பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - நிர்மலா - 7

விமானப் பயணங்களும் பார்வை சந்திப்புகளும்
- நிர்மலா


இலக்கில்லாமல் அலைந்த கண்களை
பத்தடி தூரத்திலிருந்து
இழுத்து நிறுத்தியதுன் முதல் பார்வை

யாரோடோ பேசிக் கொண்டே
சரிதானா என்று கேட்டது
இரண்டாம் பார்வை
என்னவென்றே தெரியவில்லை ஆனாலும்
மறுக்க முடியாமல் தலை ஆடியது

சோதனை முடிந்து விலகுகயில்
மெல்ல வருடிச் சென்றது
மூன்றாம் பார்வை

தேடித் தேடிச் சலித்து
மறுபடியும் எதிர்பட்ட போது
கன்னத்தில் இழைந்து முத்தமிட்டது
நான்காம் பார்வை

சற்றே இடைவெளி விட்டு
வலிய உண்டாக்கிய சந்தர்ப்பத்தில்
இடுப்பில் கைகொடுத்து
இழுத்தனைத்து விலகியது
ஐந்தாம் பார்வை

இன்னும் சில சந்திப்புகள் நிகழுமுன்
உன் வீரியப் பார்வை ஆழம் உணருமுன்
சட்டென்று முடிந்து விட்டது நம் பயணம்

விமானப் பயணங்கள் வேகமாய் முடிந்து விடுகின்றன
நீண்ட ரயில் பயணத்தில் உன்னைச் சந்தித்திருக்கலாம்!

--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - நிர்மலா - 6

கேட்டுப் பாரேன்
- நிர்மலா


நேர் பார்வை தவிர்க்கும் கண்களில்
பேச்சின் குழைவில்
சுழிக்கும் சிரிப்பில்
அனிச்சை அசைவில்
வெளிப்பட்ட பெண்மையை
இயல்பாயுணர்ந்த நாட்கள்
நழுவிச் சென்றதை உணரவில்லைதான்

நேர்க் கோட்டில் உரசியின்று
கேள்வி கேட்கும் கண்களும்
தொனியுயர்ந்த குரலும்
எல்லைதாண்டா சிரிப்புமாய்
இறுக்கிக் கொண்டிருக்கும்
பெண்மையைக் கேட்டுப்பார்
ஆசையேதும் உண்டாயென்று
முழுசாய் என்னை ஒருமுறை
உணரச் செய்யென்று
சொல்லிப் போகும்.

(பண்புடன் ஆண்டு விழாவுக்காக எழுதப்பட்ட கவிதை இது)

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - நிர்மலா - 5

வருகிறேன் நிலாக்குட்டி
-
நிர்மலா


தூக்கமும் விழிப்பும் மாறி மாறி வந்து கொண்டிருந்தது. தூங்கும் நேரங்கள் நீண்டதாயும், விழிப்பு வரும்போதெல்லாம் மறுபடியும் தூங்கப் போகும் ஆவலுமாய் இருந்தது. நினைவுகள் தான் முன்னுக்குப் பின்னாயிருக்கிறது.....

அம்மாவோட புடவையை போர்த்திக்கிட்டு படுத்திருக்கும் சுகம் உடம்பெல்லாம். துவைச்சு துவைச்சு பழசாகிப் போன அந்த பச்சைப் புடவைதான் எவ்வளவு மெத்து மெத்துன்னு இருக்கு. சிவகாமியை அணைச்சுக்கிற மாதிரி. சிவகாமிக்கு முதல் முதலா வாங்கிக் குடுத்த புடவையும் அதே மாதிரி இருக்கான்னு பார்த்து தான் வாங்கினேன். கடையில யாரும் பார்க்காதப்ப நைசா எடுத்து கன்னத்தில வச்சு பார்த்துதான் எடுத்துக்கச் சொன்னேன். வீட்டுக்கு வந்து சிவகாமி திட்டினது கூட ஞாபகம் வருது. நிலாக்குட்டியும் அப்படித்தான். பட்டு மாதிரி. எந்த வேலைக்கும் போகாம ஊர் சுத்திட்டு இருந்தவனைக் கூட்டிட்டுப் போய் முதலாளி கிட்ட வேலைக்கு சேர்த்தப்பவும் அம்மா அதே பச்சைப் புடவைதான் கட்டி இருந்தாள். கொஞ்சங் கொஞ்சமா மனசு ஒப்பி, ஆறு வருஷம் வேற நினைப்பில்லாமல் வேலை பழகி முழு வண்டியும் பிரிச்சு கோர்க்க முடிஞ்சதும் தான் கல்யாணத்துக்கே சம்மதிச்சேன். முதல் முதலா சிவகாமியைப் பார்த்தப்ப, எங்கம்மா மாதிரியே இவளும் இருக்கனும்னு தோணிச்சு. ரெண்டு வருஷத்தில அவளுடைய புதுப் புடவைகளும் துவைச்சு, துவைச்சு எங்கம்மாவோட புடவை மாதிரி மெத்து மெத்துன்னு ஆயிடுச்சு. புடவையில மென்மையைத் தேடற எனக்கு வாய்ச்சது என்னவோ முரட்டு காக்கியும், சதா கிரீஸ் படிந்த கைகளும் தான். விழிப்பு வருது.....

வீட்டுக்கு வந்து விட்டது தெரிந்தது. ஆனா எப்பவும் போல சரியாகி வீட்டுக்கு வந்த மாதிரி தெரியலை. கார்ல இருந்து பாபு என்னை குழந்தையைத் தூக்கற மாதிரி தூக்கிட்டு தானே வந்தான். அவன் வண்டில பின் வீல் கொஞ்சம் இழுக்குது. பார்க்கச் சொல்லனும்.

'அம்மா, இன்னும் ரெண்டு நாள் பார்த்துட்டு நான் போறேன். என் வீட்டுக்காரரும் குழந்தைகளுக்கும் ரொம்ப சிரமமாயிருக்குது. இனிமே எதாவதுன்னா மட்டும் போன் பண்ணு.' என் மூத்த மகள் குரல்.

'உனக்கு போகனும்னா காலைல கிளம்பு. ரெண்டு நாள் முன்னால ரொம்ப முடியாம இருந்தது. அதனால தான் அவசரமாக் கூப்பிட்டேன்,' சிவகாமி.

ஏதோ தெளிவில்லாமல் முணுமுணுக்கிற சின்ன மகள் குரலும் கேட்குது. எதுவுமே பேசாம கையைப் பிடிச்சிட்டு இருக்கிற மகனுடைய ஸ்பரிசம் தவிப்போடும் அவசரத்தோடும் இருப்பதும் தெரியுது. பாவம் அவனுக்கும் வீட்டுக்கு போக நேரமாச்சு போலயிருக்கு. அவன் மனைவி கைக்குழந்தையோட தனியா அல்லாடறாள். இவனுக்கு என்னையும் விட முடியலை. கைக்குழந்தை......

நிலாக்குட்டி பிறந்தப்ப பார்க்கனும். என்ன ஒரு நிறம்! அதுக்காகவே பெரியண்ணா வெண்ணிலான்னு பேர் வச்சார். எங்க வீட்டில யாருக்கும் இவ்வளவு சிவப்பா குழந்தை பிறந்ததில்லை. பார்த்ததும் மனசில சொல்ல முடியாத ஒரு நேசம். அது நிறத்துனால மட்டும் இல்லன்னு அவ வளர வளர தெரிஞ்சுது. அவ எல்லாருக்கும் செல்லம். அவளோட பேச்சும், புத்திசாலித்தனமும். அத்தனை குழந்தைகளுக்கு நடுவிலும் எப்பவும் தனியா தெரியும். கண்ணை விரித்து, கையை ஆட்டி ஆட்டி எப்பவும் எதாவது பேசிட்டு இருக்கும். எல்லா வயசுப் பிள்ளைகளும் வாய் மூட மறந்து கேட்டுட்டு இருக்கும். நானும் தான். எங்க எல்லாரையும் கொண்டு பிறந்திருந்தது. அப்பாவைப் போல சதா புன்னகை, அம்மாவை மாதிரி எல்லாரையும் ஒரு கட்டுல வச்சருக்கிற சாமர்த்தியம், பெரியண்ணாவோட கோபம், ம்ம்ம் என்னை மாதிரியே புத்தகம் படிக்க ஆர்வம். எவ்வளவு புத்தகம். சிவகாமியும் நானும் படுக்கிற அறையில பாதிக்கு ஆனந்த விகடன் தான். இருபது வருஷத்து புத்தகம் வரிசையா அடுக்கி இருக்கும். படுக்கவே இடம் இருக்காது. அப்பத்தான் இந்த ஆஸ்துமா வந்திருக்கனும். எப்பவும் தும்மறதைப் பார்த்துட்டு சிவகாமி அம்மாகிட்ட சொல்லி எல்லாத்தையும் பரண்ல போட்டுட்டாள். என் புத்தகமெல்லாம் வரிசை கலைந்து... அம்மாவோட புடவையும் சிவகாமியோட புடவையும் முள்ளாட்டமா மாறிட்டது. அன்னைக்கு ரொம்ப நேரம் நிலாக்குட்டி என் கையைப் பிடிச்சிட்டு நான் அழறேனான்னு என் முகத்தையே பார்த்துட்டு இருந்தது. அவள் இல்லாம இருந்திருந்தால் அழுதிருப்பேன். இப்பவும் அழுகையா வருது......

பாபு, நீ கிளம்புடா. அப்பாவை நான் பார்த்துகிறேன். இனி என்ன! எப்பவும் வர்றதுதானே. காலைல உன் தங்கச்சிகளையும் கிளம்ப சொல்லிட்டேன். சித்த இரு. தோசை சுட்டுத்தரேன். சாப்பிட்டுட்டு போ. பத்து மணிக்கு உங்கம்மா வீட்டில இருந்து சாப்பிடாம வந்தீங்களான்னு உன் பொண்டாட்டி கேப்பா.

சிவகாமிக்கு பையனை சாப்பிட சொல்வதற்கும் காரணம் வேண்டி இருக்கிறது.

'அப்பா' பாபு கூப்பிடறான். எல்லாரும் போயிட்டாங்க போல இருக்கு. யாரும் இல்லாதப்ப, ரொம்ப அவசியம்னாதான் இவனும் என்னோட பேசறான். என்னடான்னு கேட்கிறேன். ஆனா என் குரல் எனக்கே கேட்க மாட்டேங்குதே! எங்கயோ தூரமா.....


நிலாக்குட்டியும் ரொம்ப தூரத்தில தான் இருக்கு. அந்த நிஜ நிலா மாதிரி. எவ்வளவு தூரத்தில இருந்தாலும் வீட்டு விஷயமெல்லாம் அதுக்குத் தெரியும். பாபுவோட வாரம் ஒரு தரம் கம்ப்யூட்டர்ல பேசுமாம். அதுல எப்படி பேசுவாங்க? அம்மா இறந்து ஆறே மாசத்தில கூட்டுக் குடும்பம் ஒடைஞ்சு, வீட்டையும் வித்தப்ப அழுதது நாங்க மூனு பேருமாத்தான் இருக்கனும்... நான், நிலா, எங்கயோ இருந்து அம்மா. அப்புறம் தான் நிஜமே உரச்சுது. அதுவரை வீட்ல எல்லாரும் தனியா ஒர்க்ஷாப் வைன்னு சொன்னப்ப, தொழில் கத்துக் குடுத்த முதலாளியை விட்டுட்டு வர தோணல. அம்மா எதாவது சொல்லுவாளோன்னு எதிர்பார்த்துட்டு இருந்தேன். கடைசி வரை அப்படி சொல்லவேயில்லை. எல்லாருக்கும் நான் பிழைக்கத் தெரியாதவன். நிலாக்குட்டிக்கும் அப்படிதான் திடீர்னு கல்யாணமாச்சு. எங்கயிருந்தோ வந்து தூக்கிட்டுப் போயிட்டாங்க. இப்பவும் ரெண்டு வருஷத்துக்கு ஒரு தரம் ஊருக்கு வரும் போது, முதல் வேலையா என்னைப் பார்க்க வந்துடும். ஒவ்வொரு தரமும் நிலாக்குட்டியைப் பார்க்கும் என்னோட சந்தோஷத்தை எந்த வார்த்தையிலுமே சொல்ல முடியாது. ஆனா என்னைப் பார்த்ததும் அதோட முகத்தில வர்ற சோகத்தைப் பார்க்கும் போது பாவமாயிருக்கும். நிலாக்குட்டி வர்றதுக்கு இன்னும் நிறைய நாளாகும். அது வரைக்கும் இருப்பேனா? ஏனோ நிலாக்குட்டி பேசறதைக் கேட்கனும் போல இருக்கே....

அப்பா....பாபு குரல். உள்ளே வெங்காயச் சட்னி அரைக்கிற வாசம். பாபுவுக்கு அது தான் பிடிக்கும். சட்னியோட உரப்பு நாக்குல பட்டு எத்தனை நாளாச்சு. ஆனா இப்பெல்லாம் நினைச்சாலே எல்லாத்தையும் உணர முடியுது. அம்மாவோட புடவை, வெங்காயச் சட்னி உரப்பு, நிலாக்குட்டியோட பாசம்.....

உள்ள தோசை வார்க்கிற சத்தம்.

'பாபு சாப்பிட வாடா,' சிவகாமி.

பாபு மெல்ல கையை விட்டுட்டு போறான். தூக்கமும் மெல்ல கலையுது.....

அம்மா, உங்கிட்ட கொஞ்சம் பேசனும்.

என்னடா?

அப்பாவுக்கு இன்னைக்கு சரியாயிடுச்சுன்னு போகச் சொல்லலை. இனிமே எதுவும் பண்ண முடியாதுன்னு தான் அனுப்பிட்டாங்க. அவரோட நுரையீரல் பூராவும் அடைச்சுடுச்சு. இப்பவும் அவர் தூங்கலை. கோமாவில இருக்கார். கடைசியா போட்டு விட்ட ஊசி இன்னும் சில மணி நேரம் தாங்கும். அதுக்கப்புறம் எதுவும் சொல்ல முடியாது. நான் வீட்டுக்குப் போயிட்டு அவகிட்ட சொல்லிட்டு வந்திடறேன். ஆனப்பறம் தகவல் சொல்ல ஆரம்பிக்கலாம்.

என்னடா சொல்ற? காலைல கூட நல்லா இருந்தாரே. அதனாலதான் நான் வீட்டுக்கு வந்தேன். அதனால தானே உன் தங்கச்சிகளைக்கூட நாளைக்குப் போகச் சொன்னேன்.

ம்ம்ம்... இந்த மாசத்திலயே இது ரெண்டாவது தரம்மா. அவர் உடம்பில இனி தெம்பில்லை. அவ்வளவுதான்...

சிவகாமி புடவையால் வாயைப் பொத்தி அழுவது கேட்குது. சிவகாமி இங்க வாயேன். அந்த புடவையை என் மேல பட விடேன். என் கையைப் பிடிச்சுக்கயேன். எங்கயோ தூரமா உட்கார்ந்து அழறாளே ஒழிய பக்கத்திலயே வர மாட்டேங்கிறா. மகள்களும் மெல்ல கண்ணைக் கசக்கிறாங்கதான்.

அழுதுட்டே வீட்டை தயார் பண்ற சத்தம் கேட்குது. பாவம் நாலு வருஷமா செஞ்சு செஞ்சு களைச்சுட்டா. இதோ என்னை வழியனுப்ப தயாராகிறாள்.

அப்பா... மறுபடியும் பாபு. உங்களுக்கு கேக்குதான்னு தெரியலை. இருந்தாலும் சொல்றேன். நிலாகிட்ட இருந்து ஒரு மெயில் வந்திருக்குது. ஒரு கவிதை. படிக்கிறேன், கேளுங்க.

பெரியப்பாவுக்கு.

ஊரிலிருந்து மத்தியானம்
தொலைபேசி தகவல்
இந்த முறை நீ
போய் விடுவாயென்று

நிஜமாகவே போகப் போகிறாயா?
மறுபடியும் ஒரு முறை
உன் நினைவலைகள்
நீ பகிர்ந்து கொண்ட
உன் சந்தோஷங்கள்
அப்பாவிடமிருந்து கேட்டறிந்த
ஊரறியா உன் சோகங்கள்

ஏறக்கிடைத்த உன் ஏணிகள்
ஏறமுடியாத உன் காரணங்கள்
உனக்கு தைரியமிருந்ததில்லையாம்
அதனால்தான் என்ன?

சாவுடனான உன் போராட்டங்கள்
ஒவ்வொரு முறையும்
உருக்குலைந்து வருகிறாய்
உன் போராட்டங்கள் சலிப்பாகும்
நாட்கள் தூரமில்லை தெரியும்
உனக்காக ஒரு துரும்பையும்
கிள்ளிப் போட்டதில்லை - ஆனாலும்
சரி போதும் போன்னு சொல்ல முடியவில்லை.

அகால வேளை நீண்ட தொலைபேசி
மணி அடிக்காமலிருக்க வேண்டும்.

- நிலா.

வாசித்து விட்டு மெல்லிய விம்மலோடு அந்த கவிதையை என் கையில் பொதிந்து விட்டு அவனும் போயிட்டான். காகித்தில் நிலாக்குட்டி. அதே பட்டுப் போல மென்மையா. கதவுகள் ஒவ்வொன்றாக மூடுவது போன்ற உணர்வு. நெஞ்சு துவாரங்களெல்லாம் ஒவ்வொன்றாக வேலையை முடித்துக் கொள்கிறது. மூடும் துவாரங்களிலெல்லாம் யாரையெல்லாமோ தேடி ஓடுகிறேன். அம்மா... நிலாக்குட்டி...சிவகாமி...சுவாசம் வேணுமே....கொஞ்சமே கொஞ்சம் காத்து...அம்மா...சிவகாமி...நிலாக்குட்டி....அம்மா அதே பச்சைப் புடவையோட....நிலாக்குட்டி நான் போகிறேன்டா...இல்லை வருகிறேன்...நீ இருக்கும் ஊர் வழியா வந்து உன்னைப் பார்த்துட்டு தான் போகப் போறேன். உன்னோட இந்த கவிதை உன் ஊருக்கு வழி சொல்லும் தானே? வர்றேன். இல்லை போறேன் சிவகாமி....இப்பவாவது என் பக்கத்தில வாயேன். மத்த வேலையெல்லாம் நான் போனப்பறம் செஞ்சுக்கயேன். அம்மா....சிவகாமி....நிலாக்குட்டி....நிலாக்குட்டி..........

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - நிர்மலா - 4

நொடியில் ஒரு பரிணாம மாற்றம்
-
நிர்மலா


அவளைப் பற்றிச்
சொல்ல வேண்டும்

இளமையிலும் இல்லறத்திலும்
தாய்மையிலும்
வேண்டிய மட்டும் பெண்மையை
கொண்டாடி விட்டதாய்
உணரத் தொடங்கியிருக்கிறாள்

சட்டென்று ஒரு மாற்றம் அவளில்
நடந்தே தீருமென்று நம்புகிறாள்

சின்னதாய் ஒரு கற்பனை
செய்து வைத்திருக்கிறாள்

நினைவு தெரிந்த நாளாய்
அவளுள்ளே
நிரப்பி வைத்த பெண்மை உணர்வுகள்

உறங்கியெழும் ஒரு காலை
உச்சந்தலை தொடங்கி
மொத்தமும் வடிந்து காலடியில்
குட்டையாய் தேங்க

எடுத்து வைக்கும் முதலடியில்
ஒரு உயிராய் மட்டும்
தன்னை உணரப் போவதாக

உணரத் தொடங்குவது முதல்படியல்ல
அதுவே முழுப்பயணமும் என்பதில்
தெளிவாயிருக்கிறாள்

தீண்டும் விரல்களிலும்
எதிர்கொள்ளும் பார்வைகளிலும்
பேதமின்றி

மறுக்கப்பட்ட இடங்களும்
தவிர்க்க வேண்டிய நேரங்களுமில்லாமல்

நேசம் பொங்கும் நேரம்
விரித்த கைகளில் வழிந்தோடவிட்டும்
உள்ளே அமிழ்ந்து
தன்னைத் தேடும் தருணங்களில்
மொத்தமும் துறந்த தனிமையுமாய்...

உயிராய் உணர்வதும்
துறந்த தனிமையும்
முடியவே முடியாதென்று
புறந்தள்ளுகிறேன்

எத்தனை நாளென்னை
மறுக்கப் போகிறாயென்று
சத்தமில்லாமல் சிரிக்கிறாள்
எனக்குள்ளிருந்து.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - நிர்மலா - 3

தேவை ஒரு முத்தம்
- நிர்மலா


இருள் பூசி குளிரேறும் அறையிலின்று
பறவைகள் பறந்து விட்ட கூட்டின் வெறுமை

யாருமற்று தனியே
மூலையிலொரு நாற்காலியில்
முழங்கால் கோர்த்து அமர்ந்திருக்கிறேன்

அறையில் ஒலிக்கிறது
கடந்து சென்ற
சந்தோஷங்கள் கோபங்கள்
எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள்
மெல்லியதாய்

நினைவு வெளியில்
கொஞ்சம் கொஞ்சமாய்
சிதைந்தும் சிதறியும் நான்

பக்கத்தில் அமர்ந்து
மெல்ல அணைத்து
யாரேனும் என்னை
முத்தமிட வேண்டும் என்றிருக்கிறது

குழந்தையின் சின்ன உதடுகள்
வயதாகித் தளர்ந்த உதடுகள்
வாலிப வேக உதடுகள்

ஏதேனும் ஒன்று

குவியும் அந்த உதடுகளில்
சிதறிய என்னைச் சேர்த்தெடுக்க
சிதைந்த எனக்கு உருக்கொடுக்க.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - நிர்மலா - 2

Women & Men in My Life - Khushwant Singh - நிர்மலா
ஆங்கில புத்தகங்கள் வாசிப்பது ஏறக்குறைய இல்லை என்றாகிவிட்ட ஒரு சமயம் 'to kill a mocking bird' கிடைத்தது. வாசிக்க ஆரம்பித்து தாண்ட முடியாத பத்தம்பது பக்கங்களுக்குப் பிறகு 'வேண்டாம் போ' என்று விலக்கி வைத்தது 'அவ்வளவுதானா?' என்று கேட்டது. ரொம்ப லேட்டா தொடங்கி சீக்கிரம் முடிந்து விட்டதோ நமது ஆங்கில வாசிப்பு என்று தோன்றியது. சென்னை வந்ததில் இதுவும் ஒரு பெரிய மாற்றம். வெளியே இருந்த போது வாசிக்க தமிழ் புத்தகம் எதுவும் கிடைக்காத கட்டாயத்தால் எதேச்சையாக தொடங்கியது ஆங்கில நாவல் வாசிப்பு. இப்போதான் தமிழே வேண்டியமட்டும் கிடைக்கிறதே என்று அதிகம் வாசிக்காமல் இருந்தாலும், பழக்கம் விட்டதில் கொஞ்சம் வருத்தம்.

75% வரை தள்ளுபடி என்று ஆசை காட்டிய சென்னை oxford... பேருக்குத்தான் 75%... அந்த பகுதி எங்கே என்றே பார்க்கவில்லை! வழக்கமாக இழுக்கும் தலைப்புகள் பகுதியில். இதற்கு முன்னாலேயே பார்த்தும் வேண்டாம் என்று விட்ட Women & Men in my life - Khushwant singh... இந்த முறை மறுக்க முடியவில்லை. அவருடைய ஆட்டோபயாகிரபி, death at my doorstep எல்லாம் படித்து முடித்ததில்... என்னவோ எனக்கு அவரைப் பற்றி எல்லாம் தெரியும் என்ற தோணல். அதனாலேயே இதை வாசிக்கத் தொடங்கியதும்... மற்றபடி அதிகம் கேட்டிராத பொது வாழ்கை மனிதர்களை, அவருடைய புத்தகங்கள் மூலம் மட்டுமே அறிந்திருந்த அதே மனிதர்களைப் பற்றிய செய்திகளை கொஞ்சம் மாற்றங்களோடு இன்னொரு முறை கேட்பது... வீட்டில் இருக்கும் வயதானவர்கள் சொன்ன விஷயங்களையே திரும்பத் திரும்பச் சொல்வது போல! மனுஷனுடைய எழுத்து சுவாரசியதினாலே எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை.

இந்த புத்தகத்தை எழுதியதில் கோவித்துக் கொண்டு கொஞ்சம் பேர் 'உன் பேச்சு கா' விட்டுப் போய் விட்டதாகவும், வெளிப்படையாக சொன்ன நேசத்தில் கொஞ்சம் பேர் ரொம்ப சந்தோஷப் பட்டதாயும், என்ன எழுதியிருக்கு என்று படித்துப் பார்க்காமலேயே சிலர் மறுதலித்துப் போனதாயும் முன்னுரையில் சொல்கிறார். புத்தகத்தில் பெண்களைப் பற்றி எழுதியிருப்பதில் சொட்டுவது தனி ரசம்... குஷ்வந்த் சிங் ரக ரசம்! அனுபவித்து எழுதிருப்பதால் வாசிக்கும் போது அந்த பிரியம் அப்படியே உள்ளே இறங்கிவிடுகிறது.

வயது வித்தியாசமில்லாமல், இன்ன உறவு என்று சொல்ல முடியாத நேசத்தில், ஏதோ ஒரு விதத்தில் பாதித்த, வெவ்வேறு காலகட்டத்தில் சந்தித்த பெண்கள்... பெண்கள்... பெண்கள். கொஞ்சம் ஆண்களும்! நல்லதையும் கெட்டதையும் தாட்சண்யமில்லாமல் சொல்லிப் போகிறார். வெறும் மனசைத்தான் பார்த்தேன் என்ற மழுப்பல்கள் இல்லாத 'பிந்தாஸ்' குறிப்புகள். தைரியம், சாமர்த்தியம், வெகுளித்தனம், திருட்டுத்தனம், mysterious... எல்லாமாய் பிடித்தவர்கள்.

சில வரிகள்....
'You Know how much weight i have shed? look.' She turned, pointing to her bare midriff. 'All gone. And dont u tell me slimming down does not suite me.'....... I have been to Bombay many times since but have not had the courage to call on her. I want to preserve the image of the Devyani Chaubal I had known: fat, full of life, malicious gossip, mimicry and a zest for life.
The lady persisted, 'Never mind the age difference, you still look like a married couple.' I slipped out of the dining hall and went to bed without dinner. After the compliment I didnt need any. I was little worried about how the rest of Nirmala's family would take that faux pas.
If this was true (men's gossip is less reliable than woman's) love formed very little part of Amrita's life. Sex was what mattered to her. She was a genuine case of nymphomania, ....
She put on her tape recorder at full blast, sang with it and talked at the top of her voice. I almost went round the bend and pitied her husband who had to put up with such exuberance every day.

ஆண்களைப் பற்றிய மீதிப் பாதி புத்தகம் கொஞ்சம் நியூஸ் ரீடிங் போல! மற்றபடி, ஒரே மூச்சில் படித்து முடித்த புத்தகம். முடித்த கையோடு ரொம்ப நாள் பெண்டிங் 'one hundred years of solitude' படிக்க வைத்ததில் குஷ்வந்த் சிங் பங்கு அதிகம். கொல்கத்தா வந்து, போன சனிக்கிழமை அவருடைய வழக்கமான column வாசித்ததும் இடையில் கொஞ்சம் தொய்ந்து போயிருந்த குஷ்வந்த் சிங்குடனான உறவு மறுபடியும் அதே போலாகி விட்டது.
தலைப்புதான் ரொம்ப தூண்டுகிறது... என்னையும் 'எழுதேன்' என்று! எப்போதாவது செய்யணும்.

--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - நிர்மலா - 1

ஏழு நாள் எனக்கே எனக்காய்
- நிர்மலா


ரெண்டு மாற்றுத்துணி
செலவுக்கு உரைக்க
சின்னதாய் ஒரு அட்டை
ஒரு புத்தகம் ஒரு வாக்மேன்
கஸலாய் ஹரிஹரன்
துள்ளும் ரஹ்மான்
முதுகில் தொங்கும் சிறு பையில்

வீசி நடக்க வேண்டும் எனக்கு.

வெயில் உரைக்காத
துளிர் மழை நாளில்
ஆளில்லாத ரயிலில்
இரண்டாம் வகுப்பில்

ஆச்சா ஆச்சாவெனும்
கணவன்
அலுத்துக் கொள்ளும்
குழந்தைகளின்றி

தனியாய் நான்
அடையாளங்கள்
அத்தனையும் துறந்து

ராத்திரி கறிக்கு
உருளையா அவரையா
பால்காரன் வேலைக்காரி
எல்லாம் மறந்து

வருஷத்திற்கொன்றாய்

லடாக் தஞ்சாவூர்
ஹரித்வார் கோனார்க்
மதுரா காசி மானசரோவர்
நீளும் என் பட்டியல்

எட்டாம் நாள் மறுபடியும்
வட்டத்தில் இருப்பேன்.

--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - நிர்மலா - அறிமுகம்

இனிய தமிழ் உறவுகளே!

'பண்புடன்' குழும ஆண்டு விழாவை முன்னிட்டு நல்ல படைப்பாளிகளின் படைப்புகளை குழுமத்திற்குள் கொண்டு வரவேண்டுமென்ற ஆசையில் குழுமத்திற்கு அப்பால் இயங்கும் படைப்பாளிகளைப் பண்புடன் சார்பில் அணுகினோம். நமது நோக்கத்தைப் புரிந்து கொண்ட படைப்பாளிகள் தங்களது படைப்புகளை நமக்காக இங்கே பதிய இசைவு தெரிவித்திருப்பதை சொன்னோம் அல்லவா?

வாரம் ஒவ்வொருவராக வந்து நம்மை வசப்படுத்தவிருக்கும் அந்த அன்புநிறை படைப்பாளின் வரிசையில்
முதலாவதாக வந்து இந்த இழையைச் சிறப்பு செய்பவர் சென்னையைச் சேர்ந்த கவிஞர் நிர்மலா அவர்கள்.

மரத்தடி குழுமத்தில் தொடர்ச்சியாக எழுதி வந்த நிர்மலாவின் கவிதைகள் எளிய மொழியில் பன்முகம் கொண்டு பேசுபவை. அவரது 'ஒலிக்கும் கணங்கள்' வலைப்பூ சமீப காலமாக ஒலிக்காமல் கிடப்பது வருந்தத்தக்கதென்றாலும் ஒலித்த காலங்களில் அவை மிகுந்த நேர்த்தியோடே ஒலித்தன.

கதை, கட்டுரை, கவிதை என்று பன்முகம் கொண்ட எழுத்தாற்றலுக்குச் சொந்தக்காரரான நிர்மலா அவர்கள் தம் கதைகளில் பெரும் கவனம் செலுத்தாமல் போனாலும் அவரது கவிதைகள் பெண்களின் வாழ்வியல் சிக்கல்களைப் பேசுபவையாகவும், மாந்த நேயம் நிறைந்த உணர்வுகளைப் பறை சாற்றுவதாகவும் அமைந்திருப்பதை எளிதில் உணர முடியும்.

நிர்மலாவின் பயண மற்றும் வாசிப்பனுவம் சார்ந்த கட்டுரைகள் தேர்ந்த மொழியில் எழுதப்பட்டவை. 'வார்த்தை' போன்ற சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதி வரும் நிர்மலாவுக்கு மிகப் பிடித்தது தனிமையான பயணங்கள்தானாம்.

மீதியை அவரது படைப்புகளின் வாயிலாக நீங்களே புரிந்து கொள்ளுங்கள்

நம் அழைப்பை ஏற்று நமக்காகப் படைப்புகளைப் பகிர்ந்து கொண்ட நிர்மலாவுக்கு நம் நன்றி -
நம் பண்புடன் சார்பில்.


--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா
http://panbudan.blogspot.com/

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - அறிவிப்புகள்

இனிய தமிழ் உறவுகளே!

'பண்புடன்' குழும ஆண்டு விழாவை முன்னிட்டு நம் குழுமத்தில் இயங்காத பிற நல்ல
படைப்பாளிகளின்
படைப்புகளை ஆண்டு விழாக் காலமான இந்த நேரத்தில் குழுமத்திற்குள் கொண்டு
வரச் செய்தாலென்ன
என்ற எண்ணத்தில் குழுமத்திற்கு அப்பால் இயங்கும் படைப்பாளிகளைப் பண்புடன்
சார்பில் அணுகினோம்.
நமது நோக்கத்தைப் புரிந்து கொண்ட படைப்பாளிகள் தங்களது படைப்புகளை நமக்காக
இங்கே பண்புடனில்
பதிய இசைவு தெரிவித்திருக்கிறார்கள்.


பண்புடனுக்காக எழுதப்பட்ட படைப்புகள் மட்டுமின்றி அவர்களது படைப்புகளில்
சிறந்தவைகள் சிலவற்றை
நம்மோடு பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டிருந்தோம். அவ்வாறே படைப்புகளை அனுப்பத்
துவங்கியிருக்கிறார்கள்
படைப்பாளிகள்.


வாரம் ஒவ்வொருவராக வந்து நம்மை வசப்படுத்தவிருக்கும் அந்த அன்புநிறை
படைப்பாளிகளுக்கு பண்புடன்
சார்பில் நன்றி கூறிக் கொள்வோம். கவிதை, கதை, கட்டுரை இன்னபிற என்று பல்துறை
சார்ந்த படைப்புகள்
இந்த இழையில் நமக்குக் கிடைக்கும் என்று நம்பலாம்.


உற்சாகமான வாசிப்பனுவத்திற்கு தயாரகுங்கள்.
உங்கள் கருத்துக்களையும் பின்னூட்டங்களையும் ஆர்வமுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வரும் காலம் வாசிப்பனுவத்தின் விழாக்காலமாக அமையட்டும்

--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா
http://panbudan.blogspot.com/

பண்புடன் - ஆண்டு விழா போட்டிகள்

இனிய நண்பர்களே!

நலம் விழைக!

இலவசமாக வழங்கப்படும் இணையக் குழுமங்களில் கூட முறையான கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ வாய்ப்பற்ற அவல நிலையைக் கருத்தில் கொண்டு அனைவருக்கும் அளப்பரிய கருத்துச் சுதந்திரம் என்ற எண்ணத்தோடு துவங்கப்பட்டதுதான் 'பண்புடன்' குழுமம்.


நேற்று நடந்தது போலத்தான் இருக்கிறது. ஆனால், காலத்தின் துரித நடையில் இன்றுடன் பண்புடன் துவங்கி ஒரு வருடம் நிறைவு பெறுகிறது என்பது வியப்பாக இருக்கிறது. இந்தச் சிறப்புமிகு நேரத்தில் சம்பிரதாயம் போல கதை, கவிதை, கட்டுரைப் போட்டிகளை நடத்தாமல் வித்தியாசமாக ஏதேனும் செய்ய முடிவு செய்ததன் விளைவாக சிறந்த படைப்புகளுக்கான அங்கீகாரம் வழங்கும் புதிய திட்டத்தை 'பண்புடன்' அறிமுகம் செய்கிறது.


ஆம் நண்பர்களே!!

ஆண்டு விழா என்பது ஏதோ ஒருநாள் கொண்டாட்டமாக மாறிவிடாமல் இருப்பதற்காகவும் சிறந்த படைப்புகளை பண்புடனுக்குத் தொடர்ந்து தரவேண்டுமென்பதற்காகவும், பண்புடன் இந்த வருடம் முழுவதும் போட்டிகளை நடத்தவிருக்கிறது.

என்னவென்று கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாமா?

படைப்பாளிகளுக்கு உற்சாகம் வழங்கும் விதத்தில் எல்லாவிதமான படைப்புகளையும் பண்புடன் போட்டிக்காக வரவேற்கிறது. போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கதை, கவிதை, கட்டுரை, நையாண்டி, செய்திவிமர்சனம், விளையாட்டு, புனைவு,ஆன்மீகம் என எதைப்பற்றியும் எவர் மனமும் காயப்படாத வகையில் எழுதலாம்.

செப்டம்பர் 30ஆம் தேதி வரை வரும் படைப்புகள் முதல் மாதப் போட்டிக்காகக் கருதப்படும். அதன் பின் மாத இறுதிநாள் வரை வரும் படைப்புகள் அந்தந்த மாதங்களுக்கான படைப்புகளாகக் கருதப்படும்.இவ்வாறு அடுத்த ஆகஸ்டு 2009 வரை பன்னிரு மாதங்களுக்கு போட்டி தொடரும்.

படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudanav@gmail.com

இவ்வாறு அனுப்பப்படும் ப்டைப்புகள் ப்டைப்பாளியின் பெயர் அந்தந்த மாத முடிவுகள் வரும்வரை நீக்கப்பட்டு ப்ண்புடன் வலைப்பூவில் அனைத்து அன்பர்களும் பார்க்கும் வ்ண்ணம் வெளியிடப்படும் (பெயர் நீக்கப்படுவது படைப்பாளி யாரென்பது நடுவர்களுக்குத் தெரியாமல் இருக்க வேண்டுமென்பதற்காக மட்டுமே)

படைப்புகளை அனுப்பும்போது தலைப்பில் ஆண்டு விழா போட்டி - என்று மறக்காமல் குறிப்பிடவும். இவ்வாறு அனுப்பப்படும் படைப்புகளில் இருந்து ஒவ்வொரு மாதமும் நடுவர்கள் சிறந்த மூன்று படைப்புகளைத் தேர்ந்தெடுப்பார்கள்.

ஒவ்வொரு மாதப் போட்டி முடிவுகளை அறிவிக்கும்போதும் நடுவர்கள் யாரென்பதைத் தெரியப்படுத்துவோம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் மட்டும் ஆண்டு இறுதியில் விழா மலராகத் தொகுக்கப்பட்டு மின்னூலாக உருவாக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படாத படைப்புகளும் நண்பர்கள் பார்வைக்காக பண்புடன் வலைப்பூ மற்றும் பண்புடன் குழுமத்தில் இடப்படும்.

இந்தப் போட்டிகளில் தமிழறிந்த அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்கலாம். (ஆகவே இதனை உங்கள் சக வலைப்பதிவு நண்பர்களுக்கும் சகோதரக் குழுமங்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் பரவலாக எடுத்துச் சொல்லுங்கள். நண்பர்கள் உங்கள் வலைப்பதிவிலும் போட்டியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்)

தனியாக எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமின்றி, படைப்புகள் உங்களது சொந்தமாகவும் பிற குழுமங்களிலோ அல்லது தளங்களிலோ வெளிவராதவையாகவும் இருத்தல் அவசியம்.


ஒருவரே எத்தனை படைப்புகளை வேண்டுமானாலும் அனுப்பலாம். அதே போல ஒருவரே அடுத்தடுத்த மாதங்களிலும் பரிசு பெறலாம். மூன்று முறை பரிசு பெறுபவர்கள் அடுத்தவர்களுக்கு வாய்ப்பளித்து விலகுவது சிறப்பென்று பண்புடன் கருதினாலும் அதை படைப்பாளியின் முடிவுக்கே பண்புடன் விட்டு விடுகிறது.

ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு படைப்புகளுக்கும் ஐநூறு இந்திய ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களோ அல்லது பணமோ ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இவ்வாறு அடுத்த ஆகஸ்டு மாதம் வரை 18000 இந்திய ரூபாய் அளவில் பரிசுகள் வ்ழங்கப்பட இருக்கின்றன.


புரவலர்களை அனுசரித்து இந்தத் தொகை அதிகப்படுத்தப்படலாம்.

குறிப்பிட்ட மாதத்திற்கான படைப்புகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்ட பின் ப்டைப்பாளர் தனது ப்டைப்புகளை பிற இடங்களுக்கு அனுப்புவதில் தடையேதும் இல்லை. ஆனால், போட்டிக்கு படைப்புகளை அனுப்பியிருந்தால் முடிவுவரும்வரை அந்தப் படைப்பை பிற தளங்களுக்கோ குழுமங்களுக்கோ அனுப்பாமல் இருக்குமாறு பண்புடன் உங்களைப் பணிவுடன் வேண்டுகிறது.

படைப்புகளை ஒருங்குறி (Unicode) எழுத்துருவில் அனுப்பி வைத்தால் நன்று.

எனவே,

இந்த வருடம் முழுவதும் எழுதுங்கள் - எப்போது வேண்டுமானாலும்.

ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களில் உற்சாகமாகப் பங்கு பெற்று வெற்றி பெறப் போகும் உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

தோழமையுடன்
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்

அறிவிப்பு

இணையப் பெருவெளியில் இயங்கும் படைப்பாளிகளை உற்சாகப்படுத்தும் நோக்கில், பண்புடன் தனது முதலாமாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாதம் மூன்று ப்டைப்பாளிகளை தேர்ந்தெடுத்து கௌரவிக்க இருக்கிறது.
இந்த செப்டம்பர் துவங்கி அடுத்த வருடம் ஆகஸ்டு மாதம் வரை மாதம் மூன்று படைப்பாளிகளுக்கு பரிசுகள்.
மேலும் விபரங்களுக்காகக் காத்திருங்கள் இன்னும் சில தினங்கள் மட்டும்
-
பண்புடன் அங்கத்தினர்கள்

'பண்புடன்' அறிமுகம்

'பண்புடன்' - ஒருங்குறி எழுத்துருவில் இயங்கும் இந்தக் குழுமம் தமிழர்களுக்கிடையேயான கருத்தாடல்களைக் கண்ணியத்துடன் எடுத்துச் செல்லும் தளமாக இயங்கும். தமிழின் தொன்மை தொடங்கி நவீனக் கவிதைகளின் பாங்குவரை இங்கே பேசப்படும். பேசப்படுபவைகளின் மேலான கருத்துக்களில் நேர்மையான அணுகுமுறையோடு கருத்தாடல் செய்யவும், தமிழில் புதிய படைப்பாளிகளை உருவாக்கவும், எழுதித் தேர்ச்சி பெறவும் ஒரு எளிய தளமாக இந்தக் குழுமம் செயல்படும்.
இந்த எண்ணங்களோடு செயல்படத் துவங்கிய இந்தக் குழுமத்தின் முதலாமாண்டு நிறைவு விழாவில் இடம்பெறும் படைப்புகளைத் தாங்கி வருவதற்காகவே இந்தப் பதிவு.

பண்புடன் உங்களை இனிதே வரவேற்கிறது.
மேலுமதிகம் அறிய இங்கே சொடுக்குங்கள்

வணக்கம்

வணக்கம். இது பண்புடன் குழுமம்.

தமிழை நேசிக்கும் தமிழர்களுக்கான குழுமம்.
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்' என்ற வள்ளுவனின் வரிகளின் ஆதாரத்தில் தமிழர்களுக்கிடையில் மானுட நேயம் பரப்பி தமிழர்களை ஒருங்கிணைக்கும் தமிழ்க்குழுமம்.