பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மதுமிதா - 1

பூங்கா
- மதுமிதா


எத்தனை நெடிய மரங்கள்
எத்தனை சிறிய செடிகள்
அத்தனையும் பசுமை தந்த வரங்கள்
நுரையீரலுக்களிக்கும் உரங்கள்
நடைபழக நடைபழக
அனைத்தும் மறக்கும் தியானநிலை
அக்கணம் சிலிர்க்கும் உளம்
அக்கணம் மலரும் மனம்
மழையோ வெயிலோ
மேல்வானம் சற்றே தெரிந்திட
மரங்கள் இரசிக்கும் உச்சித் தூரிகையால்
அற்புதக் காட்சிகளை வரைந்த வண்ணம்
வாசம் நுகர்ந்தபடி
வண்ணப் பறவைகளைக் கண்டிட
வாகாய் அசைந்திடும்
வாடைக் காற்றை அனுப்பிய வண்ணம்
நடந்திட பாதைகள்
அமர்ந்திட இருக்கைகள்
பசுமைப் புல்வெளிகள்
அழகு மலர்க்காட்சிகள்
நண்பருடன் அளவளாவ
அன்பருடன் அன்பு விளைய
மருத்துவ சிகிச்சை பயனளிக்க
குழந்தைகள் விளையாட
கோபங்கள் போக்க
தாபங்கள் பகிர
நேசங்கள் உணர
நெஞ்சங்கள் நெகிழ
உடற்பயிற்சி செய்ய
பாடங்கள் பயில
எண்ணங்கள் எழுத
மனஅழுத்தங்கள் குறைய
எத்தனை மனிதர்கள்
எத்தனை விதங்களில்
எத்தனை காரணங்களால்
என்றும் வருவர் செல்வர்
இன்று வருபவர் நாளை வருவாரா
இதே நேரம் இதேவிதத்தில்
என்றும் அறிந்திடாது பூங்கா
எனினும்
என்றும் வாசல் விரிய
அவரவர் விரும்பிய வண்ணம்
அவரவர் விரும்பிய எண்ணம்
நிறைவேறும் வண்ணம்
எதையும் எதிர்பாராது
எவரையும் வரவேற்று
மகிழ்விக்கக் காத்திருக்கும்
பூங்கா.


--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மதுமிதா

மதுமிதா - அறிமுகம்

வலைப்பதிவுகளிலும் சரி, இணையக் குழுமங்களிலும் சரி - தனியாக அறிமுகத்திற்கு அவசியமில்லாதவர் மதுமிதா. பெரும்பாலும் கவிஞராகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் இவரும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு படைப்பாளிதான். பண்புடன் குழுமத்தில் இவரும் உறுப்பினர். இந்த வாரம் நம்மோடு நட்சத்திரமாக உலா வரப் போகும்
மதுமிதாவைப் பற்றி கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மதுமிதா

பிறப்பு : தென்காசி, தமிழ்நாடு, இந்தியா
தொழில் :எழுத்தாளர்
பாணி :சிறுகதை, சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு
மதுமிதா என்ற "மஞ்சு ரெங்கநாதன்" ஒரு தமிழக எழுத்தாளர்.

[தொகு] வாழ்க்கைச் சுருக்கம்
தமிழ்நாடு, தென்காசியில் பிறந்து, இராஜபாளையத்தில் வாழ்ந்து, சென்னையில் வசிக்கிறார். சுதந்திரப் போராட்டத் தியாகி காந்தி அரங்கசாமி ராஜாவின் பேத்தி. தந்தை ரகுபதிராஜா. தாயார் பாக்கியலட்சுமி. கணவர் ரெங்கனாதராஜா. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டாலும் தமிழில் எழுதிக் கொண்டிருப்பவர்.
எம்.ஏ ஆங்கில இலக்கியம், டிப்ளோமா இன் போர்ட் போலியோ மேனேஜ்மெண்ட் ஆகியவை கற்றவர். ஹிந்தி பிரவீன் உத்தரார்த் வரையும் சம்ஸ்கிருதத்தில் பட்டப் படிப்பும் படித்துள்ளார்.
மகாகவி பர்த்ருஹரியின் பொன்மொழிகள் இவருடைய முதல் நூல். சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.
கல்கி, அமுதசுரபி, மங்கையர் மலர், அமீரக ஆண்டு மலர், படித்துறை, யுகமாயினி, வார்த்தை மற்றும் சில சிற்றிதழ்களில் (கலை, உங்கள் பாரதி, களம், நம்பிக்கை...) கவிதை, சிறுகதை, கட்டுரை, நேர்காணல் எனப் பல படைப்புகள் வெளிவந்துள்ளன. மரத்தடி, தமிழ் உலகம், உயிரெழுத்து, சந்தவசந்தம், ஈ.சுவடி, தமிழாயம், எழுத்தும் எண்ணமும் ஆகிய மடலாடற்குழுக்களிலும் சிஃபி தமிழ், திசைகள், நிலாச்சாரல், திண்ணை, தமிழோவியம், பதிவுகள், கீற்று, தட்ஸ்தமிழ், தமிழ்நெஞ்சம் ஆகிய இணைய இதழ்களிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

மதுரை வானொலியில் இவரின் 11 பாடல்கள் இசையமைக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டன. பொதிகை, மக்கள் தொலைக்காட்சிகளில் கவிதை வாசித்துள்ளார். தமிழில் காற்றுவெளி, நீங்கா இன்பம் [1] என்ற வலைப்பூக்களையும் ஆங்கிலத்தில் Truth Wins என்ற வலைப்பூவையும் நடத்தி வருகிறார்.

இவரின் பர்த்ருஹரி சுபாஷிதம் நூல் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் நான்கு காட்சிகளில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.
இவர், சமூகப் பணிகளிலும் ஈடுபாடுள்ளவர். இரத்த தானம், கவுன்சிலிங், விழியிழந்தோருக்கு வாசித்தல், சிறுவர்களுக்கு கல்வி என இயங்கி வருகிறார். இராஜபாளையத்தில் 'இராஜபாளையம் தமிழ்நாடு அரசு பெண்கள், சிறுவர் நூலகம்' அமைய முக்கியகாரணியாய் இருந்தவர்.

[தொகு] எழுதிய நூல்கள்
மஹாகவி பர்த்ருஹரி சுபாஷிதம்:நீதிசதகம் (2000) - (மஹாகவி பர்த்ருஹரியின் பொன்மொழிகளை சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.)
மௌனமாய் உன்முன்னே (2003) - (கவிதை)
பர்த்ருஹரி சுபாஷிதம் (செப்டம்பர் 2005) - (சமஸ்கி்ருதத்திலிருந்து முந்நூறு பாடல்களின் தமிழாக்க நூல்)
நான்காவது தூண் (2006)(பதினெட்டு பத்திரிகை ஆசிரியர்களின் நேர்காணல்களின் தொகுப்பு)
தைவான் நாடோடிக் கதைகள் (2007)
பாயுமொளி நீ எனக்கு (கவிதை, மின்னூல்)

[தொகு] வெளி இணைப்புகள்
நீங்கா இன்பம், மதுமிதாவின் வலைப்பூ
மௌனமாய் உன்முன்னே - அண்ணா கண்ணன்
பர்த்ருஹரி சுபாஷிதம் ஜெயந்தி சங்கர்
பர்த்ருஹரி சுபாஷிதம் தேவமைந்தன்
பர்த்ருஹரி சுபாஷிதம் அண்ணா கண்ணன்
நான்காவது தூண் விழியன்
நான்காவது தூண் திருமலை கோளுந்து
நான்காவது தூண் தாமரைச்செல்வி
பாயுமொளி நீ எனக்குபி.கே.சிவகுமார்
நேர்காணல் நிலாசாரல்
நேர்காணல் தமிழோவியம்

--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - என்.சொக்கன் - 7

தேடல்
கலீல் கிப்ரான் - தமிழில் என்.சொக்கன்


இரண்டு தத்துவ ஞானிகள், ஒரு மலைச்சரிவில் சந்தித்துக்கொண்டார்கள். ஒருவர் மற்றவரிடம் கேட்டார், 'நீங்கள் எங்கே போகிறீர்கள் ?'

'நான் இளமையைத் தேடிச் செல்கிறேன்', என்றார் மற்றவர், 'இந்த மலைகளைத் தாண்டி, எங்கோ, இளமையின் ஊற்று இருப்பதாகப் படித்திருக்கிறேன். அதைக் கண்டுபிடிப்பதற்காக நான் போகிறேன்'
இப்படிச் சொல்லிவிட்டு, அவர் முதலாமவரிடம் கேட்டார், 'நீங்கள் எதைத் தேடிச் செல்கிறீர்கள் ?'

'நான் மரணத்தின் மர்மத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன்'

இளமையைத் தேடிச் செல்லும் தத்துவக்காரருக்கு, இதைக் கேட்டதும் சிரிப்பு வந்துவிட்டது, 'யாராவது மரணத்தைத் தேடுவார்களா ?' என்று அவர் கிண்டல் செய்யத் துவங்கினார்.

மரணத்தைத் தேடுபவருக்கு, இந்தக் கிண்டல் பொறுக்கவில்லை, 'நீதான் முட்டாள், இளமை பொங்கும் ஊற்று என்று ஏதேனும் இருக்கமுடியுமா ? பைத்தியக்காரத்தனமாக அதைத் தேடிக்கொண்டிருக்கிறாயே !' என்று அவர் கத்தினார்.

இப்படி இவர்கள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி, சத்தமாய்க் கத்தி, சண்டையிட்டுக் கொண்டிருப்பதை, ஒரு கிராமத்தான் பார்த்தான், அவர்களின் ஆக்ரோஷமான தத்துவ வாதங்களை சில நிமிடங்களுக்குப் பொறுமையாய்க் கேட்டான் அவன்.

பின்னர், அவர்கள் அருகே சென்று, 'நண்பர்களே, தயவுசெய்து சண்டையிடாதீர்கள்', என்றான் அவன், 'நீங்கள் இருவரும் ஒரே விஷயத்தைதான், வெவ்வேறு வார்த்தைகளில் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். நமக்குள்ளே இளமையும், மரணமும் ஒன்றாய் இருக்கின்றன, அப்படியானால், இவை இரண்டைத் தேடுவதும் ஒன்றுதானே !'
சிரித்தபடி இதைச் சொல்லிவிட்டு அந்த கிராமத்தான் தன்வழியே சென்றான்.

தத்துவ ஞானிகள் இருவரும், ஒருவரையொருவர் மௌனமாய்ப் பார்த்துக்கொண்டார்கள். பின்னர், அவர்களும் சிரித்தார்கள்.

ஒருவர், மற்றவரிடம் சொன்னார், 'சரி நண்பரே, இனிமேல், இளமையையும், மரணத்தையும், நாம் இருவரும் சேர்ந்தே தேடுவோம் !'

--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - என்.சொக்கன் - 6

நிழலும், நிஜமும்
கலீல் கிப்ரான் - தமிழில் என்.சொக்கன்


ஒரு நரி, காலை வேளையில் தன் நிழலைப் பார்த்தது, கம்பீரமாய் நீண்டிருந்த தனது நிழலைக் கண்டதும், 'நான் இன்று ஒரு ஒட்டகத்தைச் சாப்பிடுவேன்', என்று தைரியமாய் நினைத்துக்கொண்டது.
அன்று காலை முழுதும், அந்த நரி ஒட்டகங்களைத் தேடி அலைந்தது.

பின்னர், மதிய வேளையில், களைத்துப்போன அந்த நரி, மீண்டும் தன் நிழலைப் பார்த்தது - இப்போது அந்த நிழல் சுருங்கிச் சிறிதாகியிருந்தது. அதைக் கண்ட நரி, 'ஒட்டகம் எதற்கு ? ஒரு எலி சாப்பிட்டால் போதாதா ?', என எண்ணிக்கொண்டது.


--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - என்.சொக்கன் - 5

ஒரு பைத்தியக்காரன்
கலீல் கிப்ரான் - தமிழில் என்.சொக்கன்


நான் எப்படிப் பைத்தியமானேன் என்றா கேட்கிறீர்கள் ? அது பெரிய கதை !
நெடுநாள் முன்பு, இந்த உலகம் தோன்றி, கடவுள்களெல்லாம் பிறப்பதற்கு முன், நான் தூங்கி எழுந்த
ஒரு காலையில், என் முகமூடிகள் எல்லாம் திருடு போயிருப்பதைக் கண்டேன் !

என்ன கொடுமை ! ஏழு ஜென்மங்களில் நான் அணிந்திருந்த ஏழு முகமூடிகளும் மொத்தமாய்க் காணாமல் போய்விட்டன.

நான் கதறினேன், அலறினேன், கூட்டமான தெருக்களில் ஓடினேன், அவர்களில் என் முகமூடிகளைத்
திருடியவர்களுக்கு சாபம் கொடுத்தேன்.

அவர்கள் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள், சிலர், பயந்து, தங்கள் வீடுகளுள் ஓடி ஒளிந்துகொண்டார்கள். அப்போது, ஒரு வீட்டின் மாடியில் நின்றிருந்த இளைஞன் என்னைப் பார்த்து, 'பைத்தியம்' என்றான் !

நான் அவனைப் பார்ப்பதற்காக தலையை நிமிர்த்தினேன், முதன்முறையாக, முகமூடிகளற்ற என் நிர்வாண முகத்தில் சூரிய ஒளி பட்டது. அதன் ஒளியும், வெப்பமும் என்னை அரவணைக்க, உடனடியாக, என் உடலும், உள்ளமும் அந்தச் சூரியனை நேசிக்கத் தொடங்கிவிட்டது !
அதன்பின், எனக்கு முகமூடிகளே தேவையில்லை என்று நான் புரிந்துகொண்டேன் !
இப்போதும் நான் அழுதேன், ஆனால், என் முகமூடிகளைத் திருடியவர்களை, நான் வாழ்த்தினேன் !
அன்றிலிருந்து, நான் ஒரு பைத்தியக்காரனாய் அறியப்பட்டேன்.

இதில் எனக்கு சந்தோஷம்தான். 'பைத்திய' வாழ்வில்தான், சுதந்திரமும், பாதுகாப்பும் எனக்குக் கிடைத்திருக்கிறது - தனிமையின் சுதந்திரம், பிறர் நம்மைப் புரிந்துகொள்வதிலிருந்து பாதுகாப்பு !

-- பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - என்.சொக்கன் - 4

அவரவர் மழை
கலீல் கிப்ரான் - தமிழில் என்.சொக்கன்


ஒரு பூனை, நாயிடம் சொன்னது, 'நண்பா, நீ முழு மனதுடன் பிரார்த்தனை செய், தொடர்ந்து நீ இப்படிக் கடவுளைப் பிரார்த்தித்துக்கொண்டே இருந்தாயானால், ஒரு நாள் ஆண்டவன் உனக்கு அருளுவார், இதில் எந்த சந்தேகமும் இல்லை, கடவுளின் கருணைப் பார்வை உன்மேல் பட்டுவிட்டால் போதும், வானத்திலிருந்து எலிகளாய்ப் பொழியும், நீ விருப்பமுள்ள அளவுக்கு அள்ளித் தின்னலாம் !'

இதைக் கேட்ட நாய், விழுந்து விழுந்து சிரித்தது, 'ஏ முட்டாள் பூனையே, எனக்கு ஒன்றுமே தெரியாது என்று முடிவுகட்டிவிட்டாயா ? என் வீட்டிலும் பெரியவர்கள் இருக்கிறார்கள், அவர்களும், என் முன்னோர்களும், எங்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள் - மனம் உருகிப் பிரார்த்தனை செய்தால், எலி மழை பொழியாது, எலும்பு மழைதான் பொழியும் ! அதை நாம் ஆசை தீரக் கடித்து மகிழலாம் !'

--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - என்.சொக்கன் - 3

கவிஞர்கள்
கலீல் கிப்ரான் - தமிழில் என்.சொக்கன்


நான்கு கவிஞர்கள், ஒரு மேஜையைச் சுற்றி அமர்ந்திருந்தார்கள். அந்த மேஜையின்மேல், ஒரு குவளையில் ஒயின் வைக்கப்பட்டிருந்தது.

அந்தக் குவளையைப் பார்த்த முதல் கவிஞன் சொன்னான், 'நண்பர்களே, நான் என்னுடைய அகக்கண்ணால் இந்த ஒயினைப் பார்க்கிறேன், அதன் மணம், ஒரு கானகத்தில் சுற்றித் திரிகிற பறவைக் கூட்டத்தைப்போல, காற்று வெளியெங்கும் பரவி நிற்கிறது !'

அவன் அமர்ந்ததும், இரண்டாவது கவிஞன் எழுந்துகொண்டான், 'என்னுடைய அகக் காது, அந்தப் பறவைகள் சப்தமிடுவதைக் கேட்கிறது, ஒரு வெள்ளை ரோஜா, தனது இதழ்களால், வண்டைச் சிறைப்படுத்துவதுபோல, அந்த கீதம் என் இதயத்தைச் சுண்டியிழுக்கிறது !'
மூன்றாவது கவிஞன் தன் கண்களை மூடிக்கொண்டவாறு, இரு கைகளையும் மேல்நோக்கி உயர்த்தினான், 'நான் அந்தப் பறவைகளைத் தொடுகிறேன் !', என்றான், 'இதோ, அவற்றின் சிறகுகள் ! தூங்கும் தேவதை ஒருத்தி, அழகாக மூச்சுவிடுவதுபோல, அந்தச் சிறகுகள், படபடவென்று அடித்துக்கொள்கின்றன, என் கைகளை வருடுகின்றன !',

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த நான்காம் கவிஞன், சட்டென்று எழுந்தான், அங்கிருந்த ஒயின் குவளையைக் கையில் ஏந்திக்கொண்டான், 'ஐயோ, நண்பர்களே, நான் இப்படி முட்டாளாய் இருக்கிறேனே, உங்களைப்போல, எனக்கு அகக் கண் இல்லை, அகக் காது இல்லை, அகத் தொடுதல் உணர்ச்சியும் இல்லை, என்னால் இந்த ஒயினின் மணத்தைப் பார்க்கமுடியவில்லை, அதன் பாட்டைக் கேட்கமுடியவில்லை, அது தன் இறக்கைகளை அடித்துக்கொள்வதுகூட, எனக்குத் தெரியவில்லை, பாவம், எனக்குத் தெரிவதெல்லாம் இந்த ஒயின்மட்டும்தான், ஆகவே, நான் அதைக் குடித்து, என் அக சக்திகளைக் கூர்மையாக்கிக்கொள்கிறேன் !'

இப்படிச் சொல்லிவிட்டு, அவன் மளமளவென்று அந்த ஒயின் முழுதையும், ஒரு சொட்டுகூட மிச்சம் வைக்காமல் குடித்துவிட்டான்.

மற்ற மூன்று கவிஞர்களும், வாய் பிளந்தபடி, அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்கள், தாகமும், கவித்துவமற்ற வெறுப்பும், அவர்களின் கண்களில் படர்ந்திருந்தது.

--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - என்.சொக்கன் - 2

பெரிதிற்கும், சிறிதிற்கும் நடுவே
- கலீல் கிப்ரான் தமிழில் என்.சொக்கன்


அந்த மலைக் கிராமத்தில், ஒரு ஏழைப் பெண்மணி, தன் ஒரே மகனுடன் வசித்துவந்தாள்.

ஒரு நாள், கடுமையான காய்ச்சலில் அந்தப் பையன் இறந்துபோனான்.

துயரத்தில் மூழ்கிய அந்தப் பெண், பக்கத்தில் கைகட்டி நிற்கும் வைத்தியரிடம் கதறினாள்,
'ஐயா, என் மகன் எப்படி இறந்தான் ? என் ஒரே மகனை என்னிடமிருந்து பிரித்தது எது ?
சொல்லுங்கள், சொல்லுங்கள் !'

மருத்துவர் அமைதியாக பதில் சொன்னார், 'அம்மா, காய்ச்சல்தான் உன் மகனுடைய மரணத்துக்குக் காரணம் !'

'காய்ச்சல் என்றால் என்ன ?'

'அதை என்னால் விளக்கிச் சொல்ல முடியாது', என்றார் வைத்தியர்,

'காய்ச்சல் என்பது ஒரு சிறிய, ... மிகச் சிறிய பொருள், நாம் எதிர்பாராத நேரத்தில், நம் உடம்புக்குள் புகுந்து கொண்டுவிடும், நம் மனிதக் கண்களால் அதைப் பார்க்கமுடியாது !'

இப்படிச் சொல்லிவிட்டு வைத்தியர் அந்த வீட்டிலிருந்து வெளியேறினார். அந்தப் பெண் தொடர்ந்து கதறிக் கொண்டிருந்தாள், 'நாம் கண்களால் பார்க்கமுடியாதபடி, மிகச் சிறிய ஒன்று, அதுவா என் மகனைக் கொன்றுவிட்டது ?' அன்று மாலை. அந்தப் பெண்மணிக்கு ஆறுதல் சொல்வதற்காக ஒரு சாமியார் வந்தார். அவரிடமும் அந்தப் பெண் தன் அழுகையை, ஆற்றாமையைக் கொட்டினாள், 'எனக்குமட்டும் ஏன் இப்படி நடக்கவேண்டும் ? என் ஒரே மகன் ஏன் இப்படி திடீரென்று செத்துப்போனான் ?'

'அம்மா, இதெல்லாம் கடவுள் சித்தம்', என்றார் சாமியார்.

'கடவுளா ? யார் அது ? எங்கே இருக்கிறார் அந்தக் கடவுள் ?', என்று சத்தமாய்க் கத்தினாள் அந்தப் பெண், 'அவரா என் மகனைக் கொன்றது ? சொல்லுங்கள், அவர் எங்கே இருக்கிறார் என்று சொல்லுங்கள், அவர் முன்னே சென்று நியாயம் கேட்கிறேன், அவனுக்குப் பால் கொடுத்த என் மார்புகளைக் கிழித்தெறிந்து, அந்த ரத்தத்தை அவர் காலடியில் கொட்டி, 'என் மகனைக் கொன்றது சரிதானா ?', என்று கேட்கிறேன், சொல்லுங்கள்'

சாமியார் சொன்னார், 'கடவுள் எங்கும் இருக்கிறார் அம்மா, அவர் பெரியவர், மிகப் பெரியவர், நம் மனிதக் கண்களால் அவரைப் பார்க்கமுடியாது !'

அவர் சொன்னதைக் கேட்டதும், அந்தப் பெண்ணின் கண்ணீர் அதிகரித்தது, 'மிகப் பெரிய ஒருவரின் ஆணைப்படி, மிகச் சிறிய ஒன்று என் மகனைக் கொன்றுவிட்டது,. ஆனால், இந்த இரண்டையுமே நம்மால் பார்க்கமுடியாது, அப்படியானால், அந்த மிகப் பெரியதிற்கும், மிகச் சிறியதிற்கும் இடையே, நாம் இந்த மண்ணில் எதற்காக இருக்கிறோம் ? ஏன் இருக்கிறோம் ?'

இதைக் கேட்டபடியிருந்த அவள் அம்மா, உள் அறையிலிருந்து வந்து அவளைக் கட்டிக்கொண்டாள், 'மகளே, நாம்தான் மிகச் சிறியவர்கள், நாம்தான் மிகப் பெரியவர்கள், மிகச் சிறியதிற்கும், மிகச் பெரியதிற்கும், இடையே இருக்கிற பாதையும் கூட, நம்மைப்போன்ற மனிதர்கள்தான் !'

-- பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - என்.சொக்கன் - 1

கடவுள்
கலீல் கிப்ரான் - தமிழில் என்.சொக்கன்


பல நாள்களுக்குமுன், நான் பேசக் கற்றுக்கொண்டபோது, புனித மலையின்மேல் ஏறி, கடவுளிடம் உணர்ச்சிமயமாய்ப் பேசினேன், 'என் எஜமானே, நான் உங்கள் அடிமை, உங்கள் எண்ணம்தான் எனக்கு
சட்டம், எப்போதும் நான் அதைப் பின்பற்றியிருப்பேன் !'

கடவுள் எனக்கு பதில் சொல்லவில்லை, ஒரு பெரும் புயலாக என்னைக் கடந்து சென்றார்.

அதன்பின், ஆயிரம் ஆண்டுகள் கழித்து, நான் மீண்டும் புனித மலையின்மீது ஏறினேன், கடவுளிடம் பேசினேன், 'என்னைப் படைத்த இறைவனே, நான் உங்களால் உருவாக்கப்பட்டவன், வெறும் களிமண்ணாக இருந்த என்னை, நீங்கள்தான் வடிவாக்கினீர்கள், ஆகவே, என்னுடையவை அனைத்தும், உங்களுக்கே சொந்தம் !'

அப்போதும், கடவுள் என்னிடம் பேசவில்லை. பல ஆயிரம் இறக்கைகள் ஒன்றாய்ப் படபடப்பதுபோல், அவர் என்னைக் கடந்து சென்றார்.

இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தன. நான் மறுபடி, புனித மலையின்மேல் சென்றேன், கடவுளிடம் உரக்கப் பேசினேன், 'தந்தையே, நான் உங்கள் மகன், உங்கள் அன்பால், நீங்கள் என்னைப் பிறக்கச்செய்தீர்கள், அன்பாலும், பக்தியாலும், நான் உங்கள் ராஜ்ஜியத்தை அடைவேன் !'

கடவுளிடம் எந்த பதிலும் இல்லை. தூரத்து மலைகளை மறைக்கும் பனிப் படலமாக, அவர் என்னை வருடிப்போனார்.

மேலும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தபின், நான் மீண்டும் புனித மலைக்குச் சென்றேன், கடவுளிடம் பேசினேன், 'என் இறைவா, என் நோக்கமும் நீயே, நிறைவும் நீயே ! உன்னுடைய 'நேற்று'தான், நான், என்னுடைய 'நாளை', நீ ! பூமியில், நான் உன்னுடைய வேர், வானத்தில், நீ என்னுடைய மலர் ! நாம் இருவரும் சூரியனைப் பார்த்தபடி, ஒன்றாய் வளர்கிறோம் !'

இப்போது கடவுள் என்னைப் பார்க்கக் குனிந்தார். என் காதுகளில் இனிமையான வார்த்தைகளை உச்சரித்தார், ஒரு பெருங்கடல், தன்னிடம் சேரவரும் நீரோடையை அணைத்துக்கொள்வதுபோல், அன்போடு என்னைத் தழுவிக்கொண்டார் கடவுள் !

பின்னர், நான் புனித மலையிலிருந்து கீழிறங்கியபோது, அந்த மலையில் மட்டுமின்றி, அடிவாரத்திலும், மற்ற பகுதிகளிலும், பள்ளத்தாக்குகளிலும் கூட, கடவுள் இருப்பதைக் கண்டேன் !

-- பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - என்.சொக்கன்

அன்பினியவர்களே,

வாரம் ஒரு சிறப்பு படைப்பாளர் வரிசையில் கடந்த வாரம் நிர்மலாவின் படைப்புகளை ரசித்திருந்தீர்கள். இதோ இந்தவாரம் நம்மை மகிழ்விக்க வருகிறார் என். சொக்கன் என்றழைக்கப்படுகின்ற நாகசுப்ரமணீயன் சொக்கநாதன்.

அவரிடம் படைப்புகளைக் கேட்டதுமே மனமுவந்து சம்மதித்ததோடு

"ஏழு படைப்புகள் என்றால், அவற்றினிடையே ஏதேனும் ஒரு பொதுத்தன்மை இருந்தால்தான் சிறப்பாக இருக்கும், ஆகவே, நான் மொழிபெயர்த்த கலீல் கிப்ரன் கதைகளை இந்த வரிசையில் வழங்க விரும்புகிறேன், இத்துடன் உள்ள இணைப்பில் 44 கதைகள் உள்ளன, அவற்றில் சிறந்தவை என நீங்கள் நினைப்பதைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறேன்."

என்று நமக்கு இன்ப அதிர்ச்சி தந்தார். இவற்றிலிருந்து ஏழு கதைகளை மட்டும் தேர்வு செய்வது மிகக் கடினமான விடயம்தான். எனவே ஏழு நாட்களுக்கும் படைப்புகள் வரும். ஏழிற்கும் அதிகமான படைப்புகளை நீங்கள் வாசிக்கப் போகிறீர்கள்.

"இக்கதைகள் 'மிட்டாய்க் கதைகள்' தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை, வெளியீடு: கிழக்கு பதிப்பகம்'.

கிழக்கு பதிப்பகத்திற்கும் ராயர் காப்பி கிளப் காலத்திலிருந்தே இனிய நட்புடன் உறவாடி வரும் அன்புக்குரிய நண்பர் சொக்கனுக்கும் பண்புடன் சார்பில் இனிய நன்றி!

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா இவ்வார நட்சத்திரமான சொக்கனைப் பற்றி இவ்வாறு சொல்கிறது.

http://ta.wikipedia.org/wiki/என்._சொக்கன்
என். சொக்கன் (English: N. Chokkan, മലയാളം: എന്‍. ചൊക്കന്‍, பிறப்பு: ஜனவரி 17, 1977; ஆத்தூர், சேலம்) என்ற பெயரில் எழுதும் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார்.
தொண்ணூறுகளில் எழுதத் துவங்கிய என். சொக்கன் இதுவரை சுமார் நூறு சிறுகதைகளும் இரு நாவல்களும் எழுதியுள்ளார். வாழ்க்கை வரலாறுகள், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நூல்கள் வடிவில் சிறந்த பங்களிப்புச் செய்துள்ளார். இவரது நூல்கள் சில ஒலிப்புத்தகமாகவும், ஆங்கில, மலையாள மொழிபெயர்ப்பிலும் வெளி வந்துள்ளன.
சேலம் ஆத்தூரில் பிறந்து, வளர்ந்து, பெங்களூரில் வசிக்கும் என். சொக்கன் ஒரு மென்பொருள் நிபுணர் ஆவார். இணையத்தில் இவர் தொடங்கி, நடத்திவந்த 'தினம் ஒரு கவிதை' என்னும் மடலாடற்குழு ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய குழுவாகும்.
என். சொக்கனின் நூல்கள்

[தொகு] சிறுகதைத் தொகுப்புகள்
பச்சை பார்க்கர் பேனா
உன் நிலைக்கண்ணாடியில் என் முகம்
மிட்டாய்க் கதைகள் (கலீல் கிப்ரன் சிறுகதைகள் மொழிபெயர்ப்பு)

[தொகு] வாழ்க்கை வரலாறுகள்
அம்பானி ஒரு வெற்றிக்கதை
பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான்
இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி: ரூபாய் பத்தாயிரம், பத்தாயிரம் கோடி ஆன கதை
அஸிம் ப்ரேம்ஜி: கம்ப்யூட்டர்ஜி
லஷ்மி மிட்டல்: இரும்புக்கை மாயாவி
ரிச்சர்ட் ப்ரான்ஸன்: 'டோண்ட் கேர்' மாஸ்டர்
சச்சின்: ஒரு புயலின் பூர்வ கதை
திராவிட்:இந்திய பெருஞ்சுவர்
ஷேக்ஸ்பியர்:நாடகமல்ல, வாழ்க்கை
நெப்போலியன்: போர்க்களப் புயல்
குஷ்வந்த் சிங்: வாழ்வெல்லாம் புன்னகை
அண்ணா(ந்து பார்!)
வீரப்பன்: வாழ்வும் வதமும்
வாத்து எலி வால்ட் டிஸ்னி
சார்லி சாப்ளின் கதை
நம்பர் 1: சாதனையாளர்களும் சாகசக்காரர்களும்

[தொகு] அரசியல்
மரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே (நேபாளத்தின் அரசியல் வரலாறு)
அயோத்தி: நேற்றுவரை
கேஜிபி: அடி அல்லது அழி
Hamas: பயங்கரத்தின் முகவரி
CIA: அடாவடிக் கோட்டை

[தொகு] குழந்தைகளுக்கான படைப்புகள்
கம்ப்யூட்டர்
விண்வெளிப் பயணம்
டெலிவிஷன் எப்படி இயங்குகிறது?
மேஜிக் தோணி (தேர்வு பயம் விரட்ட)
அப்துல் கலாம்
இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி
பில் கேட்ஸ்
அறிஞர் அண்ணா
நெப்போலியன்
சார்லி சாப்ளின்

[தொகு] பிற
தேடு: கூகுளின் வெற்றிக்கதை
நோக்கியா: கொள்ளை கொள்ளும் மாஃபியா
வல்லினம் மெல்லினம் இடையினம் (மென்பொருள் துறைபற்றிய பன்முகப் பதிவுகள்)
நலம் தரும் வைட்டமின்கள்

[தொகு] English
Hi Computer
Vicky In Space
Narayana Murthy: IT Guru (Translated By: Lakshmi Venkatraman)
Dhirubai Ambani: (Translated By: R Krishnan)

[தொகு] മലയാളം (Malayalam)
അബ്ദുള്‍ കലാം (വിവര്‍ത്തനം: മാ. ദക്ഷിണാമൂര്‍ത്തി)
ബില്‍ ഗേറ്റ്സ്‌ (വിവര്‍ത്തനം: മാ. ദക്ഷിണാമൂര്‍ത്തി)
നെപ്പോളിയന്‍ (വിവര്‍ത്തനം: മാ. ദക്ഷിണാമൂര്‍ത്തി)
ഇന്‍ഫോസിസ്‌ നാരായണമൂര്‍ത്തി (വിവര്‍ത്തനം: മാ. ദക്ഷിണാമൂര്‍ത്തി)

[தொகு] வெளியாகும் தொடர்கள்
திருப்பு முனை ('முத்தாரம்' வார இதழ்)
உலகே உன்னை ஆராதிக்கிறேன் ('மல்லிகை மகள்' மாத இதழ்)
கில்'லேடி'கள் ('பெண்ணே நீ' மாத இதழ்)
வெற்றிக்குச் சில புத்தகங்கள் ('குமுதம்' வார இதழ்)

[தொகு] என். சொக்கனின் பேட்டிகள் / அறிமுகங்கள்
http://etamil.blogspot.com/2006/06/chat-meet-chokkan.html
http://www.nilacharal.com/tamil/suvai127.html
http://www.hindu.com/thehindu/holnus/006200801221860.htm (ஆங்கிலம்)
http://www.blonnet.com/ew/2008/01/28/stories/2008012850140400.htm (ஆங்கிலம்)

[தொகு] என். சொக்கன் நூல் விமர்சனங்கள்
http://www.nhm.in/blog/nhmreview/labels/N.%20Chokkan.html
http://www.hindu.com/br/2006/09/19/stories/2006091900561400.htm (ஆங்கிலம்)
http://www.thehindubusinessline.com/iw/2008/01/20/stories/2008012050651200.htm (ஆங்கிலம்)
http://adirfisk.hitmyn.net/2008/04/02/book-review-a-biography-of-charlie-chaplin-tamil/ (ஆங்கிலம்)

-- பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா