Showing posts with label அனுபவங்கள். Show all posts
Showing posts with label அனுபவங்கள். Show all posts

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஹரன் பிரசன்னா - 2


'ஒரு நண்பனின் கதை இது'
- ஹரன் பிரசன்னா


முன்குறிப்பு : இது கையறுநிலையில் எழுதப்பட்ட சுயபுலம்பல் மட்டுமே.
ஜெயகாந்தன் ஒருதடவை 'இறந்தவனைக் கண்டு அழும் மனிதன் ஒவ்வொருவனும் தன் இறப்பை அதில் கண்டே அழுகிறான்' என்ற ரீதியில் எழுதியிருந்தார். இதுகுறித்து நிறைய யோசித்திருக்கிறேன். இதில் எங்கோ உண்மையிருக்கிறது, ஆனால் அது சரியாகச் சொல்லப்படவில்லை என்றும் தோன்றியது.

நேற்று (17-11-2008) காலையே ஒரு மரணச் செய்தியாக, நண்பன் ஒருவனின் அகால மரணச் செய்தியாக, மிகப்பெரிய இடியைப் போல வந்திறங்கியது அச்செய்தி. என் வயதுதான். ப்ளஸ் 1, ப்ளஸ் 2 என்னுடன் படித்தான். நல்ல சிகப்பில், நிறைய முடியுடன், கொஞ்சம் பூசினாற் போல், மிக அழகாக இருப்பான். கல்லூரியில் பலர் இயற்பியல் எடுக்க, நான் மட்டும் வேதியியல் எடுத்தேன். அவன் மட்டும் கணிதம் எடுத்தான்.


நான் பத்தாம் வகுப்பு படித்தது மதுரையில். பதினொன்றாம் வகுப்புக்கு திருநெல்வேலியில் உள்ள மதிதா இந்துக்கல்லூரியில் சேர்ந்தேன். அங்கேதான் அவன் பரிச்சயம் ஆனது. எல்லா மாணவர்களும் தனித்தனியாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்க, அவன்தான் முதன்முதலில் நான்கைந்து பேர் சேர்ந்து சாப்பிடச் சொல்லி வற்புறுத்தியவன். அதேபோல், அந்த கூட்டம் அதிகமாகிவிடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தவன். அவன் அம்மா அவனுக்கு விதவிதமாகச் செய்து தந்து அனுப்புவார்கள். ஒருகட்டத்தில் மதியம் வரை காத்திராமல் முதல் இடைவேளையிலேயே அதனை உண்ண ஆரம்பித்தோம். எங்கள் உணவிலிருந்து அவனுக்குத் தருவோம்.


உண்டுவிட்டு, மதிதா இந்துக் கல்லூரியைச் சுற்றி வருவோம். சும்மா செல்லாமல் கடலை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டு போகலாம் என்று சொல்வான். வாழ்த்து அட்டை விற்கும் கடையில், காதலர்களுக்கான வாழ்த்து அட்டையைக் காண்பிப்பான். குறைந்த ஆடைகளில் உடலுறவுக்கு அழைக்கும்விதமாக ஆணும் பெண்ணும் அந்த வாழ்த்து அட்டைகளில் இருப்பார்கள். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வருவோம்.


அவனுக்கு நெய்ச்சோறும் வெல்லமும் மிகவும் பிடிக்கும். யாராவது அதைக் கொண்டுவந்தால், அவன் கொண்டுவரும் சப்பாத்தி அல்லது பூரியைக் கொடுத்துவிட்டு அதை வாங்கிக்கொள்வான்.


நண்பர்களுக்குள் ஓட்டிக்கொள்வது என்பதைத் தொடங்கி வைத்தது அவன்தான். என்னுடன் சேர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதே, திடீரென்று கட்சி மாறி, 'இப்ப உங்கட்சி இல்ல, அவங்கட்சி' என்று சொல்லி, அதுவரை எதையெல்லாம் சப்போர்ட் செய்தானோ அதையெல்லாம் எதிர்த்துப் பேசுவான். ஒவ்வொரு சமயம் வகுப்புக்குள் நுழையும்போதே, 'நான் இன்னைக்கு அவன் சைட்ல' என்று சொல்லிக்கொண்டே வருவான்.


மழை பெய்து ஓய்ந்திருக்கும் வேளையில், எங்களில் யாரேனும் ஒருவர் தோள்மீது கைபோட்டு பேசிக்கொண்டே சென்று, ஏதேனும் மரத்தடிக்குக் கீழே சென்றவுடன், மரத்தடியில் கிளையை ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு ஓடுவான். அவன் ஓடிவிடுவான். இலைகளில் சேர்ந்திருக்கும் நீரெல்லாம் அவன் அழைத்துக்கொண்டு சென்ற நண்பன் மீது விழ, மற்ற நண்பர்கள் பெருங்குரலெடுத்துச் சிரிப்பார்கள்.


நாங்களெல்லாம் கிரிக்கெட் என்று அலைந்துகொண்டிருக்க, அவன் ஸ்டெஃபியின் மிகத் தீவிர ரசிகனாக இருந்தான். ஒவ்வொரு ஓபன் டென்னிஸின் பைனல்ஸ் ஸ்கோரையும் ஒப்பிப்பான். திடீரென்று ஒருநாள், தனக்கு இனிமேல் ஸ்டெபி கிராஃப் பிடிக்காது என்றும் மோனிகா செலஸ்தான் பிடிக்கும் என்றும் அறிவித்தான். அப்படி எப்படி மாறமுடியும் என்றால், அது அப்படித்தான் என்று சாதித்தான். அத்தோடு ஸ்டெபி கிராபிற்கு விளையாடவே தெரியாது என்றெல்லாம் சொல்லி திட்ட ஆரம்பித்தான். எங்களுக்கெல்லாம் தலை சுற்றியது.


தமிழை வாசிப்பதில் எனக்கும் அவனுக்கும் பெரிய போட்டியே நடக்கும். அவன் தொலைக்காட்சி, வானொலிகளில் வாசிப்பவர்கள் போல வாசிப்பான். ஏதேனும் ஓரிடத்தில் திடீரென்று திக்கினாலோ, நிறுத்தக்கூடாத இடத்தில் நிறுத்தினாலோ நான் அவனைப் பார்த்துச் சிரிப்பேன். நான் வாசிக்கும்போது நான் எப்போதெல்லாம் தவறு விடுகிறேன் என்பதைக் கண்கொத்திப் பாம்பாகப் பார்த்திருப்பான்.


பள்ளிவாசம் முடிந்து நாங்கள் கல்லூரிக்குச் சென்றோம். எல்லாரும் பேசி வைத்து, இயற்பியல் என்றெழுதினார்கள், விண்ணப்பபடிவத்தில். நான் வேண்டுமென்றே வேதியியல் என்று எழுதினேன். இத்தனைக்கும் வேதியியலை விட இயற்பியலில் அதிகம் மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். அவன் கணிதம் என்று எழுதினானா என்பது நினைவில்லை. ஆனால் அவனுக்குக் கணிதம்தான் கிடைத்தது.


ஒருவருடம்தான் கல்லூரியில் படித்தான். அதற்குள் ஸ்டாஃப் நர்ஸ் கோர்ஸ் கிடைத்துவிட்டது. ஹைகிரவுண்டில் சேர்ந்துவிட்டான். எங்களுக்கெல்லாம் வருத்தமாக இருந்தது. அவன் இதற்காக அழுதே விட்டான். ஆனாலும் எங்கள் நட்பு அறுந்துவிடவில்லை. அது வேறொரு புதிய பரிமாணத்துடன் கிளைத்தெழுந்து செழித்தது என்றே சொல்லவேண்டும்.


அவனுக்கு ஹைகிரவுண்டில் விதவிதமாக நண்பர்கள் அறிமுகமானார்கள். எல்லோரையும் எங்கள் நண்பர்களாக்கினான். வாராவாரம் நாங்கள் அவனைப் பார்க்கப் போவோம். அதுவரை பெண்கள், கிரிக்கெட், கிண்டல் என்றே பேசிக்கொண்டிருந்த நாங்கள், வயதின் வளர்ச்சியில், காமம், உடலுறவு என்று பேச ஆரம்பித்திருந்தோம்.


அவன் ஸ்டாஃப் நர்ஸாக இருந்ததால், இந்த விஷயங்களைப் பற்றி விதவிதமாகச் சொன்னான். ஸ்டாஃப் நர்ஸ் படிக்கும் பெண்களைப் பற்றிய அவன் மதிப்பீடு, டாக்டர்களுக்கும் அங்கு வேலை பார்க்கும் ஸ்டாஃப் நர்ஸ்களுக்குமான உறவு என்றெல்லாம் என்னென்னவோ சொல்லுவான். நாங்கள் எப்படி பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது அவன் சொல்லுவதை நம்புவதா வேண்டாமா என்றெண்ணி பிறகு வேறு வழியில்லாமல் நம்புவோமோ அப்படித்தான் இதனையும் நம்புவோம். அவன் சொன்னவை ஏராளம். முதலிரவில் ஆண் பெண் கலவியில் ஏற்படும் பிரச்சினைகள், ('அது அத்தனை லேசுன்னு நினைக்காத..' என்றுதான் ஆரம்பிப்பான். நிறைய சொல்லுவான். அதையெல்லாம் இங்கே எழுதமுடியாது.) பெண்களின் பிரச்சினைகள், ஆணின் பிரச்சினைகள் என்றெல்லாம் விவரிப்பான்.


நாங்கள் எங்கள் நண்பர்களில் ஒருவன் வீட்டில் பிஎஃப் பார்த்தபோது, ஹைகிரவுண்டிலிருந்து வந்தான். ஸ்டாஃப் நர்ஸில் படிப்பவர்கள் ஹாஸ்டலில் தங்கிப் படிப்பார்கள். இரவில் வார்டன் ஹாஸ்டலைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு போய்விடுவார். பிஎஃப் பார்க்க வருவதற்காகவே கள்ளச் சாவி செய்து திறந்து கொண்டு வந்திருந்தான். பி எஃப் பார்த்துவிட்டு, அதிகாலை மூன்று மணிக்கு டவுணிலிருந்து ஹைகிரவுண்ட் நடந்து சென்றான்.


ஹாஸ்டல் வார்டன் ரொம்ப கேள்வி கேட்கிறாள் என்று, ஒரு கடிதத்தில் அவனே குங்குமம் மஞ்சள் என்றெல்லாம் தூவி, ஒரு தாயத்தையும் அதோடு சேர்த்து, உன் பெயருக்கு மந்திரித்துவிட்டோம், இனியும் உன் மாணவர்களுடன் விளையாடாதே என்று அவனே ஒரு போஸ்ட் அனுப்பி வைத்தான். அந்த வார்டன் அலறிவிட்டார் என்று சொன்னான். இப்படி நிறைய சொல்லுவான். செய்தானா என்றெல்லாம் தெரியாது.


திடீரென்று ஒருநாள் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகச் சொன்னான். நாங்கள் எல்லோரும் ஆர்வமாகக் கேட்டோம். பூர்வஜென்மத்து உறவு, அது இது, முத்தம் என்று என்னவெல்லாமோ சொன்னான். எல்லாம் கேட்டு முடித்து நாங்கள் கிளம்பும்போது, 'இன்னும் இருக்குல' என்று சொல்லி, அவன் காதலிக்கும் இரண்டாவது பெண்ணைப் பற்றியும் சொல்லத் தொடங்கினான். அப்போதும் அதே பூர்வ ஜென்மத்து உறவு, அது இது, முத்தம் எல்லாம் வந்தது. நான் கடுப்பாகிவிட்டேன். பின்பு என்னிடம் சத்தியமே செய்தான், இரண்டு பெண்களுமே அவனைக் காதலிப்பதாகவும், அவனுக்கு இரண்டு பெண்களையும் பிடித்திருப்பதாகவும். அவனுக்குப் பிறந்தநாள் வந்தால் இரண்டு சாக்லேட்டுகள், இரண்டு சட்டைகள் பரிசு வரும். சொல்லிச் சொல்லிச் சிரிப்பான். கடைசியில் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து, அவன் அம்மாவிடம் சொல்ல, அவன் அம்மா அவன் காதலை எவ்வித யோசனையுமின்றி ஒரே நொடியில் நிராகரித்தார். அவனும் உடனே அக்காதலை நிராகரித்துவிட்டான்.


எனக்கும் வேலை கிடைத்து, அவனுக்கும் வேலை கிடைத்து, எங்கள் நட்பு தொடர்ந்துகொண்டிருந்தது. மருத்துவமனைகளில் நடக்கும் காமகளியாட்டங்களை அவன் நிறைய சொல்லுவான். அதை வைத்து நான் ஒரு கதை எழுதினேன். (மீண்டும் ஒரு மாலைப்பொழுது.) Slept away என்பதை உருவாக்கி, அதை எல்லாருக்கும் சொல்லுவான். அந்த ஸ்டாஃப் நர்ஸ் நேத்து அவனோட ஸ்லெப்ட் அவே என்பான். பின்பு அவனுக்குச் சென்னையில் வேலை கிடைத்து, சென்னைக்குப் போனான்.

நான் தூத்துக்குடியில் வேலையில் இருந்தேன். நான்கைந்து நாள் விடுமுறை கிடைத்தபோது அவனைப் பார்க்கப் போனேன். அங்கேயும் எங்கள் நண்பர்களோடேயே இருந்தான். எல்லாரும் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு இடமாகப் பார்க்கப் போவோம். சோழிங்கர், வண்டலூர் பூங்கா, மெரீனா கடற்கரை என்று எல்லாம் பார்த்தது அவனோடுதான். எங்கே போனாலும் நாங்களே சமைத்துக்கொண்டு உணவெடுத்துக்கொண்டு போவோம். கைகளில் உருட்டித் தருவான் எல்லாருக்கும்.


போட்டோ எடுக்கும்போது இயல்பாக இருக்கவேண்டும் என்பது என் எண்ணம். வேண்டுமென்றே எல்லாரையும் செயற்கையாக நிற்கச் சொல்லி படமெடுப்பான். ஒரு புகைப்படத்தில் எல்லோரும் வரிசையாக ஒருவர் தோள்களில் ஒருகை வைத்திருக்க, ஓடும் ரயில்வண்டி போல, எல்லாரும் காலைத் தூக்கிக்கொண்டு, ஒரு கையால் கூவென ஊதிக்கொண்டிக்கும் போட்டோ இன்னும் நினைவிலிருக்கிறது.


எங்கள் நண்பர்கள் எல்லோருக்கும் ஒவ்வொருவராக திருமணம் நடக்க ஆரம்பித்தது. அவனுக்கும் திருமணம் ஆனது. நான் துபாயில் இருந்து திரும்பி வந்து, அவன் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பினேன். என் நம்பர் அவனுக்குத்தெரியாது என்பதால் கொஞ்சம் விளையாட ஆரம்பித்தேன். அவன் செய்த சேட்டைகளையெல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்லவும் கொஞ்சம் பயந்துவிட்டான். அவனது நண்பர்களிடம் சொல்லியிருப்பான் போல. ஒவ்வொருவராக என்னை அழைத்து நான் யார் என்று கேடகத் தொடங்கினார்கள். எல்லார் நம்பரும் என்னிடம் இருந்ததால், அவர்கள் எல்லோரிடமும் நான் விளையாடத் தொடங்கினேன். ஒருவாறாக அவனிடம் நாந்தான் என்று உண்மையைச் சொன்னபோது, 'நான்கூட முதல்ல ஒருத்திய லவ் பண்ணேன்ல, அவதான் மிரட்டுறாளோன்னு நினைச்சிட்டேன். என் பொண்டாட்டி மட்டும் உன் மெசேஜை பாத்தா, செத்தேன்' என்றான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 'எல்லாம் பொய்தானல, சும்மாதான சொன்ன?' 'உனக்கும் எனக்கும் தெரியும் பொய்யுன்னு, அவ பொய்யத்தான் மொதல்ல உண்மைன்னு நம்புவா' என்றான். ஒருவழியாக செட்டில் ஆகிவிட்டான் என்று சந்தோஷமாக் இருந்தது.


அவ்வப்போது தொலைபேசி. அவ்வப்போது சந்திப்பு. தன் மனைவி இரண்டாவதாக உண்டாகியிருக்கிறாள் என்றான். வாழ்த்து சொன்னேன். நேற்று காலை, நிறைமாதக் கர்ப்பிணியான தன் மனைவியை சிவகிரியில் பார்த்துவிட்டு, அங்கிருந்து திருநெல்வேலிக்கு ஸ்கூட்டரில் காலை 3 மணிக்கு வந்திருக்கிறான். விபத்து நேர்ந்து அந்த இடத்திலேயே இறந்துவிட்டான். எங்கள் நண்பர்கள் எல்லோரையும் பதைபதைக்கச் செய்துவிட்டது இம்மரணம்.


உண்மையில் நான் இது போன்ற மரணங்களில் என் மரணத்தின் மீதான பயத்தையே உணர்கிறேன் என்று நினைக்கிறேன். நேற்று முழுவதும் இருந்த பதட்டம் சொல்லி மாளாது. தேன்கூடு சாகரனின் மரணத்தைக் கேட்ட அன்றும் அப்படி பதற்றமாக இருந்தது. ஏனென்றால், அவர் இந்தியா வந்திருந்தபோதுதான் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் பேசியிருந்தோம். தேன்கூட்டில் சில போட்டிகள் நடத்தப்போவதாக எல்லாம் சொன்னார். அதே பதற்றம் நேற்றும் என்னைத் தேடி வந்தது.


மரத்தடியில் பாபு என்கிற நண்பர் எழுதிய கவிதை மிக முக்கியமானது. திடீரென்று இரண்டு நாள்களுக்கு முன்புதான் இதனை வாசித்தேன். நேற்று இக்கவிதையே மனதுள் சுழன்று சுழன்று வந்தது.


அது



பள்ளிக்கூட கிரிக்கெட் போட்டியில்
எதிரணிக்காரன் வீசிய வேகப்பந்து
பின் மண்டையில் விசையுடன் தாக்கிச் சுருண்டபோது
எதிரே வந்து நின்று விரல் நீட்டி
எச்சரித்துவிட்டுப் போனது.

நெடுஞ்சாலை மோட்டார்சைக்கிள் பயணத்தில்
அசுர பாய்ச்சலுடன் வந்த வாகனத்துடனான மோதலை
மயிரிழையில் தவிர்த்து மணலில் சரிந்தபோது
காதருகில் உருமிவிட்டுச் சென்றது.

பெருநோய் பீடித்து மருத்துவமனையில்
உடல் வற்றிக்கிடந்த ஒரு மாதகாலமும்
படுக்கையருகில் அமர்ந்திருந்து
உற்றுப் பார்த்தபடி இருந்தது.

நள்ளிரவு உறக்கத்தில்
நெஞ்சுக்கூட்டுக்குள் இரும்புப் பந்தொன்று அடைத்து
மூச்சுத்திணறி வியர்த்து
நிராயுதமாய் சில நிமிடங்கள் போராடியபின்
இயல்புநிலை திரும்பியபோது
ஜன்னலில் நிழலெனப் பதுங்கி வெளியேறிற்று.

இதுவரை
வாய்த்த சந்தர்ப்பஙகளெல்லாம்
நழுவிப்போனதில்
மேலும் வன்மம் வளர்த்தபடி
எங்கிருந்து எப்போது
என் மீது பாய்ந்துவிடக் காத்திருக்கிறதோ -
அந்த மரணமென்னும் மிருகம்.


நான் எழுதுவதைக்கூட மரணம் வாசித்துக்கொண்டிருக்கலாம்.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - தமிழ்நதி - 6

அங்காடி நாய் அலைச்சல்
- தமிழ்நதி


அலைதலின்போது நிலைத்த இருப்பிற்கும், நிலைகொள்ளும்போது அலைதலுக்குமாக
அங்காடி நாய்போல ஓடித்திரியும் முரண்மனநிலையைத் தவிர்க்க முடிவதில்லை.
ஒரு புத்தகத்தை வாசிக்கத் தொடங்கி திடீரென அதைப் பாதியிலேயே
மூடிவைத்துவிட்டு ஒரு பயணம் கிளம்பிப்போய் மீண்டும் சில மாதங்கள் கழித்து
அதை வந்து தொடும்போது குற்றவுணர்வாக இருக்கிறது. வேரிலிருந்து
பலவந்தமாகப் பிடுங்கியெறியப்பட்டதன் பின்விளைவுகளிலொன்றே இதுவென, செலவு
குறித்த விசனம் மிகும்போதெல்லாம் சமாதானம் கொள்கிறேன். உறவுகள் மீதான
நம்பிக்கை நீர்த்துப்போகும்போது, அலைதலின் வழியாக சிதறிய சுயத்தைச்
சேகரிக்கிறேன் என்ற நெஞ்சறிந்த பொய்யையும் முயற்சித்துப் பார்த்ததுண்டு.
எது எவ்வாறு இருப்பினும், மனித நடத்தைகளின் விசித்திரங்களுக்கு நதிமூலம்
இருக்கவேண்டுமென்பதில்லையே.


கனடா அழகாகவும் சுத்தமாகவும் அமைதியாகவும் பெருந்தன்மையுடனும்
நாசூக்குடைய மனிதர்களுடனும் இருந்தது. போய்ச்சேர்ந்த காலமோ இளவேனில்.
சாலையோரங்களில் பூக்கள் நிறங்களை அவிழ்த்திருந்தன. செழித்தடர்ந்த
மரங்களின் பச்சைக்கு ஒப்புவமையில்லை. யாராவது தண்ணீர் தெளித்து
அமர்த்திச் சோறு போட்டால் மறுப்பின்றிச் சாப்பிட்டுவிடக்கூடிய அளவிற்கு
சாலைகள் சுத்தமாயிருந்தன. சாலைகளை ஒட்டிய நடைபாதைகளில் மாலை நடைக்காக
மட்டுமே நடந்த மனிதர்களையன்றி வேறெவரையும் காணேன். இலங்கை, இந்தியா என்று
ஐந்தாண்டுகளைக் கழித்துவிட்டுச் சென்ற நான், நண்பர்களையும், சாலைகளையும்
கட்டிடங்களையும் மீள்கண்டுபிடிக்க வேண்டியவளாக இருந்தேன். காலநிலையும்
ஒப்பீட்டளவில் தோலுக்கு இதமாயிருந்தது. எனினும் என்ன…சென்றதிலிருந்து
நிலைகொள்ளவில்லை. ஐந்து நட்சத்திர விடுதியின் பிரமாண்டத்தோடும்
பகட்டோடும் பளபளக்கும் மனிதர்களோடும் ஒட்டமுடியாத கிராமத்தவன்
புழுதிபடிந்த தெருக்களுக்குத் திரும்ப ஏங்குவதை ஒத்திருந்தது மனம். ஒரு
சொல்லைத்தானும் வாசிக்க முடியவில்லை.


கண்ணாடிக் கட்டிடங்களில் நெளிநிழல் படர்த்தி வாகனங்கள் விரையும்
வேகநெடுஞ்சாலையைப் பார்த்தபடி எத்தனை நேரம்தான் அமர்ந்திருப்பது?
குற்றவுலகொன்றினுள் வாழ்ந்துகொண்டிருப்பதாக அச்சுறுத்தும், அடுத்தவர்
அந்தரங்கங்களில் கிளுகிளுக்கும், போரின் குருதி கொப்பளித்து
வரவேற்பறையில் வழியும் தொலைக்காட்சியைத் திறக்கவே அச்சமாக இருந்தது. சில
நாட்கள் முன்னர்தான் தாயொருத்தி தன் குழந்தைகள் இரண்டைக் கொன்றிருந்தாள்.
தோழியின் கார்த் தரிப்பிடத்தில் ஒரு கறுப்பினச் சிறுவன் சுடப்பட்டு
இறந்து கிடந்தான். நள்ளிரவு கடந்து போதையில் திரும்புவதை காலைக்கடன் போல
தவறாது செய்துகொண்டிருந்த கணவனை விவாகரத்து செய்யவிருப்பதை
உறவுக்காரியொருத்தி அழுகையோடு தொலைபேசியூடாகச் சொல்லியபடியிருந்தாள்.
மாதக் கணக்கில் நேரத்தையும் கோடிக்கணக்கில் பணத்தையும் செலவழித்து
வாங்கிய வீடுகள் வேலைகளிலிருந்து திரும்பும் மனிதர்களுக்காக இருள்
வெறித்துத் தவமிருந்தன. வார விடுமுறைகளுக்காக வாழ்க்கை
காத்துக்கிடப்பதைக் காணச்சகிக்கவில்லை. வசதிகள் நிறைந்ததெனினும்
வாழிடத்தை அந்நியமாக உணரத்தொடங்கும்போது இயக்கம் நின்றுபோய்விடுகிறது.


ஓட்டாத மண்ணை உதறிக் கடந்தோடும் வாய்ப்பும் திமிரும் சாத்தியமும்
உள்ளவர்களில் ஒருத்தியாயிருப்பதில் நிறைவே. எனினும், தொடர்மாடிக்
குடியிருப்பொன்றை சிறுகச் சிறுக 'வீடு'ஆக்கியபின் வெளியேறுவதில்
உள்ளுக்குள் சின்ன வருத்தம் இருக்கவே செய்தது. ஆடம்பரப் பொருட்கள்
நிறைந்த, குளிரூட்டப்பட்ட வசதியான வீட்டுச்சிறைகளைத் துறப்பதற்கான துணிவை
தனிமையன்றி வேறெதனால் அளிக்கவியலும்? அங்காடி நாய் தூக்கத்திலிருந்து
விழித்துக்கொண்டுவிட்டது. பயணப்பொதிகளை அயர்ச்சியோடு அடுக்கும்போதெல்லாம்
அதை (அங்காடி நாயை) நஞ்சூட்டிக் கொன்றுவிடலாம் போலிருக்கிறது.


உலவும் வெளிகள் விரிய விரிய, பழகும் மனிதர்கள் பெருகப் பெருக
பாதுகாப்பற்றதும் சுயநலம் மிக்கதுமான உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
என்ற எண்ணம் உறுதிப்படுகிறது. அதிலும் போர் நடந்துகொண்டிருக்கும் ஒரு
நாட்டில் (அது சொந்த மண்ணே ஆனாலும்) தற்காலிகமாகப் போய்த் தங்க
நேரும்போது பயம் நிழல்போல தொடர்ந்துகொண்டேயிருப்பதை அவதானிக்க முடிகிறது.
கொழும்பின் காலி வீதியிலுள்ள சோதனைச் சாவடிகளைக்
கடந்துசெல்லும்போதெல்லாம் 'நிறுத்திவிடக்கூடாதே' என்ற பதட்டம் பரவியது.
முன்பாவது வெளிநாட்டுக் கடவுச்சீட்டு என்பதற்கு ஒரு மரியாதை (அநாவசியமான)
இருந்தது. அவசரகாலச் சட்டம் கடுமையாக்கப்பட்ட பிற்பாடு கடவுச்சீட்டாவது
கத்தரிக்காயாவது! சனக்கூட்டம் அதிகம் உள்ள பொது இடங்களுக்குப் போவதைத்
தவிர்க்குமாறு நண்பர்கள் சொன்னார்கள். எங்கே எப்போது குண்டு வெடித்து
சதைத் துண்டுகளாவோமோ என்ற பீதி நிலவுகிறது. வீதிகளில்
அலறியடித்துக்கொண்டு போகும் 'அம்புலன்ஸ்'வண்டிகளின் சத்தத்தைக்
கேட்கும்போது, 'எங்கே? எத்தனை?'என்று நம்மையறியாமல் கேட்டுவிடுகிறோம்.
உயிர்களின் மதிப்பு வெறும் இலக்கமாகிவிட்டிருக்கிறது. இறப்பின் எண்ணிக்கை
நம்மைப் பாதிப்பதும் இனம்சார்ந்த விசயமாயிருக்கிறது.


அடையாள அட்டை கையில் இல்லாமல் தெருவில் இறங்குபவர்கள் இல்லாமற்
போகிறார்கள். சில சமயங்களில் அடையாள அட்டை வைத்திருப்பவர்களும்கூட.
தெரிந்த குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனொருவன் திடீரெனக் காணாமல் போனான்.
அந்தக் குடும்பம் காவல் நிலையங்களில் காவல் கிடந்தது. தெஹிவளைக்
கடற்கரையில் பிணமொன்று கிடப்பதாகவும் வந்து உறுதிப்படுத்தும்படியும்
தகவல் வர ஓடினார்கள். அந்தப் பிணம் அவனுடையதல்ல என்று தெரிந்து தெளிந்த
பிறகு, சிறையில் எனினும் உயிருடன் இருந்தால் போதுமென்று
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.


விமான நிலையத்திலிருந்து வெளிவந்ததும் சென்னையின் போக்குவரத்து
மூச்சுமுட்டுகிறது. ஒலிப்பான்கள் காதைக் கிழிக்கின்றன. வெக்கை 'வந்தாயா
வா'என்று முகத்தில் அறைகிறது. உயிரே போவதைப் போன்ற அவசரத்தில் சாலையைக்
கடக்கும் மனிதர்கள் மாநகரம் மாநகரம் என முரசறைகிறார்கள். எனின் என்ன… வாழ
அழைக்கிறது என்னறை. எழுது மேசையின் வழி தெரியும் பூவரசு மஞ்சள் பூவோடு
காற்றில் இழைகிறது. மழை இருந்திருந்து 'வரட்டுமா… வரட்டுமா'என்று செல்லம்
பொழிகிறது. அங்காடி நாய் தற்காலிகமாகத் தூங்கவாரம்பித்திருக்கிறது. அது
எழுந்திருந்தால்தான் என்ன… அநிச்சயத்தினால்தானே வாழ்வு அழகும் பொருளும்
பொருந்தியதாயிருக்கிறது?


நன்றி: உயிரோசை இணைய இதழ்

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - தமிழ்நதி - 3

புத்தக வாசனை
- தமிழ்நதி


அப்பாவின் வேலை காரணமாக, பன்னிரண்டாம் வகுப்புவரை நான் பதினொரு
பள்ளிக்கூடங்களில் படிக்க நேர்ந்தது. நாங்கள் வீடு மாறி வேறு
ஊர்களுக்குச் செல்லும்போதெல்லாம் தளபாடங்களுக்கு அடுத்தபடியாக
அழிச்சாட்டியமாக இடத்தைப் பிடித்துக்கொண்டு கனமான மலத்தியோன் பெட்டிகளும்
விடாப்பிடியாக வரும். 'அப்பாவின் புத்தகங்கள்'என்பதன்றி அதற்கு
முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அலைந்து திரிவது சிறுவயதிலிருந்தே எனக்கு
விதிக்கப்பட்டுவிட்டதோ என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது. வீட்டுச்
சாமான்களுக்கு நடுவில் அந்தப் பெட்டிகள் மீது ஒய்யாரமாய் அமர்ந்து வேறூர்
சென்ற நாட்களில் எனது கவலையெல்லாம் புதிதாகக் குடியமரப் போகும் வீட்டில்
மரங்கள் இருக்குமா என்பதுதான். சின்ன வயதிலிருந்தே மரங்கள் மீது
அப்படியொரு ஆசை. இயற்கையின் மீதான விருப்புத்தான் வாசிப்பிற்கும்
எழுத்திற்கும் ஒருவகையில் உந்து கருவியாக இருந்திருக்க வேண்டும்.
இப்போதும் மரங்களற்ற வீடுகளை உயிரற்றவையாகவே உணரமுடிகிறது.

விருத்தெரிந்த காலத்தில் மலத்தியோன் பெட்டிகளுள் மனிதர்கள் இருப்பதைக்
கண்டுபிடித்தேன். காகிதங்களில் வரிவடிவில் இருந்த அவர்கள் அழுதார்கள்@
சிரித்தார்கள்@ காதலித்தார்கள்@ வஞ்சித்தார்கள்@ நேர்மையாயிருந்து
வறுமையில் வாடினார்கள்@ கொலைகளும் தற்கொலைகளும் செய்தார்கள்.
பூரணி-அரவிந்தனும்(குறிஞ்சி மலர்) வந்தியதேவன்-குந்தவையும் (பொன்னியின்
செல்வன்), வேதா-நச்சியும் (ஜீவகீதம்), தாரணி-சூர்யாவும்(அலையோசை),
தியாகு-ஸ்வப்னா(தாயுமானவன்) என்னோடு வாழத்தொடங்கினார்கள். அது வேறொரு
உலகம். நான் கதைமாந்தர்களைப் போல வாழ ஆசைப்பட்டேன். கனவு செறிந்த
கண்களுடன் சுற்றியிருப்பவர்களை விட்டு விலகியிருக்க ஆரம்பித்தேன்.
சிறுவயதில் வாசிப்புடன் தர்க்கிக்கப் போதிய அறிவு இருக்காது. ஆதலால்
வாசிப்பினால் மனிதர்கள் கட்டமைக்கப்படுவது தவிர்க்கவியலாததாகிறது. பொய்யே
பேசாத, இரக்கமே உருவான, அறிவின் சுடரொளி கண்கூசவைக்குமொரு பெண்ணாயெனைக்
கற்பனித்ததுண்டு.

அந்நாட்களில், புத்தகத்தைத் திறந்தால் புறவுலகு மூடிக்கொள்ளுமளவிற்கு
இறகின் மென்மையாயிருந்தன பொழுதுகள். சாப்பிடவோ கடைக்கு அனுப்பவோ
அழைக்கும் குரல்கள் எனையெட்டும் முன்னரே கரைந்துபோகலாகாதா எனப்
பரிதவிப்பேன். ஒரு புத்தகத்தை வலுக்கட்டாயமாக மூடி, மீண்டும்
கையிலெடுக்கும்வரை அந்தப் பாத்திரங்களின் குரல்கள் உள்ளே
ஒலித்துக்கொண்டிருந்தன. தெருவில் நடந்துபோகும்போது அவர்களும் என்னுடன்
கூடவே வருவார்கள். அவர்கள் அடுத்து உதிர்க்கப்போகும் வார்த்தைகள் எனது
சின்ன மனதின் கற்பனையில் சிக்காதனவாக இருந்தன. கனவுகளின் இழையறுக்க
கையில் கத்தியோடு வந்தது யதார்த்தம். வாசித்த புனைவுகளுக்கும்
யதார்த்தத்திற்குமிடையிலான இடைவெளி நினைத்ததைக் காட்டிலும் மிகப்பெரிதாக
இருந்தது. விழிகளில் திரையிட்டிருந்த கனவுப்புகை கலைந்து
'மனிதர்கள்'தெளிவாயினர்.

ஆனாலும், நூலகங்கள் மற்றும் புத்தகக் கடைகளின் மாயவசீகரம் இன்னதென்று
இன்னுந்தான் புலப்படவில்லை. புத்தகத்தைக் கையிலெடுத்து புரட்டவோ ஒரு வரி
வாசிக்கவோ கூட வேண்டியதில்லை. மின்விசிறிகள் மட்டும்
அனத்திக்கொண்டிருக்கும் அமைதியான அந்த நீள மண்டபங்களின் மர
அலமாரிகளுக்கிடையில் புத்தகங்களின் பின்முதுகைப் பார்த்தபடி ஊடாடித்
திரிதலே போதுமாயிருக்கும். மூக்குக் கண்ணாடிக்கப்பால் தூக்கம்
வழிந்தோடிக்கொண்டிருக்க, தன் வீட்டுப் பொருளை யாரோ திருடிக்கொண்டு போக
அனுமதி கேட்பதான எரிச்சலோடிருக்கும் நூலகர்கள் சிரிப்பதேயில்லையோ என
சின்னவயதில் நினைத்திருக்கிறேன். அவர்களின் சிடுமூஞ்சித்தனத்தையும்
பொறுத்துக்கொள்ளவைத்தது புத்தகங்கள் மீதான காதலே.

உங்களில் பலருக்கு 1980களின் தொடக்க காலம் நினைவிருக்கலாம்.
மும்முரமாகவும் புதிது புதிதாகவும் இயக்கங்கள் தோன்றி தீவிரமாக
'இயங்கிய'காலமது. அந்நாட்களில் புதிய வாசிப்புக்குப் பழக்கப்பட்டோம்
அன்றேல் பழக்கப்படுத்தப்பட்டோம். இலங்கை அரசின் அடக்குமுறைக்கெதிரான
வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் இரவோடிரவாக சுவர்களில் முளைத்திருக்கக்
கண்டோம். அவற்றுட் சில கவித்துவமிக்க வரிகளோடிருந்ததாக ஞாபகம். அதைவிட
'துண்டுப் பிரசுரங்கள்'என்று சொல்லப்பட்ட சிறு கையடக்கப் புத்தகங்கள்
இரகசியமாக விநியோகிக்கப்பட்டன. அவை பெரும்பாலும் கறுப்பு,சிவப்பு இரண்டு
மைகளாலும் மாறி மாறி எழுதப்பட்டிருக்கும். எழுச்சிமிகு அவற்றின்
வாசகங்களால் ஈர்க்கப்பட்டுப் போராடப் போனவர்கள் அநேகர். மேலும்,
'மரணத்துள் வாழ்வோம்'போன்ற கவிதைத் தொகுப்புகளும் வாசிக்கக் கிடைத்தன.
சமாதான காலமென அவ்வப்போது தலைகாட்டிச் செல்லும் காலங்களில் அப்பேர்ப்பட்ட
புத்தகங்களுக்கும் விடுதலை. அவற்றைப் பகிரங்கமாக வாசிக்க முடிந்தது.
ஆனால், இரகசியமாக வாசிக்கும்போதிருந்த குறுகுறுப்பை அவை தரத்தவறின.
துரதிர்ஷ்டவசமாக 'சமாதான'காலங்களும் அடிக்கடி வருவதில்லை. ஆகவே நாங்கள்
அத்தகைய புத்தகங்களை வீட்டுச் செத்தைகளுக்குள் ஒளித்துவைக்க
வேண்டியிருந்தது. எரியூட்டவும் நேர்ந்தது. நெருப்புத் தின்னக் கொடுக்க
மனம் வராதோர் 'பொலித்தீன்'பைகளில் இட்டு கிடங்கு கிண்டிப் புதைத்தனர்.
எங்கள் நிலங்களுள் கண்ணிவெடிகள் மட்டுமல்லாமல் புத்தகங்கள், நகைகள்,
எலும்புகள், போராளிகளின் புகைப்படங்களும் புதைக்கப்பட்டிருக்கின்றன.
அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அவை புதையலாகலாம்.

இந்தியப் படைப்புகள் இலங்கைக்குள் வாராது நின்றிருந்த ஒரு காலத்தில்
வீரகேசரிப் பிரசுரத்தினூடாக கணிசமான நாவல்கள் வெளிவந்தன. செங்கை
ஆழியானின் 'கங்கைக் கரையோரம்'வாசித்துவிட்டு இரவிரவாக விம்மி வெடித்து
அழுதது நினைவிருக்கிறது. இன்றெனில் யாரோ இழந்த காதலுக்காக கண்ணீரை
இறைத்திருக்கமாட்டேன் என்றே தோன்றுகிறது. 'காட்டாறு'ம் அப்படித்தான்.
செங்கை ஆழியான் எப்போதும் ஒரு வாக்கியத்தில் என்னை ஏங்கியழச் செய்பவராக
இருந்தார். பாலமனோகரனின் 'நிலக்கிளி'பதஞ்சலி கற்பனைக் கதாபாத்திரம் என்று
நினைக்கமுடியாதபடி உயிரோட்டமாயிருந்தாள். அவள் தண்ணீரூற்றில் இன்னமும்
வாழ்ந்துகொண்டிருப்பாள் என்ற நினைவு(முட்டாள்தனமான)மாறாதிருக்கிறது.

நமதெல்லோருக்குமான வாசிப்புத்தளம் இப்போது மாறிவிட்டது. அம்புலி
மாமா-கல்கி-அகிலன்-லஷ்மி-சிவசங்கரி-செங்கை ஆழியான்-
பாலகுமாரன்-சுஜாதா-தி.ஜானகிராமன்-ஜெயகாந்தன்-லா.சா.ரா.-அசோகமித்திரன் - எஸ்.பொ. -பிரபஞ்சன் - அம்பை - ராஜம் கிருஷ்ணன் - ஆ.மாதவன் - சுந்தர ராமசாமி - ஜி.நாகராஜன், கோணங்கி - ஜெயமோகன் -அ.முத்துலிங்கம் - எஸ்.ராமகிருஷ்ணன் - நாஞ்சில் நாடன் என நீள்கிறது. புத்தகச் சந்தையில் குறிப்பிட்ட பெயர்களைக் கண்டால், நீரில் துள்ளும்
மீனைப் பாய்ந்து கவ்வும் கொக்கினைப்போல கையில் எடுப்பதுண்டு. வாங்கும்
வேகம் வாசிப்பதில் இருப்பதில்லை.

"மோகித்து ஒருமுறை சுகித்தபின்
முகம் திருப்பிக் கடக்கிற
நெஞ்சின் அதிர்வை நினைவுறுத்துகின்றன
கட்டிலில் காத்திருக்கும் புத்தகங்கள்"

என்ற வரிகளுக்கிணங்க புத்தகங்கள் ஆண்டாண்டுகளாகக் காத்திருக்கின்றன. அவை
தூண்டும் குற்றவுணர்வோ அபரிமிதமானது. ஆனாலும், அவற்றை இழக்கவும் மனம்
ஒப்புவதில்லை. என்றோ வரப்போகும் ஓய்விற்காக வாசிப்பினை
ஒத்திப்போட்டுக்கொண்டிருப்பதே நீள்கிறது. நம் உள்மனசுக்குத் தெரியும்@
வாசிக்க, எழுத முடியாமைக்கான காரணங்களைச் சிருஷ்டிக்கும் தந்திரங்கள்.
வீட்டின் எல்லா அறைகளிலும், அலமாரியிலும், ஆரம்பித்து முடிக்க முடியாமல்
மூலை மடித்த புத்தகங்கள் நூற்றுக்கு மேலுண்டு. புதுப் புத்தகங்களுக்கென
ஒரு வாசனை உண்டு. காகித வாசனையோ… மை வாசனையோ… பிரித்தவுடன் மண்மணம் போல் நாசிக்குள் மணம்பரவும். முதலில் இடையிடையே பிரித்துப் படித்தபின்தான்
முழுவாசிப்பிற்கென அமர்வது. முன்னுரைகளை முதலில் கண்ணெடுத்தும்
பார்ப்பதில்லை. 'இந்த மலர் இப்படித்தான் மணக்கும்'என்று மூன்றாமவர்
சொல்வதைப் போலொரு உணர்வு. நாமே நுகர்வதே நல்லது. 'நாவல்களென்ன
கிரந்தத்திலா எழுதப்பட்டிருக்கின்றன முன்னுரை படித்து உள்நுழைய?' என்பது
மேதாவிகளுக்கு உவப்பளிக்கத் தவறலாம். முன்னுரையே எப்போதும் என்வரையில்
பின்னுரையாயிருந்திருக்கிறது. நாமொரு பக்கம் வாசிக்க நமக்குள்ளிருக்கும்
'சட்டாம்பிள்ளை'யும் தன் வேலையைத் தொடங்கிவிடும். தர்க்கிக்குமொரு குரல்
கண்களின் கூடக் கூடப் போய்க்கொண்டிருக்கும். யார் வெல்வது என்பதைப்
புத்தகத்தினதும் வாசகனதும் தரமே தீர்மானிக்கின்றது. முன்முடிவில்
உறுதியாயிருக்கும் குரலின் நச்சரிப்பு தாங்காமல் மூடிவைத்து
எழுந்ததுமுண்டு. குரலை 'சும்மா கிட நாயே'என அதட்டி தன்னோடு கூட்டிப்போன
புத்தகங்கள் நிறையவுண்டு.

எனதுடமை எனதுடமை என உறவு, நகை, பொருளை மட்டும் இறுக்கிக்கொள்வதில்லை.
புத்தகங்களும் அதில் அடக்கம். இரவல் கொடுப்பது -அதிலும் புத்தகங்களை
இரவல் கொடுப்பது இழப்பதற்கு ஈடான துக்கமாகத்தானிருந்தது. 'நீங்கள் அறிவை
மறுக்கிறீர்கள்'என்றொரு நண்பர் சொன்னதைக் கேட்டபிறகு யார் கேட்டாலும்
எழுதி வைத்துக்கொண்டு தூக்கிக்கொடுத்து விடுவதே வழக்கம். என்றாலும்
திரும்பி வருமா என்ற பதைப்பையும் சேர்த்தே கொடுக்கிறேன். பிள்ளையை
சிறுவர் காப்பகத்தில் விட்டுக் கையுதறி வேலைக்கு ஓடும் தாயின்
மனமாயிருக்கலாம் அது.

நிச்சய இருப்பு மறுக்கப்பட்டலையும் எங்களைப்போன்றவர்களுக்கு புத்தக
சேகரிப்பும் புலிப்பால்தான். ரொறன்ரோவின் நிலக்கீழ் அறையொன்றில் குளிருள்
நடுங்கியபடி இன்னமும் காத்திருக்கின்றன என்னுடைய புத்தகங்கள். இன்னுஞ்
சில ஈழத்தில் பூட்டப்பட்ட தூசிபடிந்த அறையொன்றின் அலமாரியுள்
சிறையுண்டிருக்கின்றன. கடவுச்சீட்டின் பெரும்பாலான பக்கங்களை
நிறைத்திருக்கும் இந்திய விசா இனிவருங்காலம் மறுக்கப்படில், இத்தனை
புத்தகங்களையும் எங்கு, எப்படிக் காவிச்செல்வது என்பதே தலையுடைக்கும்
இப்போதைய தலையாய கேள்வி. ஒத்திவைக்கப்பட்டிருக்கும் வாசிப்பு ஒருக்காலும்
நிறைவேறாமற் போகவும் சாத்தியங்களுள்ளனதாம்.

உயிரின் ஒரு நுனியை இவ்வுலகிலிருந்து அறுத்துவிட்டுப் போகமுடியாமல்
அங்குமிங்குமாக ஊசலாடிச் சேடமிழுத்தபடி கிடக்கும் வயோதிபர்கள் சிலரின்
வாயில் பொன்னைக் கரைத்தூற்றி 'போ'வெனச் சொல்வதுண்டாம். சிலருக்கு மண்ணே
கடைசிச் சொட்டாம். அவ்வாறு நேரின், என்னைப் போன்றோர்க்கு புத்தகம்
பொசுக்கிய சாம்பல் கரைத்தூற்றாது போகாது உயிர்க்காற்று.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - இளவஞ்சி - 7

எனக்கு வராத காதல் கடிதம்
- இளவஞ்சி


உங்களுக்கு ரெட்டைஜடை குமுதாவை தெரியுமா? என்னது தெரியாதா? அதானே! அதெப்படி உங்களுக்கு தெரிந்திருக்கமுடியும்? அவதான் என்னோடு +1 படிச்சவளாச்சே! (நறநறப்பவர்களுக்கு, எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியாததால இப்படி.. ஹிஹி ). ஒல்லியா, முகம் மட்டும் பூசின்னாப்படி, கொஞ்சம் மாநிறத்துக்கும் மேல, நடுவகிடு எடுத்து எப்பவும் ரெட்டை ஜடையோடவும், அதோட முனைல சிவப்புலயோ பச்சைலயோ ஒரு ரிப்பனோடவும், ஒரு சைடுல இருந்து பார்த்தா கோபிகா சாயல்ல இருப்பான்னு வச்சிக்கங்களேன்! இப்படி இல்லைனா நான் ஏன் இவளை பார்த்திருக்கபோறேன்?! எங்க 11C தமிழ்மீடியம் வகுப்புலயே இவதான் கொஞ்சம் பாக்கறமாதிரி இருப்பா! அவபேரு R.குமுதான்னாலும் நாங்க அவளை ரெட்டைஜடை குமுதான்னுதான் சொல்லுவோம். அந்த காலத்துல சைட் அடிக்கறதுன்னா ஒரு பொண்ணைபார்த்து ஓரு கண்ணைமட்டும் மூடிக்காட்டறதுன்னு நம்பிய அரைவேக்காட்டுப்பய நான். அதுனால இதுக்குமேல அவளை வர்ணிக்கற அளவுக்கு அன்றைக்கு அவளை கலைநோக்கோடு பார்த்ததில்லை. ஆனா ஒரு ஈர்ப்பான கவர்ச்சி அவமேல இருந்ததுங்க. இந்த வயசுல பொண்ணுங்க ஒரு மாதிரி தினுசா புரிந்தும் புரியாத அழகோடத்தான் இருப்பாங்க போல. பருவம் வந்தா பன்னிகுட்டியும் பத்துபைசா பெறும் சும்மாவா சொன்னாங்க? ஆனா இந்த விடலைபருவத்துல பசங்களை பார்க்கசகியாது. நொள்ளையும் நோஞ்சானுமா மொகமெல்லாம் ஒருமாதிரி ஒடுங்கி திருதிருனு அலையற கண்களோட, பருக்கள் எட்டிப்பார்க்கும் கன்னங்களோட, மொசைக் தரைல கரித்துணிய தேய்ச்சாப்புல அரைப்பரவலா மீசையோட கன்றாவியா இருக்கும். சந்தேகம் இருந்தா உங்க பழய போட்டோவ எடுத்துப்பாருங்களேன்!


வகுப்புல நாந்தான் லீடர்னாலும் அதையும் மிஞ்சி ஒரு கெத்து எனக்கு இருந்ததென்றால் அது குமுதா எங்க வீட்டுல இருந்து 6 வீடு தள்ளி இருந்ததாலதான். எனக்கு இருக்கற ஆளுமைத்திறனுக்கும் உடம்புக்கும் வாங்குன மார்க்குக்கும் நான் எப்படி லீடர் ஆனேன்னுதானே கேக்கறீங்க? அது ஒரு விபத்துங்க. எப்பவும் நான் 10வதுல லீடரா இருந்த செந்தில்குமார் கிட்டதான் உட்காருவேன். கறி தின்னே வளத்த உடம்பு அவனுது. வாரத்துல 4 நாளைக்கு அவன் டிபன்பாக்சுல கோழிவருவல் இருக்கும். மேலே நான் சொன்ன பசங்களோட சமுத்திரிகாலச்சணங்களில் இருந்து அவன் ரொம்பவும் மாறுபட்டவனில்லைனாலும் ஆளு சும்மா கருப்பு தேக்கு கட்டைல செஞ்ச அலமாரி மாதிரி இருப்பான். எனக்குத்தான் படம்போட ஒரு திறமையும் இல்லாததால ஒரு அள்ளக்கைமாதிரியே அவனோடதிரிவேன். +1 வந்தப்பறம் வாத்தியார் இந்த வருசத்துக்கு யாரு புதுலீடர்னு கேட்டப்ப என்சட்டைய கொத்தாபுடிச்சி தூக்கிவிட்டுட்டான். வாத்தியார் உட்பட எல்லார் முகத்துலயும் லயன்கிங் ரோல்ல ஒரு கொரங்கு நடிக்க வந்தாப்புல ஒரு அதிர்ச்சி! வாத்தியார் நெஜமாவே நீயாடா லீடரா இருக்கப்போறன்னு கேக்க நான் பயத்துல பேந்த பேந்த முழிக்க, அவர் ஒரு நிமிசம் யோசிச்சிட்டு சரி இந்த வேலையாவது ஒழுங்காபாருன்னு விட்டுட்டார். மொத்த வகுப்புக்கும் குசுகுசுன்னு சிரிப்புதாங்கல. என் லீடர் பொழப்பும் அவங்க சிரிக்கரமாதிரிதான் இருந்ததுன்னுவைங்களேன். ஒருத்தருக்கும் என்னைகண்டா பயம் கிடையாது. அந்த காலத்துல "பதவிய வச்சி ஏதாவது வித்தை காட்டுன... வெட்டிடுவேன்!" அப்படின்னு ஒரு ஃபேமசான மக்கள் என் பக்கம் படத்துல சத்தியராஜ் சொல்லற வசனம் இருந்தது. வகுப்புல வாத்தியார் இல்லாதபோது பேசறவங்க பேர எழுதிவச்சாலும் இந்த வசனத்தை சொல்லியே மெரட்டுவாங்க. ஏதோ செந்தில் துணைலதான் ஒப்பேத்தி போய்கிட்டு இருந்தது.

படிச்சது என்னவோ +1 ன்னாலும் அந்தகாலத்துல இப்ப இருக்கற பசங்க மாதிரி 24மணி நேரமும் படிப்பு படிப்புன்னு சுத்துனது கிடையாது. முடியலைங்கறது வேறவிசயம்!. லீவுநாள்ள கிரிக்கெட்தான் தூள்பரக்கும். காலைல 9 மணிக்கு ரப்பர்பால் பெட்மேட்ச் போட்டா சயந்தரம் 7 மணி வரைக்கும் 3 மேச்சாவது நடக்கும். செந்தில் வேற ஏரியான்னாலும் மேட்ச் நடக்கும் போதெல்லாம் எங்க ஏரியால தான் இருப்பான். மத்தியானம் எங்க வீட்டுலயே சாப்பிட்டுட்டு திரும்பவும் வெளையாட போயிடுவோம். எங்க தெரு தள்ளி ரயில்வே ட்ராக்கை ஒட்டினாப்புல இருந்த பீக்காடுதான் எங்க கிரவுண்டு. இந்த கிரவுண்டை ஒட்டினாப்புல போற ரோடுலதான் எங்க கணக்கு வாத்தியார் வீடு இருந்தது. எங்க தெருவுல இருந்து வாத்தியார் வீட்டுக்கு டியுசன் படிக்க போகனும்னா இந்த கிரவுண்டை ஒட்டிய ரோட்டுலதான் போகனும். நம்ப குமுதா வகுப்புல முதல் 5 ரேங்க்குக்குள்ள எடுத்தாலும் கணக்குக்கு மட்டும் டியூசன் போனா. எனக்குத்தான் வகுப்புலயே எல்லா பாடங்களும் படிச்சி கிழிச்சுறதுனால டியூசன் எல்லாம் போனதில்லை. எல்லாம் +2ல போய்க்கிலாம்னு வீட்டுலயும் சொல்லீட்டாங்க. தினமும் சாயந்தரம் நாங்க விளைய்யடும்போது குமுதா அந்த ரோட்டுல ஒரு ஆறு மணிக்கா டியூசன் போவா. பசங்கெல்லாம் ஒருமாதிரி அமைதியாகி யாரும் பாக்காதமாதிரி அவளை பார்த்தபடி அவள் வீதிமுனையை தாண்டறவரைக்கும் ஒரு நாடகம் நடிப்பானுங்க. அடுத்தவன் பாக்கறது தெரிஞ்சிட்டா ஒரு மாதிரி வழிவானுங்க. சிலநாள் பேச்சுவாக்குல அவளைபத்தி என்கிட்ட விசாரிப்பானுங்க. அப்பெல்லாம் ஒரு பொண்ணைப்பத்தி பேசறதே ஒரு இனம் புரியாத கிக்கா இருக்கும். நானும் அவளைப்பத்தி எனக்கு தெரிஞ்சதையெல்லாம் ஒரே பீலாவா விட்டு என் இமேஜை ஏத்திக்குவேன்.

இப்பதான் பசங்க பொண்ணுங்க எல்லாம் ஒண்னுமண்னா பழகறாங்க. எங்க காலத்துல சும்மா ரெண்டு வார்த்தை பேசுனாலே பெரிய விசயம். அந்த ரெண்டு வார்த்தை பேசரதுக்குள்ளயே பசங்களுக்கு நாக்கு தட்டிடும். அதுக்கே புள்ளைங்க கெக்கேபிக்கேன்னு சிரிப்பாளுங்க. இந்த மேட்டரும் வாத்தியாருக்கு தெரிஞ்சா அவ்வளவுதான். அவருக்கு அடிச்சும் நமக்கு அடிவாங்கியுமே கை பழுத்துரும். இந்த நேரத்துலதான் செந்தில் அந்த வேலைய ஆரம்பிச்சான். வகுப்புல அப்பப்ப யாரும் பாக்காதப்ப குமுதாவ பார்த்துக்கிட்டே இருப்பான். இண்டர்வெல்ல தண்ணி குடிக்க போகும்போதும், மத்தியானம் டிபன்பாக்ஸ் கழுவும்போதும் அவ பின்னாடியே போய் சிரிக்க ஆரம்பிச்சான். இதை கூட இருந்து பாக்க ஒரே வயித்தெரிச்சலா இருந்தது எனக்கு. அவ இவனை பாத்தாளா இல்லை சிரிச்சாளானேன்னே எனக்கு புரியலை. ஆனா அவ இவனை கண்டுக்காதமாதிரிதான் இருந்தது. இருந்தாலும் செந்தில் இப்படி செய்ய ஆரம்பிச்சதை என்னால தாங்கிக்க முடியலை. இவன் இப்படி செய்யறதனால பசங்க முன்னைப்போல அவளைப்பத்தி என்கிட்ட கேக்கறதுகொறைஞ்சதும் என் பொறாமைக்கு காரணமா இருந்திருக்கலாம். தினமும் சாயந்தரம் கிரிக்கெட் விளையாடும்போதும் அவ டியூசன் போகும்போது பின்னாலேயே போயிட்டு திரும்ப வருவான். டியூசன் முடிஞ்சி வர்றவரைக்கும் இருட்டுல கிரவுண்டுல இருப்பான். அப்படியே அவகூடவே பின்னால எங்க வீட்டுவரைக்கும் வந்துட்டு அவன் வீட்டுக்கு போயிடுவான். இதைப்பாத்து காதெல்லாம் பொகையா சுத்திகிட்டு இருந்த நான் மெல்ல அவங்க அப்பா பத்தி அவன்கிட்ட சொல்லி அவனை பயமுறுத்த ஆரம்பிச்சேன். ஆனா அவன் அதுக்கெல்லாம் மசியறமாதிரி தெரியலை.

ஒருநாள் இப்படிதாங்க நாங்க விளையாட்டு முடிச்சு வீட்டுக்கு வரவும் செந்தில் குமுதா பின்னாடியே டியூசன்மாஸ்டர் வீட்டு வரைக்கும் போகவும் இருக்க எதிர்தாப்புல குமுதாவோட அப்பா வந்துகிட்டு இருந்தார். எனக்கு என்ன தோணுச்சோ படக்குன்னு அவரை நிறுத்தி, "சார், குமுதாவ யாரோ ஒருபையன் தெனமும் டியூசன்வரைக்கும் பாலோ பன்னறான்"னு பத்தவச்சிட்டேன்! அவர் முகமெல்லாம் மாறி ஒடனே ஸ்கூட்டற திருப்பிகிட்டு அந்தவழியா போனார். எனக்கு உடம்பெல்லாம் படபடங்குது. நெஞ்சு அடிச்சுக்குது. என்ன நடக்குமோன்ற அந்த பயத்துலயும் அவனை மாட்டிவிட்டுட்டமேன்ற இனம்புரியாத ஒரு இன்பம் எனக்குள்ள. தாங்கமுடியாம ஒரு 5 நிமிசம் கழிச்சி என்சைக்கிளை எடுத்துகிட்டு அங்க போனா கிரவுண்டை ஒட்டிபோற ரோட்டுமுக்குல சின்ன கூட்டம். குமுதா ஒரு ஓரமா தலையகுனிஞ்சிகிட்டு பயத்தோட தேம்பி தேம்பி அழுதுகிட்டு நிக்கறா. அவங்கப்பா கைல ஒரு பேப்பர வச்சிகிட்டு செந்தில் சட்டைய புடிச்சு வச்சி கன்னத்துலயும் முதுகுலயும் அறைஞ்சிக்கிட்டு இருந்தார். சுத்திநிக்கறவங்க "இந்த வயசுல லெட்டர் குடுக்கறான் பாருங்க.. நல்லா போடுங்க சார்"னு ஏத்திவிடுறாங்க. செந்தில பாக்கவே பாவமா இருந்தது. நான் ஒன்னும் பேசாம அப்படியே திரும்பி வீட்டுக்கு வந்துட்டேன். விசயம் எங்க வீட்டு வரைக்கும் வந்து எனக்கும் இந்த மாதிரி பையன்கூடவா சேருவேன்னு ரெண்டு விழுந்தது. அன்னைக்கு நைட்டு எனக்கு தூக்கமே இல்லை. அதுக்கு அடுத்தநாள் அவனை ஸ்கூல்ல அவன் அப்பாவோட பார்த்ததுதான் கடைசி. குமுதாவோட அப்பா ஸ்கூலுக்கு வந்து ஹெட்மாஸ்டர் வரைக்கும் விசயத்தை கொண்டுபோய் கையபுடிச்சி இழுத்ததா ஊதி பெருசுபண்ணி அவனுக்கு TC குடுத்து அனுப்பிச்சிட்டாங்க. பிரேயர்ல வேற இதை சொல்லி அத்தனைபேருக்கும் எச்சரிக்கை விட்டாரு HM. அதுக்கு அப்பறம் அவன் திருப்பூர்ல Polytechnic Civil சேர்ந்துட்டதா தெரியவந்துச்சி.

ஒரு அஞ்சாறு வருவம் போயிருக்குங்க. BE படிச்சிட்டு வேலைதேடி சென்னை வந்து கேம்பஸ்ல TCSல சேர்ந்த ஃபிரண்டு கூட திருவல்லிக்கேணி மேன்சன்ல இருந்தேன். ஞாயித்துகிழமை மதியம் 4 மணிக்கா காலேஜ்ல படிச்சவனுங்க எல்லாம் மெரீனா பீச்சுல பாத்துக்கறது வழக்கம். Walkin interview, apptitude testனு கெடச்ச தகவல்களை பீச்சுல ஃபிகர் பார்த்த நேரம்போக பரிமாறிக்குவோம். திடீர்னு முதுகுல பளார்னு ஒரு அடி விழுந்தது. பயந்துபோய் திரும்பி பார்த்தா ஓங்குதாங்க கருவேல மரம் மாதிரி அதே வெள்ளைப்பற்கள் ஈறுவரைக்கும் தெரிய சிரித்தபடி செந்தில்! எனக்கு ஒரு நிமிசம் அப்படியே ஆடிப்போயிட்டது. அப்பறமா அவன்கூட போய் பீச்சுலயே உக்கார்ந்து என்கதைய சொல்லி அவன் கதைய கேட்டதுல அவன் Civil diploma முடிச்சி L&Tல சைட் இஞ்சினியரா இருக்கறதும், SK மேன்சன்ல இருக்கறதும் தெரிஞ்சது. அம்மா அப்பா பத்தியெல்லாம் ரொம்ப விசாரிச்சான். எனக்கு சீக்கிரம் வேலை கிடைச்சுடும்னும் நம்பிக்கையா சொன்னான். கற்பகம் மெஸ்சுல டோக்கன் மீல்ஸ் சாப்டுட்டு முக்கு கடைல பாதாம் பால் குடிச்சிட்டு அவன் ரூமுக்கு போனோம். வாச்மேன் கிட்ட கெஸ்ட் என்ட்ரி போட்டுட்டு அன்னைக்கு அவன்கூடவே இருக்கனும்னு கூட்டிகிட்டு வந்துட்டான். எதையெதையோ பேசி கடைசில நான் இதுவரைக்கும் பேசக்கூடாதுன்னு நினைச்ச அந்த விசயம் வந்தது. அன்னைக்கு அடிவாங்குனதுக்கு அப்பறம் நான் அவன்கூட பேசாம போயிட்டத பத்தி வருத்ததோட சிரிச்சிகிட்டே சொன்னான். குமுதா டாக்டருக்கு படிக்கறதையும் என்கிட்ட கேட்டு தெரிஞ்சிகிட்டான். "உன்கிட்ட ஒன்னு காட்டனும்டா மாப்ள"ன்னு கட்டிலுக்கு அடியில இருந்து ஒரு சூட்கேச இழுத்து அதுல இருந்து ஒரு பெரிய காக்கி கவர எடுத்தான். அது புல்லா அவன் சேர்த்து வச்சிருந்த ஆட்டோகிராப் புக்கும், வாழ்த்து அட்டைகளும் சின்ன சின்ன கிப்ட்களுமா இருந்துச்சு. அதுல இருந்து ஒரு மஞ்சள் கலர் பேப்பர்ல எழுதுன லெட்டரை தேடி எடுத்து சிரிச்சிக்கிட்டே படிக்க சொன்னான்.

"Love is GOD. God is Love.

Dear செந்தில்,

Many more kisses. காலையில் உன்னை ப்ரேயரில் பார்த்துபோது நீ என்னை பார்த்தும் பார்க்காததுமாதிரி போனது மனசுக்கு மிகவும் வருத்தமாகஇருந்தது. ஆனால் நீ சயின்ஸ் க்ளாஸ்போது திரும்பி என்னைபாத்து சிரிச்சது மிகவும் சந்தோசமாக இருந்தது, நன்றிகள் பல. எப்பவும் நீ இதேபோல் சந்தோசமாக சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும். நான் உன்னை என் உயிரினும் மேலாக காதலிக்கிறேன். நீயும் என்னை உன் உயிர் உள்ளவரை என்னை மட்டுமே காதலிக்கவேண்டும். எனக்காக நீ டியூசன்மாஸ்டர் வீட்டுவரைக்கும் வருவது எனக்கு ஒரு God's gift. உனக்கு கஸ்டம்தான் என்றாலும் I'm very very happy. இருந்தாலும் யாராவது பார்த்துருவாங்களோன்னு பயமா இருக்கு. இனிமேல் நீ வரவேண்டாம். நாம் ஸ்கூலிலேயே மதியம் வகுப்பில் letter கொடுத்துக்கொள்ளளாம். மற்றவை நாளை கடிதத்தில். Tons of Kisses.

Ever yours,

S. Kumutha"

ஏனோ எனக்கு கண்ணுல தண்ணி தழும்பிருச்சுங்க. அவனுக்கு தெரியாம தொடச்சுக்கிட்டேன். ஒரு ரெண்டு நிமிசம் அந்த லெட்டரையே பார்த்துகிட்டிருந்தவன் என்னநினைச்சானோ சிரிச்சுகிட்டே கிழிச்சு கசக்கி மூலைல எறிஞ்சிட்டான். அன்னைக்கு நைட்டும் எனக்கு தூக்கமே வரலைங்க.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - இளவஞ்சி - 6

சுய மதிப்பீடுகள்...
- இளவஞ்சி


நீங்க என்னைக்காவது, பிடிக்காத ஒரு இடத்திற்கு கூப்பிட்டுட்டாங்களேன்னு தவிர்க்க முடியாம வேண்டா வெறுப்பா போயிட்டு, வந்துட்டமேன்னு மூஞ்சை தூக்கி வைச்சுக்கிட்டு மத்தவங்களையும் உங்களையும் ஒரே நேரத்துல படுத்திக்கிட்டது உண்டா? இல்லைன்னா உங்க மனைவி நீங்க செய்யற ஒரு காரியத்தை தப்பா செய்யறதை கண்டுபிடிச்சிட்டாலோ இல்லை இதைவிட இன்னும் நல்லா இப்படி செய்யலாமேன்னு ஏதாவது அலோசனை தந்தாலோ உடனே குபுக்குன்னு ஒரு எரிச்சல் கிளம்பி வார்த்தைகளாக வெளிப்படுகிறாதா? இதுவும் இல்லைன்னா அலுவலத்திலோ இல்லை வெளியிலோ நீங்கள் அவசரத்தில் இருக்கும் பொழுது காவலாளி உங்கள் பையினை சோதனை செய்தாலோ அல்லது வண்டியினை சரியான இடத்தில் நிறுத்தும்படி கேட்டுக்கொண்டாலோ, "இவன் என்ன என்னை கேக்கறது" என கோவம் வந்ததுண்டா? அட இதுகூட வேண்டாங்க... நண்பன் சொன்னான் மாமா சொன்னாங்கன்னு வீடு வாங்கறதோ இல்லை பாண்டு வாங்கறதோ செஞ்சுட்டு பாதில ஏதாவது பிரச்சனை வந்தா நாளைக்கு நாலு முறை சொன்னவங்களை மனசுக்குள்ள திட்டு திட்டுன்னு திட்டி அவங்களுக்கு அடிக்கடி விக்கல் வரவைக்கற டைப்பா நீங்க? இதுவும் இல்லையா? அப்படின்னா அலுவலகத்தில் ஒரு சரியான வாய்ப்பு கிடைக்கும்போது அதை திறமையின்மையினாலோ இல்லை முடியுமா என்ற பயத்தினாலோ இல்லை சோம்பேறித்தனத்தினாலோ செய்யாமல் அடுத்தவனுக்கு தள்ளி விட்டுவிட்டு அவன் முட்டிமோதி அதை செய்து முடித்து பாராட்டுகளை பெறும்போது, அதிலிருக்கும் சின்னச்சின்ன குறைகளை நொட்டைநொள்ளை சொல்லிக்கொண்டு "இதை விட நான் சூப்பரா செய்வேன்!" என்று டீ குடிக்கும்போதோ இல்லை தம்மடிக்க போகும்போதோ இயலாமையை வெற்று வார்த்தைகளால் நிரப்பி வெறுப்பை பரப்புபவரா?

என்ன? இன்னைக்கு இந்த கருத்து கந்தசாமி எலச்சன் பீவருல மைக்கு இல்லாமயே மோகனை மிஞ்சற அளவுக்கு பாடறானேன்னு யோசிக்காதிங்க! இந்த கேள்வியெல்லாம் உங்களை பார்த்து இல்லை! என்னைப்பற்றி சொல்லிக்கொள்ள. மேலே சொன்னது மாதிரி குறைந்தது 100 ஐட்டமாவது என்கிட்ட உண்டு! வாரத்துக்கு ரெண்டாவது அந்த ஃப்ளூ புக்குல இருந்து நான் என் வாழ்க்கைல கடைப்பிடிக்கலைன்னா எனக்கெல்லாம் திடீர்னு காந்தி ஆகிட்ட மாதிரியே ஒரு பயம் வந்துரும்! என்ன செய்யறதுங்க? அப்படியே வளந்துட்டேன் :) என்னைக்கேட்டா இதெல்லாம் சின்ன வயசுல இருந்தே சொல்லிக்குடுத்து வளர்க்கறதுல இருக்கிறது என்பேன்! முதலில் நம்மை, நம் உணர்வுகளை, நம் தேவைகளை, நம் சூழ்நிலைகளை சரியாகச் சொல்லித்தர பெரியவங்க வேணும். தெரிந்துகொண்ட பின்பு அவைகளை தெளிவாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்ட பின்பு அவைகளை நம் வாழ்க்கை முறைகளோடு ஒன்ற வைக்க வேண்டும். அதன்படி நடக்கும்போது நமக்கு கிடைக்கும் அதிகபட்ச நம்பிக்கைகளையும், மகிழ்ச்சியையும், தெளிவையும் உளப்பூர்வமாக உணர வேண்டும். இதற்கு பழகிய பின்பு அதே உரிமைகளையும் உணர்வுகளையும் மற்றவர்களிடத்து கொடுப்பதற்கும் மதிப்பதற்கும் யாரும் சொல்லித்தர தேவையில்லை! இந்த லெவலுக்கு வந்துட்டா நம்மை யாராவது கட்டாயப்படுத்தி அழைக்கும் போது மென்மையாக மறுக்க தெரிந்திருக்கும்! மனைவி சொல்லும் சரியான விசயங்களை ஈகோ இல்லாமல் கலந்துரையாடி ஏற்றுக்கொள்ள முடியும்! காவலாளி தன் கடமையைத்தானே செய்கிறார் என உணர்ந்து முகத்தில் கடுப்புக்கு பதிலாக புன்முறுவலோடு அவருக்கு ஒத்துழைக்க முடியும்! வந்த பிரச்சனையை நண்பனிடனே கலந்துபேசி அதற்கொரு தீர்வு காண முடியும்! அலுவலக கூட்டாளிகளோடு வெளிக்கு சிரிப்பும் உள்ளுக்குள் குரோதமும் பாராட்டாமல் தெரிந்தவற்றை முயன்று செய்யவும் தெரியாதவற்றை பூசி மெழுகாமல் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் முடியும்! ஹ்ம்ம்.. இத்தனை நல்லது இருக்கு நம்ம லெவலையும் மதிப்பையும் நாம தெரிஞ்சுக்கிட்டு வாழ்ந்தா! இருந்தாலும் முடியுதா? சரி விடுங்க.. என்னையெல்லாம் இப்போதைக்கு மாத்த முடியாது! :)

எப்போதெல்லாம் நம் மதிப்பினை நாம் உணரத் தவறுகிறோமோ அப்போதெல்லாம் நாம் பிறர் நம் மீது வைக்கும் நம்பகத்தன்மையையும், அன்பையும், உரிமைகளையும் ஒருசேர இழக்கக்கூடும். இதனை விட பெரிய இழப்பு ஒன்று உண்டு. அது நம் மீதான நம்பகத்தன்மையையும், அன்பையும், உரிமைகளையும், மன உறுதியையும், முனைப்பையும் நாமே இழப்பது! முதல் இழப்பை மற்றவர்களுக்கு தெரியாமல் பணம், பகட்டு, வாய்ஜாலம், மாய்மாலம் என அனைத்து திறமைகளையும் செலுத்தி மறைக்க முடியும். அல்லது மறைத்து விட்டதாக மற்றவர்களையும் நம்மையுமே நம்பவைக்க முடியும்! ஆனால் இரண்டாவது இழப்புக்கு மற்றவர்களுக்கு அது தெரியவே தெரியாத போதும் நம்மிலிருந்து நமக்கே மறைக்க முடியுமா என்ன? முழு பூசணிக்காயை கூட சோத்துல மறைச்சிடலாம்! ஆனா தண்ணிக்குள்ள தண்ணியை ஒளிச்சு வைக்க முடியுமா? அடடா! இளவஞ்சி.. இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு! :)

அந்தக்காலத்துல... (ம்ம்ம்.. இதுவே வயசானதுக்கு ஒரு அறிகுறிங்க.. இன்னொரு வகையிலையும் இதை சிம்பிளா கண்டுபிடிக்கலாம்! "1982ல" அப்படின்னு என்னைக்கு வருசத்த ரெபர் பண்ணி பேச ஆரம்பிக்கறீங்களோ அன்னைல இருந்து நாமே மரியாதையா இளசுங்க வட்டத்துல இருந்து ஒதுங்கிர்றது நல்லது! :) ) அந்தக்காலத்துலனா நான் +2 முடிக்கற பருவங்க. அப்போ எல்லாம் கைல காசு கிடைச்சா எங்களுக்கு இருந்த ரெண்டே செலவு இதுதான். 5.50 காசு இருந்தா தம்ஸ்-அப் வாங்கி அதுல உப்பு போட்டு நுரை பொங்க ஒரே மூச்சுல குடிக்கறது! (எல்லாம் பிற்காலத்துல பீரு குடிக்கறதுக்கு பிராக்டீசு! ) 11.50 காசு இருந்தா விடு ஜீட்டு டூ காந்திபுரம் அப்ஸரா இல்லைன்னா ஹோப்ஸ் மணீஸ். எல்லாம் எங்க அறிவுக்கண்களை திறந்துவிட்ட சாமிபட கொட்டாய் ஒருகலைகழகங்கள்!(மன்மதக்கலை தான்!) அப்போ நாங்க காலேஜ் சேர்ந்த மொத வருசங்க! பெரிய பசங்களா ஆகறதுக்கான அனைத்து முயற்சிகளிலும் முழுமுனைப்பா இருந்த நேரம்! அன்னைக்கு முரளி ஓப்சுல போஸ்டரை பார்த்துட்டு வந்து சொன்னதுல இருந்து கிளம்பிய அரிப்பு உடனே கிரிக்கெட்டை நிப்பாட்டிட்டு எங்க சங்கத்தை கலைச்சுட்டு டீம் காசுல 80 ரூவாய உருவிக்கிட்டு சைக்கிளை ஏறி மெறிச்சு மணீஸ் தியேட்டர்ல போய் மோதி நின்னு வரிசைல டிக்கெட்டுக்கு நிக்கற வரைக்கும் அடங்கலை!

இந்த சரக்குபட தியேட்டருங்க இருக்கு பாருங்க! சமத்துவபுரத்தையும் மிஞ்சின இடம். படம் பார்க்க வர்ற அனைவருக்கும் ஒரே குறிக்கோள்! கொடுத்த காசுக்கு பிட்ட பார்த்தமா போனமான்னு இருக்கனும்! கொரல் மாறாத ஒம்பதாப்பு பொடுசுகள்ல இருந்து எங்கள மாதிரி ரெண்டுங்கெட்டான்கள், டை கட்டுன சேல்ஸ் ரெப்ஸ், அழுக்கு ஜீன்சுல காலெஜு முடிச்சு வேலைக்கு போகாத கிடைக்காத வாலிபங்க, ஏதோ ஆழமான சிந்தனையோடவே படம் ஆரம்பிக்கற வரைக்கும் முகத்தை சொறிந்தபடியும் சூனியத்தை வெறித்தபடியும் இருக்கும் நாற்பதுங்க, தொலைத்த வயதை வாலிபத்தை இளமையை கனவுலகின் மூலம் மீண்டும் மூளையில் பதிய வைக்கும் முயற்சியில் இருக்கும் ரிடயர்டு ஆன பெருசுங்கன்னு அகதிகள் முகாம் மாதிரி ஒரு சுரத்தே இல்லாம இருக்கும்! எங்க டைப் கேசுங்க மட்டும் அடிக்கடி கிளுகிளுன்னும் கெக்கேபிகேன்னும் இளிச்சுக்கிட்டு இருப்போம்! பொடுசுங்க யாராவது பாத்துருவாங்களோன்ற பயத்துலையும், ரெப்புங்க அடுத்து வேலைக்கு போகனுமேன்னும், நாற்பதுங்க படம் முடிஞ்சா வீட்டுகவலைய சுமக்கனும்னும், பெருசுங்க படத்துக்கு அப்பறம் என்ன செய்யறதுன்னு தெரியாத நிலையிலையும் இருந்தாலும் எல்லாருக்கும் படத்துல ஒரு நல்ல பிட்டாவது போஸ்டருல பார்த்தபடி இருக்கனுமேன்ற கவலை ஓரமா வெளிய தெரியாதபடிக்கு ஒட்டிக்கிட்டு இருக்கும்!

அன்னைக்கும் தியேட்டருல ஒரே கூட்டங்க! படம் வந்த 2 நாளுதான் கூட்டம் இருக்கும்! அப்பறம் பார்த்தவங்களே மறுபடி வர்றதோ இல்லை புதுசா வர்றவங்களோ காட்டற பிட்டைப்பொறுத்தும் வெளியே பரவும் வாய்வழி விளம்பரமும் வச்சுத்தான்! ( அப்போ எங்க காலேஜில "சிராக்கோ அவார்டு"ன்னே ஒன்னு இருந்தது! பழனியப்பன் தான் அதை வாங்குனான்! சிராக்கோ வை 27 தடவை மணீஸ், சூலூர், பல்லடம், மேட்டுப்பாளையம்னு படப்பொட்டி எங்க போனாலும் அங்க தொரத்தி தொரத்தி பார்த்து வாங்குனான்!) எட்டரை மணி இட்டர்ஷோவுக்கு ஏழரைக்கெல்லாம் கூட்டம். எல்லாரும் ஒழுங்கா லைன் கட்டித்தான் நின்னோம்! ஒருத்தரை ஒருத்தரு முந்தறதோ முண்டறதோ தள்ளறதோ பெரும்பாலும் இருக்காது! யாருதான் சரக்கு பார்க்க அலையறதை வெளிப்படையா காட்டிக்குவாங்க! சொல்லப்போனா தனிமனித ஒழுக்கம் தமிழ்நாட்டுலயே இந்த மாதிரி தியேட்டர் வரிசைலதான் அதிகம் :) அன்னைக்கு கொஞ்சம் வரிசை கலைஞ்சுதாங்க இருந்தது. மேனேஜரு மாதிரி ஒருத்தன் வந்து எங்க லைனை அப்படியே மேலாக்கா பார்த்தான். டிக்கெட்டு குடுக்கற ரூமுக்குள்ளார போயி ஒரு நீளமான குச்சியை கொண்டுவந்தான். லைனை ஆரம்பத்துல இருந்து குச்சியை ஓங்கியபடி "ஒழுங்கா நேரா நில்லுங்கடா.. உள்ள தள்ளி நில்லுங்கடா"ன்னு அதட்டிய படியே இருந்தான். அவன் வாடா போடான்னு பேசுனது அங்க இருந்த யாருக்குமே பிடிக்கலை! இருந்தாலும் எல்லோரும் உள்ளுக்குள்ளயே மொனங்கிக்கிட்டு தள்ளி நின்னோம். அவன் அப்பறமும் அடங்கறமாதிரி இல்லை. சும்மாவே திரும்பவும் லைன் ஆரம்பத்துல இருந்து அதட்டியபடியே வர ஆரம்பித்தான்.

எங்களுக்குன்னா வெளிய காட்டமுடியாத சரியான கடுப்பு. இருந்தாலும் வாயத் தொறக்கலை! டிக்கெட்டு இல்லை போங்கடானுட்டா!? எங்களுக்குள்ள அவனை திட்டிக்கிட்டு அவனை முறைச்சுக்கிட்டே இருக்கறோம். எங்களை திட்டியபடியே தாண்டி பின்னால் போனான். ஒரு 10 பேரு தள்ளி குள்ளமா ஒல்லியா ஒரு ஆளு மிலிட்டரி கட்டிங் போட்டுக்கிட்டு நீட்டா டக் இன் செஞ்சு வேணும்னே லைனை விட்டு தள்ளி வெளில நிக்கறாப்புல நிட்டுக்கிட்டு இருந்தாரு! "சொல்லறனேலில்லடா.. அறிவில்ல??" என்று கேட்டபடியே நம்ப மாவீரர் குச்சியோட அவன்கிட்ட போனாரு! அவ்வளவுதான் தெரியும்! "ப்பளார்"னு பொறி கலங்கும் ஒரு அறை விழுந்தது! அப்புனதையும் அப்பிட்டு நம்ப மிலிட்டரி கட்டிங் "காசு குடுத்துதானே படம் பார்க்கறோம்! ஓசிலயா காட்டறீங்க? மரியாதையா பேசலைன்னா தொலைச்சிருவேன்!" அப்படின்னார்! பார்த்த அத்தனை பேரும் எதிர்பார்க்காத இந்த அதிர்ச்சில "ங்கே" ன்னு முழிக்கறோம்! அத்தனை நேரம் மெரட்டிக்கிட்டு இருந்த நம்மாளு கண்ணத்தை தடவிக்கிட்டே தலையைக் குத்திக்கிட்டு உள்ள போயிட்டாரு! சட்டென அங்கே ஒன்று நொறுங்கியது. அத்தனை பேர் முகத்திலும் மகிழ்ச்சி! அடடா.. நாம நினைச்சதை நம்ம நாள முடியாததை ஒருத்தரு செஞ்சு அதன் பலனை அனைவருக்கும் வழங்கிட்டாருன்னு! சரக்கு படம் பார்க்க வந்துட்டு கண்ணெதிரே நடக்கற அநியாயத்தை தட்டிக் கேட்கும் வாத்தியாரு படம் பார்த்த திருப்தி! (அன்னைக்கு படத்துல ஒன்னும் தேறலைங்கறது வேற மேட்டரு! ) இப்போ நினைச்சா அவன் திட்டுனதை அத்தனைபேரும் அமைதியா கேட்டுக்கிட்டு இருந்ததுக்கு காரணம் எங்களோட தப்பு செய்ய வந்திருக்கோமேன்ற குற்ற உணர்ச்சியும் அதனை உபயோகப்படுத்திக்க நினைச்சு ஆளுமையை காட்ட முயன்ற அவனது திமிரும்தான். என்ன படமா இருந்தா என்ன? பார்க்கறது எங்க விருப்பம்! காசு குடுத்துதானே பார்கறோம்னு எங்களுக்கும் தோணியிருந்தா நாங்களே கொரலு விட்டிருக்கலாம் :)

இதைமட்டும் படிச்சிட்டு அடடா இளவஞ்சி வாழ்க்கைல தன்னைத்தானே மதிக்கறதை பத்தி கத்துக்கிட்டாப்புலன்னு ப்திவை மூடீறாதீக! வாழ்க்கைல சிலதெல்லாம் சீக்கிரமாவும் ஈசியாவும் கத்துக்கிட்டா அப்பறம் ஆண்டவனுக்கு சீக்கிரமே வாலண்டியரி ரிடயருமெண்ட்டுதான்! :) மேல நடந்ததுகூட ரொம்ப நாளைக்கு எங்களுக்கு "செகுனில உட்டான் பாரு ஒரு அப்பு!" என்று எங்கள் இரவுநேர பொங்கலின்போது சிலாகித்து பேசதான் உபயோகப்பட்டதே தவிர வேறெதற்கும் இல்லை. அதுக்கப்பறம் படிச்சு முடிச்சு வேலைதேடி சென்னை வந்து நிழல்கள் ரவி மாதிரி ஒரு பைலோட ஊரைச்சுத்தி ஒரு வேலை வாங்குனது தான் என் வாழ்க்கைல சொல்லிக்கற மாதிரி நடந்த ஒரே விசயம்! சேப்பாக்கத்துலதான் ஒரு மேன்சனுல தங்கியிருந்தேன். வாரக்கடைசில பசங்களோட சனிக்கிழமை படத்துக்கும் ஞாயித்துகிழமை பீச்சுக்கு போறதும் தான் பொழுதுபோக்கு! இப்படித்தான் ஒரு வாரம் சென்னையிலே படித்து வேலையில் இருக்கும் என் மாமா பையன் போன் செய்து என்னடா செய்யறேன்னு கேட்டான். நானும் என் பிசி ஸெடியூலை டைரில பார்த்து மேற்கண்ட நிகழ்சிநிரலை சொல்ல அவன் "தூ"ன்னு சின்னதா துப்பிட்டு கெளம்பி அவன் வீட்டுக்கு வரச்சொன்னான். எங்க நாலுவிட்ட (அவ்ளோ தூரத்து சொந்தம் ) சொந்தக்காரப்பையன் ஒருத்தன் அப்போ படத்துல ஹீரோவா நடிச்சுக்கிட்டு இருந்தாப்புல. ரெண்டோ இல்லை மூணோதான் முடிச்சிருந்தாரு. இரண்டாம் வரிசை நாயகர்கள கடைசீன்னு சொல்லலாம். அன்னைக்கு நைட்டு அவரை பார்க்கபோகலாம்னு ப்ளான்.

எனக்கு சினிமா ஈர்ப்பான விசயம்னாலும் அன்னைக்கு வரைக்கும் சினிமாக்காரங்களை பார்த்து வாயைப் பிளக்கற புத்தி மட்டும் இருந்தது இல்லை! இருந்தாலும் அன்னைக்கு ஷூட்டிங்னா எப்படி இருக்கும் பார்க்கலாம்னு கெளம்பிட்டோம்! நாங்க அங்க போய் சேர்றதுக்குள்ள ஷூட்டிங் முடிஞ்சு நம்ம ஹீரோ புதுசா வந்த சில புரடியூசருங்ககூட டிஸ்கசனுக்கு நுங்கம்பாக்கத்துல இருக்கற ஒரு ஹோட்டலுக்கு போயிருக்கறதா தகவல் கிடைச்சது. ஹீரோக்கு போன்செஞ்சு கேட்டா நேரா அந்த ஹோட்டலுக்கே வரச்சொல்லிட்டாரு. வண்டிய திருப்பிக்கிட்டு கெளம்புனோம்! என் மாமாபையன் "இன்னைக்கு சரியான வேட்டைடா!" என்றான். எனக்கு ஓன்னும் புரியலை. கோயம்புத்தூருல இருந்து ரெண்டு தொழிலதிபருங்க படம் எடுக்கப்போறதா சொல்லிக்கிட்டு இங்க வந்திருக்கறதா சொன்னான். வருசத்துல சில நாள் இந்த மாதிரி சில லட்சங்களை தூக்கிக்கிட்டு கெளம்பி வருவாங்களாம்.படம் எடுக்கறேன்னு பயாஸ்கோப்பு காட்டறேன்னு ஹோட்டல் ரூம்லயே பழியா கெடந்து ஹீரோயின் புக் செய்யற வரைக்கும் பேசு பேசுன்னு பேசுவாங்களாம். அப்பறம் ஹீரோயின் கூட 'டிஸ்கசன்" முடிஞ்சதும் கெளம்பீருவாங்களாம். அதுக்குள்ள பணம் தண்ணியா இறையுமாம். கூட இருக்கற அள்ளக்கைக கறக்கற வரைக்கும் கறந்துருவாங்கன்னான். இதெல்லாம் ஹீரோக்கும் தெரியும்னாலும் அவனுங்க நெஜமாகவே படம் எடுத்தா வாய்ப்பை விட்டுடக்கூடாதுன்னு போயிருக்காப்புலன்னான். இதையெல்லாம் கேட்டு முடிக்கறதுக்குள்ளாக எனக்குள் ஒரு மாய உலகம் உருவாகி அதில் எனது வலது காலை வைத்து நடக்க ஆரம்பித்திருந்தேன்! அது ஒரு ஸ்டார் ஹோட்டல் இல்லைன்னாலும் கொஞ்சம் டீசண்ட்டான பெரிய ஹோட்டல். வண்டிய நிறுத்திட்டு மேல போனா ஒரு பெரிய அறையை வாடகைக்கு எடுத்து ரூமுக்குள்ளார நம்ப ஹீரோ, அந்த நாற்பதை கடந்த இரண்டு தொழிலதிபருங்க, மற்றும் வேற 3 பேரு இருந்தாங்க. ஹீரோ நம்பளை பார்த்ததும் மாமாபையன் "இவனை ஞாபகமிருக்கா? அன்னைக்கு ஒரு கல்யாணத்துல பார்த்தோமே"ன்னு அறிமுகப்படுத்தினான். ஹீரோவும் "அதுக்கென்ன.. இவரைத்தெரியாமையா?" அப்படின்னு கையைப்பிடிச்சுக்கிட்டாரு.

சடார்னு ஒரு நெருக்கம் படர்ந்தது. திரைல பார்க்கற ஒருத்தரு நம்ப கையை பிடிச்சு தெரியும்கறாருன்னு ஒரு ஆச்சரியம்! அப்பறம் அவரு அந்த ரெண்டு கோவைமக்களையும் இன்னொருத்தரை 2 படம் டைரக்டு செய்த டைரக்டருன்னும் மத்த ரெண்டு பேரு அஸிஸ்டண்ட் டைரக்டருன்னும் அறிமுகப்படுத்தினாரு. அவ்வளவுதான். அப்படியே ஜமால ஐக்கியமாகிட்டேன்! பாட்டில்கள் திறக்கப்பட்டன. தீனிகள் வந்து இறங்கின. சிகரெட்டு பாக்கெட்டுகள் காலியாகின. (நீங்க ஹாட்டு சாப்பிடுங்க தம்பி...! வேணாங்க எனக்கு அல்சரு.. பீர் மட்டும் போதும்! ) பேச்சு மட்டும் நிக்காம போய்க்கிட்டே இருக்கு... அந்த டைரக்டரு.. இந்த புரடியூசரு.. அந்த நடிகை.. இந்த நடிகன்னு பலபேரோட தலைகள் உருளுது. பலரோட இரவு வாழ்க்கைகள், வேட்கைகள், தினவுகள் என நடந்தது, நடந்ததாக சொல்லப்ப்டுவது, கேட்டது, பார்த்தது என அந்தரங்களால் மூழ்கடிக்கப்பட்டது அந்த அறை! பத்திரிக்கைல கிசுகிசு படிச்சே கிளுகிளுப்படையற என்னைப் போன்றவனுக்கு அன்றைக்கு பெரிய கிசுகிசு கிடங்குல விழுந்தாப்புல இருந்தது. மாய உலகின் உள்ளிழுக்கும் சேற்றில் வேகமாக மூழ்கிக்கொண்டிருந்தேன். நடுவுல சரியா 10 மணிக்கு அந்த கோவைக்காரருல ஒருத்தரு வீட்டுக்கு போன் போட்டு மனைவி குழந்தைகளோட பேசுனாரு. உலகத்துல எங்க இருந்தாலும் கரக்ட்டா 10 மணிக்கு வீட்டுக்கு பேசிடுவாராம். கதை இப்படியே போச்சுங்க. கோவைக்காரங்க பேச்சு மெதுவா ஹீரோவோட இன்னிக்கு நடிச்ச படத்தோட ஹீரோயின் பத்தி பேச ஆரம்பிச்சாங்க. சரக்கு நிறைய இருந்தாலும் சைடுக்கு ஒன்னும் இல்லை 11 மணியோட ஹோட்டல் மெனு ஃக்ளோஸ். அந்த 12 மணிக்கு "தம்பி.. இங்க பக்கத்துல நுங்கம்பாக்கம் சிக்னல் பக்கத்துல மலையாளி ஹோட்டல்ல ஆம்லேட்டும் சில்லி சிக்கனும் சூப்பரா இருக்கும் வாங்க்கிட்டு வரையா?"னாரு. நான் யோசிக்கவே இல்லை. மாமாபையன் வண்டிய எடுத்துக்கிட்டு சரின்னு கெளம்பிட்டேன்.

அரை மணி நேரத்துல 10 ஆம்லெட்டும் 4 சில்லியும் பார்சல் வாங்கிட்டு நெறைய கதைங்க கேக்காம போயிருவோமேன்னு அவசர அவசரமா ரூமுக்கு ஓடியாந்தேன்! மீண்டும் ஜோதில ஐக்கியம். ரெண்டுமணி வரைக்கும் போச்சுங்க. ஒரு கோவைக்காரருக்கு மப்பு கொஞ்சம் அதிகமாக ஒரு மணிக்கு 2 ஆம்லேட்டு தின்னது ஒத்துக்காம அவசரமா பாத்ரூமுக்கு கொமட்டிக்கிட்டே ஓடுனார்! 5 நிமிசத்துல பாத்ரூம் மொத்தமும் வந்தியெடுத்து நாறடிச்சுட்டாரு. அங்க இருந்த அஸிஸ்ட்டண்டுல ஒருத்தரு ஆரம்பம் முதலே பயங்கரமா கோவைகாரருக்கு பிலிம் காட்டி எப்படியாவது நல்ல பேரு வாங்கி மொத்தமா கரந்துரனும்னு துடியா இருந்தாரு. கோவைக்காரங்க கிரங்கற அளவுக்கு கதைகளை அள்ளி வீசிக்கிட்டு இருந்தாரு. மேட்டரு இப்படி ஆனதும் ரிசப்சனுக்கு போன்போட்டு மேட்டரை சொல்லி ஒடனே ஆள் அனுப்பச்சொன்னாரு. அந்த ரூம் சர்வீஸ் பையன் வர்றதுக்கு 10 நிமிசத்துக்கு மேல ஆயிருச்சு. "சார்.. ரூம் சர்வீஸ்"னு வந்து நின்னான். இந்த அஸிஸ்ட்டெண்டு எடுத்த உடனே "ஏண்டா லேட்டு?"ன்னாரு. அவன் "நைட் டூட்டி நான் ஒருத்தன் தான் சார்" அப்படின்னான். இவரு "சொன்னவொடனே வராம என்னடா சர்வீஸ் பண்ணறீங்க? நாங்க யாரு தெரியுமா?"ன்னு கேட்டுக்கிட்டே அவனுக்கு "ப்பளார்"னு ஒரு அறை விட்டுட்டாரு. அந்த பையன் ரூம்ல நிலமை சரியில்லைன்னும், இதெல்லாம் இங்க சகஜம்னும் புரிஞ்சிக்கிட்டு "சாரி சார்.."னு சொல்லிட்டு அழுத மொகத்தோட பொங்கி வரும் அவமானத்தை மென்னு முழுங்கிக்கிட்டு பாத்ரூம் போய் கழுவ ஆரம்பித்தான். அஸிஸ்ட்டண்ட்டு அதோட நிறுத்தலை! மறுபடியும் ரிசப்சனுக்கு போன் போட்டு "என்னா சர்வீசு பண்ணறீங்க?"ன்னு சண்டை. எனக்குள் ஏதோ தெளிந்த மாதிரி இருந்தது.

அந்த ஹீரோவும், டைரக்டரும் அடுத்தபட வாய்ப்பு கிடைக்காதான்னு இங்க இருக்காங்க. அந்த அள்ளக்கை அஸிஸ்ட்டண்ட்டுங்க எப்படியாவது டைரக்டருகூட ஒட்டிக்கிடனும்னும் ஒரு மாச செலவுக்காவது காசை தேத்திடனும்னும் இங்க இருக்காங்க(அதுல ஒருத்தரு இப்போ பேரு வாங்குன டைரக்டர்...) அந்த கோவைக்காரங்க எப்படியோ செய்யற செலவுக்கு நடிகைகூட "டிஸ்கஷன்" முடியாம போறதில்லைன்னு இங்க இருக்காங்க. அந்த ரூம்-சர்வீஸ் பையன் கூட அவமானத்தை பார்த்தால் அடுத்தவேளை சோத்துக்கு என்ன செய்யறதுன்னு கூட இங்க இருக்கலாம்! நான் என்ன வேண்டி இங்கே இருக்கிறேன்? என் படிப்பு என்ன? என் குடும்பப்பின்னனி என்ன? என் குடும்பத்தாரின் என் மீதான எதிர்பார்ப்பு என்ன? என்ன எதிர்பார்த்து நடிகையுடன் படுப்பதற்காக லட்சங்களுடன் வந்திருக்கும் கனவான்களுக்கு ஆம்லேட்டு வாங்கிக் கொடுத்துக்கொண்டு இங்கே இருக்கிறேன்? வீம்புக்கு அடித்தவனது திமிரை கண்டிக்கவும், வீணாய் அடிபட்டவன் மீது பரிதாபப்படக்கூடவும் திராணியின்றி இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன்? எனக்கு அந்த மணீஸ் தியேட்டரின் மிலிட்டரி கட்டிங் விட்ட அறை ஏனோ ஞாபகத்துக்கு வந்தது. யாருடமும் சொல்லிக்காம மெதுவா ரூமை விட்டு வெளியே வந்து அந்த நேரத்துக்கு ஆட்டோ கிடைக்குமான்னு தேடியபடியே இரண்டு கைகளையும் பாக்கெட்டுல விட்டுக்கொண்டு தலையை குனிந்தபடி என் மேன்சனை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - இளவஞ்சி - 5

பீளமேடு - 641004
- இளவஞ்சி



என்னாங்க இது இப்படி ஒரு அநியாயம் நடக்குது நாட்டுல! கற்பனைத்திருட்டு ஒரு அளவுக்கு இருக்கலாம். அதுக்காக இப்படியா வகைதொகையில்லாம சீனுக்கு சீன் எங்க காலனி மேட்டருல இருந்து சுட்டு படமெடுப்பாய்ங்க? ( மனசாட்சி: டேய்... டேய் இந்தியா முழுசும் சின்னப்பசங்க ஒரே மாதிரிதான் கிரிக்கெட்டு வெளையாடுவாய்ங்க... சும்மா கூவாத.. )

சரி போனாப்போகுது. கிளைமாக்சு கூடவா? நாங்க சேரன் மாநகர் டோரணமெண்டுல செமீஸ் வரைக்கும் உயிரைக் குடுத்து போராடி வந்ததும் அப்பறம் ஃபைனல்சுல டங்குவராரு அந்து அம்மணத்துக்கு ஈக்குவலா சீரழிஞ்சு சின்னாபின்னப்பட்டு வந்ததும் இவிங்களுக்கு எப்படி தெரியும்? 4 ரவுண்டு மேட்சுல மூணாவதே செமீஸ் மேட்ச்னா பார்த்துக்கிடுங்க... ரெண்டு டீமும் எதுத்தெதுத்தாப்புல நின்னு கையெல்லாம் குடுத்து ஜோராத்தான் ஆரம்பிச்சது மேட்சு. அப்பவெல்லாம் சைடுக்கு 20 ஓவரு மேச்சுதான். அவங்க 88ம் நாங்க கடைசி விக்கெட்டுக்கு 84ம். வாழ்க்கைல நான் மொதலும் கடைசியுமா அடிச்ச ( பாரதி காலனி வினாயகரால் அடிக்க வைக்கப்பட்ட.. ) 6 அதுதான். அடிச்சு முடிச்சு ஆரவாரமெல்லாம் முடிஞ்சும் அரை மணி வரைக்கும் கையெல்லாம் நடுங்கிட்டு இருந்தது இன்னும் ஞாபகமிருக்கு!

ம்ம்ம்... அதுக்கப்பறம் பைனல்சு மேட்சுக்கு விதவிதமா பிராக்டீசுன்னு எடுத்து, டைவிங் கேச்செல்லாம் பழகி, தொட்டுவிட்டு ஓடி சிங்கிள்ஸ் எடுக்கறதெல்லாம் நடத்திப் பார்த்து, வெள்ளை வெளேர்னு வைட் அண்ட் வைட்டுமா போயி, பைனல்சுல மொதல்ல பேட்டிங் எடுத்ததும், போன மேட்ச்சு சிக்ஸ்சரை வைச்சே டீமுக்குள்ள அரசியல் செஞ்சு நான் ஓபனிங் எறங்குனதும், மூனாவது பந்துல லெக்சைடு வைடு போன பந்தை அசிங்கமா லெக்ஸ்வீப்பு செய்ய அது அதைவிட அசிங்கமா ரெண்டாவது "ஸ்லிப்பு"ல தேமேன்னு மூக்கு நோட்டிக்கிட்டிருந்தவன் கையில அடைக்கலமாகி அவுட்டானதும் (யோசிச்சுப்பாருங்க என் திறமையை! ஒலகத்துல எவனுமே இந்த மாதிரி அவுட்டு ஆனதா வரலாறு கிடையாது! ), அப்பறமா நாங்க 12 ஓவருக்கு மேல கையில, காலுல, மூஞ்சியில எல்லாம் அடிவாங்கி நின்னும் தாக்குப் புடிக்க முடியாம 36க்கு ஆல் அவுட்டு ஆனதும், அந்த பிக்காரிப்பயக வெரல் நகத்துல கூட அழுக்குப்படாம அஞ்சாவது ஓவருல மேச்சை முடிச்சு கோப்பையை தூக்கிக்கிட்டு போனதுபின்னான துக்கம் இப்ப நினைச்சாலும் தொண்டைய அடைக்குது. எனக்கு என்ன தோணுதுனா.. எங்க டீமுல இருந்த எவனோ ஒரு அல்லக்கை மொத்தக் கதையையும் ஜஸ்ட் ஒரு சிங்கிள் தேங்கா பன்னுக்கு ஆசைப்பட்டு எழுதிக் குடுத்திருந்தாதான் இது சாத்தியம்!

உணர்ச்சி வசப்பட்டு காபிரைட்டு கேசு போடலாம்னு முடிவு செஞ்சு அதுக்கான தகவல்களை திரட்டும்போதுதான் நம்ப P.வாசுவும் சந்திரமுகி கதை அவரோடதுன்னும் அதை ஹிந்தில அவரைக் கேக்காம எடுக்கக் கூடாதுன்னும் கேசு போட்டிருக்கறதா தெரியவந்துச்சு. சரி இது தெரிஞ்சப்பறமும் நாம காப்பிரைட்டு வழக்குன்னு போனா இருக்கற கொஞ்ச நஞ்ச மானமும் மிஞ்சாதுங்கறதாலயும், புது டைரக்டரு வெங்கட்டு நல்லா படமெடுத்திருக்கறதாலயும் மறப்போம்... மன்னிப்போம்!

என்னாதான் அவரு விலாவரியா புட்டுபுட்டு வைச்சிருந்தாலும் எங்க டீமு சட்டதிட்டங்களை அவரால திரைக்கு கொண்டுவர முடியல! ( பின்ன.. அதையெல்லாம் எங்க டீமுக்குள்ள கொண்டு வர்றதுக்கே நாங்க தலையால தண்ணி குடிச்ச காலமது ) ஆகவே, எங்க மட்டையடி சட்ட திட்டங்க போனாப்போடுதுன்னு உங்களே உங்க பார்வைக்கு மட்டும்...

* 23 தப்படிகளுக்கு பிட்ச்சும் ஒன்னரை பேட்டுக்கு கிரீசும் இருக்குமாறு அம்பயரின் முன்னினையில் மட்டுமே அளக்க வேண்டும்.

* செகப்பு விக்கி கார்க் பால் தான் அப்ரூவ்டு அபிசியல் பிராண்ட். பாதி மேச்சுல பந்து விரிசல் விட்டாலும் அதுலயே வெளையாடலாம். சில நேரம் கால்வாசி பேர்ந்துபோனாக்கூட வைச்சு சமாளிக்கலாம். ஆனா பாதியா ஒடைஞ்ச பந்து நிச்சயமா அனுமதிக்கபட மாட்டாது.

* டாஸ் போடறதுக்கு படம் போட்ட காசு கூடாது. ஹெட்டா டெயில்ஸா ன்னு இங்கிலீசுல கேக்கற வாய்ப்பு இருக்கறதால குழப்பமாகி ஆரம்பமே சண்டையில் ஆரம்பிக்காம இருக்க கண்டிப்பா ஒரு சைடு நம்பரும் அடுத்த சைடு சிங்கத்தலையும் இருக்கனும்.

* டாஸ் போடற எடத்துல காப்டனுக்கு மட்டுமே அனுமதி. டாஸ் ஜெயிச்சப்பறம் ஒடனே பேட்டிங்கா பவுலிங்கான்னு முடிவு சொல்லிறக் கூடாது. திரும்ப வந்து டீம் மக்களோட ரெண்டு நிமிசம் விவாதிச்சுத்தான் முடிவை சொல்லனும். அப்பத்தான் ஒரு கெத்தா இருக்கும். கூடவே, நம்மகிட்ட ஏதோ ஒரு சதித்திட்டம் இருக்குன்னும் எதிரணி மெரளும்.

* கையிலோ காலிலோ அடிபட்டா பிச்சுலயே அழுது டீம் மானத்த வாங்கக்கூடாது. அட்ரிட்டெய்டு கேட்டு வாங்கிட்டு வெளிய வந்து வெச்சுக்கலாம் ஒப்பாரிய...


* ஓவருக்கு 3 வைடுதான் போட அனுமதி. மூணு பாலுக்குள்ளயே மூணு வைடும் போட்டுட்டம்னா அது பேபி ஓவராக மாற்றப்படும். இல்லைன்னா அடுத்த ஸ்பெல்லு கிடையாது. பந்து பயங்கறமா ஸ்விங்கு ஆகறதாலதான் வைடு போகுதுங்கற கதையெல்லாம் எடுபடாது! ( எங்க கேப்டனு முரளி கதறக்கதற ஒரு மேட்சுல 14 வைடுகளை அரைமணி நேரமாக ஒரே ஓவரில் போட்டு முடித்த என் தனிப்பட்ட சாதனையின் மூலமாகத்தான் இந்த ரூல்சு கொண்டு வரப்பட்டது என்பதை சொல்லிக்கறது மூலம் என் தனிப்பட்ட ரெக்கார்டுகளை டெண்டுல்கர் போல பீத்திக்கறதில் எனக்கு என்றைக்குமே விருப்பமிருந்தது இல்லையாததால், நான் அதை இங்கே சொல்லப்போவது இல்லை! ) ( வாக்கியத்தை முடிடா வெண்ணெய்! )

* ஒரு வாரத்துல ஒரு தடவைதான் அவுட்டு ஏமாத்த அலவ்டு. அதுக்கு மேல என்ன சண்டை போட்டாலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது! ( From History: க்ளீன் போல்டு ஆகி ஸ்டம்பு நாலடிக்கு அந்தப்பறமா பறந்து விழுந்ததை சில நொடிகள் மவுனமாக பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு அப்பறமா அது காத்தடிச்சுத்தான் விழுந்ததுன்னு முக்காமணிநேரமா போராடி நிரூபிச்சு மறுபடியும் காஜி அடிச்ச எங்க கேப்டன் முரளிக்காகவே கொண்டுவந்த ரூல்ஸ் இது.)

* மேட்சுக்கு ரெண்டு பேரு வீட்டுல இருந்து ஒரு கொடம் தண்ணியும் டம்ளரும் கொண்டுவர்ற வேலைய ஏத்துக்கனும். பயக காட்டுத்தனமா கண்டமேனிக்கு கொடத்துகுள்ள கைய விட்டு தண்ணி அழுக்காச்சுன்னா அதுக்கும் அவங்களே பொறுப்பு.

* ரெண்டு சைடுலயும் ஒரு ஓவருக்கு ஒரு தடவைதான் ஸ்கோர் கேட்க (ஸ்கோர் ப்ளீஸ்ஸ்... )அலவுடு. சும்மாச்சும்மா ஓவ்வொரு பந்துக்கும் ஸ்கோர் கேட்டு எழுதறவனை கொழப்பக்கூடாது.

* டீமுக்கு 11 பேரு வேணுங்கறதெல்லாம் கட்டாயம் கிடையாது. மேச்சுக்கான பேச்சுவார்த்தையின் போது ஏழு பேருக்கு ஏழுன்னு ஒத்துக்கிட்டம்னா அதுக்கப்பறம் மேச்ட் ஆரம்பிச்ச பெறகு ரெண்டு பேரு சொல்லாம கொள்ளாம அப்பீட்டு ஆயிட்டானுங்கன்னா அது அவுங்க பாடு. ஏழுக்கு அஞ்சுபேருன்னே மேட்சு தொடரும். ஒன்மேன் காஜி வேண்டுமா இல்லாங்கறதும் இதைப்பொறுத்தே முடிவெடுக்கப்படும்.

* டீமில் பொதுவிலிருக்கும் கொட்டைகார்டை கண்டிப்பாக அண்ராயருக்கு மேல்வைத்துதான் உபயோகப்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் அண்ராயருக்கு உள்ளே வைச்சு உபயோகப்படுத்தக் கூடாது!

* ரன் அவுட்டுகளில் கனெக்சன் அவுட்டு உண்டா என்பதனை மேட்சுக்கு முன்னதாகவே பேசி முடிவு செய்துக்க வேண்டும். அதே போல கிரீசுக்கு உள்ளே ரீச்சானமா இல்லையா என்பதை பேட்டு செம்மண்ணில் கிழித்த கோட்டைக்கொண்டு நிரூபிக்கும் பொறுப்பு பேட்ஸ்மேனுக்கே உண்டு. இல்லையெனில் பேட்டு Airல் இருந்ததாகவே கருதப்பட்டு அவுட்டு கொடுக்கப்படும்.

* பேட்டுக்கு கிரிப்பாக சைக்கிள் ட்யூப்பு வாங்கி மாட்டுவதும், ஆயில் சீசன் செய்து வைப்பதும் ஓபனிங் பேட்ஸ்மேன்களது பொறுப்பு. மேட்சில் அரைபிளேடுகளுக்கு மேல் ஒடைஞ்ச பேட்டுக நாட் அலவுடு.

* எக்காரணம் கொண்டும் எந்த நிலையிலும் அம்பயரை கெட்ட வார்த்தைகளில் திட்டாமல் கண்ணியம் காக்க வேண்டும். ஏனெனில், அம்பயரும் இதே காட்டுக்கும்பலில் இருந்த வந்த ஆளாகையால் அவரால் அதிகப்பட்சம் 5 நிமிடங்களுக்கு மேல் நடுவுநிலமையா இருக்கமாதிரி நடிக்க முடியாது. ( ஒரு முறை பாதி மேட்சில் LBW கொடுக்க மறுத்த அம்பயர் ஆவரம்பாளையம் வெல்டிங் பட்டரை ஓனர் அன்பர் காத்தமுத்துவைப் பார்த்து "நீயெல்லாம் எப்படியா அம்பயரான? LBWக்கு இங்கிலீசுல என்ன சொல்லு பார்ப்போம்"னு மல்லுக்கு நின்ற, அடுத்த 5வது நிமிடத்தில் அவர் கையில் ஒரே ஒரு ஸ்டம்புடன் தனியாளாக எங்களை கிரிக்கெட்டை உடனடியாக விடுத்து விளையாட்டை 100 மீட்டர் ஓட்டப்பந்தயமாக மாற்றத்தூண்டிய நிகழ்வு பீளமேடு முட்டுசந்து கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்! )

* தவிர்க்க இயலாத காரணங்களால் ஒரே கிரவுண்டில் ஒரே நேரத்தில் 5 மேட்சுகள் நடக்கும்படி அமையும் நேரங்களில் எக்காரணம் கொண்டும் அடுத்தவர் பிச்சுக்கு குறுக்காக ஓடிவந்து பவுலிங் போடும்படி தமது பிச்சுகளை அமைத்துக்கொள்ள கூடாது.

* மேட்சு முடிவில டீம் காசுல எல்லாத்துக்கும் ஒரு டீ அல்லது ரஸ்னா பாக்கெட்டும் கூட தேங்கா பன்னு அல்லது முட்டை பப்ஸ் மட்டுமே அலவ்டு. அதுக்குமேல தீனிக்கு ஆட்டைய போட்டா அது தட் தட் மேன் தட் தட் மணியின் கீழ் வரும்.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - இளவஞ்சி - 4

என்ஃபீல்ட் புல்லட்
- இளவஞ்சி

வாழ்க்கைல நீங்க என்னைக்காவது சொர்க்க ரதத்துல போயிருக்கீங்களா? அட, கடைசியா போறப்ப போகப்போற அந்த ரதம் இல்லைங்க! வாழறப்பவே போய் வந்து அனுபவிக்கற சொர்க்கம். சிலருக்கு பென்ஸ் காராக இருக்கலாம். சிலருக்கு கான்கார்ட் பயணம் வாய்ச்சிருக்கலாம். நம்மூரு கோவை-பெங்களூர் KPN ஸ்லீப்பர் கோச்சாகக்கூட இருக்கலாம். என்னைக் கேட்டீங்கன்னா அதை நான் புல்லட் ஓட்டிய காலங்களாகத்தான் சொல்லுவேன்.

புல்லட்டை ஓட்டக்கூட வேண்டாம்! சும்மா பின்னாடி உட்கார்ந்து போகயிலயே கூட அந்த சொகுசை உணரமுடியும். ஆமாங்க! ரொம்பப் பழசான டிசைன் தான். யானை கட்டி தீனிபோடற வேலைதான். பார்க்க சின்னதா அழகா துறுதுறுன்னு இல்லாம தாட்டியா அங்கங்க புடைப்புகளுடன் ஒரு மாதிரியான தட்டையான டிசைன் கொண்ட வண்டிதான். ஒத்துக்கறேன்! ஆனால் இதையெல்லாம் ஒத்துக்கிட்ட பிறகும் எனக்கு என்னவோ அந்த வண்டி அலாவுதீன் ஒருவித அதீத விருப்பத்துக்கு ஆட்பட்டு ஒரு நாள் பொழுதுபோகாம குறுந்தாடியை சிக்கெடுத்துக்கிட்டு இருந்த பூதத்தை கெளப்பிவிட்டு மாங்குமாங்குன்னு வேலை வாங்கி அவனே அவனுக்குன்னு உருவாக்கிக்கிட்ட ஒரு வாகனம்னும், லைலாவோட ரொமாண்டிக்கா இருக்கற காலங்களில் எல்லாம் பறக்கும் கம்பளத்தை ஒரு ஓரமா தூக்கி கடாசிட்டு பூதம் பார்த்து பொகைவிட புல்லட்டுல டபுள்ஸ் போகறதுக்காக கண்டுபுடிச்ச ஒரு வண்டிங்கறதாத்தான் மனசுல இருக்கு! இல்லை ஒருவேளை புல்லட்டைத்தான் காலப்போக்குல அலாவுதீனின் ரத்தனக்கம்பளமாக ஏத்திவிட்டுட்டாங்களோ என்னவோ!? :)

புல்லட்டு பார்க்கத்தான் பெரிய வண்டியே தவிர ஓட்டறது அத்தனை சுலபங்க. ஒரு வகைல பார்க்கப்போனா யானைய பழக்கற மாதிரிதான். ரெண்டுக்குமே குழந்தை மனசு! மொதல்ல பார்க்கறப்ப கொஞ்சம் மிரட்சியாத்தான் இருக்கும். கொஞ்சமா பழகிட்டு நாம என்ன சொன்னா வண்டி பதிலுக்கு என்ன செய்யும்னு நூல் புடிச்சிட்டா அப்பறம் நாமதான் ராசா. ஸ்டார்ட் செஞ்சமா... அம்பாரிமேல ஒரு கெத்தா ஒக்கார்ந்தமா... இடமும் வலமும் மாதம் மும்மாரி பொழியுதான்னு கித்தாப்பு லுக்கு விட்டமான்னு போய்க்கிட்ட்ட்ட்ட்ட்டே இருக்கலாம். ஸ்டார்ட் செய்யறதுக்குக்கூட முரட்டுத்தனமா எதுவும் சிரமப்பட வேண்டாம்! நீளமான மெட்டல் கீசெய்ன்ல ஒரு சாவியை பாட்டரிக்கும் இன்னொரு சாவியை பெட்ரோல் டாங்க்குக்கு அடியிலும் பொருத்தி, க்ளச்சுக்கு பக்கத்துல இருக்கற சின்ன ஆம்ஸ்மீட்டர் க்ளச்சை லைட்டா அழுத்தி கிக்கரை ஒருமுறை மிதிச்சா "விசுக்"குன்னு ஒரு சவுண்டு கேக்கும். ஆம்ஸ்மீட்டரு 0 காட்டும். அப்பறம் லைட்டா கிக்கரை உதை கூட இல்லை! ஒரு செல்ல மிதி! "தட்தட்தட்.."ங்கற அந்த இன்னிசை ஆரம்பிச்சிரும்.

இப்ப வர்ற புல்லட்டு வண்டிகளுக்கு கியரை லெப்ட் சைடுக்கு மாத்திட்டாங்க. பழைய வண்டிகளுக்கு ரைட் சைடுல இருக்கும். மேல முதல் கியரு. அப்பறம் கீழாக்க மூணு கியரு. மெயின் கியர் லிவருக்கு மேலாக்கயே சின்னதா ஒரு குட்டி கியர் லிவரும் இருக்கும். இரண்டாம் மூன்றாம் நான்காம் கியர் சேஞ்சுகளுக்கு மெயின் கியர் லிவரை கீழாக மிதிக்க மிதிக்க அந்த குட்டி லிவர் மேல் நோக்கி நகரும். கியரை குறைக்க க்ளச்சைப்பிடித்து அந்த குட்டி லிவரை மெதுவாக அழுத்தினால் போதும். "க்ளக்" என்ற சத்தத்துடன் மூன்றாம் கியருக்கு நகரும். ஒரு மாதிரியான சிக்கலான டிசைன் தான். ஆனால் பழகிவிட்டால் கியர் மாற்றும் நேரங்களில் எல்லாம் உங்கள் வலது காலின் அசைவுகளில் ஒரு வித பாலே நடன நளினத்தை உணர முடிய்ம். ஆனா இன்னொன்னையும் ஞாபகம் வைச்சுக்கிடுங்க. இதெல்லாம் ரெகுலரா வண்டியை கவனிச்சு சமத்தா வைச்சுக்கிட்டா! பலகாலம் கண்டுக்காம நல்லா வேலை மட்டும் வாங்கிக்கிட்டு இருந்தா திடீர்னு யானை என்னா செய்யும் தெரியும்ல?! :)


புல்லட்டுக்கு சரியாக அந்தக் காலத்தில் ஜாவா கோலோச்சிக்கொண்டு இருந்தது. புல்லட்டு என்பது மிலிட்டரிமேனுங்க, போலீஸ்காரருங்க,கிராமத்து பணக்கார விவசாயிங்க போன்ற ஆட்களுக்கான, ஒருவித பொறுப்பை உணர்த்தும் வண்டியாகவும், ஜாவா என்பது இளமையை பறைசாற்றும் வாகனமாகவும் இருந்திருக்கக்கூடும். நம்ப தருமிசார் கூட அவர் கல்லூரி முடித்த காலங்களில் ஜாவால தான் படம் போட்டிருக்காப்புல! :) இந்த இரண்டு வண்டிகளுக்கான சத்தத்தில் இருந்தே இந்த குணாதிசியங்களை உணர முடியும். புல்லட்டின் "தட்தட்தட்..." என்பது ஒருவித ரிதத்துக்குள் கட்டுப்பட்ட, பொறுப்பை ஏற்றுக்கொண்ட கடமைக்கான மிடுக்கையும் உணர்த்துகிற விதமாகவும், ஜாவாவின் 'ட்டர்ட்டர்ட்டர்...." என்பதான ஒரு கட்டுக்குள் அடங்காத, பீட்டுகள் தவறும், சரவெடி சத்தம் இளமைக்கான அலட்சியத்தையும், கவர்ச்சியையும் பறைசாற்றுவதாக இருக்கும்.

எங்கப்பாரு 80களின் ஆரம்பத்துல இன்ஸ்பெக்டரா பதவி உயர்வு வாங்குனப்ப ஆசை ஆசையா வாங்குன வண்டி! அப்ப செவப்பு கலர்ல இருந்தது. பெட்ரோல் டாங்கு மேல என்ஃபீல்டின் ட்ரெடிஷனல் லேபில் இரும்புத் தகட்டுல பொருத்தியிருக்கும். எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து எங்கப்பாவையும் புல்லட்டையும் பிரிச்சுப்பார்க்க முடிஞ்சதே இல்லை. காலைல நாங்க பள்ளிக்கூடம் கெளம்பறதுக்கு முன்னாடியே ஸ்டேஷனுக்கு கெளம்பிருவாரு. உடுப்பை மாட்டிக்கிட்டு ச்சும்மா பளபளாங்கற பெல்ட்டையும், துணில போட்ட பாலீஷ்ல டாலடிக்கற கருஞ்சிவப்பு நிற பூட்ஸையும் போட்டுக்கிட்டு தொப்பியை பெட்ரோல் டாங்க் கவருக்குள்ளாக வைச்சுக்கிட்டு செண்டர் ஸ்டாண்டு போட்டிருக்கற வண்டிக்கு ரெண்டு சாவியையும் மாட்டி ஆம்ஸ்மீட்டரை 0ல வைச்சு லைட்டா ஒரு மிதி. விசுக்குன்னு ஒரு சவுண்டு. இதை கேக்கும்போதே எங்க மூஞ்செல்லாம் ஒரு பூரிப்பு பரவும். எங்கப்பாரு எடுப்பா கம்பீரமா ஸ்டேசனுக்கு போறப்புலங்கறது ஒன்னு. அவரு கெளம்பிட்டாருன்னா நாங்க இஷ்டம்போல அடிச்சுக்கிட்டு ஆட்டம போடலாங்கறது இன்னொன்னு! லைட்டா இன்னொரு மிதி. உடனே எங்க காது அந்த சத்தத்துக்கு ரெடியாகிரும். மூன்றாவதாக அந்த பூமிதிப்பதைப் போன்ற ஒரு கிக். அவ்வளவுதான்! "தட்தட்தட்..." அப்பறம் லைட்டா ஒரு தள்ளு. வண்டி ஸ்டாண்டை விட்டு இறங்கி கரெட்டா ஒரு அரையடி முன்னால நிக்கும். ஏறி உட்கார்ந்து முதல் கியருக்கான "க்ளக்". அப்பறம் தெருமுக்குல திரும்பி நாலாவது கியருக்கு ஆக்ஸிலரேட்டரை முறுக்கும் வரை அந்த சத்தம் ரிதமிக்காக அப்படியே தேயும்! அப்பறம் நாங்க ஹிப்... ஹிப்... ஹிர்ரே தான்! :)

அந்தக் காலத்துல எங்க காலேஜில ரெண்டே பேருதான் புல்லட்டு வச்சிருந்தோம். அதுல ஒருத்தரு என்னைக்காவது ஒரு நாள் காலேஜ் பக்கமா போற வழில தெரியாத்தனமா வந்துட்டா பஸ்டாண்டு கடைல டீக்குடிக்க மட்டும் வண்டியை நிறுத்துவாப்புல. நான் படம் போடறதுக்குன்னு மட்டுமே காலேஜிக்கு ரெகுலரா போகறவன். கோவைல இருந்து 30 கிலோமீட்டரு காலேஜ். தெனமும் வண்டிக்கு பெட்ரோல் போட்டுக்கிட்டு போகமுடியாதுன்னாலும் எப்பவெல்லாம் பெட்ரோலுக்கு காசுதேத்த முடியுதோ அப்பவெல்லாம் அவினாசி ரோட்டுல நான் மட்டும் தனிய சும்மா ஜிவ்வுன்னு ஓட்டிக்கிட்டு போவேன். சிட்டி லிமிட்டை தாண்டிட்டு ஒரே கியருல்ல சும்மா நூல் புடிச்சாப்புல 60வதுல போனம்னா அந்த "தட்தட்தட்..." சத்தம் கொஞ்சம் வேகமான சுதில சீரான தாளகதில தலைக்குமேல டால்பி சிஸ்டத்துல ஹெலிக்காப்டரு போகற எபெஃக்டைக் கொடுக்கும்! 50 கிலோ உடம்புல அந்தக்கால பேஷனான பேகிபேண்ட்டு படபடக்க, டக்-இன் பண்ணாத 42 சைசு தொளதொள சட்டை முதுகுக்கு பின்னாடி காத்து ரொம்பி புட்டுனு நிக்க, சுருள்சுருளான பங்க் ஹேர்ஸ்டைலு ( சொன்னா நம்புங்கப்பு... ஒரு காலத்துல நானும் சிகையலங்காரமெல்லாம் செஞ்சதுண்டு! ) பொடனில சிலுசிலுக்க அப்படியே மனசுல அர்னால்டு சிவனேசன்னு நினைச்சுக்கிட்டு போகறதுதான்! :)

இந்த வண்டி என் கைக்கு வந்ததே பெரிய கதைங்க! நான் காலேஜ் மூன்றாமாண்டு படிக்கையில் எங்கப்பாருக்கு மீண்டும் வேலை இடமாற்றமானது. கடலூர்ல இருந்து தூக்கி ஊட்டிக்கு போட்டாங்க. இதுக்கு பல வருஷம் முன்னாடியே நாங்க கோவைல செட்டிலாகிட்டோம். அப்பத்தான் வண்டி மீண்டும் வீட்டுக்கு வந்தது. அஞ்சாயிரம் ரூவா செலவு செஞ்சு புத்தம் புதுசா! மெட்டாலிக் சிமெண்ட் கலர் பெயிண்ட்டிங்ல. அவருக்கு பலகாலமா ஜீப் இருந்ததாலும் வண்டிய அதிகமா எடுக்கறதில்லைங்கறதாலும் சாவிய எங்ககிட்ட கொடுத்தாரு. வண்டி கிடைச்சதும் நான் செஞ்ச மொதல் வேலை மெக்கானிக்குகிட்ட எடுத்துக்கிட்டு போய் சைடுல இருந்த அந்த ரெண்டு இரும்பு பீரோக்களையும் கழட்டி எடுத்துக்கிட்டு வந்ததுதான்! அப்பவே அவருக்கு தெரிஞ்சிருக்கனும். இவனுங்க வண்டிய ஒரு வழி செய்யப் போறாங்கன்னு! இருந்தாலும் வயசுப்பசங்க. ஸ்டைலாத்தான் ஓட்டுவானுங்கன்னு விட்டுட்டாரு. மொத்தமா என் இஷ்டத்துக்கு வண்டிய மாத்த வசதி இல்லைன்னாலும் எனக்குன்னு பிடிச்ச அந்த டெர்மினேட்டர் 2 ஸ்டைல் ஹேண்டில் பார் மாத்தியும், சீட்டை கழட்டி இன்னும் கொஞ்சம் குழிவா வெட்டி வளைச்சு லெவல் இறக்கியும் ஒருவழியா ச்சாப்பர் ஸ்டைலுக்கு கொண்டுவந்தேன்.

புல்லட்டுனான எனது வாழ்வு மிக இனிமையானது. பட்டப்படிப்புக்கு அப்பறம் ஒருவருசம் நானும் மேல்படிப்பு படிக்கறேன்னு குப்பை கொட்டியபோது புல்லட்டு மேலான எனது ராஜபவனி தினத்துக்கும் என்றானது. என்னைப் பற்றியும் எனது திறமைகளைப் பற்றியுமான இல்லாத பொல்லாத இமேஜை எல்லாம் எனக்கு கொடுத்தது எனது புல்லட்டு தான். கேண்டீனிலும் டீக்கடைகளுக்கு முன்னாலும் வண்டியை விட்டு இறங்காமலேயே கால்நுனியில் சைடு ஸ்டேண்டு போட்டு அரை வட்டமிடித்து இறங்கி ஒரு டீயும் முட்டைபப்ஸும் சொல்லிட்டு அதை அரைமணி நேரமாக தின்னுக்கிட்டே யமாஹாக்களுக்கும் கேபிக்களுக்கும் நடுவில் தனித்துவமாக ஒயிலாக சாய்ந்து நிக்கும் என் வண்டியை ரசிப்பதில் எனக்கு ஒரு பெருமை. அதனை கடந்து வரும் பசங்களெல்லாம் வண்டியை ஆசையோடு பார்த்துவிட்டு பிறகு என்னை ஒரு பொகையோடு பார்ப்பார்கள் என்பதில் ஒரு கர்வம். வண்டியின் குழிவான சீட்டில் அமர்ந்து பெட்ரோல் டாங்கின் மீது கையை மடக்கி வாகாக சாய்ந்து கடந்து செல்லும் எவளையாவது பிடித்து வைத்து கடலை போடுவதில் பேரானந்தம்! ( பிகர்கள்: "எப்படிடா இந்த வண்டிய ஓட்டற? காத்தோட பறந்துட மாட்டியா?" தூர நின்னு சிங்கள் டீயும் தம்முமாய் பொகையும் கடுவன்ஸ்: "அடடா! என்னமா வறுக்கறான்?! தொழில் தெரிஞ்சவனப்பா!!" :) )

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டனும்னு ஒரு கலைக்கூத்தாடியாக வாழ்ந்த காலமது! நண்பர்ளுடன் கூத்தடிப்பதே பிரதானம். மக்கா ரசிக்கனுங்கறதுக்கா எந்த நிலைக்கும் போவதுண்டு. ஓசில ஊத்திக் கொடுப்பாங்கங்கறதுக்காக பணக்கார மக்களுடன் சேர்த்து வாட்டர்கேம்ஸ்சுக்கு அப்பறம் அவனுங்க காரை எடுத்துக்கிட்டு ஊர்வலம் வந்து ரோட்டுல கிடைக்கற பெயர்ப் பலகைகளையெல்லாம் அள்ளிக்கிட்டு வர்றது( இன்றைய ஸ்பெசல், ஆட்கள் வேலை செய்கிறார்கள், நாய்கள் ஜாக்கிரதை, 2 - பேரூர் to சிட்ரா... ), தேமேன்னு தொங்கற போஸ்ட்பாக்சை கெளப்பறது, டாபால நிக்கற லாரிகள்ல கொத்தா சாவிய லவட்டறது, காலேஜுக்குள்ள நடுராத்திரில கிளீனருக்கு ஊத்திவிட்டு காலேஜ் பஸ்சை ஓட்டறது, ஒருதாரு வாழைப்பழம் வாங்கிக்கிட்டு லேடீஸ் ஹாஸ்டலுக்குப்போய் ரூம் ரூமா லைட்டடிச்சு "எங்களுக்காடி பழம் கொடுத்தீங்க.. இந்தா வாங்கிக்குங்க..." வாழைப்பழம் வீசறது (கோவைல பழம் கொடுக்கறதுன்ன லவ் பெயிலியரு..) இப்படி சின்னச்சின்ன சமுதாயக்குற்றங்களை குறும்பு செய்யறதா நினைச்சு செஞ்சுக்கிட்டு இருந்த காலமது.

அந்தக் கும்பல்ல தான் பாலாவும் இருந்தான். எங்கப்பாவும் அவனோட அப்பாவும் ஒரே ரேங்குல வேலை பார்க்கறவுங்க. ஒரு மாதிரி பேமிலி பிரெண்ட்ஸ். கடைசி வரைக்கும் எங்க கூத்தையெல்லாம் வீட்டுக்கு தெரியாமத்தான் காத்துவந்தோம். அப்பவே அவன் மாருதி 1000ல தான் வருவான். பண விசயத்துல அவனுங்களை அடிச்சிக்கமுடியாத குறையை அவனுங்களை விட ரவுசு விடறதுல ஈடுகட்டி என் ஈகோவை சமாளிச்சுக்கிட்டு இருந்தேன். இந்த ரவுசுகளுக்கு பின்னால் படிப்பு, குடும்பம், மரியாதை,சுயகவுரவ்ம் என எதனையும் அறியாத மனசு இருந்தது. இந்த மனசு இருந்தால் மட்டுமே பசங்க காசுல ஆடிவிட்டு அந்த குறையை நிவர்த்திக்க கூத்தடித்து வாழ முடியும்! :) பெரும்பாலும் எங்க ஜமா CITய தாண்டி இருக்கற காலி கிரவுண்டுலதான் நடக்கும். தீர்த்தவாரிகளன்று ஏதாவது மெஸ்சுல முட்டை பரோட்டா, ரோஸ்ட்டு,சிப்சு, வாழைப்பழம்னு மொத்தமா கட்டிக்கிட்டு வீடெடுத்து படிக்கறதுக்கு ஹட்கோல தங்கியிருக்கற பசங்க வீட்டுல டெண்ட்டு போடறதுதான். மற்ற நாட்களில் வெட்டிக்கதைகளாக பேசி புகைகளாக ஊதி 10 மணிக்கா கெளம்பி வேற வழியில்லாம வீட்டுக்கு கெளம்புவோம். ஒருநாள் இப்படித்தான் மழைல சீக்கிரமா கெளம்பலான்னு எல்லாரும் வண்டிகளை எடுத்தானுங்க. பேட்டரில தண்ணி புகுந்து என் வண்டி கெளம்புவனாங்குது. "நிம்மி.. ஸ்ட்டார்ட்டாயிடுன்னு" படிக்காதவன் ரேஞ்சுல கெஞ்சிப்பாத்தும் வேலைக்காகலை! காரை திருப்பிக்கிட்டு வந்த பாலா "ஏண்டா, இந்த ஓட்ட வண்டிய தூக்கிப் போட்டுட்டு வேற வாங்கக்கூடாதா?"ன்னு கேட்டான். எனக்கு சுருக்குன்னு பட்டுச்சு. அதுவரைக்கும் என் வண்டியை ஓட்டைன்னு நினைச்சுக்கூட பார்த்ததில்லை. அவன் வசதிக்கு நான் இல்லைங்கறதும், அந்த மழைல கிக்கரை மிதிச்ச கடுப்பும், புதுவண்டி வாங்கமுடியாத இயலாமைன்னும் எல்லாம் சேர்ந்து வாயில "எங்கப்பனுக்கு இந்த ஓட்ட வண்டிய வாங்கிக் குடுக்க வக்கிருக்கறதே பெருசு! பேசாம போவியா!" ன்னுட்டேன். "ம்.. பொழைக்கத் தெரியாத ஆளுடா உங்கப்பா.."ன்னு சொல்லிட்டு சிரிச்சுக்கிட்டே கெளம்புனான். அதன்பிறகு வண்டிய மேடுவரைக்கும் தள்ளி பள்ளத்துல கியரைபோட்டு ஸ்டார்ட்டாகி ஒரு வழியா வீடுவந்தேன்.

சம்பள நாளைக்கு முதல்வாரத்தின் ஒரு நாளிலும் என்றாவது நண்பர்களுடனான பிரிவுபசரணையிலுமாக ஆடிக்கு ஒரு நாளும் அம்மாவாசைக்கு ஒருநாளுமாக குடிக்கும் அப்பாக்களைப் பற்றி, எந்தக்கவலையும் இல்லாது முடிந்தால் அப்பனின் காசிலும் முடியாத நேரங்களில் நண்பர்களிடம் பீராய்வதிலுமாம் குடிக்கும் மகன்களது மனநிலையை நீங்கள் என்றைக்காவது ஆராய்ந்ததுண்டா? இரண்டு பேருமே குடிகாரர்கள் இல்லை தான். அவர் அவரது மனநிறைவுக்கும் இவன் ரகளைக்கும் செய்யும் வேலைதான். இருந்தாலும் எனக்கென்னவோ அதனை மனதளவில் ஏற்றுக்கொள்ளவே முடிந்ததில்லை. தீர்த்தவாரிகளின் பின்னான எனது ஆட்டங்களும் அலும்புகளும் தண்ணியடிப்பதென்பதை இளைஞர்களுக்கான விடலைத்தன வாழ்வை அனுபவிக்கும் காரணியாகவே பட்டதால் சிறுவயதிலிருந்து பார்த்துவரும் ஒரு பொறுப்பான அன்பான அப்பா குடிப்பது என்பதினை மிக அபத்தமாகவே பார்த்த காலமது. வருடத்தில் சில நாட்கள தான்! ஆனால் அந்த நாட்களில் தோளுக்குமீறி வளந்த பசங்களுக்கு தெரியக்கூடாதெனவும், பெத்த மக்களுக்கு முன்னான அவரது தந்தையெனும் தகுதியை இறக்கிகொள்ளுகிறோமோ என்கிற சுயபச்சாதாமும் சேர்த்து அவரை ஆட்டிப்படைக்கும். அப்பங்காசுல ஊத்திகொண்ட நானெல்லாம் வீட்டிற்கும் நெஞ்சுநிமிர்த்தி நடக்க தனது சுயசம்பாதியத்தில் ஒருநாள் குடித்துவிட்டு வரும் அவர் நிலைகொள்ளாமல் தவிப்பார். சில சமயங்களில் அவரைப்பார்த்தால் "உலகம் தெரியாத அப்பா!"ன்னு பாவமாகவும் சில சமயங்களில் "உலகம் தெரியாத பசங்களா நாங்க?"ங்கற எரிச்சலாகவும் இருக்கும்.

அன்றைக்கு அப்பா ஒரு அலுவலக விழாவிற்கு பின்னாக வீட்டுக்கு வந்தார். இந்த நாட்களில் வழக்கமாக வாங்கி வரும் ராயப்பாஸ் சிக்கன் 65 பார்சல் கையில். முகத்தில் ஏனோ சுரத்தேயில்லை. என்றைக்குமில்லாத அதியசமாக 10 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து தோசை தின்னுக்கிட்டு இருந்தேன். அப்பா வீட்டிற்குள் நுழையுமுன்னான வழக்கமான அந்த இரண்டு கேள்விகள்...

"சாப்பிட்டியாடா ஜிம்மீ..." - இது எங்கள் உடன்பிறவா பைரவருக்கு!

"சாப்டீங்களாடா குட்டீ..." - இது எங்களுக்கு!


மெதுவாக வந்து என்முன்னமர்ந்தவர் ஏதோ பேச வேண்டுமென விரும்புகிறார். எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியாமல் தவிக்கிறார். அன்றைக்கு எரிச்சலில் இருந்தேன். இந்த மாதிரியான நேரங்களில் நான் மும்முரமாக தலையைக் குத்திக்கொண்டு இருப்பேன். எரிச்சலை காட்டுவதற்கும் எதிராளியை மிக எளிதாக காயப்படுத்துவதற்குமான எளிய வழி நிராகரித்தல் தான். அவர் ஏதோ பேச விரும்புவது தெரிந்தும் கணமும்முரமாய் தீஞ்ச தோசையை நோண்டிக்கொண்டிருந்தேன்.

"பைக்கெல்லாம் நல்லா ஓடுதாடா குட்டீ?"

"ம்..."

"சர்வீசுக்கெல்லாம் ரெகுலரா விடறியா?"

"ம்..."

"ஆயிலெல்லாம் செக் செய்யறியா? ஒழுங்கா ஸ்டார்ட் ஆகுதா...?

"ம்..."

"இல்ல... பேட்டரி வேணா புதுசு மாத்திக்கறயா...?"

எனக்கு ஒன்னும் புரியலை! என்னத்துக்கு தேவையில்லாம வண்டியப்பத்தி கொடயறாருன்னு எரிச்சல் கெளம்புது.

"அதெல்லாம் வேணாம். ஒழுங்காத்தான் ஓடுது..."

"இல்ல... வண்டி ஓட்ட வண்டின்னு சொன்னியாம். பாலாவோட அப்பா சொன்னாரு. கேக்கறப்ப கஷ்டமாயிருச்சு... அதான் கேட்டேன்!" தயங்கித் தயங்கி அப்பா!

எனக்கு முதலில் திக்கென்றது. அவன் நான் சொன்னதை அப்படியே கொண்டுபோய் அவங்கப்பனிடம் ஒப்பிக்க அவரு சபைல ஜோக்கு சொல்லறதா நினைச்சுட்டு எங்கப்பனை போட்டுப் பார்த்திருக்காருன்னு தெரிஞ்சதும் சுருக்குன்னது. அவன் மேல வந்த கோவம் வெளிப்படுத்தத் தெரியாம வார்த்தையா வெடிச்சது.

"இப்ப என்னத்த சொல்லிட்டாங்க? உள்ளதைத்தானே சொன்னேன்!"

இந்த வார்த்தைகளில் எங்கப்பா ஆடிட்டாரு. முகமெல்லாம் கறுத்து வாடிருச்சு. பேச வார்த்தைகள் வராமல் கொஞ்ச நேரம் தத்தளிப்பில் ஓடுது. மெதுவாக வார்த்தைகளைத் தேடியபடி குரலில் நடுக்கத்துடன்

"உங்கப்பாவுக்கு பொழைக்கத் தெரியலைன்னு நீ சொல்லலாமா? நான் இப்படி இருக்கறதுக்கு நீ பெருமைப்பட வேணாமா? புல்லட்டுல இருக்கற ஒவ்வொரு பைசாவும் நான் உழைச்சு வாங்குனது. அந்த உழைப்புக்கான மரியாதை என்னன்னு உனக்கு புரியலையா? அந்த வண்டிய உனக்கு குடுக்கும்போது எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துச்சு தெரியுமா? எம்பையன் உனக்கே என்னைப்பத்தி பெருமையா இல்லைனா வேற யாரு சொல்லிடா எனக்கு பெருமை வரப்போகுது?"ன்னு ஒருமாதிரி திக்கித்திக்கி சொல்லி அமைதியாகிட்டாரு.

ஒரு நிமிடம் திங்கறதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து அப்பாவின் முகத்தைப் பார்த்தேன். அனைத்துத் தகுதிகளும் இருந்தும் பெருமை, சந்தோசம், கர்வம், சாதனை, உழைப்புக்கான மரியாதை எல்லாத்தையும் எனக்காக ஒதுக்கிவிட்டு பெற்ற மகனிடமிருந்தான அங்கீகாரத்தை மட்டுமே எதிர்நோக்கியபடி கண்களில் இறஞ்சுதலுன் கையறுநிலையில் என் தந்தை. எல்லாத் தவறுகளையும் செய்துவிட்டு நெஞ்சு நிமிர்த்தி அமர்ந்து எச்சில்தட்டில் கைகளை அளந்தபடி கர்வமாக நான். எந்தவித புரிதலுமின்றி விளக்குதலுமின்றி இருவருக்குமிடையில் ஏதோ ஒன்று கரையத் தொடங்குகிறது. மெல்ல தலை குனிந்து தோள்கள் குளுங்க கண்களில் பொங்கிவரும் நீருடன் போட்டியிடும் சிறிய விசும்பல்களுடனுமாக அமைதியாக அழ ஆரம்பிக்கிறேன் நான். என்னிடம் எதிர்பார்த்தது கிடைக்கும் என்ற தன் வீண்போகாத நம்பிக்கையுடன் அமைதியாக ஆதூரத்துடன் பார்த்தபடி என் அப்பா!

இப்போதைக்கு இரண்டு ஆசைகள். Enfield தொழிற்சாலையை இழுத்து மூடி பலவருடம் ஆனாலும், ஊருக்கு போவதற்கு முன் இங்கே இருக்கும் Enfield என்ற ஊருக்கு ஒரு முறை பஸ்ஸ்டாண்டு வரைக்குமாவது போய்வர வேண்டும். புல்லட்டுடனான எனது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வாக இதனைச் சொல்லி பெருமையடித்துக் கொள்ள! ஊருக்குப் போனபின் புதுசாய் ஒரு Bullet Machismo 350 வாங்க வேண்டும். இப்போது நினைத்தாலும் மனதோரம் மகிழ்ச்சி கொடுக்கும் என் அந்தக்கால அலம்பலகளை நினைவுப்படுத்த இல்லாவிடினும், அப்பாவுடனான எனது வாழ்க்கையின் நினைவுகளை அந்த "தட்தட்தட்..." சத்தத்தின் மூலமாக மீட்டெடுக்கவாவது!

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - பெனாத்தல் சுரேஷ் - 5

ஜெய்ப்பூரும் நானும்
- பெனாத்தல் சுரேஷ்

வங்கதேசத்துப் புயல் லட்சம் பேரைக் காவுகொண்டது, சீனத்து நிலநடுக்கம் ஆயிரங்களைத் தாண்டுகிறது.. ஜெய்ப்பூரில் 60 -80 பேர்தான் பலி என்று நிம்மதியா அடைய முடிகிறது?

எண்ணிக்கையாகவே எல்லாச்சாவுச் செய்திகளையும் படித்துவிடமுடிகிறதா?

என்னால் முடிவதில்லை.

இயற்கைச் சீற்றங்களையும், சரக்கடித்த நேஷனல் பர்மிட் லாரி நெடுஞ்சாலையில் மல்லாந்து பலிகொள்வதும் விதி என்ற ஒற்றைச்சொல்லில் மறக்கடிக்கப்படலாம். ஆனால் மனிதன் உருவாக்கும் விபத்துகள்?

சைக்கிள்களில் அலாரம் கடிகாரங்களை டெட்டொனேட்டர்களாக வைத்து, பயங்கொள்ள எந்தக் காரணமும் இல்லாத மக்கள் கூடும் இடங்களில் பொருத்தி, அதிகமாகக் கூடும் நேரம் பார்த்து, ஒரு வெடிப்பில் சுதாரித்துக் கொள்ள முடியாத அளவுக்கு இன்னொரு இடத்தில் இன்னொரு இடத்தில் என்று 20 நிமிடங்களில் 6 இடங்களில் வெடிக்கவைத்து, வெடிப்பின் விஸ்தீரணம் கூட தோட்டாக்களை வைத்து தூரமாக நின்று வேடிக்கை பார்ப்பவன் என்ன கடவுளா? யார் விதியை யார் எழுதுவது? அவன் பக்கம் உள்ள நியாயம் (நியாயமாகவே இருந்தாலும்)கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையில் நிர்ணயிக்கப் படுகிறதா? மதம் கொடுத்த உரிமை, உரிமை மறுப்பு கொடுத்த கோபம் என்று இவற்றை நியாயப்படுத்த முடியுமா?

ஆலமரம் விழுந்ததால் கூட புற்களும் விழுந்தாகவேண்டும் என்று வாக்காளர் அடையாள அட்டையுடன் ஒரு இனத்தையே அழித்தொழிப்பு செய்தார்களே, அதை நியாயப்படுத்த முடியுமா?

தலைவியே சிறைக்குச் செல்கிறாள், பேருந்தில் மாணவிகள் இருந்தாலென்ன, எரித்தே தீருவோம் என்றார்களே, அதை நியாயப்படுத்த முடியுமா?

ரயிலை எரித்தார்கள் என்று எரித்த இனத்தையே சுத்திகரிக்க முனைந்தவர்களை நியாயப்படுத்த முடியுமா?

எங்கேயோ யாரோ யாரையோ அழிக்கிறார்கள் என்பதை உலகுக்கு உணர்த்த 9 மணி பாஸ்ட் பாசஞ்சரைப் பிடித்தவர்களை வெடிக்கவைத்ததை?

அண்ணனுக்கு ஆதரவில்லை என்று சொன்னவனின் கீழ் வேலை பார்த்தவர்களை எரித்ததை?

யார் கொடுத்தார் உனக்கு இந்த உயிரெடுக்கும் உரிமை? மதம் கொடுத்ததா? வேறு வழியின்றி உனக்கு விழும் வாக்குகள் கொடுத்ததா? ஆட்சி உன் பக்கம் என்ற ஆணவம் கொடுத்ததா? கும்பலில் உன்னைத் தனித்து அடையாளம் காணமுடியாது என்ற பாதுகாப்பு கொடுத்ததா?

இந்தச் சாவுகளை வெறும் எண்ணிக்கையாகப் பார்க்க என்னால் முடிவதில்லை.

சர்க்கரை அளவைப் பரிசோதிக்க வெளிவரும் ஒற்றைத் துளி ரத்தத்தையும் பார்க்கமுடியாமல் முகம் திருப்புகிறேனே, சாலையில் செத்துக்கிடக்கும் பூனையின் ரத்தம் பார்த்தும் வாந்தி கக்குகிறேனே, குழந்தைக்குச் சிறு கீறல் ஏற்பட்டு ரத்தம் சிந்தினால் மயக்கம் வருவதாக உணர்கிறேனே, நான் இப்படி பூஞ்சையாக இருந்ததில்லை - என் 22 வயதுவரை.

உத்தரப்பிரதேசத்தில் உள்ளமைந்த நிலக்கரிச் சுரங்கங்களுக்கு ரயில் பயணமாக பாபர் மசூதி இடித்த மறுதினம் சென்ற போதும் இப்படி ஆகவில்லை.

தமிழகத்தில் செத்தார் ராஜீவ் காந்தி என்ற ஒரே காரணத்தால் தமிழர்களைத் தேடித் தேடி பீகார் காங்கிரஸார் அடித்த போதும்கூட பூஞ்சையாய் மாறவில்லை.

உடன் வேலை செய்த மெக்கானிக் மதம் காரணமாக வெட்டிப்போடப்பட்ட போதும் கூட இந்த ரத்த போபியா வரவில்லை.

இவை நடந்தபோதெல்லாம் கலவரத்தை வாய்மொழியாக மட்டுமே கேட்டிருந்தேன், விளைவுகளை மட்டுமே பார்த்திருந்தேன் - தாக்கத்தை உண்டுசெய்தனதாம், ஆனால் நிரந்தர மாற்றத்தை உண்டு செய்யவில்லை. நிரந்தர மாற்றத்தை உணர்ந்த நாள் தெளிவாகவே நினைவிருக்கிறது.

ஒரு இளங்காலை நேரம், பணியிடத்துக்கு நடந்து செல்லும்போது எதிர்ச்சாரியில் எந்த வண்டியும் செல்லாதது வியப்பாக இருந்தாலும் புதிதாக இல்லை - அடிக்கடி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அறிவிக்கும் "ஆர்த்திக் நாகாபந்தி" (சாலை மறியல்) பழகிவிட்டிருந்தது. ஆனால் பணியிடத்திலும் சலசலப்பு இல்லாதது, ஆட்கள் யாருமே கண்ணில் படாதது புதிதுதான்.

என் வேலையைப் பற்றி ஒரு வரி: நிலக்கரிச் சுரங்கம் நடத்துவது அரசாங்கம், அதற்கு இயந்திரங்கள் வழங்கிய தனியார் நிறுவனத்தில் என் பணி. இயந்திரங்கள் பராமரிப்பையும், மராமத்தையும் மேற்பார்வை பார்த்து, உத்தரவாத நேரத்துக்குள் பழுதேற்பட்டால் அதைப் பரிசீலித்து என் நிறுவனத்துக்குத் தகவல் அளித்து சரிசெய்யும் செலவை ஏற்கவைக்கவேண்டியது என் பொறுப்பு.

யாரும்தான் இல்லையே, சரி இயந்திரங்களின் வேலைசெய்த நேரத்தைக் காட்டும் எண்ணை மட்டும் குறித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிவிடலாம் என்று வண்டிகள் மேல் ஏறத் தொடங்கினேன். ஏறும்போது யாரும் கண்ணில் படவில்லை.. இறங்கும்போது ஒரு கும்பல் எனக்காகக் காத்திருந்தது. காட்டுவாசிகள்.

20 - 30 பேர் இருப்பார்கள். எதிரில் நான் தனியன். அவர்கள் கையில் உருட்டுக்கட்டைகள், வில் அம்பு - விஷம் தோய்த்த அம்பு. தலைவன் போலிருந்தவன் மிரட்டினான் - புரியாத பாஷை. நாக்கு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டு. பதில் சொல்லக்கூட நா எழும்பவில்லை. அதிகமான பயத்தில் உடலில் பல மாற்றங்கள், வாந்தி வருவது போலிருந்தது. ஒருவன் வில்லை நாணேற்றத் தொடங்கினான்.

மூன்றாவது வரிசையில் இருந்த ஒரு ஆளுக்கு என்னை அடையாளம் தெரிந்திருந்தது. முன்வரிசைக்கு முந்தி வந்தான். பளாரென ஒரு அறை விட்டான். ஹிந்தியில் பேசினான். " இன்னிக்கு பந்த் னு தெரியாது? வீட்லேயே இருக்க வேண்டியதுதானே.. ஓடிப்போயிரு.." அவர்களிடம் திரும்பி.. "இவன் அரசாங்கம் இல்ல.. தனியார் கம்பேனி.. தெரியாம வந்துட்டான்.. ஓடச்சொல்லுங்க" கண்ணில் குரோதத்துடன் கும்பல் வழிவிட மூன்று கிலோமீட்டர் எந்தப்பக்கமும் பார்க்காமல் ஓடியே வீடு வந்து சேர்ந்தேன்.

மரணம் தொட்ட அந்தக் கணத்தில் இருந்துதான் இப்படிப்பட்ட செய்திகளின் வீரியம் என்னைத் தாக்கத் தொடங்கியது என்று நினைக்கிறேன். மனிதனால் உருவாக்கப்படும் கலவரங்கள், குண்டுவெடிப்புகள் எந்தச் செய்தியும் குறைந்தபட்சம் மூன்றுநாட்களாவது மனநிம்மதியைக் குலைக்கிறது.

இதை எழுத எனக்கு வெட்கமாகத்தான் இருக்கிறது - ஒருவேளை இப்படிப்பட்ட மரணங்களுக்குக் காரணமான யாராவது ரத்தம் சிந்தினால் அதைப்பார்த்து எனக்கு வாந்தி மயக்கம் வராமலும் இருக்கலாம்.

ஒவ்வொரு கலவரமும் குண்டுவெடிப்பும் கொண்டுசெல்லும் உயிர்களைத் தவிர்த்தும் இப்படி வாழ்நாள் முழுக்கப் பாதிப்புடன் வளைய வரும் என்னைப் போன்ற எத்தனை பேரை உருவாக்குகின்றதோ! இலங்கையில் ஈழத்தில் பாலஸ்தீனத்தில் ஈராக்கில் எத்தனை பேர் நாள்தோறும் இப்படிப் பாதிக்கப்படுகின்றார்களோ! ஜெய்ப்பூரில் இன்று எத்தனை என்போன்றோர் உருவானோர்களோ..

எதுவும் செய்ய முடியா இயலாமை.. கோபம் கொள்வதைத் தவிர நான் வேறென்ன செய்ய முடியும்?

பி கு: ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புச் செய்திகள் வெளிவந்த நேரத்தில் இலவசக்கொத்தனாருடன் மின்னரட்டையில் இருந்தேன், நாளை காலை ஒரு பதிவிடுவேன் என்று சொன்னேன். அவர் கேட்டார்.. எப்போ குண்டு வெடிச்சாலும் ஒரு கடமையாவே இதைச் செய்யறீங்களே.. எனவே காரணமான சொந்தக்கதையும் சொல்லியிருக்கிறேன்.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - தருமி - 6

இன்று …
- தருமி


வேகமாக வளரும் அறிவியல் மாற்றங்கள், அதனால் ஏற்படும் புதிய சமூக விளைவுகள், வாழ்வியல் மாற்றங்கள் – எல்லாமே மிக வேகமாக நம்மைச் சுற்றி நடந்து வருகின்றன. என் வயதுக்குள்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்! இந்த வளர்ச்சிகளையும், மாற்றங்களையும் பார்க்கும்போது மிகுந்த ஆச்சரியமாக உள்ளது. இந்த ஆச்சரியங்களை உணர்ந்து அனுபவிப்பதில் யார் அதிர்ஷ்ட சாலிகள் என்று அவ்வப்போது மனதில் ஒரு எண்ணம் எழுவதுண்டு. முதிய வயதில் இருக்கும் என் போன்றோரா, இளம் வயதில் இருப்பவர்களா, இல்லை என் பேரப்பிள்ளைகள் போல் இன்னும் எதிர்காலத்தை நோக்கி நடப்பவர்களா – இவர்களில் யார் இந்த நித்தம் நித்தம் அரங்கேறும் அதிசயங்களைக் கண்டு அதிசயித்து அனுபவிக்கும் பேறு பெற்றவர்கள்?

Alvin Toffler எழுதி பிரபலமடைந்த Future Shock என்ற நூலில் இப்போது நடைபெறுவது knowledge explosion – அதைத் தொடர்ந்து வருவது பெரும் மாற்றங்கள். வரப்போகும் இந்த பெரும் மாற்றங்களை எதிர்கொள்ள நம்மை நாமே தயார் நிலையில் வைத்துக் கொள்ளாவிட்டால் நாளைக்கு நமக்குக் கிடைக்கக் கூடிய அதிர்ச்சிகளையே Future Shock என்றார். இன்றைய குழந்தைகள் இன்று நடக்கும் மாற்றங்களைப் பற்றியேதும் அறியார்கள் . நடுவயதினருக்கோ இதில் பெரியதாக ஏதும் வியப்பிருக்காது. ஆனால் என் போன்றோருக்கு இந்த மாற்றங்கள் தரும் வியப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ள ஒரு சின்ன உதாரணம் :

அந்தக் காலத்துத் தமிழ்ப்படங்களில் கதாநாயகர்கள் அந்தக் கருப்புத் தொலைபேசியைக் கையில் எடுத்துக்கொண்டு நடந்துகொண்டே பேசுவார்கள். ஆனால் எண்பதுகளின் கடைசிகளில் handset வந்தபோது ஆஹா என்றிருந்தது; ஓடிப்போய் ஒவ்வொரு முறையும் போனை எடுக்கக் கூட தேவையில்லாமல் பக்கத்திலேயே handset என்பதே ஆச்சரியாக இருந்தது. தொன்னூறுகளின் நடுவில் கைத்தொலைபேசியைப் பார்த்து நான் வாய் பிளந்து நின்றிருக்கிறேன். முதலில் தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் தொலைபேசி இணைப்பு இருந்தது. RPG Cellular..? கறுப்பாக நீளமாக 'கொம்பு' வச்சுக்கிட்டு, பணக்கார மக்களின் அந்தஸ்தைக் காண்பிக்கும் பொருளாக இருந்தது. கிசுகிசுவில்கூட கைப்பேசியின் மகத்துவம் வந்தது நினைவுக்கு வருது. சரத்குமார் ஒரு நடிகையுடன் அப்படி பேசிக்கொண்டேயிருந்தாராம். நிமிடத்துக்கு இரண்டு பேருக்கும் ஏழேழு ரூபாய் .. எந்த தயாரிப்பாளரின் பணமோ? என்று விசனப்பட்டு பத்திரிகைகளில் ஒரு கிசுகிசு! ஆ.வி.யில் ரெண்டு மூட்டை பருத்திக் கொட்டையும், ரெண்டு மூட்டை புண்ணாக்கும் அனுப்பிவிடு என்று கைத்தொலை பேசியில் மாடுகளை மேய்த்துக் கொண்டே ஒருவர் பேசிக்கொண்டு போவது ஜோக்காக வந்திருந்தது. Toffler சொன்னதுபோல் அன்று அதிசயமாக இருந்தது; இன்று அவையெல்லாம் சாதாரணம் என்பதாக நடைமுறைக்கு வந்துவிட்டன.

ஆனால் என் பேரப்பிள்ளைகளுக்கு இதில் எந்த பிரமிப்பும் இல்லை. நடுவயதினருக்கும் இந்த வளர்ச்சிகள் அப்படிஒன்றும் பெரும் பிரமிப்பையோ ஆச்சரியத்தையோ தந்திருக்காது. ஆனால் பதின்ம வயதுகளில் போனை அருகில் வைத்துக் கூட பார்க்காத என் போன்றவர்களுக்கு http://dharumi.blogspot.com/2007/01/195.html அதைப் பற்றி இங்கு பார்க்கலாமே.

இந்த தொலைபேசிகளின் வளர்ச்சியின் பிரமாண்டம் புரியும். இன்னும் இதைப்பற்றி நிறையச் சொல்லலாம். அந்தக் காலத்தில் – அப்படி ஒன்றும் ரொம்ப வருஷங்களுக்கு முன்புகூட இல்லை – 80-கள் வரையிலும் தொலைபேசி இணைப்புக்கு ஆறு வருடங்கள் காத்திருக்க வேண்டும். 24 மணி நேரத்தில் தொலைபேசி இணைப்பு கிடைக்கும் "எங்க ஊரில்" என்று அமெரிக்கா சென்ற நண்பர் சொன்ன போது ஆச்சரியமாக இருந்தது உண்மை. இப்போது நம்மூரிலேயே over the counter என்றாகிவிட்டது.

இதுபோல் இன்னும் எத்தனை எத்தனை…? சின்ன வயதில் பார்த்த கார்கள் – அப்போதெல்லாம் அவைகளுக்குப் பெயர் பிளசர் கார் – எல்லாமே அயல்நாட்டு இறக்குமதிகள். வகை வகையாக இருக்கும். Buick, Hillman, Plymouth, Chevrolet, Morris Minor, நடு நடுவே Landmaster …. அதே மாதிரி மோட்டார் சைக்கிள்களில் Norton, Red Indian, B.S.A.… விதவிதமாக இருந்ததால் தூரத்தில் வரும்போதே அது என்ன கார் / மோட்டார் சைக்கிள் என்று கண்டுபிடித்து சொல்வது என்று ஒத்த வயதினரோடு விளையாடியது உண்டு. அப்படி இருந்தது கொஞ்ச காலம்தான். அதன் பிறகு பல காலத்துக்கு Ambassador, Fiat, Standard என்று கார்களில் மூன்றுவகை மட்டும்; மோட்டார் சைக்கிள்களில் Bullet, Jawa, Rajdoot என்று மூன்றுவகை மட்டுமே என்று சுருங்கி, இப்போதோ நித்தம் ஒரு மாடல். வெள்ளையும் கறுப்பும் மட்டுமே கார்கள் என்பது போய் இப்போது வண்ண மயம்தான். Simply riots in colours.

அட .. கார்களை விடுங்கள்.. சாதாரண பென்சிலை எடுத்துக் கொள்ளுங்கள். மிஞ்சிப் போனால் வழக்கமான மரக்கலர் பென்சில்களைத் தவிர மஞ்சள் கலரில் நாங்கள் பார்த்திருப்போம். இப்போது .. கணக்கேது. வெளிநாட்டிலிருந்து, அதாவது அமெரிக்காவிலிருந்து (அந்தக் காலத்தில் foreign என்றாலே அமெரிக்காதானே!) நண்பர்கள் வந்தால் BiC என்று ஒரு ball point பேனா; அதன் பின் கொஞ்ச காலத்துக்கு ஸ்கெட்ச் பேனாக்கள், அடுத்து highlight pens என்று கொடுப்பதற்கு என்றே வாங்கி வருவார்கள். அடேயப்பா .. பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த நண்பன் ஒரு Reynolds ballpen வாங்கி வந்து கொடுத்ததோடில்லாமல் ஒரு demo வேறு காண்பித்தான். அப்படியே செங்குத்தாக பேனா முனையைக் கீழே போட்டாலும் எழுதும் என்று செய்து காண்பித்தான். பார்த்த உடனே எனக்குப் பெரிய கவலை. இப்படிப்பட்ட நல்ல பேனா ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய use & throw-வாக இருக்கிறதே என்று. 'அங்கெல்லாம் அப்படித்தான்; ஒரு தடவை பயன்படுத்திட்டு நாங்க தூரப் போட்டுவிடுவோம்' என்றான். சே! ஃபாரின்னா ஃபாரின்தான் என்றுதான் நினைக்கத் தோன்றியது.

அடேயப்பா! முதன் முதல் மலேசியாவில் இருந்து வந்திருந்த ஒருவரிடம் ரொம்ப யோசித்து, தயங்கி, பேரம் பேசாமல் அவர் பயன்படுத்திக் கொண்டிருந்த ஒரு Parker Fountain பேனாவை விலை பேசி வாங்கியது எவ்வளவு சந்தோஷமாயிருந்தது. Parker பெயருக்கே ஒரு மரியாதை. அப்படி ஒரு ஃபாரின்மோகமும் பல வருஷங்கள் இருந்தது. அந்த மாயையில் தோன்றியவைதான் ஊருக்கு ஊர் அயல்நாட்டுப் பொருள் விற்கும் பர்மா பஜார் என்ற பெயரில் இருக்கும் கடைகள். ஆனால் இப்போது வெறுமனே திருட்டு சினிமா சிடிக்கள் மட்டுமே அங்கே பெரிதாக விற்கின்றன.

ஆனாலும் அயல்நாட்டு மோகம் நமக்கு இன்னும் குறையவில்லை என்றுதான் நினைக்கிறேன். அல்லது ஒரே ஒரு விஷயத்தில் மட்டுமாவது இருக்கிறது. நமது சினிமா படங்கள் மட்டும் உலகத்தரத்தில் வர வேண்டுமென நினைக்கிறோம். அந்த "தரம்" மட்டும்தான் இன்னும் கிடைக்கவில்லை; மற்றபடி அயல்நாட்டுப் பொருட்கள்தான் இப்போது எல்லாமே அப்படியே, அல்லது உள்நாட்டு பொருளாகவோ கிடைத்து விடுகின்றனவே. இப்போதெல்லாம் என்ன வாங்கி வர வேண்டும் என்று அங்கிருந்து பிள்ளைகள் கேட்டால்கூட சொல்வதற்கு ஒன்றுமில்லையென்று ஆகிவிட்டது .. Toffler சொன்ன global village இதுதானோ… ?

டார்வினின் பரிணாமக் கொள்கைகளில் அடிப்படையாக அவர் சொன்னதில் முக்கியமான ஒன்று: variations are the raw materials for changes. இன்று அந்த விதவிதமான விஷயங்கள் கண்முன்னால் விரிகின்றன. வீட்டுக்கே பசுவோடு, வைக்கோலால் செய்த கன்றுக்குட்டியுடனே வந்து அங்கேயே கறந்து பால் கொடுத்திட்டு போனாங்க .. இப்போ அந்த பால்தான் எத்தனை எத்தனை விளம்பரங்களோடு, விதவிதமான பாக்கெட்டுகளில் கிடைக்கின்றன. குடிக்கிற தண்ணியில்கூடத்தான் எத்தனை எத்தனை விதம்! இந்தக் காலத்துப் பசங்க 'ஃபிகர்' என்பதுபோல், அந்தக் காலத்தில் நாங்க வயசுப் பொண்ணுகளை "கலர்" என்போம். காரணம் பசங்க அனேகமாக வெள்ளைச் சட்டை; அப்படியே கலர் சட்டையாக இருந்தால் ரொம்ப வெளிர் நிறங்களில்தான். பொண்ணுக மட்டும்தான் பல வண்ண உடைகளில் இருப்பார்கள். காரண இடுகுறிப் பெயர் !!

இப்படி அனைத்திலும் varieties …

பரிணாம வளர்ச்சியின் அடிப்படையே அதுதான் என்று டார்வின் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - தருமி - 5

அந்த காலத்தில …
அது ஒரு நயா பைசா காலம்…
- தருமி


இப்போ எந்த ஊராயிருந்தாலும், நாட்டு வாழைப்பழம் என்ன விலையிருக்கும்..? ஒரு பழம் ஒரு ரூபாயிலிருந்து, ஒன்றரைக்குள் இருக்கும். சின்னப் பையனா இருந்தபோது வீட்டில் ஒரு அணா கொடுத்து பழம் வாங்கிட்டு வரச்சொல்லுவாங்க; அப்பவே விலையும் சொல்லி விட்டுடுவாங்க: 'அணாவுக்கு நாலும்'பான்; அஞ்சு கேளு'. அதே மாதிரி கடைக்காரர் நாலு சொல்லுவார்; அஞ்சு அப்டின்னு சொன்ன உடனே 'பிச்சுக்கோ' என்பார். அந்த ரேட்ல ஒரு ரூபாய்க்கு 80 பழம்; அதாவது ரூபாய்க்கு 16 அணா; ஒரு அணாவுக்கு நான்கு காலணா; நாலணான்னா கால்ரூபாய்…இப்படியே போகும். அந்த வாய்ப்பாடு இப்ப எதுக்கு? காலணாவில் இரண்டு டைப்: ஒன்று பெரிய வட்டக் காசு, இப்ப உள்ள ரூபாய் சைஸைவிட பெருசா இருக்கும்; இன்னொண்ணு ஓட்டைக் காலணா. சுண்டு விரல்ல மாட்டிக்கலாம். நல்லா வாய்ப்பாடு எல்லாம் படிக்கிறதுக்கு ஏத்த மாதிரி அரை, கால்,அரைக்கால்,வீசம்…அப்புறம் எங்க காலத்துக்கு முந்தி என்னமோ தம்பிடி கணக்கெல்லாம் சொல்லுவாங்க.. இப்பல்லாம் tables அப்டின்னு சொல்றீங்களே அந்த வாய்ப்பாடெல்லாம் அப்ப நாங்க நல்லா மனப்பாடமா படிக்கணும். அது என்ன கணக்குன்னே தெரியாது. ஒவ்வொரு வாய்ப்பாடும் 16 வரை படிக்கணும்; ஏன் 15 வரை மட்டும் இல்ல அல்லது 20 வரை இருக்கக்கூடாதுன்னு தெரியலை. அதுக்கும் ரூபாய்க்கு 16 அணா என்கிறதுக்கும் தொடர்பு ஏதும் இருக்குமோ? அப்படித்தான் இருக்கணும்.


சரி..சரி.. நாங்க படிச்ச வாய்ப்பாட்டைப் பற்றி எங்களுக்கு என்னென்னனு கேக்றீங்களா? அது சரிதான். ஆனாலும் பாருங்க அப்படிப் படிச்ச அந்த வாய்ப்பாடுகள் நம்ம நாட்டையே எவ்வளவு உசத்திச்சு தெரியுமா? house mate மாதிரி ஒரு சைனாக்கார நண்பரோடு 100 நாள் அமெரிக்காவில இருந்தப்போ, இரண்டு பேரும் சேர்ந்து கடை, கண்ணிக்கு (இந்த "கண்ணி"ன்ற வார்த்தைக்கு யாராவடது அர்த்தம் சொல்லுங்களேன்.)போவோம். அப்போவெல்லாம் இரண்டு பழக்கம் இரண்டு பேருக்குமே. எதை எடுத்தாலும் make எங்கேன்னு பார்ப்போம். நூற்றுக்கு 90 சைனாவாக இருக்கும்; ரொம்ப பெருமையா என்னைப் பார்ப்பார். பிறகு அவரவர் ஊர் காசுக்கு வேல்யூ போட்டுப் பார்ப்போம். நம்ம ஊரு காசுக்கு குத்து மதிப்பா 50-ஆல் பெருக்கிச் சொல்வேன்; அப்ப டாலருக்கு 47-48 ரூபாய்னு ஞாபகம். அவர் ஊர் காசுக்கு 8-ஆல் பெருக்கணும். மனக்கணக்குதான் நமக்கு அத்து படியாச்சே; டக்கு டக்குன்னு சொல்லிடுவேன். ஷாவோ - அதுதான் நம்ம சைனா நண்பர் பேரு - நம்ம சைனா நண்பருக்கு ஒரே ஆச்சரியமா போகும். ஒரு தடவை 58 டாலருக்கு அவரு காசுல எவ்வளவுன்னு கணக்குப் பண்ண அவரு மண்டையை உடச்சிக்கிட்டடு இருந்தார்; நான் போனதும் சட்டுன்னு 448-ன்னு சொன்னேன். 56 X 8 -இதை மனக்கணக்கா சொன்னதும் மனுஷன் அசந்திட்டார். எப்படி இப்படி டக்குன்னு சொன்னீங்கன்னு கேட்டார். முதல்ல 50 X 8 ஆல பெருக்கிட்டு, பிறகு 6 X 8 பெருக்கி அதைக் கூட்டிக்கவேண்டியதுதானேன்னு சொன்னேன். தலைவருக்கு ஒண்ணும் புரியலைன்னு தெரிஞ்சுது. அதுக்குத்தான இது வச்சிருக்கோம்ல அப்டின்னுட்டு கால்குலேட்டரை எடுத்து தட்ட ஆரம்பிச்சார். ஆனா, உடனே என்ன சொன்னார் தெரியுமா? 'இதுனாலதான் நீங்க சாஃப்ட்வேர்ல எக்ஸ்பெர்ட்டா இருக்கீங்க' அப்டின்னார். (software ஆளுகளே, உங்க மரியாதையை எவ்வளவு ஏத்தி உட்டுட்டு வந்திருக்கேன்; பாத்தீங்களா?) இப்ப அணா கணக்கில இருக்கிற நல்ல விஷயம் தெரியுதா?


இப்படி இல்லாம் நல்லபடியா போய்க்கிட்டு இருந்தப்போ அப்பா ஒரு நாள் இன்னும் கொஞ்ச நாளிலிருந்து இந்த காலணா, அரையணா, எல்லாம் போய்ட்டு நயா பைசா வரப்போகுதுன்னாங்க. கால் ரூபாய், அரை ரூபாய், ஒரு ரூபாய் எல்லாம் இருக்குமானு கேட்டேன். அதெல்லாம் இருக்கும்;ஆனா மற்ற காசு எல்லாம் மாறும்னாங்க. அஞ்சு வாழைப்பழம் வாங்கணும்னா என்ன பண்ணணும் அப்டின்னேன். ஆறு நயா பைசா கொடுக்கணும்னாங்க. அப்போ ஒரு அணாவிற்கு 6 பைசான்னா, ஒரு ரூபாய்க்கு 6 X 16 = 96 பைசாதான் அப்டின்னா, ரூபாய்க்கு 96 பைசாவா அப்டின்னு 'டாண்'ணு கேட்டேன்.(எப்படி நம்ம வாய்ப்பாடு அறிவு?) இல்ல 100 பைசா அப்டின்னாங்க. அந்த நாலு பைசா என்ன ஆச்சுன்னு கேட்டேன். அப்பா சொன்னது ஒண்ணுமே புரியலை.


அரை ரூபாய்க்கு 50 பைசா; கால் ரூபாய்க்கு 25 பைசா வரை சரியா கணக்கு வந்தது. அதுக்குப் பிறகு கணக்கு ரொம்பவே உதைச்சுது. இரண்டணாவிற்கு எத்தனை பைசா என்று கேட்டேன். அப்போ இரண்டு இரண்டணா சேர்ந்தா ஒரு கால் ரூபாய். அப்பா வசமா மாட்டிக்கிட்டாங்க. 12 பைசாவா, 13 பைசாவா? சரி அது போகுது; நாலணா கொடுத்து ஓரணாவிற்குப் பழம் வாங்கினால் மீதி 19 பைசா கேக்கணுமா, இல்லை 18 பைசாவா? அப்பா ரொம்ப பொறுமையா இதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்; பிறகு எல்லாமே நயா பைசாவிலதான் இருக்கும்னாங்க. ஆனா, கால், அரை ரூபாய் எல்லாம் இருக்கும்னாங்க. அதுவரை சில கஷ்டம் இருக்கும்னாங்க. எனக்குப் பிடிபடலை. ரூபாய் இருக்கும்; அதிலும் கால், அரை ரூபாய் இருக்கும். ஆனால், மீதியெல்லாம் பைசாவில் இருக்கும். இது எப்படி? அப்ப எப்படி சாமான்கள் வாங்கிறதுன்னு கேட்டேன். கொஞ்ச நாளைக்கு அணாவிலும், நயா பைசாவிலும் இருக்கும்; கொஞ்சம் கொஞ்சமாக மாறி கடைசியில் எல்லாமே நயா பைசாவாக மாறிடும்னு சொன்னாங்க.


நாளும் நெருங்கி வந்திச்சு. google இந்த மாற்றம் 1957-ல் நடந்ததாகச்சொல்கிறது. அப்டின்னா அப்போ என் வயசு 12-13. அன்னைக்கி நயாபைசா புழக்கத்துக்கு வர்ரதாகச் சொன்னாங்க. எல்லாருமே, பெரியவங்க சின்னவங்கன்னு எந்த வித்தியாசமும் இல்லாம ஒரே பயங்கர எதிர்பார்ப்புடன் இருந்தோம். வீட்டிலிருந்து நாலைந்து வீடுகள் தள்ளிதான் போஸ்ட் ஆஃபீஸ் இருந்தது. காலையிலேயே பெரிய க்யூ ஆரம்பிச்சிருச்சி. நானும் மதியம் வரிசையில் போய் நின்றேன். கையில் இரண்டணா. இரண்டு போஸ்ட் கார்டு மட்டும் வாங்கி வரச் சொல்லியிருந்தார்கள். வரிசையில் நின்று ஏதாவது ஒப்புக்கு ஒரு கார்டோ கவரோ வாங்கிட்டு மீதி சில்லறையோடு வரும் ஆட்களைச் சுற்றி ஒரு பெருங்கூட்டம் - அந்தச் சில்லறைக் காசுகளைப் பார்க்க. அடேயப்பா, ஏதோ இந்தக் காலத்தில் படையப்பா படத்தில முதல் நாள் டிக்கெட் கிடைத்த 'பக்தன்' போல சில்லறை கிடைத்தவர்கள் இருந்தார்கள். நானும் என் டர்னுக்கு காத்திருந்து, கையில் சில்லறையுடன் வீடு வந்தேன். பள பளன்னு சதுர அஞ்சு பைசா, வளைவுகளோட இரண்டு பைசா,சின்னதா அழகா பள பளன்னு ஒரு பைசா என சில்லறை. பாக்க பாக்க ஆசையா இருந்திச்சு.


அப்புறம் கொஞ்ச நாள் ரொம்பவே குழப்பம்தான். அப்போதான் ஒவ்வொரு பைசாவுக்கும் மதிப்பு மரியாதை இருந்திச்சே. நாளாக நாளாக இந்த ஒரு பைசாவெல்லாம் இல்லாமலேயே போயிருச்சி; அடுத்து அஞ்சு, பத்து பைசாக்களுக்கு மரியாதை இல்லாம போயிருச்சி. பொதுவாகவே பிச்சைக்காரங்களுக்குப் பிச்சை போடறது எனக்குப் பிடிக்காது. ரொம்ப பாவமான ஆளுகளுக்கு கொஞ்சம் கூடவே போடலாம்; மற்றபடி எல்லோருக்கும் போடறது கிடையாது. உறவினர் ஒருவரோடு வெளியூர் சென்றிருந்த போது அவர் ஒரு 25 பைசாவைப் பிச்சையாகப் போட, அந்தப் பிச்சைக்காரன் உறவினரைக் கன்னா பின்னாவென்று பேச, எல்லோரும் ஏதோ நாங்கள் அந்தப் பிச்சைக்கரானிடமிருந்து எதையோ திருடிவிட்டது போல பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்படி ஆச்சுது 25 பைசா நிலைமை. இப்போவெல்லாம், கால் ரூபாய், அரை ரூபாய் எல்லாமே காணாம போயிருச்சி.


இதுல என்னென்னா,நாலணா கொடுத்து ஓரணாவிற்குப் பழம் வாங்கினால் மீதி 18 பைசாவா, 19 பைசாவா என்பது அன்றைய பிரச்சனை; இன்றோ, பத்து ரூபாய் கொடுத்து 8ரூபாய், 60 பைசாவிறகு சாமான் வாங்கினால் மீதி ஒரு ரூபாய் மட்டும் திரும்பக்கொடுக்கும்போது, 'இன்னும் 40 பைசா கொடு' என்று கேட்கவும் முடியாமல், விட்டுட்டுப் போகவும் முடியாமல் இருப்பது இன்றைய பிரச்சனை!

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - தருமி - 4

அந்த காலத்தில …
என் முதல் (போன்) காதல்

- தருமி

இது நடந்தது என் 14-15 வயசில. அந்தா இந்தான்னு 50 வருஷம் ஆகிப் போச்சு. அதுவரை நான் பார்த்த சிவாஜி படத்திலெல்லாம் ஒரு கருப்பு போனை கைல தூக்கிக் கிட்டே அவர் ஸ்டைலா நடந்துகிட்டே பேசுறதப் பாத்து அட்லீஸ்ட் நம்மளும் என்னைக்காவது ஒரே ஒரு போன்கால் செய்ய மாட்டோமான்னு ஒரு ஆசை வந்துகிட்டே இருந்துச்சு. போனை காதில வச்சுக்கிட்டு, ஸ்டைலா '..ஆங்... சொல்லுங்க.. சரி..ஓகே.. செஞ்சுடுவோம்' அப்டின்னெல்லாம் பேசணும்னு ஆசையா இருந்திச்சு. அப்படியெல்லாமா அப்பாட்ட சொல்ல முடியும்? பொத்தாம் பொதுவா அப்பாட்ட போன் பேசுறது பத்தி பேசி வச்சேன். 'ஆகட்டும்; பார்க்கலாம்'னு சொன்னாங்க. அப்பல்லாம் அப்பாமார்கள் அப்படி சொல்றதுதான் ஸ்டைல். ஏன்னா, அப்படித்தான் கர்மவீரர் சொல்லுவார். ஆனா அவர் அப்படி சொல்லிட்டு செஞ்சுருவார். ஆனா எங்க அப்பா நான் கேக்கிறதுக்கு இந்தப் பதிலைச் சொல்லிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க.

நயினா ஸ்கூல் வாத்தியாரா? அப்போவெல்லாம் மக்குப் பசங்கதான் ட்யூஷன் படிக்க வருவாங்க.. அதில் ஒரு பையன் எனக்கு ஒரு வருஷம் ஜூனியர். நான் 9வது படிக்கும்போது அவன் அப்பாகிட்ட படிச்சான். எங்க பக்கத்துத் தெருதான். தெற்கு வெளி வீதியில அவங்க வீடு. பெருசா இருக்கும். வீட்டுப் படிகூட அவ்ளோ உசரம். நாங்க இருந்ததோ ஒரு ஒண்டுக் குடித்தனம். மூணு குடித்தனத்தோடு இருப்போம். எங்க வீட்டு போர்ஷனுக்குள்ள வர்ரதுக்கே தனித்திறமை வேணும். கிணற்றடி, அதச் சுத்தி எப்பவும் கட்டி நிக்கிற தண்ணி இதையெல்லாம் டாட்ஜ் செஞ்சு வந்தாதான் புழச்சாங்க. நடுவில பாசியில வழுக்கி விழ ஏகப்பட்ட சான்ஸ். நிறைய பேர் 'சர்ருன்னு' வழுக்கி விழுந்து வச்சத பார்க்கணுமே... புதுசா வர்ரவங்களை நான் வீட்ல இருக்கிறப்போவெல்லாம் usherer வேல பார்த்து காப்பாத்திருவேன்.. இல்லாட்டி அவங்க தலைவிதிப்படி நடக்கிறதுதான்..

அப்பத்தான் இந்தப் பையன், நம்ம ஜூனியர் - பேரு நவநீத கிருஷ்ணன் - வந்து சேர்ந்தான். ஒரு நாள் அப்பாவுக்கு நான் போன் பேசணும்னு சொன்னது ஞாபகத்துக்கு வர, நம்ம நவநீதன்கிட்ட 'டேய், ஜார்ஜை வீட்டுக்குக் கூட்டிட்டு போய் ஒரு போன் பண்ண வையேண்டா' அப்டின்னாங்க. அவனும் சரின்னு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனான். அந்த உசரப் படிக்கட்டைப் பார்த்ததுமே மிரண்டு போய்ட்டேன். வீட்டுக்குள்ள போனா, அது பாட்டுக்கு நீளமா போய்க்கிட்டே இருந்துச்சு. ரொம்பவே அசந்துட்டேன். வீட்டுக்கு நடுவில சோபா அது இதுன்னு இருந்திச்சு. உடம்பு எதிலயும் படாம பாத்துக்கிட்டேன். பணக்காரத்தனத்தைப் பார்த்தா அப்ப இருந்தே ஒரு தயக்கம்; இன்னும் கூட இருக்கு. ஒரு நாற்காலி பக்கத்தில ஒரு மேஜை மேல பள பளன்னு கருப்ப்ப்பா டெலிபோன் உக்காந்திருச்சு. நீங்கல்லாம் நிறைய பேரு பாத்திருக்க மாட்டீங்க.. அதில டயல் ஒண்ணும் இருக்காது. டயல் இருக்கிற இடத்துல ஒரு ஒத்த ரூபாய் சைஸ்ல ஒரு வட்டம்.. அதில அந்த போன் நம்பர் எழுதியிருக்கும். அப்போல்லாம் மூணு டிஜிட்தான் என்று ஞாபகம்.

நவநீதன் போனக் காமிச்சி, 'ம்ம்..போன் பண்ணு' அப்டின்னான். இப்படி சொன்னா நான் என்ன பண்ண முடியும்? என்ன செய்யணும் ஏது செய்யணும்னு எனக்கு என்ன தெரியும். 'இல்ல.. வேணாம்; நான் பண்ணலை' அப்டின்னேன். சரி நான் ரயில்வே என்கொயரிக்கு போட்டுத் தர்ரேன். ஏதாவது பேசு அப்டின்னான். அப்போவெல்லாம் டைரக்ட் ட்யலிங் கிடையாது. என்கொயரிக்குப் போன் செஞ்சு, அங்க நாம யார்ட்ட போன் பேசணும்னு சொன்னா அவங்க கனெக்ட் பண்ணுவாங்க. அதெல்லாம் யாருக்குத் தெரியும்.

அவனே என்கொயரிக்கு போன் போட்டு, ரயில்வே என்கொயரி அப்டின்னான். உடனே என்கிட்ட கொடுத்தான். நான் கையில வாங்கியதுமே ஹலோ..ஹலோ அப்டின்னேன். 'கொஞ்சம் பொறு; கனெக்க்ஷன் கிடச்ச பிறகு பேசு' அப்டின்னான். சரின்னு காதில வச்சிக்கிட்டு, என் கவனத்தையெல்லாம் அந்த இடது காதில தேக்கி வச்சிக்கிட்டு காத்துக்கிட்டு இருந்தேன். என்னமோ சத்தமெல்லாம் கேட்டது மாதிரி இருந்திச்சி. திடீர்னு காதில 'ஹலோ'ன்னு ஒரு சத்தம் கேட்டுச்சி. நாம ரொம்ப மரியாதைக்காரங்க இல்லியா ... அதனால நானும் திருப்பி 'ஹலோ' அப்டின்னேன். அந்தப் பக்கம் இருந்து மறுபடி 'ஹலோ' அப்டின்னு சத்தம் வந்திச்சி. நாம மரியாதை கொடுக்கிறதை நிறுத்தலாமோ ... அதனால நானும் மறுபடியும் 'ஹலோ' அப்டின்னு சொன்னேன். 'டொக்' அப்டின்னு சத்தம் வந்திச்சி. பேய்முழி முழிச்சிக்கிட்டு, இருந்தாலும் போனை காதில இருந்து எடுக்காம அப்டியே உறஞ்சு போய் நின்னுக்கிட்டே இருந்தேன். இனிம ஒருவேளை மறுபடி பேசுவாங்கன்னு நினச்சிக்கிட்டு இருந்தேன். ஒண்ணையுமே காணோம்.


என் முழியைப் பாத்து நவநீதன் என் கையில இருந்து போனை வாங்கி காதில வச்சுப் பாத்துட்டு 'கட்' பண்ணிட்டாங்க. ஹலோன்னு சொன்னா நீ உடனே ஏதாவது ட்ரெயின் எப்போ வரும்னு கேக்க வேண்டியதுதானே அப்டின்னான். 'அடப்பாவி, இதையெல்லாம் மொதல்லே சொல்லிக் கொடுத்திருக்கக் கூடாதா; இப்போ சொல்றியே' அப்டின்னு நினச்சுக்கிட்டேன். வேற யார்ட்டயாவது பேசுறியான்னு கேட்டான். 'யார்ட்டயாவது பேசணும்னுதான் ஆசையா இருக்கு; ஆனா யார்ட்ட பேசுறதுன்னு தெரியலையே..' அப்டின்னு மனசுக்குள்ள ஓடுன டயலாக்கை அவனிட்ட எப்படி சொல்றது? அதெல்லாம் வேண்டாம்னுட்டு போன் பண்ற ஆசைய மூட்ட கட்டி வச்சிட்டு வந்ததுதான் என் முதல் போன் காதல்.

அதுக்குப் பிறகு 80-களின் ஆரம்பத்தில் ஒரு நண்பன் தனக்குக் கிடைத்த தொலைபேசி இணைப்பை அவனுக்கு வேண்டாமென்பதால் நீ வாங்கிக் கொள்கிறாயா என்று கேட்டபோது 'போன் வச்சிக்கிற அளவுக்கு நானெல்லாம் பெரிய ஆள் இல்லை; அதெல்லாம் வேண்டாம்' என்று சொல்லிவிட்டேன். அதன்பின் தொலைபேசி இணைப்புக்குப் பதிவு செய்துவிட்டு ஆறு ஆண்டுகள் காத்திருந்த பின் 90-களின் நடுவில் வீட்டுக்கு போன் வந்தபோது … அடேயப்பா! என்ன சந்தோஷம்; எல்லோரையும் அழைத்து விருந்து போடாத குறைதான்!


ஆனால், இப்ப என்னடான்னா என் பேரப் பிள்ளைங்க - முளைச்சி மூணு இலை விடலை - போன்ல சர்வ சாதாரணமா பேசுறது மட்டுமில்ல... webcam-ல பாத்துக்கிட்டு, chat-ல audible போட்டு விளையாடுதுங்க. எல்லாம் கலிகாலம்...