பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - நிர்மலா - 5

வருகிறேன் நிலாக்குட்டி
-
நிர்மலா


தூக்கமும் விழிப்பும் மாறி மாறி வந்து கொண்டிருந்தது. தூங்கும் நேரங்கள் நீண்டதாயும், விழிப்பு வரும்போதெல்லாம் மறுபடியும் தூங்கப் போகும் ஆவலுமாய் இருந்தது. நினைவுகள் தான் முன்னுக்குப் பின்னாயிருக்கிறது.....

அம்மாவோட புடவையை போர்த்திக்கிட்டு படுத்திருக்கும் சுகம் உடம்பெல்லாம். துவைச்சு துவைச்சு பழசாகிப் போன அந்த பச்சைப் புடவைதான் எவ்வளவு மெத்து மெத்துன்னு இருக்கு. சிவகாமியை அணைச்சுக்கிற மாதிரி. சிவகாமிக்கு முதல் முதலா வாங்கிக் குடுத்த புடவையும் அதே மாதிரி இருக்கான்னு பார்த்து தான் வாங்கினேன். கடையில யாரும் பார்க்காதப்ப நைசா எடுத்து கன்னத்தில வச்சு பார்த்துதான் எடுத்துக்கச் சொன்னேன். வீட்டுக்கு வந்து சிவகாமி திட்டினது கூட ஞாபகம் வருது. நிலாக்குட்டியும் அப்படித்தான். பட்டு மாதிரி. எந்த வேலைக்கும் போகாம ஊர் சுத்திட்டு இருந்தவனைக் கூட்டிட்டுப் போய் முதலாளி கிட்ட வேலைக்கு சேர்த்தப்பவும் அம்மா அதே பச்சைப் புடவைதான் கட்டி இருந்தாள். கொஞ்சங் கொஞ்சமா மனசு ஒப்பி, ஆறு வருஷம் வேற நினைப்பில்லாமல் வேலை பழகி முழு வண்டியும் பிரிச்சு கோர்க்க முடிஞ்சதும் தான் கல்யாணத்துக்கே சம்மதிச்சேன். முதல் முதலா சிவகாமியைப் பார்த்தப்ப, எங்கம்மா மாதிரியே இவளும் இருக்கனும்னு தோணிச்சு. ரெண்டு வருஷத்தில அவளுடைய புதுப் புடவைகளும் துவைச்சு, துவைச்சு எங்கம்மாவோட புடவை மாதிரி மெத்து மெத்துன்னு ஆயிடுச்சு. புடவையில மென்மையைத் தேடற எனக்கு வாய்ச்சது என்னவோ முரட்டு காக்கியும், சதா கிரீஸ் படிந்த கைகளும் தான். விழிப்பு வருது.....

வீட்டுக்கு வந்து விட்டது தெரிந்தது. ஆனா எப்பவும் போல சரியாகி வீட்டுக்கு வந்த மாதிரி தெரியலை. கார்ல இருந்து பாபு என்னை குழந்தையைத் தூக்கற மாதிரி தூக்கிட்டு தானே வந்தான். அவன் வண்டில பின் வீல் கொஞ்சம் இழுக்குது. பார்க்கச் சொல்லனும்.

'அம்மா, இன்னும் ரெண்டு நாள் பார்த்துட்டு நான் போறேன். என் வீட்டுக்காரரும் குழந்தைகளுக்கும் ரொம்ப சிரமமாயிருக்குது. இனிமே எதாவதுன்னா மட்டும் போன் பண்ணு.' என் மூத்த மகள் குரல்.

'உனக்கு போகனும்னா காலைல கிளம்பு. ரெண்டு நாள் முன்னால ரொம்ப முடியாம இருந்தது. அதனால தான் அவசரமாக் கூப்பிட்டேன்,' சிவகாமி.

ஏதோ தெளிவில்லாமல் முணுமுணுக்கிற சின்ன மகள் குரலும் கேட்குது. எதுவுமே பேசாம கையைப் பிடிச்சிட்டு இருக்கிற மகனுடைய ஸ்பரிசம் தவிப்போடும் அவசரத்தோடும் இருப்பதும் தெரியுது. பாவம் அவனுக்கும் வீட்டுக்கு போக நேரமாச்சு போலயிருக்கு. அவன் மனைவி கைக்குழந்தையோட தனியா அல்லாடறாள். இவனுக்கு என்னையும் விட முடியலை. கைக்குழந்தை......

நிலாக்குட்டி பிறந்தப்ப பார்க்கனும். என்ன ஒரு நிறம்! அதுக்காகவே பெரியண்ணா வெண்ணிலான்னு பேர் வச்சார். எங்க வீட்டில யாருக்கும் இவ்வளவு சிவப்பா குழந்தை பிறந்ததில்லை. பார்த்ததும் மனசில சொல்ல முடியாத ஒரு நேசம். அது நிறத்துனால மட்டும் இல்லன்னு அவ வளர வளர தெரிஞ்சுது. அவ எல்லாருக்கும் செல்லம். அவளோட பேச்சும், புத்திசாலித்தனமும். அத்தனை குழந்தைகளுக்கு நடுவிலும் எப்பவும் தனியா தெரியும். கண்ணை விரித்து, கையை ஆட்டி ஆட்டி எப்பவும் எதாவது பேசிட்டு இருக்கும். எல்லா வயசுப் பிள்ளைகளும் வாய் மூட மறந்து கேட்டுட்டு இருக்கும். நானும் தான். எங்க எல்லாரையும் கொண்டு பிறந்திருந்தது. அப்பாவைப் போல சதா புன்னகை, அம்மாவை மாதிரி எல்லாரையும் ஒரு கட்டுல வச்சருக்கிற சாமர்த்தியம், பெரியண்ணாவோட கோபம், ம்ம்ம் என்னை மாதிரியே புத்தகம் படிக்க ஆர்வம். எவ்வளவு புத்தகம். சிவகாமியும் நானும் படுக்கிற அறையில பாதிக்கு ஆனந்த விகடன் தான். இருபது வருஷத்து புத்தகம் வரிசையா அடுக்கி இருக்கும். படுக்கவே இடம் இருக்காது. அப்பத்தான் இந்த ஆஸ்துமா வந்திருக்கனும். எப்பவும் தும்மறதைப் பார்த்துட்டு சிவகாமி அம்மாகிட்ட சொல்லி எல்லாத்தையும் பரண்ல போட்டுட்டாள். என் புத்தகமெல்லாம் வரிசை கலைந்து... அம்மாவோட புடவையும் சிவகாமியோட புடவையும் முள்ளாட்டமா மாறிட்டது. அன்னைக்கு ரொம்ப நேரம் நிலாக்குட்டி என் கையைப் பிடிச்சிட்டு நான் அழறேனான்னு என் முகத்தையே பார்த்துட்டு இருந்தது. அவள் இல்லாம இருந்திருந்தால் அழுதிருப்பேன். இப்பவும் அழுகையா வருது......

பாபு, நீ கிளம்புடா. அப்பாவை நான் பார்த்துகிறேன். இனி என்ன! எப்பவும் வர்றதுதானே. காலைல உன் தங்கச்சிகளையும் கிளம்ப சொல்லிட்டேன். சித்த இரு. தோசை சுட்டுத்தரேன். சாப்பிட்டுட்டு போ. பத்து மணிக்கு உங்கம்மா வீட்டில இருந்து சாப்பிடாம வந்தீங்களான்னு உன் பொண்டாட்டி கேப்பா.

சிவகாமிக்கு பையனை சாப்பிட சொல்வதற்கும் காரணம் வேண்டி இருக்கிறது.

'அப்பா' பாபு கூப்பிடறான். எல்லாரும் போயிட்டாங்க போல இருக்கு. யாரும் இல்லாதப்ப, ரொம்ப அவசியம்னாதான் இவனும் என்னோட பேசறான். என்னடான்னு கேட்கிறேன். ஆனா என் குரல் எனக்கே கேட்க மாட்டேங்குதே! எங்கயோ தூரமா.....


நிலாக்குட்டியும் ரொம்ப தூரத்தில தான் இருக்கு. அந்த நிஜ நிலா மாதிரி. எவ்வளவு தூரத்தில இருந்தாலும் வீட்டு விஷயமெல்லாம் அதுக்குத் தெரியும். பாபுவோட வாரம் ஒரு தரம் கம்ப்யூட்டர்ல பேசுமாம். அதுல எப்படி பேசுவாங்க? அம்மா இறந்து ஆறே மாசத்தில கூட்டுக் குடும்பம் ஒடைஞ்சு, வீட்டையும் வித்தப்ப அழுதது நாங்க மூனு பேருமாத்தான் இருக்கனும்... நான், நிலா, எங்கயோ இருந்து அம்மா. அப்புறம் தான் நிஜமே உரச்சுது. அதுவரை வீட்ல எல்லாரும் தனியா ஒர்க்ஷாப் வைன்னு சொன்னப்ப, தொழில் கத்துக் குடுத்த முதலாளியை விட்டுட்டு வர தோணல. அம்மா எதாவது சொல்லுவாளோன்னு எதிர்பார்த்துட்டு இருந்தேன். கடைசி வரை அப்படி சொல்லவேயில்லை. எல்லாருக்கும் நான் பிழைக்கத் தெரியாதவன். நிலாக்குட்டிக்கும் அப்படிதான் திடீர்னு கல்யாணமாச்சு. எங்கயிருந்தோ வந்து தூக்கிட்டுப் போயிட்டாங்க. இப்பவும் ரெண்டு வருஷத்துக்கு ஒரு தரம் ஊருக்கு வரும் போது, முதல் வேலையா என்னைப் பார்க்க வந்துடும். ஒவ்வொரு தரமும் நிலாக்குட்டியைப் பார்க்கும் என்னோட சந்தோஷத்தை எந்த வார்த்தையிலுமே சொல்ல முடியாது. ஆனா என்னைப் பார்த்ததும் அதோட முகத்தில வர்ற சோகத்தைப் பார்க்கும் போது பாவமாயிருக்கும். நிலாக்குட்டி வர்றதுக்கு இன்னும் நிறைய நாளாகும். அது வரைக்கும் இருப்பேனா? ஏனோ நிலாக்குட்டி பேசறதைக் கேட்கனும் போல இருக்கே....

அப்பா....பாபு குரல். உள்ளே வெங்காயச் சட்னி அரைக்கிற வாசம். பாபுவுக்கு அது தான் பிடிக்கும். சட்னியோட உரப்பு நாக்குல பட்டு எத்தனை நாளாச்சு. ஆனா இப்பெல்லாம் நினைச்சாலே எல்லாத்தையும் உணர முடியுது. அம்மாவோட புடவை, வெங்காயச் சட்னி உரப்பு, நிலாக்குட்டியோட பாசம்.....

உள்ள தோசை வார்க்கிற சத்தம்.

'பாபு சாப்பிட வாடா,' சிவகாமி.

பாபு மெல்ல கையை விட்டுட்டு போறான். தூக்கமும் மெல்ல கலையுது.....

அம்மா, உங்கிட்ட கொஞ்சம் பேசனும்.

என்னடா?

அப்பாவுக்கு இன்னைக்கு சரியாயிடுச்சுன்னு போகச் சொல்லலை. இனிமே எதுவும் பண்ண முடியாதுன்னு தான் அனுப்பிட்டாங்க. அவரோட நுரையீரல் பூராவும் அடைச்சுடுச்சு. இப்பவும் அவர் தூங்கலை. கோமாவில இருக்கார். கடைசியா போட்டு விட்ட ஊசி இன்னும் சில மணி நேரம் தாங்கும். அதுக்கப்புறம் எதுவும் சொல்ல முடியாது. நான் வீட்டுக்குப் போயிட்டு அவகிட்ட சொல்லிட்டு வந்திடறேன். ஆனப்பறம் தகவல் சொல்ல ஆரம்பிக்கலாம்.

என்னடா சொல்ற? காலைல கூட நல்லா இருந்தாரே. அதனாலதான் நான் வீட்டுக்கு வந்தேன். அதனால தானே உன் தங்கச்சிகளைக்கூட நாளைக்குப் போகச் சொன்னேன்.

ம்ம்ம்... இந்த மாசத்திலயே இது ரெண்டாவது தரம்மா. அவர் உடம்பில இனி தெம்பில்லை. அவ்வளவுதான்...

சிவகாமி புடவையால் வாயைப் பொத்தி அழுவது கேட்குது. சிவகாமி இங்க வாயேன். அந்த புடவையை என் மேல பட விடேன். என் கையைப் பிடிச்சுக்கயேன். எங்கயோ தூரமா உட்கார்ந்து அழறாளே ஒழிய பக்கத்திலயே வர மாட்டேங்கிறா. மகள்களும் மெல்ல கண்ணைக் கசக்கிறாங்கதான்.

அழுதுட்டே வீட்டை தயார் பண்ற சத்தம் கேட்குது. பாவம் நாலு வருஷமா செஞ்சு செஞ்சு களைச்சுட்டா. இதோ என்னை வழியனுப்ப தயாராகிறாள்.

அப்பா... மறுபடியும் பாபு. உங்களுக்கு கேக்குதான்னு தெரியலை. இருந்தாலும் சொல்றேன். நிலாகிட்ட இருந்து ஒரு மெயில் வந்திருக்குது. ஒரு கவிதை. படிக்கிறேன், கேளுங்க.

பெரியப்பாவுக்கு.

ஊரிலிருந்து மத்தியானம்
தொலைபேசி தகவல்
இந்த முறை நீ
போய் விடுவாயென்று

நிஜமாகவே போகப் போகிறாயா?
மறுபடியும் ஒரு முறை
உன் நினைவலைகள்
நீ பகிர்ந்து கொண்ட
உன் சந்தோஷங்கள்
அப்பாவிடமிருந்து கேட்டறிந்த
ஊரறியா உன் சோகங்கள்

ஏறக்கிடைத்த உன் ஏணிகள்
ஏறமுடியாத உன் காரணங்கள்
உனக்கு தைரியமிருந்ததில்லையாம்
அதனால்தான் என்ன?

சாவுடனான உன் போராட்டங்கள்
ஒவ்வொரு முறையும்
உருக்குலைந்து வருகிறாய்
உன் போராட்டங்கள் சலிப்பாகும்
நாட்கள் தூரமில்லை தெரியும்
உனக்காக ஒரு துரும்பையும்
கிள்ளிப் போட்டதில்லை - ஆனாலும்
சரி போதும் போன்னு சொல்ல முடியவில்லை.

அகால வேளை நீண்ட தொலைபேசி
மணி அடிக்காமலிருக்க வேண்டும்.

- நிலா.

வாசித்து விட்டு மெல்லிய விம்மலோடு அந்த கவிதையை என் கையில் பொதிந்து விட்டு அவனும் போயிட்டான். காகித்தில் நிலாக்குட்டி. அதே பட்டுப் போல மென்மையா. கதவுகள் ஒவ்வொன்றாக மூடுவது போன்ற உணர்வு. நெஞ்சு துவாரங்களெல்லாம் ஒவ்வொன்றாக வேலையை முடித்துக் கொள்கிறது. மூடும் துவாரங்களிலெல்லாம் யாரையெல்லாமோ தேடி ஓடுகிறேன். அம்மா... நிலாக்குட்டி...சிவகாமி...சுவாசம் வேணுமே....கொஞ்சமே கொஞ்சம் காத்து...அம்மா...சிவகாமி...நிலாக்குட்டி....அம்மா அதே பச்சைப் புடவையோட....நிலாக்குட்டி நான் போகிறேன்டா...இல்லை வருகிறேன்...நீ இருக்கும் ஊர் வழியா வந்து உன்னைப் பார்த்துட்டு தான் போகப் போறேன். உன்னோட இந்த கவிதை உன் ஊருக்கு வழி சொல்லும் தானே? வர்றேன். இல்லை போறேன் சிவகாமி....இப்பவாவது என் பக்கத்தில வாயேன். மத்த வேலையெல்லாம் நான் போனப்பறம் செஞ்சுக்கயேன். அம்மா....சிவகாமி....நிலாக்குட்டி....நிலாக்குட்டி..........

0 பின்னூட்டங்கள்: