Showing posts with label போட்டிக்கு வந்த படைப்புகள். Show all posts
Showing posts with label போட்டிக்கு வந்த படைப்புகள். Show all posts

பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 18

இளைப்பாறும் நேரத்திலாவது
- ஷைலஜா


வாழ்க்கைத்துணையாகத்தான்
வரவில்லை
வழித்துணையாகவாவது
வந்துவிடு

இளைப்பாறும் நேரத்திலாவது
இனியவாழ்வு என்ன என்பதைக்

காணவேண்டும்

தாயின் இடுப்பைநனைக்கும்
சின்னகுழந்தையின்
ஈரத்துணிமாதிரி
உன் நினைவுகள்

சிறுவாட்டில்
சேர்த்துவைத்த
சில்லறைகளாய்
பழகியபொழுதின்
புன்னகைகள்

மனச்செடியில்தினமும்

வளர்ந்து

உன் அருகாமையில்

மலரத்துடிக்கும்
நேச அரும்புகள்

காற்றுவயலில்
அறுவடைக்குக்
காத்திருக்கும்
கவிதைப்பயிர்கள்
இளைப்பாறும் நேரத்திலாவது
இனியதுணையாக வந்துவிடு!

பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 17

புரட்சித் திருமணம்

- மோ. கணேசன்


திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறதாம் - எப்படி
இந்தச் சாதிக்காரனுக்கு
அவனுடைய சொந்த சாதியில்தான்
மணமுடிக்கப்பட வேண்டுமென்று...
மதம் விட்டு மதம் மாறியோ
சாதி விட்டு சாதி மாறியோ
மணக்கக் கூடாது... - மாக்கள்
செய்து வைத்திருக்கும் மடத்தனமான வரையறை..!

மடத்தனம் இது மடமைத்தனம்
என்று எதிர்த்துச் செய்தால்
ஏசல் விழும்... பூசல் எழும்...
பல சமயங்களில் உயிரே வீழும்..!

சாதி விட்டு சாதி மாறி மணம் செய்தால்
அது கலப்புத் திருமணமாம்...
எந்த அறிவாளியடா(?) இதற்கு அப்படியொரு
கேவலமான பெயர் வைத்தான்..?

மனித இனத்தை விட்டுவிட்டு
விலங்கினத்தையா மணம் செய்தோம்?
அதை கலப்பு மணம் என்று
கடிந்து சொல்வதற்கு..?

அந்தத் திருமணத்தை...
சாதிகள் ஒழிய... சமத்துவம் மலர...
நற்சமுதாயம் வளர மனமொத்த தம்பதிகள்
செய்த புரட்சித் திருமணமென்று சொல்லுங்கள்..!

சமயசார்பற்ற நாடு என்பதை விட
சாதி மதமற்ற நாடு என்று
சொல்லிக் கொள்வதில்
நாம் பெருமைப் படலாம்..!

இனியேனும் அதை கலப்பு மணம்
என அழைக்காதீர்கள்...
புதிய சமுதாயம் படைக்கும்
'புரட்சித் திருமணங்கள்' என்று சொல்லுங்கள்..!

சாக்காடான சாதிகளின் பெயரால்
மதம் பிடித்த மதங்களின் பெயரால் - இனி
எக்கொடுமைகளும் நடவாமலிருக்க
நாடெங்கும் நடக்கட்டும் 'புரட்சித் திருமணங்கள்'
அதற்கு ஆதரவு நல்கட்டும் இளைஞர் மனங்கள்...



--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்

"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"

முதலாமாண்டு நிறைவு விழா

http://panbudan.blogspot.com/

பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 16

மீட்சி
- ஷைலஜா


உறவினர்களிடம்
பேசும்போதெல்லாம்
ஊர்பேர்தெரியாதவர்களிடம்
பேசுவதாய்
உணர்கிறேன்
உன்னிடம் பேசும்போதோ
புதுப்புது உறவுகளைக்
காண்கிறேன்
இசையாய்நிறைகிறது
உன் காலடி ஓசை
தாலாட்டாய் நினைத்தே
உறங்கிவிடுகிறேன்
ஒவ்வொருநாளும்
உன் மௌனத்தில்
காலம் கரைகிறது
மீட்டுத்தர வருவாயா
விரைந்து?
தனிமைவீட்டில்
ஞாபகங்களே
வாசற்கோலங்கள்

உன் பார்வைக்குள்
அகப்பட்டுக்கொண்டபோதே
சிறைபிடித்துப்போனாய்!
விடுதலைவேண்டாம்
கூண்டுக்கிளிவாழ்க்கை
குதூகலமானதுதான்.

பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 15

அன்று அயோத்தி... இன்று அமர்நாத்...
- மோகனன்


அன்று...
அண்ணன் தம்பிகளாய்
வாழ்ந்த நம்மை
அந்நியர்களாக்கியது
அந்த அயோத்தி....
ஐயோ... தீ..!

இன்றோ...
அமர்நாத்..
அங்கு அமருவதற்கு கூட
அடுத்தவனிடம்
அனுமதி கோரும்
அவல நிலை..!

உயிரற்ற பொருள்களுக்காக
விலை மதிப்பற்ற பல
மனித உயிர்கள்
இனியும் பலியாக வேண்டுமா..?

மதி கெட்ட மனிதா...
மதங்கள் உங்களை
நெறிமுறைப்படுத்தவே..!
பலரின் குரல்வளைகளை
நெறிப்பதற்காக அல்ல..!

மதங்களை மறந்து
மனிதங்களை வளர்த்துப்பார்..!
அப்பொழுது புரியும்
மனிதத்தின் மகத்துவம்..!

அமைதிப் பூங்காவாய்
இருந்த நம் தேசத்தை
அய்யோத்தியின் பெயரால்
அமர்நாத்தின் பெயரால்
மதநெருப்பைக் கொண்டு
மீண்டும் ஐயோ... 'தீ'... யாக்கிவிடாதே..!

பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 14

ஃபஹீமா ஜஹானின் 'ஒரு கடல் நீரூற்றி' - விமர்சனம்
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,இலங்கை.


ஒருவர் தான் பார்த்த,கேட்ட, அனுபவித்த விடயங்களை மற்றவரும் புரியும்படி எத்திவைப்பதென்பது எழுத்தின் முக்கியப்பணி. எழுத்துக்களின் வகைகளில் கவிதை முக்கிய இடம் பெறுகிறது. கவிதை எனச் சொல்லி எதையோ கிறுக்கிவிட்டு, வாசிப்பவர் மனதில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படாமல் போகும் எழுத்துக்களைக் கவிதை எனச் சொல்வது இயலாது.

ஃபஹீமா ஜஹான் இதுவரையில் எழுதியிருக்கும் ஐநூறுக்கும் அதிகப்படியான கவிதைகளிலெல்லாம் வாசிப்பவர்களின் மனதில் சோகத்தைப் பூசிச்செல்வது தான் அவரது கவிதைகளின் வெற்றி. எழுதும்போது அவர் சிந்தித்த கருவை வாசகர் மனதிற்குப் புரிய வைக்கும்படியான சொல்லாடலில் அவரது கவிதைகள் மிளிர்கின்றன. ஒவ்வொரு கவிதையிலும் காணப்படும் சொற்களின் வித்தியாசம்,எளிமையான ரசனை மிக்க வரிகள் ஆகியன ஆயாசமின்றிக் கவிதைகளை வாசிக்கத் தூண்டுகின்றன. கவிதை வாசித்து முடித்தபின்னரும் அதுபற்றியதான பிம்பங்களை தொடர்ந்து மனதிற்குள் ஓடச்செய்தவாறு இருப்பதே சிறந்த கவிதையின் அடையாளம். அது போன்ற சிறந்த கவிதையின் அடையாளங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன ஃபஹீமா ஜஹானின் கவிதைகள்.

ஏறத்தாழ பத்து வருடங்களுக்கும் மேலாகக் கவிதைகள் எழுதிவரும் இவரது முதல் தொகுப்பு 'ஒரு கடல் நீரூற்றி...'.
பனிக்குடம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தத் தொகுப்பு முன்னுரைகளெதுவுமற்று நேரடியாகக் கவிதைகளுக்குள் இழுத்துச் செல்கிறது. புத்தக அட்டையோடு சேர்த்து அதன் பக்கங்களும் மிக எளிமையான வடிவத்தில் கோர்க்கப்பட்டு கவி சொல்லும் துயரங்களை மட்டும் உரக்கப்பேசச் செய்கின்றது.

'அவசரப்பட்டு நீ
ஊரைக் காணும் ஆவலிலிங்கு வந்துவிடாதே
வதைத்து எரியூட்டப்பட்ட சோலைநிலத்தினூடு
அணிவகுத்துச் செல்லும் காவல்தேவதைகள்
அமைதியைப் பேணுகின்றன.
அந்த ஏகாந்தம் குடியிருக்கும்
மயானத்தைக் காண உனக்கென்ன ஆவல்?
வந்துவிடாதே '

எனும் அட்டைக் கவிதை சொல்லும் வலிகளோடு ஆரம்பிக்கிறது ஃபஹீமா ஜஹானின் 'ஒரு கடல் நீரூற்றி...' கவிதைத் தொகுப்பு.

தொகுப்பின் முதல்கவிதையாக 'அம்மையே உனைக் கொன்ற பழி தீர்த்தவர்களாய்..'
ஒரு கிராமத்துப் பெண்ணின் யௌவனக் காலம் தொட்டு முதுமை வரையில் அவளது வாழ்வை, அவள் வாழும் வாழ்வினை அழகாகச் சொல்கிறது. அந்தப்பெண்ணின் வாழ்வியலைக் கவிஞர் இப்படி அழகாக ஆரம்பிக்கிறார்.

ஆண்களை மயக்கும் மாய வித்தைகளை
நீ அறிந்திருக்கவில்லை:
ஓர விழிப் பார்வைகளோ...
தலை குனியும் தந்திரங்களோ... உன்னிடமிருக்கவில்லை!
தெளிவும் தீட்சணியமும் உன் பார்வையிலிருந்தது:
உறுதியும் தைரியமும் உன் நடையிலிருந்தது:
அலங்காரமும் ஒப்பனையும் உன்னிடமில்லாதிருந்தது:
எளிமையும் பரிசுத்தமும் நிரம்பியதாய் உன் வாழ்க்கையிருந்தது!

சுய ஒழுக்கமும் தூய்மையும் நிறைந்த ஒரு கிராமத்துப் பெண்ணின் குண இயல்புகளை அழகாகச் சித்திரப்படுத்துகிறது இந்த வரிகள். இனி அவரது தொழில் குறித்தும் அவரது வீரதீரங்கள் பற்றியும் இப்படிச் சொல்கிறார்.

இளம் பெண்ணாக அப்பொழுது
வயல் வெளிகளில் மந்தைகளோட்டிச் செல்வாய்:
அடர்ந்த காடுகளிலும்...
வெள்ளம் வழிந்தோடிய ஆற்றங்கரைகளிலும்...
விறகு வெட்டித் தலைமேல் சுமந்து திரும்புவாய்!
அப்போதந்தக் காடுகளில் வாழ்ந்த பேய்,பிசாசுகள்
தூர இருந்து கனைத்துப் பார்த்துப் பின்
மறைந்து போவதாய் கதைகள் சொல்வாய்!
வீட்டிலும் வெளியிலும் உன் குரலே ஓங்கியொலித்தது!

இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் பேய், பிசாசுகள் உண்மையான பேய், பிசாசுகள் தானா? சமூகத்தையும் அதிலிருந்து கொண்டு அதிகாரங்கள் விதித்திடும் சில கயவர்களையும் சேர்த்துத்தான் இச்சொற்கள் குறிப்பிடுகின்றன என நினைக்கிறேன். வீட்டிலும் வெளியிலும் அவள் குரல் தைரியமாக ஓங்கியொலித்திருக்கிறது. அப்போதைய அக்கிராமப் பெண் அப்படியிருந்திருக்கிறாள்.

காலப் பெருஞ் சுழியில்-நீ
திரிந்து வளர்ந்த அடவிகள் யாவும் மெல்ல அழிந்தன:
பளிங்கு போல் நீரோடிய அருவிகள் யாவும்
அசுத்தமாகிப் பின் தூர்ந்து போயின:
கடந்த காலம் பற்றிய உன் கதைகளிலெல்லாம்
கசப்பான சோகம் படியலாயிற்று!

காலம் தன் எல்லைகளைச் சுருக்கி அவளில் முதுமையை வரைய ஆரம்பித்த கதையை அழகாகச் சொல்கிறார்.அவளிலிருந்த அத்தனை வசந்தங்களையும் காலம் வற்றச் செய்து,

உன் பொழுதின் பெரும் பகுதி
படுக்கையில் முடங்கிப் போனது!
ஓய்வற்றுத் திரிந்த உனது பாதங்கள்
பயணிக்க முடியாத் திசைகள் பார்த்துப் பெருமூச்செறிந்தன:
வேலைகளை எண்ணி
உனது கரங்கள் துடிக்கும் பொழுதுகளில்
இயலாமைகள் கொண்டு புலம்பத் தொடங்குவாய்!

படுக்கையில் தள்ளியவிடத்துத் தன் பால்யத்தையும் ஓடியாடி வேலை செய்து களித்த நாட்களையும் எண்ணிச் சோர்ந்து புலம்பல்களில் பொழுதைக் கழிக்கும் அம் மூதாட்டியின்

நோய் தீர்க்கவென
சந்தடிகள் நிரம்பிய நகரக்குக் கூட்டிவரப் பட்டாய்!
உன் காற்றும் நீரும் மண்ணும் ஆன்மாவுமிழந்து...
நகரடைந்தாய் நீ மட்டும்!
உணர்வுகள் அடங்கி ஓய்ந்த பின் ஒரு நாள்
உறவுகள் கூடி உனைத் தூக்கிச் சென்றனர்...
உனக்கான மண்ணெடுத்த பூமி நோக்கி!
அம்மையே!
இப்போது நாம் வாழ்கிறோம்
எல்லோர் கையிலும் பொம்மைகளாக...!

பழகிய தடங்களிலிருந்து புதுப் பாதைகளில் பயணித்த உயிர் அடங்கிய கணத்தோடு இப்போதைய பெண்களின் வாழ்க்கையை பொம்மைகளுக்கொப்பிட்டு அருமையாகக் கவிதையை முடிக்கிறார் கவிஞர். இது கவிதை மட்டும் தானா? உயிர் வதைக்கச் சுடும் நிஜம் அல்லவா?

தொகுப்பிலிருக்கும் இன்னொரு கவிதையான ' இரகசியக் கொலையாளி' கவிதையும் ஒரு கிராமத்து மூதாட்டியைப் பற்றியது. தனது அம்மம்மாவின் அந்திமக் காலத்தில் தன்னால் அருகில் இருக்கமுடியவில்லையே என்ற ஏக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது இக்கவிதை. தனது சிறிய வயது முதல் தன்னைப் பார்த்துப் பார்த்து வளர்த்திட்ட அம்மம்மாவைச் சிலகாலம் பிரிய நேர்கிறது கவிஞருக்கு. அப்போதைய அம்மம்மாவின் மனநிலையை அழகாக விவரிக்கிறது கவிதையின் இவ்வரிகள்.

உனைப் பிரிந்து நான்
நீள் தூரம் சென்ற காலங்களில்
உயிர் வதைபட வாழ்ந்திருந்தாய்
மீளவந்து உனைக் காணும்
ஒவ்வொரு காலத்திலும்
அநாதரவாய் விடப்பட்ட
உனதுயிரின் கரைகளை
அரித்தரித்தே அழித்திருக்கும்
மூப்பும் துயரும்

அம்மம்மாவின் இறுதிக் கணங்களில் தான் அருகில் இல்லாமல் போனதைப் பெரிதும் வலியுடனும், ஆயுள் முழுதும் மனதில் ஆணியடித்துக் கிடக்கும் குற்றவுணர்வோடும் பதிந்திருக்கிறார் இப்படி.

உன் கடைசி நிம்மதியும்
நான் தான் என்பதை ஏன் மறந்தேன்?
கைசேதமுற்றுத் தவிக்கும் ஆன்மாவைச்
சாவு வரையும் சுமந்தலைய
ஏன் விதிக்கப் பட்டேன்?

தொகுப்பில் இவரது அடுத்த கவிதையான 'அவள் அவளாக' கவிதை ஆண்களின் சிம்மாசனங்களுக்கு அடிமைப் பெண்களாக வாழும் பெண்களின் துயரங்களைப் பாடுகிறது .

உனது தேவதைக் கனவுகளில்
அவளுக்குக் கிரீடங்கள் வேண்டாம்:
உனது இதயக் கோவிலில்
அவளுக்குப் பூஜைப் பீடம்வேண்டாம்:
உனது ஆபாசத் தளங்களில்
அவளது நிழலைக் கூட
நிறுத்தி வைக்க வேண்டாம்:
வாழ்க்கைப் பாதையில்
அவளை நிந்தனை செய்திட
உனது கரங்கள் நீளவே வேண்டாம்!

என வலியுறுத்தும் கட்டளைகளோடு ஆரம்பிக்கும் கவிதை, எளியவரிகளில் புரிந்து கொள்ள எளிதாக இருப்பதானது இக்கவிதையின் பலம் எனலாம். பல கவிஞர்கள் , மற்றும் பலர் பெண்களை வர்ணிக்கப் பயன்படுத்துபவற்றைத் தனது சொற்களில் சாடுகிறார் இப்படி.

அவளது விழிகளில் உனதுலகத்தின்
சூரிய சந்திரர்கள் இல்லை :
அவளது நடையில்
தென்றல் தவழ்ந்து வருவதில்லை:
அவளது சொற்களில்
சங்கீதம் எழுவதும் இல்லை:
அவள் பூவாகவோ தளிராகவோ
இல்லவே இல்லை!

ஆண்களின் உலகில் பெண்களின் நடவடிக்கைகள் எல்லாம் கூட ஆண்களாலேயே தீர்மானிக்கப் படுகின்றன. அவளது சுயம் தகர்த்து அதில் தன் ஆளுமையை விருத்தி செய்ய முயற்சிக்கின்ற ஆண்களுக்குக் கவிதையின் இறுதிப் பகுதி சாட்டையடி.

காலங்காலமாக நீ வகுத்த
விதிமுறைகளின் வார்ப்பாக
அவள் இருக்க வேண்டுமென்றே
இப்போதும் எதிர்பார்க்கிறாய்

உனது வாழ்வை வசீகரமாக்கிக் கொள்ள
விலங்குகளுக்குள் அவளை வசப்படுத்தினாய்:
நான்கு குணங்களுக்குள் அவள்
வலம் வர வேண்டுமென வேலிகள் போட்டாய்:
அந்த வேலிகளுக்கு அப்பாலுள்ள
எல்லையற்ற உலகை
உனக்காக எடுத்துக் கொண்டாய்!

எல்லா இடங்களிலும்
அவளது கழுத்தை நெரித்திடவே
நெருங்கி வருகிறது உனது ஆதிக்கம்!

அவள் அவளாக வாழ வேண்டும்
வழி விடு!

இதே போன்ற கருவை தொகுப்பில் உள்ள 'பேறுகள் உனக்கு மட்டுமல்ல' கவிதையும் கொண்டிருக்கிறது.

அவளைப் பலவீனப் படுத்த
எல்லா வியூகங்களையும் வகுத்த பின்பும்
அவளை உள் நிறுத்தி எதற்காக
இன்னுமின்னும் வேலிகளை எழுப்புகிறாய்?

எனத்தொடரும் கவிதையானது ,

உனதடி பணிந்து தொழுவதில் அவளுக்கு
ஈடேற்றம் கிடைக்குமென்றாய்:
கலாசாரம்,பண்பாடு எனும் அரிகண்டங்களை
அவளது கழுத்தில் கௌரவமாய்ச் சூடினாய்

உனது மயக்கங்களில்
தென்றல்,மலர்,இசை...
தேவதை அம்சங்களென...
அவளிடம் கண்டவையெல்லாம் பின்னர்
மாயைகளெனப் புலம்பவும் தொடங்கினாய்

என மகளாக, சகோதரியாக, மனைவியாக, அன்னையாக அர்த்தமுள்ள உருவெடுக்கும் பெண்ணவளைச் சாய்க்கும் உத்தியோடு வரும் ஆண்களிடம் கேள்விகேட்டுச் சாடுகிறது இக்கவிதை.

அடுத்த கவிதையான 'அவர்களுக்குத் தெரியும்' கவிதையானது யுத்த மேகம் சூழத் தொடங்கிய காலப் பகுதியைப் பேசுகின்றது. யுத்தம் சூழ்வதற்கு முன்னரான ஏகாந்தமும் அமைதியும் நிலவிய ஊரின் பகுதியினைக் கவிஞர்,

எமது கல்லூரி வளவினுள்ளே
வன விலங்குகள் ஒளிந்திருக்கவில்லை:
எமது நூலகத்தின் புத்தக அடுக்குகளை
ஓநாய்களும் கழுகுகளும்
தம் வாழிடங்களாய்க் கொண்டதில்லை:
நிலாக்கால இரவுகளில்
உப்புக் காற்று மேனி தழுவிட
விவாதங்கள் அரங்கேறிடும்
கடற்கரை மணற்றிடலில்
பாம்புப் புற்றுகளேதும் இருக்கவில்லை:
மாலைகளில் ஆரவாரம் விண்ணளாவிட
எமதிளைஞர்
உதைபந்தையன்றி வேறெதையும் உதைத்ததுமில்லை:
பக்திப் பரவசத்தில் ஊர் திளைக்கும் நாட்களில்
எமதன்னையர்
நிவேதனத்தையன்றி வேறெதனையும்
இருகரமேந்தி ஆலயமேகவுமில்லை!

இப்படிக் குறிப்பிடுகிறார். இப்படி அழகான அமைதி குடியிருந்த ஊரில் ஓர்நாள்,

இங்கெல்லாம் புரியாத மொழி பேசியவாறு
துப்பாக்கி மனிதர்கள்
ஊடுறுவத் தொடங்கிய வேளை
விக்கித்துப் போனோம்:
வார்த்தைகள் மறந்தோம்.
எமது கல்லூரி,நூலகம்,கடற்கரை,
விளையாட்டுத்திடல்,ஆலயமெங்கிலும்
அச்சம் விதைக்கப் பட்டு
ஆனந்தம் பிடுங்கப் பட்டதை
விழித்துவாரங்களினூடே
மௌனமாய்ப் பார்த்திருந்தோம்!

அறிமுகமற்ற பேய் பிசாசுகளையெல்லாம்
அழைத்துக் கொண்டு இரவுகள் வந்தடைந்தன.
எமது வானவெளியை
அவசரப்பட்டு அந்தகாரம் ஆக்கிரமித்தது.
அடர்ந்து கிளைவிரித்துக் காற்றைத் துழாவிய படி
எம்மீது பூச்சொறிந்த வேம்பின்
கிளைகள் முறிந்து தொங்கிட அதனிடையே
அட்டுப் பிடித்த கவச வாகனங்கள்
யாரையோ எதிர் கொள்ளக் காத்திருந்தன.

எமதண்ணன்மார் அடிக்கடி காணாமல் போயினர்:
எமது பெண்களில் வாழ்வில்கிரகணம் பிடித்திட
எதிர்காலப் பலாபலன்கள் யாவும்
சூனியத்தில்கரைந்தன.

யுத்தத்தின் பிடியிலிருந்து எதிர்காலத்தைத் தொலைத்த உயிர்களின் எஞ்சிய வாழ்வினை எவ்வாறெல்லாம் யுத்தம் பாதித்திருக்கிறதெனக் கவிதையின் இறுதியில் இப்படிச் சொல்கிறார்.

தற்போதெல்லாம் குழந்தைகள்
இருளை வெறுத்துவிட்டு
சூரியனைப் பற்றியே அதிகம் கதைக்கிறார்கள்:
அவர் தம் பாடக் கொப்பிகளில்
துப்பாக்கிகளை வரைகிறார்கள்:
பூக்களும் பொம்மைகளும் பட்டாம் பூச்சிகளும்
அவர்களைவிட்டும் தூரமாய்ப் போயின:

தொகுப்பிலுள்ள 'உங்கள் மொழியும் எங்கள் வாழ்வும் வேறாக்கப்பட்ட பின்' என்ற கவிதையும் யுத்தத்தைப் பின்புலமாகக் கொண்ட கவிதை. 'ஒரு மயானமும் காவல்தேவதைகளும்' கவிதையும் யுத்தம் தின்று முடித்து எச்சிலான ஊர்களின் நிலையினைப் பேசுகிறது இப்படி.

ஆடிப்பாடிப் பின் அவலம் சுமந்து நீங்கிய
சோலைவனத்தைத் தீயின் நாவுகள் தின்றுதீர்த்தன
நெற்கதிர்கள் நிரம்பிச் சலசலத்த வயல்வெளிகளை
இரும்புச்சக்கரங்கள் ஊடுருவித் தகர்த்தன
எஞ்சிய எமது பள்ளிவாயில்களும் அசுத்தமாக்கப்பட்டன

நானும் நீயுமன்றி
இந்தப் பரம்பரையே தோள்களில் சுமையழுந்திடத்
திசைக்கொவ்வொன்றாய்ச் சிதறுண்டுபோனது
கல்வியும் உழைப்பும் கனவுகளை மெய்ப்பித்திட
ஆனந்தம் பூரித்த நாட்கள் இனியில்லை
பாழடைந்த படகுத்துறைகள்
காடடர்ந்த பயிர்நிலங்கள்
தலை கருகிய கற்பகத்தருக்கள்
தரைமட்டமாகிப்போன எங்கள் குடிமனைகள்
எல்லாம்
பேய்கள் சன்னதம்கொண்டாடிய கதையினைச் சொல்லும்

இதே போன்றதொரு துயரம் நிறைந்த யுத்த இரவொன்றைத்தான் 'முகவரியற்ற நெருப்புநிலவுக்கு' கவிதையும் பேசுகிறது.

மயான அமைதி பூண்ட சூழலைத் தகர்த்தவாறு
வீதியில் ஓடும் காலடிச் சத்தம்-அச்சத்தினூடு
என் கேட்டல் எல்லையினுள் வளர்ந்து தேய்கிறது.
பின் தொடரும் அதிர்ந்து செல்லும் வண்டியில்
அவர்கள் வலம் வருகிறார்கள் போலும்
ஓடிய அந்தப் பாதங்கள் எந்தச் சந்து தேடி ஒளிந்தனவோ?
உருத்தெரியா அந்தக் காலடிகளுக்காக உள்ளம் துடித்தழுதது

அச்சம் கலந்து பிசைந்து விழுங்கிய உணவும்
பீதியுடன் தொண்டைக் குழிக்குள் இறங்கிய நீரும்
பிசாசுகளை எண்ணிப் பயந்ததில் தீய்ந்து விட்டன

எனத் தொடரும் கவிதையில் யுத்தமானது தனது தோழியை ஆயுதம் சுமக்க வைத்ததன் பாரத்தை இறக்கிவைக்கிறது.

இறுகிய முகக் கோலத்தை எப்படிப் பொறுத்தினாயோ?
நெஞ்சிலும் முதுகிலும் ஏதேதோ நிரப்பிய பைகளுடன்
சுடுகலன் ஏந்திய சிலை முகத்தைக் கற்பனை செய்து
பெருமூச்செறிந்தேன்: நீ இனி வரப் போவதில்லை

இதே துயரைப் பாடும் இவரது இன்னொரு கவிதைதான் ' ஒரு கடல் நீரூற்றி...'. கடற்போரொன்றுக்குச் சென்று உயிரிழந்த சினேகிதியின் உடல்களேதுமற்ற நினைவு மண்டபத்துக் கல்லறையில் அவளுடலுக்குப் பதிலாக ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ எனக் கேட்கிறார் கவிஞர்.

அலையெழும்பும் கடல் பரப்பினில்
உனக்கான பணி முடிக்கவென விடைபெற்றுப் போனாய்:
வாழ்த்துச் சொல்ல வாயெழவுமில்லை!
ஆரத்தழுவிட நீ விரும்பவுமில்லை !
வெளியே பெய்த மழை என் கன்னங்களில் வழிந்தோட...
மழைப் புகாரினூடே மறைந்து போனாய் !

திரைகடல் சென்ற திரவியமானாய் !
ஆழிப்பரப்பெங்கும் ஊழித்தீ எழுந்து தணிந்தது-நீ
திரும்பி வரவே இல்லை !

இன்று வீரர்கள் துயிலும் சமாதிகள் மீது
காலத்துயரின் பெரு மௌனம் கவிழ்ந்துள்ளது !
சமுத்திரத்தையே சமாதியாகக் கொண்டவனே !
இங்கு ஏதுமற்ற உன் கல்லறையில்
ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ?

வனாந்தரங்களை இழந்து, வசந்தங்களை இழந்து, தனது கூட்டினை இழந்து, தன் துணையினை இழந்து தனியே வாடும் ஒரு பறவைக்கு அனாதரவான ஒரு பெண்ணை ஒப்பிட்டே 'அழிவின் பின்னர்' கவிதையை எழுதியிருப்பதாகக் கொள்கிறேன்.

வெட்டி வீழ்த்தப் பட்ட மரத்தின்....
அடிக்கட்டை மீது
அமர்ந்துள்ளது பறவை

இன்று அதனிடம்
பறத்தலும் இல்லை..
ஒரு பாடலும் இல்லை....

'எனது சூரியனும் உனது சந்திரனும்' கவிதையின் சில வரிகள் காதலின் பாடலை அழகாக இசைக்கிறது இப்படி.

உன் வானிலொரு சூரியனையும்
என் வானிலொரு சந்திரனையும் கண்டோம்
கதைப்பதற்கு இருந்த எல்லாச் சொற்களும்
கண்களிலேயே தேங்கிடக் கண்டோம்

காதலர்களின் சம்பாஷணைகள் அதிகமாகக் கண்களிலேயே நிகழ்ந்துவிடுகின்றன.காதல், அதன் களிப்புகள், காயங்கள், காத்திருப்புகள் அனைத்தினது பாஷைகளும் ஓர விழிப் பார்வையிலும் ஒரு கண் சிமிட்டலிலும் கண்டுபிடிக்கப்படுகின்றன காதலரிடையே. அதனை ஆழமாகவும் அழகாகவும் எளிமையாகவும் வெளிப்படுத்துகின்றன மேலுள்ள வரிகள்.

பின் வந்த காலத்தில் பிரிவு வந்ததைச் சொல்ல கீழே உள்ள இரு அழகிய வரிகள் போதுமாக இருக்கிறது இவருக்கு.

எனது சூரியனும் தனித்துப் போயிற்று
உனது சந்திரனும் தனித்தே போயிற்று

இதே போலப் பிரிவை அருமையாகச் சொல்லும் இன்னுமொரு கவிதைதான் ' என்னிடம் விட்டுச் சென்ற உன் பார்வைகள்' கவிதையும்.
அதில் பிரிவைச் சொல்லும் அழகிய வரிகள்,

கண்ணீரையும் பிராத்தனையையும்
ஏந்தி உயர்கின்ற கரங்களின் விரலிடுக்கினூடு
உறவின் நூலிழைகள் வழிகின்றன.

'என்ன சொல்கிறாய் ?' கவிதையானது தேசத்தின் மீது கவிஞர் கொண்டுள்ள நேசத்தையும், அது தற்போது இன்னல்கள் பல தருகிறதெனினும் அந்தத் தாய்தேசம் மீது தான் கொண்ட காதலைக் கடைசி வரிகளில் மிக அழகாக வெளிப்படுத்தியிருப்பது பிரமிக்கச் செய்கிறது.

தினமும் வாழ்வு சூனியத்தில் விடிந்திட…
உயிர்கள் எந்தப் பெறுமதியுமற்று அழிந்திட
யாருக்கும் யாருமற்ற சாபம் பிடித்த வாழ்வைச்
சபித்தவளாக நான் வாழ்ந்த போதும்
எனது தேசம் எனக்கு வேண்டும்!
நீ என்ன சொல்கிறாய் ?

'இரு திசைவழி போனபின்' கவிதையானது தனது அண்ணனுக்கான கவிதையாக இருந்தபோதிலும் அதன் வரிகளினூடே தங்கையின் வாழ்க்கையை அழகாக விவரிக்கிறது.

என் மனதிலிருந்து துயர அலைகள் எழுந்து
ஆர்ப்பரித்துப் பொங்கும் வேளைத்
தூர நிலம் கடந்து
உனக்குள்ளும் அலைகள் எழுமோ?
மனதை விட்டு
உன் நினைவு தொலைந்து போயிருக்கும்
அவ்விருண்ட பொழுதுகளில்
தொலைபுலத்துக்கப்பாலிருந்து வரும்
உனதழைப்புக்கு நன்றி.

என்ற நன்றியோடு தொடரும் கவிதையானது அவளது துயரங்களையும் அவனுடனிருந்த பொழுதுகளில் அவனது அன்பான நடவடிக்கைகளையும் விபரித்து, அவளது இன்றைய வாழ்விலும் தொடரும் துயரங்களைச் சொல்லி ஓய்கிறது.

வீடென்ற சிறைக்குள் சிக்குண்டவள்
மீளவும் மீளவம் நரகத்துழல்கிறேனடா!
இங்கு தினமும் நான் காணும்
பல்லாயிரம் மனிதரிடையேயிருந்து
எப்போது நீ தோன்றி மீண்டும் புன்னகைப்பாய்?

'இருண்டுபோகின்ற நாமும் ஒளி வழங்கும் அவளும்' கவிதையான வாழ்வின் ஒளியாக விளங்கும் அன்னையைப் பற்றியது.

அவரவர் வேலைகளில் வீடு மூழ்கியிருந்த
மழைக்கால இரவொன்றில்
நிசப்தத்தையும் இருளையும்
உள் நிறுத்திப் போயிற்று மின்சாரம்!

நிசப்தத்தையும் இருட்டையும் வீட்டை ஆக்கிரமிக்கச் செய்து ஒளிந்துகொண்ட வெளிச்சத்தை அன்னை காவிவந்து ஒளியூட்டும் ஒரு நாளின் இரவைப்பற்றிய இக்கவிதையை வாசிக்கையில் காட்சிகள் கண்முன்னே விரிகின்றன. மீண்டும் ஒளியற்றுப் போனபொழுதில் அன்னைக்கு வெளிச்சம் ஏந்திச் செல்ல யாருமற்றுப் போனதையும், அவ் வெளிச்சத்தைத் தன் பிள்ளைகளிடமிருந்து எதிர்பார்க்காத தியாகம் பொருந்திய பெண்ணாகத் தாய் அழகாகச் சித்தரிக்கப்பட்டுக் கவிதை பூர்த்தியாகியிருக்கிறது.

மறுபடியும் இருளினுள் வீடமிழ்ந்த பொழுது
சமையலறையினுள் சிக்கியிருந்த அம்மாவுக்கு
ஒளிச் சுடரொன்றினை ஏந்தி யாருமே நடக்க வில்லை:
எவரின் உதவியும் இன்றி
இருளினுள்ளேயிருந்து
எல்லோருக்குமான உணவைத் தயாரித்தாள் எனதன்னை

'சாபங்களையகற்றிய குழிகளின் மீதிருந்து...' கவிதையானது போர்க் காலப்பகுதிகளில் யுத்தப்பிரதேசங்களில் விதைக்கப்பட்ட நச்சுக்கிழங்குகளை (கண்ணிவெடிகளை)ப்பற்றியது.

அவர்களும் விதைத்தனர்
இவர்களும் விதைத்தனர்:
எந்தப் பாதமொன்றோ தம் மீது படும் வரை
உருமலை உள்ளடக்கிக்
காலங்கள்தொறுமவை காத்துக்கிடந்தன!

தத்தித் தவழும் பாலகனோ...
ஏழைத் தாயொருத்தியோ...
இனிய இளைஞnihருவனோ...
மதகுருவோ...
மேய்ச்சலுக்குச் சென்ற மந்தையொன்றோ...
அல்லது
குறிவைத்த அவர்களிலும் இவர்களிலும் எவரோ?

போர் நிறுத்த ஒப்பந்தம் சாத்தியப்பட்ட காலங்களில் கண்ணிவெடிகளைத் தோண்டியகற்றும் தொண்டுநிறுவனங்கள் வந்தன. அவற்றின் ஊழியர்கள் வந்து தேடித்தேடி அகற்றிய நச்சுக்கிழங்குக் குழிகளில் இனி எதனை விதைக்கப் போகிறோமெனக் கேட்டு முடிக்கிறார் கவிஞர்.

நெஞ்சிலுள்ள செஞ்சிலுவை அவனைக் காத்திட
தன் கரம் சுமந்த கோலுடன்
அங்குலமங்குலமாக
வன்னிப் பெரு நிலம் தடவி நச்சுக் கிழங்குகள் தோண்டுகிறான்!

எங்கிருந்தோ வந்த தேவ தூதனாய்
எம்மொழியும் அறியான்...எமதினமும் அறியான்...
அவனொருவன் சாபங்களைத் தோண்டியகற்றிய குழிகளில்
நாமினி எதை நடப் போகிறோம்?

ஒரு சிறுமியின் கால்பாதம் கோழிக்குஞ்சொன்றின் தலைமீதேறியதோர் நாள். இரு ஜீவன்களினதும் உயிர் துடித்த கதையைப் பரிதவிப்புடன் விளக்குகிறது 'சிறுமியின் கோழிக்குஞ்சு' கவிதை. இறுதியில் கோழிக்குஞ்சு இறந்து போய்விட அதன் வரிகளை வாசித்துமுடித்த பின்னர் பெரும் பாரமொன்று மனதில் அப்புகிறது.

குஞ்சுடன் முன்னும் பின்னும் அலைந்து
சிறுமியின் பார்வைக்குத் தப்பித் திரிந்த மரணம்
முதலில் அதன் சின்னஞ் சிறு சிறகிரண்டிலும் வந்தமர்ந்தது:
சிறகுகள் கீழே தொங்கிட மெல்ல மெல்ல நகர்ந்தது குஞ்சு:
அந்திப் பொழுதில் சாவு அதன் கழுத்தின் மீதேறி நின்றது:
ஒரு மூதாட்டி போலச் சிறகு போர்த்தி
அசைவற்றுப் படுத்தது குஞ்சு!

இரவு நெடு நேரம் வரை காத்திருந்த மரணத்தின் கரங்கள்
சிறுமி தூங்கிய பின்னர்
துண்டு நிலவும் மறைந்து வானம் இருண்ட பொழுதில்
அந்தச் சிறு உயிரைப் பறித்துப் போயிற்று!

'வயற்காட்டுக் காவற்காரி' கவிதையானது சுயமிழக்க நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு பெண்ணின் நிலையை துயர்மிகப் பாடுகிறது. கவிதையின் முதல்வரிகள் வயற்காட்டுப் பொம்மையொன்றைப் பற்றிய அழகிய வர்ணனைகள் கொண்டது.

கொட்டும் மழையிலும் - அவள்
சிரித்துக்கொண்டிருப்பாள்
எரிக்கும் வெயிலிலும் இன்முகத்துடனே இருப்பாள்
அவளது வேதனைகளை வெளிக்காட்டும்படியாக
அவளின் முகக்கோலம் அமைந்திருந்தால்
காணுகின்ற கண்களிலெல்லாம் கண்ணீர் வழியும்

என அதிரவைக்கும் வரிகள் துயர வாழ்வினைக் கொண்ட நிஜப்பெண்களின் வாழ்வையும்தானே குறிக்கின்றன ? எத்தனையோ போராட்டங்கள், எத்தனையோ தற்கொலைகள் இதைத்தானே பேசுகின்றன ? இறுதியில் மனமுறுத்தும் கேள்விகளைக் கேட்டுக் கவிதையை முடிக்கிறார் இப்படி.

அவளைத் தாங்கிநின்ற பூமியே !
அவளைப் பரிதாபமாய்ப் பார்த்திருந்த வானமே !
அவளது மௌனமும் ஒரு நாள் வெடிக்குமா
குமுறுகின்ற எரிமலையாக
அதிரவைக்கும் இடிமுழக்கமாக

இதே கருவைத் தாங்கிய இன்னொரு கவிதைதான் ' அவளுக்குச் சட்டம் வகுத்தது யார்?' கவிதையும். இதிலும் பெண்ணானவளை வயற்காட்டு பொம்மைக்கே ஒப்பிட்டிருக்கிறார்.

வாழ்வு பற்றிய நம்பிக்கைகள் இருந்திருப்பின்
கடல் நடுவே கைவிடப்பட்டிருப்பினும்
கரையேறி வந்திருப்பாள்
எவரின் தோட்டத்திலோ
குருவி விரட்டவும் காவல்புரியவும்
நிறுத்திவைக்கப்பட்ட பொம்மைச் சேவகியவள்

எனத் தொடரும் கவிதையானது

அவளுக்கே அவள் இல்லாமல் போனபின்னர்
அவளது ஆன்மாவின் அழிவைப் பற்றி அவளறியாள்
இதுவே அவளது
இன்றைய கதையும்
நாளைய கதையும்

என்பதோடு முற்றுப்பெருகிறது.

இக்கவிதைத் தொகுதியின் அனைத்துக் கவிதைகளும் ஒரு அருமையான அனுபவத்துக்கு இட்டுச் செல்வதோடு சில ஏக்கங்களை, சில விபரங்களை, சில நிஜங்களை, சில துயரங்களை மனதில் பரப்பியும் விடுகிறது. அதன் பாடுபொருட்களை நாமனைவரும் ஒரு கணமேனும் அனுபவித்திருப்போம். அறிந்திருப்போம். அதனையே அழகாகச் சொல்லுமிடத்து கவிதையின் உக்கிரம் இதயத்தில் ஆழமாகப் பதிகிறது. கவிதையின் நடையும், நான் முன்பு கூறியது போல எளிமையான ரசனை மிக்க வரிகளும் கவிதையை மேலும் அழகுறச் செய்கின்றன. தொடர்ந்தும் இதுபோன்ற சிறந்த கவிதைகளையெழுதும்படி வாழ்த்துவதோடு இன்னும் அதிகமான தொகுப்புக்களை வெளியிடுமாறு கவிஞரைக்கேட்டுக் கொள்கிறேன்.

பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 13

பெண் சிசுவின் கேள்வி
- மோகனன்


அம்மா... நீ உணர்ச்சிகளுக்கு
அடிமையாகாதே..?
அப்படி அடிமையானதால்
கருவாகி உருவாகி விட்டேன்
உன் கருவறையில்
பெண் சிசுவாய்...

என்னால் அப்பனை
அறியமுடியாது - ஆனால்
உன்னை நானறிவேன்
கருவறையில் மட்டும்...

பிறந்தது பெண் சிசு
என்பதால்
கல்லெறிவது போல்
என்னையும் முள்வேலியில்
எறிந்து விட்டாயே...
ஏனம்மா..?

பெண்ணாகப் பிறந்து விட்டால்
பொன், பொருளுடன்
ஆடவனிடம் தரவேண்டும்
என்ற சமூக கட்டிற்கு
பயந்துவிட்டாயா..?

இல்லை... தவறான முறைதனில்
தப்புத் தப்பாய் நீ செய்த
திரைமறைவு காரியங்கள்
உன்னை வெளிச்சத்தில்
கொண்டு வந்துவிட்டதே
என்ற வேதனையா..?

நான் செய்த பாவமென்ன...
நீ சிற்றின்பம் அடைய
நானன்றோ பெருந்துன்பத்திற்கு
ஆளாகியிருக்கிறேன்...

அரசுதான்
உன்போன்றோர்க்கு
ஆயிரம் முறை சொல்கிறதே
பாதுகாப்புடன்..... கொள்ளுங்கள்
பாதுகாப்புடன்..... கொள்ளுங்கள் என்று

அப்படி நீ செய்யாததால்
என்னையல்லவா
இன்று பாதுகாக்காமல்
கொல்லுகின்றாய்..?

இனியேனும் நீ இதுபோன்ற
உணர்ச்சிகளுக்கு அடிமையாகாதே
அப்படி நீ அடிமையானதால்
இன்று என் உயிர்
மெல்ல மெல்ல ஊமையாகிக்
கொண்டிருக்கிறது
முள்வேலிகளின் பிடியில்...

இனியேனும் நீ
உணர்ச்சிகளுக்கு அடிமையாகாதே
என் போன்றோர்
இந்த பாவ பூமியை
பார்க்காத பாக்கியமாவது
கிட்டும்...
(நீயன்றோ உத்தமத் தாய்)

பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 12

இனிய கணங்கள்
- ஷைலஜா

இனிய கணங்கள்
எத்தனை விலை?
வாங்கக்காத்திருக்கிறேன்

வாழ்வுப்பாலையில்
நடந்துநடந்து
வண்ணங்களையெல்லாம்
இழந்துவிட்டேன்

வாழ்க்கை இத்தனை வறட்சியானதென்று
அறிந்திருந்தால்
பயணத்தையே
தொடங்கி இருக்கமாட்டேன்

பாலைமணலில்
பதிந்து நடக்கும்போது
தடுக்கி விழும் கணங்களிலெல்லாம்
துணையைத்தேடி
தவித்துப்போகிறேன்

துணையாருமில்லை
தோள்கொடுக்கவாவது
இனியகணங்கள் எனக்குக்
கிடைக்குமா?

இனிய சிலகணங்கள் போதும்
நீண்டுவிடவேண்டாம் அதுவும்

இனியகணங்களுக்கு
ஈடில்லாவிலையோ?
என்னால் வாங்க இயலுமோ?

பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 11

பாழ்மனது - இலக்கிய கட்டுரை

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


வாழ்க்கை, மிகுந்த ஒரு அலுப்பைத் தந்தப்படி தன் பயணத்தைத் தொடர்ந்தபடி இருக்கிறது. ஒரே பாதையில், சாளரங்களூடாக எந்த விசித்திரமும் அற்று ஒரே காற்று முகத்திலறைய மிக வேகமான பயணம். எல்லா நிறுத்தங்களிலும் ஏதாவதொரு சுவாரஸ்யத்தைத் தேடுகிறது மனது. சுவாரஸ்யங்களற்ற வெளி , அலுப்பை மேலும் அகலமாக்கியபடி பரந்து கிடக்கிறது.
உடுத்திருக்கும் ஆடையில் ஏதாவதொரு குறை சொல்ல, சிறு கீறல் குருதிக் கசிவுக்குக் கூட உடல் பதறி ஒத்தடம் கொடுக்க, சாப்பிட்டாயா? கண்கள் ஏன் சிவந்திருக்கின்றன? என உண்மையான ஆதரவுடன் கேட்கவென ஓர் அன்பான நெருங்கிய துணையைத் தேடுகிறது யாருமற்ற இவ்வெளியில் பாழ்பட்டுக்கிடக்கும் இம்மனது.

காட்சிகளோடும் வர்ணத் திரையை எவ்வளவு நேரம்தான் அலுப்பில்லாமல் பார்த்துக்கொண்டிருக்க இயலும் ? அரிதாரம் பூசிய மனிதர்களை யாராரோ ஆட்டுவித்தபடி இருக்க முகங்களில் உணர்ச்சிகளை வலிந்து ஒட்டுவித்தபடி அசைந்துகொண்டிருக்கிறார்கள் அவர்கள். ஒலி அலைவரிசைகள் மட்டும் என்னவாம்? இதயத்திற்கு நெருக்கமான தாய்மொழிப்பாடல்களைக் கேட்கவிரும்பி காதுகளை அதன் திசையில் திருப்பினால் ஆங்கிலக்கலப்பின்றிய வரிகளையும், தெளிவான உச்சரிப்பையும் வேண்டிச் சோர்கிறது மனது.

தனிமையின் கோரக்கரங்கள் மிகக் கொடியவை. கூர்நகங்களை அவை தம் விரல்களில் பொறுத்திவைத்திருக்கின்றன. அடர்ந்த இருளில் நித்திரையின்றித் தவிக்கும் பொழுதுகளில் அவை இரத்தம் கசியக் கசியக் கீறுகின்றன. தூக்கமின்மை ஒரு பிசாசின் உருவம் பொதித்து வந்து தம் விரல்களை, கூர்நகங்களைக் காட்டி அச்சுறுத்திக் கொண்டேயிருக்கிறது. அதன் அகலத்திறந்த வாய்க்குள் பழைய கசடு நினைவுகளின் துணுக்குகள் இன்னும் எஞ்சியிருக்கிறது.

தனக்கு மட்டுமேயான உணவைத் தானே அரைகுறையாகச் சமைத்து, பகிர்ந்து கொள்ள யாருமற்ற இடத்தில் விழுங்கிச் செரிப்பது துக்ககரமான நிகழ்வன்றி வேறென்ன ? அந்தி நேர வானின் சிவப்பை, கடலின் மீது குதித்துப்பாயுமொரு மீனின் துள்ளலை, ஆதரவாய் வளர்த்த செடியின் முதல் மஞ்சள் மொட்டைக் கைநீட்டிக் காட்ட அருகினில் யாருமற்ற பொழுதின் வெறுமையை என்னவென்று சொல்ல?

சிகை திருத்துபவன் ஒன்றிரண்டு இளநரையைக் கண்டு ஆதூரமாக விசாரித்தால் கூட அதில் சுயநலம் இருக்குமோ என ஆராய்ந்து பார்க்கிறது மனது. செருப்புத் தைப்பவன் கரங்கள் ஊசியை சவர்க்காரத்தில் தோய்த்து இலாவகமாக இறப்பர், தோலுக்குள் செலுத்தி இழுப்பதைப் போல வாழ்க்கையும் தனிமையும் மனதின் முனைகளை வலிக்க வலிக்க இழுத்தபடியிருக்கிறது.

வலுத்த காற்றடிக்கும் போது அந்தரத்தில் ஆடும் சிறு பஞ்சுத் துணுக்குக்கும், ஒரு பாரிய பட்டத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது ? இரண்டுமே காற்றின் வழி மிதந்தபடி இருக்கின்றன.தூரத்தே நோக்கும்போது இரண்டும் சிறுத்தேதான் தெரிகின்றன. என்ன ஒரு வித்தியாசம், பஞ்சு சுயமாய் மேலெழுந்து, தன்பாட்டில் பறக்கிறது. பட்டத்துக்கு மட்டும் அதன் திசையைத் தீர்மானிக்கவென ஒரு கரமும், எல்லையை விட்டு நீங்காதிருக்க நூலொன்றும் தேவையாக இருக்கிறது. இதேதானே ஒரு மாநகரப் பெரும்பணி வெள்ளத்தில் மூழ்கிய ஒரு தனித்த மானிடனுக்கும் ஒரு சிறைக்கைதிக்கும் உள்ள வித்தியாசம் ? பூசைகளுக்காகவே வளர்க்கப்படும் கோயில் பூக்களுக்கும், தானாகப் பூத்துதிரும் காட்டுப்பூக்களுக்கும் உள்ள வேறுபாடு?

கடலலைகளுக்கும் , அதன் சிறுநுரைகளுக்கும் என்ன சம்பந்தமிருக்கப்போகிறது ? காற்றின் கரங்களோடு அள்ளிச் சுமந்துவந்ததை முற்றிலும் சம்பந்தமற்ற மணல்பரப்பில் விட்டுச் சென்று, வெடித்துச்சிதற வைப்பதை சமுத்திரப்பெருவெளி அறிந்தேதான் செய்கிறதா ? அவ்வாறெனின் அந்நியநாடுகளில் துயருரும் அத்தனை எளிய நெஞ்சங்களும் தம்மைக் காற்றின் கரங்களோடு சுமந்துவந்த விமானத்தைத் தானே சாடவேண்டும் ?

அப்படி எதையும், எவரிடமும் சாடக்கூட முடியாத வெறுமையும், தனிமையும், மன உளைச்சல்களும் பலரைத் தன்னையே கொன்றுவிட ஒரு நினைப்பை உந்திவிடுகின்றன. வாழ்க்கையின் அத்தனை அழகியலையும், சுவாரஸ்யங்களையும், பழஞ்சேலையால் போர்த்தி அரவணைத்துக் கொண்ட தாய்மை மிகுந்த அன்பினையும் கனவுகளையும் இழந்துவிட்டதான எண்ணம் மிகைத்தபொழுதில் தான் தற்கொலைகள் சாத்தியப்படுகின்றனவாக இருக்கும்.

காலம் காலமாக வரண்ட நிலங்கள் எப்பொழுதும் கொடியவை. யுகங்களாகத் தாகித்ததை எப்பொழுதேனும் தீர்க்கவெனப் பெய்யும் மழைத்துளிகளை கிஞ்சித்தும் வெட்கமேயற்று முழுதாக உறிஞ்சிக் குடித்துவிடுகின்றன. பின்னரான தாகத்துக்குத் தண்ணீர் தேடித் திரும்பவும் காலம்காலமாகக் காத்துக் கிடக்கும் பூமியை ஒத்தது இந்தப் பாழ்மனது. அன்பினை எவரேனும் வார்த்துவிட்டு நகரும்போது ஆசையாசையாய் முழுக்கக் குடித்துவிட்டுத் திரும்பவும் அன்பிற்காகக் காத்துக்கிடக்கிறது.

வனமொன்றுக்குள் தன் பாட்டில் அழகாக வளர்ந்திருந்த விருட்சமொன்றைத் தரித்து வீழ்த்தி அதன் உயிரகற்றி இலைகளகற்றிச் சருகுகளகற்றிச் சாயமிட்டுப் பொலிவாக்கிக் கூடத்தில் வைத்திருந்து பின் குப்பைமேட்டுக்கு வீசியெறிவது போல அல்லது பறத்தல் இயலுமான சிறு பட்சியின் சூழல் பிரித்து, இறக்கைகள் தரித்து, கூண்டுக்குள் வைத்துக் கொஞ்சச் சொல்வது போலத்தானே இந்த புலம்பெயர் அந்நியநாட்டு வாழ்க்கை ?

இருப்பிடத்தின், பணியிடத்தின் நாற்திசைகளிலும் மனது ஏதோ ஒன்றை எதிர்பார்த்து அலைந்தபடியே இருக்கும். அன்பாய்த் தலை கலைக்க, தோள்தடவ, புன்னகைத்து நேசம் சொல்ல, நெற்றியின் உச்சியில் முத்தமிட்டு நகர என எவரொருவராவது வருவதின் நிகழ்தகவுகள் பூச்சியமாக இருப்பினும் எல்லாவற்றையும் எதிர்பார்த்த மனது அலைந்தபடியே இருக்கும்.

இப்பொழுதில் புத்தகங்களும், சில வலைத்தள எழுத்துக்களும் நேரத்தை விழுங்குவதில் பெரும்பங்கு வகித்திடினும் ஏதேனும் ஒரு அனுபவத்தை, ஒரு சிறு மகிழ்வை மனதில் மீளெழுதிச் செல்கின்றன. இறுதிக்காலம் வரையில் எழுத்தின் வரிகளில் பாதங்களை நட்டுவித்தபடி பயணத்தைத் தொடர விரும்பும் என் சுமையைத் தாங்கிட எத்தனை காலத்துக்கு எழுத்துக்கும் இயலுமோ தெரியவில்லை. வாழ்வின் பாரத்தைத் தவிர்க்கப் பணம் கேட்டுத்தகவல் வரும் பொழுது கவிதைகளையா கொடுத்துக் களைப்பாற்ற முடியும் ?

பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 10

வள்ளிக்கிழவி (சிறுகதை)
- மோகனன்


காலை வேளையில் அன்னவயல் கிராமம் வயல் வேலைகளுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. கதிரவனின் வசம் பார்த்து கருமமே கண்ணாக வேலை செய்ய கிளம்பியவர்களில் வள்ளிக் கிழவியும் ஒருத்தி...

வள்ளிக் கிழவி என்றால் அக்கிராமத்தில் தெரியாதவர்கள் இருக்காது. சிறு குழந்தைகளுக்கும் கூட அவளைத் தெரியும். அவளது குடும்ப பாரம்பரியம் அப்படி. காலம் செய்த கோலம்.. கணவனை இழந்து தம் இரு மகன்களுக்காக வாழ்கிறாள்...

ஐம்பதைத் தாண்டிய வயது. தனது இரு மகன்களுக்காக உழைத்து...உழைத்து சளைக்காத முகம். அவள் கைரேகையைப்போல் அவள் முகத்திலும் சுருக்க ரேகைகள் ஓடியிருந்தது. அவள் கால் வெடிப்புகள் அவள் பட்ட துன்பங்களை கதை கதையாக சொல்லும். அவளுக்கு சொந்தமாக இருந்த அரை ஏக்கர் நிலத்தில் விதைத்திருந்த நெற்பயிர்களில் இன்று களை பறித்தாக வேண்டும்.

அவளுக்கு சொந்தமான வயக்காட்டிற்கு வந்துவிட்டாள். ஆனால் மனம் அங்கு ஒரு நிலையில் இல்லை... 'காஷ்மீர் பகுதியெங்கும் பதற்றம்' என எட்டு மணி செய்தி கேட்டதிலிருந்து மனது அடித்துக் கொண்டது. மூத்த மகன் மோகனனிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. என்ன பண்ணிட்டிருக்கானோ... எப்படி இருக்கானோ... அவனிடமிருந்து ஒரு தகவலும் வரலயே... ம்ஹூம்... ' என்ற பெருமூச்சுடன் களத்துமேட்டிலிருந்து வயலுக்குள் இறங்கினாள்.

மோகனன், இந்திய ராணுவத்தின் இளஞ்சிங்கங்களில் ஒருவன். தாய்ப்பற்றை மனதிற்குள் வைத்து பூட்டிவிட்டு, தாய்நாட்டின் மீது பற்று வைத்து இராணுவத்திற்கு சென்றவன். தாய்நாட்டிற்கு உழைத்தாலும் பெற்ற தாயை மறந்து விடுவானா என்ன... மாதா மாதம் அவனிடமிருந்து பணமும், கடிதமும் வரும். அக்கடிதம்தான் அவளுக்கிருக்கும் பெரும் ஆறுதல்...

இளையவன் செல்வம். கல்லூரியில் இளங்கலை படிப்பில் இறுதியாண்டு மாணவனாக பயின்று கொண்டிருக்கிறான். இன்று ஏதோ ''என்.சி.சி ஷ்பெஷல் கிளாஸ் இருக்கும்மா...'' என்றுவிட்டு சீக்கிரமாகவே கல்லூரிக்கு சென்று விட்டான்.

நானெல்லாம் படிச்சிருந்தாதானே இதெல்லாம் தெரியும். நம்ம அப்பந்தான் நம்மளை வீட்டை விட்டே வெளியவே அனுப்பலியே..என சிந்தித்துக் கொண்டே களையெடுத்துக் கொண்டிருந்தவளை தபால்காரர் பரமசிவம் குரல் கேட்டு நிமிர்ந்தாள்...

''வள்ளியம்மா... உன் பெரிய மகன்கிட்ட இருந்து லெட்டர் வந்திருக்கு...''
இந்த வார்த்தையைக் கேட்டதும் அவள் முகத்தில் இருந்த சுருக்கங்கள், சட்டென்று மறைந்து மகிழ்ச்சிக்கு வழிவிட்டது. அவள் முகம் பரவசத்தில் பிரகாசித்தது. 'ராணுவத்துக்கு போயி 5 வருசமாச்சு... மாசத்துக்கு ஒரு கடுதாசி போடுவான்... எப்பவாச்சும் கோன் பண்ணுவான்... என்ன இந்த மாசம் ரெண்டாவது கடுதாசி அனுப்பியிருக்கான்...ஊருக்கு வரேன்னு சொல்லியிருக்கானோ....' என நினைத்தபடியே களத்துமேடேறினாள்.

''தபால்காரரே அதை கொஞ்சம் படிச்சு சொல்லுங்களேன்...'' என்றாள்.

அவரும் கடிதத்தை பிரித்தார். உள்ளே மோகனனின் கையெழுத்து ஆற்றுப் பிரவாகமாக நேர்த்தியாக ஓடியிருந்தது... உடன் படிக்கலானார்...

''அன்புள்ள அம்மாவிற்கு...

தாய்நாட்டைக் காக்கும் இராணுவ வீரன் மோகனன் எழுதிக் கொள்வது... இதுவரை உன் மகன் என்றுதான் எழுதி வந்திருக்கிறேன். இன்று இப்படி எழுதுவதற்கும் அர்த்தமிருக்கிறதம்மா... என்னை, இத்தேசத்திற்கு முழுமையாக அர்ப்பணித்து விட்டேன். அதான் அப்படி எழுதியிருக்கிறேன்...

உன் முகம் பார்த்து ஐந்து வருடங்களாகி விட்டது. உன்னையும் தம்பியையும் பார்க்க வேண்டுமென்று முன்பு எழுதியிருந்தேன். இப்போது அது முடியாது.
எப்படி அம்மா இருக்கிற... தம்பி எப்படி இருக்கான்... அம்மா நாங்களிருவரும் உன் முகம் மட்டுமே அறிந்தோம். அப்பா நாங்கள் சிறு பிள்ளைகளாக இருக்கும்போதே இறந்து விட்டதால்... நீ எங்களை வளர்க்க, நீ பட்ட துன்பங்களை நானறிவேன்...

இதோ நாங்கள் வளர்ந்து விட்டோம். அம்மா... நீ எனக்கு நிலாச் சோறு ஊட்டிய தருணங்கள்... சிறு வயதில் நானும் தம்பியும் நமது கிராமத்தில் போட்ட ஆட்டங்கள், ஏரியில் மீன் பிடித்தது என என் நினைவுகள் என்னுள் வந்து, வந்து செல்கிறது. தீபாவளியன்று பொம்மை துப்பாக்கிக்காக நானும் தம்பியும் போட்ட சண்டையை இன்னமும் நினைத்து மகிழ்கிறேன்.

பொம்மை துப்பாக்கியை கையில் பிடித்தவன் இன்று உண்மையான துப்பாக்கியை ஏந்திக் கொண்டிருக்கிறேன். இதோ எனது சரித்திரம் ஆரம்பித்து விட்டதம்மா... நான் பிறந்த பிறப்பின் பயனை இனிதான் அடையப் போகிறேன். நீ கொடுத்த தாய்ப்பாலுக்கு வேலை வந்து விட்டது. நம் தேசத்தின் நலன் காக்கும் வேளை வந்துவிட்டது.

கார்கில் போர் எனக்கு கடுகளவாக தெரிகிறது இன்று. ஏனெனில் அதைவிடப் பெரிய போருக்கு உன் மகன்... இல்லை... இந்த பாரதத்தாயின் மகன் கிளம்பப் போகிறான்.

இந்திய மண்ணையும், காற்றையும் சுவாசித்த எனக்கு, எதிரி நாட்டின் சுவாசத்தை அழிக்க ஆணை வந்துவிட்டது. இந்தியாவை ஆக்கிரமித்திருக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளை நோக்கி இந்த புலி பாய்ந்து செல்லப் போகிறது.

நான் பெற்ற பயிற்சியின் முழு பலமும் இங்கே பரிசோதிக்கப்படும். இதுவரை அப்பகுதிக்கு சென்ற 10 கமாண்டோ படையினரில் இருவர் மட்டுமே மீண்டிருக்கின்றனர். இதே எனது படை... இதற்கு நான்தான் தலைவன்...

தாக்குதலுக்கு வேண்டிய ஆயுதம்... தாக்க வேண்டிய இடம்... உள்பட அனைத்தும் வந்துவிட்டது. நம் நாட்டின் எதிரிகள் காலனை சந்திக்கும் நாள் மட்டும் இன்னும் குறிக்கப்படவில்லை. விரைவில் அதுவும் குறிக்கப்பட்டு விடும். தகவல் கிடைத்ததும் வில்லிலிருந்து புறப்படும் அம்பெனப் புறப்பட்டுவிடுவோம்...

கடைசியாக உன்னிடம் நான் போனில் பேசியபோது, ''எப்பய்யா... ஊருக்கு வருவ.. அம்மாவை பாக்க வரமாட்டியா... அம்மா ஞாபகம் இல்லியா..?'' என்று நீ உன் அடிவயிற்றிலிருந்து உச்சரித்த வார்த்தைகள் மட்டும் என் மனதை கீறிக் கொண்டிருக்கிறதம்மா...

எங்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டால், அதற்கு அடையாளமாக நட்சத்திரங்களை கொடுப்பார்கள். இதற்கு அர்த்தம் என்னவென்றால்... வீரமரணம் அடைந்தாலும் நட்சத்திரங்காளாய் ஒளிவீசுவோம் என்பதைக் காட்டத்தான் அம்மா. என்னை நினைத்து ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தக்கூடாது. அப்படி சிந்தினால் அது சுயநலமாகி விடும்.

நான் சென்று, வெற்றியுடன் திரும்புவேன். அப்படி ஒரு வேளை திரும்பவில்லையெனில் கவலைப்படாதே... என் மனதில் நீக்கமற நிறைந்திருப்பது நீயும், எனது தேசமும்தான்...

அன்னவயலிற்கு நான் அனுப்பும் கடைசி கடிதம் இதுவாகக் கூட இருக்கலாம். கடைசி காலத்தில் பெற்ற தாய்க்கு வேண்டிய பணிகளை செய்யவேண்டியவனாயிற்றே... என கலங்காதே. அப்பணியை நம் பாரத தாய்க்கு செய்து கொண்டிருக்கிறேன்.

எதிரிகளை அழிப்பதில் எமனாக செல்கிறேன். ஒருவேளை நான் இறந்தால் என்னைப் போல் பலர் இத்தேசத்திற்காக பிறப்பார்கள்.. கவலை வேண்டாம் அம்மா..

கடைசியாக உன்னிடம் வேண்டுவது, ''தம் தேசத்திற்கு துடிப்பான இளைஞர்கள் தேவை. இக்கடிதம் கண்டவுடன் தம்பி செல்வத்தையும் இராணுவத்திற்கு அனுப்பு.. ஏனென்றால் எங்களைப் போன்ற பிள்ளைகளால்தான் நம் பாரதத்தாய் நிம்மதியாக வாழமுடியும். கண்கலங்காமல் இதை நிறைவேற்றம்மா...

சென்று, வென்று வருகிறேன். வாழ்க பாரதம்..!

இப்படிக்கு
உன் மகன்
மோகனன்"

கடிதத்தை படித்து முடித்தவுடன், பரமசிவத்தின் கண் கலங்கியிருந்தது. வள்ளிக்கிழவியின் முகத்தைப் பார்த்தார். அவள் கண்ணில் இருந்து ஆறாய் ஓடிய கண்ணீர் சட்டென்று நின்றது. அக்கண்ணில் தீர்க்க சிந்தனையின் சாயல் 'இளையவன் செல்வம் வந்ததும், அவனையும் இராணுவத்திற்கு அனுப்ப வேண்டும்'.

(09.07.2002 அன்று, எனது சொந்த ஊரான ஆத்தூரில் இருந்தபோது எழுதிய சிறுகதை)

பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 9

முன்வைக்கப்படும் கேள்விகளை...
- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி


எதிர்ப்படும் கேள்விகளுக்கான நம்
எதிர்வினைகள் என்னென்ன?

மற்றொரு கேள்வியை
மறுமொழியாய் தருவது.

கேள்விகளின் தரம் பற்றிய
கேள்விகளை முன்வைப்பது.

கிண்டல்கள் கேலிகள் என்று
கேள்விகளையே கேள்விக்கு உள்ளாக்குவது.

மௌனமான முகங்களால் கேள்விகளை
முற்றிலும் நிராகரிக்க முயல்வது.

வேறுவழியின்றி வெளிப்படும் நம்
விடைகளிலும் விளங்கத் தெரிவது

முன்வைக்கப்படும் கேள்விகளை யாரும்
முழுதாய் வாங்கிக்கொள்வதில்லை.

பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 8

ஈரம்

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


இன்று சிலவேளை மழை பெய்யலாம் எனத் தோன்றியது. முற்றத்தில் காலை வெயில் பளீரென அடித்துக் கொண்டிருந்தது. எனினும் வானில் கருமேக மூட்டம் பல வடிவங்களைக் கொண்டு களைந்துகொண்டிருந்தது. அந்தக் குடிசை முழுதும் ஒரு பூனையின் மென்மயிரென அவிந்து கொண்டிருந்த நெல்லின் மணம் பரவிவிட்டிருந்தது. செல்லாயி அந்தப் பானையின் மூடியைத் தூக்கி நீர்மட்டம் பார்த்தாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் முற்றாக அவிந்துவிடும். பின்னர் முற்றத்தில் பரத்திவிட்டு உடுப்புக் கழுவப் போகலாம்.

குடிசையின் ஒரு மூலையில் கயிற்று ஊஞ்சலில் தொங்கவிட்டிருந்த ஓலைப்பாயொன்றை எடுத்தாள். முற்றத்தில் வெயிலின் அடர்த்தி அதிகமாக இருந்த ஒரு இடத்தைப் பார்த்து பாயினை விரித்தாள். வெயில் தரையை விட்டு அவள் விரித்த பாயில் படுத்துக் கொண்ட சமயம் உள்ளே போய் நெற்பானையைத் துணியால் பிடித்துத் தூக்கமுடியாமல் தூக்கி வந்து பாயருகில் வைத்தாள். பெரும் அகப்பை கொண்டு நெல்லை அள்ளி அள்ளி பாயில் பரப்பத் தொடங்கினாள்.

வயல் வேலைக்கு ஒரு கூலியாகச் செல்லும் அவளுக்குக் கிடைத்த கூலிதான் இந்த ஒரு கூடை நெல். அவித்து, குத்திப் புடைத்து வைத்துக் கொண்டால் அவளுக்கும் விறகு வெட்டியான அவள் கணவனுக்கும் ஒரு மாத வயிற்றுப்பாட்டுக்குப் போதும். நாற்று நட, கதிரறுக்க எனச் சுற்றுவட்டாரத்தில் எங்கு வயல்வேலை நடந்தாலும் செல்லாயிக்கு அழைப்பிருந்தது. அவளது கைநேர்த்தியும், சுறுசுறுப்பும் அவளுக்கு நல்லபெயர் வாங்கிக் கொடுத்திருந்தது. வாங்கும் கூலிக்கு வஞ்சனை செய்யாமல் அவளும் உடல்பாடுபட்டு உழைத்தபடி இருந்தாள். குழந்தை பிறந்த பிறகு கூட இரண்டு மாதங்கள் மட்டுமே அவள் வேலைக்குச் செல்லாமல் இருந்தாள். பிறகு வயல்வெளி நிழல் மரங்களில் தொட்டில் கட்டிக் குழந்தையைத் தூங்கவைத்துவிட்டு அவள் தன்பாட்டுக்கு வேலை செய்தாள்.

வெயில் தன் ஆதிக்கத்தை இப்பொழுது நெல்லின் மேல் பரப்பத் தொடங்கியது. சூடாகப் பரத்தப்பட்டிருந்த நெல்லின் மேலிருந்து இலேசாகப் புகை கிளம்பியது. முழுவதுமாகப் பரத்தி முடித்தபின் எழுந்து நின்று ஒருமுறை முழுவதுமாகப் பார்த்தாள். ஏதோ ஒன்று குறைவது போலத் தோன்ற குடிசையருகில் வந்து எட்டி நின்று ஓலைக் கூரையின் பாக்குமரக் கம்புகளுக்கு இடையில் சொருகப்பட்டிருந்த உடைந்த முகம்பார்க்கும் கண்ணாடித் துண்டுகளை எடுத்துவந்து நெற்பாயின் நான்கு மூலைகளிலும் நடுவிலும் வைத்தாள். இனிக் காக்கை,குருவிகள் அண்டாது எனத் திருப்தியாக உள்ளே சென்றாள். அவளது ஆறுமாதக் குழந்தை இன்னும் தூங்கிக் கொண்டிருந்தது அவளுக்கு நிம்மதியாக இருந்தது. ஆறுதலாக நேற்று இரவு தண்ணீர் ஊற்றிவைத்திருந்த எஞ்சிய பழஞ்சோற்றினை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டாள். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், எலுமிச்சை ஊறுகாய் என எடுத்துவைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

முருகையன் கீழ்த் தோட்டத்தில் இப்பொழுது விறகுவெட்டிக் கொண்டிருப்பான் என எண்ணிக் கொண்டாள். அவளது குழந்தைக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. எப்பாடு பட்டாவது பணம் கொஞ்சம் சேர்த்தெடுத்து , பக்கத்துப் பெரிய கோயிலுக்குத் தூக்கிப் போய் மொட்டையடித்துக் காதுகுத்தி ஒரு நல்லபெயராக வைக்கவேண்டுமென நேற்றிரவும் அவள் முருகையனிடம் சொல்லியிருந்தாள். அவனும் அதனை உத்தேசித்தே பாடுபட்டு உழைத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான்.

சாப்பிட்டு முடித்து, கழுவவேண்டிய அழுக்குத் துணிகளைத் தேடிக் கொண்டிருந்த சமயம் தொட்டிலில் இருந்த குழந்தை காலை உதைத்துச் சிணுங்க ஆரம்பித்தது. துணிகளை அப்படியே போட்டுவிட்டுக் குழந்தையருகில் வந்து சத்தமாக செல்லம் கொஞ்ச ஆரம்பித்தாள். பழகிய குரலைக் கேட்டதும் குழந்தை புன்னகைத்தது. எடுத்து முத்தமிட்டுப் பால்கொடுத்தாள். ஒரு பழந்துணியை நிலத்தில் விரித்து குழந்தையைப் படுக்கவைத்தாள். வயிறு நிறைந்த திருப்தியில் அக்குடிசையின் ஓலைக் கூரை பார்த்துத் தனியாகக் கதைத்துக் கொண்டிருந்த அதன் வெற்றுக் கால்களுக்குக் கொலுசு வாங்கிப் போடவேண்டுமென நினைத்துக் கொண்டாள்.

குழந்தையின் அழுக்குத் துணிகளும், அவளதும் அவனதும் அழுக்குத் துணிகளுமாகச் சேகரித்ததற்கு மத்தியில் சவர்க்காரத்தையும் வைத்து மூட்டையாகக் கட்டினாள். ஒற்றையடிப் பாதையில் இறங்கி மேட்டில் ஏறி மீண்டும் இரண்டு பள்ளங்கள் இறங்கி நடந்தால் சிற்றோடை வரும். அவளுக்கு வேலைக்கு அழைப்பில்லாத நாட்களில் துணிகளையும் குழந்தையையும் தூக்கிக் கொண்டு துவைத்து வரப் போவது அவளது வழமை. ஓடைக் கரை மருதமரத்தில் ஒரு தொட்டிலைக் கட்டி, குழந்தையின் வயிற்றை நிரப்பித் தூங்கவிட்டாளானால் ஈரக் காற்றுக்கும், பெருமரத்தின் நிழலுக்குமான சுகம் கண்டு குழந்தை எந்த ஆர்ப்பாட்டமுமில்லாமல் நிம்மதியாக உறங்கும். எல்லாத் துணிகளையும் கழுவிவிட்டு, அவளும் குளித்து, குழந்தையையும் குளிப்பாட்டியெடுத்துக்கொண்டு தன் வீட்டுக்கு வருவாள்.

முற்றத்துக்கு வந்துபார்த்தாள். வெயில் நெல்லைப் பரிகசித்தபடி ஆவியாக்கிக் கொண்டிருந்தது. மேகக் கருமூட்டம் சூரியனைச் சில நேரங்களில் ஒளித்துவைத்தபடி அவளுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது. மழை வருமோ? போனமுறை அப்படித்தான். அடித்த வெயிலை நம்பி நெல் அவித்து முற்றத்தில் பரத்திவிட்டு, பக்கத்துக் கிராமத்து சின்னாச்சிக் கிழவியின் சாவுவீட்டுக்குப் போயிருந்த போது பேய்மழை பிடித்துக் கொண்டது. அவசரமாக ஓடிவரவும் முடியாது. மழை நின்ற பின்னால் வந்து பார்த்தால் முற்றத்தில் ஓடிய வெள்ள நீருக்குப் பாயில் நெல் இருந்த சான்றுக்காகச் சில நெல்மணிகள் மட்டுமே எஞ்சியிருந்தது. பல நாள் உழைப்பு. ஒரு மாத உணவு. எல்லாம் ஒரு பொழுது மழையில் வீணாகிப் போனதில் பெருஞ்சோகம் அப்பியது அவளில். முருகையன்தான் 'விடு புள்ள, நமக்குக் கொடுப்பினை இல்ல..அவ்ளோதான்' என்று ஆறுதல் சொன்னான்.

கடும் சூட்டோடு அடித்த வெயில் இப்போதைக்கு மழை வராது என்ற எண்ணத்தை அவளில் ஊன்றியது. உள்ளே போய் குழந்தைக்கு ஓடைக் கரையில் தொட்டில் கட்டவென வைத்திருந்த பழஞ்சேலையால் மூட்டையைச் சுற்றியெடுத்து குடிசைக்கு வெளியே கொண்டுவந்து வைத்தாள். குடிசையின் கொல்லைக் கதவை மூடிவிட்டு, குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள். வெளிக்கதவுக்கான பூட்டினையெடுத்துக் கொண்டு வெளியே வந்து கதவைப் பூட்டினாள். துணிமூட்டையை எடுத்துத் தலையில் வைத்தவள் திரும்பவும் பரத்தியிருந்த நெல்லை ஒரு முறை பார்த்துக் கொண்டாள்.

மேடு ஏறிப் பள்ளங்கள் இறங்கிவந்தவளுக்கு மூச்சு வாங்கியது. ஓடைக்கரை சலவைக் கல்லில் துணிகளை வைத்தவள் சலசலத்து ஓடும் ஓடையை ஒரு முறை கண்களால் மேய்ந்தாள். ஓடையில் இவளைத் தவிர யாரையும் காணவில்லை.தெளிந்த நீர். மழை பெய்தால் மட்டும் கலங்கிய நீராகி வெள்ளக் காடாகிவிடும். போன வருஷம் அடை மழை வந்தபோது இந்த மருத மரம் கூடப் பாதிவரை மூழ்கியதாக ஊருக்குள் பேசிக் கொண்டார்கள்.

துணிமூட்டையைச் சுற்றியிருந்த தொட்டில் சேலையைத் தனியாக எடுத்தாள். மருத மரத்தின் அண்டிய ஒரு கிளைக்குச் சேலையின் ஒரு முனையை எறிந்தவள் வாகாகத் தொட்டிலைக் கட்டிவிட்டாள். ஒரு கல்லில் அமர்ந்து குழந்தைக்குப் பால் கொடுத்தாள். குடித்துக் கொண்டிருக்கும் பொழுதே கண் சொருக ஆரம்பித்தது குழந்தைக்கு. அப்படியே அள்ளியெடுத்தவள் அதன் நெற்றியில் மெலிதாக முத்தமிட்டாள். பின்னர் கட்டிய தொட்டிலில் படுக்கவைத்து கொஞ்சநேரம் ஆட்டிவிட்டாள்.

உடுத்திருந்த சேலையோடு ஓடையில் இறங்கினாள். முழங்கால் வரை நனைத்து ஓடிய தண்ணீரில் நின்றுகொண்டு ஒவ்வொரு துணியாக அலச ஆரம்பித்தாள். ஓடை மணலும், நழுவிய நீரும் காலடியில் குறுகுறுத்தது. சிறு மீன் குஞ்சுகள் காலுக்குக் கூச்சம் தந்தபடி கவ்வத் தொடங்கின. குளித்து முடித்துப் போய் மீன் வாங்கிவந்து முருகையன் வரும் போது சுடுசோற்றோடு மணக்க மணக்க மீன் கறி சமைத்து வைக்கவேண்டும் என எண்ணிக் கொண்டாள்.

வானம் கருக்கத் தொடங்கியது. அண்ணாந்து பார்த்தவளின் நெற்றியில் மழையின் முதல் துளி விழுந்தது. ஐயோ இன்றைக்கும் மழையா ? ஓடைக் கரைக்கு ஏறியவள் தூறல் வலுக்க முன்னர் குடிசைக்கு ஓடத் தொடங்கினாள். அவளது பல நாள் உழைப்பு. ஒரு மாத உணவு. மூச்சு வாங்க ஓடி வந்தவள் சிறு தூறலில் நனைந்திருந்த நெற்பாயின் நான்கு மூலைகளையும் ஒன்றாகச் சேர்த்துப் பிடித்து குடிசைத் திண்ணை வரை இழுத்துவந்தாள். இடுப்பில் கட்டியிருந்த சாவியை எடுத்து பூட்டினை விடுவித்துக் குடிசையைத் திறந்து நெற்பாயினை உள்ளே வைத்த பொழுது மழை வலுத்தது.

இப்பொழுது அவளுக்கு நிம்மதியாக இருந்தது. அரும்பாடு பட்டுச் சேர்த்து, அவித்துக் காயவைத்த நெல்லை பெரும் மழையிலிருந்து காப்பாற்றியாகிவிட்டது .நிம்மதிப் பெருமூச்சு விட்டவளின் கண்களுக்கு குடிசைக்குள்ளிருந்த வெற்றுத் தொட்டில் கண்ணில் பட்டது. 'ஐயோ என் குழந்தை' எனப்பதறியவாறு குடிசையையும் பூட்டாமல் பெரும் மழையில் நனைந்தவாறு திரும்பவும் ஓடைக்கரைக்கு ஓடத் தொடங்கினாள்.

பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 7

என் சொத்து
- விசாலம்


என் தாயின் முந்தானை
இதோ இந்தப் பெட்டியில் ,
இதுதான் என் கோயில்
இதுவே என் தெய்வம்
குழந்தைப் பருவம்,
பல முறை கக்கல் .
அம்மாவின் புடவையில் .
முகம் சுளிக்காமல்
துடைத்தது அந்தக் கை

இரண்டு வயது பாலகன் ,
மழையில் நனைந்தேன்
வந்தன தும்மல்கள்,
மூக்கொழுகி நின்றேன்
கைக்கொடுத்தது
அம்மாவின் முந்தானை
அன்பாக துடைத்து .

கடும் சுரம் வந்தது ,
இடுப்பில் அள்ளிக்கொண்டாள்
ஓடினாள் டாக்டரிடம்
நடுவில் வாந்தி எடுத்தேன் ,
தன் தலைப்பில் ஏந்தினாள்
முகத்தில் சுளிப்பில்லை
அதில் ஒரு சலிப்புமில்லை

கிரிக்கெட் மேட்ச்சில்
செயித்து வந்தேன் ,
பெருமையுடன் பார்த்தாள்
வியர்வை ஒழுக நின்றேன் ,
ஒத்தி எடுத்தாள்,
தன் முந்தானையால் .
என் திருமணம் ஆனது
எனக்குச் செய்ததை அவள்,
தன் பேரனுக்குச் செய்தாள் ,,
அவள் முகம் சுளுக்காமல் .

இன்று அவள் இல்லை .
நைந்துப் போன் புடவையில்
அவளை நான் பார்க்கிறேன் .
என்ன தியாகம் ! என்ன அன்பு !
கோடிக்கோடி கொடுத்தாலும்
அம்மாவை வாங்க முடியுமா?
அவள் இடத்தை நிரப்ப முடியுமா ?

பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 6

குழந்தையின் உறவுகள்
- மோகனன்


அழும் குழந்தையை
அமைதிப்படுத்த
அன்று...

அம்மாவின் தாலாட்டு
அப்பாவின் ஆறுதல் மொழி
அண்ணனின் பாட்டு
அக்காவின் கொஞ்சல்
தாத்தாவின் அரவணைப்பு
பாட்டியின் பாசமொழி...
என உறவுகளின்
பாச விசாரிப்புகளில்
அக்குழந்தையின் வீறிடல் நின்றது..!

இன்றோ வீறிடும்
செல்போன் பாடலோடு
போகிறது
அக்குழந்தையின் உறவுகள்..!


(சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தும் இளம்தம்பதி , தங்கள் குழந்தையை அமைதிப்படுத்த செல்போனை பயன்படுத்தினர். அதைக்கண்ட போது, என்னுள் தோன்றியதை 27.03.2005 -ல் எழுதியது)

பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 5

அது
- எம். ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை, இலங்கை



அவர்கள் வரட்டும்
எது கொண்டோ உடைத்துப் போன
ஓர் ஆழ்துயர் மனதை
எப்படிச் சரிப்படுத்துகிறார்களென
வேடிக்கை பார்க்கலாம்

அது ஒரு பெண் மனது
பால்யம் முதலாய்ப் பலர் சேர்ந்து
பருவங்கள் தோறும் பல எல்லைகளையும்
அணைகளையும் வளையங்களையுமிட்டு
இன்னும் பல இடர்களை ஒன்றாய்ப் பின்னி
இறுக இறுகச் சேர்த்துக் கட்டிய மனது

முன்பும் அது சிதைந்தது
சிறுகச் சிறுகச் சிதைந்து வருகையில்
திரும்பவும் வந்து பெருந்துயரொன்று கொண்டு
அவர்கள் அதனை மீளச் செப்பனிட்டார்கள்

காலத்திற்கு என்ன தெரியும் - அவளது
கண்ணீர் பிசைந்து
அவர்கள் சீர்படுத்தப் படுத்த
மீண்டும் சிதிலமாகவே செய்தது
இப்பொழுதைப் போல

அவர்களும் வந்தனர்
ஓட்டைகள் வழியே நழுவிய துயர்களை
நினைவுகள் கொண்டு மீள அடைத்தனர்
மறதியில் உதிர்ந்து காணாமல் போனவற்றை
மீளப் பெறமுடியாமல் போக
அவதூறுகள் கொண்டும், கடுஞ்சொற்கள் கொண்டும்
அவளுக்கு வலிக்க வலிக்க
மகிழ்வோடும் அலுப்பில்லாமலும்
இதயம் நிறைந்த குரூரத்தோடும் மீளவும் மெருகேற்றினர்

அவர்கள் பார்வையில் இக்கணத்தில்
அழகு பெற்றதாகி விட்டது அது

அது ஒரு பெண்மனது
ஆம் அவள் ஒரு பெண்

பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 4

நிழல்மனங்கள் - சிறுகதை
- ஷைலஜா


நடுநிசியில் போன் 'க்ரீங்க்ரீங்' என்றது. படுக்கையை ஒட்டிய டீபாயில் அது இருந்ததால் தூக்கம் கலைந்து சுதாரித்து ராமதுரை எழுந்துபோய் ரிசீவரை எடுப்பதற்குள், அந்த அறையின் அமைதியைக் கிழிப்பது போல பலமுறை ஒலித்தது.
"ஹலோ?' என்றான் தூக்கக்கலக்கக் குரலுடனேயே, ஒருகை ரிசீவரைப்பிடித்தாலும் இன்னொரு கை சுவற்றில் சுவிட்சைத் தட்டியது. அறையில் வெளிச்சம் பரவியது.

"அதிகம் பேச நேரமில்ல..சொல்லிவை உன் தர்மபத்தினிகிட்ட,. இது மாதிரி எங்களை பத்திரிகையில கன்னாபின்னான்னு எழுதிக்கிட்டே போனா கூடிய சீக்கிரம் உன் பொண்டாட்டி கழுத்தை நடு ரோட்ல சீவிப்போட்டுடுவோம்னு? சொர்ணாம்பாபேட்டை ரவுடிங்ககிட்டயே சவால் விடுறாளா பிரபல பத்திரிகை நிருபர் வர்ஷா ராமதுரை? ஹ ..அது நடக்காதுன்னு சொல்லத்தான் உன் வீட்டு நம்பரை தேடிக்கண்டுபிடிச்சி போன் செய்யுறேன்,.ஆம்மா.."

அதட்டலாய் கூறிவிட்டு எதிர்முனை இணைப்பை துண்டிக்கவும் ராமதுரை,"ஹலோஹலோ யாரது,,யார் நீங்க?" என்று கேட்டுவிட்டு எரிச்சலாய் ரிசீவரைக்கீழே வைத்தான்.

ராமதுரை எதிர்பார்த்ததுதான். என்றாவது ஒருநாள் இப்படி மிரட்டல் வருமென்று சில்நாட்களாகவே ராமதுரை எதிர்பார்த்துக்கொண்டுதான் இருந்தான் இப்போது அவன் பயந்ததுபோலவே ஆகிவிட்டது. சட்டென படுக்கையில் வர்ஷாவைத்தேடினான். அங்கு அவள் இல்லை.சுவர்கடிகாரத்தைப் பார்த்தான். மணி, பன்னிரண்டைத் தாண்டி இருந்தது.

'இன்னுமா வர்ஷா வரவில்லை?' தனக்குள் கேட்டுக்கொண்டவன்
படுக்கையில் தலையணைக்குகீழே இருந்த செல்போனை எடுத்தான்.

எண்களை அழுத்திவிட்டுக்காதில் வைத்துக்காத்திருந்தான்
திரும்பத்திரும்ப ;சுவிச்டு ஆஃப்' என்றே தகவல் வந்தது.

'புல்ஷிட்' என்று கத்தினான்.

திரும்ப வந்து கட்டிலில் படுத்துக்கொண்டான்.

டில்லியில்மாலை ஐந்துமணிக்குப்பிடித்திருக்க வேண்டிய விமானம் ரத்தாகிவிடவும், இரவு பதினோருமணிக்கே அடுத்த விமானத்தில் டிக்கட் கிடைத்து அதில் பயணம் செய்துகொண்டிருந்தாள் வர்ஷா. தாமதத்தை ராமதுரைக்கு போனில் தகவல் கொடுக்க நினைத்தும், இடைவிடாத பத்திரிகைக்காரர்களின் போன் அழைப்புகளில் அது இயலாமல் போய்விட்டது.

சென்னை வந்ததும் விமான நிலையத்திலிருந்து வாடகைக்காரில் ஏறும் முன்பு போன் செய்தாள், விவரம் கூறியவளுக்கு
"ம்"என்றுமுறைப்பாய் பதில் வந்தது.

அதுகோபம் என்று வர்ஷாவிற்கும் புரிந்தது. கல்யாணமாகிஐந்துவருடப்பழக்கத்தில் அவள் ராமதுரையை நிறையப்புரிந்து கொண்டிருந்தாள்.
பெண்பார்க்க வந்தபோதே தனிமையில் சந்தித்து தனக்குப் பத்திரிகைத் துறையில் மிகவும் ஆர்வம் என்பதால் ஜர்னலிசம் படித்ததாயும் பத்திரிகை நிருபராய் வேலைபார்ப்பதாகவும் வர்ஷா கூறியபோது ராமதுரை உடனேயே,"வாவ்!" என்றான்.

தொடர்ந்து," இந்தகாலத்துப்பெண்கள் சாஃப்ட்வேர்துறையில் ஆர்வமாய் இருக்கும்போது நீ மட்டும் இப்படி பத்திரிகைத்துறையில் ஈடுபாடு கொண்டவளாய் இருப்பது எனக்கு எவ்வளோ பெருமையாய் இருக்கு தெரியுமா? ரியலி ஐ லை இட்"என்று புகழ்ந்தான்.

ஒரு உணர்ச்சிகரமான நேரத்தில் வெளிப்பட்ட உணர்ச்சிகரமான பேச்சு தான் மனதினின்று வந்ததல்ல அது என்பதை கல்யாணமான ஒரேவருஷத்தில் வர்ஷா புரிந்துகொண்டாள்.

வர்ஷாவின் திறமையை தன் வியாபாரத்தில் புகுத்திக்கொள்ள ராமதுரை விரும்பினான். ஆனால்வர்ஷா ," ராம்! உ ங்களோட வியாபாரத்துக்கு என்னைப்போல உள்ள பெண்களின் மூளைக்கு வேலை இல்லை…பிசினஸ் பெரும்பாலும் அதிர்ஷ்டத்தை சார்ந்தது.அதில் யுத்தி ஆதிக்கம் செய்யும் புத்தி அல்ல.ஆனா நான் பார்க்கும் பத்திரிகை நிருபர் வேலைல சாலஞ்ச் அதிகம்.

புதுப் புது கோணங்களில் எங்கள் திறமைகளை நிரூபிக்க வாய்ப்பு இங்க உண்டு. செய்யும் தொழிலில் திறமைதான் இங்கே செல்வம்.
அந்த செல்வத்தை நான் பணி செய்யும் இடம் மதிக்கிறது எனக்கு அதுபோதும் " என்பாள்.

"வர்ஷா! உன் திறமையை கட்டின புருஷனுக்காக செலவழிக்கலாம் ஆனால் நீ செய்வதில்லை"

"நிரந்தரமாய் நீங்க ஒரு வியாபாரம் செய்யறீங்களா?உங்க குறிக்கோள் எ ப்படியாவது மல்டிமில்லினியர் ஆகணும். மார்பிளில்பிசினசிலிருந்து மணல் லாரிபிசினஸ்வரை எத்தனைவிதமான பிசினஸ் எல்லாம் செய்து பார்த்து ஏமாந்து இருக்கீங்க? உங்க பணத்தாசைக்கு என் தாய்மையை பலியாக்கிட்டீங்க…பணம் சேருகிறவரைக்கும் இந்தவீட்டில் மழலைசத்தம்கேட்கக்கூடாதுன்னு கட்டளை போட்டுருக்கீங்க.. நீங்க சொல்றதுக்கெல்லாம் நானும் தலைஆட்டிட்டு தான் இருக்கேன் இன்னும் என்னை என்ன செய்யச்சொல்றீங்க?"

"நீமட்டும் தோள் கொடுக்கறேன்னு சொல்லு இப்போவே புது பிசினஸ் ஒண்ணு தொடங்கிடறேன் வர்ஷா?'

"ஐயாம் சாரி ராம்! என் லட்சியம் இந்த பத்திரிகைநிருபர் தொழிலில் நல்ல பெயர் எடுப்பது.இதில் எனக்கென்று ஒரு அடையாளம் இருக்கிறது இதை இழக்க நான் விரும்பவில்லை"

வர்ஷாவின் பிடிவாதம் ராமதுரைக்கு சமீபகாலமாக மிகவும் எரிச்சலை உண்டுபண்னுவதை அவளும் கவனித்துதான் வருகிறாள்.

கைப்பையிலிருந்து சாவியை எடுத்து கதவில் நுழைத்து திறந்து உள்ளே போனாள் வர்ஷா.

ஹாலில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.சோபாவில் உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தான் ராமதுரை.

வியப்புடன்,"தூங்கலயா ராம்?' என்று கேட்டாள் வர்ஷா.

களைப்போடு சமையலற சென்று ஃப்ரிட்ஜினின்றும் பால் கவரை எடுத்துப்பிரித்துப்பாத்திரத்தில் கொட்டினாள்.காஸ் அடுப்பை பற்றவைத்து பாலைக்காய்ச்சி கொஞ்சமாய் சக்கரை சேர்த்து டம்ளரில் ஊற்றிக்கொண்டு ஹாலுக்கு வந்தவள்," சூடா பால் குடிக்கிறீங்களா?" என்று கேட்டாள்.

"ஆமா …நானே கொதிச்சிட்டு இருக்கேன் இதுல சூடா பாலு வேற ஒரு கேடாக்கும்?"

கடுப்போடு சொன்னவன் அந்த மிரட்டல் போன் அழைப்பை விவரித்துவிட்டு," வர்ஷா!இந்த வேலையை நீ விட்டுத்தொலையேன்..பாதுகாப்பே இல்லாத வேலை! நேரம் காலம் கிடையாது.இதெல்லாம் பெண்களுக்கு ஏற்றதே இல்ல"என்றான்.

வர்ஷா பாலின் கடைசி சொட்டின் சக்கரை இனிப்பை நாவில் சுவைத்தபடி," ராம்! இதுக்கெல்லாம் பயந்தா ஆகுமா? இதெல்லாம் குரைக்கிற நாய்கள், கடிக்காது கண்டிப்பாய்" என்று சொல்லி சிரித்தாள்.

"இவ்வளோ ரிஸ்க் எடுத்துஎதுக்கு இந்த உத்தியோகம்னு போனதடவை இங்க வந்த என் அப்பாகூட முணு முணுத்தாரு தெரியுமா?"

"உங்கம்மாவும்'இந்தவீட்லஎப்போதான் குழந்தை ஒண்ணு தவழப்போகுதோ?'ன்னுமுணு முணுத்தாங்க அதுவும் கேட்டுதா உங்களுக்கு ராம்?"

"வர்ஷா! உன் வேலை பத்தி பேசறப்போ குழந்தைவிஷயத்தை இங்க கொண்டு வராதே...இன்னும் மூணுவருஷத்துக்கு குழந்தை பேச்சேவரக்கூடாது இங்க. பணம்சேர்க்கணும் முதல்ல…அதுக்குவழிதேடிட்டு இருக்கேன் நான்"

ராமதுரைக்கு அவனைச்சுற்றித்தான் உலகம். அதுவும் ஒரு குறுகிய வட்டம் தான். சமூக அக்கறை என்பதே இல்லாதவன்.பணம் ஒன்றே குறிக்கோள். பங்களா கார் பண்ணைவீடு காபி எஸ்டேட் என்று தகுதிக்கு மீறிய கனவுகள். கனவு நனவாகிறவரைக்கும் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்பது அவன் கொள்கை.ஆரம்பத்தில் வர்ஷாவும் அவன் போக்கின்படி நடந்துகொள்ள நினைத்தாள் ஆனால் திரும்பத்திரும்ப வீடு பணி என்று ஒரே வட்டத்தில் சுழலும் ஒரேமாதிரியான வாழ்க்கையில் குழந்தையின் வரவு புத்துணர்ச்சியைக்கொடுக்கும் என்று நம்பினாள்.

வர்ஷா மௌனமாக இருக்கவும்," ஹலோ…மாத்திரையெல்லாம் ஒழுங்கா போட்டுக்கறேதானே? உன் வேலை மும்முரத்துல இப்படி வீட்டுக்கு மறந்து போய் நடு நிசிலவர்ர மாதிரி மாத்திரையையும் மறந்து தொலைக்கப்போறே?அதான் கேக்கறேன்"என்றான்.

"ராம்! அஞ்சு வருஷம் ஆச்சு…எனக்கும் வயசு முப்பது முடியப்போகுது..முதல் பிரசவம் முப்பது வயதுக்குள்ள நடந்தா சிக்கல் அதிகம் இருக்காதாம்… சின்ன வயசுல குழந்தைகளைப் பெத்துட்டா வயசான காலத்துல நிம்மதியா இருக்கலாம் ஆல்ரெடி நாம லேட் பண்ணிட்டோம்னு மனசு குறுகுறுக்குது பல நேரங்களில்…"

"என்னாச்சு உனக்கு? சராசரி குடும்பப்பெண் மாதிரி இன்னிக்கு டயலாக் விடறே?"

"நானும் சராசரி குடும்பபெண் தானே? பத்திரிகை நிருபர் வேலை என் தொழில் அவ்வளவுதான்.ராம்! பெண்மையின் நிறைவே தாய்மையில் தான். அந்த இனிய தருணம் ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையில் மறக்கமுடியாதது!"

"லுக்வர்ஷா! விபரீதமாய் பேசாதே… இதெல்லாம் படிப்பறிவு இல்லாத பெண்கள் பேசும் பேச்சு"

"என் அம்மா படிக்கவில்லை பாட்டி படிக்கவில்லைதான் ஆனா ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்கள் நினைவு கூறும் வகையில் வாழ்ந்தவர்கள். இந்த வாழ்க்கைப்பண்பையும் நெறியையும் எந்தப்பல்கலைக்கழகமும் அவர்களுக்குக் கற்றுத்தரவில்லை. அன்பு பண்பு பாசம் எல்லாமே படிப்பறிவு இல்லாதவர்களின் நடைமுறை வாழ்க்கையில் அதிகம் உண்டு.அவர்களை பரிகாசம் செய்யவேண்டாம்"

"்குழந்தைகளுக்கு இப்போதெல்லாம் ரொம்ப செலவு செய்ய வேண்டி இருக்கு வர்ஷா..நம்ம காலம் மாதிரி இல்ல..படிப்புக்கு நோட் நோட்டா எடுத்து வைக்கணும்.அதிலும் பொண்ணு பொறந்தா அவ்வளோதான்….தலைல துண்டுதான்…தெரியாமயா இன்னமும் உசுலம்பட்டி மாதிரி இடங்களில் கள்ளிப்பால் கொடுத்து பெண்சிசுவைக் கொலை செய்யறாங்க எல்லாம் காரணமாத்தான்!"

ராமதுரை இப்படி எகத்தாளமாய் சொல்லவும் வர்ஷா புயலென சீறி நிமிர்ந்தாள் அதுவரை அவளிடம் குடிகொண்டிருந்த சாந்தம் மறைந்து, சட்டென கண் சிவந்துபோனது.உதடுகள் துடித்தன.

"பெண்குழந்தைகளைக் கேவலமாய்பேசும் உங்களை மாதிரி ஆண்கள் இருப்பதால் தான் இப்போ எங்க இனமே குறைஞ்சிட்டு வருது. பல குடும்பங்களில் இப்போதெல்லாம் பையன் ஜாதகங்களை வைத்துக்கொண்டு பெண்ணுக்குப்பேயாய் அலையறாங்களாம்.. இன்னும் கொஞ்ச நாள்ள பெண் இல்லாத பூமியாய் மாறினாலும் ஆச்சரியமில்லை. தாய் நாடு ,தாய் மொழின்னு சொல்லிட்டு பெண்களை நாய் மாதிரி நடத்தும் சில ஆண்களுக்கு புத்தி வந்தாதான் நாடு உருப்படும்."

"என்னடி என்னை நாய்ங்கறியா?" என்று கேட்டு வர்ஷாவின் கன்னத்தில் பளீரென அறைந்தான் ராமதுரை.

இதை சற்றும் எதிர்பார்க்காத வர்ஷா,அரண்டு போய் அப்படியே உட்கார்ந்துவிட்டாள் .
ராமதுரை உஷ்ணப்பார்வையோடு தூங்கப்போனான்.

சோபாவிலேயேசுருண்டுபடுத்துவிட்ட வர்ஷா அடிவாங்கிய அதிர்ச்சியில்அன்று 'அந்த' மாத்திரையை சாப்பிடவும் மறந்து போனாள்.
அதன் விளைவு அடுத்தமாதமே தெரிந்துவிட்டது.

ராமதுரைஅடித்த நாளிலிருந்து அவனோடு அதிகம் பேசாதிருந்த வர்ஷா,அன்று அந்த 'நல்ல செய்தி'யை அவனுக்குச் சொல்ல விரும்பினாள்
வீட்டிற்கு ஓடிவந்து ,"ராம் ..நான் கன்சீவ் ஆகி இருக்கேன்" என்றதும் பதறிப்போனான் ராமதுரை.

அவளருகில் வந்து வயிற்றில்கைவைத்தபடி,"இதைஅழிச்சிடு உடனே அபார்ஷன் செய்துகொள் ப்ளீஸ் ..ஏன்னாநான் புது பிசினஸ் ஆரம்பிக்கபோறேன் அதுக்கு பணம் நிறையவேணும்.. நீ கர்ப்பமாயிட்டா வேலைக்குப்போகமாட்டேன்னு முன்னமே சொல்லி இருக்கே..உன் வருமானமும் இந்தக்குழந்தையின் வரவால் போயிடும்.என் கனவும் நிறைவேறாது ப்ளீஸ் வர்ஷா இதைக் கலைச்சிடு .. தெரியாமநடந்த விபத்தா இதை நினைச்சி மறந்து இனி கவனமாய் இருக்கலாம் என்ன?' என்றான் கெஞ்சினான்.

அருகாமையில் அந்தமுகத்தில் தெரிந்த கோழைத்தனமும், குயுக்தி கொண்டபார்வையும், வர்ஷாவை மனம் உடைய வைத்தன.
வெறுப்பில் நெஞ்சு விம்மியது,"அடச்சே..உங்களுக்கு பணம் சம்பாதித்துப்போடவும் படுக்கை சுகத்துக்கும் தான் என்னைக்கல்யானம் பண்ணிக்கிடீங்களா? நானும் ரொம்ப பொறுமையாய் பல காலம் உங்களோடு எல்லாகாரியங்களுக்கும் துணையா இருந்தேன். நீங்க கைநீட்டி அடிச்சதையெல்லாம் கூட தாங்கிட்டு இருந்தேன்.. ஆ னா இப்போ வயிற்றுசிசுவை அழிக்கச்சொல்லும் உங்க கொடுமையான மனசு கண்டு என் ரத்தமே கொதிக்குது ..ச்சே..நீங்களல்லாம் ஒரு மனுஷனா?"

வர்ஷா வேகமாய் அறைக்குச்சென்றவள் கையில் பெட்டியோடு மறுபடி ஹாலிற்கு வந்தபோது ராமதுரை இவளுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு யாரிடமோ போனில் பிசினஸ் விவகாரத்தை உரக்கப் பேசிக்கொண்டிருந்தான்.

வர்ஷா பெட்டியோடு வாசலுக்கு வரவும், சட்டென ஒரு போலீஸ் ஜிப் வந்து அங்கு வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

வர்ஷா தயங்கி நிற்கையில் அதனின்றும் கிழே இறங்கிய இன்ஸ்பெக்டர் அவளிடம்," இது ராமதுரைவீடுதானேம்மா?' என்று கேட்டார்.

"ஆமாம்..நீ..ங்..க…?" தயக்கமாய் இழுத்தபடி கேட்டாள் வர்ஷா,

"அவரைக்கைது பண்ண வந்திருக்கோம்… வெளிநாட்டுக்கு விசா வாங்கித்தரேன்னு தன் பார்ட்னரோடு பலலட்சம் ரூபாய்களை பலபேரிடம்வாங்கி அப்பாவி மக்களை நல்லா ஏமாற்றி இருக்காரு இந்த அயோக்கியன்ராமதுரை.அவனோட பார்ட்னரை முதல்ல பிடிச்சி உள்ளதள்ளிட்டோம்..இப்போ இந்த ஆளைப்பிடிக்க வந்துருக்கோம்…ஆமா நீங்க யாரு?"

"நா..நானும் ராமதுரையால ஏமாற்றப்பட்ட பொண்ணு தாங்க.."

"இந்த காலத்துல படிச்ச பொண்ணுங்களும் இப்படி ஏமாந்துடறாங்க பாருங்க.."

இன்ஸ்பெக்டர் அருகிலிருந்த போலீஸ்காரரிடம் இப்படிச் சொல்லியபடியே வீட்டிற்குள் நுழையும்போது வர்ஷா ஒருக்கணம் அப்படியே அதிர்ந்து நின்றவள், அடுத்த கணமே தெருவில் இறங்கி வேகமாய் நடக்க ஆரம்பித்தாள்.

பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 3

ஒரு தினக் குறிப்பு
- எம். ரிஷான் ஷெரீப்


நீண்ட நாட்களுக்குப் பிறகு அவன் பற்றிய ஒரு செய்தி அறிகிறேன். மிகுந்த கனமுடைய அச்செய்தி என் அறை முழுதும் நிரம்பிப் பார்க்கும் இடமெல்லாம் ஆழ்சிந்தனையைத் தோற்றுவித்தபடி சிதறிக் கிடக்கிறது. அச்செய்தியைத் திரும்பவும் திரும்பவும் கேட்டுவிடத் திராணியற்றவளாக என்னை உணர்கிறேன். நான் அழுகிறேனா? சொல்லத் தெரியவில்லை. கண்கள் கலங்கியுள்ளன. ஆனால் கன்னங்களில் வழிந்தோடவோ, சிறு விசும்பல்களை உடைப்பதாகவோ இல்லை.

எனதிப்போதைய கண்கள் பொய் சொல்கின்றன. மனதின் விசித்திரக் கோலங்களை முன்னைப்போல ஒழுங்கான விம்பங்களாக அவை காட்டுவதில்லை. சில சமயங்களில் மனது அழும்போதுகூட என்னிரு கண்களும் சிரித்தபடியேயிருக்கின்றன. சில சமயங்களில் உதடுகளில் தோன்றும் சிரிப்பு பொய்யாக இருப்பதைக் கூட உணர்கிறேன். எனது சுயத்திற்கேற்ப, சூழலுக்கேற்ப, சுற்றியிருப்பவர்களுக்கேற்ப நான் நடிக்க வேண்டியவளாக இருக்கிறேன் என்பதனை எனது வதனமும் அதன் பாகங்களும் உணர்ந்தே இருக்கின்றனவோ என்னவோ ?

இன்று எதிலும் ஒரு பற்றற்றவளாக இக்கணங்களைக் கடந்தபடியிருக்கிறேன். அவனது அல்லது அவன் பற்றிய பழைய ஞாபகங்களை மீட்டிப் பார்க்க நினைக்கிறேனா ? அல்லாவிடில் ஏன் வழமையைப் போல இந்நேரத்தின் எனது தேவையான ஒரு தேனீரை ஊற்றவோ, அத் திரவத்தின் ஒவ்வொரு மிடறாகப் பருகியபடி அந்தியின் வண்ணத்தை ரசிக்கவோ மறந்தபடி படுக்கையில் உடலைப் பரப்பி விட்டத்தை வெறித்தபடி இருக்கிறேன் ?

உயிர் பிழைத்த தீப்பற்றிய தேகமொன்றுக்கு மயிலிறகால் களிம்பிடப்படுவதைப் போல எல்லாக் காயங்களையும் காலம் தடவித்தடவி ஆற்றிவிடுகின்றது. தழும்புகள் மட்டும் ஆற்றப்படுவதாகவோ, முழுவதுமாக அகற்றப்படுவதாகவோ இல்லை. வாழ்க்கை ஒரு ஒழுங்கான பாதையில் பயணித்தபடி இருக்கும்பொழுது மட்டும் எப்பொழுதாவது ஓர் நிமிடம் பழைய தடங்களை நினைவில் கொண்டுவந்து ' ஒரு பெரும் வலியைக் கடந்துவந்தவள்' எனச் சந்தோஷிக்கச் சொல்லும் மனம். அக்கணங்களில் மனது தன்னம்பிக்கையால் நிரம்பி வழியும். எவ்வலியையும் தாங்கச் சக்திபெற்றவள் என்ற எண்ணங் கொள்ளவைக்கும். அப்படிப்பட்ட எண்ண அலைகள் மிகுந்திருந்த பொழுதொன்றில்தான் எனது திருமணத்திற்குச் சம்மதித்தேன்.

என்ன விசித்திர மனமிது? என் துணை பற்றி மட்டுமே எண்ண வேண்டிய இதயம் இன்று அவன் நினைவுகளைக் கிளறியபடி இருக்கிறது. அவன் பற்றிய செய்தியைச் சுமந்துவந்த வார்த்தைகளை நான் ஏன் என் காதுக்குள், இந்த அறைக்குள் தொலைபேசியின் துளைகள் வழியே நழுவவிட்டேன்? அவன் பற்றி வந்த இத்தகவலை நல்ல தகவல் அல்லது கெட்ட தகவல் எவ்வகையில் பொருத்திப்பார்ப்பது என்றே தெரியாதவளாக நான் இருக்கிறேன்.

எம்மிருவருக்குமிடையில் ஒரு இறந்தகாலம் இருந்தது. அதில் அவன் என் நேசனாகவும் ஒரு நல்ல நண்பனாகவும் இருந்திருக்கிறான். அந்த நுனியைப் பற்றிப் பிடித்தபடி நான் இப்பொழுது அவனது நினைவுகளை இழுத்துக் கொண்டிருக்கிறேனா? அல்லது அவன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை, நினைவுகளை முழுவதுமாக மறந்துவிட்டேனா என என்னையே நான் சோதித்துக் கொண்டிருக்கிறேனா ? அல்லது நானும் அவனைக் காதலித்தேனா ?

ஐந்து வருடங்களுக்கு முன்னதாக என் மனப்பிம்பத்தில் பதிந்திருக்கும் உருவத்தின்படி, அவன் அழகன். அழகன் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அவனை அடக்கி விட முடியாது எனினும் வேறுவழியில்லை. கம்பீரமானவனாகவும், உயரமானவனாகவும் ஏன் தேவதைப் பெண்கள் கூட வரிசையில் நின்று அவனை அள்ளிப் போவதற்குத் தயாராகும் தோற்றத்திலும் அவன் இருந்தான். ஒரு குழந்தையைப் போன்ற மனமுடையவனாக அவன் இருந்தான். அவனது நாட்களின் ஒவ்வொரு துளியையும் என்னிடம் ஒப்புவிப்பவனாக இருந்தான். அவனது உதடுகள் என்னிடம் உதிர்த்த சொற்களில் பொய்கள் இருக்கவில்லை. கபடங்கள் இருக்கவில்லை. எந்த எதிர்பார்ப்புகளும் கூட இருக்கவில்லை. எனினும் ஒரு சிறுகுழந்தை தனது உலக ஆச்சரியங்களைத் தன் தாயிடம் ஒப்புவிப்பதைப் போல அவனும் என்னிடம் ஒப்புவித்தபடி இருந்தான்.

இருவரும் ஒரே இடத்தில்தான் வேலை பார்த்தோம். அவனுக்கு மிகவும் பொறுப்பான வேலை. நான் அவனது உதவியாளாகச் சேர்ந்திருந்தேன். அன்பான மொழிகளில் வேலைகளைப் பற்றிச் சொல்லிக் கொடுத்ததில் அவனை எனது நண்பனாக ஏற்றுக் கொள்வதில் எனக்குச் சிரமமேற்படவில்லை. வேலை நேரங்கள் தவிர்ந்து நான் தங்கியிருந்த பெண்கள் விடுதி வரை அவன் தனது வாகனத்தில் என்னைக் கொண்டுவந்து விட்டுப் போகிறவனாகவும் இருந்தான். ஒரு கம்பீரமான மேலாளர் எனக்குச் சாரதி வேலை பார்ப்பதில் நான் கர்வப்பட்டேனோ என்னமோ? மறுக்கவில்லை.

சில நேரங்களில் கவிதையெனச் சொல்லிக்கொண்டு நான் கிறுக்குபவைகள் அவனுக்குப் பிடித்திருந்தன. சொல்லச் சொல்ல, சில நேரங்களில் சொல்லச் சொல்லியும் கேட்பான். அலை நுரைத்துக் கரையிலடிக்கும் கடற்கரையோரம் மாலை நேரங்களில் அவனிடம் கவிதை சொல்லியபடி அந்தியை ரசிப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்பொழுதும் பிடிக்கும். எனினும் அருகினில் கடலோ, கவிதை ரசிக்கும் துணையோ எனக்கு வாய்க்கவில்லை.

அவனது பிறந்தநாளொன்றின் போது, நினைவிருக்கிறது. அது அவனுடைய இருபத்தி ஏழாம் பிறந்தநாள். முதன்முதலாக அவன் வசித்த வீட்டுக்கு அழைத்தான். சம்மதித்த பின்னர் அந்த விடுமுறை நாளில் அவனே விடுதிக்கு வந்து அழைத்துச் சென்றான். அன்று நான் வெள்ளை நிற உடையில் இருந்ததாக நினைவிலிருக்கிறது. அவ்வீட்டில் அவனை விடவும் மிகுந்த அன்புடையவர்களாக அவனது பெற்றோரை நான் கண்டேன். ஒரு தேவதையைப் போல இருப்பதாக அவனது அன்னை என் காதில் கிசுகிசுத்தார். அக்கணம் தொட்டு நானும் அவரை அம்மா என்றழைக்கலானேன்.

எனக்கு மட்டுமாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் விழா அது. என்னை அவனது குடும்பத்திற்கு அறிமுகப்படுத்த பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழா அதுவெனப் பின்னாளில் அறிந்தேன். அன்றைய தினம் அங்கிருந்து, அவன் அம்மாவுக்குச் சமையலில் உதவிசெய்தேன். அப்பாவின் மூக்குக் கண்ணாடி துடைத்துக் கொடுத்தேன். அழகிய, அன்பான குடும்பமொன்றின் சூழலுக்குள் நான் ஆட்பட நேர்ந்ததையெண்ணி அன்றைய இரவில் நெடுநேரம் மகிழ்வில் விழித்திருந்தேன். பின்வந்த காலங்களில் எனது வாரவிடுமுறை நாட்கள் அவன்வீட்டில் கழிந்தன. விடுதியை விட்டு முழுவதுமாக வந்துவிடும்படி அவனது பெற்றோர் அன்பாக நச்சரித்தபடி இருந்தனர்.

விவாகரத்துப் பெற்றுத் தந்தை ஒரு தேசத்திலும், தாய் இன்னுமொரு தேசத்திலும் தத்தம் துணைகளுடன் வசித்தபடியிருக்க சிறுவயதிலிருந்தே விடுதி வாழ்க்கை பழகிவிட்டிருந்தது எனக்கு. அத்துடன் எனது சுயத்தை அல்லது சுயமரியாதை என என்னைச் சூழ எழுப்பிக் கொண்டிருந்த அரணை அக்குடும்பத்துக்காக இழக்க நான் விரும்பவில்லையோ என்னவோ, அவர்களது வேண்டுகோளை மறுத்தே வந்தேன். அதே எண்ணம்தானோ என்னவோ ஓரு அழகிய மழை நாளில் அவன் தன் காதலை என்னிடம் சொன்னபோது கன்னத்தில் அறைந்தது போல என் மறுப்பைக் காட்டமாகச் சொல்லச் செய்தது ?

'உனது நேசத்தில் பொய்யிருக்கிறது. உனது கண்களில் கள்ளமிருக்கிறது. உனது நட்பில், உனக்கு மட்டுமே எனச் சொல்லிக்கொள்ள ஒரு சுயநலமிருக்கிறது. இத்தனை நாளாக நட்பாகப் பழகியதுவும் அன்பாகப் பேசியதுவும் இதற்குத்தானா? பழகத் தொடங்கிய மூன்றாம் நாளில் ரோசாப்பூக் காகிதத்தில் இதயமும் அம்புக்குறியும் வரைந்து காதல் கடிதம் நீட்டும் எல்லா ஆண்களையும் போலவேதானா நீயும்? உன்னை மனதில் உயர்ந்த இடத்தில் வைத்திருந்தேன். இன்று அதிலிருந்து அதலபாதாளம் நோக்கி நீ குதித்துவிட்டாய். ஒரு நல்ல தோழனாகவும், நேசனாகவும் உன்னையே நினைத்தேன். இன்று ஒரு சுயநலவாதியாகவும்,பொய்காரனாகவும், நட்பிற்குத் துரோகமிழைத்தவனாகவும் ஆகிவிட்டாய்' என ஒரு நல்ல நட்பைக் கொச்சைப்படுத்துவதாகச் சொல்லி அவனை வார்த்தைகளால் இம்சித்தேன்.

இப்பொழுது புலம்பிப் பயனென்ன இருக்கிறது? என்னிடம் காதலைச் சொன்ன அவனைக் காயப்படுத்தும் நோக்கில் அல்லது எனது இருப்பையும் கருத்தையும் நியாயப்படுத்தவேண்டி முட்டாள்தனமான முடிவொன்றை அப்பொழுதில் எடுத்தேன். அவனையும், அவனது குடும்பத்தையும் நிராகரிக்கத் தொடங்கினேன். அவனுடன் நானென்ன தொழில் பார்ப்பது என்ற சுயகௌரவம் தடுக்க அவ்வேலையை உதறினேன். 'சரி. காதல் வேண்டாம். நட்பாகவே தொடர்ந்து பழகலாம்' எனத் திரும்பத் திரும்ப விடுதிவரை தேடி வந்த அவனது அன்பை காவல்காரனைக் கொண்டு விரட்டியடித்தேன். அவ்வளவு வதை செய்ய அவன் செய்த தவறுதான் என்ன? இப்பொழுது நினைத்துப் பார்த்தால் ஒன்றுமில்லை. ஆமாம் ஒன்றுமேயில்லை.

அந்த நேரத்தில் எனக்கென்ன தேவையாக இருந்தது ? பணமா? இல்லை. எனது மூலங்கள் வசிக்கும் இரு தேசங்களுக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் அது தேவைக்கும் அதிகமாகக் கிடைக்கும். பிறகு தொழில் ? இல்லை. படித்திருக்கும் படிப்பு வேறு நல்ல தொழில்களை இலகுவாகத் தேடித்தரும். பிறகென்ன ? அன்புதானே ? எனது கிறுக்கல்களைப் பாராட்டவும், எனது துயரங்களைச் சொல்கையில் தோள்கொடுத்துத் தலை தடவவும் ஒரு ஜீவன் தானே? அந்த அன்பு அவனிடம் மிகைத்திருந்த பொழுது ஏன் அதை நிராகரித்தேன்? நட்பு என்ற முலாம் பூசிய காதலின் சுயநல உருவம் என அவனைத் தப்பாக நினைத்ததுதான் அவனை, அவனது அன்பான குடும்பத்தை நிராகரிக்கத் தூண்டியதா? இல்லாவிடில் அனேகமாகச் சந்திக்க நேர்ந்த ஆண்கள் அனைவரும் போல எனதழகையும், தனித்திருக்கும் அவலத்தையும் கண்கொத்திப் பாம்பாக நோக்கிக் காதல் விண்ணப்பம் விடுத்ததில் காதல் மேல் எனக்கிருந்த வெறுப்பா?

எதுவோ ஒன்று. என்னையும் அவனையும் பிரித்திற்று. அவனைப் பழிவாங்குவதாக நினைத்து எனது தோழியொருத்தியின் அண்ணனொருவனைக் காதலித்து ஆமாம் நானே வலியப் போய்க் காதலித்துத் திருமணம் செய்துகொண்டேன். எனது அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இரு நாட்கள் கழித்து மின்னஞ்சலில் தகவல் சொல்லி அதிலேயே வாழ்த்துக்களும் பெற்றேன். எனது திருமணத்திற்கு அவனையோ, அவனது குடும்பத்தையோ ஒரு சம்பிரதாயத்துக்குக்கூட அழைக்கவில்லை. ஆனால் அவன் அழைத்தான். ஒரு ஏழைப்பெண்ணுக்கு எளிமையான முறையில் அவன் வாழ்வளித்தபொழுது எந்தவித அதிருப்திகளோ, பகைமை உணர்ச்சியோ இன்றி அவன் அழைத்தான். நான் செல்லவில்லை. அழைப்பிதழை பல நூறு துண்டுகளாகக் கிழித்தெறிந்தேன். அவனுக்குச் சமமாக அந்த ஏழைப் பெண்ணைக் காணத் திராணியற்று அல்லது நானமர்த்தப்பட வேண்டிய மணமேடையில் மங்களங்கள் சூழ இன்னொருத்தி அமர்ந்திருப்பதைப் பார்க்கச் சகிக்காமல் நான் அப்படிச் செய்ததாக இன்று என்னால் நியாயம் கற்பிக்கமுடியும். எனினும் அன்றைய நாளில் முழுத்தவறும் செய்தவள் நானாகிறேன். இப்பொழுதும் வருந்துகிறேன்.

எல்லாம் நடந்து முடிந்து இன்று ஐந்து வருடங்களாகின்றன. பனி பொழியும் ஐரோப்பிய தேசமொன்றில் இயந்திர மகளாகத் தொழில்செய்து கொண்டு முரட்டுக்கணவனோடு வாழ்ந்துவருமெனக்கு அவனைப்பற்றிக் கிடைத்த தகவலைத்தான் இந்நாட்குறிப்பில் எழுதி வைக்க நினைக்கிறேன். இழந்த நாட்களின் குறிப்புக்கள் வானத்தில் சஞ்சரித்தபடியே இருக்குமோ? எல்லாவற்றையும் மீட்டெடுத்து எழுத்துக்களில் வார்த்துச் சேமிக்க முடியுமோ? இந்தக் குறிப்புகளை எழுதிவைப்பதன் மூலம் அவனது நினைவுகளை பின்னொரு காலத்தில் மீட்டிப்பார்க்க விரும்புகிறேனா? எவ்வாறாயினும் எழுதிவைக்கலாம். இனித் தவறுகள் செய்யுமிடத்து மீட்டிப்பார்த்துத் தவறுகளைத் தவிர்க்கலாம். எழுதி முடித்த பின்னர் துணையின் பாசம் வரண்ட விழிகளிலிருந்து இந்நாட்குறிப்பை, இவ்வெழுத்துக்களை எப்படிப் பாதுகாப்பதெனப் பின்னர் யோசிக்கலாம். எழுதத் தொடங்குகிறேன்.

15.09.2008

முன்னர் வேலை பார்த்த அலுவலகத் தோழி இன்று மாலை தொலைபேசியில் அழைத்தாள். அவன் வேலையை விட்டு நீங்கிவிட்டானாம். மிகுந்த சம்பளத்துடனான வேலையை விட்டு நீங்கியதற்குக் காரணம் என்னவெனத் தெரியவில்லை என்றாள். அத்துடன் அவனது ஒரே குழந்தைக்கு என் பெயர் வைத்திருக்கிறான் என்ற தகவலையும் சொன்னாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவன் பற்றிய ஒரு செய்தி அறிகிறேன். மிகுந்த கனமுடைய அச்செய்தி என் அறை முழுதும் நிரம்பிப் பார்க்கும் இடமெல்லாம் ஆழ்சிந்தனையைத் தோற்றுவித்தபடி சிதறிக் கிடக்கிறது. அச்செய்தியைத் திரும்பவும் திரும்பவும் கேட்டுவிடத் திராணியற்றவளாக என்னை உணர்கிறேன். நான் அழுகிறேனா? சொல்லத் தெரியவில்லை. கண்கள் கலங்கியுள்ளன. ஆனால் கன்னங்களில் வழிந்தோடவோ, சிறு விசும்பல்களை உடைப்பதாகவோ இல்லை.....

பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 2

விவாகரத்து வளர்வது ஏன்?
- விசாலம்


ஐமபது வருடங்கள் நிறைவாகக் கழித்த ஒரு தம்பதி தங்கள் மண நாளைக் கொண்டாடினார்கள்,சென்னையில் எனக்கும் அழைப்பு வந்திருந்தது,அங்கே போனாலே
என்ன மன மகிழ்ச்சி! பிள்ளைகள், அவர்களது மனைவிகள் ,பெண்கள் அவர்களது
கணவன்மார்கள் தவிர அவர்களது வருங்கால சந்ததியர்கள் ஒன்றாம் வகுப்பிலிருந்து
காலேஜ் படிக்கும் வரை அதாவது பேரன் பேத்திகள் நிரம்பி வழிய அந்த ஹாலே களைக்
கட்டியது ,அதைத் தவிர உறவினர்கள் ஜே ஜே என்று கூடி இருந்தார்கள்,
"பாட்டி போட்டோவுக்கு போஸ் கொடுங்கோ ,ஸ்மைல் ப்ளீஸ்"
"போடா கண்ணா வம்பு பண்ணிண்டு,,,,,"
"அதான் அவன் ஆசையா சொல்றானே கேளேண்டி கமலி" ,,,,, சரி எடுடா போட்டோ "
அருகில் நெருங்கி தாத்தா பாட்டியை அணைக்க
"இது இது இதுதான் நான் எதிர்ப்பார்த்தேன்" என்று விளம்பர ஸ்டைல்லில் ஒரு பேத்தி
கிண்டல் செய்ய ஒரே கைத்தட்டல் ,அதன் பின் அவசரமாக ஒரு ஆட்டொ வர அதிலிருந்து
ஒரு இளைஞன் இறங்கினான் அவன் கையில் ஒரு பெரிய கேக் டப்பா ,,,,,,,
"ஹாப்பி வெட்டிங் டே ஹாய்,,,,,தாத்தா " என்று வந்தவன் கீழே விழுந்து நம்ஸ்கரித்தான்
நம் கலாசாரமும் அவனுக்குத் தெரிந்திருக்கிறது என்பதை நினைத்து ம்னம் மகிழ்ந்தேன்,
" பாட்டி முட்டைச் சேர்க்காத கேக் ! ஸ்பெஷல் ஆர்டர் !தாத்தா,,,,பாட்டி வாயில் போடுங்கோ
ஆஹா பாட்டி ,வெக்கத்தைப்பார்" இப்படி ஒரு குரல் ஒரு மூலையிலிருந்து வந்தது ,,,உடனே
ஒரு க்ரூப் போட்டோ ,,,,,,,,
ஆக மொத்தம் எங்கும் மகிழ்ச்சியின் அலை ,,இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு குடும்பமா?
என் மனம் பேப்பரில் படித்தச் செய்தியை அசைப் போட்டது அது என்ன செய்தி?ஆம்
சென்னையில் டைவர்ஸ் கேஸ் நாளுக்கு நாள் பெருகி வருகிறது ,குடும்பக்கோர்ட் இதைச் சமாளிக்க முடியாமல் திணருகிறது ,சுமார் 6000 கேஸ்கள் இருப்பில் உள்ளன ,ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு முப்பது கேஸ்கள் பதிக்கப்படுகின்றன
நாளும் சுமார் ஒரு முப்பது கேஸ்கள் பதிகப்படுகின்றன.,,
அந்தக் காலத்தில் பல வருடங்கள் வாழ்ந்து தம்பதிகள் தங்கள் வாழ்வில் நிறைவைக் கண்டனர்,
அப்படி எதாவது உரசல் வந்தாலும் விட்டுக் கொடுக்க்கும் தன்மை நிறைய இருந்தது
தற்காலத்தில் திருமணம் ஆன இரண்டு மாதங்களிலேயெ கருத்து வேற்றுமை வந்து பெண் தன் பெற்றோரிடம் திரும்பி வந்து விடுகிறாள். பெற்றோர்களும் இது பற்றி பெண்ணிடம் பேச பயப்படுகின்றனர் ,சிலசமயம் பையன் வீட்டில் தப்புக்கண்டுப்பிடிக்கப்படுகிறது இதேபோல் பையன் வீட்டிலும் பெண் மேல் தப்புச் சொல்ல பெண் , தான் சுதந்திரமாக இருக்க விரும்பி விவாகரத்துக்கும் துணிகிறாள்,,சென்னையில் இதைப் பற்றி விசாரிக்க TVSLSA ,, தமிழ் நாடு ஸ்டேட் லீகல் சர்வீஸ் அசோசியேஷன் தனிப்பட்ட டாக்டர்களை நியமித்திருக்கின்றனர்,அங்கு கௌன்சிலங் என்ற உள்ளப்பறமாறல் நடைப்பெருகிறது ,ஒருமுறை ஒரு இளம் தமபதி கௌன்சிலிங்க்கு
வந்திருந்தனர் .அவர் சேர்ந்து வாழ பிரியப்படவில்லை விவாகரத்து செய்ய விருப்பம் என்றனர் அதன் காரணம் கேட்ட போது கணவன் சொன்னது "என்க்கு ஆம்லெட் மிகப்
பிடிக்கும் ,ஆனால் இவள் அந்த வாடை வந்தாலே கத்த ஆரம்பித்து விடுகிறாள்,,படார் என்று கதவைச் சார்த்திக் கொண்டு வெளியே போய்விடுகிறாள்,இந்தச் சின்ன சாப்பாட்டு விஷயத்திலேயே இந்த கருத்து வேற்றுமை என்றால் எப்படி என் வாழ்க்கையில் நிம்மதி இருக்கும்?"
பெண் சொன்னது ,"என் திருமணம் முன்பாகவே எனக்கு இந்த வாசனை அலர்ஜி வாந்தி வந்து விடும் என்று மிக கிளியராகச் சொன்னேன் அப்படியும் கேட்காமல் செய்கிறான் .ஆண் என்றாலே அத்தனை ஈகோ ,தன்னனத் தட்டிக் கேட்க யாருமில்லை என்ற நினைப்பு " தினமும் இந்த முட்டைச் சண்டையில் காலைப் பொழுது ஆரம்பித்து கல்யாணத்தையே ஒரு முட்டையாக்கி
விட்டது ,யார் விட்டுக் கொடுப்பது என்றப் பிரச்சனை ,,,,

பழையக் கால தாத்தா பட்டிகள் இன்றும் கிராமத்தில் ஊஞ்சலில் ஆடிக்கொண்டு தன் அமெரிக்கவில் இருக்கும் செல்வங்கள் நினைப்பில் வாழ்ந்து வருகிறார்கள்,தன் மகன்
மக்ள் வெளியூர்களில் இருந்தாலும் ஏதோ ஈமெயில் வழியாகப் பேசி திருப்தி அடைகிறார்கள்.சில சமயம் மகள் பிரசவம் அல்லது பேரக்குழந்தையைப் பார்த்துக் கொள்ள என்று அங்கு போனாலும் அந்தச் சூழ்நிலைக்கும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டியிருக்கிறது அதையும் அவர்கள் தன் செல்வங்களுக்காக மகிழ்ச்சியுடன் செய்கிறார்கள் ஒரு இல்லறம் நன்கு நடக்க பெண்கள் விட்டுக் கொடுத்து ஈகோ இல்லாமல் அன்பால் கவர வேண்டும் சிறு பிரச்சனையைப் பூதாகாரமாக ஆக்காமல் மனதளவில் மன்னித்து விட எல்லாம் சுமூகமாகி விடும் மனித நேயம் , சேவை மனப்பான்மை சிறந்த இல்லறத்திற்கு நிச்சியம் தேவை இவை பழையக் காலத்து தம்பதிகளிடம் அதிகமாக இருந்ததால் வாழ்க்கை என்ற படகு ஆபத்தில்லாமல் ஓடிற்று ,கணவன் அளவு படிப்பு இல்லாமல் இருந்ததும் ஒரு காரணம் ,தனக்கு ஒரு பாதுக்காப்புத் தேவை என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது அப்படியே ஏதாவது சிக்கல் இருந்தாலும் பெண்ணின் தாய் ,பெண்ணிற்கு புத்திமதி சொல்லி திரும்ப அனுப்பி விடுவாள்,தன் பதியே தனக்கு எல்லாம் என்ற ஒரு நிலை ஏற்படுத்திக் கொண் டு விடுகிறாள் கடவுள் கொடுத்தது இதுதான் என்று மனம் நிறைந்து விடுகிறாள் ,முன்பு மனைவிகள் தன் கணவன் பெயரையே எடுக்கத் தயங்குவார்கள் ,பின் பெயர் சொல்ல ஆரம்பித்தனர் இப்போது இருக்கும் நிலையோ பெயருடன் 'டா"போட்டுப் பேசும் வழக்கம் சர்வ சாதாரணமாகிவிட்டது,

இதில் அவர்கள் இருவரிடையே சமத்வத்தைக் காணுகின்றனர் ,கருத்து பரிமாறவோ காதல் செய்யவோ இருவரும் தேவை, தவிர இருவரும் படிப்பிலே சமமாக இருக்கின்றனர் , தவிர தற்காலப் பெண்களுக்குத் தன்நம்பிக்கை மிகவும் அதிகம் ,தன் காலால் நின்று
சம்பாதிக்கும் திறமை அதிகமாகவே உள்ளது , .ஆண் ,பெண் இருவரும் ஒன்றுதான் என்ற எண்ணமும் வலுவாக உள்ளது உரிமைப் போராட்டம் எட்டிப் பார்க்கிறது ,ஆண் அல்லது பெண் இருவர் மனம் ஒப்பவில்லை என்றால் வேறொரு மனம் ஒப்பிய ஒருவரிடம் செல்லவும் துணிகின்றனர்.இன்று சிலர் திருமண்ம இல்லாமலே அதில் நாட்டமிலாமல் வெறும்
நட்பில் "தோழன் அல்லது தோழி என்ற பெயரில் வாழ்க்கை நடத்தவும் துணிந்து விட்டனர் ,இதில் வெளி நாட்டுக் கலாச்சாரம் நுழைந்து இருக்க்லாம் ,இது சரியா ? அல்லது தவறா?

எது எப்படி இருந்தாலும் முன்பு போல் தியாகம் ,சகிப்புத்தன்மை விட்டுக் கொடுக்கும் தன்மை .
அன்பு பாசம் பெரியர்களிடம் மரியாதை, கண்ணியம் கட்டுப்பாடு எல்லாம் குறைந்திருக்கின்றன் என்பது என்னவோ உண்மை தான் ,, டைவர்ஸ் வளருகிறது ,,,,,,,,

பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 1

தொடர்பு எல்லைக்கும் அப்பால்...!
- எம்.ரிஷான் ஷெரீப்
மாவனல்லை, இலங்கை.



தனிமை
ஓர் ஆலமரத்தைப் போலப்
பெருநிழல் தந்துகொண்டிருந்தவேளை
நீயழைத்தாய்
கைபேசியின் கண்ணாடிச்சதுரம்
மின்னி மின்னி உன் பெயருரைத்தது
ஏதோ ஒரு பாடலின் இசையை
நினைவுருத்திச் சோரும் தருணம்
மனச்சலனங்களேதுமற்று
உன் குரலை அனுமதித்தேன்

மிகுந்த ஆதூரமும் அன்பும் வழியும் குரலில்
எப்படியிருக்கிறாய் அன்பேயென்றாய்

உன்னையும்
தனிமையெனும் பெரும்பட்சி
கொத்திக் கொண்டிருந்தவேளையது ;
உன் சதையில் வலிக்கத் தொடங்கிய கணம்
என் நினைவு கிளர்ந்திருக்க வேண்டும் !

இந்தத் தனிமையும் பேய்ப் பொறுமையும்
நீ தந்து சென்றதுதானே
நான் பதிலுரைக்க
என்ன எஞ்சியிருக்கிறதின்னும் ?

இப்போதைய
எனதெழுத்துக்கள் மட்டும் பாவம்
என் துயரத்தின் சுமைகளைச்
சுமந்தவாறு நாற்திசைகளிலும்
அலைந்து கொண்டேயிருக்கின்றன

எழுத்துக்களும் சோரும் காலம்,
உன் தொடர்பு எல்லைக்குமப்பால்
பாலைநிலம் தாண்டி- எனதான தேசம்
பாதங்களைச் சேர்க்குமென்
தூய இல்லத்தில் நானிருப்பேன்

அன்றுன் குளிர்காய்தலுக்கும்,
தவிக்கும் தாகத்திற்கும்
ஆதியின் மூலமறுக்கும்
அத்தனை சந்தோஷங்களுக்கும்
என்ன செய்யப் போகிறாய் ?