்பவருக்கு பணியின் சிரமங்கள், தனக்கான எந்த மனநிலையென்றாலும் கால அவகாசத்துக்குள் பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம், அளித்த நேர்காணல் பதிவுசெய்யப்பட்டிருந்தால், ஒருவேளை அதில் கூறியிருந்த பதில்களுக்கான விளக்கங்கள் சொல்ல வேண்டிய கட்டாயங்கள் இது போன்றவை இருக்கலாம்.

நேர்காண‌ல் எடுப்பவருக்கோ பேட்டி அளிப்பவரின் மனமறிந்து கேள்விகள் கேட்கவேண்டும்; இடக்கு மடக்கான கேள்விகளை, தோன்றாமல் பதவிசாக கேட்கவேண்டும்; தேர்வு செய்திருந்த கேள்விகளுக்கு அப்பாற்பட்டு பேச்சின் இடையே அது தொடர்பான இன்ஸ்டண்ட் கேள்விகளை சமயோஜிதமாக கேட்க வேண்டும்... இப்படி இது போன்றவை இருக்கலாம். அவை குறித்து இன்னும் விரிவான உதாரணங்களுடன் இன்னொருமுறை பார்க்கலாம்.

*

எனக்கு நேர்காணல் தராமல் தப்பித்துக்கொண்டிருப்ப‌வர் அவர். வெளிநாடு வாழ் இந்தியர் இவர். வானொலியில் நிகழ்ச்சியும் நிகழ்த்துவார்; அறிவிப்பாளர்; பேட்டியும் எடுப்பார். பாடல்களுக்கிடையே கொஞ்சம் பேசவும் செய்வார்; (அல்லது பேச்சினிடையே பாடலும் ஒலிபரப்புவார் என்றும் வைத்துக்கொள்ளலாம்)

இவருக்கு நேயர் கடிதங்கள் வருவதுண்டு; முக்கியமாக பெண்நேயர்களின் கடிதங்கள் அதிக அளவில் வருவதுண்டு. தொலைபேசியில் அழைத்து நிகழ்ச்சியைக் குறித்தும் பேசுவதுண்டு. பிரபலங்களிடம் கேள்வி கேட்பதுமுண்டு.

ஒருமுறை இவர் ஒரு இந்திய பிரபலத்தைப் பேட்டி எடுத்துக்கொண்டிருக்கையில் ஒரு பெண் நேயர் தொலைபேசியில் வந்துவிட்டார். பேட்டி பதிவு செய்யப்படாததாக ஆன்லைனில் நேரடியாக ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. அந்த பெண் நேயரிடம் வணக்கம் தெரிவித்து பேசிவிட்டு இவர் 'இதோ இந்தப் பிரபலம் எதிரில் இருக்கிறார். பேசுங்கள்' என்று சொல்ல, தொலைபேசியில் வந்த அவர் உங்களிடம்தான் பேசவேண்டுமென பேச ஆரம்பிக்க இவர் எப்படியோ பேசிச் சமாளித்து பேட்டியை முடித்துக் கொடுத்திருக்கிறார்.

ஆக தேசம் கடந்து வந்த ஒவ்வொரு இந்திய பிரபலமும் இவரிடம் வந்து பேட்டி கொடுத்தபிறகு இவரின் பிரபலத்தை அறிந்துகொண்டு சென்றிருக்கின்றனர். இவர் இந்தியா வரும்போது, இவரை 10 ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் பாசத்துடன் நினைவு கூர்ந்திருக்கின்றனர்.

முக்கியமான செய்தி வரப்போவது இனிதான். ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து இரு கடிதங்கள் இவருக்கு ஒருவரிடமிருந்து நிகழ்ச்சியைப் பாராட்டி, பாடல்களை ரசித்து கடிதம் வந்துகொண்டிருந்திருக்கிறது. தொடர்ந்து வரும் கடிதங்களை அறிந்ததும் அந்த நேயர் யாரென அறியும் ஆவல் அறிவிப்பாளருக்கு அதிகமாகிவிட்டது. கண்டறியப்பட்ட தகவல் அந்த கடிதம் எழுதும் நேயர் ஒரு சிறைக்கைதி. ஆர்வம் அதிகமானதில் மேலும் அறியப்பட்ட தகவல் அச்சிறைக்கைதி செய்யாத குற்றத்திற்காக சிறை சென்றிருக்கிறார். எப்போது விடுதலையாகி இந்தியா திரும்ப இயலுமென்பது எவருக்கும் தெரியாது. இது தெரிந்ததும் அறிவிப்பாளர் கைதி எழுதி அனுப்பும் விருப்பப் பாடல்களை ஒலிபரப்ப ஆரம்பித்தார்.

ஒருநாள் வந்த மடல் அதிர்ச்சியைத் தாங்கிக்கொண்டு வந்தது. அதில் கைதி எழுதியிருந்தது: 'நான் இந்த தேதியில் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன். நான் தற்கொலை செய்துகொள்ளும் நேரத்தில், இன்னின்ன பாடல்களை ஒலிபரப்புங்கள். அதைக் கேட்டுவிட்டு அதன்பின் இறக்க விரும்புகிறேன். இந்தப் பாடல்களை ஒலிபரப்புங்கள்' என சோகப் பாடல்கள் நிறைந்த லிஸ்ட்டும் சேர்த்து அனுப்பியிருந்திருக்கிறார். கடிதம் வாசித்த வானொலி அறிவிப்பாளர் அதிர்ந்து போய்விட்டார். இருந்தும் ச‌மாளித்துக்கொண்டு நிக‌ழ்ச்சியை ந‌ட‌த்திக் கொன்டிருந்திருக்கிறார்.

ச‌ரியாக‌ குறிப்பிட்ட‌ நேர‌த்தில் கைதியின் பெய‌ரைச் சொல்லி எந்த‌ த‌வ‌றான‌ முடிவுக்கும் வ‌ந்துவிட‌வேண்டாமென‌க் கேட்டுக்கொண்டு, புத்துணர்வளிக்கும், உற்சாகமூட்டும், மனதின் கலக்கத்திலிருந்து வெளிக்கொண்டுவரும் பாடல்களாக ஒலிபரப்பிக்கொண்டிருந்திருக்கிறார். இடையே தொலைபேசியில் வந்த நேய‌ர்க‌ள் அனைவருமே கைதியிட‌ம் அவரது முடிவை மாற்றிக்கொள்ளும்ப‌டி கேட்டுக் கொண்டிருந்திருக்கின்ற‌ன‌ர். அன்றைய அந்த நிக‌ழ்ச்சி முழுவதுமே அந்த‌ சிறைக்கைதிக்காக‌ அர்ப்ப‌ணிக்க‌ப்ப‌ட்டுவிட்ட‌து.

வானொலி அறிவிப்பாளரோ தனதுயிரைக் கையில் பிடித்துக்கொண்டு சமயோசிதமாயும் செயல்பட்டுக்கொண்டிருந்தார்.

தொடர்ந்த இரு நாட்களுக்கு அவர் அமைதியின்றியே இருந்தார். சிறைக்கைதியின் அடுத்த கடிதம் அவர் கையில் கிடைத்தபிறகே ஆசுவாசமானார். அதில் கைதி எழுதியிருந்ததாவ‌து:

'ஐயா அந்த நொடிமனநிலையைக் கடந்துவிட்டால் ஒரு மனிதனுக்கு மறுபடியும் உயிரை விட்டுவிடும் மனநிலை நேராது. உங்களுக்கு நன்றி. நான் வெளியில் வந்ததும் உங்களைப் பார்க்க வேண்டும். உங்களைச் சந்தித்துவிட்டு இந்தியா செல்வேன்'

இப்போது அந்த‌க் கைதி விசார‌ணையில் குற்ற‌ம‌ற்ற‌வ‌ர் என‌ நிரூபிக்க‌ப்ப‌ட்டு இந்தியாவிற்குத் திரும்பி வந்து த‌ன‌து குடும்ப‌த்துட‌ன் ம‌கிழ்வாய் உள்ளார். இன்னும் இருவ‌ரும் (கைதியும், அறிவிப்பாள‌ரும்) ச‌ந்திக்க‌வில்லை.

ஒரு நேர்காணல் எடுப்பவரின் சமயோசிதத்தால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்ட நிகழ்வை மட்டும் இங்கே சொல்லியிருக்கிறேன். ச‌ரியான‌ இட‌த்தில்தான் இதைச் சொல்லியிருக்கிறேன் என்ப‌தில் ம‌கிழ்ச்சி.

அன்புட‌ன்
ம‌துமிதா

(பண்புடன் ஆண்டு விழாவுக்காக எழுதப்பட்ட கட்டுரை இது)

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மதுமிதா - 3

இயற்கை நின்று கொல்லும்...
- மதுமிதா

1. இனிய உலகின்
இயல்பாகி விட்ட
செயற்கைகளுக்கு
இடையிலும்

இன்னுயிர்களை
இனிதாய் வாழவைக்கும்
இயற்கையே!

இன்சொற்கள்,
இன்முகத்துடன்
இனிய வணக்கங்கள்


2. வெள்ளப் பெருக்கில்
அழிந்திடாத வண்ணம்
உயிர் காத்திட
அணை தேவைதான்.

நீரின் இயல்புப் பாதையை
நாம் மாற்றினால்
நம் வாழ்வின் பாதையை
நீர் மாற்றி விடும்.


3. யார் வைத்தது
எதன் மேல்
என்ற பேதமில்லை
நெருப்புக்கு.
நெருப்புக் குஞ்சு
நம் வசமிருந்தால்
அணைத்துவிடலாம்

இல்லையேல்நம்மை
அணைத்துவிடும்
நெருப்பு


4. மென்மையாய் தாலாட்டி
செடி கொடிகளைத்
தலையசைத்த வண்ணம்
தூங்கச்செய்யும்தென்றல்தான்

வேகமெடுக்கையில்
ஊழிக்காற்றாய் உருவெடுத்து
எதிர்படும் எவற்றையும்
தூள் தூளாக்கி
தூக்கி வீசி
உலகையே உலுக்கியெடுக்கிறது

5. பொறுமையின்
பேருருவம்
பூமி

தோண்டத் தோண்ட
தெவிட்டாது அளிக்கும்
சிறந்த விளைச்சல்

உணவாய்
உலோகமாய்
பொன்னாய்

அணுகுண்டாய் சோதனை வெடிக்க
பூகம்பமாய் குலுங்குகிறாள்
அன்னை


6. நிமித்தம்
நித்தம் சொல்கிறது

வானம் அள்ளித்தரும்
வசந்தங்களை
பருவமாற்றங்களை,
வளம் அளிக்கும் பெருமழையை!

இயற்கையின் பாதையை
நாம் மாற்ற
நம் பாதையை
இயற்கை மாற்றிவிடும்.

இரசாயன மழையாய் பொழியும்
மழையின்றி வறட்சியளிக்கும்.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மதுமிதா - 2

காற்று உலகை வாழச் செய்கிறது.
காற்று அழிக்கவும் செய்கிறது.
- மதுமிதா


காற்று உயிர்களை வாழ்விக்கச் செய்யவல்லது. காற்றுவெளி மண்டலமே பூமியைக் கதிர்களின் தீங்கிலிருந்து காக்கும் கவசமாகவும் உள்ளது. தாவரங்கள் காற்றிலிருந்து ஒளிச்சேர்க்கைக்கு கார்பன் -டை-ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளிவிடுகின்றன. மனிதன் போன்ற ஜீவராசிகள் சுவாசிக்க பிராணவாயு உட்கொண்டு,கரியமிலவாயுவை வெளியிடுகின்றனர். காற்று இல்லையேல் வாழ்வில்லை.உயிரில்லை. உலகில்லை.

காற்று உயிர்களை அழிக்கவல்லது. புயலாக,சூறாவளியாக உயிர்களை பந்தாடி அழிக்கவல்லது.

கண்களால் காண இயலா 'காற்றின் மகத்துவம்' காலங்களால் போற்றப் படவேண்டியது. உணர மட்டுமே இயலும் காற்று கணந்தோறும் வாழவைக்கும் மனிதகுலத்துக்கான வரம்.

ஒருமுறை அதிகாலை மூன்று மணிக்கு பெரிய சத்தத்தால் விழிப்பு ஏற்பட்டது. என்ன என்று பார்க்கையில் குளியலறையில் ஹீட்டருக்காக வைக்கப்பட்ட இடத்தில் (அப்போது ஹீட்டர் வைக்காததால்) நீர் வரும் பாதையை அடைத்து இரும்பு துருப்பிடித்துவிடும் என்பதற்காக, இரு பிளாஸ்டிக் திருகாணிகள் பொருத்தப் பட்டிருக்கும்; அதில் ஒன்று பிய்த்துக் கொண்டு தண்ணீர் பீய்ச்சியடித்து வெளியேறிக் கொண்டிருந்த சத்தம் அது.

கை வைத்து அடைக்க இயலவில்லை. பிளாஸ்டிக் திருகாணியையும் திருப்பிப் பொருத்த இயலவில்லை. எதுவும் செய்ய இயலாததால்,மொட்டை மாடிக்கு ஓடி,குளியலறைக்கு நீர் வரும் கேட் வால்வை மூடி வெளியேறும் நீரை நிறுத்தி தூங்கச் சென்றோம்.

மறுநாள் அதற்கு வேறு திருகாணி வாங்கி பொருத்தவந்தவர்,மேலே தண்ணீர் தொட்டி காலியாக இருந்ததா என்று வினவினார். ஆமாம் என்றதும்,தண்ணீர் ஏற்றியதும் காலியான தொட்டியில் நீர் நிரம்பியதும் அங்கிருந்த காற்று செல்ல இடமில்லாததால் திருகாணி பிய்த்துக் கொண்டுவிட்டது என்றார்.

பிளாஸ்டிக் திருகாணி மறுபடியும் பொருத்தப் பட்டதும்,கேட் வால்வை மூடச்சொல்லி,மற்ற குழாய்களைத் திறந்து வைக்கச் சொன்னார்.சத்தமாய் காற்றும் நீருமாய் வெளியேறியது. குழாயினை மூடி மூடித் திறந்து காற்று முழுவதுமாய் வெளியேறி நீர் விழும் சத்தம் மட்டும் வந்ததும் மூடினார்.

இப்போது இங்கே காற்று நீருடன் வெளியேறி விட்டது; அன்று அது அடைத்தே இருந்ததால்,காற்று போக இடமில்லாததால் பிய்த்துக்கொண்டது,என்று மறுபடியும் சொல்லிவிட்டுப் போனார். அதிலிருந்து தவறியும் தொட்டியில் நீர் குறையாதவாறு பார்த்துக்கொண்டோம்.

வயிற்றில் காற்று சற்றும் அதிகமாய் இருக்கக் கூடாது.

பிறந்த குழந்தைக்குக் கூட பால் குடித்ததும்,தோளில் போட்டு முதுகை லேசாய் தடவி அல்லது மடியில் உட்காருவது போல் வைத்து,வயிறு சற்றே அழுந்துவதாய் முன்னால் சாய்த்து, முதுகை லேசாய் தடவி ஏப்பம் விடச் செய்வர்.

பெரியவர்கள் வயிறு உப்பிசம் வந்து கஷ்டப்படும் போது காற்றுத் தொல்லை (gas trouble) என்பர். காற்று வெளியேறினால் சரியாகிவிடும் என்பர். காலையில் எழுந்ததும் வயிறு நிரம்ப (ஒரு லிட்டர்) தண்ணீர் குடித்து,குழாயில் அடைத்திருந்தது போல் அடைத்திருக்காது காற்றை வெளியேற்ற பழகிக் கொள்ள வேண்டும்.உடல் நலத்திற்கு இது அவசியம்.

காற்றின் மகத்துவம்.

உடல் நலத்திற்கு காற்று என்ன செய்யும் ?

நாம் தூய காற்றினை சுவாசிக்க வேண்டும்.சுவாசிக்கும் காற்று நுரையீரல்களை நிரப்பி,இரத்தத்தை சுத்திகரித்து,உடலை ஆரோக்கியமாக இயங்கச் செய்கிறது. ஓட்டம், நடை, விளையாட்டு, உடற்பயிற்சி, நடனம், உடலை வருத்தும் வேலை என வியர்வை வழிய செய்யும் அனைத்துப் பணிகளும் அதிக கொள்ளளவில் காற்றினை நுரையீரலுக்கு அனுப்பி உடலை சீராக இயங்கச் செய்யும்.

மன நலத்திற்கு காற்று என்ன செய்யும்?

அதற்கும் காற்று உதவும். மூச்சுக்காற்று பல சந்தர்ப்பங்களில் உணர்வுகளை மாற்றியமைக்கும் வல்லமையுடையது. கோபமாக இருக்கும்போது 1,2,3 பத்து வரை எண்ணுங்கள் என்று சொல்வர்.கோபம் குறைய வேண்டுமென்பதற்காக. கண்ணைமூடிக் கொண்டு மூச்சினை மெதுவாக,நன்றாக,முழுவதுமாக உள் இழுத்து வெளியிடவேண்டும். மூச்சுப் பயிற்சி செய்தால் உணர்வுகளை நம் வசப்படுத்தும் சக்தி அதிகரிக்கும். முற்காலங்களில்,முனிவர்கள் காடுகளுக்குச் சென்று தவம் செய்தது தங்கள் உணர்வுகளைத் தங்கள் கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கே.காட்டிற்கோ,மலையுச்சிக்கோ கடும் பயணம் செல்ல வேண்டாம். இருக்கும் இடத்திலிருந்தே மூச்சுப் பயிற்சி மூலம் உணர்வுகளை,எண்ணங்களை நம் வசம் செய்யலாம். மந்திரம் மாயம் எதுவுமில்லை. மனமிருந்தால் போதும்.

முதலில் ஒரு அரைமணி நேரம் தினமும் ஒதுக்கவேண்டும் மூச்சுப்பயிற்சிக்கு.நேரமில்லை என்பவர்கள் பிறகு பயிற்சி செய்யச் செய்ய பத்துநிமிடம் ஒதுக்கினால் கூடப் போதும்.ஏதோ கடினமான வேலை நம்மால் செய்ய இயலாது என்ற மலைப்பே தேவையில்லை.சைக்கிளோ,நீச்சலோ கற்றுக் கொள்ளும் போது எப்படி கற்கிறோம்?முதலில் சிரமமாக இருப்பதாகத் தோன்றும். ஆனால் பழகி விட்டால்?அதிலேயே எத்தனை சாகசங்கள் செய்ய முடிகிறது? அதே நிலைதான்,அதே முறைதான் இதற்கும். ஆரம்பித்து விட்டால் அந்த அமைதி எப்போதும் உடனிருக்கும்படி பார்த்துக் கொள்ள இயலும், எந்த சூழலிலும். இந்த அமைதியெனும் போதையினை ஒருமுறை அனுபவித்துவிட்டால்,புகை,குடி... போன்ற வேறெந்த போதையும் முன்னே நிற்க இயலாது.

மூச்சுக் காற்றின் முறையான,முழுமையான உள் இழுப்பில் அறிவின் மற்றோர் ஊற்றுக்கண் திறப்பது திண்ணம். கையில் கிடைத்த நல்முத்தினை இழக்க யாரேனும் விரும்புவார்களா?

உடல்நலம், மனநலம் காக்கும் காற்றெனும் வரப்பிரசாதம் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். காற்றினை மாசுபடாது காத்து அடுத்த தலைமுறையினருக்கு பொக்கிஷமாக அளிப்போம்.


--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மதுமிதா - 1

பூங்கா
- மதுமிதா


எத்தனை நெடிய மரங்கள்
எத்தனை சிறிய செடிகள்
அத்தனையும் பசுமை தந்த வரங்கள்
நுரையீரலுக்களிக்கும் உரங்கள்
நடைபழக நடைபழக
அனைத்தும் மறக்கும் தியானநிலை
அக்கணம் சிலிர்க்கும் உளம்
அக்கணம் மலரும் மனம்
மழையோ வெயிலோ
மேல்வானம் சற்றே தெரிந்திட
மரங்கள் இரசிக்கும் உச்சித் தூரிகையால்
அற்புதக் காட்சிகளை வரைந்த வண்ணம்
வாசம் நுகர்ந்தபடி
வண்ணப் பறவைகளைக் கண்டிட
வாகாய் அசைந்திடும்
வாடைக் காற்றை அனுப்பிய வண்ணம்
நடந்திட பாதைகள்
அமர்ந்திட இருக்கைகள்
பசுமைப் புல்வெளிகள்
அழகு மலர்க்காட்சிகள்
நண்பருடன் அளவளாவ
அன்பருடன் அன்பு விளைய
மருத்துவ சிகிச்சை பயனளிக்க
குழந்தைகள் விளையாட
கோபங்கள் போக்க
தாபங்கள் பகிர
நேசங்கள் உணர
நெஞ்சங்கள் நெகிழ
உடற்பயிற்சி செய்ய
பாடங்கள் பயில
எண்ணங்கள் எழுத
மனஅழுத்தங்கள் குறைய
எத்தனை மனிதர்கள்
எத்தனை விதங்களில்
எத்தனை காரணங்களால்
என்றும் வருவர் செல்வர்
இன்று வருபவர் நாளை வருவாரா
இதே நேரம் இதேவிதத்தில்
என்றும் அறிந்திடாது பூங்கா
எனினும்
என்றும் வாசல் விரிய
அவரவர் விரும்பிய வண்ணம்
அவரவர் விரும்பிய எண்ணம்
நிறைவேறும் வண்ணம்
எதையும் எதிர்பாராது
எவரையும் வரவேற்று
மகிழ்விக்கக் காத்திருக்கும்
பூங்கா.


--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மதுமிதா

மதுமிதா - அறிமுகம்

வலைப்பதிவுகளிலும் சரி, இணையக் குழுமங்களிலும் சரி - தனியாக அறிமுகத்திற்கு அவசியமில்லாதவர் மதுமிதா. பெரும்பாலும் கவிஞராகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் இவரும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு படைப்பாளிதான். பண்புடன் குழுமத்தில் இவரும் உறுப்பினர். இந்த வாரம் நம்மோடு நட்சத்திரமாக உலா வரப் போகும்
மதுமிதாவைப் பற்றி கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மதுமிதா

பிறப்பு : தென்காசி, தமிழ்நாடு, இந்தியா
தொழில் :எழுத்தாளர்
பாணி :சிறுகதை, சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு
மதுமிதா என்ற "மஞ்சு ரெங்கநாதன்" ஒரு தமிழக எழுத்தாளர்.

[தொகு] வாழ்க்கைச் சுருக்கம்
தமிழ்நாடு, தென்காசியில் பிறந்து, இராஜபாளையத்தில் வாழ்ந்து, சென்னையில் வசிக்கிறார். சுதந்திரப் போராட்டத் தியாகி காந்தி அரங்கசாமி ராஜாவின் பேத்தி. தந்தை ரகுபதிராஜா. தாயார் பாக்கியலட்சுமி. கணவர் ரெங்கனாதராஜா. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டாலும் தமிழில் எழுதிக் கொண்டிருப்பவர்.
எம்.ஏ ஆங்கில இலக்கியம், டிப்ளோமா இன் போர்ட் போலியோ மேனேஜ்மெண்ட் ஆகியவை கற்றவர். ஹிந்தி பிரவீன் உத்தரார்த் வரையும் சம்ஸ்கிருதத்தில் பட்டப் படிப்பும் படித்துள்ளார்.
மகாகவி பர்த்ருஹரியின் பொன்மொழிகள் இவருடைய முதல் நூல். சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.
கல்கி, அமுதசுரபி, மங்கையர் மலர், அமீரக ஆண்டு மலர், படித்துறை, யுகமாயினி, வார்த்தை மற்றும் சில சிற்றிதழ்களில் (கலை, உங்கள் பாரதி, களம், நம்பிக்கை...) கவிதை, சிறுகதை, கட்டுரை, நேர்காணல் எனப் பல படைப்புகள் வெளிவந்துள்ளன. மரத்தடி, தமிழ் உலகம், உயிரெழுத்து, சந்தவசந்தம், ஈ.சுவடி, தமிழாயம், எழுத்தும் எண்ணமும் ஆகிய மடலாடற்குழுக்களிலும் சிஃபி தமிழ், திசைகள், நிலாச்சாரல், திண்ணை, தமிழோவியம், பதிவுகள், கீற்று, தட்ஸ்தமிழ், தமிழ்நெஞ்சம் ஆகிய இணைய இதழ்களிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

மதுரை வானொலியில் இவரின் 11 பாடல்கள் இசையமைக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டன. பொதிகை, மக்கள் தொலைக்காட்சிகளில் கவிதை வாசித்துள்ளார். தமிழில் காற்றுவெளி, நீங்கா இன்பம் [1] என்ற வலைப்பூக்களையும் ஆங்கிலத்தில் Truth Wins என்ற வலைப்பூவையும் நடத்தி வருகிறார்.

இவரின் பர்த்ருஹரி சுபாஷிதம் நூல் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் நான்கு காட்சிகளில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.
இவர், சமூகப் பணிகளிலும் ஈடுபாடுள்ளவர். இரத்த தானம், கவுன்சிலிங், விழியிழந்தோருக்கு வாசித்தல், சிறுவர்களுக்கு கல்வி என இயங்கி வருகிறார். இராஜபாளையத்தில் 'இராஜபாளையம் தமிழ்நாடு அரசு பெண்கள், சிறுவர் நூலகம்' அமைய முக்கியகாரணியாய் இருந்தவர்.

[தொகு] எழுதிய நூல்கள்
மஹாகவி பர்த்ருஹரி சுபாஷிதம்:நீதிசதகம் (2000) - (மஹாகவி பர்த்ருஹரியின் பொன்மொழிகளை சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.)
மௌனமாய் உன்முன்னே (2003) - (கவிதை)
பர்த்ருஹரி சுபாஷிதம் (செப்டம்பர் 2005) - (சமஸ்கி்ருதத்திலிருந்து முந்நூறு பாடல்களின் தமிழாக்க நூல்)
நான்காவது தூண் (2006)(பதினெட்டு பத்திரிகை ஆசிரியர்களின் நேர்காணல்களின் தொகுப்பு)
தைவான் நாடோடிக் கதைகள் (2007)
பாயுமொளி நீ எனக்கு (கவிதை, மின்னூல்)

[தொகு] வெளி இணைப்புகள்
நீங்கா இன்பம், மதுமிதாவின் வலைப்பூ
மௌனமாய் உன்முன்னே - அண்ணா கண்ணன்
பர்த்ருஹரி சுபாஷிதம் ஜெயந்தி சங்கர்
பர்த்ருஹரி சுபாஷிதம் தேவமைந்தன்
பர்த்ருஹரி சுபாஷிதம் அண்ணா கண்ணன்
நான்காவது தூண் விழியன்
நான்காவது தூண் திருமலை கோளுந்து
நான்காவது தூண் தாமரைச்செல்வி
பாயுமொளி நீ எனக்குபி.கே.சிவகுமார்
நேர்காணல் நிலாசாரல்
நேர்காணல் தமிழோவியம்

--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா