Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மோகன் தாஸ் - 3

ரப் நே பனா தி ஜோடி
- மோகன் தாஸ்

ரப் நே பனா தி ஜோடிக்கு அர்த்தம் மிகச்சரியாக கடவுள் உருவாக்கிய தம்பதிகளா என்று சொல்லமுடியாவிட்டாலும் சொல்லவரும் கருத்தென்னவோ அதுவாகத்தான் இருக்க முடியும். ஷாருக்கானிடம் இருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்த்தேனா என்று சொல்லத் தெரியவில்லை. நான் இன்னமும் கூட 'ஓம் சாந்தி ஓம்' பார்க்கலை, 'கபி அல்விதா நா கெஹ்னா' பார்த்ததோட சரி. என் ப்ராஜக்ட் ஒருவாறு முடிந்திருக்க காலையில் சர்வரின் மதர் போர்ட், ஹார்ட் டிஸ்க் எல்லாம் ஒட்டுமொத்தமாய் படுத்துக் கொள்ள இணையம் இல்லாவிட்டால் உலகமே இல்லாததாகிவிடும் எங்கள் சூழ்நிலையில் சட்டென்று சினிமாவிற்கு செல்வதென்று முடிவெடுத்ததும் ஓடிக்கொண்டிருக்கும் 'டிரான்ஸ்போர்ட்டர் 3' அல்லது 'ரப் நே பனா தி ஜோடி' இரண்டில் ஒன்றென்று யோசித்து ரப் நே பனா தி ஜோடிக்கு சென்றிருந்தோம். பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை, இந்தப் படத்தைப் பற்றி படித்த இரண்டு வரிகள் என்றால் நாராயணன் எழுதிய இரண்டு டிவிட்டுகளாகத்தான் இருக்கும். கதை சொல்லும் எண்ணம் கிடையாதென்றாலும், அங்கங்கே முடிச்சுகள் அவிழ வாய்ப்புள்ளது என்பதால் படம் பார்க்க தீர்மானித்துள்ள மக்கள் மாப்பு கொடுத்துவிட்டு ஒதுங்கிவிடலாம்.

பெரிய அளவில் முடிச்சுகள் எதுவும் இல்லைதான் படத்தில், சாதாரணமான கதை, உள்ளுணர்வுகளுக்காக மட்டும் ஒரு படம் எடுத்திருக்கிறார்கள் என்பதில் கொஞ்சம் சந்தோஷயம் தான். ஹெவி வைட் சண்டைக்காட்சி இல்லையென்று சொல்லலாம் என்றால்; சுமோ வீரனுடன் ஷாருக்கான் மோதும் காட்சி வந்து மனதை அலைக்கழிக்கிறது அது நகைச்சுவைக்காக என்றாலும் கூட. படத்தினுடைய பெரிய லாஜிக்கல் ஓட்டை மீசை எடுத்த ஷாருக்கானைக் கூட தெரியாமல் விழிக்கும் அவர் மனைவி. ஆனால் இதையும் அவர்கள் இருவருக்குமான பழக்கம் வெறும் டிபன்பாக்ஸ் காலையில் செய்து தருவதிலும் சினிமா தியேட்டரில் சினிமா பார்ப்பதிலும் என்பதால் விட்டுவிடலாமா என்றால் அங்கேயும் என் மனது உதைக்கிறது. கூட வசிக்கும் ஒருவனை அவன் மீசையை எடுத்துவிட்டால் கொஞ்சம் ஃபேன்ஸியா டிரெஸ்ஸிங்க் செய்தால் தெரியாமலா போய்விடும் என்றால் அந்நியன் படம் பார்த்த எஃபெக்ட் வேறு வந்து டிஸ்டர்ப் செய்கிறது.

சிம்பிளான லைன், திருமண நாளன்று காதலித்த மாப்பிள்ளை இறந்துவிடுவதால் தன் ஆசிரியரின் மகளின் திருமணத்திற்குச் சென்ற ஷாருக்கானுக்கு அவர் மகளையே திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம். இதில் பார்த்ததும் காதல் கொஞ்சம் சகிக்கலை என்றாலும் சட்டென்று உள்மனம் 'மச்சி அந்த ஃபிகரைப் பார்த்ததும் உன் மனசு பதறுச்சே அதுதான் லவ்' என்று சொல்லித் தொலைப்பதால் பார்த்ததும் காதல் சாத்தியம் என்று நானும் உணர்கிறேன் என்றே வைத்துக் கொள்ளலாம் ;). எனக்கு சினிமா பார்த்துவிட்டு வந்துவிடும் fate ஷாருக்கானுக்கு அந்த ஃபிகரை கல்யாணம் செய்து கொண்டு அமிர்தசரஸிற்கு அழைத்துவரும் fate. என்னது 'நான்' fateஐ நம்புகிறேனா என்ற கேள்விக்கு நான் கொண்டுவர நினைத்த மெல்லிய நகைச்சுவை உணர்விற்காக மன்னித்துக் கொள்ளுங்கள். 'நான்' என்பது எங்கேயும் பெரிய பிரச்சனை தான், அதை மறைத்துவிட்டு நடமாடுவது பல சமயங்களில் நாம் என்னத்திற்காக நடித்துக் கொண்டிருக்கிறோம் என்கிற கேள்வியை தன்னாலே எழுப்பி தூங்க விடாமல் செய்துவிடும். இந்தப் படத்திலும் அப்படி ஒரு 'நான்' பிரச்சனை தான்.

கல்யாணம் செய்து கொண்டு வந்த அனுஷ்கா சர்மா பழைய காதலன் நினைவில் உருகிக் கொண்டிருக்க, திடீர்க்கல்யாணம் என்றாலும் காதல் கல்யாணம் செய்துகொண்ட ஷாருக் - தன் சுய பச்சாதாபத்தில் நெளிந்து கொண்டிருக்க கதைக்கு வருகிறார் அன்பு அண்ணன் வினய் பத்தக். எங்கடா கடைசியில் 'அட்டு' படத்துக்கு வந்திட்டோம் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது களேபரம் செய்தது போல் உள்நுழையும் வினய்யின் கதாப்பாத்திரம் அழவேண்டிய இடத்தில் அழுது சிரிக்க வேண்டிய இடத்தில் சிரித்து செய்ய வேண்டியதை செய்ய வேண்டிய நேரத்தில் செய்து படத்தை நகர்த்தியிருக்கிறது. இவர் மட்டும் இல்லாவிட்டால் இந்தப் படத்தை பார்த்த சோட்டுக்கு வீட்டிற்குப் போனமா வாங்கிவந்திருக்கும் நாவலில் இன்னொன்றை முடித்தோமா என்று நீண்டிருப்பேன். கட்டிப் போட்ட கதாப்பாத்திரம் வினய் பத்தக், என்றாலும் ஷாருக்கின் கதாப்பாத்திரம் - அந்த மீசை சமாச்சாரத்தை மட்டும் கொஞ்சம் மறந்துவிட்டு - பார்த்தால் செய்திருக்கும் சாகசம் சாதாரணமானுது இல்லை தான். அந்நியன் படத்தில் பிரகாஷ்ராஜுடன் விக்ரம் வசனம் பேசுவார், மல்டிபிள் பெர்சனாலிட்டி டிஸ்ஸார்டரில் வந்துவந்து போகும் விஷயத்தில் பிரம்மாதப் படுத்தியிருப்பார். அப்புறம் நம்ம அனுஷ்கா சர்மா - சொல்லவும் வேண்டுமா அங்கங்கே க்ளவேஜ் காண்பிக்கிறார் அழகாய் சிரிக்கிறார் பப்ளியாய் இருக்கிறார்.(இதென்ன வரவர எல்லா சினிமா ஹீரோயின்களையும் சைட் அடிக்க தொடங்கியிருக்கிறேன் என்று தெரியவில்லை. சர்தாரினியா நச்சுன்னு இருக்கா!)

க்ளைமாக்ஸில் வரும் அந்தப் பகுதி போன்று ஷாருக்கானுக்கு பாதி படம் முழுக்க திறமை காட்டும் வேலை. நன்றாகச் செய்திருக்கிறார், இன்னும் நன்றாகச் செய்திருக்க முடியும் என்றே நான் நினைக்கிறேன். கொஞ்சம் முதுமை தட்டிய உணர்வு மீசை இல்லாத மாதவன் ச்ச ஷாருக்கானிடமும் கூட வருகிறது. நல்ல நடிப்புக்காரன் என்பது அழகாய்த் தெரிகிறது சோகத்திலிருந்து சந்தோஷத்திற்கும் உற்சாகத்திலிருந்து துக்கத்திற்குமாய் அவர் transformation நன்றாய் வந்திருக்கிறது. மீசை இல்லாத ஷாருக்கான் 18 வயது அனுஷ்காவுடன் டான்ஸ் ஆடும் பொழுது அத்தனை விகாரமாய் இல்லை என்று தான் சொல்வேன், இங்கே இதை எழுதும் பொழுது நம் தமிழ்நாட்டு ரசினிகாந்த் விசயகாந்த்கள் நினைவில் வந்து போகிறார்கள் தான்.

தன் மனைவியை பிரமிப்பூட்ட வினய்யுடன் சேர்ந்து ஷாருக் செய்யும் நாடகம் சட்டென்று நீண்டு ராஜ் என்கிற ரோலாக நீளும் பொழுது எழும் சந்தேகம் வார்த்தைக்கு வார்த்தை கடவுள் பெயரைச் சொல்வதால் விட்டுவிட வேண்டியதாயிருக்கிறது. கடவுள் பேச்சுக்கு மறுபேச்சு உண்டா உலகில். சாதாரணனாக அனுஷ்காவை திருமணம் செய்து கொண்டவனாக ஷாருக்கான், அசாதாரணமானவனாக அனுஷ்கா 'ரொம்பவும் போர்' அடிப்பதால் போகும் நடனக் குழுவில் இணைந்து கொள்ளும் நண்பன் என்று நீள்கிறது கதை. இங்கே தான் முக்கியமான டிவிஸ்ட். கொஞ்சம் கொஞ்சமாய் தன் உள்ளிருக்கும் இன்னொரு பர்ஸனாலிட்டியான 'ராஜ்' ஆக ஷாருக்கான் அனுஷ்காவை கவர்ந்துவிடும் பொழுது வரும் பிரச்சனை தான் முன் சொன்ன அந்த 'நான்' பிரச்சனை. அனுஷ்கா காதலிப்பது அசாதாரணமான ஷாருக்கானைத் தான், உண்மையில் அவளை மிகவும் விரும்பும் - அந்த விருப்பத்திற்காகவே - சாதாரணனில் இருந்து அசாதாரணனாக மாறும் ஷாருக்கானை இல்லை என்பது அவனை கொஞ்சம் அசைத்துப் பார்த்துவிடுகிறது. இங்கே இந்த 'நான்' பிரச்சனையை இயக்குநர் சரியாகக் கையாண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அவனால் தன் இன்னொரு முகத்தை அவளுக்காய் மாற்றிக் கொண்ட முகத்தைக் காட்டி அவளை தன் வசப்படுத்தியிருக்க முடியும். ஆனால் தான் மாற்றியதாய் காட்டிக் கொண்டிருக்கும் ஒன்று உண்மையில் தான் இல்லை என்று ஹீரோ நம்புவதும் அதனால் ஏற்படும் அழுத்தங்களும் தான் என்னளவில் இந்த சாதாரண படத்தை கொஞ்சம் அசாதாரணப் படமாக ஆக்குகிறது. தமிழ் சினிமாவிற்கு(பாலிவுட் சினிமாதான் பார்த்தது நான் மறுக்கலை) தெரிந்த க்ளைமாக்ஸ் தான், நாலைந்து பாட்டுகள் இருக்கு. கஜோல், பிபாஷா, ப்ரீத்தி ஜிந்தா, ராணி முகர்ஜி ஆடும் ஆட்டம் வேறு உண்டு. ஷாருக்கான் கொஞ்சம் காண்ட்ரவர்ஸியான ரோல்களை செய்துவருகிறார், 'கபி அல்விதா நா கெஹ்னா' ஒரு உதாரணம் இது ஒன்று. அதற்குப் பாராட்டுக்கள். கடவுளைப் பற்றி படத்தில் வரும் வசனங்களை 'இறை மறுப்பாளன்' என்றாலும் கூட அப்படியில்லாத மக்களுக்கு அது எப்படி உணர்த்தப்படும் என்று உணர்ந்து ரசித்தேன். இன்னும் எத்தனை சபர் போக வைப்பாய் என் ரப்பே... என்று புலம்பும் ஒரு சாதாரணனின் கதையைப் போல். என் காதலைக் காதலியைக் கடவுள் காண்பித்துக் கொடுப்பார் என்று நம்பும் இந்தப்படம், Mr. and Mrs. Iyer படங்களைத் தொட்டுச் செல்வதாக நான் உணர்கிறேன். இறை மறுப்பாளனாய் அனுஷ்கா, மீசை இல்லை ஷாருக்கானுடன் தில்லி சென்றிருந்தாள் சந்தோஷப்பட்டிருப்பேன், அனுஷ்கா கடைசியில் உண்மையான காதலை கடவுள் மூலமாய் கண்டடைவதால் மட்டுமில்லாமல்.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மோகன் தாஸ் - 2

மௌனத்தில் உறைந்திருக்கும் சுயம் - Children of a lesser God
- மோகன் தாஸ்




வெகு சில படங்கள் பார்த்து முடித்ததும் மனம் ஜில்லென்று ஆகிவிடுவதுண்டு, பெரும்பாலும் சந்தோஷமான முடிவுகளைக் கொண்டிருக்கும் படங்களில் தான் இந்த உணர்வு வரும். சோகமான முடிவுகளைக் கொண்டிருக்கும் அட்டகாசமான படங்கள் வெகு காலத்திற்கு மனதில் தங்கினாலும் படம் பார்த்து முடித்ததும் காற்றில் பறக்கும் உணர்வைக் கொண்டுவருவதில்லை. சமீபத்தில் பார்த்த Children of a lesser god படமும் அப்படித்தான், காற்றில் பறக்கும் அனுபவத்தைத் தந்தது. மெலோடிராமா தான் என்றாலும் இன்னும் அதன் முடிச்சுகளில் இருந்து விலகிவிடவில்லை என்பதால் ரசிக்க பறக்க முடிந்தது. பொன்னியின் செல்வனின் மணிமேகலைக்கும் வந்தியத்தேவனுக்குமான உரையாடல், பயணிகள் கவனிக்கவும்-ல் ஜார்ஜினாவிற்கும் சத்தியநாராயணாவிற்குமான உரையாடல், என் பெயர் ராமசேஷனில் வரும் ராமசேஷன் - பிரேமா, ராமசேஷன் - மாலா உரையாடல்கள் என்று உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் புத்தகத்தில் இருந்து கூட அந்த உணர்வு சில சமயங்களில் வருவதுண்டு, இதை வேண்டுமானால் pleasure of text என்று சொல்லலாம்.

Children of a lesser god திரைப்படத்தின் கதை சுலபமானது, கவிதை போன்றது. மனதைப் பற்றியதாயும் உள்ளுணர்வுகளைப் பற்றியதாயும் சுயத்தைப் பற்றியதாயும் திரைக்கதை விரிகிறது. சுயத்தை இழக்க விரும்பாத ஒரு காது கேட்க இயலாத பெண்ணைப் பற்றியதும், அந்தப் பெண் இழக்கப்போவதாய் நினைப்பது சுயமே இல்லை; அவள் இழக்கப்போவதாய் நினைக்கும் சுயத்தின் விளைவாய் அவள் வாழ்க்கைக்கான இன்னொரு சாளரம் திறக்கப்போகிறது என்றும் தீவிரமாய் நம்பும் ஒரு ஆணைப் பற்றியதுமானது இக்கதை. மொழி படத்தில் நான் இல்லாததாய் உணர்ந்தது என்னவென்று இந்தப் படம் பார்த்ததும் புரிந்து கொண்டேன். ராதாமோகனின் 'மொழி' படத்திற்கான உந்துதல் இந்தப் படத்திலிருந்து கிடைத்திருக்கும் என்றே நினைக்க வைக்கிறது இந்தப் படத்தில் வரும் பல காட்சிகள், இல்லாமலும் இருக்கலாம். ஏகப்பட்ட ஒற்றுமைகள் இரண்டு படத்திற்கும் இடையில், அது இங்கே தேவையில்லாதது நிறுத்திக் கொள்கிறேன்.

படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது நினைத்துக் கொண்டேன், don't tell me she(heroine) can actually hear and speak என்று, கடைசியில் அது உண்மையாகி அந்தப் பெண்ணால் உண்மையிலேயே கேட்க முடியாதென்று தெரிந்த பொழுது வருத்தமாகயிருந்தது. அற்புதமான டேலண்ட், இந்தப் படத்திற்காக Marlee Matlinக்கு சிறந்த நடிகைக்கான அக்காதமி அவார்ட் கிடைத்திருக்கிறது. William Hurtற்கு சிறந்த நடிகருக்கான அக்காதமி ஏன் கிடைக்கவில்லை என்ற வருத்தமும் உண்டு என்றாலும் சந்தோஷமாகயிருந்தது.

ஹீரோ காதுகேளாதோர் பள்ளிக்கு, அங்கு படிக்கும் மாணவர்களுக்கு பேசக் கற்றுத் தருவதற்காக வருகிறார். அந்தப் பள்ளியில் படித்து அதே பள்ளியில் வேலை பார்க்கும் ஹீரோயினை அவர் முதன் முதலில் சந்திக்கும் இடத்திலேயே அவளுடைய கோபத்தின் காரணமாய் ஹீரோவுக்கு ஹீரோயின் மேல் ஒரு விருப்பம் வந்து விடுகிறது. ஆனால் பின்னர் ஹீரோயின் "she is one of the brightest students we ever had" என்ற அறிமுகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு அந்தப் பள்ளியில் சுத்தம் செய்யும் பெண்ணாய் வேலை செய்யும் விஷயம் தெரிந்ததும் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள முயலும் ஹீரோவுக்கு அவளுடைய பிரச்சனை புரியவருகிறது. அதன் பின்னர் அந்தப் பிரச்சனையை ஹீரோ எப்படித் தீர்த்து வைக்க முயல்கிறார், முடிந்ததா என்பது தான் கதை.

அந்தப் பிரச்சனை மிக முக்கியமானதாக இருப்பதுவும், ஏனோ தானோவென்று எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அந்தப் பிரச்சனையை அணுகாமல் இருப்பதுவும் தான் எனக்கு இந்தப் படத்தை மிகவும் பிடித்திருப்பதற்கான காரணங்கள். ஹீரோயினின் பிரச்சனை எல்லோரும் அவளையே 'லிப் ரீடிங்' கற்றுக் கொள்ளச் சொல்வதும், பேச முயற்சி செய்யச் சொல்வதும் தான். ஏன் மற்றவர்கள் 'Sign language' கற்றுக் கொள்ளக் கூடாது என்பது அவள் கோபம். இதில் முக்கியமான இன்னொரு பிரச்சனை ஹீரோவின் வேலையே காது கேளாத மக்களுக்குப் பேசக் கற்றுக் கொடுப்பது தான். ஹீரோவுக்கு 'Sign language' தெரியுமென்றாலும் அத்தனை வேகம் கிடையாது, ஆனால் அதை விட பெரிய பிரச்சனை ஹீரோயினை தொடர்ந்து பேசக் கற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்துவது தான்.

இப்படி ஹீரோயினை பேசக் கற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்துவதில் தொடங்கும் ஒன்று, பின்னர் காதலாக மாறி அவர்களை சேர்ந்து வாழும் அளவுக்குக் கொண்டு செல்கிறது. ஆனாலும் தொடர்ச்சியாக ஹீரோ, ஹீரோயினை பேசச் சொல்வது அவளுக்கு அவள் சுயத்தை இழப்பதைப் போன்று தோன்றுவதால் இருவரும் பிரிந்து செல்லும் நிலைக்கு ஆளாகிறார்கள். ஹீரோயினின் இளமைப் பருவத்தில் அவளுடன் பழக நினைத்த ஆண்கள் எல்லோரும் ஒரு உரையாடலை/தொடக்கத்தைக் கூட அவளிடம் செய்யாமல் நேரடியாய் உடலுறவையே நினைத்தது அவளை இன்னும் கோபத்தில் கொண்டு போய் மேலும் அவளைத் தனிமைப் படுத்தியிருப்பது ஹீரோவிற்கு புரியவருகிறது. அவளை 'அவள் எப்படி இருக்கிறாளோ' அப்படி ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வாதாடுவதில் இருக்கும் உண்மை ஹீரோவிற்குப் புரிந்தாலும் பேச முடியாததும், 'உதடுகளைப் படிக்க' முடியாததும் அவளைத் தனிமைப் படுத்துகிறது என்று நினைப்பதால் ஹீரோ தொடர்ச்சியாக அவளை அவள் விரும்பாததை செய்யச் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறான்.

கடைசியில் ஹீரோவும் சரி ஹீரோயினும் சரி தங்கள் பக்கமும் தவறு இருக்கிறது என்பதை உணர்ந்ததும் இருவரும் இணைய படம் சுபம்.

ஹீரோயின் மார்லி மாட்லின் இயற்கையிலேயே காது கேட்க முடியாதவர் என்பதால் அந்தக் கதாப்பாத்திரத்தோடு அருமையாக ஒன்றிப் போய்விடுகிறார், படத்தின் ஆரம்பப் பகுதி முழுவதும் கோபக்காரராக வந்துவிட்டு முகத்தை தூக்கிக் கொண்டே வந்துவிட்டு இடையில் ஒரு முறை சிரிக்கும் பொழுதுதான் தெரிகிறது எத்தனை அழகாய் இருக்கிறது அவருடைய புன்னகை என்று. எனக்கென்னமோ கையில் பூனைக் குட்டியுடன் ஹீரோவிற்காக அவர் வீட்டின் முன் காத்திருக்கும் பொழுது அவர் சிரிப்பது விகல்ப்பமில்லாமல் வந்திருப்பதாகப் படுகிறது. அழகான பெண், கோபப்படும் பொழுதும், சிரிக்கும் பொழுதும், ஒவ்வொரு முறையும் 'Sign' செய்யாமல் ஹீரோ பேச முயலும் பொழுதும் தன் தலையைத் திருப்பி அவர் உதட்டை படிக்காமல் இருக்கும் பொழுதும், உணர்ந்து செய்திருக்கிறார். காட்சிகள் மனதில் அப்படியே பதிந்து போய் விட்டது எனக்கு.

ஹீரோவாக வில்லியம் ஹர்ட், மாட்லின் போலில்லாமல் படத்திற்காக 'Sign language' கற்றுக் கொண்டிருப்பாராயிருக்கும். அவர் எப்படி இந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் என்று ஆச்சர்யமே வருகிறது ஒவ்வொரு முறையும் அவருடைய கதாப்பாத்திரத்தை நினைத்துப் பார்க்கும் பொழுது. அவருக்கு எதிரில் நடிப்பவர்கள் செய்யும் 'Sign'ஐ தனக்குத் தானே சொல்லிக் கொண்டும் தன்னுடைய வசனங்களை 'Sign'உடன் பேசிக் கொண்டும் நடிப்பது பெரிய விஷயம். இது எல்லாவற்றையும் விட முக்கியமானது இப்படிச் செய்யும் பொழுது அவர் கஷ்டப்படுகிறார் என்பது போன்றோ, அவர் நடிக்கிறார் என்பது போன்றோ தெரியாமல் இருப்பது. அவருடைய நடிப்பு நிச்சயம் பாராட்டிற்குரியது. மாட்லின் உடைய கோபத்தைப் பார்த்து சிரிப்பது, அவள் சுயத்தின் மீது காரணத்தைச் சொல்லி தனிமைப் படுத்திக் கொள்ளும் பொழுது வருத்தப் படுவது, துரத்தி துரத்தி அவளைப் பேசச் சொல்வது, பின்னர் இருவரும் பிரிந்து வாழும் சமயத்தில் ஏதோ ஒன்றை இழந்ததைப் போலவே இருப்பது என தன் பங்கிற்கு படம் காண்பித்திருக்கிறார் மனிதர்.

இதைத்தவிர்த்தும் மற்ற காது கேளாத மக்களை நம்மிடையே பள்ளி மாணவர்களின் வழியாய் காண்பித்திருக்கிறார் இயக்குநர் Randa Haines, எனக்கு இந்தப் படம் பார்த்ததில் இருந்து Sing language கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகமாகயிருக்கிறது அதை ஆசையாய் முடித்துக் கொள்ளாமல் எதுவும் சீரியஸாய் செய்யவேண்டி இந்தப் பேச்சை இங்கே முடித்துக் கொள்கிறேன்.

வசனங்கள் அத்தனையும் அருமை என்று சொல்லலாம், எல்லா வசனங்களுமே ரொம்ப 'ஷார்ப்'. Broadwayயில் நாடகமாக வந்து கொண்டிருந்ததை படமாக எடுத்ததால் அவர்களுக்கு இந்த வரம் அமைந்திருக்கிறது என்று சொல்லலாம். நான் கதை எழுதும் பொழுதெல்லாம் மெல்லிய நகைச்சுவை இருப்பது போலவே கதை எழுதி வந்திருக்கிறேன், எனக்கு இந்த மெல்லிய நகைச்சுவையின் மீது காதல் உண்டு. ஆனால் முழுநீள நகைச்சுவையின் மீதல்ல, நான் இதுவரை முழுநீள நகைச்சுவையாய் எதுவும் எழுதிய நினைவு இல்லை. எனக்கு இந்தப் படம் பிடித்திருந்ததற்கான இன்னொரு முக்கியக் காரணம் இதன் வசனங்கள்.

கடற்கரையில் ஹீரோ, ஹீரோயினியிடம் முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றை மனதில் வைத்துக் கொண்டு, "Hey you want to play stand up sit down again" விற்கு பதில் சொல்லாமல் ஆனால் அந்தக் கேள்வி எழுப்பிய உணர்வால் மனதால் சிரித்து அதன் எதிரொளிப்பு சிறியதாய் முகத்தில் தெரிய, ஹீரோ சொல்லும் "Ohh careful, you almost smiled"ல் கடுப்பாகி முறைக்க ஹீரோ மீண்டும் சொல்லும், "Ahh Thats the girl, Thats Sarah Norman we all know and love" வசனம் காட்சியை கேரக்ட்டரைசேஷனை சிறிய வசனங்கள் மூலம் நகைச்சுவையாகச் சொன்ன தந்திரம் பிடித்திருந்தது.

ஹோட்டலில் ஒன்றில் ஆர்டர் எடுக்க வரும் சர்வர், ஹீரோயின் ஹீரோவிடம் Sign languageல் பேசுவதைப் பார்த்து அதிசமயாகப் பார்க்க அதற்கு ஹீரோயின் சர்வர் தன்னை முட்டாளாகப் பார்க்கிறான் என்று சொல்ல, ஹீரோ "He doesnt think you stupid, he thinks you a deaf." என்று சொல்லும் பதிலில் திருப்தியடையாமல் ஹீரோயின் மீண்டும், காதுகேட்கும் மக்கள் தங்களை(காது கேளாதவர்களை) முட்டாளாகப் பார்க்கிறார்கள் என்று சொல்ல, ஹீரோ சொல்லும், "Only stupid hearing people thinks that deaf people are stupid" என்ற பதிலில் ஹீரோயின் கண்களில் தெரியும் நன்றியுணர்ச்சி ஒரு கவிதை. எனக்குத் தெரிந்து அவளுக்கான காதல் இங்கே தொடங்குவதாகத்தான் நான் நினைக்கிறேன்.

ஹீரோயின் தான் டான்ஸ் ஆட விரும்புவதாகச் சொல்லும் காட்சியில், ஹீரோ கேட்கும், "Can you feel it?"ற்கான பதிலாய் ஹீரோயின் முகத்தை அசைத்து ஆமென்று சொல்லிவிட்டு சைகையில் "vibrations…" "…through my nose" என்று சொல்லி ஹீரோவை நக்கல் செய்வது.

ஹீரோவை டான்ஸ் ஆட அழைத்துச் சென்றுவிட்டு அவள் மற்றும் கண்ணை மூடிக்கொண்டு தனியாக ஆடிக் கொண்டிருக்க ஹீரோ அவள் நகர்தலில் மயங்கி நின்று கொண்டிருக்க, அவள் தனியாய் ஆடும் சூழ்நிலையை ஒப்பு/ஏற்றுக் கொள்ளும் அந்தப் பாடல் முடிந்து ஜோடியாய் ஆடும் பாடல் வந்ததும்; அதிர்வு இல்லாததால் கண்ணைத் திறந்து பார்த்துவிட்டு எல்லோரும் ஜோடியாய் ஆடத் தொடங்கியதை அறிந்து கொண்டு ஹீரோவைப் பார்க்கும் பொழுது ஹீரோ முகத்தில் 'இப்ப என்ன செய்வ' என்பதைப் போன்ற உணர்ச்சி ஒரு ஹைக்கூ கவிதை.

தொடர்ச்சியாய் அறை ஒன்றில் ஹீரோயின் ஹீரோவிடம் தான் ஏன் பேசவிரும்பவில்லை என்பதற்கு தன்னுடன் படுப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தன் பின்னால் அலைந்த பையன்கள் பற்றியும் அவர்கள் ஒரு கோக் வாங்கிக் கொடுத்து தன்னுடன் பேசவிரும்பாமல் தன்னுடன் படுப்பதையே குறியாக வைத்திருந்ததைச் சொல்லிவிட்டு தன்னைப் பற்றி ஹீரோவும் அப்படித்தான் நினைப்பதாகச் சொல்லி அவனைக் கோபப்படுத்தும் காட்சி ரொம்பவும் இறுக்கமானது அதன் வசனங்களும் அப்படியே.

ஹீரோயினை தன் வீட்டிற்கு அழைக்கும் காட்சியில் ஹீரோ கேட்கும் உனக்கு என்ன வேண்டும் என்ற கேள்விக்கு, நீ என்றும் குழந்தைகள் என்றும் சொல்லிவிட்டு பின்னர் காது கேளாத குழந்தைகள் என்று சொல்ல ஹீரோ, நான் எனக்கு காதுகேளாத குழந்தை வேண்டும் என்று சொல்லமாட்டேன் என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்துவிட்டு ஆனால் அப்படி இருந்தால் அதில் எனக்கு வருத்தமில்லை என்று சொல்லும் வசனம்.

தனக்காய் ஹீரோ பேசுவது பிடிக்காமல் சண்டை போட ஆரம்பிக்கும் ஹீரோயின், தன்னை அவன் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்ற நினைப்பதும் தனக்காய் பேச ஆரம்பிப்பதும் பிரச்சனையாய் மாறுவதைச் சொல்லிவிட்டு.

"Until you let me being an I where you are, you can never come inside my silence and know me and I wont let myself know you. Until that time we cant be like joined."

என்ற வசனத்தோடு இந்த வசனக் கதையை விட்டுவிடுகிறேன். இந்தப் படத்தை நான் இஞ்ச் பை இஞ்ச் ஆக ரசித்துப் பார்த்ததன் விளைவு என்னால் எதையுமே விடமுடியவில்லை. கடைசியில் அந்த மௌனத்தை உடைத்துக் கொண்டு அதில் உறைந்திருந்த சுயத்தை ஹீரோ எப்படி உணர்ந்தான் என்பது தான் Children of a lesser god படத்தின் கதை. அற்புதமான படம் எல்லோரும் ஒரு முறை பார்க்க வேண்டிய படம் என்று கூட சொல்லலாம்.

பண்புடன் ஆண்டு விழா - மீள்பதிவுகள் - 5

தமிழ் சினிமா : விமர்சன சூழலும் நாயகிகள் எனும் நுகர்வுப் பொருளும்
- நந்தா


http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/6ef72f87eaf41bfc/b4b3ec78c1cd3017?lnk=gst&q=%E0%AE%AE%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D#b4b3ec78c1cd3017

மத அடிப்படைவாதங்கள், தமிழ் தேசியம், பிராந்திய உணர்வு, என்று பல்வேறு
பிரச்சினைகள் குறித்து பல்வேறு விதமாய் ஒவ்வொரு பத்தி எழுத்தாளர்களும்,
விமர்சகர்களும் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில்
தமிழ் சினிமாவின் விமர்சன சூழலைக் குறித்து யமுனா ராஜேந்திரன் எழுதியுள்ள
"நகல் போலி சினிமா : தமிழ் விமர்சனச் சூழல்" இந்த கட்டுரை இதற்கான மறு
பார்வையை எழுதச் சொல்லி எனக்குள் தூண்டியிருக்கிறது.

இந்திய சினிமா, குறிப்பாக தமிழ் சினிமா ஒரு மோசமான சூழலால்
கட்டுண்டிருக்கிறது. இந்த, இந்த அபத்தங்கள் இப்போது ஆரம்பித்தது என்று
குறிப்பிட்டுச் சொல்லுபடியாய் இல்லாமல், தொன்று தொட்டு நெடுங்காலமாய்
இருந்து வந்துக் கொண்டிருக்கிறது. மறைமுகமாய் தமிழ் சினிமா, கலாச்சாரம்
என்ற சொல்லாடலை உபயோகப்படுத்தி, மெல்ல மக்களிடையே ஏற்படுத்தி
வைத்திருக்கும் கருத்தியல்களையும், அல்பத்தனமான உணர்ச்சிகளையும், இவை
எவற்றையும் விட, விகாரமாய் நிறுவி வைத்திருக்கும் கட்டமைப்புகளையும் நாம்
மறு விசாரணை செய்ய வேண்டிய அவசியத்திலிருக்கிறோம். சொல்லப்போனால் இதுவே
வெகு தாமதம் தான். "Any how,It's better late than never".

யமுனா ராஜேந்திரனின் இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் பல
விஷயங்களைக் கண்டிப்பாய் ஒத்துக்கொள்ள வேண்டியவைதான். அது தமிழ் சினிமா
குறித்தான சரியான சொல்லாடல்கள் இல்லை எனும் கவலை, உலக சினிமா என்பதற்கு
தமிழ் சினிமா அறிவு ஜீவிகளின் புரிதல், திரைப்பட விழாக்களின் பின்னாலான,
வர்த்தக நோக்கம், திரைப்பட அமைப்புகள் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களின்
பின்னே நிலவும் அரசியல், என்று பல விஷயங்களைச் சொல்லிக் கொண்டு போகலாம்.
இது குறித்தான அவரது புரிதல்களை அவர் வெளிப்படுத்தும் போது சினிமாவை
நேசிக்கும் எந்த ஒரு மனிதனுக்கும், மேலதிகமாய் ஒரு கவலை ஏற்படும் என்பது
உண்மையே.

ஆனால் இவரது இந்த கட்டுரையில் ஒரு சில இடங்களில் மட்டும் நாம் முரண்பட
வேண்டி இருக்கிறது. "தமிழ் சினிமா விமர்சனச் சூழல் தனது அடிப்படையான
தப்படியைக் கூட இன்னும் முன் வைக்கவில்லை." என்று ஆரம்பித்து, இன்று ஒரு
சிலரால் "தீவிர விமர்சகர்கள்" என்று கொண்டாடப்படுபவர்கள் மீதான இவரது
காட்டமான விமர்சனங்களைக் குறித்து பேசும் போது நாம் சற்றே மாறுபட
வேண்டியுள்ளது. அதற்குக் காரணங்களும் உள்ளது.

தமிழ் சினிமாவின் தற்போதைய அறுவறுப்பான சூழ்நிலைக்கு ஓர் முக்கிய காரணம்
சரியான விமர்சன சூழல் இல்லாததும் கூட. இன்றும் எங்கள் ஊர்களில் திரை
விமர்சனம் என்பது, சன் டீவியின் விமர்சனமாகவோ, குமுதம் அல்லது ஆ.வியின்
விமர்சனமாகவோ மட்டுமே புரிந்துக் கொள்ளப்படுகிறது. சற்றே முன்னேறிய
அல்லது கணிணி வல்லுநர்களுக்கு மேலதிக வாய்ப்பாக இணையத்தில் ஆங்காங்கு
எழுதப்படும் பதிவுகள் மற்றும் ஏதேனும் பொழுது போக்குத் தளங்களின்
விமர்சனங்கள் (இதற்கும் ஆ.வி டைப் விமர்சனத்திற்கும் அதிக
வித்தியாசமில்லை) கிடைக்கிறது.

தமிழ் திரைப்படங்களுக்கு வெகு ஜன ஊடகங்களில் எழுதப்படும் திரை
விமர்சனங்கள், பல்வேறு அரசியல்களினடிப்படையிலேயே மதிப்பிடப்படுகின்றன.
குறிப்பிட்ட திரைப்படத்தின் இயக்குநர் அல்லது கதாநாயகன்,
போன்றவர்களுக்கும், சம்பந்தப்பட்ட ஊடகத்திற்குமிடையேயான
நட்புறவினடிப்படையிலேயே இத்தகைய விமர்சனங்கள் எழுதப்படுகின்றன. உனக்கும்
வேண்டாம், எனக்கும் வேண்டாம் 100 க்கு 40 மார்க் போடறேன் எடுத்துக்கோ
என்ற தொனியில் எழுதப்படும் இத்தகைய விமர்சனங்களில் நிறைந்துள்ளப்
போலித்தனங்களைப் பார்க்கையில் ஒரு வித ரௌத்ரம் ஏற்படுகிறது.

அறந்தை நாராயணன் போன்றோ ஏற்படுத்திக் கொடுத்த விமர்சன சூழல், சமீப
காலங்களில்தான் மீண்டும் உயிர்ப்பெற்றுள்ளது. சாரு, அ.ராமசாமி, எஸ்.ரா,
யமுனா, ப.திருநாவுக்கரசு, விஸ்வாமித்ரன், தியோடார் பாஸ்கரன்,வெங்கட்
சாமிநாதன், வெங்கடேஷ் சக்ரவர்த்தி, காஞ்சனை சீனிவாசன், பாமரன்,
பிஸ்மி,போன்ற விமர்சகர்களும், திலகவதி, செழியன் போன்றோரின் உலக சினிமா
பற்றிய நூல்களும் கொஞ்சமேனும் வாசகர்களுக்கு போய்ச் சேர்ந்திருக்கிறது.
இவர்கள் ஒவ்வொருவரும் மார்க்சிய சார்பு, திராவிட சார்பு,அழகியல்
விரும்புபவர்கள், விளிம்பு நிலை பார்வையாளர்கள்,என ஒவ்வொரு தளங்களில்
இருந்து இயங்கிக் கொண்டிருப்பவர்களே. தான் சார்ந்த அரசியல்
சித்தாந்தங்கள் இவர்களது விமர்சனங்களிலும் எட்டிப்பார்த்துக்
கொண்டுதானிருகிறது.

அது எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் பராசக்தி குறித்த திராவிட பார்வையாகட்டும்,
அல்லது யமுனாவின் மார்க்சிய பார்வைகளாகட்டும் ஒவ்வொருவரும் தனது சார்பு
நிலையை வெளிப்படையாகவே தெரிவித்து கட்டுரைகளும், விமர்சனங்களும், எழுதிக்
கொண்டிருப்பவர்களே. இங்கே நெருடலே யமுனா இடது சாரி விமர்சனச் செயல்பாட்டை
ஒட்டு மொத்தமாய் முன் நிறுத்தி, பிற அரசியல் சார்புகளையும், காலச்சுவடு
எழுத்தாளர்கள் என்று சொல்லி தியோடார், அ.ராமசாமி போன்றவர்களயும், இன்ன
பிற காரணங்களுக்காக எஸ்.ரா, சாரு போன்றவர்களையும் எளிதில் புறம்
தள்ளுவதுதான்.

நிற்க. கருத்தியல் அடிப்படையில் இந்த விமர்சகர்கள் அனைவரும், எல்லா
படங்களுக்கும், வெகு ஜனநாயகமான, முன் மதிப்பீடுகளற்ற, நடு நிலை
விமர்சனங்கள் தான் எழுதி இருக்கிறார்கள் என்று நான் சொல்ல வர வில்லை.
இந்த விமர்சகர்களின் ஒரு சில விமர்சங்களில் நிலவும் தேவையில்லாத
காட்டமும், காட்சி ஊடகம் என்பதை மறந்து வெறுமனே தான் சார்ந்த அரசியல்
சார்பை முன்னிறுத்தி, வெறுப்பினை உமிழும் சில சந்தர்ப்பங்களையும் நாம்
அறிந்துதான் இருக்கின்றோம். இது யமுனாவிர்கும் பொருந்தும்.

தமிழ் சினிமா இப்போதிருக்கும் நிலையில், இவர்கள் செய்யும் சிறு சிறு
பிழைகளை புறம் தள்ளி, இவர்களனைவரிடமிருந்தும், மேலதிகமாய் இன்னும் அதி
தீவிர செயல்பாடுகளை வேண்டி நிற்கும் சூழ்நிலையில் நாம் நிற்கின்றோம்.
ஏனெனில் இப்போது (என்னைப் பொறுத்தவரை) நம் முன் விரவி நிற்கும் முக்கியப்
பிரச்சினை விமர்சனங்கள் எத்தகைய தன்மையுடையதாய் இருக்க வேண்டும் என்பதே
அல்ல. அதை விட பூதாகரமாய் தமிழ் சினிமாவின் அவலங்களும், அறுவறுப்புகளும்
நம் முன் பல்லிளித்துக் கொண்டு நிற்கின்றன. அப்படி என்ன தமிழ் சினிமா
சூழல் கட்டமைத்து விட்டது?? இதெல்லாம் சும்மா அளவுக்கதிகமாய்
மதிப்பீடுகளைக் குறைத்து கூறும் ஒரு முயற்சி என்று எவரேனும் சொல்லலாம்.
ஆனால் இப்படியாய் நாம் கூறுவதற்கும் ஆதாரங்களாய் சில இருக்கத்தான்
செய்கின்றன.

நடிகைகள் அல்லது சதை வியாபாரிகள்:

தமிழ் சினிமாவில் நடிகைகளை வெறும் நுகர்வுப்பண்டமாக மட்டுமே
பயன்படுத்தப்பட்டு வருவதை என்னால் ஒரு உச்சக்கட்ட அறுவறுப்பான ஒன்றாகவே
பார்க்க முடிகிறது. பெண்ணியம் குறித்து பல்வேறு தளங்களில் விவாதங்களும்
கேள்விகளும் எழுப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தனது உச்சகட்ட
பாக்கியமாய்,"கதாநாயகனிடம் திட்டுக்களோ, அடியோ அல்லது இலவசமாய் தமிழ்
கலாச்சரம் பற்றிய உபதேசங்களையும் வாங்கிக் கொண்டு, அவனது காலைச் சுற்றிக்
கிடப்பதே" தனது லட்சியமாய் கொண்டு வாழும் அழகு பொம்மைகளையே கதாநாயகிகள்
என்று தமிழ் சினிமா சூழல் நமக்கு ஒரு புனைவை ஏற்படுத்தி இருக்கின்றது.
சத்யராஜ், சிம்பு,தனுஷ்,விஜய்,சரத்குமார் போன்ற கதாநாயகர்களின் பல
திரைப்படங்களில் நாயகிகள் ஏதாவது ஒரு பாட்டில், நாயகனின் காலைச் சுற்றிக்
கட்டியபடி உட்கார்ந்திருப்பார்கள். இதை மதிக்காத ஓர் தோரணையில் நாயகன்
படு அலட்சியமாய், எங்கேயோ பார்த்த படி காலை விரித்த படி நின்றுக்
கொண்டிருப்பான். இந்த இடத்தில் நாயகி தனது நடிப்புத் திறமைக்கு விடப்பட்ட
சவாலாய் கருதிக் கொண்டு எவ்வளவுக்கெவ்வளவு விரகதாபத்தை தனது முகத்தில்
காட்ட வேண்டுமோ அவ்வளவு தூரம் முயற்சித்து நடித்திருப்பார். மிஞ்சி
மிஞ்சிப் போனால் அவருக்கு அந்த படத்தில் இதை விட சிறந்த ஓர் நடிப்புத்
திறமையை வெளிப்படுத்தும் ஓர் இடம் கிடைக்குமா என்பது சந்தேகமே.

"உங்களுக்கெல்லாம் அம்மான்னு ஒரு ஸ்தானம் இல்லைன்னா மரியாதையே இருக்காது"
என்று தனது காதலியைப் பார்த்து விஜய் ஒரு வசனத்தை பேசியிருப்பார். அப்படி
கோபப்பட்டு கேவலமாய் நினைக்கும் எந்த ஒரு பெண்ணையும் தனது காதலியாய்
அல்லது மனைவியாய் ஏற்றுக் கொள்ள ஓர் அடிமட்ட மடையன் கூட நினைக்க
மாட்டான். ஆனால் தான் துரத்தித் துரத்திக் காதலிக்கும் ஒரு பெண்ணிடம் இது
போன்று பல முறைகள் அந்த படத்தில் விளாசியிருப்பார். இந்த வசனம்
சொல்லப்பட்ட போது, தியேட்டரில் இருந்த பெரும்பாலான கல்லூரி மாணவன்களும்
மூச்சு விடாமல் ஆரவாரம் செய்தார்கள். தனது டார்கெட் ஆடியன்ஸை
திருப்திப்படுத்தும் பொருட்டு தனது பெரும்பாலான படங்களில் இது போன்ற ஒரு
சில சீன்களை தொடர்ச்சியாய் கையாண்டுக் கொண்டிருக்கிறார் விஜய். அவர்
நடித்த சிவகாசி படம் இதற்கு இன்னொரு உதாரணம். எல்லாரும் கூடியிருக்கும்
ஒரு கல்யாண மண்டபத்தில் ஒரு பெண்ணை Humiliate செய்வது என்பது சத்தியமாய்
ஒரு பொறுக்கித் தனமான செயலே.எந்த ஒரு சுய மரியாதையுள்ள பெண்ணும், தன்னை
அசிங்கப்படுத்தும் அப்படி ஒருவனை விரோதியாய்தான் பார்ப்பாளேயொழிய அவனுடன்
கட்டிப் புரண்டு, காதல் செய்ய நினைக்க மாட்டாள்.

ஆனால் தமிழ் சினிமா நமக்கு சுய மரியாதையுள்ள மற்றும் படித்த பெண்களை
கர்வக்காரிகளாகவும், அகம்பாவம் மிக்கவர்களாகவும், ஏழைகளையும்,
முதியவர்களை மதிக்காத திமிர் பிடித்தவளாகவுமே நமக்கு அடையாளப்படுத்தி
வருகிறது. பாலிவுட்டுடன் போட்டி போடக் கூடிய அளவுக்கு சிறந்ததாய் தற்போது
விளங்குவது நம் கோலிவுட்தான் என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழ்
சினிமாவின் பல்வேறு திரைப்படங்களில், "அய்யா நம்ம சின்னம்மா பட்டணத்துல
படிப்பை முடிச்சுட்டு நாளைக்கு வர்றாங்களாம்" என்று சொல்லும் ஓர் ஒற்றை
வரியைத் தொடர்ந்து தொடங்கும் கதாநாயகியின் அறிமுகம். அவரது அறிமுக
காட்சியில் ஒன்று அவர் ஏதேனும் ஒரு சிறுமியையோ, அல்லது ஓர் முதியவரையோ
கோபம் கொண்டு அறைவாள் அல்லது தனது காரை அரை நொடி கூட பிரேக் போடத்
தயங்குபவளாய் ஏதேனும் ஓர் கோழியையோ, ஆட்டையோ சாகடித்துச் செல்லும், ஓர்
அற்ப பிறவியாகவே காட்டி வருகிறது.

இப்போ எல்லாம் எங்கய்யா இப்படி படம் எடுக்கிறாங்க? அது எல்லாம் இப்போ
இல்லை என்று கூற நினைப்பவர்க்கு நான் சொல்ல வருவது இதுதான். படித்த
அல்லது தான் சார்ந்த துறையில் திறமை மிக்கவர்களாய் இருக்கும் பெண்களை
இவ்வாறு கர்வக்காரிகளாகவும் அல்லது ஆண்களைக் கண்டாலே வெறுக்கும் ஓர்
அகம்பாவக்காரிகளாவும் காட்டிக் காட்டியே தமிழ் சினிமா மக்களின் மனதில்
விதைத்த நஞ்சுக்கள் ஏராளம். வெகு நிச்சயமாய் இது பெண்கள் குறித்தான ஓர்
மறைவான கட்டமைவு ஏற்பட காரணமாய் இருந்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கும், வில்லனுக்கும் ஒரே ஒரு
வித்தியாசம்தான். வில்லன் "உன்னை கற்பழிக்கிறேன்" என்று சொல்லி
கற்பழிப்பான். கதாநாயகன் "உன்னைக் காதலிக்கிறேன்" என்று சொல்லி
கற்பழிப்பான். அவ்வளவே. உலக சினிமா தரத்திற்கு தமிழ் சினிமாவும் கொண்டுச்
செல்லப்பட வேண்டும் என்று சொல்லி அதனடிப்படையில் நிகழ்த்தப்படவேண்டிய புற
மாற்றங்களாகச் சொல்லப்பட்டு வரும் விஷயங்களில் முக்கியமானவை, 2 1/2 மணி
நேரச் சினிமா என்பதிலிருந்து மாற்றுதல், காட்சிகளை இடைவேளைக்கு முன்,
பின் என்று பிரிக்காமல், இடைவேளையற்ற சினிமாவாக மாற்றுதல், பாடல்களற்ற
சினிமாவை உருவாக்குதல் என்று பல்வேறு விஷயங்களை விமர்சகர்கள்
முன்வைக்கிறார்கள். ஆனால் பாடல் காட்சிகளில்லா சினிமாவை எவர் ஏற்றுக்
கொள்ளக்கூடும். தனக்கு பிடித்த நாயகியின் பல்வேறு தாபங்களையும், கணவனின்
முன் மனைவி கூட செய்ய யோசிக்கும் உடல் அசைவுகளயும், க்ளோசப் ஷாட்டில்
நாயகியின் அங்கங்களையும், காதல் விளையாட்டுகளையும் பார்த்து
கிளர்ச்சியுறும் கூட்டமாய், ஒரு சமூகத்தையே, தமிழ் சினிமா மாற்றி
வைத்திருக்கும் இந்த சூழலில், பாடல்களில்லாமல் திரைப்படங்களா????
"போங்கடா போய் பொழப்பைப் பாருங்கடா" என்று தமிழ் சினிமா ரசிகர்கள் கோபம்
கொள்ளக்கூடும்.

தமிழ் சினிமா, தனது ரசிகர்களுக்கு செய்த ஒரு பெரும் தொண்டு, அவர்களை
"விசிலடிச்சான் குஞ்சுகளாக" மாற்றி வைத்திருப்பதுதான். சந்திரமுகி
திரைப்படத்தில், ரஜினியைப் பார்த்து, நயன்தாரா "இப்போ பேசாம போ…. போ"
என்று ஒருமையில் பேசுவார். இந்த காட்சி வரும் போது தியேட்டரில் பாதி
பேருக்கு மேல் "ஏய்ய்ய்ய்ய்" என்று கத்த ஆரம்பித்து விட்டார்கள். தனது
ரசிகர்களின் உச்ச கட்ட ரசனையை தெரிந்துதானோ என்னவோ, அவர்களை சமரசம்
செய்ய, ரஜினியும், நயனைப் பார்த்து அடுத்த காட்சியில் "போடி" என்று
சொல்லி விட்டுப் போவார். அதன் பின்பே எங்கள் ரசிகர்கள் தலைவர் பழி
வாங்கிட்டார் என்ற அல்ப உணர்ச்சியுடன் சமாதானமடைவார்கள். தமிழ் சினிமா
கட்டமைத்த இத்தகைய ரசனையான சூழலிற்கு வெகு நிச்சயம் வெட்கப்பட வேண்டும்.

தாலி, கற்பு,கலாச்சாரம் என்ற பெயரில் தமிழ் சினிமா பெண்களுக்கும்,
கதாநாயகிகளுக்கும் மட்டும் என்று கட்டமைத்திருக்கும் விதிகள் ஏராளம்.
தாலி என்ற ஒன்று மட்டும் இல்லாவிட்டால், பாதி இயக்குநர்கள் திரைப்படங்களே
எடுத்திருக்க முடியாது. இவர்கள் தாலியை வைத்து இன்னும் பம்பரம் விடாதது
மட்டும்தான் பாக்கி. நாயகி தனது தாலியை அவிழ்த்தெறியும் போது, அடிக்கின்ற
கடல் அலைகள் நின்று விடுகின்றது, கூடு திரும்பும் பறவைகள் பறப்பதை
நிறுத்தி விடுகின்றன, "அய்யோ ஒரு கோபத்தில் நான் தாலியை அவிழ்த்தெறிந்து
விட்டேனே" என்ற எண்ணத்தில் நாயகி கதறி அழுகின்றாள்….டேய் என்னதாண்டா
பிரசினை உங்களுக்கு?? நீங்க எல்லாம் நார்மலாவே படம் எடுக்க மாட்டீங்களா
என்று நாம் கதற வேண்டியதாயிருக்கிறது. நாயகியின் தொப்புளை வைத்து என்ன
என்ன செய்யலாம் என்று ஆராய்ச்சி செய்தது போல், தாலியை வைத்து எப்படி
எப்படி எல்லாம் செண்டிமெண்டுகளை உருவாக்கலாம் என்று இவர்கள் யோசித்து
வைத்திருந்திருக்கிறார்கள். அதன் உச்ச கட்டமாக குஷ்பூ ஒரு படத்தில்
தாலியால் ஒருவனை கொலையும் செய்கிறார்.

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு வரை கற்பழிப்பு என்பதற்கான
தண்டனையாய் நம் தமிழ் சினிமா கிராம பஞ்சாயத்துக்கள் வழங்கி வந்த
தீர்ப்பு, "கெடுத்தவன் பொண்ணைக் கட்டிக்கணும்". ஒரு பொண்ணை நமக்கு
பிடிச்சுப் போச்சுன்னா, அவளுக்காக அலைய வேண்டிய தேவையில்லை. காதல் கடிதம்
எழுதி, அவள் வரும் பஸ் ஸ்டாப்பில் காத்திருக்க வேண்டிய தேவையில்லை.
"உன்னைத் தவிர வேறொரு பொண்ணை ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்" என்று வசனம்
பேசத் தேவையில்லை. ஏன் அவளுக்கு ஒரு ஐஸ் க்ரீம் வாங்கிக் கொடுக்கக் கூட
தேவையில்லை. வேறு என்ன செய்யலாம்? ரொம்ப சிம்பிள், அவளைக் கெடுத்துடலாம்.
அது எப்படி அவ்வளவு சாதாரண விஷயமா? அவள் தனியே இருக்க வேண்டுமே அதற்கு
என்கிறீர்களா?? அடப் போங்க சார், கல்லூரி லைப்ரரி, ஊர் ஆத்தங்கரை,
சவுக்குத் தோப்பு எல்லாம் எதற்கு இருக்கிறது? அங்கே தாராளமாய் துரத்திப்
பிடித்துக் கற்பழித்துக் கொள்ளலாம். சுடுகாட்டுல கூட ஒண்ணு ரெண்டு பேரை
நீங்க பார்த்து விட முடியும். எங்கள் ஊர் தமிழ் சினிமாக்களில் வரும்
இத்தகைய இடங்களில் மட்டும் நாய் கூட கண்ணில் படாது. இங்க இன்னொரு
விஷயமும் இருக்கு, அந்த பொண்ணை நீங்க காதலிக்கிறேன்னு சொன்னீங்கன்னா ஊரே
ஒண்ணு கூடி அருவாளைத் தூக்கிட்டு வந்து உங்க காதலை எதிர்க்கும். மாறா
அவளைக் கற்பழிச்சுட்டேன் என்று சொல்லி விட்டீர்களானால், ஊரே ஒண்ணு கூடி
இருவரையும் சேர்த்து வைத்து விடும்.

கற்பழிப்பு என்ற சொல்லாடலின் மூலம் தமிழ் சினிமா தமிழ் பெண்களுக்கு ஒரு
மிகப் பெரிய கட்டமைப்பை ஏற்படுத்த முயற்சி செய்துள்ள்ளது. கற்பு கெட்டுப்
போச்சுன்னா அவ தற்கொலை செஞ்சுக்கணும். வீரம் வெளைஞ்ச மண்ணு படத்தில
விஜயகாந்த் "என் தங்கச்சி எவனாலோயோ கெடுக்கப்பட்டான்னு ஊர்
சொல்லக்கூடாதுடா" என்று சொல்லி வில்லனை அடித்து கெடுத்து, சாகடிக்கப்பட்ட
தனது தங்கையின் கழுத்தில் தாலியைக் கட்டச் சொல்லுவார். இந்த காட்சி
காட்டப்பட்ட போது, விஜயகாந்த், பார்வையாளர்கள், தியேட்டர் ஆப்பரேட்டர்,
தியேட்டருக்கு வெளியே, விளக்குக் கம்பத்தில் காலைத் தூக்கி சிறுந்ர்
கழித்துக் கொண்டிருந்த நாய் என எல்லாருமே கண்ணீர் வெள்ளத்தில் மிதந்தனர்.

சரி இப்போ எல்லாம் இது போன்ற படங்கள் முற்றிலுமாய் குறைந்து விட்டனவே.
தமிழ் சினிமா ஒன்றும் அவ்வளவு மோசமான சூழலில் இல்லை. இது எல்லாம் உங்களை
மாதிரி, மசாலா படங்களை ரசிக்கத் தெரியாதவர்கள் பேசும் உளறல் என்று
எவரேனும் சொல்லலாம். காட்சியமைப்புகள்தான் மாறியிருக்கின்றனவே தவிர,
கட்டமைப்புகள் மாற வில்லை. இன்றும் ஹரி, பேரரசு பட நாயகர்களால், தமிழ்
பொண்ணுன்னா எப்படி இருக்கணும் தெரியுமா? என்று ஆரம்பித்து, நாயகியிடம்
அறிவுரை கூறும் வசனங்கள் இடம் பெறத்தான் செய்கின்றன. இதைச் சொல்ல ஆண்
என்ற ஒரே ஒரு தகுதி மட்டும் போதும் கதாநாயகனுக்கு. வேறெதுவும்
தேவையில்லை.

பெண்ணின் உடலை மையமாய் வைத்து விவாதங்களும், வன்முறையும், கலாச்சார
மாற்றங்களும் இங்கே தொடர்ச்சியாய் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெண்ணின்
உடலை ஒரு துய்ப்புக்களமாய் உபயோகித்துக் கொண்டிருக்கும் ஒரு அவலம்
தொடர்ச்சியாய் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
உடலரசியலினடிப்படையில் இதைப் பார்க்கும் போது இதன் பின்னே நிலவும்
நுண்ணரசியலும், அவை நிறுவ முயல்வதும் நமக்கு புலப்படும். தன்னுடைய உடலை,
அங்கங்களை (exhibitionism) வெளிக்காட்டி ஒரு ஆணை தன் கட்டுப்பாட்டில்
கொண்டு வர முயற்சி செய்யும் ஒவ்வொரு முறையும், பெண் மறைமுகமாய், தன்னுடைய
உடல் கூறுகளை வெளிச் சொல்லி, "ஒரு பெண்ணை அசிங்கப்படுத்த, அவளது
உடலடிப்படையில் மேற்கொள்ளும் தீண்டல்களே போதும்" எனும் கட்டமைவை தமிழ்
சினிமா மறைமுகமாய் ஏற்படுத்தி இருக்கின்றது. அப்படி இல்லா விட்டால்,
நம்மால், நாயகியை நாயகன் உடலளவில் அசிங்கப்படுத்தும் காட்சிகளைப்
பார்த்து சுரணையில்லாமல் ரசித்துக் கொண்டிருக்க முடியாது.

தமிழ் சினிமாவில் திருமணத்திற்கப்புறம் நடிக்கும் நாயகிகளின் எண்ணிக்கையை
சொல்லி விடுங்கள் பார்க்கலாம். இதன் பின்னே ஒளிந்திருக்கும் பச்சையான
ஆதிக்க உணர்வுகளை, உடல் ரீதியான தமிழ் சினிமாவின் அவலத்தை எவரேனும்
புரிந்துக் கொள்ள மறுக்கிறோம் என்றால், நாமும் நமது சுய தேவைகளுக்காக
பெண்களை உபயோகப் படுத்திக் கொள்வதில் தவறில்லை என்று கருதும், ஓர்
அப்பட்டமான ஆதிக்கவாதிதான் என்றுதான் அர்த்தப் படுத்தத் தோன்றுகிறது
எனககு.

நமீதா,ஸ்ரேயா, மாளாவிகா, மும்தாஜ், ரம்யா, வேதிகா போன்ற இததகைய
கதாநாயகிகளைப் பார்க்கும் போது ஒரு வித பரிதாப உணர்வே வருகிறது. இன்னும்
ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு இவர்கள் தமிழ் சினிமாவில் நாயகிகள்
என்று சொல்லிக் கொண்டு வலம் வந்துக் கொண்டிருக்கலாம். திரைப்படம் சார்ந்த
விழாக்களில் முடியும் வரை குறைவான ஆடைகளை அணிந்துக் கொண்டுப் போய்,
கேமெராக்களை தன் பக்கம் திருப்புமாறு செய்யலாம். நடு நடுவே
அருவிக்கரையிலோ அல்லது வயல் வரப்பிலோ (எந்த இடமாய் இருந்தால் என்ன),
முழுதாய் வேட்டி சட்டையையோ, பேண்ட் சட்டையையோ அணிந்த நாயகனுடன்
பிகினியுடன் "எந்த மரத்துக் கட்டை நீ" என்பது போன்ற வரிகளுடன்
ஆரம்பிக்கும் பாடலுக்கு சிரித்த படியே நடனமாடலாம். உன்னை பார்த்து
பார்த்து சலித்து விட்டது என்று தமிழ் ரசிகர்கள் இன்னொரு கதாநாயகியிடம்
மையல் கொள்ள ஆரம்பிக்கும் நேரத்தில், தெலுங்குப்படத்திற்கோ அல்லது
ஏதேனும் ஒரு தொழிலதிபரையோ பார்த்து கல்யாணம் செய்து கொள்ளலாம்.

இத்தனை வருடம் லைம் லைட்டிலேயே இருந்துக் கொண்டு திடீரென்று ஒரு வீடும்,
காரும் ஷாப்பிங்கும், சமையலறை வேலைகளும் மட்டுமே தனது உலகமாய்
மாறிப்போனதனலான உளவியல் மாற்றங்களை நாயகி சரிவர புரிந்துக் கொண்டால்,
அவருடைய மண வாழ்க்கையாவது நிம்மதியாயிருக்கும். இல்லையெனில் குடும்ப நல
கோர்ட்டுகளில் ஒரு வழக்கை அதிகப்படுத்தி இன்னும் சில நாள் மீடியாக்களின்
காமெராக்களில் வலம் வரலாம். பின்பு அக்கா வேடம், சின்னத்திரை நாயகி வேடம்
என்று தனது வாழ்க்கையை ஒரு முற்றுப் பெறா பயணமாகவே முடித்துக் கொள்ளலாம்.
ஆண்டுக்கு குறைந்தது மூன்று கதா நாயகிகளாவது தற்கொலை செய்து கொள்வதன்
பின்னாலான உளவியல் மற்றும் உடல் சார் பிரச்சினைகளை ஏனோ தமிழ் சினிமா
புறக்கணித்தே வந்துக் கொண்டிருக்கிறது.

இப்பொழுதெல்லாம், "எனக்கு ரொம்பப் பிடிச்சது, என்னோட டெட்டி பியர்தான்"
என்று சிணுங்கிக் கொண்டே பேட்டி தரும் கதாநாயகிகளைப் பார்க்கையில் இரக்க
உணர்வும், பரிதாபமும் மட்டுமே மிஞ்சி நிற்கிறது.

பி.கு: சினிமா விமர்சகர்கள் குறித்தான காட்டமான பார்வைக்கு மறுமொழியாய்
ஆரம்பித்த இந்த கட்டுரை நாயகிகளின் அபலைத்தனத்தில் வந்து
முடிந்திருக்கின்றது. தமிழ் சினிமாவில் நிரம்பி இருக்கும் அபத்தங்களின்
ஆரம்பம்தான் இது.இன்னும் இதைத்தாண்டி விமர்சகர்களின் பல்வேறு சார்பு
நிலைப்பாடு குறித்தும், பெண்கள் பிரச்சினைகளைத் தவிர்த்து, பொது
வெளியில் தமிழ் சினிமா ஏற்படுத்தி இருக்கும் வேறு சில அற்பத்தனங்கள்
குறித்தும், கலாச்சார மற்றும் பாசிச உணர்வுகள் குறித்தும் தொடர்ச்சியாய்
அடுத்த பகுதியில் பேசுவோம்.

பண்புடன் ஆண்டு விழா - மீள்பதிவுகள் - 3

நான் பார்த்து ரசித்த சில படங்களைப் பற்றி....

http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/fab3259527e7f0a6

பாலு மகேந்திராவின் - யாத்ரா....
****
மனதை விட்டு நீங்க மறுக்கும் திரைப்படங்கள் அவ்வப்பொழுது வந்து கொண்டு தான் இருக்கின்றன. அத்தகைய திரைப்படங்களைத் தந்தவைகளுள் மலையாளத் திரையுலகும் அடங்கும். மொழிகளைத் தாண்டியும் கலைகள் படைக்கும் முனைப்புடைய கலைஞர்களை அது எப்பொழுதும் வரவேற்றிருக்கிறது. அமோல் பலேகர், கமலஹாசன், சலீல் சௌத்ரி, நௌசத், பாலுமகேந்திரா என பலரையும் அது கவர்ந்திழுத்திருக்கிறது. கிடைத்தது மிக அற்புதமான படைப்புகள் சில. பரிட்சார்த்தமான முயற்சிகளும் அங்கு அதிகம். மனித உறவுகளின் நுட்பத்தை அது அலசி ஆராயும் விதம் அம்மாநிலத்திற்கு வெளியே கொச்சைப்படுத்தப்பட்டாலும், மலையாளத் திரையுலகம் முன் வைத்த கதைக் களங்கள், இந்தியத் திரை உலகில் ஒரு சிலரால் மட்டுமே முடிந்திருக்கிறது. ஆனால், அம்மாதிரியான திரைப்படங்களுக்கு, ஒரு மாநிலம் முழுவதும் மக்கள் தங்கள் ஆதரவைத் தருகிறார்கள் என்றால், அது அம்மக்களின் சிறப்பு என்றே சொல்ல வேண்டும்.

அந்த வகையில் யாத்ரா ஒரு முக்கியமான படைப்பு என்றே சொல்ல வேண்டும். எத்தனை முறை பார்த்தாலும், ஒரு புத்துணர்ச்சியும், மனிதநேயத்தைக் கொஞ்சமேனும் சிந்திக்கவும் செய்யும் ஒரு நல்ல படைப்பு.

ஒரு காதல் கதையை எப்படி ஒரு கவிதை போல் மென்மையாகவும், அதே சமயம் அந்தக் காதல் நிகழும் தளம் - காலம் எப்படி கொடூரமாக ஒரு நிமிடத்தில் தன்னை மாற்றிக் கொள்கிறது என்பதை அழுத்தமாகவும் தெரிவிக்கின்றது. காலத்தைக் கடந்து ஒரு படைப்பு நிலைத்து நிற்க வேண்டுமானால், கதை நிகழ் காலத்தை அது வலுவாக படம்பிடித்துக் காட்ட வேண்டும்.

85ல் வந்த இந்த திரைப்படம், இன்றளவும் நம் நடைமுறை வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது என்றால், அது மிகையல்ல. இன்றும் போலிஸ் ராஜ்ஜியத்தில் தான் வாழ்கிறோம். ஒவ்வொரு சமயத்தில் ஒரு உத்தியைக் கையிலெடுத்துக் கொள்கிறது – காவல் துறை – தன் இருப்பை நிலைநாட்ட, அன்று கம்யூனிஸ சித்தாந்தவாதிகளுடன் பிரச்சினை. இப்பொழுது தீவிரவாதம். நாளை என்னவோ…?

உன்னி என்னும் உன்னிகிருஷ்ணன். ஒரு அநாதை. ஒரு வன அதிகாரியாக பணி. புதிதாக வந்த இடத்தில் துளசியைச் சந்திக்கிறான். அவளுக்கு ஒரு தந்தை உண்டு. மனைவியை இழந்து அந்த துக்கத்தில் குடிக்கும் பழக்கம் உள்ள தந்தை. துளசி அந்த மலைச்சாரலில் நடை பயிலும் தென்றலைப் போன்றவள். 'ஓணக்கோல்' பிடித்து சிலையாய் நிற்கும் கிருஷ்ணன் தான் பேசுவதை நிச்சயமாய் கேட்பான் என்று நம்பிக் கொண்டிருப்பவள். கோயில் திருவிழாவில் இனிமையாகப் பாடி ஆடவும் செய்வாள். சுழலும் விழிகளில் எப்பொழுதும் பாவங்கள் ஓடிக் கொண்டேயிருக்கும்.

ரம்மியான மலைக் கிராமச் சூழ்நிலையில், இருவரும் சந்திக்கும் பொழுது, இயல்பாக காதல் மலர்கிறது. அதிலும் உணர்ச்சி மிக்க வசனங்களோ, பாட்டுப்பாடி காதலைக் 'கொண்டாடும்' காட்சிகளோ இல்லாமல், இயல்பான காட்சி நகர்வுகளுக்கிடையில் பேச்சுக்கிடையில் காதல் வெளிப்படுகிறது. இருவரின் அப்பாவித் தனமே இருவரையும் ஒருவர் பால் ஒருவரை ஈர்க்கிறது. சிறு சிறு குறும்பாக காட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கையில், திருப்பம் வருகிறது.
தன் திருமணத்தை தன் வாழ்க்கையில் கிடைத்த ஒரே நண்பனுக்கு அறிவிக்கும் பொருட்டு, நகரம் நோக்கி பயணம் போகிறான். அத்துடன் நயவஞ்சமிக்க 'அரசு இயந்திரம்' செயல்படும் எல்லைக்குள்ளும்.

நண்பன் இறந்து போய்விட்டதை தெரிந்து கொண்டு, மீண்டும் தன் ஊருக்குத் திரும்பும் பொருட்டு, நடந்து கொண்டிருந்தவன் ஒரு பெட்டிக் கடையில் சிகரெட் வாங்குவதற்காக தாமதித்த ஒரு பொழுதில், காவல்துறையின் கண்களில் படுகிறான். கைது செய்யப்படுகிறான். ஒரே குற்றம் – காவல்துறை தேடும் ஒரு தீவிரவாதியை ஒத்திருக்கிறான் தோற்றத்தில். எத்தனை சொல்லியும் கண்டுகொள்ளாத காவல்துறை அவனை 'லாக்-அப்'பில் தள்ள, இங்கிருந்து வெளிப்படுகிறது – காவல்துறையின் 'சலவை செய்யப்பட்ட' மன நிலை. ஒரு கைதியாக இருந்தாலும் அவனுக்குக் கொடுக்க வேண்டிய அடிப்படை வசதிகளைக் கூட மறுக்கிறது. தாகித்தவன் தண்ணீர் கேட்ட பொழுது, ஒரு காக்கி அவனுக்கு மூத்திரம் பெய்து கொடுக்கிறது. அறியாமல் வாயில் விட்டுக் கொண்ட பின்னர், உணர்ந்து, ஆத்திரமடைந்து, தந்தவன் மூஞ்சியில் விட்டெறிய முனையும் பொழுது, அவன் விலகிக் கொள்ள அவனது அதிகாரியின் மூஞ்சியிலே விழுந்து விட, அவனுக்குப் பூசை நடத்த, கதவுகள் திறக்கப்படும் பொழுது, உன்னி தப்பி ஓட காக்கிகளுக்கும் உன்னிக்கும் ஏற்படும் போராட்டத்தில் ஒரு காக்கியைத் தூக்கி வீச, அவன் தலை சுவரில் மோதி மரணம்.

கொலையல்ல. திட்டமிடல் அல்ல. ஆனாலும் ஒரு உயிர் போய்விட்டது. ஆக, உன்னியின் பக்கம் எத்தனை தான் நியாயமிருந்தாலும், சிறை வாசம். கடிதம் மூலம் சிறையில் தான் இருப்பதைத் தெரியப்படுத்துகிறான். சிறை வாழ்க்கையின் அவலங்களின் மீது அடுத்ததாக கவனம் பதிக்கிறது கதை. கைதியாக வருபவனை அலட்சியமாக, அற்பமாக நோக்கும் சிறை பணியாளர்கள். அவர்களது நிர்வாணத்தைக் கூட ஏளனமாகப் பார்க்கும் வக்கிரம். மொட்டை அடித்தல்.

சிறையினுள் பல கைதிகளின் கதை சிறு சிறு காட்சிகளின் மீதாக வெளிப்படுத்தப்படுகிறது. சிறையில் பார்வையாளாராக வரும் பெண்கள் மீதான பாலியியல் துன்புறுத்தல்கள், பார்வையாளாராக அனுமதிக்க மறுக்கும் அவலம், கடிதங்கள் மூலம் நிகழும் உணர்ச்சி பரிவர்த்தனைகள், இரவின் நிசப்தத்தில் எழும் இசையற்ற பாடல்கள், கைதிகள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் குடும்ப பின்னணிகள் என்று பல இடங்களில் கண்களைப் பணிக்கச் செய்யும் காட்சிகள். நடுவே தப்பியோட முயற்சிக்கும் கைதிகள் பிடிபட்டு கொடூரமாக தண்டிக்கப்படுதல். அதையும் மீறி, வாழும் துடிப்புடன், தப்பிக்க நினைக்கும் உன்னி – துளசியைப் பார்த்துக் கொள்ள யாருமில்லை என்ற அதீத உணர்ச்சிப் பெருக்கு.. பிடிபட்டு 'லாடம்' கட்டப்படுகிறான். நடுவே துளசியின் தந்தை வந்து போகிறார். துளசியின் பரிதாப நிலையை எடுத்துச் சொல்கிறார். உன்னி துளசிக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். யாரையாவது திருமணம் செய்து கொள்ளச் சொல்லி. துளசியிடமிருந்து வரும் கடிதத்தை வாசிக்க மறுக்கிறான். ஒரு முழுதான சிறைவாசத்தை அனுபவித்து வெளி வருகிறான்.

சிறையிலிருந்து விடுபடும் நாள் வருவதை தெரிந்து துளசிக்கு கடிதம் எழுதுகிறான். இன்னமும் தனக்காகக் காத்திருந்தால், எப்பொழுதும் சந்திக்கும் அந்த ஒற்றை மரத்தடியில், ஒரு தீபத்தை ஏற்றி வைக்கவும். அவளுக்காக இறங்கி வருவதாய். இல்லையென்றால் அவளது நல்வாழ்க்கைக்காக ஒரு பிரார்த்தனையுடன், பேருந்தை விட்டு இறங்கி தொந்தரவு தராமல், தன் பிரயாணத்தைத் தொடர்வதாய்.

இந்த 'யாத்ரா' தொடருமா? இல்லை இத்துடன் முடிவுக்கு வருமா?

தன் பயணத்தில் நடக்கிறான். எவரும் அவனுக்கு வாகனங்களில் இடம் மறுக்க, ஒரு பள்ளிச்சுற்றுலா பேருதில் இடம் கிடைக்கிறது. இதுதான் படத்தின் முதல் காட்சி. இறுதிக் காட்சியும் இதே. பயணத்தில் அவன் சொல்லிய கதையில், அனைவரும் கலந்து, இறுதியில் துளசி அங்கு தீபத்துடன் நிற்க வேண்டுமே என்ற பிரார்த்தனையுடன் அனைவரும் பேருந்தின் சன்னல் வழியாக துடிக்கும் இதயத்துடன் காத்திருக்க…

துளசி நிற்கிறாள் – பெருகும் அன்புடன். ஆம். அவள் நிற்கிறாள் – ஒரு தீபத்துடன் அல்ல. ஆயிரமாயிரம் தீபங்களுடன். பிரகாசமாக. உன்னி இறங்கிக் கொள்ள, பள்ளிச் சிறுவர்களின் பயணம் தொடர்கிறது யாத்ரா பாடலுடன்.

நடித்தவர்களில் மனதைத் தொட்டவர்களின் பட்டியல் நீளம். உன்னியாக நடித்த மம்மூட்டி, துளசியாக ஷோபனா, பாலுமகேந்திராவின் காமிரா, இளையராஜாவின் இசை. அதிலும் பாலுமகேந்திரா, தனக்குப் பிடித்த மலைச்சரிவு கிராமத்தை ஒளிப்பதிவு செய்திருப்பதைக் காண கண் கோடி வேண்டும். ஏனென்றால், காமிரா என்பது ஒரு கண் என்ற அளவிற்கே மக்கள் அறிந்து வைத்திருந்த பொழுது, அதிலிருந்து எத்தனை வகையான பார்வைகளை மக்கள் முன் வைக்க முடியும் என்று அற்புதமாக காட்சிகளை வித்தியாசப்படுத்தி காட்டியவர் அவர். எல்லோரும், அவரது ஒளிப்பதிவுகளை மட்டுமே ரசித்துக் கொண்டிருக்க, அவரது பார்வைகள் காமிராவையும் தாண்டி, கதைக் களத்தில் விரிந்த பொழுது, சில அற்புத திரைப் படங்கள் கிடைத்தன. (இரண்டு பொண்டாட்டிக் காரன் கதை அவரிடத்தில் ஒரு obsession போல் பின்னர் ஒட்டிக் கொண்டது. அது அவருடைய குற்ற உணர்ச்சியினால் கூட இருக்கலாம்…)

மலைக்கிராமத்தில் புகை மூட்டங்களின் நடுவே விரியும் ஒளி வெள்ளத்தையும், இலைகளின் பசுமையையும், பூக்கள் பூத்து குலுங்குவதையும், இலைகள் பழுத்து சிவப்பதையும் படம் பிடிக்கையிலே நாம் தவறவிடுவது காலம் நகர்ந்து கொண்டிருப்பதை. வெட்ட வெளியில் வெளிச்சம் போடும் கோலத்தைக் காட்டினால், வெளிகளை வெட்டிக் கட்டப்பட்ட உள்புறத்தில், கசிந்து வரும் வெளிச்சம் என்னவோ, பாலுவின் காமிராவிற்காக மட்டுமே தாங்கள் அங்கு வருவதாக சொல்வது போலிருக்கின்றது.

வெளிச்சம், இருட்டு, வண்ணம் இந்த மூன்றினால் மட்டுமே காமிராவினால் பேச முடியும் என்னும் பொழுது, அதை குறித்து ஒரு புரிதல், அறிதல் இருந்தால் மட்டுமே அவற்றை உள்வாங்கிக் கொள்ள முடியும் ஒரு கலைஞனால். ஒரு சிறந்த திரைக்கதையும், அதை காமிராவின் மொழியில் சொல்லும் திறன் பெற்ற ஒரு கலைஞன் இருக்கும் பொழுது, அது நடிப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். மம்மூட்டி போன்ற நடிகர்களுக்கு இதை விட ஒரு நல்ல தளம் வேண்டுமா என்ன? இத்தனைக்கும் மம்மூட்டி அப்பொழுது ஒரு பெரிய நடிகர் கூட கிடையாது. அப்பொழுது தான் ஓடுடைத்து வெளியான சிறு பறவை போல் நடிப்புலகில் காலடி எடுத்து வைத்த நேரம். பறப்பதற்குச் சொல்லித் தர ஒரு அற்புத கலைஞன் கிடைத்த பொழுது, அதை மிகையற்ற தன் நடிப்பினால், எளிதாகக் கையாண்டிருக்கிறார். அது போன்றே, துளசியாக வரும் ஷோபனா. நாட்டியத்தில் பரிச்சியமுள்ள அவருக்கு விழி அசைவுகளும், உடல்வாகும் வெகுவாக ஒத்துழைக்கிறது. இவர்களுடன் இளையராஜாவின் இசையும் கூட்டணி அமைத்துக் கொள்கிறது.

இந்தக் கூட்டணியில், யாத்ரா ஒரு நதியாக, கரையுடைக்கும் பெருவெள்ளமாக இன்றி, அமைதியாக அமிழ்ந்து நீச்சலடிக்கத் தூண்டும் மென்மையுடன் பயணிக்கிறது.

படம் முடிந்து நீண்ட நேரமாகியும் துளசியும், உன்னியும் மனம் விட்டு நீங்க மறுக்கிறார்கள். காதலின் ஆழத்தைப் பார் – எங்கள் போல், உங்களால் ஒருவருக்கு ஒருவராகக் காத்திருக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டே…

நண்பன்