ராமையாவின் குடிசை
- ஹரன்பிரசன்னா
நீண்ட நாள் நான் பார்க்க நினைத்துக்கொண்டிருந்த 'ராமையாவின் குடிசை' என்கிற ஆவணப் படத்தை பத்ரி தந்தார்.
ராமையாவின் குடிசை, இயக்கம்: பாரதி கிருஷ்ணகுமார். விலை 250 ரூபாய்.
தனியொருவனுக்கு உணவு இல்லை. ஜகத்தை எரிக்காமல் பசித்தவர்களையே எரித்த கதை.
01. ஆவணப் படம், ஒரு (கம்யூனிஸ்ட்) கட்சியின் சார்பாகத் தயாரிக்கப்பட்டிருந்தாலும், மிகச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
02. ஆரம்பக் காலம் முதலான பிரச்சினைகள் விளக்கப்பட்டு, அப்பிரச்சினை 'நெல் உற்பத்தியாளர் சங்கம்' என்பதன் தோற்றத்தோடு உச்ச நிலையை அடைவதும் சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
03. தலித்துகள் இருக்கும் இடத்திற்குப் பிரச்சினை செய்ய வரும் பக்கிரிசாமி என்கிற, நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவரான நாயுடுவின் ஆள் மரணம் அடைகிறார். இதற்குப் பழி தீர்க்கும் விதத்தில் தலித்துகள் மீது தீவிரமான தாக்குதல் நடத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 44 பேர் ஆளடையாளம் தெரியாமல் கரிக்கட்டையாக எரித்துக் கொல்லப்படுகிறார்கள்.
04. 44 பேர் இறந்ததார்கள் என்று தலித்துகள் தரப்பும், 42 பேர்கள் இறந்தார்கள் என்று காவல்துறை தரப்பும் தெரிவிக்கிறது. 42 பேர்கள் இறந்தார்கள் என்றும், ஒரு பெண் தனியாக இறந்து கிடந்ததைச் சேர்த்தால் 43 என்றும், பச்சிளம் குழந்தை ஒன்று கரிக்கட்டையாக இறந்து போயிருந்தால் அதன் தடமே கிடைக்காமல் போயிருக்கலாம் என்பதால் 44 என்றும் ஒருவர் சொல்கிறார். எனக்குப் பதறிவிட்டது.
05. கொல்லப்பட்ட 44 பேர்களில் பலர் குழந்தைகள், பெண்கள்.
06. நாயுடு ஒரு பெண் பித்தர் என்கிற விவரங்களை சில தலித்துகள் தெரிவிக்கிறார்கள். ஆனால் நாயுடுவின் உறவினர் இதை மறுக்கிறார்.
07. நாயுடுவின் உறவினர், சம்பவம் நடந்த அன்று செய்தி சேகரிக்கச் சென்ற தினத்தந்தி நிருபர், நாயுடு கொலையில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை கிடைக்கப்பெற்றவர்கள், தண்டனையை நேரில் பார்த்தவர்கள் எனப் பலர் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்கிறார்கள். கீழ்வெண்மணி நிகழ்வை அடிப்படையாக வைத்து 'குருதிப்புனல்' நாவலை எழுதிய இந்திரா பார்த்தசாரதியின் ஒரு காட்சியில் தோன்றி, நாயுடுவை ஆண்மை இல்லாதவனாக வைத்ததன் பின்னணியைச் சொல்கிறார். ஒரு நாவலாசிரியராக அவர் நாயுடுவுக்குக் கொடுத்த ஒரு சிறந்த தண்டனை என்று நினைத்துக்கொண்டேன்.
08. ஒருவர் இது சாதிப் பிரச்சினை அல்ல, கூலிப் பிரச்சினை என்கிறார். இன்னொருவர் இதை சாதிப் பிரச்சினை என்கிறார். எனக்கென்னவோ இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருப்பதாகத்தான் தெரிகிறது, இந்த ஆவணப் படத்தைப் பார்த்த வரைக்கும்.
09. கூலி கேட்டுப் போராடும் தலித்துகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தருகிறது. இதனை எதிர்த்து, நாயுடுவின் ஆள்கள் வெளியூரிலிருந்து கூலியாட்களைக் கொண்டுவந்து வேலை செய்ய வைக்கிறார்கள். உள்ளூர் கூலியாள்கள் இதனைக் கடுமையாக எதிர்க்க, போராட்டம் தீவிரமடைகிறது.
10. தலித்துகளை வேட்டையாட வரும் நாயுடுவின் ஆள்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டும், வீடுகளுக்குத் தீவைத்துக்கொண்டும் அராஜகம் செய்கிறார்கள். அதனைப் பார்க்கும் 13 வயதுச் சிறுவன் நந்தன், அதிலிருந்து 14 வருடங்கள் கழித்து நாயுடுவைப் பழி வாங்குகிறான்.
11. தஞ்சாவூர் செசன்ஸ் கோர்ட்டில் நாயுடு உள்ளிட்ட குற்றவாளிகளுக்கும், பக்கிரிசாமி கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தலித்துகளுக்கும் தண்டனை கிடைக்கிறது. ஆனால் உயர்நீதி மன்றத்திலும், உச்சநீதி மன்றத்திலும் நாயுடு உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு விடுதலை கிடைக்கிறது. ஆனால் தலித் மக்கள் மீதான் தண்டனை உறுதி செய்யப்படுகிறது.
12. சி.என். அண்ணாத்துரையின் ஆட்சிக்காலத்தில் இச்சம்பவம் நடக்கிறது. இச்சம்பவத்திற்கு முன்பாக, கம்யூனிஸ்டுகளின் போராட்டம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அண்ணாத்துரையின் அரசு மெத்தனமாக நடந்துகொண்டதாக கம்யூனிஸ்ட் கட்சி கருதியதாகத் தெரிகிறது. சம்பவத்துக்குப் பின்னர் கருணாநிதி நேரில் சென்று எரிந்துபோன ராமையாவின் குடிசையைப் பார்வையிட்டிருக்கிறார் என்றும் தலித் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார் என்றும் இந்த ஆவணப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
13. தீ வைத்துக் கொளுத்தப்பட்ட தலித் மக்களின் கரிக்கட்டைத் தேகம் அடங்கிய புகைப்படங்கள் மனதை உலுக்குகின்றன. நம் கல்வியும் சமூகமும் நமக்குக் கற்றுத்தந்ததவை இவைதானென்றால் அதற்காக நாம் வெட்கப்படவேண்டும்.
14. 1968ல் நடந்த இத்துயரச்சம்பவத்தை பெரியார் தீவிரமாகக் கண்டிக்கவில்லை என்கிற கருத்து நிலவுகிறது இணையத்தில் கீழ்வெண்மணி + பெரியார் என்று தேடிப்பாருங்கள். கிடைக்கும் சுட்டிகளில் ஒவ்வொன்றாகப் படித்துப்பாருங்கள். அதற்குப் பின்பு பைத்தியம் பிடிக்காமல் இருந்தால் நிச்சயமாக நீங்கள் வீரர்தான். இது ஒருபுறமிருக்க, எதையும் கடுமையாகக் கண்டிக்கும் பெரியார், கடுமையான செயல்கள்மூலம் எதிர்வினை புரியும் பெரியார், 44 தலித் மக்கள் கொல்லப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் மென்மையாகத்தான் கண்டித்திருக்கிறாரோ என்றும் எனக்குத் தோன்றுகிறது.
15. எந்த ஒரு பிரச்சினைக்கும் பூணூல் அறுப்பு, குடுமி அறுப்பு எனக் கிளம்பும் பெரியார், 44 தலித்துகள் கொல்லப்பட்ட விஷயத்தில் குறைந்தது ஒரு பத்து பேர் குடுமியையாவது ஏன் அறுக்காமல் விட்டார் என்பதுதான் புரியவில்லை.
16. 44 பேர் இறந்தது உணவுக்காக என்று நினைக்கும்போது இச்சமூகம் குறித்த கேள்விகளே மிஞ்சுகின்றன.
Showing posts with label ஆவணப்படம். Show all posts
Showing posts with label ஆவணப்படம். Show all posts
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஹரன் பிரசன்னா - 3
பதிவு செய்தது : பண்புடன் at 1 பின்னூட்டங்கள்
பதிவு வகை : ஆவணப்படம், வார நட்சத்திரம்
Subscribe to:
Posts (Atom)