Showing posts with label சிறப்பு விருந்தினர். Show all posts
Showing posts with label சிறப்பு விருந்தினர். Show all posts

பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - சுகிர்தராணி - 2

கடைசி விருந்து
- சுகிர்த்தராணி


விதைகளற்ற பழுத்த கனி ஒன்று
என்னிடம் தரப்பட்டது

நீலவெளிச்சப் பின்னணியில் அதைப்பற்றிய
ரகஸியங்கள் என் காதில் ஓதப்பட்டதும்
முகத்தை எப்படி வைத்துக்கொள்வ தென்று
எனக்கு தெரியவில்லை
உன் நா வறட்சி அடையும்போது
வித விதமான சாறு பிழிந்து தரவேண்டுமாம்

பட்டாம்பூச்சியின் தாவலைப் போல
பிழிவதும் குடிப்பதும்
ஆரம்பத்தில்ல் கலையாக இருந்தது

பின்பு உறங்கும் வேளையில் கூட
உன் வாய் சாறு நிரம்பியதாகவும்
உனதொருகை குவளையை
இறுக்கியதாகவும் விளங்கின

காலாவதியான சுரங்கத்தின் உட்குடைவாய்
கனியின் பகுதிகள் பொலிவிழந்த பின்னும்
குடிப்பதற்குக் கேட்கின்றாய்

என்மீது உருண்ட திரண்ட
உன் பிரியத்தையே பிழிந்து தருகின்றேன்
அது விஷச்சாறாகவும் இருக்கலாம்.

பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - சுகிர்தராணி - 1

விருட்சங்கள்
- சுகிர்த்தராணி


பருவங்கள் வாய்த்த என்னுடல்
காளானைப் போலக் கனிந்து குவிகிறது
அதன் முன்னும் பின்னும்
கவனமாய் நெய்த ரகசிய உறுப்புகள்
மயிர்க்கால்கள் சிலிர்த்த தோல் முழுவதும்
காமநெய்யின் உருகிய வாசனை
மலர்ந்த இடையைச் சுற்றி
வெதுவெதுப்பான புணர்கதுப்புகளும்
கவிழ்த்துப் போட்ட ஆயுத எழுத்துமாய்
காமத்தின் சோழிகளும்
உடலினுள் பொதிந்து மிதக்கின்றன
இப்போது புகையின் வடிவம் கொண்டு
ஒப்பனைகள் ஏதுமற்ற தெருக்கலைஞனைப் போல
கச்சையின் முன்புற வார் அவிழ்க்கிறாய்
பாலூட்டியவைகளை ருசித்தவாறே
அவற்றின் பெயர்சொல்லவும் வெட்கிக்கிறாய்
என் மார்பின் இசைக்கவையை
போரின் கொலைக்கரமாய் நீட்டுகிறேன்
இனியென் ஆளுகைப் பிரதேசத்தில்
பதாகையை உயர்த்திப் பிடிக்கும்
இளகாத ஸ்தனங்களை
விதையின் அடியிலிருந்து உரக்கப்பாடு
முலைகள் விருட்சங்களாகி வெகு காலமாயிற்று.

பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - சுகிர்தராணி - அறிமுகம்

சுகிர்தராணி - அறிமுகம்




"கைப்பற்றி என் கனவுகேள்", "இரவு மிருகம்", "அவளை மொழிபெயர்த்தல்" ஆகிய மூன்று தொகுதிகளாக அவருடைய கவிதைகள் வெளியாகியுள்ளன. சுகிர்தராணியின் கவிதைகள் பெண் உடல் மொழி பற்றியும், தலித் விடுதலை பற்றியும் பெருங்குரலெழுப்புகின்றன. தமிழ் இலக்கிய உலகில் பெரும் விமர்சனத்துக்கும், கலகத்துக்குமான பாதையை உண்டாக்குபவை.

தமிழில் எம்ஃபில் பட்டம் பெற்றவர், வேலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். பண்புடன் ஆண்டு விழா கொண்டாட்டத்திற்காய் அவரின் அனுமதியுடன் இரவு மிருகம் தொகுப்பிலிருந்து சில கவிதைகள் இடுகிறோம்.

பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - பாவண்ணன்

வாழ்வைத் தேடி
- பாவண்ணன்


பிதுக்கித் தள்ளப்பட்ட வேப்பங்கொட்டையைப்போல நிரம்பி வழிந்த பேருந்திலிருந்து இறங்கத் தொடங்கிய கூட்டம் என்னையும் வெளியே தள்ளியது. ஆனால் புத்தகங்களும் சாப்பாட்டுப்பெட்டியும் தண்ணீர்ப்புட்டியும் கொண்ட என் தோள்பை மீட்டெடுக்கமுடியாதபடி படிக்கட்டில் நின்றிருந்த இருவருடைய இடுப்புக்குநடுவில் அகப்பட்டுக்கொண்டதால் நிம்மதியாக மூச்சுவிடமுடியவில்லை. பை பை என்று நான் போட்ட சத்தத்தை அந்தச் சந்தடியில் யாரும் பொருட்படுத்தவில்லை. அதற்குள் புதிய பிரயாணிகள் ஏறத்தொடங்கிவிட்டார்கள். "பள்ளிக்கூடப் பையன்மாதிரி ஏன்யா பையத் தூக்கிகிட்டு வந்து உயிர வாங்கறிங்க?" என்று மேல்படிக்கட்டில் நின்றிருந்தவர் என்னைப் பார்த்து சத்தம் போட்டார். ஆனாலும் எனக்காக மெனக்கிட்டு இருவருடைய இடுப்புகளையும் சற்றே விலக்கி என்னுடைய பையை உருவிக்கொள்ள உதவி செய்தார். கிளம்பிவிட்ட வண்டியில் அவருடைய முகத்தைப் பார்த்து அவசரமாக "ரொம்ப தேங்க்ஸ்" என்றேன். "ஒன் தேங்ஸ கொண்டும்போயி ஒடப்புல போடு போ" என்று சலித்தபடி முகத்தைத் திருப்பிக்கொண்டார் அவர். அந்த நடவடிக்கை எனக்கு அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது.

இப்படியுமா ஆட்கள் இருப்பார்கள் என்று மனத்துக்குள் நினைத்தபடி சோர்வாக நடக்கத் தொடங்கிய நேரத்தில் யாரோ பக்கத்தில் வந்து "ஆப்கோ ஹிந்தி மாலும் சார்?" என்று கேட்பதை உணர்ந்தேன். சோர்வின் காரணமாக அச்சொற்களை அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை என் மனம். பேருந்து நிறுத்தத்திலிருந்து உணவுக்கடைவரைக்கும் சிறிது தொலைவு நடந்த பிறகுதான் அந்தக் கேள்வியை முழுஅளவில் உள்வாங்கியது மனம். திரும்பிப் பார்த்தேன். இலைகள் உதிர்ந்த ஒரு குச்சிமரத்தைப்போல அவர் இன்னும் அங்கேயே நின்றிருந்தார். கிட்டத்தட்ட நாற்பது வயது மதிக்கத்தக்க தோற்றம். என்னிடம் கேட்ட அதே கேள்வியை தன்னைக் கடந்து செல்லும் அனைவரிடமும் அவர் முன்வைத்துக்கொண்டிருந்தார். பக்கத்தில் எலும்பும்தோலுமான தோற்றத்தில் ஒரு பெண்ணும் அவளது கையைப் பிடித்தபடி தலைகலைந்த முன்று சிறுமிகளும் ஒடுங்கி நின்றிருந்தார்கள். ஒரு கணம் வான்கோ வரைந்த உருளைக்கிழங்கை உண்ணும் சுரங்கத்தொழிலாளிகள் ஓவியம் நினைவில் வந்துபோனது.

மீண்டும் அவரருகே சென்று "என்ன கேட்டிங்க?" என்று இந்தியில் கேட்டேன். என்னுடைய இந்தி உரையாடலால் அவர் முகத்தில் ஒருவித நிம்மதி படர்வதை அருகில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப்பேழைக் குழல்விளக்கின் வெளிச்சத்தில் பார்க்கமுடிந்தது. "உங்களுக்கு இந்தி தெரியுமான்னு கேட்டேன் சார்" என்றார். "சொல்லுங்க, என்ன விஷயம்?" என்று நேரிடையாகவே விஷயத்துக்கு வந்தேன். எதுவும் பேசாமல் ஒரு கணம் தலைகுனிந்து நின்றார் அவர். விரலை உயர்த்தி கண்களைத் துடைத்துக்கொண்டார். மூக்கை உறிஞ்சியபடி மீண்டும் என் முகத்தைப் பார்த்தார்.

"மும்பையிலேருந்து காலையிலதான் வந்தோம் சார். தெரிஞ்சவங்கன்னு சொல்லிக்க யாரும் இல்ல. பாவம் புள்ளைங்க, நேத்திலேருந்து பட்டினி. உங்களால முடிஞ்ச உதவி செஞ்சா புண்ணியமா இருக்கும்."

இறைஞ்சும் அந்தக் குரலில் தொனித்த வருத்தத்தை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவருக்கருகே நின்றிருந்த சிறுமிகளின் முகங்களில் பசி தெரிந்தது. என் குறிப்பேட்டுக்குள் மடித்துவைத்திருந்த இருபது ரூபாய் தாளொன்றை எடுத்து அவரிடம் தந்தேன். "ரொம்ப நன்றி சார்" என்றபடி அவர் அதை வாங்கி தன் மனைவியிடம் தந்தார் அவர். மனைவி அந்தப் பணத்துடன் அருகில் இருந்த உணவுக்கடைக்குள் குழந்தைகளை அவசரமாக அழைத்துச் சென்றார். கீழே இருந்த மூட்டைமுடிச்சுகளுக்குக் காவலாக அவர் அங்கேயே நின்றார்.

"தெரிஞ்சவங்க யாருமே இல்லன்னு சொல்றிங்க. அப்பறம் ஏன் பெங்களூருக்கு வந்திங்க?"
"நானாக எந்த முடிவும் எடுக்கலை சார். எல்லாம் விதிவிட்ட வழி" அவர் கண்கள் சிறிதுநேரம் இருண்ட வானைநோக்கி நிமிர்ந்தன. பெருமூச்சு வாங்கியபடி பிறகு என்னைப் பார்த்தார்.
"எங்களுக்கு சொந்த ஊரு பிகார் பக்கத்துல சார். அங்க பொழைக்கறதுக்கு எந்த வழியும் கெடையாது சார். வாரத்துக்கு ஒருநாளு ரெண்டுநாளுதான் கூலிவேல கெடைக்கும். அத வச்சிகிட்டு என்ன செய்யமுடியும் சொல்லுங்க? அம்மா அப்பா பொண்டாட்டி புள்ளைங்கன்னு எல்லாரயும் எப்படி பாத்துக்கமுடியும்? பாதிநாள் பட்டினி. பாதிநாள் அரவயிறு, கால்வயிறு. இப்பிடியே காலத்த ஓட்டனோம். அம்மா அப்பா ரொம்ப வயசானங்க சார். அவுங்கள கூட்டிகிட்டு எங்கயும் வெளியூர் போவமுடியாது. அவுங்களுக்காகத்தான் அங்கயே ஒட்டிகிட்டு இருந்தோம். ஒருவழியா கடவுள்கிட்ட ரெண்டு வருஷத்துக்கு முன்னால அவுங்களும் போய் சேந்தாங்க. ஒரு வழியா நாங்களும் மூட்டமுடிச்சோட மும்பைபக்கம் போனோம். ஏற்கனவே எங்க பக்கத்து ஆளுங்க கொஞ்சம் பேரு அங்க கட்டடவேல செஞ்சி பொழைச்சிகிட்டிருந்தாங்க. எப்படியோ அவுங்களோட சேர்ந்து நாங்களும் ஒட்டிகிட்டோம். ரெண்டு வருஷமா எந்த பிரச்சனயும் இல்லாம வாழ்க்கை ஓடிச்சி."

தொடர்ந்து அவரால் பேசமுடியவில்லை. கண்களைத் திருப்பி உணவு விடுதிக்குள் சாப்பிட்டுக்கொண்டிருந்த பிள்ளைகளைப் பார்த்தார். ஒரு தட்டில் இருந்த உணவை மூன்று சிறுமிகளும் சேர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அந்த அம்மா பக்கத்தில் நின்றுகொண்டிருந்தனர். பசிவேகத்தில் அந்தச் சிறுமிகள் நிமிர்ந்துகூட பார்க்கவில்லை. எனக்கு அப்போதுதான் உறைத்தது. நான் கொடுத்த பணத்தில் அந்த ஒரு சாப்பாட்டுமட்டுமே அவரால் வாங்க முடிந்திருக்கும். உடனே அந்த அம்மாவை நெருங்கி இன்னுமொரு இருபது ரூபாய் நோட்டைக் கொடுத்தேன். அதை எடுத்துச் சென்று இன்னுமொரு தட்டில் சாப்பாடு வாங்கிவந்தாள் அந்த அம்மா. சிறுமிகள் காலியான தட்டை நகர்த்திவிட்டு அந்தத் தட்டிலிருந்து உணவை எடுத்துச் சாப்பிடத் தொடங்கினார்கள்.

"உங்க பேரு?" மறுபடியும் அந்த பீகார்க்காரரை நெருங்கிக் கேட்டேன்.

"ரகுவீர் சார்."

"மும்பை வேலையில ஏதாவது பிரச்சனையா? எதுக்காக ஏன் மும்பையவிட்டு வந்திங்க?"
"பிகார்க்காரன கண்டா அங்க யாருக்குமே புடிக்கலை சார். வேண்டா வெறுப்பா ஏதோ தெருநாய பாக்கறமாதிரி பாக்க ஆரம்பச்சிட்டாங்க சார். பிகாரும் இந்தியாவுலதான இருக்குது சார்? அப்பறம் ஏன் சார் எதிரிய பாக்கறமாதிரி பாக்கறாங்க? அசாம்ல பொழைக்க போன ஆளுங்கள கும்பல்கும்பலா சுட்டு தள்ளறாங்க. காஷ்மீர்ல உயிரோடயே வச்சி கொளுத்திட்டாங்க. தில்லியில வேறமாதிரி கத. வேல நடக்கறவரைக்கும் எல்லாருக்கும் பிகார்க்காரன் வேணும். வேல முடிஞ்சிடுச்சின்னா ஓடுடா பிகாரி ஒங்க ஊருக்குன்னு விரட்டறாங்க. நாய வெரட்டறமாதிரி வெரட்டிட்டே இருக்காங்க. மும்பையில புதுசா மகாராஷ்டிர நவநிர்மாண் சபான்னு புதுசா ஒன்னு கௌம்பியிருக்குது சார். தேடித்தேடி அடிச்சி வெரட்டறாங்க. மும்பை செல்வத்த பிகார்க்காரன் சுரண்டி எடுத்துக்கினு போயிடறானாம். இப்பிடி பேசிப்பேசியே எல்லார் மூளையும் கெடுத்து வச்சிட்டாங்க சார். அஞ்சிக்கும் பத்துக்கும் கூலிவேல செய்யறவனபோயி சுரண்டல்காரன்னு நாக்கு கூசாம சொல்றாங்க. மேடையில பேசறாங்க. பத்திரிகையில எழுதறாங்க. அத நம்பறதுக்கு ஆயிரம் பேரு காத்திருக்காங்க சார் அந்த ஊருல. அதான் சார் கொடுமை. "

"அதனாலதான் ஊரவிட்டு வந்திட்டிங்களா?"

"வேற என்ன சார் செய்யமுடியும்? கூலிகாரங்களுக்கு கைகால்தானே சார் மூலதனம். அடிக்க வர்ர ஆளுங்க கைய கால முரிச்சிட்டான்னா காலம் பூரா ஊனமா அலயணுமே சார். கைகால் நல்லா இருந்தாதானே உலகத்துல ஏதாவது ஒரு மூலையில எந்த வேலையையாவது செஞ்சி பொழைச்சிக்கலாம். பத்து நாளா எல்லாரும் கும்பல்கும்பலா ஊரவிட்டு போயிட்டே இருக்காங்க. "
"பிகாருக்கேவா?"

"அங்க என்ன சார் இருக்குது பொழைக்கறதுக்கு? மாடுகன்னு மேய்க்கலாம். அவ்வளவுதான். அதவிட்டா வேற எந்த வழியும் இல்ல. மழ இல்ல, பயிர் பச்ச இல்லன்னா அதகூட எங்க கொண்டுபோயி மேய்க்கறது? அதனால அப்படியே போபால், அகமதாபாத், ஜெய்ப்பூர்னு ரயில் கெடைச்ச ஊருக்கு போறாங்க. நாங்களும் அப்படித்தான். வந்து நின்ன நேரத்துக்கு இந்த ஊரு வண்டிதான் கௌம்ப தயாரா இருந்திச்சி. எங்க போவுதுங்க இந்த ரயில்னு பக்கத்துல இருந்தவருகிட்ட கேட்டன். பெங்களூர்னு சொன்னாரு. சரின்னு ஏறி உக்காந்துட்டோம். அப்ப கையில கொஞ்சம் பணம் வச்சிருந்தேன் சார். இங்க வந்த பிறகு, எறங்கற சமயத்துல போலீஸ்காரங்க மடக்கி புடுங்கிகிட்டாங்க. எல்லா ஊருலயும் போலிஸ்காரங்க ஒரேமாதிரிதான் சார் இருக்கறாங்க. இரக்கமே இல்லாத பாறைங்க சார். இன்னும் ஏழு ஜென்மம் எடுத்தாலும் இவுங்க செய்ற பாவம் தீராது சார்."

ரகுவீரின் மனைவியும் சிறுமிகளும் உணவுக்கடையிலிருந்து வெளியே வந்தார்கள். துணிமூட்டையிலிருந்து ஒரு பெரிய பாட்டிலை எடுத்துக்கொண்டு மறுபடியும் கடைக்குள் சென்ற ரகுவீரின் மனைவி அதை நிரப்பிக்கொண்டு வந்தாள்.

"நீங்க ரெண்டுபேரும் எதுவுமே சாப்பிடலையே?" இன்னும் கொஞ்சம் பணம் தரலாம் என பைக்குள் கையை விட்டேன். ரகுவீர் அவசரமாக என்னைத் தடுத்துவிட்டார்.
"வேணாம் சார். கொழந்தைங்க பசியால சுருண்டுசுருண்டு படுக்கறத பாக்கமுடியாம இருந்திச்சி. அந்த நெருப்ப அணச்சிங்களே, அதுவே போதும் சார். எங்களபத்தி கவல இல்ல சார். இதெல்லாம் ஓரளவுக்கு எங்களுக்கு பழகினதுதான் சார்."

"அதுக்காக வேணுமின்னே பட்டினி கெடக்கணுமா? சும்மா அரவயித்துக்காவது சாப்புடுங்க. இன்னொரு சாப்பாடு வாங்கிக் குடுக்கறதால எனக்கு ஒன்னும் நஷ்டம் வராது."
"பரவாயில்லை சார். இதுவே நீங்க செஞ்ச பெரிய உபகாரம். "

"இங்க பக்கத்துலதான் எங்க வீடு. அப்படி வந்தாலும் பரவாயில்லை. "

"இருக்கட்டும் சார், உங்களுக்கு பெரிய மனசு. இங்க பக்கத்துல கட்டடவேல எங்கயாவது நடக்குதுங்களா? உங்களுக்குத் தெரிஞ்சா அதமட்டும் சொல்லுங்களேன். "

நான் சிறிதுநேரம் யோசித்தேன். இந்திரா நகரின் தெருக்களும் வீடுகளும் என் மனத்துக்குள் நகர்ந்தன. எந்த இடத்திலும் புதிய கட்டுமானப் பணிகளைப் பார்த்த நினைவில்லை.

"அந்த மாதிரி வேலைங்களெல்லாம் இங்க எப்பவோ முடிஞ்சிபோச்சி ரகுவீர். பெங்களூரு இதத்தாண்டி இருபது கிலோமீட்டர் தூரம் வளந்துடிச்சி. இப்ப வேகவேகமா வளர்ந்துகிட்டு வர்ர இடம் மாரதஹள்ளி, காகதாஸபுர, ஒயிட்பீல்டு அந்தப் பக்கம்தான். அங்க போனிங்கன்னா எதாவது கெடைக்கலாம்."

"மாரதஹள்ளி எந்த பக்கம் இருக்குது? "

"கிழக்கு பக்கம்தான். ஆனா நடந்துலாம் போகமுடியாது ரகுவீர். ரொம்ப தூரம் போவணும். பஸ்தான் சரி. இப்படியே நேரா போனிங்கன்னா ட்ரினிடி சர்ச்னு ஒரு சர்ச் தெரியும். அந்த சர்க்கிள்பக்கத்துல நில்லுங்க . 333ன்னு ஒரு சர்வீஸ் வரும். அதுல போனா சீக்கிரமா போயி சேர்ந்துரலாம். அங்க யாராவது தெரிஞ்சவங்க இருக்காங்களா?"

"யாராச்சிம் ஒருத்தவங்க ரெண்டுபேருங்க இருந்தாலும் இருப்பாங்க. கண்டுபுடிச்சிட்டா அப்படியே அவுங்ககூட சேர்ந்துக்கலாம். பசியாறதுக்கு ஏதோ ஒரு வழி, என்ன சொல்றிங்க? "

பேசிக்கொண்டே நிறுத்தத்தை ஒட்டியிருந்த மரத்தடியில் இருட்டில் மூட்டைமுடிச்சுகளைக் கொண்டுபோய் வைத்தான் ரகுவீர். ரகுவீரின் மனைவி மூட்டையைப் பிரித்து ஒரு சாக்கை எடுத்து தரையில் விரித்தாள். குழந்தைகள் அவள் தரையில் விரித்த சாக்கில் மெதுவாகப் படுத்தார்கள். ரகுவீரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு வீட்டைநோக்கி நடக்கத் தொடங்கினேன். அவர் உரையாடலை மனம் மறுபடியும் அசைபோட்டது.

வீட்டுக்குள் அடியெடுத்துவைத்ததுமே ரகுவீரைப்பற்றிய தகவலை அமுதாவிடம் சொன்னேன். அமுதாவுக்கும் அது துயரம் தரும் செய்தியாக இருந்தது. ஆனால் பிகார் மக்கள் மும்பையைவிட்டு வெளியேற்றப்படும் செய்தி அமுதாவுக்குத் தெரிந்ததாக இருந்தது. "தாக்கரேவோ போக்கரேவோ யாரோ ஒரு ஆளுதான் எல்லாரயும் மும்பையவிட்டு கௌம்பிப்போங்கன்னு கட்சி கட்டறாராமே. ஒரு வாரமா டிவியில இதத்தானே செய்தியா காட்டறாங்க. அவுங்கவுங்க ஊருல அந்தந்த ஊருக்காரங்கதான் இருக்கணும்னு மும்பைக்காரனப்போல ஒவ்வொருத்தவங்களும் ஆரம்பிச்சாங்கன்னா, உலகத்த ஒரு ரெண்டாயிரம் மூவாயிரம் வருஷம் பின்னாலதான் உருட்டிஉடணும்" அமுதாவின் பேச்சில் வெளிப்பட்ட சலிப்பும் சீற்றமும் அந்த நேரத்தில் என் மனச்சுமையைப் பெரிதும் பகிர்ந்துகொள்ளும் விதத்தில் இருந்தன.
மறுநாள் காலை அலுவலகம் செல்ல பேருந்து நிறுத்தத்தை அடைந்ததும் ரகுவீரின் நினைவுதான் முதலில் வந்தது. ரகுவீரின் மனைவியும் சிறுமிகளும்மட்டுமே காணப்பட்டார்கள். அவ்வளவாக வெயில் இல்லையென்றாலும் முந்தானையால் தலையை முழுதாக மூடியிருந்தார் ரகுவீரின் மனைவி.

"ரகுவீர எங்க காணோம்?" நேற்று பேசிய உரிமையில் அவரிடம் நேரிடையாகவே கேட்டேன். அவருக்கும் என்னை அடையாளம் தெரிந்தது.

"இதோ வரேன்னு சொல்லிட்டு போயிருக்காங்க."

"மாரதஹள்ளிக்கா?"

"அங்கதான்னு நெனைக்கறேன்."

"புள்ளைங்க எதாச்சிம் சாப்பிட்டாங்களா?" சிறுமிகள் என்பக்கமாக திரும்பிப் பார்த்தார்கள். அவர் பதில் எதையும் சொல்லவில்லை. ஆனால் அவருடைய மௌனமே பெரிய பதிலாக இருந்தது. இருப்பவர்களிலேயே மூத்தவளாகக் காணப்பட்ட சிறுமியை அழைத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த உணவுக்கடைக்குச் சென்றேன். நான்கு பேருக்கும் இட்லிகளைப் பொட்டலங்களாகக் கட்டி வாங்கி அவளிடம் தந்தேன். அதற்குள் என்னுடைய பேருந்து வந்துவிட்டது. அவசரமாக ஓடி பேருந்துக்குள் ஏறிக்கொண்டேன்.

காவல்துறையைச் சேர்ந்த ஒரு மும்பை அதிகாரி கூறியதாக செய்தித்தாளில் படித்த செய்தியை நினைத்துக்கொண்டேன். பிகார்க்காரர்களை வெளியேறிச் செல்லுமாறு அச்சுறுத்தும் சக்திகளை தனக்கு அடையாளம் தெரியுமென்றும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் சொன்னார். உடனே ஒரு பத்திரிகைக்காரர் அப்படியென்றால் அவர்களை நீங்கள் ஏன் கைது செய்யக்கூடாது என்று அவசரமாகக் கேட்கிறார். அதன்மூலம் அவர்கள் உடனடியாகப் பிரபலமடையக்கூடும். அந்தப் பிரபலம் வேண்டித்தானே அவர்கள் அதைச் செய்கிறார்கள். நம் கைது நடவடிக்கை அவர்கள் கேட்பதை நாமாகவே வலியச் சென்று வழங்குவதைப் போல மாறிவிடும் என்று பதில் சொன்னார் அதிகாரி. பலர் அடிபட்டுள்ளார்கள், பலருடைய இருப்பிடங்கள் சூறையாடப்பட்டுவிட்டன. பலர் மருத்துவமைனையில் உள்ளார்கள். இன்னும் பலர் நம் கண்முன்னாலேயே மூட்டைமுடிச்சுகளோடு வெளியேறிக்கொண்டுள்ளார்கள். இவ்வளவு நடக்கும்போதுகூட கைது செய்யாமல் தர்க்கம் பேசிக்கொண்டிருப்பது நியாயமா சார் என்று விடாமல் பத்திரிகைக்காரரும் ஆதங்கத்தோடு கேட்டார். காவல் துறை அதிகாரி எல்லா மாநில அதிகாரிகளையும்போல ஒரு எழுத்துகூட மாறாமல் காவல் துறை தன்னுடைய கடமையைக் கட்டாயம் செய்யும். மக்களுக்கு அச்சம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு நேர்காணலை முடித்துக்கொண்டு சென்றுவிட்டார்.

மும்பையில் இந்த வெளியேற்றம் நடப்பதால் பத்திரிகைகளில் இது தலைப்புச்செய்தியில் இடம்பெற்றுள்ளது. செய்தியில் இடம்பெறாத வெளியேற்றங்கள் இன்னும் ஏராளமாக உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படிப்பட்ட செயல்கள் நடைபெறுகின்றன. மாற்றுமாநில உழைப்பாளிகளை எதிரிகளாக உருவகித்துக் கட்டமைக்கிற உள்ளூர் அரசியல்காரர்களை யாராலும் தடுக்கமுடியவில்லை. எப்படியோ அவர்களும் தன்னைச்சுற்றி ஆயிரம் பேரை திரட்டிவைத்துக்கொண்டுள்ளார்கள். அவர்களுடைய தன்னல நோக்கங்களையும் விரோதப்போக்கையும் அம்பலப்படுத்தி மக்களை சகோதரஉணர்வுடன் வாழத் தூண்டும் சக்திகளை சமூகத்தில் காண்பது மிகவும் அபூர்வமாக உள்ளது. தம் குரலே அடிமட்டத்து மக்களைப் பிரதிநிதிப்படுத்தும் குரல் என்று சொல்லி ஊடகங்களை நம்பவைக்க அவர்கள் முயற்சி செய்யும்போது, அதைத் தவறு என்று முளையிலேயே சுட்டிக்காட்ட எந்த ஊடகமும் தயாராக இல்லை. மீண்டும்மீண்டும் அவர்களை மையப்படுத்தி மையப்படுத்தி ஊடகங்களே அவர்களை வளர்க்கின்றன. இந்தியாவின் எல்லாப் பெருநகரங்களிலும் இப்படிப்பட்ட அதிகார சக்திகள் வளர்த்தெடுக்கப்பட்டு வருவது மிகப்பெரிய ஆபத்தின் அடையாளம்.

பகல்முழுதும் இப்படிப்பட்ட செய்திகளை துண்டுதுண்டாக மனத்தில் அசைபோட்டபடி இருந்தேன். சகோதர உணர்வை நாம் இழக்கும்போது இப்படிப்பட்ட வெறுப்புக்கான விதை மனத்தில் ஆழமாக விழுந்துவிடுகிறது. தன்னைவிட தன் சகோதரனுக்கு இறைவன் நெருக்கமாக இருக்கிறான் என்ற சீற்றத்தில் சகோதரனைக் கல்லால் தாக்குகிறவனைப்பற்றிய சித்திரம் இடம்பெறும் பைபிள் கதையை மனம் நினைத்துக்கொண்டது. தன்னலம் என்னும் நச்சுமரம் வேரூன்றி வளர்வதற்கான இடமாக மனிதமனம் மாறும்போது விரும்பத்தகாத விளைவுகளே காலமெல்லாம் நிகழ்கின்றன.

வீட்டுக்குத் திரும்பும்போது ஏழரையைத் தாண்டிவிட்டது நேரம். அந்த நேரத்திலும் பேருந்தில் ஏகப்பட்ட கூட்டம் நிரம்பி வழிந்தது. வழக்கம்போல பிதுக்கப்பட்ட நிலையிலேயே நிறுத்தத்தில் இறங்கினேன். ஒருகணம் ஆடைகளையும் காலணிகளையும் சரிப்படுத்திக்கொண்டு நிமிர்ந்தபோது ரகுவீரின் நினைவு வந்தது. காலையில் ரகுவீரின் மனைவியும் குழந்தைகளும் உட்கார்ந்திருந்த இடத்தைப் பார்த்தேன். காணவில்லை. அந்த இடத்தில் யாரோ ஒரு வயசாளி நின்று புகைபிடித்துக்கொண்டிருந்தார். எங்கே போயிருக்கக்கூடும் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். பசியால் துவண்டிருந்த அந்தச் சிறுமிகளின் முகங்கள் ஒருகணம் நினைவிலெழுந்தன. சிறிதுநேர சிந்தனைக்குப் பிறகு எப்படியாவது அவர்களாகவே மாரதஹள்ளியைக் கண்டுபிடித்து போயிருப்பார்கள் என்றும் யாராவது அவர்களுடைய ஊர்க்காரர்களே அங்கே தென்பட்டு, அவர்களுக்கு ஆதரவு வழங்கியிருக்கவேண்டும் என்றும் நானே பதிலும் சொல்லிக்கொண்டேன். அந்தப் பதில்தான் சற்றே மனத்துக்கு ஆறுதலாக இருந்தது.

பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - கூத்தலிங்கம் - 2

அசரீரி ஓவியம்
- கூத்தலிங்கம்


கவிதைக்கான அழகும் நளினமுமான
சொல் தேடி
வார்த்தைகளின் அம்பாரங்களை
கலைத்தபோது
எழுதப்படாத
என் வெள்ளைத் தாளிதழ் விளிம்பில்
பறந்து வந்தமர்ந்த வண்ணத்துப்பூச்சி
குழந்தை உள்நுழையும் ஓசையில்
திடுக்குற்று
சட்டெனப் பறந்து வெளி போந்தது

மேசைவிளக்கு ஒளிநீட்சி
கிடத்தியிருந்த
நீங்கா நீள் நிழலொன்று
சிறகசைத்துக் கொண்டிருந்தது
கவிதைக்காய்
தலைப்பிடப்பட்ட அடிக்கோட்டின் கீழே



--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா
http://panbudan.blogspot.com/

பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - கூத்தலிங்கம் - 1

பெருங்காதலின் பொன்நிற கரையில்
- கூத்தலிங்கம்


உதயமான
ஒற்றை நிலவை முத்தமிட
ஆயிரம் உதடுகளாக மலர்ந்து
உதிர்கிறது விரிகடல்

மெல்லிய காமத்தின் விழைவை
சூடியிருக்கிறது
நீல மாலை வானம்

காற்றசைப்பில்
கிளை பிரிந்த சிறு பூவாக
கடவுளிடமிருந்து
நழுவிச் சிந்திய ஒரு துளி விந்து
நிறைவுறா அவாவின் தகிப்பில்
அலைமோதுகிறது பெருங்கடலாக

அதன் கரைகளில் அமர்ந்து காதலிக்கிறார்கள்
மனிதர்கள்

பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - கூத்தலிங்கம் - அறிமுகம்

கூத்தலிங்கம் - அறிமுகம்

குழந்தைகளுக்கு கதைச்சொல்லல் என்கிற நிகழ்வுக்காக தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் உள்ள படைப்பாற்றலை வளர்க்கும் விதமாக பங்காற்றியவர். குழந்தைகளுக்கான அயல் தேசத்து நாட்டுப்புற கதைகள் மொழிபெயர்த்து புத்தகமாக வெளி வந்திருக்கிறது. புதிய பார்வை இதழின் இணையாசிரியராக பங்காற்றியவர். இலக்கிய உலகில் சிறுகதை, கவிதைகள், மொழிபெயர்ப்பு சிறுகதைகள் என பல முகங்களின் சொந்தக்காரர்.

தற்போது குமுதம் நிறுவனத்தின் தொலைக்காட்சி ஊடகத்தில் பணியாற்றி வருபவர்.

பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - வா.மு.கோமு - 2

காலச்சுமை
- சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா

- வா.மு.கோமு


எப்போ ஆரம்பிச்சுது என்பது பற்றியான பழைய ஏட்டுச்சுவடிகள் காணாமல் போய்விட்ட படியால், ஆதாம் ஏவாள் ஆப்பிளை கடிச்சுத் தின்னுட்டே, பாம்பு வடிவில் இருந்த சாத்தான் தன்னோட மரத்துல இருக்கிற ஜெர்ரி பழத்தையும் சாப்பிடச் சொல்லி கேட்க, ஏவாள் சரியென்று ஜெர்ரிப் பழத்தையும் சாப்பிட்டு விட, சாத்தான் எஸ்கேப் ஆகிவிட்ட நாளுக்கு பின் வந்த மார்கழி மாதத்தில் துவக்கப்பட்டதாக கருதப்படுகிற இந்த இதழ், பின் வந்த மாதங்களில் மாசா மாசம் காலம் தவறாமல் மிகச் சரியாக தேதி ஒன்றில், தற்போது உலகம் முச்சூடுமே, செவ்வாய் கிரகம் ஒன்னே ஒன்னு தான் பாக்கி என்கிற நிலையில், தமிழின் மிக முக்கியமான படைப்பாளிகள் கொஞ்சம் பேர்களிடம் மட்டுமே, பத்திகள், கதைகள், ஆய்வுக்கட்டுரைகள், கவிதைகள், இலக்கிய சர்ச்சைகள் இப்படி மாத்தி மாத்தி, அந்தக் கொஞ்சம் பேர் மட்டும் சாவுறமுட்டும் எழுதி எழுதி எழுத்தார்வத்தை தீர்த்துக் கொள்ளும் பலவர்ண முக ஆளுமை கூட்டிக் கொண்ட இதழ் காலச்சுமை.


தோழர் பெரியசுவாமி, சுள்ளிமேட்டு ராமசாமியின் வெளிவராத படைப்புகளை அவிங்களே மண்டியைப் போட்டு எழுதிட்டுப் போனாப்பிடி, தேர்ந்த எழுத்துப் பொறியாளர்களை வைத்து எழுதச் செய்து, இதுவரை வெளிவராத படைப்பு என்று கட்டம் கட்டி விளம்பரம் செய்து, தமிழில் பொறுக்கி எடுத்து படைப்பு என்று கட்டம் கட்டி விளம்பரம் செய்து, தமிழில் பொறுக்கி எடுத்து வெளியிடும் இதழ். தமிழகத்தின் மீலை முடுக்கிலெல்லாம் இருக்கும் கிறுக்கு வெள்ள (சாராயம்) கடைகளிலும், மற்றும் எரிபொருள் விற்பனை நிலையங்களிலும், மிகப்பெரிய திருத்தளங்களிலும், பியூட்டி பார்லர்களிலும், பைனான்ஸ் நிறுவனங்களிலும், சுங்கச் சாவடிகளிலும் என்று திரும்பின பக்கமெல்லாம் கிடைக்கும் ஒரே பயங்கரமான மாத இதழ் காலச்சுமை.

வாரக்கூலி, தினக்கூலி, ஆபிஸ்கூலி, பென்சன் கூலிக்கு செல்லும் இலக்கிய ஆர்வலர்கள் காலச்சுமை இதழை மாதம் மாதம் தங்களின் அடையாள அட்டையை கிறுக்குவெள்ளக் கடைகளில் காட்டு மூன்று ரூபாய் குறைவாக கொடுத்து இதழை வாங்கிச் சென்று இந்தோனியாவில் குண்டுகள் வெடித்துச் சிதறிக்கொண்டிருந்த சமயம் இடிபாடுகளுக்கிடையே கிளம்பிய மார்க்மன் என்கிற புயல் எழுச்சிக்கவிஞர் பற்றியும், அயல் தேசத்தில் அனாயசமாக சிறுகதைகளை புரட்டிப்போட்டு தலைக்கீழாக எழுதிய சிக்கின் சிறுகதை ஒன்றையும், மாக்மால் தீவில் சமூகத் தொண்டாற்றி அரசியலில் ஈடுபட்ட சகோதரி இர்பினின் கள்ளக் காதலர்களின் திருட்டுத்தனங்கள் பற்றியும், இப்படியான அயல் தேச சமாச்சாரங்களை தாங்கிய தமிழ் இதழான காலச்சுமை படித்து அமைதியாகக் கிடக்கும் மூளைக்குள் தீயைப் பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.

வாசகர்களுக்கான திட்டமாக முதலில் எங்களிடம் நேரடியாக ஒரு வருட சந்தாவை எங்களது அலுவலகத்தில் கட்டுபவர்களுக்கு, எங்களிடம் கைவசமுள்ள காதுகுத்து நிபுணரைக்கொண்டு உங்களுக்கு எறும்பொன்று கடித்து வைத்தாற் போன்ற சின்ன வலியுடன் துவாரமிட்டு, தொங்கட்டான் மாட்டி அனுப்பி வைக்கின்றோம். கூடவே மொட்டையையும் அடித்து விட விருப்பமுள்ளவர்கள் முன்னூறு ரூபாய்க்கு எங்கள் நிறுவன வெளியீடுகள் சிலவற்றை வாங்கி, மண்டைக்கு சந்தனமும் பூசிச் செல்லுமாறு பணிக்கிறோம்.

காலச்சுமை பதிப்பகத்தின் வெளியீடுகளை தமிழகத்தில் உள்ளவர்கள் வாசித்துப் பயன்பெற விரும்பினால், பதிப்பக முகவரிக்கு எந்த எந்த புத்தகங்கள் தேவை என்கிற தகவலையும், உங்களது முழு முகவரியையும் அனுப்பினால் போதுமானது. எமது நிறுவனத்திலிருந்து உங்கள் முகவரிக்கு புத்தகக் கட்டோடு ஒரு ஆள் நேரடியாகவே வந்து சேருவார். அவர் தான் எங்கள் நிறுவனத்தின் தங்கமகன். அவரிடம் புத்தகத்திற்கான விலையையும், பயணச் செலவையும் தந்து அனுப்பி வைக்க வேண்டுகிறோம். இந்த ஏ.பி.பி முறையானது காலச்சுமை பதிப்பகத்தாரிடம் மட்டுமே. இந்த ஏ.பி.பி முறையால் புத்தகம் எவ்விதத்திலும் தவறிவிடும் வாய்ப்பு இல்லை. இதில் வாசகர்கள் சந்தேகம் கொண்டால் டபுள் ஏ.பி.பி முறையை உறுதியாக நம்பலாம். அதில் தங்கமகன்கள் இருவர் உங்கள் இல்லம் தேடி வந்து, நீங்க வெளியூர் சென்றிருந்தாலும் வரும் வரை வீட்டுத் திண்ணையில் காத்திருந்து கொடுத்து வருவார்கள்.

எங்களது சிறப்புத்திட்டதில் உங்கள் வீட்டின் பத்திரம், அல்லது நிலப்பத்திரம் அல்லது நகைகளை எங்களிடம் வைத்து, வருடம் வருடம் நாங்கள் வெளியிடும் வெளியீடுகளை முழுமையாக பார்சலாக பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் இதுவரை தமிழகத்தை சார்ந்த 3000 வாசகப் பெருமக்கள் இணைந்து, தங்களது சொத்துபத்துக்களை அளித்து, காலச்சுமை இதழை மாதம் தவறாமல் இலவசமாகப் பெற்று அறிவு வளர்ச்சியடைகிறார்கள். சொத்துபத்து இல்லாத அறிவுத் தேடல் விரும்பும் வாசகர்கள் தங்களது விரைகளில் ஒன்றை எங்களிடம் சமர்ப்பித்து திட்டத்தை சிறப்பிக்க வேண்டுகிறோம். இத்திட்டத்திற்கான ஆள் பிடிப்புப் பணியில் இறங்குபவர் ஐந்து ஆட்களை இத்திட்டத்தில் இணைக்கும் பணியை செவ்வனே செய்து முடித்ததும், எங்களது செலவில் அவர் விரும்பும் வெளிநாட்டுக்கு ஒருவாரம் அனுப்பி வைக்கிறோம்.

காலச்சுமை 2008 வெளியீடுகள்

பதிமூன்று இரவுகளின் கதை (நாவல்)
கவிநி கமலா

நாவல் முழுவதும் ஒரு தனித்தீவில் நடைபெறுகிறது, வெளிநாட்டில் இப்படி ஒரு நாவல் வெளிவந்திருந்தால் நாவலாசிரியை தான் கைது செய்யப்படுவதை தவிர்க்க வேண்டி நாடு விட்டு நாடு செல்ல வேண்டி இருந்திருக்கும். தமிழில் இந்த நிலை இதுவரை இல்லை. பின் நவீன பிரதிகளில் காணக்கிடைக்கும் உடல் சார்ந்த பொருட்கள் அவற்றின் பயன்பாடுகள் இந்தப்பிரதியில் கேலிக்கு உள்ளாக்கப்படுகின்றன. தனது பதிமூன்று கணவன்மார்களோடு தனித்தீவில் வசிக்கும் கமலா அவர்களை அடைந்த விதம் பற்றியும், அவர்களுடனான தமது பொழுது போக்குகள் பற்றியும் தேர்ந்த நாவலாசிரியை போன்று விவரித்துச் சொல்லும் .
முற்றிலும் தமிழுக்குப் புதிதாய் இருப்பதினால் நாம் சொக்கிப்போய் நாவலில் ஆழ்ந்து விடுகிறோம் . கவிஞியாக மட்டுமே அறியப்பட்ட கமலாவின் முதல் நாவல் என்பது படிப்போரை ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கும் சங்கதி.

தனது கவிதைகளில் வாழ்வாதாரமான காமத்தை பேய் போல் எதிர்க்கொண்ட கமலா நவீன மனதின் அசலான பிரதிபலிப்பை தனது முதல் நாவலில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.
( முன்னுரையில் மு. ஹரிகிருஷ்ணன்)

புளியங்கா கவிதைகள்
ஜான் - ஜானி - ஜனார்த்தன்

கவிதை என்பது கண்டபடி எழுதுவது . கவிதைகள் வாசகனுக்காக எழுதப்படுவன அல்ல. வாசகனுக்கு எதற்காக கவிதைகள்? எனக்கேட்கும் ஜான் - ஜானி - ஜனார்த்தன். இம்மூவரின் ஏழாவது கவிதை தொகுப்பு புளியங்கா கவிதைகள். உடல் சார்ந்த கவிதைகளுக்காக
ஒரு தொகுப்பும் , கடல், கடல் வாழ் உயிரினங்களுக்காக தங்களது மூன்றாவது தொகுப்பும், வான் , வான் சார்ந்த நட்சத்திர கூட்டங்களுக்காக ஒரு தொகுப்பும் என பின் நவீன மூளைக்கட்டிகளை தங்களது மண்டையோட்டினுள் சிவப்பு நிறத்தில் ஆக்டோபஸ் வடிவத்தில் வடிவமைத்துக் கொண்டவர்கள் பழங்களின் வகைகளுக்காக ஆஸ்த்திரேலிய பழ வகையிலிருந்து ஜெர்மன் பழ வகைகள் வரை எழுதி விரித்து செல்லும் கவிதைகள் இந்த தொகுப்பில் நிறைந்துள்ளதாக குறிப்பிடுகிறார்கள்.

மரமேஜை ஒன்றின் மீது பூசணிப்பழத்தை வைத்துக்கொண்டு மூவரும் இணைந்தும் , பின்னர் தனித்தனியாகவும் அவரவர் தாள்களில் பெண்களின் பின்புறங்களுக்கு இணையாக எழுதி வடிவமைக்கப்பட்ட கவிதைகள் தமிழின் ஆகச்சிறந்த அட்டகாடம் , ஏற்கனவே பல்வேறு இதழ்களில் வெளிவந்து பல்வேறு பழங்களின் வாசனைகளைக் கூட நுகர வைத்த கவிதைகள்.

ராசாத்தி
பி.கே. ராசாத்தியின் சரிதம்
கன்னடத்திலிருந்து தமிழில் கருப்பன்

குப்பத்தில் கிடந்த ராசாத்தி ஆதிக்க கரங்களின் பிடிகளுக்குள் சிக்கி சீரழிந்து சின்னாப் பின்னமானவர். சேற்றில் முளைத்த செந்தாமரை. வீரு கொண்டு எழுந்து ஆதிக்க சக்திகளின் வேர்களை கிள்ளி எறிந்த வரலாறு. ஒடுக்கப்பட்ட இனம் சார்ந்தவர்கள் படித்து நுகர, எழுச்சி பெற , தாலாட்டி , சீராட்டி, குளிப்பாட்டி பட்டுடுத்திப் பார்க்க வேண்டிய போராளி ராசாத்தி என்பதை யாரும் மறுக்கவோ புறக்கணிக்கவோ முடியாது. ஒடுக்கப்பட்ட , தட்டி முறிக்கப்பட்ட, பிளாஞ்சு ,பிளாஞ்சென ப்ளாஞ்சப்பட்ட பிறகு தற்போதைய உரிமைக்குரலாகவும், சவுண்டு பார்ட்டியாகவும் எழுச்சியடைந்தவர் ராசாத்தி. வரலாறுகள் என்றுமே சோக நிழல் படிந்து கிடப்பது உண்மைதானே.

ஏற்கனவே கருப்பனின் மொழிபெயர்ப்பில் காலச்சுமை வெளியீடாக வந்த குப்பம்மா, மொழிபெயர்ப்பில் கருப்பனுக்கு ஏராளமான புகழை ஈட்டித்தந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. கன்னடத்தில் ராசாத்தி வயிறு எரிந்து போய் பேசிய கெட்ட வார்த்தைகளை தமிழ்படுத்த கருப்பன் சிரமப்பட்டு அப்படியே தமிழுக்கும் தருவித்திருக்கிறார். சரிதத்தை படிப்போர் வடிக்கும் கண்ணீர்த்துளிகளே அதற்கு சாட்சி.

கொய்யா பழத்தின் கதை ( நாவல் )
சுள்ளிமேட்டு ராமசாமி

1980 ல் முதல் பதிப்பு வெளி வந்த போதே வாசக உள்ளங்களை கொள்ளையடித்து பின்னர் தமிழில் ஒரு ஆட்டு ஆட்டிய நாவல். ஒரு கொய்யா செடியில் பிஞ்சாகத்தோன்றி, பருத்து பச்சை நிறத்தில் காட்சியளித்து பின்னர் யெல்லோ வர்ணத்திற்கு உருமாறி, கடைசியில் காய்ந்து கருமை நிற ஓடாய் மாறி.., நாகரீக வளர்ச்சியில் அழிந்து போன கொய்யாவின் கதை ஆசிரியரால் நிதானமாக நகர்த்தப்பட தமிழின் கதை கூறல் முறை பயன்பட , நாவல் தமிழின் கிளாசிக் என்ற பட்டத்தை நிலையாக பிடித்துக்கொண்டது. இன்று நாவல் உலகில் வேர்பிடித்து பயங்கரமாய் நின்று விட்டது. கிஹிப்ரூ விமர்சகர் ஈஸ் கே சான் நோபல் பரிசை விட வேறு ஏதோ பெரியதாக இந்த நாவலுக்கு தரப்பட வேண்டும் என்கிறார். மெசபட்டோமியாவிலும் , யுவான் சுவாங்கிலும் வீட்டுக்கு வீடு படித்து மகிழும் ஒரே தமிழ் நாவல் இது. தற்போது மீண்டும் செம்மைப்படுத்தப்பட்டு அட்டையில் இரும்புத்தகடு கொண்டு கட்டமைக்கப்பட்டு செழுமையான மறு தயாரிப்பில் வந்திருக்கிறது.

ஓலை வேய்ந்த சாலை
குமரனின் தேர்ந்தெடுக்கப் பட்ட கவிதைகள்
தொகுப்பாளர் : சின்ன பெருமான்

குமரன் ஏகப்பட்ட கவிதைகளை எழுதியவர். கீ என்கிற தனியிதழை சிரமம் பாராமல் நடத்தியவர். கடன் தொல்லை காரணமாக உள்ளூர் ஏரிக்குள் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டவர். பூடகமாக கவிதைகள் எழுதியவரை வாழ வைக்காமல் விட்ட இந்த சமுதாயத்தை, அவர்பால் அன்பும் நேசமும் கொண்ட சமகால கவிஞர் கூட்டம் இன்னமும் சாடிக்கொண்டேயிருக்கிறது.குமரனின் கவிதைகளில் குப்பைகளை கழித்து தேர்வு செய்தவை இத்தொகுதியில். ஒவ்வொரு கவிதையயும் கிணற்றில் மூழ்கி மூழ்கி அடியாழத்தில் இருந்து பொக்கிஷம் தேடி எடுத்து வரும் நிலையில் சிரமத்துடன் படிமக் கவிதைகளை தேர்ந்தெடுத்ததாக களைப்பில் சின்ன பெருமாள் முன்னுரையில் கூறுகிறார். இதில் இதுவரை வெளிவராமல் இவரது கண்டெடுக்கப்பட்ட கவிதைகளும் அடக்கம். இவை நுட்பமும், படிமங்களோடே நகர்வதும் பின்னர் நொறுங்குவதுமான கவிதைகள்.

அணில்கள் ( சிறுகதைகள் )
சுள்ளிமேட்டு ராமசாமி

1980 லிருந்து 1998 அவரது இறப்புக்காலம் வரை எழுதிய பன்முக ஆளுமை மிக்க சிறுகதைகள், மொத்த சிறுகதைகளும் அடங்கிய கெட்டி அட்டை பதிப்பு.கால வரிசைக்கிரமமாக உன்னிப்பாய் ஊரே கூடி பிழைகள் திருத்தி பிழைகள் இல்லாமல் தயாரிக்கப்பட்ட வொய்லெட் பதிப்பு. ஏற்கனவே 91 லிருந்து 95 வரையிலான இவரது சிறுகதைகள் முயல்கள் என்கிற தலைப்பில் தொகுக்கப்பட்டு தமிழ் வாசகப் பரப்பை பீதியுறச் செய்தது நினைவிருக்கலாம். இதுவும் போக அன்னாரது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுதி விற்பனையில் பட்டையைக் கிளப்பியதும் வாசக நேசங்களுக்கு நினைவிலிருந்து அழிந்து போகாது. காலாகாலத்துக்கும் நின்று நிலைக்கும் தொகுப்பு அணில்கள். படிப்பாளிகள் அனைவரது இல்லங்களிலும் இருக்க வேண்டிய பதிப்பு.

இன்று ராத்திரி நான் நாசமாகலாம்:
ப்ரெஞ்ச் கவிதைகள்
தமிழில்: புலிகேசி

சர்ரியலிசத்திற்கும், சாம்பார் ரசத்திர்கும் பெயர் போன ப்ரெஞ்ச் கவிஞர்களின் கவிதைகளை மொழிபெயர்க்க தனித்திறமையும் , தனித்த பேடித்தனமில்லாத தைரியமும் வேண்டும்,ப்ரெஞ்ச் கவிதைகளின் முன்னோடி கிட்ஷாவின் குழந்தைப் பாட்டிலிருந்து தற்போதைய இளைய தலைமுறை கவிஞரகள் வரை தேடிக் கண்டறிந்து புலிகேசி பழகு தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். புத்தக கண்காட்சிக்காக அவசரமாக தயாரிக்கப்பட்ட சாதா அட்டை சாதா பேப்பர் தயாரிப்பு.

யோனி
கவிதைகள் : கவிஞர் கமலா

வாழ்வின் துக்ககரமான பகுதிகளிலும் தன் காமம் பற்றி தாள்களில் எழுதிச்செல்லும் கவிஞி கமலாவின் மூன்றாவது தொகுப்பு.வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும்
வெளிச்சத்தில் பொத்தல் விழுந்த ஆணுறைகளைப் பற்றி எழுதிக்குவிக்கும் கவி மனம் உலகின் எந்த மூலைகளில் உள்ள கவிஞிகளுக்கே இல்லாது, வெளி உலகத்தை உள்ளுக்குள்ளும் , உள் உலகை வெளியிலும் எழுதித் தீர்த்த கமலா சொற்களை
கலைத்துப் போட்டு கூட்டாகச்சேர்க்கும் பணியை ஒரு சாலைப்பணியாளரின் நேர்த்தியோடு செய்கிறார்.
கவிதைகளில் காமத்தையும் ஆடைகளற்ற நிர்வாணத்தையும் எப்படியோ யோனிகள் , முலைகள் என்று கவிதைக்கு கவிதை ஜம்மென வாசகங்கள் இடம் பெற்றால் சரி என்று ரசிப்பவர்களை கைநீட்டு காதலோடு அழைக்கின்றன் இவரது கவிதைகள்.
ஒளிந்திருந்து பேசிய கதைகள்
தொகுப்பு : தொப்புளான்

திருட்டுக் கொடுத்தவர்களின் புலம்பல்கள் , திருடு போன அலுமினிய தேக்ஸா,
குண்டான் பற்றிய பதிவுகள், கூடவே திருடியவர்களின் கொண்டாட்டங்கள் , சில்மிஷங்கள்.., கூடவே திருடுவதில் நடந்த பிழைகள் என இவைகள் பலவற்றையும் சேர்த்து மிக மிக சிரமப்பட்டு திருடிச்சேகரித்த சிறு சிறு திருட்டுக்கதைகள்.

இவைகள் எல்லாமே தமிழக கிராமங்களில் முன்பு பஞ்சம் பட்டினி தலைவிரித்தாடிய சமயத்தில் நடைபெற்ற உண்மைச்சம்பவங்களின் சேகரிப்பு. தமிழில் இப்படி ஒரு தொகுப்பு வருவது இதுவே முதல் முறை. இவற்றை சேகரிக்க தொப்புளான் பயணப்பட்ட கிராமங்கள் எண்ணிலடங்காதவை.

சூனிய நிழல் ( நாவல்)
தோழர் பெரியசாமி

மொழியின் அடுக்குகள் சிதைவுற்று இசங்களின் போர்வைக்குள் சிக்காமல் வந்த தமிழின் முதல் குதிரைப் பிரதி. ஏற்கனவே ஆசிரியரின் சொந்த வெளியீடாக வந்த பிரதி பத்து வருடம் கழித்து அதே ஆளுமையுடன் ப்ளாஸ்டிக் தாள்களில் வருகிறது. தமிழில் அதிகம் பேசப்படாத நாவல்களில் ஒன்றான சூனிய நிழல் வெறுமைப் பாதையில் செல்லும் புத்தி தடுமாற்றமற்ற நாவலாக அறியப்பட்டிருக்கிறது.

சுள்ளிமேட்டு ராமசாமி 80 லிருந்து 95 வரை ( கட்டுரைகள் )

எழுத்துலகில் பலகாலம் கொடியைக் கட்டிப்பறந்து வாசக மனங்களை அபகரித்துக்கொண்டவர் சுள்ளிமேட்டு ராமசாமி. இவரைப் பற்றி ஏனைய எழுத்தாள பக்த சிரோமணிகள் எழுதிய ஞாபக அடிச்சுவடுகளின் தொகுப்பு. கூடவே இவரது மேடைப்பேச்சுகள், பேசலாம், எழுதலாம் என எழுதி வைத்த முக்கிய குறிப்புகள் எல்லாவற்றையும் சமயத்தில் காசு பார்த்து விடும் நோக்கில் கூட்டாக சேகரித்து வெளிவரும் அவசர பதிப்பு.

தோழர் பெரியசாமி
நினைவோடை : சுள்ளிமேட்டு ராமசாமி

ஆயிரத்தெட்டு பிரச்சனைக்களுக்கு மத்தியிலும் நட்புறவோடு இரண்டு சாமிகளும் பழகி உள்ளதை மூடி மறைக்காது திறந்து காட்டும் புத்தகம்.

என் வேதனைகள் ( பதிவு )
கனகா

சிவராமன் திரைப்படத் துறையில் நுழைந்து கலக்கி வருவது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் தில்லான திரைப்படத்திற்கு வசனம் எழுதிய சிவராமன் நாயகியின் பெயரை கனகா என்று பயன்படுத்தி கதாநாயகனை விட்டு கனகா காபி கொண்டாடி , கனகா துணியை துவையடி,கனகா பெட்ரூம் வாடி என்று வசனங்களை அள்ளித்தெளித்ததால் சிறு பத்திரிக்கை இலக்கிய கூடாரத்தில் கவிதைகளை வீச்சோடு எழுதும் கவிஞி கனகா கொந்தளித்து எழுந்து வைக்கும் புகார்களும் , வாடி போடி என்பனவற்றால் தான் அடைந்த மன உளைச்சல்களையும் பதிவு செய்யும் சிறு புத்தகம். கூடவே காலச்சுமை ஆசிரியர்க்கு அளித்த நேர்காணலில் கதறக்கதற கொட்டிக் குவித்த கண்ணீர்த்துளிகள் இணைப்பாக.

ஏ.பி.பியில் வாங்குங்கள்

# காலச்சுமை பதிப்பக வெளியீடுகளை வீட்டிலேயே பெற்றுக்கொள்ளுங்கள்

# உங்கள் தேவையையும் முகவரியையும் SMS அனுப்பினால் போதுமானது. போஸ்ட் ஆபிஸ் தேடிக்கொண்டோ , வங்கிகளை தேடிக்கொண்டோ இதற்காக வெய்யிலிலும் , மழையிலும் அலைந்து உடலை கெடுத்துக்கொள்ளாதீர்கள்.

# புத்தகங்களை உங்கள் நண்பனாக பாவியுங்கள் சிரமம் இராது.

பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - வா.மு.கோமு - 1

தோழர் இறந்து விட்ட பின்பும் ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது
- வா. மு.கோமு


" தோழர் விருப்பப்படி அவர் இறந்த பிறகு பிரேதத்தை அவரது உற்ற நண்பர்கள் நீளவாக்கில் இரண்டு குழி வெட்டி தோழரை இரண்டாகப்பிளந்து இரண்டு குழிகளிலும் அடக்கம் செய்து விட்டார்கள். காற்று சூழ்ந்திருக்கிறது , மதியத்தில் டைனோசர்கள் புற்கள் மேய்ந்து கொண்டிருக்கின்றன."

ஈரோடு பாரதி புத்தகாலயத்தில் புதியதாக ஏதாவது நாவலோ , சிறுகதைக்கொத்துக்களோ கிடைக்குமா என்று நான் தேடிக்கொண்டிருந்த சமயம்தான் என்று நினைக்கிறேன் அல்லது அப்படி தோணுகிறதோ என்னவோ , கடைக் கல்லாவின் முன் அமர்ந்திருந்த அதிகை நீண்ட நேரமாகவே என்னிடம் ஏன் ஒரே ஒரு கவிதை தொகுப்போடு கவிதை எழுதுவதை நிப்பாட்டிப் போட்டீனீர்கள்? என்று வினவ சென்னிமலை தோழர் ஒரு கணம் மனதில் பளீரென மின்னலிட்டு மறைந்தார்.

கவிதை நாயகிக்கு தொன்னூறுகளில் நிறையப்பேர் ஆடை அணிகலன் பூட்டி அழகுப் பார்த்த நேரத்தில் , கவிதைகளில் இருந்த ஆடை அணிகலன்களை களைந்து , கவிதை தன்னளவில் நிர்வாணமாகவே இருக்கட்டும் என எழுத ஆரம்பித்தவன் நான்.., பத்து , பனிரெண்டு வருடங்களாக எழுதியவற்றுள் இருபத்தி இரண்டு கவிதைகளை மட்டும் வாய்ப்பாடு சைசில் புத்தகமாக 2003 ல் கொண்டு வந்த சமயம் சென்னிமலை தோழருக்கு ஆசையுடன் முதல் பிரதியை நீட்டினேன். சமர்ப்பணம் யாருக்கு? புத்தகத்தோழர் ரகுவிற்கா? பேஸ் பேஸ்.., எல்லாஞ் செரி அவுரு ஈங்கூர்ல இருக்கிற மாதிரின்னா கொண்டி நீட்டி பாக்கச் சொல்லிட்டு , அப்புடியே சரக்கு வாங்கிட்டு வரச்சொன்னம்னா .., மளார்ன்னு சந்தோசத்துல ஏற்பாடு பண்ணுவாப்ல..., ஆளு வெளியில்ல இருக்குது! செரி முதல் கவிதை ஆஹா .., ஆஹா ரெண்டாவது மூனாவது த்தூக் கருமம் புடிச்ச எழவு எனச் சொல்லி புத்தகத்தை வீட்டு வாசலில் எறிந்தார் , இருந்தும் மளாரென ஓடிச்சென்று லுங்கியைத் தூக்கிவிட்டு உட்கார்ந்தார் வாசலில். அன்றோடு கவிதை எழுதுவதை நிப்பாட்டி விட்டேன் என்று அதிகை எழில்நிலவனுக்கு விளக்கிய சமயம் டெலிபோன் அழைக்கவே, அதிகை அதை எடுத்து காதில் வைத்துக்கொண்டார்.

அந்த சமயத்தில் எனது கைப்பேசியும் அழைக்கவே எடுத்து வணக்கம் என்றேன். எதிர்முனை வணக்கம் கிடக்கு கழுதை.., என்றார் நண்பர். சொல்லுங்க .., டவர் குறைவான இடத்துல இருப்பீங்க போலிருக்கு.., இருக்கிற எடமாப் பாத்து நின்னு பேசுங்க என்னுது ரிலையன்ஸாப் போச்சி.., டவுன்லதான் நிக்கேன்.., டவர் இருக்குது அப்பறம் போயிடுது.., ஒரே கூத்து இந்த டப்பிய வெச்சுட்டு.., ஹாங் இப்பக் கேக்குது சொல்லுங்க என்றேன். நண்பர் விசயத்தை சுருக்கமாக கூறக்கூற அதிர்ச்சியில் சிலையாய் நின்று போனேன். திருப்பூர்க்கும் , கூலிப்பாளையத்துக்கும் இடையில் பேசஞ்சர் ரயில் சென்றுக்கொண்டிருந்த போது , பெட்டி விட்டு பெட்டி தாவுகையில் கை பேலன்ஸ் தவறி விழுந்து நொடியில் தோழர் இறந்து விட்டாராம். ரயில்வே போலிஸ் பாடியை போஸ்ட்மார்ட்டம் செய்து தைத்து சென்னிமலை அனுப்பி விட்டதாம். விசயம் அறிந்ததும் தோழர் தொடர்பான பதினேழு வருட நினைவுகள் சரமாரியாக என்னுள் பெருக்கெடுத்து ஓடின.

கைப்போனில் கதைச்சது யார் உங்களது பெட்டையா? என்றார் அதிகை. நான் மண்டையை இருபுறமும் ஆட்டி மறுத்து விட்டு மண்டையைப் பிடித்தபடி நாற்காலி ஒன்றில் அமர்ந்தேன். தோழர் என்கிற மனிதரின் மறைவு பற்றிய செய்தியை அதிகைக்கு சொன்னதும் " தோழர் என்றால் ஆமிக்காரரோ? என்றார். ஒரு சில கவிதைகளையும், சிறுகதைகளையும், ஒரே ஒரு நாவலை மட்டுமே தமிழ் இலக்கியத்திற்கு தந்தவரை இலக்கிய உலகு எப்படிக்கேட்க வேண்டுமோ அப்படியே அச்சு அசல் கேட்டார், " ஒரு ரீ சாப்பிடுவோம் " என்றவரிடம் மறுப்பை உதிர்த்து விட்டு கடையை விட்டு கிளம்பினேன்.

தோழரை நேரில் சந்தித்து உரையாடிய எல்லா சந்தர்ப்பங்களும் எனக்கு நினைவில் இருக்கின்றன, அவை பொக்கிஷங்களாக மனதில் பதுங்கி இருக்கின்றன. கடைசியான சந்திப்புகளில் தோழரின் மனம் சற்று பிறழ்ந்து இருப்பதை அடுத்தவர்கள் தெரியப்படுத்தியிருந்தாலும் இந்த மண்டைக்குள் வெறும் மசாலா மட்டுமே இருப்பதால் அப்படி தோன்றவில்லை.

தொன்னூறுகளின் தொடக்கத்தில் முதன் முறையாக ஈங்கூர் ரகுதான் என்னை சென்னிமலை சென்று தோழரைப் பார்த்து வருவோம் வாருங்கள் என்று அழைத்துப் போனார். முதன் முறையாக சென்னிமலை சென்றதும் அப்போதுதான்.

வீட்டில் அம்மாவிடம் சென்னிமலை செல்கிறேன் என்றதும்.., " இப்போதான் நல்ல புத்தி வந்திருக்கு என்றது. நல்ல புத்திக்கும் சென்னிமலைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாமல் ஏன்? என்றேன். சாமி கும்பிடத்தானே என்றதும் விளங்கியது. நீங்கள் வேண்டுமானால் உங்கள் நண்பரிடம் திருப்பதி போகிறேன் என்று சொல்லுங்கள் மொட்டை போடவா? என்பார்கள் அதுப்போலத்தான் இதுவும்.

கூட்டிப்போன நண்பர் ரகு இப்போது லக்னோவில் மாட்டுப்பண்ணை வைத்திருக்கிறார். மதிய சாப்பாட்டுக்கு பள்ளியில் இன்னமும் மணியடிக்கவில்லை, நேரம் இருக்கும் போல என்று காகங்கள் வேப்பையிலிருந்து பறந்து போகும் கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தவர், இப்போது ஏதாவது எழுதுகிறிர்களா? என்று கேட்டால், ஏதுங்க அதுக்கெல்லாம் இப்போ நேரம்? கவிதை எழுதீட்டு இருந்தா ஊட்ல சோத்துக்கு குஞ்சி மணிய வாயில வெச்சிக்க வேண்டீதுதான் என்கிறார். சரிப்போயிச்சாட்டாது வாசிக்கிற பழக்கமாச்சிம் உண்டா? என்றால், வெலை என்னங்க ஒவ்வொண்ணும் ஒரு மாட்டுக்கன்னுக்குட்டி வெலை சொல்றான்.., அந்த காசுக்கு நாலு தீவனம் வாங்கி மாடுகளுக்குப் போட்டா அதுக தின்னாலாச்சும் ரெண்டு படி பாலு சேத்திக்கொடுக்கும் என்பார். நல்ல வேளை இப்பெல்லாம் யாரு கவிதை எழுதிட்டு இருக்காங்க செஞ்சிட்டு இருக்காங்க.., அப்படின்னெல்லாம் சொல்லவில்லை.

சென்னிமலை வண்டிப்பேட்டையில் இறங்கியதும் நண்பர் குமரன் சிலையைக் காண்பித்தார். அதை ஒரு பிரம்மாண்டத்தை பார்ப்பதைப்போலவோ , போராட்ட தியாகியைப் பார்ப்பது போன்ற உணர்வுடனோ அப்போது குமரனை பார்க்கவில்லை என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். கொடியை குமரன் காத்தது திருப்பூரில். சிலைக்கு பின்புறத்தில் துணிக்கடை,டீக்கடை
ஓட்டல் என்று இருந்தன. மற்றபடி நிறுத்தத்தில் பேரூந்து வருகைக்கு காத்து நின்றிருந்தவர்கள்
என சொற்ப கூட்டமே இருந்தது. நண்பர் திருப்பூரில் "ஓஷோ பேசன்ஸ்" என்ற பெயரில் சங்கீதா தியேட்டரை ஒட்டி மாடியில் கம்பெனி வைத்திருக்கையில் கட்டிங் மாஸ்ட்டராக தோழர் இவரிடம் நான்கு வருடங்கள் பணிபுரிந்தவர் என்பதால் ஏற்கனவே தோழர் வீட்டுக்குபலமுறை வந்து போனவர்தான்.

உத்துக்குளி சாலையில் என்னை மேடேற்றி கூட்டு வந்தவர் " பிராந்திக்கடை" கண்டதும் என்னைப்பார்த்து கண்சிமிட்டிவிட்டு கடைக்குச் சென்றார். மூன்று கோட்டர் பாட்டில்கள் வாங்கி இடுப்பில் இரண்டையும், சைடு பாக்கெட்டில் ஒன்றையும் செருவிக்கொண்டு மறுபடி ஒரு முறை கண் சிமிட்டி விட்டு நடக்க ஆரம்பித்தவர் பின்னால் நடந்தேன். " இது எதுக்குங்க மணி பத்தரைதானே இருக்கும்? என்றேன். " நீங்க வேற.., நேரங்காலமெல்லாம் தோழருக்கு கெடையாது. அதும்மில்லாம சரக்கோடதான் அவுரு ஊட்டு வாசப்படியயே நாம மிதிக்கோனும், அப்படி போவலின்னா, இங்கெதுக்கு அப்புறம் என்னைப்பாக்க பஸ் ஏறி வரனும்? உங்கூட்டிலயே பொட்டாட்ட சிவனேன்னு கவுந்து படுத்துக் கெடக்க வேண்டீதுதான.., எனக்குனு வாச்சதுக ஒன்னு கூட சுத்தமில்லே என்றுதான் பேசுவாராம். ஒரு மனிதன் சீக்கிரம் சுடுகாடு அனுப்புவதற்கான ஏற்பாட்டோடு செல்வதாகத்தான் பட்டது அப்போது

"புடுங்கிக் கத்தை
கட்டிப் போடலாம்னுதான்
வர்றோம்
ஒன்னத்தீம் புடுங்க முடியாமயே
அடுத்தவன் வாயைப்
பாத்துட்டே போயிடறோம்". - வாழ்க்கை ( தோழர் 1993)

மாரியம்மன் கோவிலையொட்டி விஸ்தாரமான சந்து ஒன்று தெற்கே பிரிந்தது. மேற்குப் புறமாக புளியமரங்கள் நெட்டுக்கு நின்றிருந்தன. அந்த வீதியில் நண்பரும் நானும் செல்கையில் " கடக் கடக்" என்ற ஒலி ஒவ்வொரு வீட்டினுள்ளிருந்தும் கேட்டபடி இருந்தது. அவர்களெல்லாம் வீட்டுனுள்ளேயே கைத்தறி நெய்து கொண்டிருந்தார்கள் கொஞ்ச தூரம் வந்ததும் ஒரு வீட்டின் படலை உள்புறமாக தள்ளி நண்பர் உள் செல்ல நானும் சென்று படலை பழையபடி சாத்தினேன். வீட்டின் முன்புறம் பந்தக்காலில் சங்கிலியோடு கருத்த புஷ்டியான நாய் கட்டப்பட்டிருந்தது.

படலை நீக்கி உள்நுழைந்த சமயம் படுத்திருந்த அது விருட்டென எழுந்து எங்களை நோக்கி துடைச் சதையை கவ்வி இழுத்து விடுவது போலப் பாய்ந்து குரைத்து வந்தது. சங்கிலியின் தூரம் குறைவாக இருக்கவே கோபத்துடன் குரைத்து சங்கிலியை வேறு ஒரு கடி கடித்து உதறியது. எனக்கு நாய் என்றால் சிறு வயதிலிருந்தே பயம்தான். ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த சமயம் நாய்க்கடிப்பட்டு தொப்புள் சுற்றிலும் பத்து ஊசி போட்ட ஞாபகம் கருநாய்களைக்
கண்டால் ஞாபகமாகிவிடும்.

- டேய் மணி கம்முனிருக்க மாட்டே.., பன்னாட்டு சாஸ்த்தியாப் போச்சாட்ட இருக்குதே, ஊட்டுக்கு ஒருத்தரையுமே வர வுடமாட்டியா? " சத்தமிட்டபடி வெற்று மேலோடு லுங்கியை உதறிக்கட்டியபடி தோழர் வீட்டினுள்ளிருந்து வந்தார். ரகு கொஞ்சம் ஒதுங்கி , " வாயில்லாச் சீவனப்போட்டு கட்டி வெச்சு வளர்க்கிறீங்களே.., நாயமா தோழர்" என்றார்.

- நீங்க வேற அவுத்துட்ட சடுதிக்கி கெடையில் நிக்குதிங்றீங்களா? துரூவா பீக்காட்டுக்கு ஓடி வயித்த ரப்பீட்டு ஓடியாந்து ரோட்டும் பேர்லேயே நின்னுக்கும். போற வார வண்டிகள முடுக்கீட்டு மேக்கைக்கும் கிழக்கைக்கும் ஓடீட்டு என்ன ரவுசுங்றீங்க.

- நாயி ஜம்முனு இருக்குது வாலை வெட்டீட்டீங்ளே.., மொண்ணை வால் நாயின்னு ஆயிப்போச்சுங்களே.

- அது எங்கப்பன் பண்ண வேலை, வாலு சு?ண்டுக்குதுன்னு முன்னீல வெச்சு இது சிறுசா இருக்கப்பவே தறிச்சுப் போட்டாப்ல, வாலு சுருண்ட நாயிதான் ஊட்டுக்கு ஆகாதாம்ல. இதுக்கு கொசுவர்த்தி சுருள் கணக்கா மூணு சுத்து சுருள் இருந்துச்சு. அது கெடந்து சாட்டாது வாங்க உள்ளார. டீ வெக்கிலாம்னா ஊட்ல சனமே இல்ல. தலை ஏனோ வலிக்குதுடான்னு
எங்கம்மா சித்த முந்தித்தான் திண்ணைல நீட்டி கெடந்திச்சு. மளார்ன்னு நூலு போட டெக்சுக்கு போயிடுச்சு . சரி நாம வெக்கலாம்னா டீத்தூள் டப்பா எங்க கெடக்கோ .., சக்கரை டப்பாவுல இருக்கோ என்னமோ.., சரீங்க ரகு கூட ஆரவோ கூட்டிட்டு வந்திருக்கீங்களே .., பெரிய்ய எழுத்தாளரா? ஆடு திருடுன கொரவானாட்ட இருக்குற முழிய மாத்தச் சொல்லுங்க
நக்சலைட்டுனு புடிச்சிக்கொண்டி உள்ளார வெச்சு நிமித்தீருவான், அப்பறம் பஞ்சாயத்துக்கு நாமதான் படியேறனும், உக்கோருங்க இப்டி ஷோபாவுல. என்ன விஷயம்? எப்படி போயிக்கிட்டிருக்கு?


- பேசிட்டு இருக்கதான் வந்தோம் தோழர்.., மேற்படி வாங்கியாந்திருக்கேன், கொறிச்சுக்க ஏதாச்சிம் முறுக்கு, மிச்சர் ஊட்ல இருக்கா?


- இங்கென்ன மசுரா இருக்குது., வெறுஞ்சோறும் , டவரால துளி பண்ணக்கீரைய வணக்கி வச்சதுதான்.., வாரதுதான் வாரீங்க ஒரு நேந்தர்ஞ் சிப்ஸோ. வறுக்கியோ வாங்கியாந்திருந்தா பரக் பரக்குன்னு கொறிச்சிட்டே நாயம் போட்டு நொக்கு வாங்கியிருக்கலாம், சித்த சடவா இருக்குதுன்னு நீட்டி உட்டு இப்பத்தான் உழுந்தேன் பாயில.

இப்படி தொட்டதுக்கெல்லாம் எகத்தாளம் பேசும் மனிதனை வாழ்வில் முதலாகப் பார்த்த கணம் கொஞ்சம் அதிர்ச்சியாக எனக்கு இருந்ததுதான் என்றாலும், தோழருக்காக அவரின் நட்பை வேண்டி என் பங்கிற்கு வெளியே கடைத்தெருவிற்கு வந்து எதிர்ப்பட்ட கடை ஒன்றில் குச்சிக்கெழங்கு சிப்ஸ், நேந்தரஞ் சிப்ஸ், செவ்வாழை
ஆறு பழம் என வாங்கி ஓடி வந்தேன்.

உள்ளே அவர்கள் தரையில் பாய் விரித்து அமர்ந்து முதல் ரவுண்டை ஆரம்பித்திருந்தார்கள். நண்பர் தனது பேண்டை உருவி ஷோபாமீது போட்டு தோழரின் லுங்கி ஒன்றை அணிந்து கால்நீட்டி அமர்ந்திருந்தார். மூட்டாத லுங்கியை சுத்துப் போட்டு சொருவி இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

- அந்த சுவத்துல மூனாவது சுவிட்சை தட்டி விடுங்க நண்பரே.., மேல காத்தாடி
சுத்தட்டும்.. உள்ளே நுழைந்த என்னிடம் தோழர் பீடி புகையும் விரலில் நீட்டி சொன்னார். நான் சுவிட்சைப் போட்ட சமயம் மின்சாரம் இல்லை போல.

என்ன ஒரு அட்டூழியம் பாருங்க ரகு,, ஒரு காத்தாடி கூட நமக்கு சதி பண்ணுது . மனுசன் நிம்மதியா இருக்குற நேரமே குடிக்கிர நேரம்தான், சரி வந்தா காத்தாடி சுத்தட்டும்.., நீங்க சரக்கு அடிப்பீங்களா நண்பரே! இதென்ன வாய்க்குள்ளார என்னேரமும் போண்டா கெடக்கறாப்பல உம்முனு இருக்கீங்க? கூச்சப்படாம ஒக்காருங்க. அதுகளை எல்லாம் நேர்ல பாத்துருக்கீங்ளா? என்றபடி தோழர் இரண்டு கைகளையும் நீட்டி பந்து பிடிப்பது போல பிடித்து உருட்டிக் காட்டினார்.
என்ன நண்பரே! புடிச்சு கசக்கிப் பாத்திருக்கீங்ளா? டியூப்லைட்டா இருப்பீங்க போலிருக்கே,, உங்களுக்கு எந்த ஊரு ?

ஈரோடு என்றேன்.

நண்பரே ஈரோடுங்கறது சரி ., ஈரோட்ல எந்த ஏரியா? ஏரியான்னு ஒன்னு இருக்கும்ல.

சூரம்பட்டில

சூரம்பட்டிலயா? அங்க பசக இருக்காங்க எதுனா பிரச்சனைன்ன என் கையில சொல்லுங்க, தட்டி லேப்பறதுக்கு அவிகளே போதும், துளி ஊத்திக்குங்க என்றவர் மூன்றாவது சில்வர் தம்ளரில் பாதி அளவு சரக்கு ஊற்றி , தண்ணீர் கலந்து எடுத்து நீட்டினார். ஒன்றுமே சொல்லாமல் வாங்கி வாயில் அன்னாந்து ஊற்றிக்கொண்டேன்.

அட நண்பரே, வேண்டாம்னு ஒரு வார்த்தை சொல்லியிர்ருந்தீங்னா மடக்குனு நானே ஊத்தியிருப்பேன்.., அது சரி நாங்க பொழங்கற சாதிதான் வாயை ஒட்டியே குடியுங்க.., அன்னாந்து இனி ஊத்துனீங்னா எனக்கு கேவலம். சரி உடுங்க.., ஏனுங்க ரகு நண்பர் என்ன எழுதிட்டு இருக்காரு.., கேட்டாவுது சொல்லுங்க.., ரொம்ப கூச்சப்படறாப்ல..என்றதும் உள்ளே துளி சரக்கு இறங்கி விட்ட வேகத்தில் , சிறுகதைகள் எழுதுவதையும் எப்போதாவது கவிதை எழுதுவதையும் தோழரிடம் கூறினேன்.

சிறுகதை எழுதிறீங்ளா? அடக்கொடுமையே .. அதுல நீங்க எழுதுறதுக்கு என்னத்த உட்டு வெச்சாப்ல அந்த புதுமைப்பித்தன் ? அதான் இந்தாங்கடான்னு எழுதி வச்சிட்டு போயிச் சேந்தூட்டப்லையே! இப்போது நண்பர்தான் எனக்கு உதவியாய் பேச்சை வளர்த்தார். அப்படி எப்படிங்க தோழர் நீங்க சொல்லலாம்! அது ஒரு காலக்கட்டம்தானே.

சரி சொல்லப்படாது தான் , சொன்னாத்தானே நான் தோழர். பேச்சு மட்டும் இல்லீன்னா நான் டுபுக்கு டோங்கிர் தோழர் ஆயிடுவேன். கதையின்னா ஒருத்தர் எழுதுனாப்லையே அஸ்வகோஷோ முட்டக்கோஷோ ஒருத்தரு.., புற்றில் உறையும் பாம்புகள் அதான்.., எழுதுனா அது மாதிரி ஒன்ன எழுதீட்டு அவராட்டவெ கதை எழுதுறத நீங்க நிப்பாட்டிக்கணும் நண்பரே.

அதுகள எல்லாம் தாண்டின எழுத்து என்னோடதுன்னு ஒரு நெனப்பு எனக்குள்ளார எப்பயும் ஓடிட்டே இருக்குங்க தோழர்.

ரகு இந்த நண்பர் ஒரு வாட்டியாவது எப்பாச்சிம் ஜெயிச்சுட்டு சாவட்டும் என்ன ஒரு நம்பிக்கை ஒலி ,ஒளி பாருங்க.., உங்க வாழ்க்கைய நீங்க தகிரீமா எழுதுங்க நண்பரே. பிரச்சனை வந்தா இந்த தோழர் முன்னாடி நிப்பான், நான் பாத்துக்கிறேன், இன்னொரு பெக் ஊத்திக்குங்க,, பத்தாம் நெம்பர் பீடி ஒன்னு பத்த வெச்சு ஊதுங்க என்றவர் என் முன் பீடிக்கட்டையும், தீப்பெட்டியையும் நீட்ட மறுக்காமல் வாங்கி பற்ற வைத்து ஊதினேன்.

நண்பரே நாம இப்போ மசமசப்புல இருக்கம், பழம் எடுத்து புட்டுச்சாப்பிடுங்க . வெறும் சரக்கவே உள்ளார ஊத்துனீங்கன்னா கொடலு நாசமாப் போயி உங்களை நம்பீட்டு இருக்குற இலக்கியத்தை ஏமாத்திட்டு கெளம்பீடுவீங்க. குடிச்சா பரவாயில்ல.., வகுறு ரொம்ப சாப்பிடுங்க. உங்க கவிதையில ஒன்னு நீட்டமா இல்லாம பொட்டிக் கவிதை ஒன்னு சொல்லுங்க.., கேப்போம் வெக்கப்படாம பாட்டா வேணாலும் பாடுங்க, ரகு கூட்டிட்டி வந்திருக்கார்னா நீங்க பெரிய்ய ஆளாத்தான் இருக்கோனும்

" எல்லாம் உணர்ந்தவன் சொல்லிப்போனான்
எல்லாம் பொய் என்று - ஏனென்று கேட்க
நானாக உணர வேண்டுமாம். "

அடங் கொக்க மக்கா.., நீங்க மீறுன பொயட் நண்பரே, வெளையாட்டுக்கு சொல்லுலே .., என்ன பயங்கரம், " என தோழர் சொல்ல, ரகு என்னிடம் திரும்பினார் " தோழரே, பாராட்டிட்டாப்ல , நீங்க இனிமே தைரியமா எழுதலாம் . ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்ங்ற மாதிரிதான்", என்றார்.

முதன் முதலாக ஒரு தாதா ரேஞ்சிக்கு இருக்கும் படைப்பாளியிடம் பாராட்டு பத்திரம் வாங்கவா நான் இங்கு வந்தது? கோவையில் எண்பதுகளின் கடைசியில் சுற்றிக் கொண்டிருந்த போது இதைத்தானே செய்துகொண்டு இருந்தேன். தெருச் சண்டையில் கலந்து மிதி வாங்கி , மிதி கொடுத்து ஒளிந்து ஒளிந்து திரிந்தவன் தானே, இந்த தோழரும் பயம் பீறிட எங்காவது ஓடி ஒளிந்திருப்பாரா? சோற்றுக்கு வழியில்லாமல் ஈரத்துணியை வயித்துக்கு கட்டிக்கொண்டு இரவையும் பகலையும் கழித்திருப்பாரா?

தோழர் நீங்க என்னை தட்டிக்கொடுக்கனும் , பாராட்டனும் , மேலும் எழுதத்தூண்டனும்னு உங்களை பார்க்க வரலை அதுமில்லாம உங்க வீட்டில மருந்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லை . புதுமைப்பித்தனை நீங்க வாசீத்தே இருக்க முடியாது" என்று உறுதியாக சொன்னேன். அதே சமயம் மின்சாரம் வந்து மேலே காத்தாடி சுழல ஆரம்பித்தது. தோழர் இரண்டு கால்களையும் விரித்து சுழலும் காத்தாடியையும் அண்ணாந்து ஒரு முறை பார்த்துப் பேசினார்.
நான் புதுமைப்பித்தனை படிச்சதில்லை, பாரதிய படிச்சதில்லை மார்க்சியமும் படிச்சதில்லை.., படிச்சேதான் ஆகோனுங்ற அவசியமும் எனக்கு இல்லை . எல்லாம் கேள்வி அறிவுதான். பத்து இடத்துல பத்து பேர் பேசியதை வெச்சுத்தான் நான் உறுதியா பேசுவேன். முடிஞ்ச மட்டிலும் தமிழ் இலக்கியத்தை யார்கிட்ட வேணாலும் காப்பாத்தச் சொல்லுவேன். சரி நண்பரே , நான் ஏதோ இலக்கியம்னு நெனச்சுட்டு எப்பாச்சிம் எழுதுறவன். என்னை சந்திக்க ஏன் வந்தீங்க ?

பார்த்து பேசீட்டு , கொஞ்சம் சரக்கு ஊத்தீட்டு கொண்டாட்டமா இருந்துட்டு போகலாம்னு தான் ரகு கூட்டி வந்தார். அதானே.., கொண்டாட்டத்துக்குத்தானே இப்ப ஊத்திக்கிட்டம்.., பத்தலை அப்படின்னா மறுக்காவும் வாங்கியாந்து குடிப்பம். என்ன இப்ப ? சரி நண்பரே எந்த நேரத்துல எழுதுவீங்க.., நானெல்லாம் தோணறப்ப எழுதுறதுதான்.. சில எழுத்தாளர்கள் டீயைக்குடிச்சிட்டே எழுதுறாங்களாம்.., சிலரு பாட்டுப்போட்டு கேட்டுட்டு , சிலரு தண்ணிய போட்டுட்டு.., இப்ப போன வாரம் கேள்விபட்டேன்.., ஒரு எழுத்தாளரு தன்னோட மனைவிய துணிகளை அவுக்கச்சொல்லி ரூம்ல அதுக்கும் இதுக்கும் நடக்கச்சொல்லீட்டு மூடு கெளம்பி எழுதுவாராமா.., நீங்க நகத்தை கொறிச்சுட்டே எழுதுவீங்களாட்ட இருக்குது.., ஒரு விரல்லயும் நகத்தைக் காணமே! பயங்கரமா எழுதுறேண்ட்டு விரலைத் தின்னு போடாதீங்க..

இந்த முதல் சந்திப்பை இத்தனை வருடம் கழிந்தும் நான் ஞாபகத்தில் வைத்திருப்பதற்கு காரணம் என்று எதுவுமில்லை. ஏற்கனவே தோழர் பற்றியான குறிப்புகளை கவிதாசரண் மற்றும் சுகன் இதழ்களில் அவ்வப்போது வருடத்திற்கு ஒரு முறையேனும் அவரது மனப்பிறழ்வுகளையும் வாழ்க்கை மீதான ஆர்வத்தையும் முடிந்த அளவு பதிவு செய்திருக்கிறேன். இந்த படைப்புகளை என் வாயிலாகவே தோழர் கண்ணுற்றபோது " எதுக்கு இந்த வேண்டாத வேலை .., என்ன கொன்னே போட்டீயே என்னமோ பண்ணு .. ஆமா இப்படி குறிப்புகளா கதை எழுதுறீயே படிக்கறவிய என்னதான் சொல்றாக? யாருக்கு என்ன புரியப்போவுது. எனக்கே ஒன்னும் புரியல.. சின்னப்பொடுசு கொஞ்சம் லேட்டா ஊடு போனா என்ன சொல்லுது தெரியுமா? யம்மோவ அப்பன் சென்னிமலையிலேயே மல்லு குடிச்சுட்டு , இசியத் தின்னுட்டு வந்திடுச்சு.., அப்பன் சோத்தை எனக்குப் போடு" அப்பிடுங்குது . சரக்கடிச்சா கண்ணு இப்ப செவந்து கோவப்பழமாட்ட மின்னுதா மளார்னு கண்டுபுடிச்சுக்குது..,

அது பேசறதுக்கு நீ எழுதுறது எவ்வளவோ பரவாயில்ல போ" என்றார்.

மூத்த எழுத்தாளர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இறந்த மறு நிமிசத்திலிருந்து பேரிதழ்கள் அவரது நினைவுகளை பலரிடம் எழுதி வாங்கிப் பெற்று மலர் வெளியிட்டு அஞ்சலி செய்கிறது, முன்பெல்லாம் ஏது இப்படி? சிற்றிதழ்கள் ஒரு கட்டம் கட்டி பெருந்தகையின் மறைவுக்கு அஞ்சலி என்று போட்டு விடுவார்கள். வந்து கொண்டிருந்த இதழ்களில் ஏதேனும் ஒன்று மட்டும் ரூபாய் 200 லிருந்து 300 க்குள் அன்னாரது புகைப்படம் ஒன்றை ப்ளாக் செய்து இதழின் முகப்பில் பதிந்திருக்கும்.இன்று அப்படி இல்லைதான். ஒரே எழுத்தாளரே எல்லா பேரிதழ்களிலும் இறந்த பெருந்தகை பற்றி வகை வகையாய் எழுதி வெளிவந்திருக்கும் . கிராமத்திலேயே சுற்றுவதால் இதற்கெல்லாம் பைசா வாங்கிக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை.

இப்படியான நினைவோடை என்று எனக்கு எழுதுவதாக இருந்தால் ஒரு கிங்க்பிசர் பீருக்காவுது வகைச்சல் பண்ணீட்டு எழுது , பீரை வாங்கி ஒடச்சு மூனு மூடிய நெலத்துல ஊத்தீட்டு அப்புறமா நீ ஏத்திக்க. ஆர், சண்முகசுந்தரத்தோட எழுத்து நம்ம மண்ணு எழுத்துதான், இன்னமும் அவரை பேசீட்டு இருக்காங்கள்ள, அது மாதிரி நீ செத்துட்டாலும் பத்து வருசத்துக்காவுது பேசுற மாதிரி ஒரு எழுத்து எழுதீட்டு செத்துப் போயிரு . கொள்கே, கோட்பாடு,இயம்னு யாரு பொறத்தாண்டியும் நீ போயிட்டீன்னா உன்னோட நீ என்ன நினைக்கிறியோ அதான் அங்க இருக்கனும் . ஒரு கோட்பாட்டாளர் எழுதினா உன்னோட வாசகர்கள் அதை எளிமையா கண்டுபுடிச்சி காறித்துப்பிடுவாங்க.., கவனமா இருக்கனும் குறிப்புகள்

1. தனியாக நடக்கும் போது எஸ்.பி,பியின் பாடல்களில் ஏதேனுமொன்றை பாடியபடி செல்வதும்,குழந்தைகளின் செய்கைகளை நின்று நிதானித்து பார்த்து
ரசிப்பதும், காற்றில் விரலால் " உலகம் " என்று எழுதிப்பார்ப்பதும் இவரது பழக்கங்கள். சுந்தர ராமசாமி இப்படி செய்வார் என்று ஜெயமோகன் உயிர்மையில்
எழுதியிருந்தார். காற்றில் " அ" போடுவது அவர் வழக்கமென்று,

2. சாருவின் கோணல் பக்கங்கள் மூன்று தொகுதிகளையும் என்னிடம் கேட்டு வாங்கி எடுத்துச் சென்று வாசித்தவர் பின்னர் கூறுகையில் " இவுருக்கு தான்
சொல்றது தான் பெருசு.. கேட்டுக்கோ" அப்புடிங்ற நெனப்பு உள்ளுக்குள்ளார இருக்கு. இளையராஜாவை இவுருக்கு புடிக்காம போனது விளங்கலை,
மிகப்பெருசை சிறுசா சொல்றதும், ஒன்னுமில்லாததை ஊதிப்பெருசாக்கி காட்டறதுமே இவரு வேலையாட்ட இருக்கு. வாரா வாரம் ஒவ்வொரு கோனல் பக்கமா
படிச்ச திருப்தியா இருக்கும்னு நெனைக்கேன். ஒட்டுக்கா , ஓரேமுட்டா படிக்கறப்ப எரிச்ச வருது.

3. தோழருக்கு மிக பிடித்தமான திரைப்படம் " இம்சை அரசன் 23 ம் புலிகேசி" " புறாவுக்காக போரா? என்ன அக்கப் போராக இருக்கிறது ? யாரங்கே
யாரடா அங்கே.., என்கிற வசனங்களை நண்பர்கள் மத்தியில் கூறி சிரிப்பில் ஆழ்த்தியவர். என்னிடம் தனித்து அவர் கூறியது.., " எம்பட சின்ன பொடுசு
இன்னும் என்னைப்பார்த்து கேட்கும் .., " அங்கே என்ன தெரிகிறது?

4. தோழருடன் கடைசியாக சென்னிமலை அண்ணமார் திரையரங்கில் பார்த்த படம் சிவாஜி. இடைவேளை சமயத்தில் இருவரும் வெளியே சிகரெட் ஊதியபடி நின்றிருந்த
சமயம் ரசிகர் ஒருவர் சைசாக தோழரை நெருங்கி சன்னமாகப் பேசினார். அவர் கையிலும் சிகரென் புகைந்தபடி இருந்தது. " ஏனுங் ரஜினி சார் மொளகா திங்கறாரே
.., கிட்டக்காட்டறப்போ ரெண்டு மூனு மொளகா நெசமாலுந்தின்னுருப்பாருங்கல், அப்புறம் மொளகா மாதிரி முட்டாயி செஞ்சு தின்னிருப்பாப்ல அப்புடித்தானுங்?
என்றபோதும் தோழர் என் முகம் பார்த்து " முடியில" என்றபோது அவரது காது வழியாகவும் சிகரெட் புகை வந்தது.

5. நீ எப்பாச்சிம் இதை எழுது என தோழர் என்னிடம் சில சந்தர்ப்பங்களில் சிலவற்றை சொல்வார். இதை எழுதிக்கொண்டிருக்கையில் ஒன்று ஞாபகம் வருகிறது.
தோழரின் நண்பர் தலையில் உருமாலைக் கட்டு கட்டிக்கொண்டு பீடி கையில் புகைய தன் பசுமாட்டை ஓட்டிக்கொண்டு சென்றிருக்கிறார், " ஏங்க மாம்ஸ் மட்ட மத்தியானத்துல
மாட்டை இழுத்துட்டு போறீங்க..? என்று தோழர் வினவ " ஒன்னுமில்ல தோழர் மாட்டை பிங் பாக் பண்ண கூட்டிட்டு போறேன்" என்றிருக்கிறார்.( சினைக்கு காளையிடம் கூட்டிச்செல்வது) மற்றொரு நண்பர் தோழரிடம் புலம்பியது, :" என்ன நிம்மிதிய கலியாணம் பண்டி நானு கண்டேன் தோழர்.., இவளுங்கள பிங்பாங்க் திங்கட் கிழமை பண்ணனும்னா இந்த வாரம் திங்கக்கெழமைல இருந்து நைசு பண்ட வேண்டி இருக்குது என்னா ஒரு கேவலப் பொழப்பு பாருங்க " .

6. கடைசியான சந்திப்புகளில் , " மொகுடு முட்டீட்டுது , மொகுடி முட்டீட்டுது கெளம்பித்தான் ஆவோனுமாட்ட இருக்குது பொழப்பத் தேடி. " அப்படின்னு சொல்லிக்கொண்டேயிருந்தார்.
( கடன் எச்சாயிட்டுது)

7. டீ சாப்பிடும் போதெல்லாம் வறுக்கு ஒன்னு இருந்தா கொறிச்சுட்டே குடிக்கலாம் எனக்கூறி விட்டு என்னைப்பார்த்து சிரிப்பவர். வறுக்கிப்பிரியர், தோழருடன் பியர் அருந்தும் போது
அவர் கூறுவது இன்னம் காதில் ஒலிக்கிறது. " எட்டு வருசத்துக்கு முன்னால உங்க அப்பன் செத்தப்ப மறு வாரமே இன்னொரு எழவுக்கு உன் ஊடு வரனும்னுதான் நண்பர்கள் பேசினோம்.
நோவுல நீயும் போயிடுவே அப்படின்னு.., கடவுளு கெட்டிக்காரரு , உன்னைய பொழக்க வெச்சி பீரு குடிக்கவாவது உட்டு வெச்சிருக்காரு".

8. " மணல் கடிகை" ன்னு ஒரு புத்தகம் திருப்பூரை சுத்தி எழுதப்பட்டிருக்கு அப்புடின்னியே குடுத்திருந்தா படிச்சிருப்பன்ல . " என்ற தோழருக்கு " படிக்க கொடுத்தவரு அவசரம்னு வாங்கிட்டாரு அதுல திருப்பூரை பத்தி நாம புதுசா தெரிஞ்சிக்கிற அளவுக்கு ஒன்னுமில்ல தோழர் என்றேன். " இல்ல சொன்னியேன்னு கேட்டேன்" என்றவருக்கு கொடுத்திருந்தால் ஏடாகூடமாய் நடந்திருக்க வாய்ப்பு இருந்ததை சொல்லவில்லை, கடைசியா அவர் படித்த நாவல் இலக்குமி குமரனின் " அக ஒட்டு" , மோசமில்லை என்று ஒரே வரியில் கூறி கொடுத்துச்சென்றார். ஜே ஜே சில குறிப்புகள் படித்தவர் அதில் அநுபந்தம் 2ல் ஜேஜேயின் புத்தகங்கள், கால்பந்தாட்டக்காரனின் நினைவுகள், சந்நியாசிகள், நூல் நிலையங்களின் ஜன்னல்கள் இதெல்லாம் வந்திடுச்சா? வந்திருந்தா குடேன் படிக்க என்றார்.

9. தோழர் மறைவுக்குப் பிறகு பதினைந்தாம் நாள் சடங்கில் கலந்துகொள்ள நான் சென்றிருந்த சமயம் அவரது துணைவியார் ஒரு துண்டுக்காகிததை கொண்டு வந்து என்னிடம் நீட்டினார். இந்த
நினைவுக்குறிப்பை எழுதும் இச்சமயத்தில் பத்திரப்படுத்தியிருந்த தாளை எடுத்து விரித்தேன், அவசரத்தில் அடித்து அடித்து எழுதிய கவிதை அது. எதை சொல்ல வர இதை எழுதினார் என்று தெரியவில்லை.

தோழரின் வெளி வராத இந்தக் கவிதையை நீங்களும் பாருங்களேன். எப்போதும் வந்து போகும் சின்னான் என்று தலைப்பிட்டிருக்கிறார் தோழர்.

சின்னான் தளவாய்பாளையத்துக்காரன்
எல்லா வீடுகளுக்கும் சென்று போய் வருவான்
இட்ட பணி அனைத்தும் முகம் சுணங்காமல்
செய்பவனுக்கு, அடுத்த வீட்டு சமாச்சாரங்களை
அடுத்தடுத்த வீடுகளுக்கு பறப்பி விடத்தெரியாது.
முசை பிடித்த நாயொன்றின் கடிபட்டு
தொப்புள் சுற்றி ஊசி போட்டவன்
ஒரு மாத இடைவேளைக்குப் பின் எனைக்
காண வந்தவன், முட்டுச்சேலை உள்ளதா
துவைத்துப் போட்டுப் போகிறேன் என்று !
அப்படிப்பட்ட பணி எதையும் அவனுக்கு
நான் இதுவரை கொடுத்ததுமில்லை.
ஏதோ ஞாவத்தில் தவறாக கேட்டுவிட்டேன்
என்றவன் நாய்களை கொல்வது
எளிதான காரியம் என்றான்.
பூனையாகட்டும் முயலாகட்டும் கழுத்தை
கையில் பிடித்து இறுக்கினாலே போதுமானது
என்ன கால்களால் கொஞ்சம் பிறாண்டும் என்றான்,
நாய்களை மரத்தில் கட்டி வைத்து
குண்டாந்தடியில் மண்டையில் ஒரு போடு
போட்டால் போதும் மரித்துவிடும் என்றான்
ஏன் இந்த கொலை வெறி என்றேன்.
நாய்கள் நம்மை கடிப்பதும்
நாம் நாய்களை கொல்வதும் வழக்கமாக
நடப்பதுதானே என்றவன்
குடிக்க கொஞ்சம் தண்ணீர் கேட்டு
வாங்கி குடித்து, நாத்து நடும் வேலை
இருப்பதாய்க் கூறி விடைபெற்றான்.


(" தோழர் இறந்து விட்ட பின்பும் ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது" சிறுகதை உயிர் எழுத்து வெளியீடாக வந்திருக்கும் தவளைகள் குதிக்கும் வயிறு தொகுதிக்காக புதிதாக எழுதி சேர்க்கப்பட்டது.)

பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - வா.மு.கோமு - அறிமுகம்

வா.மு.கோமு - அறிமுகம்

வா.மு.கோமு என்கிற பெயரில் எழுதிவரும் வா.மு.கோமகன் ஈரோடு மாவட்டத்தில் விஜய மங்கலத்திற்கு அருகாமையிலிருக்கும் வாய்ப்பாடி என்கிற குக்கிராமத்தில் 1969ல் பிறந்தவர். 90களின் ஆரம்பத்தில் நடுகல் என்கிற சிற்றிதழை நடத்தியவர். தற்போது ராசமைந்தன் என்கிற புனைபெயரில் இறக்கை என்கிற இருமாத இதழை நடத்திவருகிறார். பல்வேறு சிற்றிதழ்களில் பல தரப்பட்ட சிறுகதைகளை 90களின் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை எழுதி வருகிறார். கடந்த ஆண்டு, அழுவாச்சி வருதுங்சாமி என்கிற சிறுகதை தொகுப்பும், உயிர்மை பதிப்பக வெளியீடாக மண்பூதம் என்கிற சிறுகதை தொகுப்பும் வெளிவந்து பரவலான கவனம் பெற்றது. கள்ளி இவருடைய முதல் நாவல், 2008-ல் அருக்காணிக்கு சொந்த ஊர் விஜயமங்கலம் அகரம் வெளியீடு.2008 ஜூன்ல் தவளைகள் குதிக்கும் வயிறு உயிர் எழுத்து வெளியிடு.

வர இருப்பவை

கூப்பிடுவது எமனாகவும் இருக்கலாம் ( நாவல்),
இறக்கை எங்கு வேண்டுமானாலும் பறக்கலாம் ( இதழ் தொகுதி)
மற்றும் கவிதை தொகுதி ஒன்று

பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - செந்தமிழ் மாரி - 2

மறுதலிப்பு
- செந்தமிழ் மாரி



கடலைக் குடிக்கும் தாபத்தோடு
காத்திருந்தது வானம்
சிரம் தாழ்ந்து
இதழ் தொடுகையில்
இடறும் நரன்களாகின
மீன்கள்
மீன்கள் இட்ட கண்ணீரே கடல் -
என நினைத்து
தம் இச்சையை
நீலவெளியில் அடைத்துக்கொள்கிறது வானம்!

பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - செந்தமிழ் மாரி - 1

கவிஞர் செந்தமிழ் மாரி - அறிமுகம்

கவிஞர் செந்தமிழ் மாரி விழுப்புரம் மாவட்டம் கீழ் எடையாளம் கிராமத்தைச் சேர்ந்தவர். எம். ஏ தமிழ் இலக்கியம் படித்திருக்கும் இவர் பனிக்குடம் இதழின் இணையாசிரியராக பணியாற்றி வருகிறார்.

வாழ்வின் வலிகள் ஏற்படுத்தும் காயங்களை கவிதைகளாக மாற்றுவதாகக்கூறும் இவர் தொடர்ச்சியாக அனைத்து சிற்றிதழ்களிலும் கவிதைகள், கட்டுரைகள் என இயங்கி வருபவர். இவரின் கவிதைத்தொகுப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.


சுவை கூடும் தேநீர்

முதன்முதலாக ஒரு
தேநீரைத் தயாரிப்பதற்கு
எத்தனை பிரயத்தனம்?
தீஞ்சுவைப் பாலின் அளவு சிறிதே மிஞ்சி
சுவையைக் குறைத்திடாமல்
மலைராணியின் மேனியில் துளிர்த்து
துகளாகி வந்தவளை
மென்கசப்போடு நிற்கவைத்து
கனிச்சாற்றில் விளைந்த
இனிப்பானின் அளவை
திகட்டிடாமல் இருக்கச் செய்து
மென்பூவின் இதழொன்றை
படிமங்களாகப் பிரித்த
ஆடை விரவிப் பரவிடாமல்...
ஒருவாறு பழகுதலில் சமாளித்து
உன் கைத்தாங்கும் பதமறிந்து
சீராக ஆற்றி
கைகளில் தந்து
நிலைகொள்ளும் மனம்.
நீ சாவகாசமாய் அமர்ந்து
துளித்துளியாய் ரசித்து
உறிஞ்சுகையில்
மிதமாய் நிறைகிறது
உள்ளெங்கும்
பருகி முடித்து
வாய் துடைத்து செல்லும் நீ
வேறு எங்கெங்கோ
வகைவகையாய்த் தேடி
பருகிப் பார்த்து
அளவோடு கலக்கப்பட்டு
பருகிய முதல் தேநீர் நாவில் நிற்க
மீண்டு வருகிறாய்
இல்லம் நோக்கி
நானும் தயாரிக்கத்தான் யத்தனமாகிறேன்.

பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - மு. ஹரிகிருஷ்ணன்

மு.ஹரிகிருஷ்ணன் - அறிமுகம்

மின்னஞ்சல் முகவரி : manalveedu@gmail.com

ஹரி கிருஷ்ணன், சேலம் மாவட்டம், ஏர்வாடியைச்சேர்ந்தவர்.

மயில் ராவணன் சிறுகதைத்தொகுப்பின் ஆசிரியர், சிறந்த சிறுகதையாளர், இறக்கை சிற்றிதழின் இணையாசிரியராக பணியாற்றியவர், மணல் வீடு சிற்றிதழின் ஆசிரியர், கூத்துக்கலைக்காக , கூத்துக்கலைஞர்களுக்கான உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரலெழுப்பி வருபவர்.


நாயி வாயிச்சீல
- மு.ஹரி கிருஷ்ணன்

(அகாலமாக மரணத்தை தழுவிய அபிராமிக்கு இந்தக் கதை சமர்ப்பணம்)

தெரட்டி* முடிஞ்சதும் பொறப்படலாம்னா எங்க முடியிது? சொணையான* இன்னுமே வரிக்கல*. மணி பதனொன்னாவுதோ ! பன்னண்டாவுதோ தெரில. ஆட்டத்துக்கும் போயிக்கிட்டு அலங்காரத்துக்கும் போறதுன்னா சாமானியமா? கயிட்டத்தப்பாத்தா காச கண்ல காங்கிறத்தெப்பிடி? நாமக் கைத்தொட்ட காரியமாறதெப்பிடி?


எரநூறு வருதோ முன்னூறு வருதோ நாயனக்காரன இருந்து வாங்கியாடான்னு நாம்ப நம்ம தொந்தரவுக்கு போயிரலாந்தான். ஆனா இண்டம் புடிச்சவன் அதக்கொண்டி எங்கியாச்சும் கூத* கீதப்போட்டுக்கிட்டு வந்திட்டான்னா ஒரே ஒத்தப்பைசாவ திலுப்பி வாங்க முடியாது.


பொட்டைங்கன்னு* அவனுக்கு மட்டுமில்ல, இந்த வையகச்சனம் முச்சூட்டுமே எளக்காரந்தான்.பெறத்தியார ஏஞ்சொல்லனும்? பெத்தவெளே நம்ம தலமேல கொலாய வச்சித்தேக்கிறா. அபிராமி புள்ள இருந்தவரிக்கும் ஓரேடத்துக்குப் போவ வர பேசப்புடிக்க பக்கத்தொணையாயிருந்தா அவளத்தான் அனாமுத்தா மண்ணுக்கு வாரிக்கொடுத்திட்டமே.


பொம்பளயா பொறக்க வேண்டியவ ஆம்பிளயா பொறந்த அவ அடைஞ்ச சிறும கொஞ்சமா? நஞ்சமா?பொன்ன உருக்கி பூமில வாத்தாப்பிடி , தங்கத்தை உருக்கி தரையில வாத்தாப்பிடி! தகதகன்னு ஆளும் அவ அழவும் பிள்ளய பாத்தா கண்லு பசியாறும். பாதியில போறதுக்குதாம் பாவிமுண்ட அப்பிடியிருந்தாளோ என்னம்மோ!


சாவுற வயசா சண்டாளிக்கி?


ஆடிக்காத்துல பூளப்பூவு பறக்குமே அப்பிடி ஓடி ஓடிச் சம்பாரிச்ச சொத்தும் அவளக்காப்பாத்துல , பிருசனே இவந்தான்னு நம்பி பூசப்போட்டு கும்பிட்டுக்கிட்டிருந்தாளே தேவூரு கவுண்டம் மவன்! அவனும் அவளக் காப்பாத்தல. ஒக்கிலிப்பட்டி சாமியாருக்கிட்டதான்* நானும் அவளும் கூத்துப் படிச்சம். கூத்துப்படிச்சமில்ல அதுக்கு மிந்தியே அபிராமி தாயம்மாளிண்ட* கைப்போட்டு* பச்சச்சீலக்கட்டி போத்திராசி* மாதாளுக்குப் பாலுக்கொடம் எடுத்துப்பிட்டு வந்திட்டா.


பாலுக்கொடம் எடுத்தாளில்ல, அந்த ஒரு மண்டலமும் நாப்பத்தியெட்டு நாளும் அவப்பட்ட வாதயச் சொன்னா கல்லுங்கரையும் , மண்ணும் உருகும்.


அப்பன், ஆயா, பெத்து, பொறப்பு அத்தனப் பேத்துக்கும் விரோதமாகி, அடிப்பட்டு,துணிப்பொறுக்கி, அனாதியாட்டம் ஊட்டவுட்டு பம்பாயிக்கி ஓடி, பூக்கார ஆயா சாமாத்துல * சேந்து, பைட்டேண்டுக்கு பைட்டேண்டு, வீதிக்கு வீதி , சந்துக்கு சந்து,அல்லெடுத்து அங்கேயிருக்கிற பொட்டைங்களுக்கு அல்லாம் ஒரு வருசம், ஆறு மாசம் ராத்திரிப் பகலா ஊழியஞ் செஞ்சா.


ஊழியஞ்செஞ்சவளுக்கு கைப்போட்டுத் துப்பரவு பண்டறமின்னுச் சொன்னவிங்க பேச்சு சுத்தமா இருக்கனுமா வேண்டாமா?


இன்னைக்கி, நாளக்கின்னு சாக்குப்போக்கு சொல்றாங்களே தவிர ஒவ்வொரு தாயம்மாக்கூட இவளுக்கு கைபோடற மாதரயில்ல. வாக்கியங்கெட்ட கழுதைங்களப் போக்குல வுட்டுப் புடிக்கிலாமுன்னு இவளிருக்க, மறுபடியொமொரு மூணுமாசம் இழுத்தடிச்சி, அதும் பொறவு வடக்க வேண்டாந் தெக்க போலாமின்னு கூட்டிக்கிட்டு வந்தவிங்க ஒரு மாசஞ் சும்மாவே குந்த வெச்சிருந்தாங்க.


குந்த வெச்சிருக்கும்பிடி இவ பொறுக்க மாண்டாம,


கோத்தியாவே* திரிய இன்னும்மேயெனக்கு விதியா? முடியுமின்னா முடியுமின்னுச் சொல்லுங்க. இல்ல முடியிலியா பம்பாயிக்கு தாட்டி விடுங்க வழுது சாமத்த அண்டி எனக்கானத நானேப் பாத்திக்கறேன்னு கேக்க, கேட்டவளுக்கு "ஊக்கியில குத்தி இடுக்கியில முள்ளு எடுக்கிற சங்கதியா இது? கைப்போட்டு பொம்பளயாறதுன்னு உனக்கு அவ்ள ரேசா? அதுக்கெல்லாஞ் செட்யானப்படிக்கி தெகிரியம் வேணும் , நீ செத்த பொறுமையா இருடி தாயி"ன்னு தேறுதல சொல்லி ஆத்தூருக்கு கூட்டிப்போயி அங்கியுமொரு அஞ்சாறு நாளாட்டம் வெச்சிருந்தாங்க. ஆறாம் நாளு நெறஞ்ச வெள்ளிக்கிழம அன்னக்கி அந்தியோட ஆயாமாருங்க* சேலாமாருங்க* எல்லாரும் ஒரேத்துருவா கடவீதிக்குப் போனாங்க.


போனவிங்க இன்னதுதானில்ல இஷ்டப்பட்ட திம்பண்டத்த நீயி திங்கிறமுட்டும் தின்னுடின்னு அபிராமிக்கு வாங்கி கொடுத்துத் திங்கடிச்சாங்க.


திங்கடிச்சிப்புட்டு அன்ன ராவு மொதாட்டஞ் சினிமாவுக்கும் கூப்பிட்டுப் போனாங்க. போயிட்டு வந்து , கண்ணாறத் தூங்கு மவளே ! இன்னைக்கு விடியறதுக்குள்ள உனுக்கு உறுதியா கைப்பொடறமின்னுச் சொன்னாங்க.சொன்னவங்க சொன்ன மாதிரி ரெண்டு மணி சுமாருக்கு இவளையெழுப்பிச் சுத்தப்பத்தம் பண்டி, சுனிக்கு சரட்லச்சுருக்கு வெச்சி, அதைச்சுத்தியும் வெள்ளத்துணி சுத்தி சுத்திவுட்டாங்க. சுத்திவுட்டவுங்க அதும்பொற வொரோ அரச்சணங்க் கூட தூங்கவேப்படாதுன்னு இவுளுக்குக் காவலிருந்தாங்க.


விடிகாலம் நாலு மணிக்கெல்லாம் பாத்துக்க, ச்சும்மா தட புடலா மாதாளுக்கு முப்பூசயாவுது. பூச ஆவதுக்குள்ளேயே சாமிக்கு மின்ன நெறம்மணம்மா இவள நிக்க வச்சாங்க.
நிக்க வெச்சதும் அந்தல்ல யிந்தல்ல திமறதுக்கில்லாம கையிரண்டையும் பிந்தாயம்மா* இறுக்கிப் புடிச்சிக்கிட்டா. அவ இறுக்கிப்புடிச்சதும் தலமசுத்த சுருட்டி வாயில துருத்தி, மனசார மாதாவ வருந்தடியம்மான்னுப்புட்டு , 'மாதா, மாதான்னு இவ வருந்த, வருந்த , கண்ணமூடி முழிக்கிறதுக்குள்ள மானியப்புடிச்சி பறக்குன்னு அறுத்துப்புட்டா இன்னொரு தாயம்மா. அப்பிடி அறுத்ததும் அடேயேங் கொண்டாலா! காலடியில உதிரம்போவுது தானா காவேரி ஆறாட்டம்.
செவுத்தச் சாத்தி ஒக்காரவெச்சி உதரத்த வழிச்சி, வழிச்சி இவ உச்சந்தல மொதக்கொண்டு உள்ளங்காலு ஒருக்கோடியா சொதம்பப் பூசிவுட்டா தாயம்மா.


தாயம்மா பூசப்பூச தம்பட ரத்தத்த தானே காங்கும் பிடி அபிராமி அடி அம்மான்னு மயக்கம் போட்டுட்டா. மயக்கம் போட்டவள கன்னங்கன்னமா அப்பி , அம்மான்னு சொல்லாதடி மாதான்னு சொல்லுடின்னா, அவ எருப்பு தாழமாண்டாம எரியிதே! எரியுதேன்னு தன்னப்பால பெணாத்தறா. தன்னப்பால பெணாத்தும்பிடி அந்த தாயம்மா நல்லெண்ணய கொதிக்கக் கொதிக்கக் காய வச்சி கைப்பொறுக்க கொண்டாந்து அந்த பச்சப்புண்ணு வாப்பாட்டச்சுத்தியும் பலாசனா ஊத்தியுட்டா.


ஊத்த ஊத்த வாட்டமா காட்டிக்கிட்டிருந்தவ ஒருச்சித்தய கழிச்சி ச்சுறு ச்சுறுன்னு நோவு திலும்பும்படி அந்நேரம் அய்யய்யோ எங்கடவுளேயேன்னு அந்த பிள்ள ஒரு கத்துதாங் கத்தினாப்பாரு ! கடகால் மட்டத்துலேயிருந்து அந்த கட்டடமே கிடுகிடுன்னு நடுங்குது!
அருவாளோ, கொடுவாளோ தப்பத்தவற நம்ப மேலுலப்பட்டு அதாலவொரு காயமாயிப் போச்சின்னா அதுக்கு எத்தன ஊசிப்போடறம்?எவ்ள மாத்தரத் திங்கறம்? கப்புப்போட்டு* சோக்கேத்தி* ஆத்துக்குப்போயி, தீர்த்தம் எடுத்தாந்து ஆலாத்திச்சுத்தி, மாதா மொகம் பாத்த பிற்பாடும் , ஆறாத ரணத்துக்கொரு மருந்துமில்ல மாயமுமில்ல.


வலின்னு வாயத்தொறந்துப் புட்டா, மோரியிலக்* குந்த வெச்சி ஒலத்தண்ணிய மூட்டு மூட்டு காவு* மேல அடிச்சி வுடறதோடச்சேரி! அத மீறனா வெத்தலயில நல்லெண்ணயத் தடவிப்பத்து போடறதோடச் சேரி!


ஓடம்போக்காக் கூடப்போயி பக்கதிலேயிருந்து இந்த பாதரவு எல்லாத்தையும் பாத்திக்கிட்டிருந்த எனக்கு, கைப்போட்டா , தாயம்மாக்கிட்டதான் கைப்போட்டுக்கினுமின்னுருந்த வைராக்கியம் எங்கப்போச்சின்னே தெரில.


அத இன்னக்கி நெனச்சாலும் கை காலு தொவண்டு, கிறுகிறுப்பு பதபதன்னு வந்திரும், காலோட தொறத் தொறன்னு மல்லும் முட்டிக்கும். அந்த பயத்திலியே நாங்கையும் போட்டுக்கல, கிய்யும் போட்டுக்கல. சொல்லப்புடிக்காம அபிராமிக்கு மின்ன திருட்டு வண்டியேறி ஊருக்கு வந்திட்டன்.
உதரக்கட்டு நிக்காம , காஞ்சப்புண்ணு பாதி , காயாத புண்ணு பாதின்னு அப்பிடியே கோமணத்து மேல கோமணங்கட்டி, கட கடயாப் பிச்சையெடுத்து, குருவுக்குப் பட்ட கடங்கட்டிப்புட்டு தாயிப்புள்ளயோட வந்து அவளும் எடஞ்சேந்தா. மரத்த வெட்டி ஆராச்சிம் மாருமேல சாச்சிப்பாங்களா? எதுக்குயிந்த சித்ரவத? எதனாலிந்த கந்தர கோலம்னு கேக்கிற சனத்துக்கு வதிலுஞ்சொல்ல முடில. ஆதியில பகவாம் படச்சபண்டம் அப்பிடியே இருந்து தொலையட்டுமின்னு இருந்தாலும் மூக்கு மேல பீயப்பினாப்போல இந்த அருகருப்ப வெச்சிக்கிட்டு திரிய முடியல.


பவானி குட்டமுனியப்பங் கோயிலுதான் நாம் பொறந்த ஊரு. யெங்கப்பம் பழனிச்சக்கிலிக்கிம், ங்காயா பச்சாயா சக்கிலிக்கிச்சிக்கும் நாம் பொறந்தது ஒரேப்பையன். எனக்கொரு பொறந்தவ , அவ பேரு அழிஞ்சிகண்ணி. பொறக்கும்போது உருப்படியாதாம் பொறந்தன், பத்து வயசாச்சோ இல்லியோ இந்தப்பித்து பிடிச்சிட்டிது.


கண்ணுக்கு மையெழுதி , மண்டயில பூவ சொருவி, கவுனு மாட்டி, கண்ணாடி மின்ன ஆட்டம் போட்டு, ஊட்ல பொம்பளச்சட்டியின்னு பேரடுத்து ஊருல பேரெடுத்து, கூலிநாலிக்கு போற எடத்திலேயும் பேரெடுத்து, கரும்பு வெட்டப்போனத்தாவுல காட்டுக்காரன் கையக்கால கட்டிப்போட்டு , கடவாயிக்கி கல்லையும் , நடுவாயிக்கி புழுலுயும் வெக்க, பத்துபேரு அதப்பாத்து சிரிச்சாங்களே அன்னிக்கி ங்கெக்கா பாவடயோட ஓடி பூதப்பாடி கல்பனா ஆயா* காலடியில விழுந்தவதான், திலும்பி வூட்டுக்குப்போகவேயில்ல. வவுத்துக்கு திங்கிற சோத்துக்கும், இடுப்புக்கு கட்ற துணிக்கும் வஞ்சன வெக்காம வளத்தனா ங்காயதான் எனக்கு பேரு வச்சா! மூக்கு குத்தியுட்டு 'தொளசி' ன்னு அவதான் பேரு வச்சா. தந்தாவும் * வேண்டாண்டி ஒரு கிந்தாவும் வேண்டாண்டி! அலேய் ஆதமுத்து முண்டைங்களா உருவா சம்பாரிக்கலாமின்னு பத்துப்பேரோட படுத்து நோவு கீவு வாங்கிட்டம்னா அந்த வெனய எங்கக்கொண்டுப் போயி தீக்கிறது?


ஆடுமாடுகளுக்குக்கூட ஆசுபத்திரி இருக்கிது, நாயிம் தம்புண்ணத்தானே நக்கி ஆத்திக்கிது.அதோட கேவலண்டி நம்ப பொழப்பு. கண்ணக்கெடுத்தாலுங்கோல குடுத்தாங்கிறப்பிடி மாதா நம்புளுக்கு ஒழச்சிப்பொழைக்க மாளாத தெம்பு குடுத்துக்கிறா. வாங்கடி கைய ஊனி கரணம் போடலாமின்னு அம்பது , நூறு பொட்டைங்கள ஒண்ணாச்சேத்திக்கிட்டுப் போயி கலைக்கிட்டருக்கிட்ட


"சாரு, சாரு இந்த மாதர , இந்த மாதர நாங்க சொந்தமா பாடுப்பட்டு தின்னுக்கிறம், எங்களுக்கு எதுனா ரோனு* கீனு ஏப்பாடு பண்டி விடுங்கன்னு" பிட்டிசனு எழுதிக்குடுத்தா, அவிங்க என்னங்கறாங்க.., ஊடு வாச இருக்குதா? உங்க பேருல சொத்துப் பத்து இருக்குதா? சர்க்காரு வேங்குல ரொக்கம் ரோஜனம், கணக்கு வழக்கு இருக்குதாங்கறாங்க.


உங்க சோறு இல்ல, ஒதுங்கவொரு நெவுலடி பாத்தியம் இல்ல, எங்ககிட்ட எதுவுமேயில்ல அத்தாந்தரமா* நிக்கறம். எதோ நீங்க பாத்துவொரு ஒத்தாசப் பண்டுங்கன்னு கெஞ்சினா, அட்ரசீ இல்லாதவங்களுக்கு ரோனு குடுக்க சட்டத்துல எடமில்லங்கறானுங்கவொரு தலயெடுப்பா.., போங்கடா எம்பட்டைங்களான்னு * திலும்பி வந்திட்டோம்.


ஆளாளுக்கு ஒரு தொழுவாடு கத்துக்கடிங்கன்னு ஆயா சாமியாருக்கிட்ட கூத்துப்படிக்க கைகாட்டியுட்டா. சும்மா எப்பிடி சொல்றது சாமியாரப்பன் வெட்டு வெடுக்குன்னு ஒரு வார்த்தப்பேசினதில்ல. பெத்தப்புள்ளங்களுக்கு மேல ஆச அம்பா வெச்சிருந்து அக்குசா தொழில கத்துக்குடுத்தாரு.


அபிராமி கண்ணாலந்தான்* மொதல்ல படிச்சம். அப்பதான் இவளுக்கு அபிராமின்னு பேரு வெளங்கனது.


செரியான வுனுப்புக்காரி , எதச்சொன்னாலும் புடிச்சாலும் கப்பூரமாட்டும், ஆட்டம் அப்பிடித்தான். பாட்டும் அப்பிடித்தான். என்னாவொண்ணு சாரீரம் மட்லுங்கொஞ்சங் கட்ட சாரீரம். நெட்டையோ , குட்டையோ சாமியாரு செட்டுக்கு, மொகாம , மெயினு வேசக்காரி இவதாங்கிறாப்பிடி ஆயிட்டா.


சரி சரீங்கறாப்பல தொழிலுஞ் செஞ்சா. நாத்து வெளஞ்சி பயிராவறதுக்குள்ள மத்தளக்காரம் பூமுடியூர் ராசி அவள குத்துவதோட்டம் ஓட்டறதுக்கு ஆரம்பிச்சிக்கிட்டான். வூடு வாச அண்டாம, செலவுக்கு அஞ்சிப்பத்து வரும்பிடிய குடுக்காம ஓராம்பள கண்டயெடம் மேஞ்சிக்கிட்டிருந்தா பொட்டப்பொம்பள பிள்ளைங்க குட்டிகள வெச்சிக்கிட்டு என்னாப் பண்டுவா? ஒண்டி ஒரியா அவளால சம்சாரத்த சுதாரிக்க முடியுமா? செட்டாளுங்க ஆளாளுக்கு கூடி கூடி நாயம்பேசி குசலஞ்சொல்லி அவளுக்கு உடுக்கயடிக்க.


"உன்னையொரு பெரிய மனுசன் , வாத்தியாருன்னு நம்பி செட்டு மத்தாளத்துக்கு வுட்டா, எம்பிருசனுக்கும் அந்தப்பொட்டையனுக்கும் வெளக்கு புடிச்சி, என்ற வேரப்பறிச்சி,வெந்தண்ணி வாக்கிற , பரவால்லடா மாப்ளே உன்ற பண்ணாட்டுன்னு" ராசுப்பொண்டாட்டி வந்து பேயாடிப்புட்டு போனா.


அல்லாருக்கும் எட்டெழுத்து, நம்புளுக்கு பத்தெழுத்துலே அலே பறமுண்ட! என்னா பாவம் பண்டினமோ ஆணுக்காவாம், பொண்ணுக்கும் ஆவாம, இந்த மானங்கெட்ட பொறப்பெடுத்து, போற வாரப்பக்கமெல்லாஞ் சின்னப்பட்டு சீரழியுறோம். ஒருக்குத்தமும் பண்டாதமின்னியே நம்பள தேவியாப்பட்டங்கட்டி பல்லுமேல நாக்குப்போட்டு மந்தைங்க பலவெதமாப் பேசுதுங்க. எச்செலைக்கி வீங்கறப்பொழப்ப இன்னையோட தல முழுவிடி ஆயான்னு உள்ள நாயத்த நானு எடுத்துச் சொல்ல , வாத்தியாரும் ரெண்டு நல்ல பித்தி சொன்னாரு.


சரீன்னு அபிராமியும் கம்மின்னிருந்தா ராசு வழிக்கிப் போகாம , ஆடி நோம்பிக்கிக் கூத்தாட தேவுரு செட்டிப்பட்டிக்கி போனாம்பாரு அங்கவொரு எத்துக்காரவன் வந்துச் சேந்தான் அவளுக்கு எமனா.


களரிக்கூட்டுமிந்தியே வந்தவம்பா! விடிய விடிய சுத்தி விடிஞ்சும் அபிராமிய வுட்டு அந்தல்ல நவுரல. இவ என்றான்ன அவஞ்சொல்ற பாட்ட பாடுறா, அந்த பாட்டுக்கு பதினஞ்சி சீல மாத்றா ச்சும்மா பறந்து பறந்து ஆடுறாப்பா. அந்த திருவாத்தான் ஆளுமேல ஆளவுட்டு இவளுக்கு நோட்டு நோட்டு பின்னுக்குத்தறாஞ் சலிக்காம, எப்பிடியும் அன்னைக்கி அனாமுத்தா சேந்தது உரூவா ஏழ்நூத்தம்பதுக்கு மேலியே இருக்கும்.


அலங்காரம் முடிஞ்சிதும் எங்கடா பிள்ளயின்னு தொழாவுனா ரெண்டுபேரும் எவத்தயிருக்காங்கன்னு ஒன்னுந்துப்பே இல்ல. அப்பறம் பாத்துக்க எந்த பிருசம் பொண்டாட்டி அந்த மாதர ஒத்துமையா இருப்பாங்க ! அவிங்க திங்கிறதும் ஒரே வட்டிலு , படுக்கிறதும் ஒரே கட்டிலு.., ஒண்ணும் மண்ணா பொழங்கிட்டிருந்தாங்க! நாளாவ ஆவ இந்தப்பிள்ளக்கி சுத்தமா நெப்புக்கெட்டுக்கிடுச்சி. மாப்ள பெரும கண்ண மூடிக்கிம்பிடி அஞ்சாறு அலங்காரத்துக்கு ஆளு வரல, கூத்து படு பாணி*


சாமியாரு கூப்புட்டு கண்டாற,கழுத,ங்கோயா, ங்கொம்மான்னு ரவுசுப்பண்டும் பிடி மாப்ளக்காரனுக்கு ச்செட்யான ரோசம் வந்துட்டது.


அவனப்பத்தி அனாவசியம்! அவனென்ன உன்ன அடிப்புடிங்கிறது? நானாச்சி வா உனக்கு தனியா செட்டுக் கட்டித்தாரமின்னு. ஒரே ரெண்டு நாளயில ஆளுங்களுக்கு மூவாயிரம் நாலாயிரம் மிம்பணங்கொடுத்து சாமியாரு செட்டக்கலச்சி தனிச்செட்டு கட்டிக்குடுத்துட்டான்.
இந்த ஆடுகாலிப் போனவ, குருவுக்கிட்டவொரு வார்த்தச் சொல்லிப்புட்டு நல்ல வாக்குசம் வாங்கிட்டுப் போவப்புடாதா? போடா பிலாக்கப்பையான்னு போவக்குள்ள சாமியாரு குடுத்து வச்சிருந்த பொதுப்பணம் நாப்பதாயிரத்தையும் வாயிலப் போட்டுக்கிட்டுப் போயிட்டா. ஒரு கூத்தன்னைக்கி இந்த மனுசன் தண்ணிதாசனூர் அம்மங்கோயிலண்ட நின்னு,
" அடியே குருத்துரோகி ! எண்ணி வொரேவொரு வருசத்துக்குள்ள என்ற கும்பி பத்தறாப்பல பத்தியெரிஞ்சி போயிருவடின்னு" மண்ணவாரி வாரி தூத்தவாச்சொல்லுப் பலிச்சிட்டுது. அந்த ஆளிட்ட சாபனையோ! அடி நாளு தீவனையோ கவுண்டம்மவங்க கூட சோடிப் போட்டுக்கிட்டு அங்கயிங்க சுத்தி ஆட்டம் போட்டது பத்தாதுன்னு இந்த கடகெட்ட மூளி அவனக்கூட்டிக்கிட்டு வூட்டுக்கேப் போயி கும்மாளம் போடறதா?


அவிங்கம்மாக்காரி பாக்கிறவரிக்கும் பாத்துட்டு, 'எங்கித்தி பாமனையோ என்னு வவுத்துல வந்து பொறந்து இப்பிடி ஈனப்பானமில்லாம திரியற! நீதாம் புளுத்துச் சாவற! எங்கியாச்சும் கண்ணுக்கு மறப்பாப்போயி சாவு! இங்கேண்டி வூட்ட கந்தறப் பண்டற? கூடப்பொறந்த பொறப்பு ஒரு வயசிப்பிள்ள இருக்கற வூட்ல இந்த மாதர அக்குறும்புல அழியறீங்களே நல்லாயிருப்பீங்களா?நாசமுத்து வேசமாரி போவிங்களான்னு ச்சும்மா வுட்டு வணக்கு வணக்குன்னு வணக்கி , கடதாம்பு கட்டும்பிடி கவுண்டம் மவன் போக்குவரத்து அறுதியா நிறுத்திக்கிட்டான். இவ மாப்ள வந்து பாக்கறதல்லையின்னு அலைமோதி கெட்டலைஞ்சி சோறுதண்ணி கூட குடிக்காம கூத்துக்கு போறது, வந்து கூதப்போட்டுக்கிட்டு படுத்துக்கறது. பங்கினி மாசம் ச்செட்யானப்படிக்கி சீசனு! வருசக் கூத்தா வருது! வர்ற கூத்த வாண்டாங்கலாங்கமா?


போற இடத்திலேயெ தங்குமடம், போட்டுக் கூத்தாடிக்கிட்டு தப்படியா வூட்டுக்கு வந்து போயிக்கிட்டிருந்தா.


அந்தப் பிரகாரம் பூலாம்பட்டி சித்தூருல நோம்பிக்கூத்து வொண்ணு தானாவதி* மழைக்கி நிக்கிம்படி வூட்டுக்கு போகவலாம்னு வந்தவ நட்ட நடு தாவாரத்திலியே மாப்ளக்காரனும் அவ அம்மாக்காரியுங் கொண்டி மாட்டிக்கிட்டு கெடக்கறதப் பாத்துருக்கறா.


அப்பிடியே அங்கம் பதற, அடி வவுறுக்காந்த ச்சட்டங்குன்ன , ச்சரிகலம் பதற நடுநடுங்க நின்னவ , " அடியே உத்தமபத்தினி எனக்கு பித்திச் சொன்னியே இப்ப நீயேண்டி அவுசேரிப் போன" ன்னு ஒரேயொரு வார்த்தயின்னாலும் நாண்டுக்கிட்டுச் சாவும்பிடி கேட்டுப்புட்டு, கடகடன்னு கண்ணுத்தண்ணிய வுட்டுப்புட்டு அந்தாண்ட வந்துட்டா.


அவ்வளதான் மக்யாவது வாரமெல்லாம் பன்னிக்கறிய வறுத்து அதல பாசானத்த கலந்துக் குடுத்து அபிராமிய கொன்னுப்புட்டா அவிங்கம்மாக்காரி.


நெருப்பூரு நாவமரைக்கி சீருக்குப் போயிட்டு தகோலு தெரிஞ்சி வரதுக்குள்ள எடுத்துக்கொண்டி எரிச்சுப்புட்டாங்க, எளம்பிள்ளி கூடுகாட்ல மவ மூஞ்சியப்பாக்க கூட ரொணமில்ல . ஆவுசந் தாங்காம குழிமேட்டுக்குப் போயி சாம்பல நவ்வாலு வாயி அள்ளித் தின்னுப்புட்டு வந்தம்.
நாங்க ஆருக்கு என்னா தீம்புச் செஞ்சம்?


தாயப் பழிச்சமா? தண்ணியத் தடுத்தமா? ஏழய அடிச்சமா? எளஞ்சாதம் உண்டமா? எனத்துக்கிந்த ஆண்டவனுக்கு எங்கமேல இத்தன கூரியம்? கூனுக்குருடு , மொண்டி , மொடம், இப்பிடி ஒடம்புலவொரு ஒச்சமின்னாக்கூட மயிராச்சி, அதப்பத்தி காரியமில்ல. பாழாப்போன பொறப்புல கோளாறுபண்டி வேடிக்கப் பாக்குதேயந்த நொள்ளக்கண்ணு சாமி !


அபிராமிபுள்ளய நெனச்சிட்டம்னா அன்ன பொழுதுக்கும் அன்னந்தண்ணி ஆகாரம் எதுவுமே உள்ற எறங்காது. நாம்ப அழுதகண்ணுஞ் சிந்தன மூக்குமாயிருந்தா மாண்டவிங்க பொழைக்கப் போறாங்களா? மறிச்சி மண்ணவுட்டு மேல வரப்போறாங்களா ? இல்ல அன்னைகியெழுதன எழுத்த பிரம்மன் அழிச்சி எழுதப்போறானா?


உச்சியத்தாண்டி ஒருமாறுப் பொழுதாச்சி சம்பளம் பிரிக்க. செங்கமா முனியப்பங் கோயில்ல எறங்கி பொடு பொடுன்னு வூட்டுக்கு போயி, துணிமணிய அலசிப்போட்டுட்டு ஒருவாச்சோத்த குடிச்சதும் களப்பாயிருக்குதேன்னு செத்த படுத்தம்பாரு , எந்திரிக்கும் போது மணி ஏழு!
எஸ்.டூ.எ பஸ்சு சங்கிரி வந்துட்டு திலும்பி பவானி போயிரிச்சு. அதும்பொறவு ஆதியா பாதியா கெளம்பி அம்மாபேட்ட வாரதுக்குள்ள மணி ஒம்போதர, அலங்கார கறவதானுங்க* ஒருத்தங்கூட வூட்ல இல்ல. எட்டு மணி முட்டும் பாத்துட்டு மினி வண்டி பேசி எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்களாம். வூடு வூடா அவிங்களத் தொழாவிப் புட்டு வரதுக்குள்ள பத்துமணி கடைசி பஸ்சும் போயிட்டுது.


பக்கமாயிருந்தாலுந் தேவல. நாகனூரு வாத்தியாரூட்டு கூத்து. மெயினு ரோட்லேயிருந்து பழையூரு. முழியனூரு மேல நடந்துப்போனா ஏழு மைலுக்கும் மேல சேரும். எந்நேரம் போறது? நேரங்காலமா வந்திருந்தா எதாவொரு வண்டி கிண்டி புடிச்சிப்போயிருக்கலாம். அத்துவானத்துல* வந்து மாட்டிக்கிட்டமே என்னாப் பண்டறது?


செட்ல சாரி வேசமே* இல்ல. அந்த சிறுத்த கண்ணஞ் சேவுருப்பையன் இப்பதான் புதுப்பழக்கம், சந்து அடைக்கத் தானாவும் , பெருங்கொண்ட ஆக்கிட்டு கட்டிச்செலுத்த மாண்டான்.
மிந்தியாச்சும் சுப்ரமணி இருந்தாப்ல,பொண்ணு வேசத்துக்கு பஞ்சமில்ல. போனப்பூட்டிலேயே ஆளு அலங்காரத்துக்கு வரல. அவரென்ணாப் பண்டுவாரு? பத்திருவது வருசமா செட்டுக்கு அவரு பட்ட பாடு அந்த பஞ்சும் பட்டிருக்காது. அப்பிடி ஒழைச்ச ஒழப்புக்கு கைமேல கண்ட பலனா இன்னிக்கி ஒவித்திரியப்பட்டிக்கிட்டுக் கெடக்கறாரு.


குஞ்சாண்டியூருக்கு அந்தாண்ட ஆண்டிக்கர காக்காயந்தெருவுக்கு ஓராட்டத்துப் போயிருந்தம். மூணாம் வருசம் கூம்புக்கு* கூத்துவிட்டவங்க வக்ரகேது பலிதான் ஆடனுமின்னுப்புட்டாங்க. எந்த அலங்காரமாயிருந்தாலுஞ்செரி சுப்ரமணி எத்து வரிசையாதான் தொழிலுப்பண்டுவாரு. அன்னைக்கிம் அவரு விலோச்சனா வேசம் போட்டுருந்தாரு.


அம்மாபேட்ட கணேசண்ணன் எரிகண்டங்கட்டியிருந்தாரு. வேகாத திரேகமும், போவாத உசுரும், நீங்காத சேம்பரமும் வேணுமின்னு வரம் வாங்க எரிகண்டன் வக்ரகேதுவ ரணகாளிக்கி பலி குடுக்க கூட்டிப்போறான், மவன் உசுர மாய்க்க வேண்டாமின்னு விலோச்சனா அழுது பொலம்பறா. மின்ன வச்ச கால பின்ன வெக்க மாண்டேன்னு சூரனொருபக்கம் இழுக்க, வுடமாட்டேன்னு பொண்டாட்டி குறுக்க விழுந்து தடுக்க, ஓரியாட்டத்தில சூர வேசக்காரன் அவள எட்டி ஒதச்சி தள்ளி அந்தாண்ட தாட்டி போவனில்ல, அந்த கட்டத்தல கணேசன் ஒதச்ச ஒதயில ஏமாந்தாப்பிடி அழுதுக்கிட்டிருந்த சுப்ரமணி முதுவுல ஈடுதாங்கி போச்சி. சும்மா ரெண்டு நாளு மூச்சுத்தப்பு உழுந்ததுதான் காரணம், பொறவு மனுசன் வாயத்தொறந்து பாட முடியல. எங்கியங்கியோ போயி அளவத்த பணம் செலவு பண்டியும் நோவு நல்லாவல. பொறிக்கித் திங்கிற கோழிக்கி மூக்கத் தறிச்சாப்ல . நல்ல தொழிலாளிக்கு நேந்த கதியப்பாரு. வவுத்துப் பாட்டுக்கு இப்ப ஊரு வூரா ஈயம் பூசிக்கிட்டு திரியறாரு.


அவருமில்ல, நானும் போவலைன்ன கனகராசி வாத்தியாரு கொஞ்சத்தப் பேச்சா பேசுவாரு. கெடயில காலு தங்காம அங்கயும் இங்கயும் ஏண்டா காலந்திரியா திரியற? செட்டுக்கே வந்துர்றா! ஆத்தர அவரசத்துக்கு வேணுமின்னா பணங் கிணம் வாங்கிக்குவியாம்னு அவருதாம் பொணையாயிருந்து ஆபரேசம் பண்ட செட்டு பணத்திலியிருந்து எட்டாயிரம் தாரமின்னு சொல்லி மிம்பணம் மூவாயிரத்த கையோட குடுத்தாரு.


ஆச்சி , ஆச்சி இந்த எட்டு பூர்த்தியா ஆடனா வேணுங்கற பணந்தெரண்டுக்கும், ராய வேலூருலியே டாக்கிட்ருமாருங்க கைபோடராங்களாம். நோவு இல்லாம போயி செஞ்சிக்கிட்டு வந்துர்லாம் நிம்மிதியா!


கல்பனா ஆயா கூட முடிஞ்சத தாரமின்னிருக்குது. எப்பிடி பாத்தாலும் போவ வர மேஞ்செலவு ஆயாப்பாத்துக்குவா. ஆசுபத்திரி சமாச்சாரம் செலவு இவ்ளவுதான் ஆவுமின்னு ஆரு கண்டது ? முன்ன பின்னக்கூட ஆவும். எதுக்கும் உண்டுன்னா காசிருந்தா ஒதாரணைக்கி ஆவுமின்னுதான் நானு கரவாட்டத்துக்கும் கூத்துக்குங் கைகுடுத்துட்டு இப்படி பட்டழியறன்.


கனகராசிச் சமாவையுஞ் சும்மாச் சொல்லக்கூடாது. மனசர காங்காம ஏவிடியம் பேசுவாங்களோ என்னமோ தெரியாது. கண்டவொரு நாளும் எச்சி எடுப்பு பேசனதில்ல. நாலுப்பேத்து தொழிலு நம்பளப் பத்தி வாதிக்கக்கூடாது. ரோட்டுக்கால்ல நின்னு பால மாதர பொந்தியப்போட்டு ஒழப்பிக்கிட்டு போறவர ஒண்ணுரெண்டு வண்டிங்கள நாங்குறுக்காட்ட ஒருத்தங்கூட நிக்கல.
நேரம் எந்நேரமோ அம்மாபேட்ட ஊரே அடங்கிப்போச்சி. வவுநேரங்கழிச்சி தொலையா ஆரோவொரு ஆளு வாட்டச்சாட்டமா நடமாடற மாதர தெம்பட்டது. ஆராயிருந்தா நமக்கென்னா? கூத்துக்கு போவ முடியாத வெசனத்துல எம்பாட்ல நானிருக்க, கிட்ட வரச்சொல்லி அவங்கைச்சாட பண்றானே! இதென்றா தும்பமின்னு பக்கம் போயிப்பாத்தா அவனெங்கியோவொரு போலிசு ஏட்டு.


சிப்பமோ* சீமச்சரக்கோ என்னான்னுந் தெரில. ஆளுக்குப் பதமான போத. சீப்பு வண்டிமேல அட்னகாலுப் போட்டு படுத்திக்கிட்டிருந்தாஞ் சிவரெட்டுப் பத்தவெச்சிக்கிட்டு
என்னாங்க கூப்ட்டதுன்னு நாங்கேக்க எடுத்த எடுப்பில " வர்றீயா" ங்கறானே ஒரு துடியா.
தடி எடுக்கறப்பவே அடி எங்க வுழுமின்னு எனக்கா தெரியாது.இருந்தாலும் நம்மள வெச்சி தெரிஞ்சி கூப்டறானா? தெரியாம கூப்டறானான்னு அறிக்கொழப்பம்! எப்பிடியோ இருந்து சாட்டாவுது, இதுக்கு மேல்பட்டு நாங்கூத்துக்குப் போறது நெசமில்ல. வளச்சிக்கிட்ட்டு வூட்டுக்குப் போவலாமின்னாலும் பவானி வரிக்கும் காரு இருக்கும். அந்தாண்ட வண்டியில்ல. பைபாஸ்ல போயி பொழுது விடியந்தின்னியும் குந்தியிருக்கனும்.


அவுத்தப்போயி ஏப்பா அவுதிப்பட்டுக்கிட்டு கெடக்கனும்? இப்பிடிப்போயி சித்தங் கூறியும் இவங்கிட்ட தடுமாறிப்புட்டு வந்தா என்னாக் கெட்டுப்போச்சி? இருந்தாப்பிடியிருந்து எனக்கு தெங்கற* நெனப்பெடுத்துக்கிச்சு.


ஆம்பிள தெரண்டு ஆளாளா ஒடனே கண்ணாலங் கார்த்தி , அவனுக்குண்டான குடும்பங்குட்டி உற்பத்தி ஆகுது. அப்பிடியதுக்கு வசிதிப்பத்தலைன்ன அததுக்குபொண்டுங்க இருக்கறாங்க அங்க போயி அம்பதுன்னும் நூறுன்னுங் கடஞ்சொல்லிக்கூட அறுப்பத் தீத்துக்கறாங்க. பொம்பள சமைஞ்சா பெத்தவிங்க கடம்பட்டு , ஒடம்பட்டு ஒருத்தங் கையில புடிச்சிக் குடுக்கறாங்க. அதுச் சுத்தப்படலியா , அவப்பாத்து துணிஞ்சா அவ பொச்சி பொறன ஆணாகப்பட்ட அத்தன சீவனுங்களும் காரோடத்து நாயி மாதர காசுங்கையுமா சுத்தறாங்க.


இந்த திக்கத்த ஆத்துமாவுக்கு ஊத்த ஒடம்புல பிப்பு எடுத்தா அதக்கண்டு ஆத்த மருந்துண்டா? நம்பள அரிசின்னு அள்ளி பாப்பாருமில்ல , உமின்னு ஊதிப்பாப்பாருமில்ல்ல. பிரியப்பட்டு வலியினா வர்றங்கறவன ஏம்பா வாண்டானுச் சொல்லனுமின்னு நானு அவன அப்பிடிவுட்டுட்டு , இப்பிடி இந்தாண்ட வந்து ரோசனப்பண்டிக்கிருக்கவே, அவஞ்சீப்பு வண்டி ஆள ஓரங்கட்டி நிக்குது. வந்து ஏறுன்னு அவஞ்சொல்லுமிந்தி நானு மின்னித்தி சீட்டேறிக் குந்திக்கிட்டன்.


ஒரே அழுத்துல வண்டி எட்டிப் புடிச்சாப்பல கொடம்பையூரு கரட்டுக்கு வந்துட்டது. அடிக்கரட்ல வட்டப்பாறையும் பாழியுமா இருக்கும் பாரு ! அவுத்த வண்டிய நிப்பாட்டினான், பாற மேல மழக்காயித்த விரிச்சுட்டுட்டு வண்டியிலந்து நாலஞ்சி பொட்ணத்த எடுத்துப் பிரிச்சி வெச்சாம்பாரு ! எந்த சோத்துக்கடயில வாங்கனதோ! கறிச்சோத்துப் பொட்ணமாயிட்டயிருக்குது வட்ட வாகறயே நெய்யி மணக்குது.


மூக்குல பருக்க வர தின்னுப்புட்டு எந்திரிச்சன். அன்னந்தினியும் வாயே பேசாமயிருந்தவன் " சரக்கு சாப்டுறியா" ன்னு ரெண்டு வெராந்தி பாட்லயும் எடுத்து மின்ன வெச்சான் ஏட்டு.
அதயுஞ் சைசா மண்டயத்திருவி வாயில ஊத்திக்கிட்டன், வீக்கங்கண்ட வவுறு தூக்கங்கேட்டுது. அதோட அளவான போத, ஆடியாடி அலண்ட ஒடம்புக்கு தோதாயிருந்தது. குளுங்காத்துச் சிலுச்சிலுங்க, மேலுப்பசபசங்க எனக்கு ஏனா தொப்ளச்சுத்தி புரு புருங்குதே! அப்பிடியே கட்டயக் கீழச்சாச்சி கண்ண மூடனம்பாரு ஏட்டும் எம்மேல சாஞ்சான்.


சாவலு நல்ல பெருஞ்சாதி சாவலு. அணைய அணைய ஒணக்கையா இருந்திச்சி., இப்பிடியே கதய ஒப்பேத்தி ஓட்டி, கூத்த கொண்டயத்துக்கு கொண்டு போயி மங்களம் பாடிப்புடலாமின்னு நாங்கெனாக் கண்ட மாயத்துல , மின்னாம மொழங்காம எண்ணத்துல இடி எறங்குதே!
ஏப்பா உரியேறன சாத்ரீகப் பூன தயிரிருக்க சட்டிய எத்தன நேரம் நக்கும்? வெறியெடுத்து ஆவு ஆவுன்னு என்ற அடிமடிய தொழனவனுக்கு ஆட்டு ஒதப்பையாட்டம் எம்புடுக்குச் சிக்கும்பிடி அவம் மொவற நறவல்ல கையுட்டாப்ல சுண்டிப்போச்சி. "த்தூ"ன்னு காறித்துப்புனவங் காது காதா அப்பறாஞ் சடையாம.


ஓரடியா? ரெண்டடியா ? " அய்யோ சாமி நானு அறியாத பித்தியில தெரியாம தப்பு பண்டிப்புட்டன். வுட்று சாமி நானு ஓடிப்பொழச்சிக்கிறன்னு அழுது பரிதவிங்கறன். அவங்காலப் புடிச்சிக் கெஞ்சறன். அவங்காய காதறந்த மேல ஓக்க ! அதயெதயுங்காதுல போட்டுக்கவேயில்ல. " மி யெம்மா பூக்குல தெங்கோ! ஓரி திக்கர நீ பணியின காமிச்சேவு"ன்னு மயித்த வளச்சிப்போட்டு சும்மா குப்பு குப்புன்னு குப்பி , என்னய மிங்கட்டு பிங்கட்டு கட்டி சீப்பு வண்டியீல தூக்கிப்போட்டு கண்ணாடியச் சாத்தி , கதவுசந்துல எங்காலு ரெண்டையும் வெளியே இழுத்து , ஓரட்டாங்கையில புடுச்சிக்கிட்டான்.


சோத்தாங்கையில அடிப்போன பூணோட அத்தச்சோட்டு குண்டாந்தடிய புடிச்சி, எல்லப்பன்னிய குத்தறாப்போல என்ற உசுரு நெலயில ஒரேக்குத்து! ஆண்டவங்குடுத்த அந்த ஆதார பொருளு கொழண்டு கலங்கிப்போச்சு. இன்னும் நாலீடுப் போட்டு அப்பையே அடிச்சிக்கொன்னிருந்தா ஆயிருக்கும் வத வதயான வதப்பண்டி , வாய்க்கா கரையில வாரிச் சூறையிட்டுப்புட்டு போயிட்டான்.


ராவெல்லாம் எங்க கெடந்தன் ? எப்பிடி பூதப்பாடி வந்தன் ? ஆருக்கொண்டாந்து ஆயாவூட்ல போட்டது ஒரு பிருவுந்தெரில. நாம் பொழச்சது மாதா புண்ணியம் ! மறுசென்மம். " பொறப்படு ஆயா வேலூருக்கு, போயி டாக்டரிண்ட கைப்போட்டுக்கிட்ட்டு வந்தரலாமின்னு" கண்ணு முழிச்சதும் மொதக்காரியமா ஆயாளக்கூப்பிட்டு சொன்னேன்.

அருஞ்சொற்பொருள்கள்:


தெரட்டி = பூப்புனித நீராட்டு விழா


சொணையான் = சம்பளம்


வரிக்கல = வாங்கல


ஆட்டத்துக்கு = கரக்காட்டத்துக்கு


அலங்காரம் =தெருக்கூத்து


கூத =போதை


பொட்டைங்க = திருநங்கைகள்


தாயம்மா = திருநங்கைகளுக்கான உறுப்பு நீக்கும் சடங்கு செய்பவர்.


கைபோடுதல் = உறுப்பு நீக்கும் நிகழ்வு


கோத்தி = ஆண் உறுப்பு நீக்காமலே பெண் உணர்வுடன் வாழ்பவர்


ஆயாமாருங்க = திருநங்கைகளிடையே வழங்கும் உறவுமுறை


சேலாமாருங்க= மகள் உறவுமுறையினர்


பிந்தாயம்மா= திருநங்கைகளுக்கான உறுப்பு நீக்கும் சடங்கின் போது சம்பந்தப்பட்ட திருநங்கையை பிடித்துக்கொள்பவர்


மானி/சுனி/புடுக்கு/குஞ்சி = ஆண்குறி


கப்பு போடுதல் = முகத்தில் உள்ள முடிகளை அகற்றுதல்


ஜோக்கேத்தி = பாவடை,சேலை முதலான பெண்கள் தரிக்கும் உடைகளையும் தோடு மூக்குத்தி கொலுசு மெட்டி முதலான ஆபரணங்களையும் அணிவித்தல்


மோரி = குளிக்கும் அறை


காவு = புண்


தந்தா = திருநங்கைகள் புரியும் பாலியல் தொழில்


ரோனு = லோன் ( வங்கிக்கடன்)


பாணி = நிகழ்ச்சி தோல்வி


தானவதி மழை = பங்குனி மாதத்தில் பொழியும் உத்திரட்டாதி மழைக்கும் ரேவதி மழைக்கும் இடையே எதிர்பாரது பெய்யும் மழை


சாரி வேசம் = பெண்வேடம்


வக்ரகேது பலி = ஒரு சிவபுராணக்கிளைக்கதை


சிப்பம் = பாக்கெட் சாராயம்


தெங்கிற = புணர்கிற

பண்புடன் ஆண்டு விழா - தீபாவளி சிறப்பு நெடுங்கதை - 6 - ஹரன் பிரசன்னா

திறப்பு : பகுதி - 6
- ஹரன் பிரசன்னா


அனுவிற்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. 'இன்னும் அரைமணி நேரத்துல போயிடும்' என்று எல்லாரும் பேசிக்கொள்வது அவள் காதில் விழுந்தது. அவளுக்கு வாய் விட்டுக் கதறவேண்டும் போல இருந்தது. வார்த்தை வரவில்லை. கன்னித் தெய்வத்தை வேண்டிக்கொண்டாள். தான் பட்டது போதும் என்றும் தான் இன்னும் வாழவேண்டும் என்றும் ஒரே நேரத்தில் நினைத்துக்கொண்டாள்.

அம்மாவிடம் பேசினாள். அது மானசீகமான உரையாடல். அம்மாவிற்கு என்னென்னவோ நன்றிகள் சொன்னாள். தலைமுதல் கால் வரை முத்தங்களிட்டாள். அம்மாவின் மீது அன்பு பொங்கி வழிவது குறித்து அவளுக்கே சந்தோஷமாக இருந்தது. இந்த அன்பு களங்கமற்றது.

அப்பாவை நினைத்துக்கொண்டாள். இப்போது அவளுக்கு அப்பாவைப் பற்றி மிச்சமிருக்கும் ஒரே பிம்பம், பாவம் வயதான ஜீவன். அவர் கஷ்டப்படாமல் கடைசி காலத்தில் நன்றாக இருக்கட்டும் என நினைத்துக்கொண்டாள். இப்போதைய அனுவிற்கு அன்பைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அவளே இப்படி அவளை அறிந்ததில்லை. அவளுக்கே அவளை நினைத்து சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது.

தனக்காக வராமல் போன ஆண்மேல் மட்டும் கொஞ்சம் கோபமிருந்தது. பின்னர் மீண்டும், அவனும்தான் என்ன செய்வான் தான் இப்படி இருக்கும்போது என நினைத்துக்கொண்டு அவன் மீதும் அன்பைப் பொழிந்தாள். தனக்காக வரன் பார்த்த ராவிற்கு நன்றி சொல்லிக்கொண்டாள்.

தன் உடலை விட்டு உயிர் பிரிகிறது என்பதையும் உணரத் தொடங்கினாள். இனி கால்கள் இல்லை என்கிற குமைச்சல் இல்லை. தான் கருப்பாக இருக்கிறோம் என்கிற தாழ்வு மனப்பான்மை இல்லை. தன் பாவாடை விலகினால் தன் கால்களைப் பார்த்து அதிர்ச்சி அடையும் ஆண்களை இனி காணவேண்டியதில்லை. அவளே வலிய சென்றாலும், எழுந்து ஓடும் ஆண் தரும் அவமானங்கள் இல்லை. யாரேனும் எங்கேயும் ஓடிப்போனால் அவர்கள் இரவில் என்ன செய்வார்கள் என யோசித்து மருகவேண்டியதில்லை. தன் உயிர் பிரியும் தருணம் மிகச் சிறப்பானது என நினைத்துக்கொண்டாள் அனு.

அவளது உயிர் அவளது உறுப்பு வழியாகப் பிரிந்தது. தன் உறுப்பின் வழியே இரத்தம் வழிவதை உணர்ந்த கணத்தில் அனு மரணமடைந்தாள்.

விஜயலக்ஷ்மியின் ஓலம் காற்றில் கரைந்தது. சீனிவாசன் அழுதுகொண்டே தன் கால்களை நீவிக்கொண்டார்.

அன்றைய கொடுங்கனவு முடிந்து, அணில்கள் தலைமாட்டில் ஓடிக்கொண்டிருக்க, மறுநாள் எப்போதும் போலவே விடிந்தது.

-oOo- -oOo- -oOo- -oOo- -oOo-

பண்புடன் ஆண்டு விழா - தீபாவளி சிறப்பு நெடுங்கதை - 5 - ஹரன் பிரசன்னா

திறப்பு - 5
- ஹரன் பிரசன்னா


இன்னும் ஒரு வாரம் இருக்கவேண்டியிருக்கும் என்று டாக்டர் சொல்லிவிட்டுப் போனார். அனுவை என்னென்னவோ உடற்பயிற்சிகள் செய்யச் சொன்னார்கள். இதெல்லாம் செய்தால் கல்யாணம் ஆகுமா என்று ஒருதடவை யோசித்து, சிரித்துக்கொண்டாள். ராவ் அவளைப் பார்த்து 'என்னம்மா தானா சிரிக்கிற' என்றார். அவள் பதில் சொல்லவில்லை. அவரும் சீனிவாசனும் வெளியில் போனார்கள். இப்போதெல்லாம் ராவ் சொல்லாமல் சீனிவாசன் எதையும் செய்வதில்லை. அவருக்கு ராவ் மீது பெரிய மரியாதை இருந்தது. சீனிவாசனும் ராவும் வெளியில் பேசிக்கொண்டிருந்தார்கள். ராவ் அப்படியே வெளியில் நின்றார். உள்ளே வந்த சீனிவாசன், 'ராவ்க்கு தெரிஞ்ச ஒரு வரன் இருக்காம். அத சொல்லிக்கிட்டு இருந்தார்' என்றார். அனுவிற்கு ராவின் மீது சட்டென மரியாதை வந்தது. அவர் வந்ததும் அவரைப் பார்த்து சிரிக்கவேண்டும் என நினைத்துக்கொண்டாள். சீனிவாசன், 'நானும் அவரும் கொஞ்ச நேரம் வெளியில போயிட்டு வர்றோம்' என்று சொல்லிவிட்டுப் போனார்.

வெளியில் போயிருந்த ராவும் சீனிவாசனும் சற்றைக்கெல்லாம் திரும்ப வந்துவிட்டனர். அனு ராவைப் பார்த்து வலிய சிரித்தாள். சீனிவாசன் விஜயலக்ஷ்மியிடம் தான் பார்த்ததை சொல்லத் தொடங்கினார்.

'ஸ்ரீதர் செத்துட்டாண்டி. தற்கொலையாம். என்ன ஒரு இருபத்தி அஞ்சு வயசு இருக்குமா? தாமரைக் குளத்துல மொதக்கிறான். ஏன் என்னான்னு தெரியலை' என்றார். விஜயலக்ஷ்மிக்கு ஆச்சரியமாக இருந்தது. ஸ்ரீதர் ஏன் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்று அவளுக்குப் பிடிபடவில்லை. இவனும் ரமணாவைப் போல யாரையாவது காதலித்துத் தொலைத்திருக்கலாம் என நினைத்துக்கொண்டாள். 'பாக்கவே சகிக்கலைடி. ஒட்டுத்துணியில்லை உடம்புல. ஊதிப்போய் மிதக்குது. நம்ம வீட்டுல வந்து ரசம் ஊத்துங்கன்னு சொல்லி சாப்பிட்டதுதான் நினைவுக்கு வந்தது. பாவம் அவன் அம்மா' என்றார்.

அனுவிற்கு ஸ்ரீதரை நினைத்தும் கோபமே வந்தது. அவன் வந்து ரசம் கேட்டுக் குடித்த பல தினங்களில் ஒரு தினம் அவன் அங்கேயே உறங்கினான். திடீரென கண்விழித்துப் பார்த்த அனுவிற்கு, அருகில் ஸ்ரீதர் உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் ஏதேதோ எண்ணங்கள் உதித்ததன. மெல்ல புரண்டு அவன் அருகில் படுத்துக்கொண்டாள். அவன் கைகளைத் தன் மேல் எடுத்து வைத்துக்கொண்டாள். அனுவிற்கு பயமாக இருந்தது. அதே சமயம் அவனைவிட்டு விலகவும் முடியவில்லை. மெல்ல நெருங்கி அவனை அணைக்க முயன்றாள். அவன் திமிறி எழுந்து ஓடினான். அவளைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அவளுக்கு அவமானமாக இருந்தது. மறுநாள்முதல் அவன் வீட்டிற்கு வருவதில்லை. இவள் கண்ணில் படாமலேயே நழுவுவான்.

இப்படி ஒரு குளத்தில் ஊதிப் போய் சாகப்போகிற ஒருவன் அன்றைக்கு தன்னைக் கொஞ்சம் சந்தோஷப்படுத்தியிருக்கலாம். ஒருவேளை அவனுக்குத் தேவையான பெண் அழகானவளாகவும் சிவப்பாகவும் கால்கள் நல்ல நிலையிலும் உள்ளவளாகவும் இருக்கவேண்டுமோ என்னவோ. தன்மேல் பட்ட ஒரே ஆணின் கை அவனது கை. அதுவும் அவன் அறியாமலேயே நடந்ததுதான். ஆனாலும் அவள் மேல் ஒரு ஆணின் கை பட்டிருக்கிறது என்கிற நினைப்பைத் தந்தது ஸ்ரீதர்தான்.

அனுவிற்கு ஸ்ரீதரின் மரணம் வருத்தத்தைத் தந்தது.

சீனிவாசன் சொன்னார். 'வாய் பொளந்து செத்துக் கிடக்கான். வாய் வழியா உயிர் போயிடுச்சு போல இருக்கு. பாவம்.'

உயிர் பிரிவது பற்றி அவளும் கேட்டிருக்கிறாள். ஒவ்வொருவருக்கும் ஒரு வழியாக உயிர் பிரிகிறது. ஸ்ரீதருக்கு வாய் வழியே. தன் வீட்டிற்கு எதிர் வீட்டிலிருந்த ஒரு மாமாவுக்கு மூக்கின் வழியே. அவர் இறந்ததும் மூக்கிலிருந்து இரத்தம் வழிந்ததாகச் சொன்னார்கள். மூன்றாம் வீட்டிலிருந்த இன்னொரு மாமி இறந்ததைப் பற்றி அவளது மருமகள் சொன்ன கதை வேறு மாதிரியானது.

'எப்படியும் போயிடுவான்னு தெரியும். திடீரெனு டர்ர்ர்ர்ன்னு குசு விடற சத்தம். மாமிதான். முகத்தை நெறிக்கிறா. அவ்ளோதான் சட்டுன்னு போயிட்டா. வீடெல்லாம் ஒரே நாத்தம். மாமி போட்ட குசுதான்னு நினைச்சோம். செண்ட் எல்லாம் வாங்கி அடிச்சோம். அப்புறம் அவளைக் குளிப்பாட்டறப்பதான் பார்த்தோம், பின்னாடியெல்லாம் ஒரே நரகல். ஐயோ நினைச்சாலே கொமட்டறது. அதான் அவ்ளோ நாத்தம். அப்புறம் எல்லாரும் சொன்னா, மாமிக்கு பின்னாடி வழியா உயிர் போயிடுத்துன்னு...'

அனுவிற்கு அன்றிரவு பெருங்கனவு சூழ்ந்துகொண்டது.


(தொடரும்)

பண்புடன் ஆண்டு விழா - தீபாவளி சிறப்பு நெடுங்கதை - 4 - ஹரன் பிரசன்னா

திறப்பு : பகுதி - 4
- ஹரன் பிரசன்னா


அனுவிற்கு ஆச்சரியமாக இருந்தது. பின்பு பொறாமையாகவும் இருந்தது. அவளுக்குத் தெரிந்து ரமணனை சிறிய பையனாகப் பார்த்திருக்கிறாள். இன்று அவன் ஒருத்தியை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டான் என்று அறிந்தபோது அவளால் அதை நம்பவே முடியவில்லை. ஓர் ஆணாய்ப் பிறந்திருக்கவேண்டியதின் அவசியத்தை மீண்டும் உணர்ந்தாள்.

ரமணனிடம் எதைப் பார்த்து மயங்கி ஒருத்தி ஓடினாள் என்று தெரியவில்லை. ரமணன் படித்துக்கொண்டிருக்கிறான். ஓடிப்போனால் மறுவேளை சாப்பாட்டுக்குக்கூட உத்திரவாதமில்லை. ரமணன் மிகப்பெரிய அழகனுமில்லை. ஆறடி உயரத்தில் எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்னும் தோற்றத்தில் இருப்பான். அவன் முகத்திலேயே மூக்கு ஒன்றுதான் இருக்கும். இவனை நம்பி எப்படி ஒரு பெண் ஓடினாள்? ஆனால் ரமணனுக்கு இரண்டு கால்களும் இருக்கின்றன. ஓடிய பெண்ணுக்கும் நிச்சயம் இரண்டு கால்களும் இருந்திருக்கும்.

அன்று இரவு முழுவதும் ரமணனைத் தேடினார்கள். ரமணன் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை. ஓடிய பெண்ணின் வீட்டைச் சேர்ந்தவர்கள் ரமணனின் அப்பாவை மிரட்டிவிட்டுப் போனதாக விஜயலக்ஷ்மி சொன்னாள். அன்று இரவு ரமணன் எங்கே தங்கியிருப்பான்? எப்படியும் அன்றிரவு ரமணனும் அப்பெண்ணும் உறவு கொண்டிருப்பார்கள். இப்படி நினைத்தபோதே அனுவிற்கும் பொறாமையும் ஏக்கமும் ஒரு சேர எழுந்தன. தனக்குத் திருமணம் ஆகாதது குறித்து பெரும் வேதனைகள் அவளுக்கு இருந்தன. தன் திருமணத்தைப் பற்றி யாரும் சிந்திக்கிறார்களா என்பதுகூட அவளுக்குத் தெரியவில்லை. அம்மாவிடம் சொன்னால் அவள் தான் பார்த்த வரன்களைச் சொல்லி, 'எல்லாம் பார்த்துக்கிட்டே இருக்கோம், ஒண்ணும் அமையலை' என்று சொல்லக்கூடும்.

அம்மாவிடம் திடீரென்று தன் கல்யாணம் பற்றிக் கேட்டாள். 'பார்த்துக்கிட்டுதான இருக்கிறோம். சனிக்கிழமை சனிக்கிழமை நவக்கிரகத்துக்கு பூஜை செய்யறேன். நிச்சயம் உனக்கு இந்த வருஷத்துல வரன் அமைஞ்சிடும்' என்றாள். அனுவிற்கு எரிச்சலும் கோபமும் மண்டிக்கொண்டு வந்தது. நிதானம் இழக்கத் தொடங்கினாள்.

அனு நிதானம் இழந்தால் எப்படிப் பேசுவாள் என்பதை விஜயலக்ஷ்மி அறிந்தவள்தான். இதேபோல முன்பொருமுறை தனக்கு கல்யாணம் ஆகவில்லை என்பது குறித்து என்னவெல்லாமோ பேசத் தொடங்கினாள் அனு. அவளுக்கு அறிவுரை சொல்ல வந்த அனுவின் ஒன்றுவிட்ட தங்கையை அனு கேட்டகேள்விகள் விஜயலக்ஷ்மியையே அதிர வைத்தன. 'உனக்கு என்ன வயசு? என்னவிட ரெண்டு வயசு சின்னவதானே? உனக்கு ரெண்டு குழந்தைங்க. உனக்கு தோணினப்பல்லாம் உன் புருஷனோட படுத்துக்கலாம்ல?' வந்த பெண் கேவலமாக உணர்ந்தாள். விஜயலக்ஷ்மியிடம் 'ரொம்ப கேவலமா பேசறா. கல்யாணத்துக்காக அலையறா. பார்த்துக்கோங்க' என்று சொல்லிவிட்டுப் போனாள். உள்ளேயிருந்து அனு கத்தினாள். 'எவ அலயறா. நீ அலஞ்ச கதை எனக்குத் தெரியாதாடி முண்ட. இனிமே எனக்கு அத சொல்றேன் இத சொல்றேன்னு இங்க வா, தட்டுவாணி பல்ல ஒடைக்கிறேன். உன் புருஷன் செத்தா தெரியும்டி உனக்கு அலயறதுன்னா என்னான்னு.' விஜயலக்ஷ்மிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அனு கத்திக்கொண்டிருக்க, விஜயலக்ஷ்மி வீட்டின் கதவை அடைத்துவிட்டு கோவிலுக்குப் போனாள்.

எதாவது சொல்லி, அனு மீண்டும் அதேபோல் கத்தத் தொடங்கினால் ஆஸ்பத்திரியில் எல்லார் முன்னும் மானம் போய்விடும் எனப் பயந்து, அனுவோடு பேச்சைத் தொடராமல் ஆஸ்பத்திரியை விட்டு வெளியில் போனாள். வெளியில் ரமணாவின் அப்பா வந்துகொண்டிருந்தார். அவர் நடையில் ஒரு வேகம் இருந்தது. விஜயலக்ஷ்மியிடம் 'சீனிவாசன் இல்லியா' என்றார். 'வெளிய போயிருக்கார்' என்றாள். 'வந்தா சொல்லுங்க ரமணன் கிடைச்சிட்டான். அந்த பொண்ணை அவங்க வீட்டுலயே விட்டாச்சு. நாலு நாள் சோத்துக்கு இல்லாம அலஞ்சி வேற வழியில்லாம அவனே வந்துட்டான்...' என்றார். விஜயலக்ஷ்மி தான் இதை தன் கணவனிடம் சொல்லிவிடுவதாகவும் குழந்தையைப் பார்த்துக்கோங்க என்றும் சொல்லி அனுப்பினாள்.

ஆஸ்பத்திரிக்குள்ளே வந்து அனுவிடம் பேச்சு கொடுத்தாள். ரமணா பற்றிச் சொன்னாள். அனுவிற்கு சந்தோஷமாக இருந்தது. '19 வயசுல என்ன கல்யாணம்' என்றாள். ஆனாலும் நான்கு நாள் இரவுகளில் ரமணனும் அப்பெண்ணும் என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டாள். அவளை ஏக்கமும் காமும் சூழ்ந்தன.

விஜயலக்ஷ்மி அனுவின் கட்டிலுக்குக் கீழே ஒரு பாயை விரித்து படுத்துக்கொண்டாள். அனுவை பலவிதமான எண்ணங்கள் ஓடின. தனக்கு கால் இல்லாமல் போனது குறித்து தன் வாழ்க்கையில் லட்சத்து ஓராவது முறையாக வருந்தினாள். தான் கொஞ்சம் சிவப்பாகவாவது இருந்திருந்தால் தன் உடலைக்காட்டி யாரையாவது மயக்கியிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டாள். காலை மெல்ல வருடினாள். முழங்காலில் காய் காய்த்து சிறிய சிறிய தோல் உருண்டைகள் காய்த்துத் தொங்க, அவளுக்கே அருவருப்பாக இருந்தது. அதற்குக் கீழே கால் சூம்பித் தொங்கியது. இந்தக் கால்களுக்கு இடையில் படுத்துக்கொள்ள எவன் வருவான் என்று தோன்றியது அவளுக்கு. அவளது பெருமூச்சில் அவளது மார்பு ஒருமுறை விம்மி அடங்கியது. விஜயலக்ஷ்மி அழுவது போலத் தோன்றியது அனுவிற்கு. 'அம்மா' என்று அழைத்தாள். பதிலில்லை. மீண்டும் அனு அழைக்காமல் எதையோ யோசிக்கத் தொடங்கினாள்.

(தொடரும்)

பண்புடன் ஆண்டு விழா - தீபாவளி சிறப்பு நெடுங்கதை - 3 - ஹரன் பிரசன்னா

திறப்பு : பகுதி - 3
- ஹரன் பிரசன்னா


விஜயலக்ஷ்மிக்கு கதை கேட்பது போலிருந்தது. சீனிவாசனின் சின்ன தாத்தா தனது நடுங்கும் குரலில் சொன்னதையெல்லாம் கேட்கும்போது அதிக பயமும் கொஞ்சம் ஆர்வமும் இருந்தன. ஆனால் அவளால் அதைக் கேட்காமல் இருக்கவோ நம்பாமல் இருக்கவோ முடியவில்லை.

'நிறைமாச கர்ப்பிணி. தூக்கிக்கிட்டு ஓடினாங்க. மாட்டுவண்டிலதான் கொண்டு போனாங்களாம். மாட்டை அடி அடின்னு அடிச்சான் மாட்டுவண்டிக்காரன். மாடுங்க பயந்து வெறிபிடிச்சு ஓடிச்சுங்க. அவ உள்ள இருந்து வலி தாங்காம கத்துறா. முதல்நாள் நல்ல மழை வேற. அப்பல்லாம் கரண்ட்டு வேற கிடையாது. பிரசவம் பாக்க பக்கத்துக்கு ஊருக்குத் தூக்கிக்கிட்டு ஓடணும். போற வழியெல்லாம் தண்ணி, மேடு பள்ளம். கொண்டு போறதுக்குள்ள உயிர் போயிடும்னுதான் பயந்திருக்காங்க. பனிக்குடமும் உடைஞ்சிடுச்சு போல. கூட இருந்த அவ அம்மா வேண்டாத தெய்வம் பாக்கியில்ல. பக்கத்து கிராமத்துல மருத்துவச்சி வீட்டுக்கு கொண்டு போகும்போது அவளுக்கு நினைப்பே இல்லை. எப்படியோ குழந்தை பொறந்தது. அவ தன் குழந்தையைப் பார்க்காமயே மயங்கிட்டா. பெண் குழந்தை. அதைப் பார்த்தவங்க பயந்து போயிட்டாங்க. அப்படி ஒரு விகாரமான முகம். இதை எப்படி இவ வளர்க்கப்போறான்னு பயம். மெல்ல ஊருக்குள்ள சாமி குத்தம்தான் அப்படி பொறந்திருக்குன்னு பேச்சு பரவிப்போச்சு. பெத்தவனுக்கு என்ன செய்றதுன்னே தெரியலை. ஆனா ஒரு மணி நேரத்துல அந்தக் குழந்தை செத்துப்போச்சு. அதை வீட்டுக்குப் பின்னாடியே பொதைச்சிட்டாங்களாம். அந்த இடத்துலேர்ந்து ஒரு கல்லை எடுத்து வெச்சி கும்பிட ஆரம்பிச்சாங்களாம். என்ன சாமி குத்தம் இருந்தாலும் மன்னிச்சுக்கோமான்னு சொல்லி அதையே கும்பிட ஆரம்பிச்சாங்களாம். அதுதான் கன்னி தெய்வம். இதெல்லாம் முன்னூறு நானூறு வருசத்துக் கதை. அது கல்லுதான். ஆனா நினைச்ச உருவத்துல வரும். சிவப்புப் பாவாடை காட்டிக்கிட்டு சின்ன பொண்ணா நானே பார்த்திருக்கேன்.' அவர் உடல் விக்கித்துப்போய் இருந்தது.

பின்னாலிருக்கும் புளியமரமும் கிட்டத்தட்ட நானூறு வருடங்களாக அங்கிருக்கிறது என்ற ஒரு கதையைக் கேட்டிருக்கிறாள். இரவுகளில் கருப்பசாமி அங்கே வந்துவிட்டுப் போகும் என்றும் ஒரு கதை உண்டு. சிலர் அதைப் பொய் என்று மறுத்தார்கள். 'எப்படி கன்னித் தெய்வம் இருக்கிறப்ப கருப்பசாமி வரும்' என்பது அவர்கள் கேள்வி. இரண்டு காவல்தெய்வங்கள் தங்கள் எல்லைகளை மீறுவதில்லை என்று நம்பினார்கள். இதுபோன்று பல கதைகளைக் கேட்டு வளர்ந்தவள் விஜயலக்ஷ்மி. இந்தக் கதைகளுக்குப் பின்னர் கன்னித் தெய்வத்தின் மீது அவளுக்கு ஒரு பயம் வந்தது. தன் மாமியார் விடாமல் கன்னித் தெய்வத்துக்கு செய்து வந்த பூஜையை அவளும் செய்யத் தொடங்கினாள்.

ஆஸ்பத்திரியில் விஜயலக்ஷ்மி அனுவின் அருகில் உட்கார்ந்துகொண்டிருந்தாள். டாக்டர்கள் அனுவின் இடுப்பெலும்பு பலமிழந்து போய்விட்டதாகச் சொன்னார்கள். அவள் கைகளை ஊன்றி நடப்பதால் உடலின் எடை முழுவதும் இடுப்பெலும்பில் இறங்கி, இடுப்பெலும்பு நொறுங்கிவிட்டது என்றார்கள். தலையில் அடி பட்டால் எப்படி இடுப்பெலும்பு தேயும் என்று விஜயலக்ஷ்மி ஒன்றும் புரியாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். அனு இரண்டு கைகளையும் குறுக்கக் கட்டிப் படுத்துக்கொண்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். சீனிவாசன் வெளியே யாரோ ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் பெயர் ராமச்சந்திர ராவ். விரை வீங்கிப்போய் ஆபரேஷனுக்காக முதல்நாள்தான் அட்மிட் ஆகியிருந்தார். எதிர் படுக்கையில் கொஞ்சிக்கொண்டிருந்த ஜோடிகள் டிஸ்ஜார்ஜ் ஆன அன்று சீனிவாசன் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

வெளியில் ராவும் சீனிவாசனும் பேசிக்கொண்டிருந்தார்கள். ராவுக்குத் தெரியாத விஷயங்களே இருக்காதோ என்று அதிசயப்பட்டுப் போனார் சீனிவாசன். எதைச் சொன்னாலும் அதிலிருக்கும் நியாய, அநியாயங்களை ராவ் பிரித்தெடுத்து வைத்து, இரண்டுக்குமான காரணங்களை அடுக்கியபோது அவன் ஒரு மகான் என்று கூட நினைத்துக்கொண்டார். ஒரு மகானுக்கு ஏன் ஓதம் தள்ளவேண்டும் என்றும் நினைத்தார். ஆனால் உடனே அந்த நினைப்பைப் போக்கிகொண்டார். என்ன இருந்தாலும் அவரும் ஒரு மாத்வர்.

ராவ் ஜோதிடத்தில் பெரும் நம்பிக்கையுள்ளவர் என்பது அவர் பேசிய இரண்டொரு நிமிடங்களில் தெரிந்துவிட்டது. எல்லாவற்றிற்கும் ஒரு ஜோசியம் சொன்னார். காரணங்கள் சொன்னார். சீனிவாசனின் பிறந்த நாள் தேதியைக் கேட்டுவிட்டு, அந்த எண்ணைக் கூட்டி என்னவோ மனதில் நினைத்துக்கொண்டு, 'நீங்க பிறந்த தேதி சரியில்லை, வேற தேதியில பிறந்திருக்கணும்' என்றார். நியூமரலாஜியும் அவருக்குத் தெரியும். சீனிவாசனும் விஜயலக்ஷ்மியும் தாலி கட்டிக்கொண்ட நாள் சரியில்லை என்றும், அதற்கு பிராயசித்தமாக மறுதாலி கட்டவேண்டும் என்றும் சொன்னார் ராவ். தனது எழுபதாவது வயதில் மறுதாலி கட்டி என்ன ஆகப்போகிறது என்று யோசித்தார் சீனிவாசன். 'கொழந்தைங்களுக்கு நல்லது இல்லையா' என்றார் ராவ். ராவ் சொன்னதிலும் விஷயம் உண்டு என்று எண்ணிக்கொண்டார் சீனிவாசன்.

பேச்சு சீனிவாசனின் பெற்றோர்கள் பக்கம் திரும்பியது. சீனிவாசன் தன் கதைகளை எல்லாம், தன்மீது தவறில்லாதவாறு சொன்னார். அனுவின் நிலைமையையும் அதற்கான தன் வருத்தங்களையும் சொன்னார். சட்டென்று கேட்டார் ராவ். 'பித்ருக்கள் காரியமெல்லாம் செய்றீங்கள்ல?' சீனிவாசன் உதட்டைப் பிதுக்கினார். தனது தந்தைக்கும் பித்ருக்களுக்குக் காரியம் செய்யும் வழக்கமில்லை என்றார். உடனே பிடித்துக்கொண்டார் ராவ். எல்லாவற்றிற்கும் பித்ருக்கள் சாபமே காரணம் என்றார். ஏழு குழந்தைகள் பிறந்து இறந்ததும், எட்டாவது குழந்தை நன்றாகப் பிறந்தும் கால் சரியில்லாமல் போனதும் என எல்லாமே பித்ருக்கள் சாபம் என்றார். 'நாம நல்லது செஞ்சா அது எப்படி நம்ம சந்ததிக்கு வருதோ நம்ம பாவங்களும் அப்படியே அவங்களுக்குத்தான் வருது. வண்டி வண்டியா பாவம் செஞ்சு வெச்சிருக்கிறீங்க. உடனே காரியமெல்லாம் செய்ங்க' என்றார். சீனிவாசனின் தாய் தந்தை இறந்த திதிக்களைக் கண்டுபிடித்து, எந்த எந்த நாளில் திதி செய்யவேண்டும் என எழுதிக்கொடுத்தார். தனக்கு இந்த வயதில் இப்படி ஒரு நண்பரா என ஏகத்துக்கும் சந்தோஷப்பட்டுப் போனார் சீனிவாசன். இப்படி ஒருத்தன் தன் வயசுக்காலத்திலேயே இருந்திருந்தால் தனக்கு உபயோகமாக இருந்திருக்கும் என நினைத்துக்கொண்டார்.

ராவ் தனக்குத் தெரிந்த ஐயரையே ஏற்பாடு செய்துகொடுத்தார். அனுவைத் தான் பார்த்துக்கொள்வதாகச் சொல்லி, விஜயலக்ஷ்மியையும் சீனிவாசனையும் வீட்டுக்கு அனுப்பிவைத்தார். வீட்டில் ஹோமங்கள் வளர்த்து, மந்திரங்கள் சொல்லி, பிண்டம் வைத்தார் சீனிவாசன். தனது அம்மாவையும் அப்பாவையும் மானசீகமாக வணங்கினார். அம்மாவிடம் பலவாறாக மன்னிப்புக் கேட்டார். கன்னித் தெய்வம் குளிர குளிர அன்றும் மழை பெய்தது.

(தொடரும்)