Showing posts with label நூல் விமர்சனம். Show all posts
Showing posts with label நூல் விமர்சனம். Show all posts

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மோகன் தாஸ் - 7

நாளை மற்றோரு நாளே - என் நினைவுகள்
- மோகன் தாஸ்


ஜி. நாகராஜன் பற்றி நான் முதலில் படித்தது. சு.ராவின் பிரமிள் பற்றிய நினைவோடையிலாகத்தான் இருக்கும். பின்னர் என் இலக்கிய வட்டம்(அல்லது உள்வட்டம்) பெரிதாக ஜி. நாகராஜனின் 'நாளை மற்றொரு நாளே' நாவல் பற்றி தெரியவந்தது. இந்த முறை பெங்களூர் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்த பொழுது சட்டென்று மனதைக் கவரும் விதமாக காலச்சுவடு ஸ்டாலில் இருந்த நாகராஜன் முழுத்தொகுப்பையும் வாங்கிவந்திருந்தேன். இது அவர் எழுதிய நாவல், குறுநாவல், சிறுகதைகள், கவிதைகள் முதற்கொண்டு ஜி. நாகராஜன் எழுதிய மொத்தத் தொகுப்பு. முதலில் பிரித்து வைத்து உட்கார்ந்தது, சுந்தர ராமசாமியின் - ஜி. நாகராஜன் பற்றிய நினைவோடை. அதற்கு காரணம் உண்டு, எல்லாம் பிரமிள் பற்றிய நினைவோடை படித்த காரணம் தான் மேலும் ஒரு காரணம் RP ராஜநாயஹம், சுரா ஜி. நாகராஜன் பற்றி எழுதியிருந்தைப் பற்றி சொன்னது. நினைவோடை படிக்க ஆரம்பித்த பொழுது சட்டென்று ஆரம்பமென்றில்லாமல் வானத்திலிருந்து குதித்த மாதிரி இருந்தது, பின்னர் தான் சு.ரா, ஜி. நாகராஜன் பற்றி சொல்லியிருந்த முதல் அரைமணிநேர கேசட் தொலைந்து போனதன் காரணமாக அப்படியிருந்தது என்று தெரியவந்தது. எத்தனைக்கெத்தனை நாசூக்காக சொல்லமுடியுமோ அத்தை நாசூக்காக சொல்லியிருந்தார் சு.ரா., ஜி. நாகராஜன் பற்றி. அப்படித்தான் நான் நினைக்கிறேன். அவ்வளவு தான் அதைப்பற்றி. பொதுவில் சொல்ல முடியாத எழுத்தில் கொண்டு வரமுடியாத கதைகளை பின் காலங்களில் இலக்கியவாதிகள் யாரையாவது சந்திக்கும் பொழுது கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன் ;).

நாவல் திருவாளத்தான் ஒருவனின் ஒரு நாள் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது. ஒரு நாள் கதையை எப்படி நாவலாக எழுதிவிடமுடியும் கேள்வி எனக்கும் சட்டென்று எழுந்தது. ஆனால் வாழ்க்கையில் முன் பின் நகரும் ப்ளாஷ்பேக் உபயோகித்து நாவல் தன் லீலையைத் தொடர்கிறது. இந்த நாவலை நான் படிக்க ஆரம்பிக்கும் முன்பே தமிழின் மிக முக்கியமான நாவலில் ஒன்று என்ற விஷயம் எனக்குத் தெரிந்திருந்தது. எப்படி தமிழில் ஒரேயொரு நாவல் எழுதிய ஜி. நாகராஜனின் இந்த நாவல் தமிழின் குறிப்பிடத்தக்க நாவல்களில் ஒன்றானது என்கிற ஆச்சர்யம் இயல்பாகவே எழுந்தது. ஜி. நாகராஜன் எழுதியதே நாளை மற்றொரு நாள் என்கிற நாவலும் குறத்தி முடுக்கு என்கிற குறுநாவலும் தான். இதைத்தவிர்த்து சிறுகதைகளும் கொஞ்சம் கவிதைகளும் எழுதியிருந்தாலும். பெரிய அளவில் வந்தது என்றால் இந்த நாவலும் குறத்தி முடுக்கு மட்டும் தான். இந்த நாவலை தமிழில் வெளிவந்த நாவல்களில் உயரிய இடத்தில் வைக்க என் மனது இடம் தராவிட்டாலும் முக்கியமான நாவல்களில் ஒன்றாகவே நான் பார்க்கிறேன்.

காட்சிகளின் அருமையான விவரிப்பையும் உண்மையையே எழுதியிருப்பதைப் போன்ற ஒரு உணர்வையும் நீங்கள் இந்த நாவல் முழுவதுமே உணர முடியும். ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு சட்டென்றூ நகரும் சாமர்த்தியம் அழகாய் கைக்கு வந்திருக்கிறது. நானறிந்த வரையில் நான் படித்த வரையிலும் சரி காமத்தை இத்தனை காதலுடன் உண்மைக்கு ரொம்பவும் நெருக்கமாய்ப் படித்ததது நினைவில் இல்லை. ஆனால் இந்த நாவலின் மூலமாய் ஜி. நாகராஜன் அதுவரை தமிழுக்கு பெரிதும் அறிமுகமாகியில்லாத தமிழகத்தின் இருண்ட பகுதிகளை வெளிக்கொணர்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். நாவல் எழுதப்பட்ட காலம் அந்த சுவாரசியத்தை அதிகப்படுத்துகிறது.

"அவன் சுயநலத்தில்தான் எத்தனை அழகு? சுயநலத்தை மறைக்க முயன்றால்தான் அது அசட்டுத்தனமாகவோ விகாரமாகவோ தோன்றுகிறது"

தன் மீது பானையை எறிந்துவிட்டு ஓடிப்போன தன் மகனைப்பற்றி நாவலின் கதாநாயகன் நினைக்கும் பொழுது வரும் வரிகள் இவை. ஜி. நாகராஜன் வாழ்க்கையை தொடர்ச்சியாய் அதன் பாணியிலேயே சென்று படித்திருக்கிறார் என்றே எண்ண வைக்கிறது.

கந்தன் ஒரு ரௌடி, மீனாவின் மேல் காதல் கொண்டு அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து அவளை மணந்து கொண்டு பின்னர் அதுவும் சரிவராமல் அவளையே மூலதனமாகப் பயன்படுத்தி தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவன். விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை இத்தனை தூரம் நெருக்கமாக உணர்ந்து எழுதியிருக்கக்கூடிய சாத்தியம் ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது. இந்த நாவலைப் பற்றி எழுதுவதற்கென்று நிறைய இருந்தாலும் விமர்சனம் என்று எழுதுவதற்காக படிக்கும் பொழுதே சேர்த்து வைத்த குறிப்புத்தாள் கவனச்சிதறலாக காணாமல் போனதால் இங்கே நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் சுவாரசியமான நாவலொன்றைப் படிக்கும் திட்டமிருந்தால் நிச்சயம் நாளை மற்றொரு நாளே நாவலை நிச்சயமாகப் படிக்கலாம்.



குடிசைகளுக்கும் சாக்கடை விளிம்புக்கும் இடையே மூன்று அடி இருக்கும். அது நெடுகிலும் சாணமிட்டு மெழுகப்பட்டிருந்தது. கந்தனின் வீட்டையொட்டி, இந்த குறுகிய பகுதியில் ஒரு மூன்றுகல் அடுப்பின் மீது சிறிய பானையில் நீர் காய்ந்து கொண்டிருந்தது. அருகே ஒரு பெரிய பானையில் அரையளவுக்குத் தண்ணீர் இருந்தது.


கந்தன் குடிசைக்குள் நுழைந்தான். மீனா தரையைப் பெருக்கிக் கொண்டிருந்தாள்.


"துணியை வாங்கிட்டு வந்தாயா?" என்றான் கந்தன்

"உம், பெட்டியுள்ளாற இருக்கு" என்று சொல்லிக் கொண்டே மீணா நிமிர்ந்து நின்றாள். "உம், கூட்டு" என்றான் கந்தன்.


அவள் மீண்டும் குனிந்து பெருக்க ஆரம்பிக்கவும், அவன் அவள் பின்சென்று அவளைப்போலவே வளைந்து அவளைப் பின்புறத்திலிருந்து அணைத்தான்.


'உம். விடுங்க.. இப்பெல்லாம் என்ன, இப்படி காலே நேரத்துலே ?" கந்தன் சற்று விலகி நின்று கைகளைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டான்.


"அதுவும் கதவு வேறே தெறந்து கிடக்கு " என்று தொடர்ந்தாள் மீனா.


"கதவே வேணா அடச்சிடறேன்.." என்று சொல்லிக்கொண்டே கந்தன் கதவை அடைத்துத் தாளிட்டான்.


"ஆனா வெளிச்சம் இல்லாட்டி எப்படியோ இருக்கு " என்று சொல்லிக் கொண்டு, ஒரு தீக்குச்சியைக் கிழித்து

இரண்டு பொடி மெழுகுவர்த்திகளைக் கண்டுபிடித்து, மற்றுமொரு தீக்குச்சியைக் கிழித்து அவற்றைப் பற்றவைத்தான்.

ஒரு ஒரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவை திருதிருவென்று முழித்தன. ஆடைகளையும் தலைமுடியும் சரி செய்து

கொண்டிருந்த மீனா, "பட்டப் பகல்லே இது என்ன அட்டகாசம்..?" என்றாள்.


'உண்மையை சொல்லட்டுமா ? இன்னைக்குக் காலேலே நம்ம வீட்டு முன்னாலே ரெண்டு நாயிக ஒண்ணையொண்ணு விரட்டிக்கிடு

போச்சி.. " என்று சொல்லிவிட்டு கந்தன் சிரித்தான்.


"ஆமா, ஒடனே நெனப்பு வந்திரிச்சாக்கும்..? அன்னைக்கு ரெண்டு அணில்க, இன்னைக்கு ரெண்டு நாய்க.. " என்று சொல்லிக்கொண்டே

மீனா பாய் ஒன்றை எடுத்து உதறி அறையின் நடுவில் போட்டுவிட்டு அதன்மீது ஒரு தலையணையும் தட்டி போட்டாள். ஒரு மெழுகுவர்த்தி

அணைந்துவிட்டது. அதைப் பற்றவைத்துகொண்டிருந்த கந்தன், "அன்னைக்கு அந்த அணில்க எப்படி ? நாம் எவ்வளவு பக்கல்லே

போய் வேடிக்கை பார்த்தோம். எப்படி இரண்டும் ரொங்கிகி கிடந்திச்சு.. ?" என்று அணில்களை வியந்தான். அவன் அவளருகே

சென்று உட்காரவும் அவள். " நாமும்தான் ரொங்க்கிக் கிடந்திருக்கோம்.." என்று சொல்லிச் சிரித்தாள். அவன் சிரிக்கவில்லை.

அவளைக் கட்டியணைத்து முத்தமிட்டான். இருவரும் படுத்தனர்.


"நாய்க செய்யறது அசிங்கமில்லையா.. " என்றாள் அவள்.

"அபூர்வம். ஆனா அதுகளெக் கண்டா எல்லாருக்கும் பொறாமையா இருக்கும் போல.." என்றான் கந்தன்.

"யானைங்களெப் பத்திக் கேள்விப்பட்டிருக்கீங்களா.." என்று கேட்டாள் மீனா.

"ஆமா.. ஆமா.. கேள்விப்பட்டிருக்கேன். என் சிநேகிதன் ஒருத்தன் தேயிலத் தோட்டத்துலே வேலை பார்த்தான். சுத்து

வட்டாரத்திலே யானைங்க வருமாம். போகுமாம். ஒரு நாளைக்கு யானை அலர்ற சத்தம் கேட்டிச்சாம். ....

ஒரு பெண்யானை ரெண்டு தேக்கு மரத்துக்கு ஊடே சிக்கிட்டு அலறிகிடு இருந்த்திருக்கு.. ஒரு ஆண் யானை தும்பிச்சங்கைனாலே

பெண் யானையைப் போட்டு இளுத்துக்கிட்டு இருந்திரிக்கு. ஆளுங்க பக்கத்துலே போகவும் ஆண் யானை அவுங்களே வெரட்டி

அடிச்சிதாம்.. கொஞ்சம் தலையைத் தூக்கிக்க.. முடியை எடுத்து பின்னாடி போட்டுக்க.. "


"அப்புறம்.. ?" என்று கேட்டாள் மீனா.

"ஆளுங்க தூரத்திலே இருந்துகிட்டே வேடிக்கை பாத்திருக்காங்க.. நாள் பூரா ஆண் யானை இளுக்கவும் பெண் யானை

அலறவுமா இருந்திருக்கு.."

"அய்யோ.. மெள்ள.." என்றாள் மீனா.

"சரி. மெள்ளத்தான். கதையை முளுக்க கேக்கலேயே ? அடுத்த நா காலேலேதான் அலறல் நின்னதாம். லைன் ஆளுங்க

என்னேண்ட்டுப் போய்ப் பார்த்திருக்காங்க. .பெண் யானை செத்துகிடந்தது. ஆண் யானையைக் காணேம்."

"கண்றாவி.. " என்றாள் மீனா.

"அப்ப மறந்திடு.. " என்றான் கந்தன்.

"எதெ. "

"யானைகளெ மறந்திடு. அணிகல்களெ நெனெச்சிக்க.."

கந்தன் மீனாவைத் தன் பக்கம் திருப்பி, முகத்தை அவளது மார்பில் புதைத்துக்கொண்டான்.

"ஆமா.. ஒண்ணு கேக்கணூம்ண்ட்டு தோணுது.. " என்றான் கந்தன்.

"என்ன..?"

"நைட்லே அக்கா வூட்டுக்கு கண்டவனெல்லாம் வர்றானே. அப்பவும் ரொங்கிக் கெடந்திருக்கயா..?"

"அக்கா.. வூட்டுக்கு கண்டவங்க எல்லாம் ஒண்ணும் வரதுல்லே, ஏகதேசமா டீஷண்ட்டானவங்கதான் வருவாங்க. அதுவும்

காலேஜு ஸ்டூட்ண்ட்ஸ் வந்தா குஸியா இருக்கும்.."

"எப்படி குஸியா இருக்கும்..?"

அய்யோ கடிக்காதீங்க.. வலிக்குது.." என்று இலேசாய் அலறினாள் மீனா.

"சரி.. சரி. கடிக்கலே.. எப்படி குஷியா இருக்கும்.. " என்று திரும்பிக் கேட்டான் கந்தன்.

"பஸ்ட் டிரிப்பா இருந்தா தொடறதுக்கு முன்னாடி டயர் பஞ்சர் ஆயிடும்.." என்று சொல்லிவிட்டு மீனா சிரித்தாள்.

"உம்." என்றான் கந்தன்.

"பழக்கப்பட்ட பசங்க அந்த சினிமாக்காரி மாதிரி இருக்கே. இந்த சினிமாக்காரி மாதிரி இருக்க எம்பாங்க.."

"உம்."

"நாம இரண்டுபேரும் எங்காச்சும் ஒடிலாம்பாங்க செலர், போனவாரம்னு நெனக்கிறேன். ஒரு தம்பி என்ன சொல்லிச்சு தெரியுமா?

"உம்.. என்ன சொல்லிச்சு.."

"என்னெப் பொம்பளேன்னுட்டு நெனச்சிக்கிட்டு நீ ஆம்பிளே மாதிரி நடத்துக்கோனிச்சு.." என்று சொல்லிவிட்டு மீனா சிரித்தாள்.

"உஹ¤ம்.."

"ஒரு வாட்டி ஒரு பெரிய மனுசன் வந்தான். பாத்தாலே பயமா இருந்துச்சு. முரடன் மாதிரி இருந்தான். என் காலே நல்லா சோப்புப்

போட்டுக் களுவிட்டு வரச் சொன்னான். அஞ்சு, பத்து நிமிஷம் என் காலே முத்தமிட்டு அளுதுக்கிட்டே ரூமை விட்டு வெளியே போனான்.

இருந்திட்டுப் போங்கன்னேன்.. 'பைத்தியக்காரத்தனம்'னு சொல்லிட்டு போயிட்டான்."

'அப்படியா..? சரி நல்லாப் படுத்துக்க.." என்றான் கந்தன், மீனாவின் முகத்தை உற்று நோக்கிக்கொண்டே.

"சமயத்திலே அந்தப் போக்கிரியெ கொன்னுப் போடுவோனானு தோனுது.. ஆனா. ஒன்னெத் தந்தானேனிட்டுத்தான் சும்மா இருக்கேன்."

என்றான்.

"அவர் சொந்தத்துல கார் வச்சிருக்காராமே..? "

"அவனுக்கென்ன? காரும் வாங்குவான்; ஏரோப்பிளேனும் வாங்குவான். எங்கிட்ட மட்டும் பத்தாயிரம் தாப்பாப் போட்டிருப்பானா?"


"பத்தாயிரம் இருக்குமா?"

"பின்னே? பதினெட்டு, பத்தொன்பது பெர்ற வீட்டே பத்துக்கு விக்க வச்சான். வீடு வாங்கின பார்ட்டிகிட்டேர்ந்து மூவாயிரமோ, நாலாயிரமோ வாங்கியிருப்பான். எங்கிட்டேர்ந்து வேற கமிஷண்ட்டு ஐந்நூறு வாங்கிட்டான்."


"நீங்க் அப்போ வெவரம் தெரியாதவரு.."

"அம்மாவும் போயிட்டாங்க.."

"சரியா இருக்கா..?"

அவள் தலையை அசைத்தாள்.

"தலையணை வச்சிட்டிருக்கியா ?"

"இல்லே. வேணுமா..?"

"வேண்டாம். சரியாத்தான் இருக்கு.."


சில நிமிடங்களுக்கு இருவரும் அவர்கள் பார்த்து ரசித்திருந்த அணில்கள் போலவே இருக்கின்றனர். இருவரிடத்தும் கட்டுப்பாடான தாள லயித்தோடு கூடிய இயக்கம். அசிங்க உணர்வே இல்லாத பரஷ்பர ஸ்பரிசங்கள். குடிசை பூராவுமே ஒரு வகையான விறைப்பு நிலவுகிறது. இருவர் உள்ளத்துள்ளும் சிறதளவு சிந்தனையும் இல்லை. சில நிமிடங்கள் செல்கின்றன. படிப்படியாக பொழுது விடிவது போல் இருவருள்ளும் தன்னுணர்வு தலையை உயர்த்துகிறது.


கொஞ்சமும் ஒசை ஏற்படுத்தாது கந்தன் எழுகிறான். மீனா கண்களை மூடி படுத்துக்கிடக்கிறாள். அவள் அருகே உட்கார்ந்துகொண்ட அவன் ஒரு சிகரெட்டைப் புகைக்கிறான். பிறகு மெதுவாக எழுந்திருந்து ஒரு அரை டிராயரை மட்டும் அணிந்துகொண்டு, ஒரு சோப்புக்கட்டியையும், ஒரு துண்டையும் எடுத்துக்கொண்டு குளிக்க வெளியே வரத் தயாராகிறான். அவளிடமிருந்து ஒரு விசும்பல் கிளம்புகிறது. நின்று பார்க்கிறான். மீனாவின் மூடிய கண்களைப் பொத்துக்கொண்டு கண்ணீர் அவள் கன்னங்களை நனைக்கிறது. விம்மல் அழுகையாக மாறுகிறது.


"என்னங்க சந்திரனை தேடிக் கண்டுபிடிக்க வேண்டாங்களா ?" என்று உளறுவதைப்போல் அவள் கேட்கிறாள்.

"நாம் தேடாத இடமா..? " என்கிறான் அவன். "நாலு வருஷமாயிரிச்சே..! "

"உம்.."

"ஒங்களுக்கு சந்திரன் நெனெப்பே வரதில்லையா..?"


கந்தன் பதிலளிக்காது கதவை திறந்துகொண்டு, வெளியே போய்ப் பல் விளக்கிக் குளிக்க ஆரம்பிக்கிறான். அவன் குளித்து முடியும்வரை ஒப்பாரி போன்ற அழுகை அவன் காதுகளில் விழுந்துகொண்டிருக்கிறது.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மோகன்தாஸ் - 1

இரா.முருகனின் நெம்பர் 40 ரெட்டைத் தெரு

இரா. முருகனின் இந்தப் புத்தகத்தை எந்த வகையில் வைப்பது என்று தெரியவில்லை உண்மையில், நாவல் - குறுநாவல் - சிறுகதைத் தொகுப்பு(?!) எதிலுமே வைக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன். நாவலுக்குரிய அகச்சிக்கல் என்று எதுவும் இல்லை என்பதால் நாவலாக வைக்கமுடியாது, கூர்மையிருந்தாலும் சிறுகதைக்குரிய அளவில் இல்லை என்பதால் சிறுகதைத் தொகுப்பென்றும் சொல்லமுடியாது. தன்னுடைய வயதைக் குறிக்கும் வகையில் எழுத நினைத்தாரோ என்னவோ 54 (கொஞ்சம் பெரிய)பத்திகளில் தன் பத்து வயதில் தான் வாழ்ந்த இடத்தைப் பற்றிய குறிப்புக்களை எழுதியிருக்கிறார்.

ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது; இத்தனை விஷயங்களை நினைவில் வைத்திருந்திருக்கிறாரே என்று இரா.மு.வின் அரசூர் வம்சம் படித்துவிட்டு எப்படி இவரால் இப்படி ஒரு நாவல் எழுத முடிந்தது என்று ஆச்சர்யப்பட்டது நினைவில் இருக்கிறது. அந்த ஆச்சர்யம் அப்படியே தொடர்கிறது இங்கேயும், கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார் 'அடல்ஸ் ஒன்லி' விஷயத்தில் என்பது மட்டும் ஏனென்று தெரியாவிட்டாலும். கூர்மை அப்படியே இருக்கிறது அத்தனை பத்திகளிலும், என்னமோ டைரி ஒன்றில் சிறு வயதில் இருந்து குறித்துக் கொண்டு வந்துவிட்டு இன்று இணைத்து எழுதியிருக்கிறாரோ என்று நினைக்க வைக்கிறது.

ஒரு தெரு அதைத் சுற்றி இருக்கும் வீடுகள் அதைச் சார்ந்த பள்ளி இன்ன பிற வகையறாக்கள் அதைச் சார்ந்த மக்கள் என்று மொத்தமாக எல்லாவற்றையும் பற்றிய தன் நினைவுகளை அன்றைய காலநிலையோடு, அரசியலோடு சேர்த்து எழுதியிருக்கிறார். நன்றாகவே வந்திருக்கிறது.

மொத்தமாய் படித்து முடித்த பின்னும் நினைவில் நீங்காமல் இரா.முருகனின் சில கதாப்பாத்திரங்கள் அப்படியே நின்றுவிடுகிறார்கள். பஞ்சவர்ணம் வாத்தியார் மாதிரி கடைசியில் அவர் வைக்கும் கேள்வியோடு "எல்லாக் கணக்கும், வாழ்க்கையும் தெக்கத்தி மிட்டாயாக இனிக்காமல் போக என்ன காரணம் என்று தெரியவில்லை." சீரங்கத்தம்மா போல், "அந்தக் காலத்துலே சாரட்டுலே கல்யாண ஊர்வலம் வந்தவள்டா சீரங்கத்தம்மா" இதுபோல் நிறைய நான் என் வாழ்நாளில் கேட்டிருக்கிறேன். உருவாக்குவதும் தெரியாமல் முடிப்பதும் தெரியாமல் மூன்று பக்கங்களில் இப்படி நிறைய பேரை உலவவிடுகிறார். நான் சொன்னது இரண்டு நபர்களைத் தான் ஆனால் இந்தப் புத்தகம் முழுக்க இப்படித்தான் ஆட்களாய் நிரம்பியிருக்கிறார்கள்.

புத்தகம் முழுவதும் நகைச்சுவை வழிந்து கொண்டிருக்கிறது, மெல்லியதாய், வாசிப்பை சுவாரசியப்படுத்துவதாய்.

"... தினசரியில் 'சர்ச்சில் கவலைக்கிடம்' என்று கொட்டை எழுத்தில் வந்தது. கோகலே ஹால் நூலகத்தில் பேப்பர் படித்த எனக்கு, இப்படி அரைகுறைச் செய்தியை அதுவரை படித்ததாக நினைவில் இல்லை. சர்சுக்கு யார் போனது, அதில் என்ன கவலை என்ற தகவல் ஏதும் இல்லாது, ஒரு வெள்ளைக்காரக் கிழவர் போட்டோவோடு வந்த செய்தி. படிக்கப் பொறுமையில்லாமல் 'சரோஜாதேவி தினசரி என் கனவில் வருகிறாரே' என்று முறையிடும் கேள்வி-பதில் படிக்கப் பக்கத்தைத் திருப்பினால், பேப்பர் படக்கென்று பிடுங்கப்பட்டது..." புத்தகம் முழுதும் விரவியிருக்கும் நகைச்சுவைக்கு ஒரு சோறு.

முக்கியமான இந்தி எதிர்ப்பை பதிவு செய்ய வந்தவர் நகைச்சுவையில் விழுந்திருப்பது சரியானதுதானா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் கிடையாது; அதுதான் அவரது ஸ்டைல் எண்ணும் பொழுது அப்படியே விடுவது தான் சரியானதாயிருக்கும்.

"...எனக்கும் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி மேல் இப்படி அப்படி என்றில்லாத கோபம் வந்தது. கோயில் பிரகார உத்திரத்தில் வௌவால் தொங்குகிறது போல் வரிசையாக தொங்குகிற எழுத்தோடு இந்தியைப் படித்துக் கொண்டு தினசரி காய்ச்சல்காரன் போல சுக்கா ரொட்டி சாப்பிட்டுக் கொண்டு மிச்ச வாழ்க்கையைக் கழிக்க எனக்கென்ன தலைவிதி? இந்தி இருந்த பழைய ரயில்வே கைடு புத்தகத்தை வீட்டிலிருந்து கிளப்பிக் கொண்டு வந்து எரிகிற தீயில் போட்டேன். ஒழியட்டும் இந்தி..."

பத்துவயது கதைசொல்லியின் வருத்தம் இது. கீழிருப்பது 54 வயது கதைசொல்லியின் குரல்,

"...இன்றைக்கு எனக்கு இந்தி தெரியும். மனிதர்கள் பேசிப் புழங்குகிற ஒரு மொழி என்ற மட்டில் அதன் பேரில் வெறுப்பு எதுவும் இல்லை. ஆனாலும், 'இந்தி ராஜ்பாஷா; தேசிய மொழி அதுதான்' என்று யாராவது பேச ஆரம்பித்தால், 'சரிதான் உட்காருடா' என்று மண்டையில் தட்ட மனத்தில் ஒரு சின்னப் பையன் எழுந்து வருகிறான். அவனுக்கு கோடிக்கணக்கில் சிநேகிதர்கள் உண்டு என்பதை அவன் அறிவான்..."

எல்லாவற்றிற்கும் பிறகும் இந்தப் புத்தகம் எனக்குப் பிடித்த ஒன்றாகயில்லை, அரசூர் வம்சம் என்னிடம் உருவாக்கியிருந்த பிம்பம் இரா.முருகனின் அடுத்தப் புத்தகத்தைப் பற்றி நான் வைத்திருந்த எண்ணம் எதையும் இந்தப் புத்தகம் நிவர்த்தி செய்யவில்லை. இது நாவல் பற்றிய என்னுடைய மனநிலைப் பிரச்சனையாகக் கூட இருக்கலாம், 'புலிநகக்கொன்றை' போல் நாயகன் நாயகியையோ இல்லை ஒரு பரம்பரையின் கதை பேசுவதாகவோ இந்த நாவலை நகர்த்தியிருந்தால் நான் விரும்பியிருக்கக்கூடும். ஒரு ஹீரோ ஹீரோயினைச் சுற்றி நிகழும் 'நாவல்'களை நான் கடந்துவிட்டதாகவே நினைக்கிறேன். அதை மீறியும் எதையோ இந்த நாவலில் நான் இழக்கிறேன், காரணம் தெரியவில்லை. ஒட்டுதல் வரவில்லை என்று கூட சொல்லலாம், இதுவரை என் வாழ்நாளிலேயே மிகவும் கஷ்டப்பட்டு படித்ததாக நினைக்கும் 'புளியமரத்தின் கதை'யின் மீது கூட எனக்கு ஒட்டுதல் இருந்தது. இத்தனைக்கும் சுராவின் நெருங்கவிடாத எழுத்திற்கு அப்பாலும் சென்று என்னால் நெருக்கத்தை உருவாக்க/உணர முடிந்திருந்தது ஆனால் இந்த அணைத்துச் செல்லும் வகை எழுத்தில் என்னால் அதை உணர முடியவில்லை.ஒரு வேளை லைட் ரீடிங் வகையறா எழுத்துக்கள் எனக்கு போரடிக்கத் தொடங்கிவிட்டதா தெரியவில்லை. லைட் ரீடிங் என்று நான் சொல்வது கோணங்கியின் 'இருள்வ மௌத்திகம்' ரமேஷ் - ப்ரேமின் 'சொல் என்றொரு சொல்' முதலானவற்றோடு ஒப்பிட்டே.

இந்தப் புத்தகத்தில் எனக்கு பிடிக்காத இன்னொரு விஷயம் 'கிரேஸி' மோகனின் முன்னுரை(அல்லது whatever) புத்தகத்திற்கான முன்னுரை பதிப்பகம் கேட்டு வாங்குமா எழுத்தாளர் கேட்டு வாங்குவாரா தெரியாது. என்ன கொடுமைங்க இது சரவணன். என்னமோ புத்தகக் கண்காட்சிக்காகவே கேட்டு வாங்கியது போல் ஒரு முன்னுரை. இரா.முவை விடுத்தும் அவர் மொழியின் மீதான நம்பிக்கையை விடுத்தும் புத்தகம் விற்பதற்கான இன்னொரு ஸ்ட்ராடஜியாக 'கிழக்கு' இதை முன்வைத்தார்களா தெரியாது. நான் அறியேன் பராபரமே! (இரா.முருகனுக்கு; சார் நான் எல்லாம் அறிவுரை சொல்கிற அளவிற்கு நீங்கள் வந்துவிட்டீர்கள் என்று சொல்லலை, இதற்கு முன்னுரை இல்லாமலே நீங்கள் இந்தப் புத்தகத்தை வெளிவிட்டிருக்கலாம்.) ஆனால் அவர்களும் என்ன தான் செய்வார்கள் பாவம்.
சுஜாதாவை விடவும் இரா.முருகனின் ராயர் காப்பி கிளப் பத்திகள் நன்றாக இருப்பதாக நான் சொன்ன நினைவு, ஆனால் இரா.முவை சுஜாதாவாக ஆக்க முயல்கிறார்களோ என்பதில் எனக்கு பயமே வருகிறது. உதாரணத்திற்கு இந்தப் புத்தகத்தில் இருந்து ஏகப்பட்ட உதாரணங்கள் அள்ளி வீச முடியும், எனக்கு உண்மையிலேயே தெரியாது 'கிழக்கு' உடன் காண்ட்ராக்ட் போட்டு எழுதப்பட்ட நாவலா 'ரெட்டைத் தெரு' என்று. பொலிடிகலி கரெக்ட்னெஸ் இல்லாத பத்தியே இல்லை என்று சொல்லலாம்.

குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ
குனிந்து பார்க்கலாமோ
பாதி மறைந்த ஸ்தனமும்
பாங்காய் இடுப்பில் ஒட்டியாணமும்
வாழைத் தொடையும்
வடிவான தோளுமாய்க்
குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ
குனிந்து பார்க்கலாமோ

முனிவனவன் பெண்டாட்டி
முடிஞ்சு வச்ச கூந்தலிலே
செல்லமாத் தலைப்பேனா
கள்ளப் புருசனையும்
ஒளிச்செடுத்து வந்து
ஓரமாத் தலைவிரிச்சா
கச்சு அகற்றிப் பழம் போல
கனிஞ்சு தொங்கும் தனமிரண்டும்

எழுதிய மனம் தான், செம்மீன் பற்றிய பத்தியையும் எழுதியிருக்கும் என்று சொன்னால் நான் சத்தியமாக நம்ப மாட்டேன்.

பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - வா.மு.கோமு - 2

காலச்சுமை
- சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா

- வா.மு.கோமு


எப்போ ஆரம்பிச்சுது என்பது பற்றியான பழைய ஏட்டுச்சுவடிகள் காணாமல் போய்விட்ட படியால், ஆதாம் ஏவாள் ஆப்பிளை கடிச்சுத் தின்னுட்டே, பாம்பு வடிவில் இருந்த சாத்தான் தன்னோட மரத்துல இருக்கிற ஜெர்ரி பழத்தையும் சாப்பிடச் சொல்லி கேட்க, ஏவாள் சரியென்று ஜெர்ரிப் பழத்தையும் சாப்பிட்டு விட, சாத்தான் எஸ்கேப் ஆகிவிட்ட நாளுக்கு பின் வந்த மார்கழி மாதத்தில் துவக்கப்பட்டதாக கருதப்படுகிற இந்த இதழ், பின் வந்த மாதங்களில் மாசா மாசம் காலம் தவறாமல் மிகச் சரியாக தேதி ஒன்றில், தற்போது உலகம் முச்சூடுமே, செவ்வாய் கிரகம் ஒன்னே ஒன்னு தான் பாக்கி என்கிற நிலையில், தமிழின் மிக முக்கியமான படைப்பாளிகள் கொஞ்சம் பேர்களிடம் மட்டுமே, பத்திகள், கதைகள், ஆய்வுக்கட்டுரைகள், கவிதைகள், இலக்கிய சர்ச்சைகள் இப்படி மாத்தி மாத்தி, அந்தக் கொஞ்சம் பேர் மட்டும் சாவுறமுட்டும் எழுதி எழுதி எழுத்தார்வத்தை தீர்த்துக் கொள்ளும் பலவர்ண முக ஆளுமை கூட்டிக் கொண்ட இதழ் காலச்சுமை.


தோழர் பெரியசுவாமி, சுள்ளிமேட்டு ராமசாமியின் வெளிவராத படைப்புகளை அவிங்களே மண்டியைப் போட்டு எழுதிட்டுப் போனாப்பிடி, தேர்ந்த எழுத்துப் பொறியாளர்களை வைத்து எழுதச் செய்து, இதுவரை வெளிவராத படைப்பு என்று கட்டம் கட்டி விளம்பரம் செய்து, தமிழில் பொறுக்கி எடுத்து படைப்பு என்று கட்டம் கட்டி விளம்பரம் செய்து, தமிழில் பொறுக்கி எடுத்து வெளியிடும் இதழ். தமிழகத்தின் மீலை முடுக்கிலெல்லாம் இருக்கும் கிறுக்கு வெள்ள (சாராயம்) கடைகளிலும், மற்றும் எரிபொருள் விற்பனை நிலையங்களிலும், மிகப்பெரிய திருத்தளங்களிலும், பியூட்டி பார்லர்களிலும், பைனான்ஸ் நிறுவனங்களிலும், சுங்கச் சாவடிகளிலும் என்று திரும்பின பக்கமெல்லாம் கிடைக்கும் ஒரே பயங்கரமான மாத இதழ் காலச்சுமை.

வாரக்கூலி, தினக்கூலி, ஆபிஸ்கூலி, பென்சன் கூலிக்கு செல்லும் இலக்கிய ஆர்வலர்கள் காலச்சுமை இதழை மாதம் மாதம் தங்களின் அடையாள அட்டையை கிறுக்குவெள்ளக் கடைகளில் காட்டு மூன்று ரூபாய் குறைவாக கொடுத்து இதழை வாங்கிச் சென்று இந்தோனியாவில் குண்டுகள் வெடித்துச் சிதறிக்கொண்டிருந்த சமயம் இடிபாடுகளுக்கிடையே கிளம்பிய மார்க்மன் என்கிற புயல் எழுச்சிக்கவிஞர் பற்றியும், அயல் தேசத்தில் அனாயசமாக சிறுகதைகளை புரட்டிப்போட்டு தலைக்கீழாக எழுதிய சிக்கின் சிறுகதை ஒன்றையும், மாக்மால் தீவில் சமூகத் தொண்டாற்றி அரசியலில் ஈடுபட்ட சகோதரி இர்பினின் கள்ளக் காதலர்களின் திருட்டுத்தனங்கள் பற்றியும், இப்படியான அயல் தேச சமாச்சாரங்களை தாங்கிய தமிழ் இதழான காலச்சுமை படித்து அமைதியாகக் கிடக்கும் மூளைக்குள் தீயைப் பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.

வாசகர்களுக்கான திட்டமாக முதலில் எங்களிடம் நேரடியாக ஒரு வருட சந்தாவை எங்களது அலுவலகத்தில் கட்டுபவர்களுக்கு, எங்களிடம் கைவசமுள்ள காதுகுத்து நிபுணரைக்கொண்டு உங்களுக்கு எறும்பொன்று கடித்து வைத்தாற் போன்ற சின்ன வலியுடன் துவாரமிட்டு, தொங்கட்டான் மாட்டி அனுப்பி வைக்கின்றோம். கூடவே மொட்டையையும் அடித்து விட விருப்பமுள்ளவர்கள் முன்னூறு ரூபாய்க்கு எங்கள் நிறுவன வெளியீடுகள் சிலவற்றை வாங்கி, மண்டைக்கு சந்தனமும் பூசிச் செல்லுமாறு பணிக்கிறோம்.

காலச்சுமை பதிப்பகத்தின் வெளியீடுகளை தமிழகத்தில் உள்ளவர்கள் வாசித்துப் பயன்பெற விரும்பினால், பதிப்பக முகவரிக்கு எந்த எந்த புத்தகங்கள் தேவை என்கிற தகவலையும், உங்களது முழு முகவரியையும் அனுப்பினால் போதுமானது. எமது நிறுவனத்திலிருந்து உங்கள் முகவரிக்கு புத்தகக் கட்டோடு ஒரு ஆள் நேரடியாகவே வந்து சேருவார். அவர் தான் எங்கள் நிறுவனத்தின் தங்கமகன். அவரிடம் புத்தகத்திற்கான விலையையும், பயணச் செலவையும் தந்து அனுப்பி வைக்க வேண்டுகிறோம். இந்த ஏ.பி.பி முறையானது காலச்சுமை பதிப்பகத்தாரிடம் மட்டுமே. இந்த ஏ.பி.பி முறையால் புத்தகம் எவ்விதத்திலும் தவறிவிடும் வாய்ப்பு இல்லை. இதில் வாசகர்கள் சந்தேகம் கொண்டால் டபுள் ஏ.பி.பி முறையை உறுதியாக நம்பலாம். அதில் தங்கமகன்கள் இருவர் உங்கள் இல்லம் தேடி வந்து, நீங்க வெளியூர் சென்றிருந்தாலும் வரும் வரை வீட்டுத் திண்ணையில் காத்திருந்து கொடுத்து வருவார்கள்.

எங்களது சிறப்புத்திட்டதில் உங்கள் வீட்டின் பத்திரம், அல்லது நிலப்பத்திரம் அல்லது நகைகளை எங்களிடம் வைத்து, வருடம் வருடம் நாங்கள் வெளியிடும் வெளியீடுகளை முழுமையாக பார்சலாக பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் இதுவரை தமிழகத்தை சார்ந்த 3000 வாசகப் பெருமக்கள் இணைந்து, தங்களது சொத்துபத்துக்களை அளித்து, காலச்சுமை இதழை மாதம் தவறாமல் இலவசமாகப் பெற்று அறிவு வளர்ச்சியடைகிறார்கள். சொத்துபத்து இல்லாத அறிவுத் தேடல் விரும்பும் வாசகர்கள் தங்களது விரைகளில் ஒன்றை எங்களிடம் சமர்ப்பித்து திட்டத்தை சிறப்பிக்க வேண்டுகிறோம். இத்திட்டத்திற்கான ஆள் பிடிப்புப் பணியில் இறங்குபவர் ஐந்து ஆட்களை இத்திட்டத்தில் இணைக்கும் பணியை செவ்வனே செய்து முடித்ததும், எங்களது செலவில் அவர் விரும்பும் வெளிநாட்டுக்கு ஒருவாரம் அனுப்பி வைக்கிறோம்.

காலச்சுமை 2008 வெளியீடுகள்

பதிமூன்று இரவுகளின் கதை (நாவல்)
கவிநி கமலா

நாவல் முழுவதும் ஒரு தனித்தீவில் நடைபெறுகிறது, வெளிநாட்டில் இப்படி ஒரு நாவல் வெளிவந்திருந்தால் நாவலாசிரியை தான் கைது செய்யப்படுவதை தவிர்க்க வேண்டி நாடு விட்டு நாடு செல்ல வேண்டி இருந்திருக்கும். தமிழில் இந்த நிலை இதுவரை இல்லை. பின் நவீன பிரதிகளில் காணக்கிடைக்கும் உடல் சார்ந்த பொருட்கள் அவற்றின் பயன்பாடுகள் இந்தப்பிரதியில் கேலிக்கு உள்ளாக்கப்படுகின்றன. தனது பதிமூன்று கணவன்மார்களோடு தனித்தீவில் வசிக்கும் கமலா அவர்களை அடைந்த விதம் பற்றியும், அவர்களுடனான தமது பொழுது போக்குகள் பற்றியும் தேர்ந்த நாவலாசிரியை போன்று விவரித்துச் சொல்லும் .
முற்றிலும் தமிழுக்குப் புதிதாய் இருப்பதினால் நாம் சொக்கிப்போய் நாவலில் ஆழ்ந்து விடுகிறோம் . கவிஞியாக மட்டுமே அறியப்பட்ட கமலாவின் முதல் நாவல் என்பது படிப்போரை ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கும் சங்கதி.

தனது கவிதைகளில் வாழ்வாதாரமான காமத்தை பேய் போல் எதிர்க்கொண்ட கமலா நவீன மனதின் அசலான பிரதிபலிப்பை தனது முதல் நாவலில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.
( முன்னுரையில் மு. ஹரிகிருஷ்ணன்)

புளியங்கா கவிதைகள்
ஜான் - ஜானி - ஜனார்த்தன்

கவிதை என்பது கண்டபடி எழுதுவது . கவிதைகள் வாசகனுக்காக எழுதப்படுவன அல்ல. வாசகனுக்கு எதற்காக கவிதைகள்? எனக்கேட்கும் ஜான் - ஜானி - ஜனார்த்தன். இம்மூவரின் ஏழாவது கவிதை தொகுப்பு புளியங்கா கவிதைகள். உடல் சார்ந்த கவிதைகளுக்காக
ஒரு தொகுப்பும் , கடல், கடல் வாழ் உயிரினங்களுக்காக தங்களது மூன்றாவது தொகுப்பும், வான் , வான் சார்ந்த நட்சத்திர கூட்டங்களுக்காக ஒரு தொகுப்பும் என பின் நவீன மூளைக்கட்டிகளை தங்களது மண்டையோட்டினுள் சிவப்பு நிறத்தில் ஆக்டோபஸ் வடிவத்தில் வடிவமைத்துக் கொண்டவர்கள் பழங்களின் வகைகளுக்காக ஆஸ்த்திரேலிய பழ வகையிலிருந்து ஜெர்மன் பழ வகைகள் வரை எழுதி விரித்து செல்லும் கவிதைகள் இந்த தொகுப்பில் நிறைந்துள்ளதாக குறிப்பிடுகிறார்கள்.

மரமேஜை ஒன்றின் மீது பூசணிப்பழத்தை வைத்துக்கொண்டு மூவரும் இணைந்தும் , பின்னர் தனித்தனியாகவும் அவரவர் தாள்களில் பெண்களின் பின்புறங்களுக்கு இணையாக எழுதி வடிவமைக்கப்பட்ட கவிதைகள் தமிழின் ஆகச்சிறந்த அட்டகாடம் , ஏற்கனவே பல்வேறு இதழ்களில் வெளிவந்து பல்வேறு பழங்களின் வாசனைகளைக் கூட நுகர வைத்த கவிதைகள்.

ராசாத்தி
பி.கே. ராசாத்தியின் சரிதம்
கன்னடத்திலிருந்து தமிழில் கருப்பன்

குப்பத்தில் கிடந்த ராசாத்தி ஆதிக்க கரங்களின் பிடிகளுக்குள் சிக்கி சீரழிந்து சின்னாப் பின்னமானவர். சேற்றில் முளைத்த செந்தாமரை. வீரு கொண்டு எழுந்து ஆதிக்க சக்திகளின் வேர்களை கிள்ளி எறிந்த வரலாறு. ஒடுக்கப்பட்ட இனம் சார்ந்தவர்கள் படித்து நுகர, எழுச்சி பெற , தாலாட்டி , சீராட்டி, குளிப்பாட்டி பட்டுடுத்திப் பார்க்க வேண்டிய போராளி ராசாத்தி என்பதை யாரும் மறுக்கவோ புறக்கணிக்கவோ முடியாது. ஒடுக்கப்பட்ட , தட்டி முறிக்கப்பட்ட, பிளாஞ்சு ,பிளாஞ்சென ப்ளாஞ்சப்பட்ட பிறகு தற்போதைய உரிமைக்குரலாகவும், சவுண்டு பார்ட்டியாகவும் எழுச்சியடைந்தவர் ராசாத்தி. வரலாறுகள் என்றுமே சோக நிழல் படிந்து கிடப்பது உண்மைதானே.

ஏற்கனவே கருப்பனின் மொழிபெயர்ப்பில் காலச்சுமை வெளியீடாக வந்த குப்பம்மா, மொழிபெயர்ப்பில் கருப்பனுக்கு ஏராளமான புகழை ஈட்டித்தந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. கன்னடத்தில் ராசாத்தி வயிறு எரிந்து போய் பேசிய கெட்ட வார்த்தைகளை தமிழ்படுத்த கருப்பன் சிரமப்பட்டு அப்படியே தமிழுக்கும் தருவித்திருக்கிறார். சரிதத்தை படிப்போர் வடிக்கும் கண்ணீர்த்துளிகளே அதற்கு சாட்சி.

கொய்யா பழத்தின் கதை ( நாவல் )
சுள்ளிமேட்டு ராமசாமி

1980 ல் முதல் பதிப்பு வெளி வந்த போதே வாசக உள்ளங்களை கொள்ளையடித்து பின்னர் தமிழில் ஒரு ஆட்டு ஆட்டிய நாவல். ஒரு கொய்யா செடியில் பிஞ்சாகத்தோன்றி, பருத்து பச்சை நிறத்தில் காட்சியளித்து பின்னர் யெல்லோ வர்ணத்திற்கு உருமாறி, கடைசியில் காய்ந்து கருமை நிற ஓடாய் மாறி.., நாகரீக வளர்ச்சியில் அழிந்து போன கொய்யாவின் கதை ஆசிரியரால் நிதானமாக நகர்த்தப்பட தமிழின் கதை கூறல் முறை பயன்பட , நாவல் தமிழின் கிளாசிக் என்ற பட்டத்தை நிலையாக பிடித்துக்கொண்டது. இன்று நாவல் உலகில் வேர்பிடித்து பயங்கரமாய் நின்று விட்டது. கிஹிப்ரூ விமர்சகர் ஈஸ் கே சான் நோபல் பரிசை விட வேறு ஏதோ பெரியதாக இந்த நாவலுக்கு தரப்பட வேண்டும் என்கிறார். மெசபட்டோமியாவிலும் , யுவான் சுவாங்கிலும் வீட்டுக்கு வீடு படித்து மகிழும் ஒரே தமிழ் நாவல் இது. தற்போது மீண்டும் செம்மைப்படுத்தப்பட்டு அட்டையில் இரும்புத்தகடு கொண்டு கட்டமைக்கப்பட்டு செழுமையான மறு தயாரிப்பில் வந்திருக்கிறது.

ஓலை வேய்ந்த சாலை
குமரனின் தேர்ந்தெடுக்கப் பட்ட கவிதைகள்
தொகுப்பாளர் : சின்ன பெருமான்

குமரன் ஏகப்பட்ட கவிதைகளை எழுதியவர். கீ என்கிற தனியிதழை சிரமம் பாராமல் நடத்தியவர். கடன் தொல்லை காரணமாக உள்ளூர் ஏரிக்குள் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டவர். பூடகமாக கவிதைகள் எழுதியவரை வாழ வைக்காமல் விட்ட இந்த சமுதாயத்தை, அவர்பால் அன்பும் நேசமும் கொண்ட சமகால கவிஞர் கூட்டம் இன்னமும் சாடிக்கொண்டேயிருக்கிறது.குமரனின் கவிதைகளில் குப்பைகளை கழித்து தேர்வு செய்தவை இத்தொகுதியில். ஒவ்வொரு கவிதையயும் கிணற்றில் மூழ்கி மூழ்கி அடியாழத்தில் இருந்து பொக்கிஷம் தேடி எடுத்து வரும் நிலையில் சிரமத்துடன் படிமக் கவிதைகளை தேர்ந்தெடுத்ததாக களைப்பில் சின்ன பெருமாள் முன்னுரையில் கூறுகிறார். இதில் இதுவரை வெளிவராமல் இவரது கண்டெடுக்கப்பட்ட கவிதைகளும் அடக்கம். இவை நுட்பமும், படிமங்களோடே நகர்வதும் பின்னர் நொறுங்குவதுமான கவிதைகள்.

அணில்கள் ( சிறுகதைகள் )
சுள்ளிமேட்டு ராமசாமி

1980 லிருந்து 1998 அவரது இறப்புக்காலம் வரை எழுதிய பன்முக ஆளுமை மிக்க சிறுகதைகள், மொத்த சிறுகதைகளும் அடங்கிய கெட்டி அட்டை பதிப்பு.கால வரிசைக்கிரமமாக உன்னிப்பாய் ஊரே கூடி பிழைகள் திருத்தி பிழைகள் இல்லாமல் தயாரிக்கப்பட்ட வொய்லெட் பதிப்பு. ஏற்கனவே 91 லிருந்து 95 வரையிலான இவரது சிறுகதைகள் முயல்கள் என்கிற தலைப்பில் தொகுக்கப்பட்டு தமிழ் வாசகப் பரப்பை பீதியுறச் செய்தது நினைவிருக்கலாம். இதுவும் போக அன்னாரது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுதி விற்பனையில் பட்டையைக் கிளப்பியதும் வாசக நேசங்களுக்கு நினைவிலிருந்து அழிந்து போகாது. காலாகாலத்துக்கும் நின்று நிலைக்கும் தொகுப்பு அணில்கள். படிப்பாளிகள் அனைவரது இல்லங்களிலும் இருக்க வேண்டிய பதிப்பு.

இன்று ராத்திரி நான் நாசமாகலாம்:
ப்ரெஞ்ச் கவிதைகள்
தமிழில்: புலிகேசி

சர்ரியலிசத்திற்கும், சாம்பார் ரசத்திர்கும் பெயர் போன ப்ரெஞ்ச் கவிஞர்களின் கவிதைகளை மொழிபெயர்க்க தனித்திறமையும் , தனித்த பேடித்தனமில்லாத தைரியமும் வேண்டும்,ப்ரெஞ்ச் கவிதைகளின் முன்னோடி கிட்ஷாவின் குழந்தைப் பாட்டிலிருந்து தற்போதைய இளைய தலைமுறை கவிஞரகள் வரை தேடிக் கண்டறிந்து புலிகேசி பழகு தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். புத்தக கண்காட்சிக்காக அவசரமாக தயாரிக்கப்பட்ட சாதா அட்டை சாதா பேப்பர் தயாரிப்பு.

யோனி
கவிதைகள் : கவிஞர் கமலா

வாழ்வின் துக்ககரமான பகுதிகளிலும் தன் காமம் பற்றி தாள்களில் எழுதிச்செல்லும் கவிஞி கமலாவின் மூன்றாவது தொகுப்பு.வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும்
வெளிச்சத்தில் பொத்தல் விழுந்த ஆணுறைகளைப் பற்றி எழுதிக்குவிக்கும் கவி மனம் உலகின் எந்த மூலைகளில் உள்ள கவிஞிகளுக்கே இல்லாது, வெளி உலகத்தை உள்ளுக்குள்ளும் , உள் உலகை வெளியிலும் எழுதித் தீர்த்த கமலா சொற்களை
கலைத்துப் போட்டு கூட்டாகச்சேர்க்கும் பணியை ஒரு சாலைப்பணியாளரின் நேர்த்தியோடு செய்கிறார்.
கவிதைகளில் காமத்தையும் ஆடைகளற்ற நிர்வாணத்தையும் எப்படியோ யோனிகள் , முலைகள் என்று கவிதைக்கு கவிதை ஜம்மென வாசகங்கள் இடம் பெற்றால் சரி என்று ரசிப்பவர்களை கைநீட்டு காதலோடு அழைக்கின்றன் இவரது கவிதைகள்.
ஒளிந்திருந்து பேசிய கதைகள்
தொகுப்பு : தொப்புளான்

திருட்டுக் கொடுத்தவர்களின் புலம்பல்கள் , திருடு போன அலுமினிய தேக்ஸா,
குண்டான் பற்றிய பதிவுகள், கூடவே திருடியவர்களின் கொண்டாட்டங்கள் , சில்மிஷங்கள்.., கூடவே திருடுவதில் நடந்த பிழைகள் என இவைகள் பலவற்றையும் சேர்த்து மிக மிக சிரமப்பட்டு திருடிச்சேகரித்த சிறு சிறு திருட்டுக்கதைகள்.

இவைகள் எல்லாமே தமிழக கிராமங்களில் முன்பு பஞ்சம் பட்டினி தலைவிரித்தாடிய சமயத்தில் நடைபெற்ற உண்மைச்சம்பவங்களின் சேகரிப்பு. தமிழில் இப்படி ஒரு தொகுப்பு வருவது இதுவே முதல் முறை. இவற்றை சேகரிக்க தொப்புளான் பயணப்பட்ட கிராமங்கள் எண்ணிலடங்காதவை.

சூனிய நிழல் ( நாவல்)
தோழர் பெரியசாமி

மொழியின் அடுக்குகள் சிதைவுற்று இசங்களின் போர்வைக்குள் சிக்காமல் வந்த தமிழின் முதல் குதிரைப் பிரதி. ஏற்கனவே ஆசிரியரின் சொந்த வெளியீடாக வந்த பிரதி பத்து வருடம் கழித்து அதே ஆளுமையுடன் ப்ளாஸ்டிக் தாள்களில் வருகிறது. தமிழில் அதிகம் பேசப்படாத நாவல்களில் ஒன்றான சூனிய நிழல் வெறுமைப் பாதையில் செல்லும் புத்தி தடுமாற்றமற்ற நாவலாக அறியப்பட்டிருக்கிறது.

சுள்ளிமேட்டு ராமசாமி 80 லிருந்து 95 வரை ( கட்டுரைகள் )

எழுத்துலகில் பலகாலம் கொடியைக் கட்டிப்பறந்து வாசக மனங்களை அபகரித்துக்கொண்டவர் சுள்ளிமேட்டு ராமசாமி. இவரைப் பற்றி ஏனைய எழுத்தாள பக்த சிரோமணிகள் எழுதிய ஞாபக அடிச்சுவடுகளின் தொகுப்பு. கூடவே இவரது மேடைப்பேச்சுகள், பேசலாம், எழுதலாம் என எழுதி வைத்த முக்கிய குறிப்புகள் எல்லாவற்றையும் சமயத்தில் காசு பார்த்து விடும் நோக்கில் கூட்டாக சேகரித்து வெளிவரும் அவசர பதிப்பு.

தோழர் பெரியசாமி
நினைவோடை : சுள்ளிமேட்டு ராமசாமி

ஆயிரத்தெட்டு பிரச்சனைக்களுக்கு மத்தியிலும் நட்புறவோடு இரண்டு சாமிகளும் பழகி உள்ளதை மூடி மறைக்காது திறந்து காட்டும் புத்தகம்.

என் வேதனைகள் ( பதிவு )
கனகா

சிவராமன் திரைப்படத் துறையில் நுழைந்து கலக்கி வருவது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் தில்லான திரைப்படத்திற்கு வசனம் எழுதிய சிவராமன் நாயகியின் பெயரை கனகா என்று பயன்படுத்தி கதாநாயகனை விட்டு கனகா காபி கொண்டாடி , கனகா துணியை துவையடி,கனகா பெட்ரூம் வாடி என்று வசனங்களை அள்ளித்தெளித்ததால் சிறு பத்திரிக்கை இலக்கிய கூடாரத்தில் கவிதைகளை வீச்சோடு எழுதும் கவிஞி கனகா கொந்தளித்து எழுந்து வைக்கும் புகார்களும் , வாடி போடி என்பனவற்றால் தான் அடைந்த மன உளைச்சல்களையும் பதிவு செய்யும் சிறு புத்தகம். கூடவே காலச்சுமை ஆசிரியர்க்கு அளித்த நேர்காணலில் கதறக்கதற கொட்டிக் குவித்த கண்ணீர்த்துளிகள் இணைப்பாக.

ஏ.பி.பியில் வாங்குங்கள்

# காலச்சுமை பதிப்பக வெளியீடுகளை வீட்டிலேயே பெற்றுக்கொள்ளுங்கள்

# உங்கள் தேவையையும் முகவரியையும் SMS அனுப்பினால் போதுமானது. போஸ்ட் ஆபிஸ் தேடிக்கொண்டோ , வங்கிகளை தேடிக்கொண்டோ இதற்காக வெய்யிலிலும் , மழையிலும் அலைந்து உடலை கெடுத்துக்கொள்ளாதீர்கள்.

# புத்தகங்களை உங்கள் நண்பனாக பாவியுங்கள் சிரமம் இராது.

பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 14

ஃபஹீமா ஜஹானின் 'ஒரு கடல் நீரூற்றி' - விமர்சனம்
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,இலங்கை.


ஒருவர் தான் பார்த்த,கேட்ட, அனுபவித்த விடயங்களை மற்றவரும் புரியும்படி எத்திவைப்பதென்பது எழுத்தின் முக்கியப்பணி. எழுத்துக்களின் வகைகளில் கவிதை முக்கிய இடம் பெறுகிறது. கவிதை எனச் சொல்லி எதையோ கிறுக்கிவிட்டு, வாசிப்பவர் மனதில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படாமல் போகும் எழுத்துக்களைக் கவிதை எனச் சொல்வது இயலாது.

ஃபஹீமா ஜஹான் இதுவரையில் எழுதியிருக்கும் ஐநூறுக்கும் அதிகப்படியான கவிதைகளிலெல்லாம் வாசிப்பவர்களின் மனதில் சோகத்தைப் பூசிச்செல்வது தான் அவரது கவிதைகளின் வெற்றி. எழுதும்போது அவர் சிந்தித்த கருவை வாசகர் மனதிற்குப் புரிய வைக்கும்படியான சொல்லாடலில் அவரது கவிதைகள் மிளிர்கின்றன. ஒவ்வொரு கவிதையிலும் காணப்படும் சொற்களின் வித்தியாசம்,எளிமையான ரசனை மிக்க வரிகள் ஆகியன ஆயாசமின்றிக் கவிதைகளை வாசிக்கத் தூண்டுகின்றன. கவிதை வாசித்து முடித்தபின்னரும் அதுபற்றியதான பிம்பங்களை தொடர்ந்து மனதிற்குள் ஓடச்செய்தவாறு இருப்பதே சிறந்த கவிதையின் அடையாளம். அது போன்ற சிறந்த கவிதையின் அடையாளங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன ஃபஹீமா ஜஹானின் கவிதைகள்.

ஏறத்தாழ பத்து வருடங்களுக்கும் மேலாகக் கவிதைகள் எழுதிவரும் இவரது முதல் தொகுப்பு 'ஒரு கடல் நீரூற்றி...'.
பனிக்குடம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தத் தொகுப்பு முன்னுரைகளெதுவுமற்று நேரடியாகக் கவிதைகளுக்குள் இழுத்துச் செல்கிறது. புத்தக அட்டையோடு சேர்த்து அதன் பக்கங்களும் மிக எளிமையான வடிவத்தில் கோர்க்கப்பட்டு கவி சொல்லும் துயரங்களை மட்டும் உரக்கப்பேசச் செய்கின்றது.

'அவசரப்பட்டு நீ
ஊரைக் காணும் ஆவலிலிங்கு வந்துவிடாதே
வதைத்து எரியூட்டப்பட்ட சோலைநிலத்தினூடு
அணிவகுத்துச் செல்லும் காவல்தேவதைகள்
அமைதியைப் பேணுகின்றன.
அந்த ஏகாந்தம் குடியிருக்கும்
மயானத்தைக் காண உனக்கென்ன ஆவல்?
வந்துவிடாதே '

எனும் அட்டைக் கவிதை சொல்லும் வலிகளோடு ஆரம்பிக்கிறது ஃபஹீமா ஜஹானின் 'ஒரு கடல் நீரூற்றி...' கவிதைத் தொகுப்பு.

தொகுப்பின் முதல்கவிதையாக 'அம்மையே உனைக் கொன்ற பழி தீர்த்தவர்களாய்..'
ஒரு கிராமத்துப் பெண்ணின் யௌவனக் காலம் தொட்டு முதுமை வரையில் அவளது வாழ்வை, அவள் வாழும் வாழ்வினை அழகாகச் சொல்கிறது. அந்தப்பெண்ணின் வாழ்வியலைக் கவிஞர் இப்படி அழகாக ஆரம்பிக்கிறார்.

ஆண்களை மயக்கும் மாய வித்தைகளை
நீ அறிந்திருக்கவில்லை:
ஓர விழிப் பார்வைகளோ...
தலை குனியும் தந்திரங்களோ... உன்னிடமிருக்கவில்லை!
தெளிவும் தீட்சணியமும் உன் பார்வையிலிருந்தது:
உறுதியும் தைரியமும் உன் நடையிலிருந்தது:
அலங்காரமும் ஒப்பனையும் உன்னிடமில்லாதிருந்தது:
எளிமையும் பரிசுத்தமும் நிரம்பியதாய் உன் வாழ்க்கையிருந்தது!

சுய ஒழுக்கமும் தூய்மையும் நிறைந்த ஒரு கிராமத்துப் பெண்ணின் குண இயல்புகளை அழகாகச் சித்திரப்படுத்துகிறது இந்த வரிகள். இனி அவரது தொழில் குறித்தும் அவரது வீரதீரங்கள் பற்றியும் இப்படிச் சொல்கிறார்.

இளம் பெண்ணாக அப்பொழுது
வயல் வெளிகளில் மந்தைகளோட்டிச் செல்வாய்:
அடர்ந்த காடுகளிலும்...
வெள்ளம் வழிந்தோடிய ஆற்றங்கரைகளிலும்...
விறகு வெட்டித் தலைமேல் சுமந்து திரும்புவாய்!
அப்போதந்தக் காடுகளில் வாழ்ந்த பேய்,பிசாசுகள்
தூர இருந்து கனைத்துப் பார்த்துப் பின்
மறைந்து போவதாய் கதைகள் சொல்வாய்!
வீட்டிலும் வெளியிலும் உன் குரலே ஓங்கியொலித்தது!

இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் பேய், பிசாசுகள் உண்மையான பேய், பிசாசுகள் தானா? சமூகத்தையும் அதிலிருந்து கொண்டு அதிகாரங்கள் விதித்திடும் சில கயவர்களையும் சேர்த்துத்தான் இச்சொற்கள் குறிப்பிடுகின்றன என நினைக்கிறேன். வீட்டிலும் வெளியிலும் அவள் குரல் தைரியமாக ஓங்கியொலித்திருக்கிறது. அப்போதைய அக்கிராமப் பெண் அப்படியிருந்திருக்கிறாள்.

காலப் பெருஞ் சுழியில்-நீ
திரிந்து வளர்ந்த அடவிகள் யாவும் மெல்ல அழிந்தன:
பளிங்கு போல் நீரோடிய அருவிகள் யாவும்
அசுத்தமாகிப் பின் தூர்ந்து போயின:
கடந்த காலம் பற்றிய உன் கதைகளிலெல்லாம்
கசப்பான சோகம் படியலாயிற்று!

காலம் தன் எல்லைகளைச் சுருக்கி அவளில் முதுமையை வரைய ஆரம்பித்த கதையை அழகாகச் சொல்கிறார்.அவளிலிருந்த அத்தனை வசந்தங்களையும் காலம் வற்றச் செய்து,

உன் பொழுதின் பெரும் பகுதி
படுக்கையில் முடங்கிப் போனது!
ஓய்வற்றுத் திரிந்த உனது பாதங்கள்
பயணிக்க முடியாத் திசைகள் பார்த்துப் பெருமூச்செறிந்தன:
வேலைகளை எண்ணி
உனது கரங்கள் துடிக்கும் பொழுதுகளில்
இயலாமைகள் கொண்டு புலம்பத் தொடங்குவாய்!

படுக்கையில் தள்ளியவிடத்துத் தன் பால்யத்தையும் ஓடியாடி வேலை செய்து களித்த நாட்களையும் எண்ணிச் சோர்ந்து புலம்பல்களில் பொழுதைக் கழிக்கும் அம் மூதாட்டியின்

நோய் தீர்க்கவென
சந்தடிகள் நிரம்பிய நகரக்குக் கூட்டிவரப் பட்டாய்!
உன் காற்றும் நீரும் மண்ணும் ஆன்மாவுமிழந்து...
நகரடைந்தாய் நீ மட்டும்!
உணர்வுகள் அடங்கி ஓய்ந்த பின் ஒரு நாள்
உறவுகள் கூடி உனைத் தூக்கிச் சென்றனர்...
உனக்கான மண்ணெடுத்த பூமி நோக்கி!
அம்மையே!
இப்போது நாம் வாழ்கிறோம்
எல்லோர் கையிலும் பொம்மைகளாக...!

பழகிய தடங்களிலிருந்து புதுப் பாதைகளில் பயணித்த உயிர் அடங்கிய கணத்தோடு இப்போதைய பெண்களின் வாழ்க்கையை பொம்மைகளுக்கொப்பிட்டு அருமையாகக் கவிதையை முடிக்கிறார் கவிஞர். இது கவிதை மட்டும் தானா? உயிர் வதைக்கச் சுடும் நிஜம் அல்லவா?

தொகுப்பிலிருக்கும் இன்னொரு கவிதையான ' இரகசியக் கொலையாளி' கவிதையும் ஒரு கிராமத்து மூதாட்டியைப் பற்றியது. தனது அம்மம்மாவின் அந்திமக் காலத்தில் தன்னால் அருகில் இருக்கமுடியவில்லையே என்ற ஏக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது இக்கவிதை. தனது சிறிய வயது முதல் தன்னைப் பார்த்துப் பார்த்து வளர்த்திட்ட அம்மம்மாவைச் சிலகாலம் பிரிய நேர்கிறது கவிஞருக்கு. அப்போதைய அம்மம்மாவின் மனநிலையை அழகாக விவரிக்கிறது கவிதையின் இவ்வரிகள்.

உனைப் பிரிந்து நான்
நீள் தூரம் சென்ற காலங்களில்
உயிர் வதைபட வாழ்ந்திருந்தாய்
மீளவந்து உனைக் காணும்
ஒவ்வொரு காலத்திலும்
அநாதரவாய் விடப்பட்ட
உனதுயிரின் கரைகளை
அரித்தரித்தே அழித்திருக்கும்
மூப்பும் துயரும்

அம்மம்மாவின் இறுதிக் கணங்களில் தான் அருகில் இல்லாமல் போனதைப் பெரிதும் வலியுடனும், ஆயுள் முழுதும் மனதில் ஆணியடித்துக் கிடக்கும் குற்றவுணர்வோடும் பதிந்திருக்கிறார் இப்படி.

உன் கடைசி நிம்மதியும்
நான் தான் என்பதை ஏன் மறந்தேன்?
கைசேதமுற்றுத் தவிக்கும் ஆன்மாவைச்
சாவு வரையும் சுமந்தலைய
ஏன் விதிக்கப் பட்டேன்?

தொகுப்பில் இவரது அடுத்த கவிதையான 'அவள் அவளாக' கவிதை ஆண்களின் சிம்மாசனங்களுக்கு அடிமைப் பெண்களாக வாழும் பெண்களின் துயரங்களைப் பாடுகிறது .

உனது தேவதைக் கனவுகளில்
அவளுக்குக் கிரீடங்கள் வேண்டாம்:
உனது இதயக் கோவிலில்
அவளுக்குப் பூஜைப் பீடம்வேண்டாம்:
உனது ஆபாசத் தளங்களில்
அவளது நிழலைக் கூட
நிறுத்தி வைக்க வேண்டாம்:
வாழ்க்கைப் பாதையில்
அவளை நிந்தனை செய்திட
உனது கரங்கள் நீளவே வேண்டாம்!

என வலியுறுத்தும் கட்டளைகளோடு ஆரம்பிக்கும் கவிதை, எளியவரிகளில் புரிந்து கொள்ள எளிதாக இருப்பதானது இக்கவிதையின் பலம் எனலாம். பல கவிஞர்கள் , மற்றும் பலர் பெண்களை வர்ணிக்கப் பயன்படுத்துபவற்றைத் தனது சொற்களில் சாடுகிறார் இப்படி.

அவளது விழிகளில் உனதுலகத்தின்
சூரிய சந்திரர்கள் இல்லை :
அவளது நடையில்
தென்றல் தவழ்ந்து வருவதில்லை:
அவளது சொற்களில்
சங்கீதம் எழுவதும் இல்லை:
அவள் பூவாகவோ தளிராகவோ
இல்லவே இல்லை!

ஆண்களின் உலகில் பெண்களின் நடவடிக்கைகள் எல்லாம் கூட ஆண்களாலேயே தீர்மானிக்கப் படுகின்றன. அவளது சுயம் தகர்த்து அதில் தன் ஆளுமையை விருத்தி செய்ய முயற்சிக்கின்ற ஆண்களுக்குக் கவிதையின் இறுதிப் பகுதி சாட்டையடி.

காலங்காலமாக நீ வகுத்த
விதிமுறைகளின் வார்ப்பாக
அவள் இருக்க வேண்டுமென்றே
இப்போதும் எதிர்பார்க்கிறாய்

உனது வாழ்வை வசீகரமாக்கிக் கொள்ள
விலங்குகளுக்குள் அவளை வசப்படுத்தினாய்:
நான்கு குணங்களுக்குள் அவள்
வலம் வர வேண்டுமென வேலிகள் போட்டாய்:
அந்த வேலிகளுக்கு அப்பாலுள்ள
எல்லையற்ற உலகை
உனக்காக எடுத்துக் கொண்டாய்!

எல்லா இடங்களிலும்
அவளது கழுத்தை நெரித்திடவே
நெருங்கி வருகிறது உனது ஆதிக்கம்!

அவள் அவளாக வாழ வேண்டும்
வழி விடு!

இதே போன்ற கருவை தொகுப்பில் உள்ள 'பேறுகள் உனக்கு மட்டுமல்ல' கவிதையும் கொண்டிருக்கிறது.

அவளைப் பலவீனப் படுத்த
எல்லா வியூகங்களையும் வகுத்த பின்பும்
அவளை உள் நிறுத்தி எதற்காக
இன்னுமின்னும் வேலிகளை எழுப்புகிறாய்?

எனத்தொடரும் கவிதையானது ,

உனதடி பணிந்து தொழுவதில் அவளுக்கு
ஈடேற்றம் கிடைக்குமென்றாய்:
கலாசாரம்,பண்பாடு எனும் அரிகண்டங்களை
அவளது கழுத்தில் கௌரவமாய்ச் சூடினாய்

உனது மயக்கங்களில்
தென்றல்,மலர்,இசை...
தேவதை அம்சங்களென...
அவளிடம் கண்டவையெல்லாம் பின்னர்
மாயைகளெனப் புலம்பவும் தொடங்கினாய்

என மகளாக, சகோதரியாக, மனைவியாக, அன்னையாக அர்த்தமுள்ள உருவெடுக்கும் பெண்ணவளைச் சாய்க்கும் உத்தியோடு வரும் ஆண்களிடம் கேள்விகேட்டுச் சாடுகிறது இக்கவிதை.

அடுத்த கவிதையான 'அவர்களுக்குத் தெரியும்' கவிதையானது யுத்த மேகம் சூழத் தொடங்கிய காலப் பகுதியைப் பேசுகின்றது. யுத்தம் சூழ்வதற்கு முன்னரான ஏகாந்தமும் அமைதியும் நிலவிய ஊரின் பகுதியினைக் கவிஞர்,

எமது கல்லூரி வளவினுள்ளே
வன விலங்குகள் ஒளிந்திருக்கவில்லை:
எமது நூலகத்தின் புத்தக அடுக்குகளை
ஓநாய்களும் கழுகுகளும்
தம் வாழிடங்களாய்க் கொண்டதில்லை:
நிலாக்கால இரவுகளில்
உப்புக் காற்று மேனி தழுவிட
விவாதங்கள் அரங்கேறிடும்
கடற்கரை மணற்றிடலில்
பாம்புப் புற்றுகளேதும் இருக்கவில்லை:
மாலைகளில் ஆரவாரம் விண்ணளாவிட
எமதிளைஞர்
உதைபந்தையன்றி வேறெதையும் உதைத்ததுமில்லை:
பக்திப் பரவசத்தில் ஊர் திளைக்கும் நாட்களில்
எமதன்னையர்
நிவேதனத்தையன்றி வேறெதனையும்
இருகரமேந்தி ஆலயமேகவுமில்லை!

இப்படிக் குறிப்பிடுகிறார். இப்படி அழகான அமைதி குடியிருந்த ஊரில் ஓர்நாள்,

இங்கெல்லாம் புரியாத மொழி பேசியவாறு
துப்பாக்கி மனிதர்கள்
ஊடுறுவத் தொடங்கிய வேளை
விக்கித்துப் போனோம்:
வார்த்தைகள் மறந்தோம்.
எமது கல்லூரி,நூலகம்,கடற்கரை,
விளையாட்டுத்திடல்,ஆலயமெங்கிலும்
அச்சம் விதைக்கப் பட்டு
ஆனந்தம் பிடுங்கப் பட்டதை
விழித்துவாரங்களினூடே
மௌனமாய்ப் பார்த்திருந்தோம்!

அறிமுகமற்ற பேய் பிசாசுகளையெல்லாம்
அழைத்துக் கொண்டு இரவுகள் வந்தடைந்தன.
எமது வானவெளியை
அவசரப்பட்டு அந்தகாரம் ஆக்கிரமித்தது.
அடர்ந்து கிளைவிரித்துக் காற்றைத் துழாவிய படி
எம்மீது பூச்சொறிந்த வேம்பின்
கிளைகள் முறிந்து தொங்கிட அதனிடையே
அட்டுப் பிடித்த கவச வாகனங்கள்
யாரையோ எதிர் கொள்ளக் காத்திருந்தன.

எமதண்ணன்மார் அடிக்கடி காணாமல் போயினர்:
எமது பெண்களில் வாழ்வில்கிரகணம் பிடித்திட
எதிர்காலப் பலாபலன்கள் யாவும்
சூனியத்தில்கரைந்தன.

யுத்தத்தின் பிடியிலிருந்து எதிர்காலத்தைத் தொலைத்த உயிர்களின் எஞ்சிய வாழ்வினை எவ்வாறெல்லாம் யுத்தம் பாதித்திருக்கிறதெனக் கவிதையின் இறுதியில் இப்படிச் சொல்கிறார்.

தற்போதெல்லாம் குழந்தைகள்
இருளை வெறுத்துவிட்டு
சூரியனைப் பற்றியே அதிகம் கதைக்கிறார்கள்:
அவர் தம் பாடக் கொப்பிகளில்
துப்பாக்கிகளை வரைகிறார்கள்:
பூக்களும் பொம்மைகளும் பட்டாம் பூச்சிகளும்
அவர்களைவிட்டும் தூரமாய்ப் போயின:

தொகுப்பிலுள்ள 'உங்கள் மொழியும் எங்கள் வாழ்வும் வேறாக்கப்பட்ட பின்' என்ற கவிதையும் யுத்தத்தைப் பின்புலமாகக் கொண்ட கவிதை. 'ஒரு மயானமும் காவல்தேவதைகளும்' கவிதையும் யுத்தம் தின்று முடித்து எச்சிலான ஊர்களின் நிலையினைப் பேசுகிறது இப்படி.

ஆடிப்பாடிப் பின் அவலம் சுமந்து நீங்கிய
சோலைவனத்தைத் தீயின் நாவுகள் தின்றுதீர்த்தன
நெற்கதிர்கள் நிரம்பிச் சலசலத்த வயல்வெளிகளை
இரும்புச்சக்கரங்கள் ஊடுருவித் தகர்த்தன
எஞ்சிய எமது பள்ளிவாயில்களும் அசுத்தமாக்கப்பட்டன

நானும் நீயுமன்றி
இந்தப் பரம்பரையே தோள்களில் சுமையழுந்திடத்
திசைக்கொவ்வொன்றாய்ச் சிதறுண்டுபோனது
கல்வியும் உழைப்பும் கனவுகளை மெய்ப்பித்திட
ஆனந்தம் பூரித்த நாட்கள் இனியில்லை
பாழடைந்த படகுத்துறைகள்
காடடர்ந்த பயிர்நிலங்கள்
தலை கருகிய கற்பகத்தருக்கள்
தரைமட்டமாகிப்போன எங்கள் குடிமனைகள்
எல்லாம்
பேய்கள் சன்னதம்கொண்டாடிய கதையினைச் சொல்லும்

இதே போன்றதொரு துயரம் நிறைந்த யுத்த இரவொன்றைத்தான் 'முகவரியற்ற நெருப்புநிலவுக்கு' கவிதையும் பேசுகிறது.

மயான அமைதி பூண்ட சூழலைத் தகர்த்தவாறு
வீதியில் ஓடும் காலடிச் சத்தம்-அச்சத்தினூடு
என் கேட்டல் எல்லையினுள் வளர்ந்து தேய்கிறது.
பின் தொடரும் அதிர்ந்து செல்லும் வண்டியில்
அவர்கள் வலம் வருகிறார்கள் போலும்
ஓடிய அந்தப் பாதங்கள் எந்தச் சந்து தேடி ஒளிந்தனவோ?
உருத்தெரியா அந்தக் காலடிகளுக்காக உள்ளம் துடித்தழுதது

அச்சம் கலந்து பிசைந்து விழுங்கிய உணவும்
பீதியுடன் தொண்டைக் குழிக்குள் இறங்கிய நீரும்
பிசாசுகளை எண்ணிப் பயந்ததில் தீய்ந்து விட்டன

எனத் தொடரும் கவிதையில் யுத்தமானது தனது தோழியை ஆயுதம் சுமக்க வைத்ததன் பாரத்தை இறக்கிவைக்கிறது.

இறுகிய முகக் கோலத்தை எப்படிப் பொறுத்தினாயோ?
நெஞ்சிலும் முதுகிலும் ஏதேதோ நிரப்பிய பைகளுடன்
சுடுகலன் ஏந்திய சிலை முகத்தைக் கற்பனை செய்து
பெருமூச்செறிந்தேன்: நீ இனி வரப் போவதில்லை

இதே துயரைப் பாடும் இவரது இன்னொரு கவிதைதான் ' ஒரு கடல் நீரூற்றி...'. கடற்போரொன்றுக்குச் சென்று உயிரிழந்த சினேகிதியின் உடல்களேதுமற்ற நினைவு மண்டபத்துக் கல்லறையில் அவளுடலுக்குப் பதிலாக ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ எனக் கேட்கிறார் கவிஞர்.

அலையெழும்பும் கடல் பரப்பினில்
உனக்கான பணி முடிக்கவென விடைபெற்றுப் போனாய்:
வாழ்த்துச் சொல்ல வாயெழவுமில்லை!
ஆரத்தழுவிட நீ விரும்பவுமில்லை !
வெளியே பெய்த மழை என் கன்னங்களில் வழிந்தோட...
மழைப் புகாரினூடே மறைந்து போனாய் !

திரைகடல் சென்ற திரவியமானாய் !
ஆழிப்பரப்பெங்கும் ஊழித்தீ எழுந்து தணிந்தது-நீ
திரும்பி வரவே இல்லை !

இன்று வீரர்கள் துயிலும் சமாதிகள் மீது
காலத்துயரின் பெரு மௌனம் கவிழ்ந்துள்ளது !
சமுத்திரத்தையே சமாதியாகக் கொண்டவனே !
இங்கு ஏதுமற்ற உன் கல்லறையில்
ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ?

வனாந்தரங்களை இழந்து, வசந்தங்களை இழந்து, தனது கூட்டினை இழந்து, தன் துணையினை இழந்து தனியே வாடும் ஒரு பறவைக்கு அனாதரவான ஒரு பெண்ணை ஒப்பிட்டே 'அழிவின் பின்னர்' கவிதையை எழுதியிருப்பதாகக் கொள்கிறேன்.

வெட்டி வீழ்த்தப் பட்ட மரத்தின்....
அடிக்கட்டை மீது
அமர்ந்துள்ளது பறவை

இன்று அதனிடம்
பறத்தலும் இல்லை..
ஒரு பாடலும் இல்லை....

'எனது சூரியனும் உனது சந்திரனும்' கவிதையின் சில வரிகள் காதலின் பாடலை அழகாக இசைக்கிறது இப்படி.

உன் வானிலொரு சூரியனையும்
என் வானிலொரு சந்திரனையும் கண்டோம்
கதைப்பதற்கு இருந்த எல்லாச் சொற்களும்
கண்களிலேயே தேங்கிடக் கண்டோம்

காதலர்களின் சம்பாஷணைகள் அதிகமாகக் கண்களிலேயே நிகழ்ந்துவிடுகின்றன.காதல், அதன் களிப்புகள், காயங்கள், காத்திருப்புகள் அனைத்தினது பாஷைகளும் ஓர விழிப் பார்வையிலும் ஒரு கண் சிமிட்டலிலும் கண்டுபிடிக்கப்படுகின்றன காதலரிடையே. அதனை ஆழமாகவும் அழகாகவும் எளிமையாகவும் வெளிப்படுத்துகின்றன மேலுள்ள வரிகள்.

பின் வந்த காலத்தில் பிரிவு வந்ததைச் சொல்ல கீழே உள்ள இரு அழகிய வரிகள் போதுமாக இருக்கிறது இவருக்கு.

எனது சூரியனும் தனித்துப் போயிற்று
உனது சந்திரனும் தனித்தே போயிற்று

இதே போலப் பிரிவை அருமையாகச் சொல்லும் இன்னுமொரு கவிதைதான் ' என்னிடம் விட்டுச் சென்ற உன் பார்வைகள்' கவிதையும்.
அதில் பிரிவைச் சொல்லும் அழகிய வரிகள்,

கண்ணீரையும் பிராத்தனையையும்
ஏந்தி உயர்கின்ற கரங்களின் விரலிடுக்கினூடு
உறவின் நூலிழைகள் வழிகின்றன.

'என்ன சொல்கிறாய் ?' கவிதையானது தேசத்தின் மீது கவிஞர் கொண்டுள்ள நேசத்தையும், அது தற்போது இன்னல்கள் பல தருகிறதெனினும் அந்தத் தாய்தேசம் மீது தான் கொண்ட காதலைக் கடைசி வரிகளில் மிக அழகாக வெளிப்படுத்தியிருப்பது பிரமிக்கச் செய்கிறது.

தினமும் வாழ்வு சூனியத்தில் விடிந்திட…
உயிர்கள் எந்தப் பெறுமதியுமற்று அழிந்திட
யாருக்கும் யாருமற்ற சாபம் பிடித்த வாழ்வைச்
சபித்தவளாக நான் வாழ்ந்த போதும்
எனது தேசம் எனக்கு வேண்டும்!
நீ என்ன சொல்கிறாய் ?

'இரு திசைவழி போனபின்' கவிதையானது தனது அண்ணனுக்கான கவிதையாக இருந்தபோதிலும் அதன் வரிகளினூடே தங்கையின் வாழ்க்கையை அழகாக விவரிக்கிறது.

என் மனதிலிருந்து துயர அலைகள் எழுந்து
ஆர்ப்பரித்துப் பொங்கும் வேளைத்
தூர நிலம் கடந்து
உனக்குள்ளும் அலைகள் எழுமோ?
மனதை விட்டு
உன் நினைவு தொலைந்து போயிருக்கும்
அவ்விருண்ட பொழுதுகளில்
தொலைபுலத்துக்கப்பாலிருந்து வரும்
உனதழைப்புக்கு நன்றி.

என்ற நன்றியோடு தொடரும் கவிதையானது அவளது துயரங்களையும் அவனுடனிருந்த பொழுதுகளில் அவனது அன்பான நடவடிக்கைகளையும் விபரித்து, அவளது இன்றைய வாழ்விலும் தொடரும் துயரங்களைச் சொல்லி ஓய்கிறது.

வீடென்ற சிறைக்குள் சிக்குண்டவள்
மீளவும் மீளவம் நரகத்துழல்கிறேனடா!
இங்கு தினமும் நான் காணும்
பல்லாயிரம் மனிதரிடையேயிருந்து
எப்போது நீ தோன்றி மீண்டும் புன்னகைப்பாய்?

'இருண்டுபோகின்ற நாமும் ஒளி வழங்கும் அவளும்' கவிதையான வாழ்வின் ஒளியாக விளங்கும் அன்னையைப் பற்றியது.

அவரவர் வேலைகளில் வீடு மூழ்கியிருந்த
மழைக்கால இரவொன்றில்
நிசப்தத்தையும் இருளையும்
உள் நிறுத்திப் போயிற்று மின்சாரம்!

நிசப்தத்தையும் இருட்டையும் வீட்டை ஆக்கிரமிக்கச் செய்து ஒளிந்துகொண்ட வெளிச்சத்தை அன்னை காவிவந்து ஒளியூட்டும் ஒரு நாளின் இரவைப்பற்றிய இக்கவிதையை வாசிக்கையில் காட்சிகள் கண்முன்னே விரிகின்றன. மீண்டும் ஒளியற்றுப் போனபொழுதில் அன்னைக்கு வெளிச்சம் ஏந்திச் செல்ல யாருமற்றுப் போனதையும், அவ் வெளிச்சத்தைத் தன் பிள்ளைகளிடமிருந்து எதிர்பார்க்காத தியாகம் பொருந்திய பெண்ணாகத் தாய் அழகாகச் சித்தரிக்கப்பட்டுக் கவிதை பூர்த்தியாகியிருக்கிறது.

மறுபடியும் இருளினுள் வீடமிழ்ந்த பொழுது
சமையலறையினுள் சிக்கியிருந்த அம்மாவுக்கு
ஒளிச் சுடரொன்றினை ஏந்தி யாருமே நடக்க வில்லை:
எவரின் உதவியும் இன்றி
இருளினுள்ளேயிருந்து
எல்லோருக்குமான உணவைத் தயாரித்தாள் எனதன்னை

'சாபங்களையகற்றிய குழிகளின் மீதிருந்து...' கவிதையானது போர்க் காலப்பகுதிகளில் யுத்தப்பிரதேசங்களில் விதைக்கப்பட்ட நச்சுக்கிழங்குகளை (கண்ணிவெடிகளை)ப்பற்றியது.

அவர்களும் விதைத்தனர்
இவர்களும் விதைத்தனர்:
எந்தப் பாதமொன்றோ தம் மீது படும் வரை
உருமலை உள்ளடக்கிக்
காலங்கள்தொறுமவை காத்துக்கிடந்தன!

தத்தித் தவழும் பாலகனோ...
ஏழைத் தாயொருத்தியோ...
இனிய இளைஞnihருவனோ...
மதகுருவோ...
மேய்ச்சலுக்குச் சென்ற மந்தையொன்றோ...
அல்லது
குறிவைத்த அவர்களிலும் இவர்களிலும் எவரோ?

போர் நிறுத்த ஒப்பந்தம் சாத்தியப்பட்ட காலங்களில் கண்ணிவெடிகளைத் தோண்டியகற்றும் தொண்டுநிறுவனங்கள் வந்தன. அவற்றின் ஊழியர்கள் வந்து தேடித்தேடி அகற்றிய நச்சுக்கிழங்குக் குழிகளில் இனி எதனை விதைக்கப் போகிறோமெனக் கேட்டு முடிக்கிறார் கவிஞர்.

நெஞ்சிலுள்ள செஞ்சிலுவை அவனைக் காத்திட
தன் கரம் சுமந்த கோலுடன்
அங்குலமங்குலமாக
வன்னிப் பெரு நிலம் தடவி நச்சுக் கிழங்குகள் தோண்டுகிறான்!

எங்கிருந்தோ வந்த தேவ தூதனாய்
எம்மொழியும் அறியான்...எமதினமும் அறியான்...
அவனொருவன் சாபங்களைத் தோண்டியகற்றிய குழிகளில்
நாமினி எதை நடப் போகிறோம்?

ஒரு சிறுமியின் கால்பாதம் கோழிக்குஞ்சொன்றின் தலைமீதேறியதோர் நாள். இரு ஜீவன்களினதும் உயிர் துடித்த கதையைப் பரிதவிப்புடன் விளக்குகிறது 'சிறுமியின் கோழிக்குஞ்சு' கவிதை. இறுதியில் கோழிக்குஞ்சு இறந்து போய்விட அதன் வரிகளை வாசித்துமுடித்த பின்னர் பெரும் பாரமொன்று மனதில் அப்புகிறது.

குஞ்சுடன் முன்னும் பின்னும் அலைந்து
சிறுமியின் பார்வைக்குத் தப்பித் திரிந்த மரணம்
முதலில் அதன் சின்னஞ் சிறு சிறகிரண்டிலும் வந்தமர்ந்தது:
சிறகுகள் கீழே தொங்கிட மெல்ல மெல்ல நகர்ந்தது குஞ்சு:
அந்திப் பொழுதில் சாவு அதன் கழுத்தின் மீதேறி நின்றது:
ஒரு மூதாட்டி போலச் சிறகு போர்த்தி
அசைவற்றுப் படுத்தது குஞ்சு!

இரவு நெடு நேரம் வரை காத்திருந்த மரணத்தின் கரங்கள்
சிறுமி தூங்கிய பின்னர்
துண்டு நிலவும் மறைந்து வானம் இருண்ட பொழுதில்
அந்தச் சிறு உயிரைப் பறித்துப் போயிற்று!

'வயற்காட்டுக் காவற்காரி' கவிதையானது சுயமிழக்க நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு பெண்ணின் நிலையை துயர்மிகப் பாடுகிறது. கவிதையின் முதல்வரிகள் வயற்காட்டுப் பொம்மையொன்றைப் பற்றிய அழகிய வர்ணனைகள் கொண்டது.

கொட்டும் மழையிலும் - அவள்
சிரித்துக்கொண்டிருப்பாள்
எரிக்கும் வெயிலிலும் இன்முகத்துடனே இருப்பாள்
அவளது வேதனைகளை வெளிக்காட்டும்படியாக
அவளின் முகக்கோலம் அமைந்திருந்தால்
காணுகின்ற கண்களிலெல்லாம் கண்ணீர் வழியும்

என அதிரவைக்கும் வரிகள் துயர வாழ்வினைக் கொண்ட நிஜப்பெண்களின் வாழ்வையும்தானே குறிக்கின்றன ? எத்தனையோ போராட்டங்கள், எத்தனையோ தற்கொலைகள் இதைத்தானே பேசுகின்றன ? இறுதியில் மனமுறுத்தும் கேள்விகளைக் கேட்டுக் கவிதையை முடிக்கிறார் இப்படி.

அவளைத் தாங்கிநின்ற பூமியே !
அவளைப் பரிதாபமாய்ப் பார்த்திருந்த வானமே !
அவளது மௌனமும் ஒரு நாள் வெடிக்குமா
குமுறுகின்ற எரிமலையாக
அதிரவைக்கும் இடிமுழக்கமாக

இதே கருவைத் தாங்கிய இன்னொரு கவிதைதான் ' அவளுக்குச் சட்டம் வகுத்தது யார்?' கவிதையும். இதிலும் பெண்ணானவளை வயற்காட்டு பொம்மைக்கே ஒப்பிட்டிருக்கிறார்.

வாழ்வு பற்றிய நம்பிக்கைகள் இருந்திருப்பின்
கடல் நடுவே கைவிடப்பட்டிருப்பினும்
கரையேறி வந்திருப்பாள்
எவரின் தோட்டத்திலோ
குருவி விரட்டவும் காவல்புரியவும்
நிறுத்திவைக்கப்பட்ட பொம்மைச் சேவகியவள்

எனத் தொடரும் கவிதையானது

அவளுக்கே அவள் இல்லாமல் போனபின்னர்
அவளது ஆன்மாவின் அழிவைப் பற்றி அவளறியாள்
இதுவே அவளது
இன்றைய கதையும்
நாளைய கதையும்

என்பதோடு முற்றுப்பெருகிறது.

இக்கவிதைத் தொகுதியின் அனைத்துக் கவிதைகளும் ஒரு அருமையான அனுபவத்துக்கு இட்டுச் செல்வதோடு சில ஏக்கங்களை, சில விபரங்களை, சில நிஜங்களை, சில துயரங்களை மனதில் பரப்பியும் விடுகிறது. அதன் பாடுபொருட்களை நாமனைவரும் ஒரு கணமேனும் அனுபவித்திருப்போம். அறிந்திருப்போம். அதனையே அழகாகச் சொல்லுமிடத்து கவிதையின் உக்கிரம் இதயத்தில் ஆழமாகப் பதிகிறது. கவிதையின் நடையும், நான் முன்பு கூறியது போல எளிமையான ரசனை மிக்க வரிகளும் கவிதையை மேலும் அழகுறச் செய்கின்றன. தொடர்ந்தும் இதுபோன்ற சிறந்த கவிதைகளையெழுதும்படி வாழ்த்துவதோடு இன்னும் அதிகமான தொகுப்புக்களை வெளியிடுமாறு கவிஞரைக்கேட்டுக் கொள்கிறேன்.

பண்புடன் ஆண்டு விழா - மீள்பதிவுகள் - 2

அளம்

http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/ffed8600743beba7/712f79bd81d252c7?lnk=gst&q=%E0%AE%85%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D#712f79bd81d252c7

பொதுவாகவே பெண் எழுத்தாளர்கள் என்பவர்களின் இலக்கிய எல்லையாக இதுவரை நான் கருதியது அவள் விகடன், கண்மணி, பாக்கெட்நாவல் போன்றவைதான். குடும்ப உறவுகளை விட்டால் வேறெதுவும் எழுத தெரியாத உப்புசப்பில்லாத கதைகளின் உற்பத்தியாளர்கள் என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன். அதற்கு ஏற்ப சிவசங்கரி அனுராதாரமணன் போன்ற எழுத்தாளர்களின் வாசிப்பில் உணர்ந்ததுதான்.ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கு ஒரு தனி அடையாளம், எழுத்து நடை இருப்பதை உணர்வது போல அனைத்து பெண் எழுத்தாளர்களுக்கும் ஒரே நடையிலிருப்பதை உணரலாம். தொழில் ரீதியாக நாவல்களை எழுதுகிறார்களோ என்று கூட எண்ணியிருந்தேன். எழுத்து என்பது ஆத்ம திருப்திக்காக இருக்க வேண்டும் என்ற நாஞ்சில் நாடனின் வார்த்தைகளை நம்புகிறேன்.

என்றாவது ஒருநாள் இக்குறைகளை தீர்ப்பது போல நம் பெண்கள் படைப்புகள் இருக்கலாம் என்று உள்ளுக்குள் எண்ணியிருந்தேன். அதற்கு தீனி போடுவது போல அமைந்த வாசிப்புதான் தமிழ்ச்செல்வியின் அளம். அளம் என்பது உப்பளத்தை குறிப்பது. முதலில் குழம்பிப்போனேன். என் வட்டாரத்தில் அதிக புழக்கத்தில் இல்லாத வார்த்தை இது.


"மாணிக்கம்", "அளம்", "கீதாரி", "கற்றாழை" என நாண்கு நாவல்களை தமிழுக்கு அளித்திருக்கும் சு.தமிழ்ச்செல்வி சமகால பெண் எழுத்தாளர்களில் முக்கியமானவர். இவரது "மாணிக்கம்" நாவல் தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருதினைப் பெற்றது. இவரது படைப்புகள் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

பொருள் தேட வெளிநாடு சென்ற கணவன் இறுதிவரை திரும்பாத நிலையில் தனது மூன்று பெண் குழந்தைகளுடன் வாழ்வை எதிர்கொள்ளும் சுந்தராம்பாள் எனும் எளிய தாயின் போர்க்குணத்தை காவியத்தன்மையுடன் விவரிக்கும் கதைதான் "அளம்" வாசகர்களின் ஏகோபித்த ஆதரவினை பெற்று தற்போது இரண்டாம் பதிப்பாக வெளிவந்திருக்கிறது,
சுந்தராம்பாள் என்ற தாய் வடிவாம்பாள், ராசாம்பாள், அஞ்சம்மாள் என்ற தனது மூன்று மகள்களை தனியொருத்தியாக வளர்த்து ஆளாக்க என்னென்ன சிரமப் படுகிறாள் என்பதுதான் மொத்தக்கதையும். பொதுவாகவே கதையின் உரையாடல்கள் அம்மண்ணின் பேச்சு வழக்கில் அமைவதுதான் பெரும்பாலாக கதைகளின் வெற்றி. அவ்வகையில் இந்நாவல் பூச்சுகளில்லாத அசல் கிராமத்து மண்ணின் வாசம்.

நாள் நட்சத்திரம் பார்த்து நமக்கு என்னதான் பெயர் வைத்திருந்தாலும் பெரும்பாலான வீடுகளில் செல்லப்பெயரை வைத்துதான் கூப்பிடுவார்கள் அதைப்போல இந்நாவலின் முக்கிய பாத்திரமான சுந்தராம்பாளின் மகள்களை பெரியங்கச்சி, நடுத்தங்கச்சி, சின்னங்கச்சி என்றே கதை முழுக்க இந்த பாத்திரங்கள் அழைக்கப்படுகின்றன. "ம்பாள்" என்றே எல்லா பெயர்களும் முடிவதால் வாசகர்களுக்கு எவ்வித குழப்பமும் வந்துவிடக்கூடாது என்பதை தவிர்க்கவே இந்த உத்தி என்று நினைக்கிறேன். அப்படி இருந்தால் அதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே அர்த்தம். கவனமான வாசிப்பிலும் முதலில் பெயர்க்குழப்பம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

"மோரயப்பாரேங் கரிப்பான சூத்துமேரி. வண்ணாஞ்சாலு கணக்கா தொப்பய மின்னாடி தள்ளிகிட்டு நிக்கி சனியங்" என்று பெற்றவனே மகளின் மீது எந்நேரமும் வெறுப்பை உமிழ்கிறான். இப்படி நாவல்முழுக்க அம்மண்ணின் பேச்சு வழக்கே நிறைந்திருப்பதால் வாசிப்பதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை என்றாலும் அதுதான் இந்நாவலின் ஜீவன்.

ஒருவேளைக்கும் போகாத சுந்தராம்பாளின் கணவன் சுப்பையாவின் வாழ்க்கையில் கப்பல்கார ராமையாபிள்ளை என்பவர் சுந்தராம்பாளின் குடும்ப சிக்கலை எண்ணி சிங்கப்பூர் அழைத்து செல்கிறார். அங்கு சென்று சுப்பையன் காணாமல் போகிறான். கடைசிவரை அவன் ஊருக்கே திரும்பவில்லை. கப்பல்கார ராமையா ஒவ்வொருமுறை ஊருக்கு வரும்போதும் தன் கணவன் பற்றிய தகவல் அறிய செல்லும்போது நமக்கே எரிச்சலாக இருக்கும்.

இந்நாவலின் வாசிப்பின்போது வைரமுத்துவின் கருவாச்சியை நினைவு வருவதை உணரலாம் ஆனால் கருவாச்சி காவியம் சினிமாத்தனமானது. ஒரு பெண் தனித்து வாழும்போது சமூகம் அவளுக்கு கொடுக்கும் இன்னல்கள், குறைந்தது மூன்று ஆண் கதாபாத்திரங்கள் முதல் ஊரே அவளுக்கு எதிராகவும் பல இன்னல்களும் கொடுக்கும். அதையெல்லாம் சமாளித்து பின் ஊர் உணரும் புண்ணியவதி ஆவாள் கருவாச்சி. எல்லாமே சுவாரசியங்களுக்காக திணிக்கப்பட்ட சம்பவங்களின் கோர்வையாக கருவாச்சி காட்சியளிப்பாள். சுந்தராம்பாளின் வாழ்க்கைப் பாதையில் துன்பங்களும், வருத்தங்களும் ஏராளமாக இருந்தாலும் எதுவுமே திணிக்கப்பட்டது போல தோன்றவில்லை.

புயலும், புயலுக்கு பின் வரும் வறுமையும் ஒவ்வொருமுறை விதைக்கும்போதும் இயற்கைக்கு பறிகொடுக்கும் சோகம் கதையாக இருந்தாலும் மனசு வேதனைப்பட வைக்கிறது. நாவல் முழுக்க ஏமாற்றங்களும் சோகங்களும் நிறைந்து இருந்தாலும் ஒருமுறை கூட சலிப்பை ஏற்படுத்தவில்லை.

மிகுந்த சிரமத்திற்கிடையில் மணமுடித்துக்கொடுத்த மூத்த பெண் வடிவாம்பாளின் மணவாழ்க்கை ஒரே மாதத்தில் முடிந்துவிட வாழாவெட்டியாக வீட்டிற்கு வருகிறாள். இரண்டாவது மகளும் இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு கணவனால் துரத்தப்பட்டு வீட்டுக்கு வருகிறாள். ஒரே வீட்டில் மூன்று திருமணமான வாழாவெட்டிகளால் கடைசிப்பெண்ணான அஞ்சம்பாளுக்கு வரன் அமைவதில் சிக்கல். அவளுக்கும் பூச்சிக்கும் மட்டுமே தெரிந்த நிறைவேறாத அந்த காதல் அழகு. காதல் என்ற வார்த்தையைக் கூட உபயோகப்படுத்தவில்லை.

இக்கதையை வாசிக்கும் நேரத்தில் உங்களது எண்ணங்களும் சற்று பின்னோக்கி அந்தக்கால கிராமமான கோயில்தாழ்விற்கு சென்று மக்களை நேரில் சந்திப்பது போன்று உணர்வீர்கள். அழுத்தமான கதையை விரும்புவோர் தாராளமாக ஒருமுறை வாசிக்கலாம்.
நூலின் பெயர்: அளம் ஆசிரியர்: சு.தமிழ்ச்செல்வி மருதா பதிப்பகம் விலை இந்திய ரூபாய் 100.
வாசிக்க கொடுத்த அய்யனாருக்கு நன்றி அய்யனாருக்கு கொடுத்த ஆசிப்புக்கும் நன்றி.

உமா கதிர்

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - நிர்மலா - 2

Women & Men in My Life - Khushwant Singh - நிர்மலா
ஆங்கில புத்தகங்கள் வாசிப்பது ஏறக்குறைய இல்லை என்றாகிவிட்ட ஒரு சமயம் 'to kill a mocking bird' கிடைத்தது. வாசிக்க ஆரம்பித்து தாண்ட முடியாத பத்தம்பது பக்கங்களுக்குப் பிறகு 'வேண்டாம் போ' என்று விலக்கி வைத்தது 'அவ்வளவுதானா?' என்று கேட்டது. ரொம்ப லேட்டா தொடங்கி சீக்கிரம் முடிந்து விட்டதோ நமது ஆங்கில வாசிப்பு என்று தோன்றியது. சென்னை வந்ததில் இதுவும் ஒரு பெரிய மாற்றம். வெளியே இருந்த போது வாசிக்க தமிழ் புத்தகம் எதுவும் கிடைக்காத கட்டாயத்தால் எதேச்சையாக தொடங்கியது ஆங்கில நாவல் வாசிப்பு. இப்போதான் தமிழே வேண்டியமட்டும் கிடைக்கிறதே என்று அதிகம் வாசிக்காமல் இருந்தாலும், பழக்கம் விட்டதில் கொஞ்சம் வருத்தம்.

75% வரை தள்ளுபடி என்று ஆசை காட்டிய சென்னை oxford... பேருக்குத்தான் 75%... அந்த பகுதி எங்கே என்றே பார்க்கவில்லை! வழக்கமாக இழுக்கும் தலைப்புகள் பகுதியில். இதற்கு முன்னாலேயே பார்த்தும் வேண்டாம் என்று விட்ட Women & Men in my life - Khushwant singh... இந்த முறை மறுக்க முடியவில்லை. அவருடைய ஆட்டோபயாகிரபி, death at my doorstep எல்லாம் படித்து முடித்ததில்... என்னவோ எனக்கு அவரைப் பற்றி எல்லாம் தெரியும் என்ற தோணல். அதனாலேயே இதை வாசிக்கத் தொடங்கியதும்... மற்றபடி அதிகம் கேட்டிராத பொது வாழ்கை மனிதர்களை, அவருடைய புத்தகங்கள் மூலம் மட்டுமே அறிந்திருந்த அதே மனிதர்களைப் பற்றிய செய்திகளை கொஞ்சம் மாற்றங்களோடு இன்னொரு முறை கேட்பது... வீட்டில் இருக்கும் வயதானவர்கள் சொன்ன விஷயங்களையே திரும்பத் திரும்பச் சொல்வது போல! மனுஷனுடைய எழுத்து சுவாரசியதினாலே எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை.

இந்த புத்தகத்தை எழுதியதில் கோவித்துக் கொண்டு கொஞ்சம் பேர் 'உன் பேச்சு கா' விட்டுப் போய் விட்டதாகவும், வெளிப்படையாக சொன்ன நேசத்தில் கொஞ்சம் பேர் ரொம்ப சந்தோஷப் பட்டதாயும், என்ன எழுதியிருக்கு என்று படித்துப் பார்க்காமலேயே சிலர் மறுதலித்துப் போனதாயும் முன்னுரையில் சொல்கிறார். புத்தகத்தில் பெண்களைப் பற்றி எழுதியிருப்பதில் சொட்டுவது தனி ரசம்... குஷ்வந்த் சிங் ரக ரசம்! அனுபவித்து எழுதிருப்பதால் வாசிக்கும் போது அந்த பிரியம் அப்படியே உள்ளே இறங்கிவிடுகிறது.

வயது வித்தியாசமில்லாமல், இன்ன உறவு என்று சொல்ல முடியாத நேசத்தில், ஏதோ ஒரு விதத்தில் பாதித்த, வெவ்வேறு காலகட்டத்தில் சந்தித்த பெண்கள்... பெண்கள்... பெண்கள். கொஞ்சம் ஆண்களும்! நல்லதையும் கெட்டதையும் தாட்சண்யமில்லாமல் சொல்லிப் போகிறார். வெறும் மனசைத்தான் பார்த்தேன் என்ற மழுப்பல்கள் இல்லாத 'பிந்தாஸ்' குறிப்புகள். தைரியம், சாமர்த்தியம், வெகுளித்தனம், திருட்டுத்தனம், mysterious... எல்லாமாய் பிடித்தவர்கள்.

சில வரிகள்....
'You Know how much weight i have shed? look.' She turned, pointing to her bare midriff. 'All gone. And dont u tell me slimming down does not suite me.'....... I have been to Bombay many times since but have not had the courage to call on her. I want to preserve the image of the Devyani Chaubal I had known: fat, full of life, malicious gossip, mimicry and a zest for life.
The lady persisted, 'Never mind the age difference, you still look like a married couple.' I slipped out of the dining hall and went to bed without dinner. After the compliment I didnt need any. I was little worried about how the rest of Nirmala's family would take that faux pas.
If this was true (men's gossip is less reliable than woman's) love formed very little part of Amrita's life. Sex was what mattered to her. She was a genuine case of nymphomania, ....
She put on her tape recorder at full blast, sang with it and talked at the top of her voice. I almost went round the bend and pitied her husband who had to put up with such exuberance every day.

ஆண்களைப் பற்றிய மீதிப் பாதி புத்தகம் கொஞ்சம் நியூஸ் ரீடிங் போல! மற்றபடி, ஒரே மூச்சில் படித்து முடித்த புத்தகம். முடித்த கையோடு ரொம்ப நாள் பெண்டிங் 'one hundred years of solitude' படிக்க வைத்ததில் குஷ்வந்த் சிங் பங்கு அதிகம். கொல்கத்தா வந்து, போன சனிக்கிழமை அவருடைய வழக்கமான column வாசித்ததும் இடையில் கொஞ்சம் தொய்ந்து போயிருந்த குஷ்வந்த் சிங்குடனான உறவு மறுபடியும் அதே போலாகி விட்டது.
தலைப்புதான் ரொம்ப தூண்டுகிறது... என்னையும் 'எழுதேன்' என்று! எப்போதாவது செய்யணும்.

--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா