பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மோகன் தாஸ் - 3

ரப் நே பனா தி ஜோடி
- மோகன் தாஸ்

ரப் நே பனா தி ஜோடிக்கு அர்த்தம் மிகச்சரியாக கடவுள் உருவாக்கிய தம்பதிகளா என்று சொல்லமுடியாவிட்டாலும் சொல்லவரும் கருத்தென்னவோ அதுவாகத்தான் இருக்க முடியும். ஷாருக்கானிடம் இருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்த்தேனா என்று சொல்லத் தெரியவில்லை. நான் இன்னமும் கூட 'ஓம் சாந்தி ஓம்' பார்க்கலை, 'கபி அல்விதா நா கெஹ்னா' பார்த்ததோட சரி. என் ப்ராஜக்ட் ஒருவாறு முடிந்திருக்க காலையில் சர்வரின் மதர் போர்ட், ஹார்ட் டிஸ்க் எல்லாம் ஒட்டுமொத்தமாய் படுத்துக் கொள்ள இணையம் இல்லாவிட்டால் உலகமே இல்லாததாகிவிடும் எங்கள் சூழ்நிலையில் சட்டென்று சினிமாவிற்கு செல்வதென்று முடிவெடுத்ததும் ஓடிக்கொண்டிருக்கும் 'டிரான்ஸ்போர்ட்டர் 3' அல்லது 'ரப் நே பனா தி ஜோடி' இரண்டில் ஒன்றென்று யோசித்து ரப் நே பனா தி ஜோடிக்கு சென்றிருந்தோம். பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை, இந்தப் படத்தைப் பற்றி படித்த இரண்டு வரிகள் என்றால் நாராயணன் எழுதிய இரண்டு டிவிட்டுகளாகத்தான் இருக்கும். கதை சொல்லும் எண்ணம் கிடையாதென்றாலும், அங்கங்கே முடிச்சுகள் அவிழ வாய்ப்புள்ளது என்பதால் படம் பார்க்க தீர்மானித்துள்ள மக்கள் மாப்பு கொடுத்துவிட்டு ஒதுங்கிவிடலாம்.

பெரிய அளவில் முடிச்சுகள் எதுவும் இல்லைதான் படத்தில், சாதாரணமான கதை, உள்ளுணர்வுகளுக்காக மட்டும் ஒரு படம் எடுத்திருக்கிறார்கள் என்பதில் கொஞ்சம் சந்தோஷயம் தான். ஹெவி வைட் சண்டைக்காட்சி இல்லையென்று சொல்லலாம் என்றால்; சுமோ வீரனுடன் ஷாருக்கான் மோதும் காட்சி வந்து மனதை அலைக்கழிக்கிறது அது நகைச்சுவைக்காக என்றாலும் கூட. படத்தினுடைய பெரிய லாஜிக்கல் ஓட்டை மீசை எடுத்த ஷாருக்கானைக் கூட தெரியாமல் விழிக்கும் அவர் மனைவி. ஆனால் இதையும் அவர்கள் இருவருக்குமான பழக்கம் வெறும் டிபன்பாக்ஸ் காலையில் செய்து தருவதிலும் சினிமா தியேட்டரில் சினிமா பார்ப்பதிலும் என்பதால் விட்டுவிடலாமா என்றால் அங்கேயும் என் மனது உதைக்கிறது. கூட வசிக்கும் ஒருவனை அவன் மீசையை எடுத்துவிட்டால் கொஞ்சம் ஃபேன்ஸியா டிரெஸ்ஸிங்க் செய்தால் தெரியாமலா போய்விடும் என்றால் அந்நியன் படம் பார்த்த எஃபெக்ட் வேறு வந்து டிஸ்டர்ப் செய்கிறது.

சிம்பிளான லைன், திருமண நாளன்று காதலித்த மாப்பிள்ளை இறந்துவிடுவதால் தன் ஆசிரியரின் மகளின் திருமணத்திற்குச் சென்ற ஷாருக்கானுக்கு அவர் மகளையே திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம். இதில் பார்த்ததும் காதல் கொஞ்சம் சகிக்கலை என்றாலும் சட்டென்று உள்மனம் 'மச்சி அந்த ஃபிகரைப் பார்த்ததும் உன் மனசு பதறுச்சே அதுதான் லவ்' என்று சொல்லித் தொலைப்பதால் பார்த்ததும் காதல் சாத்தியம் என்று நானும் உணர்கிறேன் என்றே வைத்துக் கொள்ளலாம் ;). எனக்கு சினிமா பார்த்துவிட்டு வந்துவிடும் fate ஷாருக்கானுக்கு அந்த ஃபிகரை கல்யாணம் செய்து கொண்டு அமிர்தசரஸிற்கு அழைத்துவரும் fate. என்னது 'நான்' fateஐ நம்புகிறேனா என்ற கேள்விக்கு நான் கொண்டுவர நினைத்த மெல்லிய நகைச்சுவை உணர்விற்காக மன்னித்துக் கொள்ளுங்கள். 'நான்' என்பது எங்கேயும் பெரிய பிரச்சனை தான், அதை மறைத்துவிட்டு நடமாடுவது பல சமயங்களில் நாம் என்னத்திற்காக நடித்துக் கொண்டிருக்கிறோம் என்கிற கேள்வியை தன்னாலே எழுப்பி தூங்க விடாமல் செய்துவிடும். இந்தப் படத்திலும் அப்படி ஒரு 'நான்' பிரச்சனை தான்.

கல்யாணம் செய்து கொண்டு வந்த அனுஷ்கா சர்மா பழைய காதலன் நினைவில் உருகிக் கொண்டிருக்க, திடீர்க்கல்யாணம் என்றாலும் காதல் கல்யாணம் செய்துகொண்ட ஷாருக் - தன் சுய பச்சாதாபத்தில் நெளிந்து கொண்டிருக்க கதைக்கு வருகிறார் அன்பு அண்ணன் வினய் பத்தக். எங்கடா கடைசியில் 'அட்டு' படத்துக்கு வந்திட்டோம் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது களேபரம் செய்தது போல் உள்நுழையும் வினய்யின் கதாப்பாத்திரம் அழவேண்டிய இடத்தில் அழுது சிரிக்க வேண்டிய இடத்தில் சிரித்து செய்ய வேண்டியதை செய்ய வேண்டிய நேரத்தில் செய்து படத்தை நகர்த்தியிருக்கிறது. இவர் மட்டும் இல்லாவிட்டால் இந்தப் படத்தை பார்த்த சோட்டுக்கு வீட்டிற்குப் போனமா வாங்கிவந்திருக்கும் நாவலில் இன்னொன்றை முடித்தோமா என்று நீண்டிருப்பேன். கட்டிப் போட்ட கதாப்பாத்திரம் வினய் பத்தக், என்றாலும் ஷாருக்கின் கதாப்பாத்திரம் - அந்த மீசை சமாச்சாரத்தை மட்டும் கொஞ்சம் மறந்துவிட்டு - பார்த்தால் செய்திருக்கும் சாகசம் சாதாரணமானுது இல்லை தான். அந்நியன் படத்தில் பிரகாஷ்ராஜுடன் விக்ரம் வசனம் பேசுவார், மல்டிபிள் பெர்சனாலிட்டி டிஸ்ஸார்டரில் வந்துவந்து போகும் விஷயத்தில் பிரம்மாதப் படுத்தியிருப்பார். அப்புறம் நம்ம அனுஷ்கா சர்மா - சொல்லவும் வேண்டுமா அங்கங்கே க்ளவேஜ் காண்பிக்கிறார் அழகாய் சிரிக்கிறார் பப்ளியாய் இருக்கிறார்.(இதென்ன வரவர எல்லா சினிமா ஹீரோயின்களையும் சைட் அடிக்க தொடங்கியிருக்கிறேன் என்று தெரியவில்லை. சர்தாரினியா நச்சுன்னு இருக்கா!)

க்ளைமாக்ஸில் வரும் அந்தப் பகுதி போன்று ஷாருக்கானுக்கு பாதி படம் முழுக்க திறமை காட்டும் வேலை. நன்றாகச் செய்திருக்கிறார், இன்னும் நன்றாகச் செய்திருக்க முடியும் என்றே நான் நினைக்கிறேன். கொஞ்சம் முதுமை தட்டிய உணர்வு மீசை இல்லாத மாதவன் ச்ச ஷாருக்கானிடமும் கூட வருகிறது. நல்ல நடிப்புக்காரன் என்பது அழகாய்த் தெரிகிறது சோகத்திலிருந்து சந்தோஷத்திற்கும் உற்சாகத்திலிருந்து துக்கத்திற்குமாய் அவர் transformation நன்றாய் வந்திருக்கிறது. மீசை இல்லாத ஷாருக்கான் 18 வயது அனுஷ்காவுடன் டான்ஸ் ஆடும் பொழுது அத்தனை விகாரமாய் இல்லை என்று தான் சொல்வேன், இங்கே இதை எழுதும் பொழுது நம் தமிழ்நாட்டு ரசினிகாந்த் விசயகாந்த்கள் நினைவில் வந்து போகிறார்கள் தான்.

தன் மனைவியை பிரமிப்பூட்ட வினய்யுடன் சேர்ந்து ஷாருக் செய்யும் நாடகம் சட்டென்று நீண்டு ராஜ் என்கிற ரோலாக நீளும் பொழுது எழும் சந்தேகம் வார்த்தைக்கு வார்த்தை கடவுள் பெயரைச் சொல்வதால் விட்டுவிட வேண்டியதாயிருக்கிறது. கடவுள் பேச்சுக்கு மறுபேச்சு உண்டா உலகில். சாதாரணனாக அனுஷ்காவை திருமணம் செய்து கொண்டவனாக ஷாருக்கான், அசாதாரணமானவனாக அனுஷ்கா 'ரொம்பவும் போர்' அடிப்பதால் போகும் நடனக் குழுவில் இணைந்து கொள்ளும் நண்பன் என்று நீள்கிறது கதை. இங்கே தான் முக்கியமான டிவிஸ்ட். கொஞ்சம் கொஞ்சமாய் தன் உள்ளிருக்கும் இன்னொரு பர்ஸனாலிட்டியான 'ராஜ்' ஆக ஷாருக்கான் அனுஷ்காவை கவர்ந்துவிடும் பொழுது வரும் பிரச்சனை தான் முன் சொன்ன அந்த 'நான்' பிரச்சனை. அனுஷ்கா காதலிப்பது அசாதாரணமான ஷாருக்கானைத் தான், உண்மையில் அவளை மிகவும் விரும்பும் - அந்த விருப்பத்திற்காகவே - சாதாரணனில் இருந்து அசாதாரணனாக மாறும் ஷாருக்கானை இல்லை என்பது அவனை கொஞ்சம் அசைத்துப் பார்த்துவிடுகிறது. இங்கே இந்த 'நான்' பிரச்சனையை இயக்குநர் சரியாகக் கையாண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அவனால் தன் இன்னொரு முகத்தை அவளுக்காய் மாற்றிக் கொண்ட முகத்தைக் காட்டி அவளை தன் வசப்படுத்தியிருக்க முடியும். ஆனால் தான் மாற்றியதாய் காட்டிக் கொண்டிருக்கும் ஒன்று உண்மையில் தான் இல்லை என்று ஹீரோ நம்புவதும் அதனால் ஏற்படும் அழுத்தங்களும் தான் என்னளவில் இந்த சாதாரண படத்தை கொஞ்சம் அசாதாரணப் படமாக ஆக்குகிறது. தமிழ் சினிமாவிற்கு(பாலிவுட் சினிமாதான் பார்த்தது நான் மறுக்கலை) தெரிந்த க்ளைமாக்ஸ் தான், நாலைந்து பாட்டுகள் இருக்கு. கஜோல், பிபாஷா, ப்ரீத்தி ஜிந்தா, ராணி முகர்ஜி ஆடும் ஆட்டம் வேறு உண்டு. ஷாருக்கான் கொஞ்சம் காண்ட்ரவர்ஸியான ரோல்களை செய்துவருகிறார், 'கபி அல்விதா நா கெஹ்னா' ஒரு உதாரணம் இது ஒன்று. அதற்குப் பாராட்டுக்கள். கடவுளைப் பற்றி படத்தில் வரும் வசனங்களை 'இறை மறுப்பாளன்' என்றாலும் கூட அப்படியில்லாத மக்களுக்கு அது எப்படி உணர்த்தப்படும் என்று உணர்ந்து ரசித்தேன். இன்னும் எத்தனை சபர் போக வைப்பாய் என் ரப்பே... என்று புலம்பும் ஒரு சாதாரணனின் கதையைப் போல். என் காதலைக் காதலியைக் கடவுள் காண்பித்துக் கொடுப்பார் என்று நம்பும் இந்தப்படம், Mr. and Mrs. Iyer படங்களைத் தொட்டுச் செல்வதாக நான் உணர்கிறேன். இறை மறுப்பாளனாய் அனுஷ்கா, மீசை இல்லை ஷாருக்கானுடன் தில்லி சென்றிருந்தாள் சந்தோஷப்பட்டிருப்பேன், அனுஷ்கா கடைசியில் உண்மையான காதலை கடவுள் மூலமாய் கண்டடைவதால் மட்டுமில்லாமல்.

பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - சுகிர்தராணி - 1

விருட்சங்கள்
- சுகிர்த்தராணி


பருவங்கள் வாய்த்த என்னுடல்
காளானைப் போலக் கனிந்து குவிகிறது
அதன் முன்னும் பின்னும்
கவனமாய் நெய்த ரகசிய உறுப்புகள்
மயிர்க்கால்கள் சிலிர்த்த தோல் முழுவதும்
காமநெய்யின் உருகிய வாசனை
மலர்ந்த இடையைச் சுற்றி
வெதுவெதுப்பான புணர்கதுப்புகளும்
கவிழ்த்துப் போட்ட ஆயுத எழுத்துமாய்
காமத்தின் சோழிகளும்
உடலினுள் பொதிந்து மிதக்கின்றன
இப்போது புகையின் வடிவம் கொண்டு
ஒப்பனைகள் ஏதுமற்ற தெருக்கலைஞனைப் போல
கச்சையின் முன்புற வார் அவிழ்க்கிறாய்
பாலூட்டியவைகளை ருசித்தவாறே
அவற்றின் பெயர்சொல்லவும் வெட்கிக்கிறாய்
என் மார்பின் இசைக்கவையை
போரின் கொலைக்கரமாய் நீட்டுகிறேன்
இனியென் ஆளுகைப் பிரதேசத்தில்
பதாகையை உயர்த்திப் பிடிக்கும்
இளகாத ஸ்தனங்களை
விதையின் அடியிலிருந்து உரக்கப்பாடு
முலைகள் விருட்சங்களாகி வெகு காலமாயிற்று.

பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - சுகிர்தராணி - அறிமுகம்

சுகிர்தராணி - அறிமுகம்




"கைப்பற்றி என் கனவுகேள்", "இரவு மிருகம்", "அவளை மொழிபெயர்த்தல்" ஆகிய மூன்று தொகுதிகளாக அவருடைய கவிதைகள் வெளியாகியுள்ளன. சுகிர்தராணியின் கவிதைகள் பெண் உடல் மொழி பற்றியும், தலித் விடுதலை பற்றியும் பெருங்குரலெழுப்புகின்றன. தமிழ் இலக்கிய உலகில் பெரும் விமர்சனத்துக்கும், கலகத்துக்குமான பாதையை உண்டாக்குபவை.

தமிழில் எம்ஃபில் பட்டம் பெற்றவர், வேலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். பண்புடன் ஆண்டு விழா கொண்டாட்டத்திற்காய் அவரின் அனுமதியுடன் இரவு மிருகம் தொகுப்பிலிருந்து சில கவிதைகள் இடுகிறோம்.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மோகன் தாஸ் - 2

மௌனத்தில் உறைந்திருக்கும் சுயம் - Children of a lesser God
- மோகன் தாஸ்




வெகு சில படங்கள் பார்த்து முடித்ததும் மனம் ஜில்லென்று ஆகிவிடுவதுண்டு, பெரும்பாலும் சந்தோஷமான முடிவுகளைக் கொண்டிருக்கும் படங்களில் தான் இந்த உணர்வு வரும். சோகமான முடிவுகளைக் கொண்டிருக்கும் அட்டகாசமான படங்கள் வெகு காலத்திற்கு மனதில் தங்கினாலும் படம் பார்த்து முடித்ததும் காற்றில் பறக்கும் உணர்வைக் கொண்டுவருவதில்லை. சமீபத்தில் பார்த்த Children of a lesser god படமும் அப்படித்தான், காற்றில் பறக்கும் அனுபவத்தைத் தந்தது. மெலோடிராமா தான் என்றாலும் இன்னும் அதன் முடிச்சுகளில் இருந்து விலகிவிடவில்லை என்பதால் ரசிக்க பறக்க முடிந்தது. பொன்னியின் செல்வனின் மணிமேகலைக்கும் வந்தியத்தேவனுக்குமான உரையாடல், பயணிகள் கவனிக்கவும்-ல் ஜார்ஜினாவிற்கும் சத்தியநாராயணாவிற்குமான உரையாடல், என் பெயர் ராமசேஷனில் வரும் ராமசேஷன் - பிரேமா, ராமசேஷன் - மாலா உரையாடல்கள் என்று உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் புத்தகத்தில் இருந்து கூட அந்த உணர்வு சில சமயங்களில் வருவதுண்டு, இதை வேண்டுமானால் pleasure of text என்று சொல்லலாம்.

Children of a lesser god திரைப்படத்தின் கதை சுலபமானது, கவிதை போன்றது. மனதைப் பற்றியதாயும் உள்ளுணர்வுகளைப் பற்றியதாயும் சுயத்தைப் பற்றியதாயும் திரைக்கதை விரிகிறது. சுயத்தை இழக்க விரும்பாத ஒரு காது கேட்க இயலாத பெண்ணைப் பற்றியதும், அந்தப் பெண் இழக்கப்போவதாய் நினைப்பது சுயமே இல்லை; அவள் இழக்கப்போவதாய் நினைக்கும் சுயத்தின் விளைவாய் அவள் வாழ்க்கைக்கான இன்னொரு சாளரம் திறக்கப்போகிறது என்றும் தீவிரமாய் நம்பும் ஒரு ஆணைப் பற்றியதுமானது இக்கதை. மொழி படத்தில் நான் இல்லாததாய் உணர்ந்தது என்னவென்று இந்தப் படம் பார்த்ததும் புரிந்து கொண்டேன். ராதாமோகனின் 'மொழி' படத்திற்கான உந்துதல் இந்தப் படத்திலிருந்து கிடைத்திருக்கும் என்றே நினைக்க வைக்கிறது இந்தப் படத்தில் வரும் பல காட்சிகள், இல்லாமலும் இருக்கலாம். ஏகப்பட்ட ஒற்றுமைகள் இரண்டு படத்திற்கும் இடையில், அது இங்கே தேவையில்லாதது நிறுத்திக் கொள்கிறேன்.

படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது நினைத்துக் கொண்டேன், don't tell me she(heroine) can actually hear and speak என்று, கடைசியில் அது உண்மையாகி அந்தப் பெண்ணால் உண்மையிலேயே கேட்க முடியாதென்று தெரிந்த பொழுது வருத்தமாகயிருந்தது. அற்புதமான டேலண்ட், இந்தப் படத்திற்காக Marlee Matlinக்கு சிறந்த நடிகைக்கான அக்காதமி அவார்ட் கிடைத்திருக்கிறது. William Hurtற்கு சிறந்த நடிகருக்கான அக்காதமி ஏன் கிடைக்கவில்லை என்ற வருத்தமும் உண்டு என்றாலும் சந்தோஷமாகயிருந்தது.

ஹீரோ காதுகேளாதோர் பள்ளிக்கு, அங்கு படிக்கும் மாணவர்களுக்கு பேசக் கற்றுத் தருவதற்காக வருகிறார். அந்தப் பள்ளியில் படித்து அதே பள்ளியில் வேலை பார்க்கும் ஹீரோயினை அவர் முதன் முதலில் சந்திக்கும் இடத்திலேயே அவளுடைய கோபத்தின் காரணமாய் ஹீரோவுக்கு ஹீரோயின் மேல் ஒரு விருப்பம் வந்து விடுகிறது. ஆனால் பின்னர் ஹீரோயின் "she is one of the brightest students we ever had" என்ற அறிமுகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு அந்தப் பள்ளியில் சுத்தம் செய்யும் பெண்ணாய் வேலை செய்யும் விஷயம் தெரிந்ததும் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள முயலும் ஹீரோவுக்கு அவளுடைய பிரச்சனை புரியவருகிறது. அதன் பின்னர் அந்தப் பிரச்சனையை ஹீரோ எப்படித் தீர்த்து வைக்க முயல்கிறார், முடிந்ததா என்பது தான் கதை.

அந்தப் பிரச்சனை மிக முக்கியமானதாக இருப்பதுவும், ஏனோ தானோவென்று எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அந்தப் பிரச்சனையை அணுகாமல் இருப்பதுவும் தான் எனக்கு இந்தப் படத்தை மிகவும் பிடித்திருப்பதற்கான காரணங்கள். ஹீரோயினின் பிரச்சனை எல்லோரும் அவளையே 'லிப் ரீடிங்' கற்றுக் கொள்ளச் சொல்வதும், பேச முயற்சி செய்யச் சொல்வதும் தான். ஏன் மற்றவர்கள் 'Sign language' கற்றுக் கொள்ளக் கூடாது என்பது அவள் கோபம். இதில் முக்கியமான இன்னொரு பிரச்சனை ஹீரோவின் வேலையே காது கேளாத மக்களுக்குப் பேசக் கற்றுக் கொடுப்பது தான். ஹீரோவுக்கு 'Sign language' தெரியுமென்றாலும் அத்தனை வேகம் கிடையாது, ஆனால் அதை விட பெரிய பிரச்சனை ஹீரோயினை தொடர்ந்து பேசக் கற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்துவது தான்.

இப்படி ஹீரோயினை பேசக் கற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்துவதில் தொடங்கும் ஒன்று, பின்னர் காதலாக மாறி அவர்களை சேர்ந்து வாழும் அளவுக்குக் கொண்டு செல்கிறது. ஆனாலும் தொடர்ச்சியாக ஹீரோ, ஹீரோயினை பேசச் சொல்வது அவளுக்கு அவள் சுயத்தை இழப்பதைப் போன்று தோன்றுவதால் இருவரும் பிரிந்து செல்லும் நிலைக்கு ஆளாகிறார்கள். ஹீரோயினின் இளமைப் பருவத்தில் அவளுடன் பழக நினைத்த ஆண்கள் எல்லோரும் ஒரு உரையாடலை/தொடக்கத்தைக் கூட அவளிடம் செய்யாமல் நேரடியாய் உடலுறவையே நினைத்தது அவளை இன்னும் கோபத்தில் கொண்டு போய் மேலும் அவளைத் தனிமைப் படுத்தியிருப்பது ஹீரோவிற்கு புரியவருகிறது. அவளை 'அவள் எப்படி இருக்கிறாளோ' அப்படி ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வாதாடுவதில் இருக்கும் உண்மை ஹீரோவிற்குப் புரிந்தாலும் பேச முடியாததும், 'உதடுகளைப் படிக்க' முடியாததும் அவளைத் தனிமைப் படுத்துகிறது என்று நினைப்பதால் ஹீரோ தொடர்ச்சியாக அவளை அவள் விரும்பாததை செய்யச் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறான்.

கடைசியில் ஹீரோவும் சரி ஹீரோயினும் சரி தங்கள் பக்கமும் தவறு இருக்கிறது என்பதை உணர்ந்ததும் இருவரும் இணைய படம் சுபம்.

ஹீரோயின் மார்லி மாட்லின் இயற்கையிலேயே காது கேட்க முடியாதவர் என்பதால் அந்தக் கதாப்பாத்திரத்தோடு அருமையாக ஒன்றிப் போய்விடுகிறார், படத்தின் ஆரம்பப் பகுதி முழுவதும் கோபக்காரராக வந்துவிட்டு முகத்தை தூக்கிக் கொண்டே வந்துவிட்டு இடையில் ஒரு முறை சிரிக்கும் பொழுதுதான் தெரிகிறது எத்தனை அழகாய் இருக்கிறது அவருடைய புன்னகை என்று. எனக்கென்னமோ கையில் பூனைக் குட்டியுடன் ஹீரோவிற்காக அவர் வீட்டின் முன் காத்திருக்கும் பொழுது அவர் சிரிப்பது விகல்ப்பமில்லாமல் வந்திருப்பதாகப் படுகிறது. அழகான பெண், கோபப்படும் பொழுதும், சிரிக்கும் பொழுதும், ஒவ்வொரு முறையும் 'Sign' செய்யாமல் ஹீரோ பேச முயலும் பொழுதும் தன் தலையைத் திருப்பி அவர் உதட்டை படிக்காமல் இருக்கும் பொழுதும், உணர்ந்து செய்திருக்கிறார். காட்சிகள் மனதில் அப்படியே பதிந்து போய் விட்டது எனக்கு.

ஹீரோவாக வில்லியம் ஹர்ட், மாட்லின் போலில்லாமல் படத்திற்காக 'Sign language' கற்றுக் கொண்டிருப்பாராயிருக்கும். அவர் எப்படி இந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் என்று ஆச்சர்யமே வருகிறது ஒவ்வொரு முறையும் அவருடைய கதாப்பாத்திரத்தை நினைத்துப் பார்க்கும் பொழுது. அவருக்கு எதிரில் நடிப்பவர்கள் செய்யும் 'Sign'ஐ தனக்குத் தானே சொல்லிக் கொண்டும் தன்னுடைய வசனங்களை 'Sign'உடன் பேசிக் கொண்டும் நடிப்பது பெரிய விஷயம். இது எல்லாவற்றையும் விட முக்கியமானது இப்படிச் செய்யும் பொழுது அவர் கஷ்டப்படுகிறார் என்பது போன்றோ, அவர் நடிக்கிறார் என்பது போன்றோ தெரியாமல் இருப்பது. அவருடைய நடிப்பு நிச்சயம் பாராட்டிற்குரியது. மாட்லின் உடைய கோபத்தைப் பார்த்து சிரிப்பது, அவள் சுயத்தின் மீது காரணத்தைச் சொல்லி தனிமைப் படுத்திக் கொள்ளும் பொழுது வருத்தப் படுவது, துரத்தி துரத்தி அவளைப் பேசச் சொல்வது, பின்னர் இருவரும் பிரிந்து வாழும் சமயத்தில் ஏதோ ஒன்றை இழந்ததைப் போலவே இருப்பது என தன் பங்கிற்கு படம் காண்பித்திருக்கிறார் மனிதர்.

இதைத்தவிர்த்தும் மற்ற காது கேளாத மக்களை நம்மிடையே பள்ளி மாணவர்களின் வழியாய் காண்பித்திருக்கிறார் இயக்குநர் Randa Haines, எனக்கு இந்தப் படம் பார்த்ததில் இருந்து Sing language கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகமாகயிருக்கிறது அதை ஆசையாய் முடித்துக் கொள்ளாமல் எதுவும் சீரியஸாய் செய்யவேண்டி இந்தப் பேச்சை இங்கே முடித்துக் கொள்கிறேன்.

வசனங்கள் அத்தனையும் அருமை என்று சொல்லலாம், எல்லா வசனங்களுமே ரொம்ப 'ஷார்ப்'. Broadwayயில் நாடகமாக வந்து கொண்டிருந்ததை படமாக எடுத்ததால் அவர்களுக்கு இந்த வரம் அமைந்திருக்கிறது என்று சொல்லலாம். நான் கதை எழுதும் பொழுதெல்லாம் மெல்லிய நகைச்சுவை இருப்பது போலவே கதை எழுதி வந்திருக்கிறேன், எனக்கு இந்த மெல்லிய நகைச்சுவையின் மீது காதல் உண்டு. ஆனால் முழுநீள நகைச்சுவையின் மீதல்ல, நான் இதுவரை முழுநீள நகைச்சுவையாய் எதுவும் எழுதிய நினைவு இல்லை. எனக்கு இந்தப் படம் பிடித்திருந்ததற்கான இன்னொரு முக்கியக் காரணம் இதன் வசனங்கள்.

கடற்கரையில் ஹீரோ, ஹீரோயினியிடம் முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றை மனதில் வைத்துக் கொண்டு, "Hey you want to play stand up sit down again" விற்கு பதில் சொல்லாமல் ஆனால் அந்தக் கேள்வி எழுப்பிய உணர்வால் மனதால் சிரித்து அதன் எதிரொளிப்பு சிறியதாய் முகத்தில் தெரிய, ஹீரோ சொல்லும் "Ohh careful, you almost smiled"ல் கடுப்பாகி முறைக்க ஹீரோ மீண்டும் சொல்லும், "Ahh Thats the girl, Thats Sarah Norman we all know and love" வசனம் காட்சியை கேரக்ட்டரைசேஷனை சிறிய வசனங்கள் மூலம் நகைச்சுவையாகச் சொன்ன தந்திரம் பிடித்திருந்தது.

ஹோட்டலில் ஒன்றில் ஆர்டர் எடுக்க வரும் சர்வர், ஹீரோயின் ஹீரோவிடம் Sign languageல் பேசுவதைப் பார்த்து அதிசமயாகப் பார்க்க அதற்கு ஹீரோயின் சர்வர் தன்னை முட்டாளாகப் பார்க்கிறான் என்று சொல்ல, ஹீரோ "He doesnt think you stupid, he thinks you a deaf." என்று சொல்லும் பதிலில் திருப்தியடையாமல் ஹீரோயின் மீண்டும், காதுகேட்கும் மக்கள் தங்களை(காது கேளாதவர்களை) முட்டாளாகப் பார்க்கிறார்கள் என்று சொல்ல, ஹீரோ சொல்லும், "Only stupid hearing people thinks that deaf people are stupid" என்ற பதிலில் ஹீரோயின் கண்களில் தெரியும் நன்றியுணர்ச்சி ஒரு கவிதை. எனக்குத் தெரிந்து அவளுக்கான காதல் இங்கே தொடங்குவதாகத்தான் நான் நினைக்கிறேன்.

ஹீரோயின் தான் டான்ஸ் ஆட விரும்புவதாகச் சொல்லும் காட்சியில், ஹீரோ கேட்கும், "Can you feel it?"ற்கான பதிலாய் ஹீரோயின் முகத்தை அசைத்து ஆமென்று சொல்லிவிட்டு சைகையில் "vibrations…" "…through my nose" என்று சொல்லி ஹீரோவை நக்கல் செய்வது.

ஹீரோவை டான்ஸ் ஆட அழைத்துச் சென்றுவிட்டு அவள் மற்றும் கண்ணை மூடிக்கொண்டு தனியாக ஆடிக் கொண்டிருக்க ஹீரோ அவள் நகர்தலில் மயங்கி நின்று கொண்டிருக்க, அவள் தனியாய் ஆடும் சூழ்நிலையை ஒப்பு/ஏற்றுக் கொள்ளும் அந்தப் பாடல் முடிந்து ஜோடியாய் ஆடும் பாடல் வந்ததும்; அதிர்வு இல்லாததால் கண்ணைத் திறந்து பார்த்துவிட்டு எல்லோரும் ஜோடியாய் ஆடத் தொடங்கியதை அறிந்து கொண்டு ஹீரோவைப் பார்க்கும் பொழுது ஹீரோ முகத்தில் 'இப்ப என்ன செய்வ' என்பதைப் போன்ற உணர்ச்சி ஒரு ஹைக்கூ கவிதை.

தொடர்ச்சியாய் அறை ஒன்றில் ஹீரோயின் ஹீரோவிடம் தான் ஏன் பேசவிரும்பவில்லை என்பதற்கு தன்னுடன் படுப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தன் பின்னால் அலைந்த பையன்கள் பற்றியும் அவர்கள் ஒரு கோக் வாங்கிக் கொடுத்து தன்னுடன் பேசவிரும்பாமல் தன்னுடன் படுப்பதையே குறியாக வைத்திருந்ததைச் சொல்லிவிட்டு தன்னைப் பற்றி ஹீரோவும் அப்படித்தான் நினைப்பதாகச் சொல்லி அவனைக் கோபப்படுத்தும் காட்சி ரொம்பவும் இறுக்கமானது அதன் வசனங்களும் அப்படியே.

ஹீரோயினை தன் வீட்டிற்கு அழைக்கும் காட்சியில் ஹீரோ கேட்கும் உனக்கு என்ன வேண்டும் என்ற கேள்விக்கு, நீ என்றும் குழந்தைகள் என்றும் சொல்லிவிட்டு பின்னர் காது கேளாத குழந்தைகள் என்று சொல்ல ஹீரோ, நான் எனக்கு காதுகேளாத குழந்தை வேண்டும் என்று சொல்லமாட்டேன் என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்துவிட்டு ஆனால் அப்படி இருந்தால் அதில் எனக்கு வருத்தமில்லை என்று சொல்லும் வசனம்.

தனக்காய் ஹீரோ பேசுவது பிடிக்காமல் சண்டை போட ஆரம்பிக்கும் ஹீரோயின், தன்னை அவன் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்ற நினைப்பதும் தனக்காய் பேச ஆரம்பிப்பதும் பிரச்சனையாய் மாறுவதைச் சொல்லிவிட்டு.

"Until you let me being an I where you are, you can never come inside my silence and know me and I wont let myself know you. Until that time we cant be like joined."

என்ற வசனத்தோடு இந்த வசனக் கதையை விட்டுவிடுகிறேன். இந்தப் படத்தை நான் இஞ்ச் பை இஞ்ச் ஆக ரசித்துப் பார்த்ததன் விளைவு என்னால் எதையுமே விடமுடியவில்லை. கடைசியில் அந்த மௌனத்தை உடைத்துக் கொண்டு அதில் உறைந்திருந்த சுயத்தை ஹீரோ எப்படி உணர்ந்தான் என்பது தான் Children of a lesser god படத்தின் கதை. அற்புதமான படம் எல்லோரும் ஒரு முறை பார்க்க வேண்டிய படம் என்று கூட சொல்லலாம்.

பண்புடன் ஆண்டு விழா - மீள்பதிவுகள் - 7

விடியற்பொழுதின் தோழமை - குல்சார் கவிதை மொழிபெயர்ப்பு
- சித்தார்த்


http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/230a18ea8faaf0fa/acb1b79ca129c166?lnk=gst&q=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+#acb1b79ca129c166

இரவின் சஞ்சலம் பனியென இறங்கி மனதினை கனம்கொள்ளச்செய்கிறது விடியற்பொழுதுகளில் எப்புள்ளியிலும் குவிமையம் கொள்ளாது கனத்துக்கிடக்கும் மனதினை ஒன்றும்
செய்வதற்கில்லை, பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர. துஞ்சுதல் சாத்தியமற்ற இது
போன்ற பொழுதுகள் கவிதைகளுக்கு உரியவை. இன்று அதிகாலையில் இணைய வேட்டையில்
சிக்கியவை குல்சாரின் மூன்று உருது கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு. அம்மூன்று கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு முயற்சி...


குல்சார் கவிதைகள்


அரவமின்றி வருகிறாய், சொல்லாது செல்கிறாய்
எப்போது வருகிறாய்? எப்போது செல்கிறாய்?
தோட்டத்தில், சில பொழுதுகளில்....
புளியமரம்
காற்றினில் அசைகையில்,
கல் சுவற்களின் மேல்
தெறிக்கும் நிழற்ப்புள்ளிகள்
உறிஞ்சப்படுகின்றன,
காய்ந்த நிலத்தின் மேல்
தெளிக்கப்பட்ட நீர்த்துளிகளைப் போல.
தோட்டத்தில், ஞாயிறொளி நிதானமாக விம்முகிறது.


மூடிய அறைகளில்...
விளக்கொளி துடிக்கையில்,
பரந்த நிழலொன்று எனை உண்ணத்துவங்குகிறது, ஒவ்வொரு கவளமாய்.
தூரத்திருந்து
கண்கள் எனையே பார்த்தபடி உள்ளன.
எப்போது வருகிறாய்? எப்போது செல்கிறாய்?
நாளின் அனேக சமயங்களில் எண்ணத்தில் இருக்கிறாய்.


ஆங்கில மூலம் :
http://india.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index....


***


வருக

திடீரென
கோவமாய் அறையுள் நுழைந்த காற்று
புயலொன்றை கட்டவிழ்த்து விட்டது
திரைச்சீலைகள் படபடத்தன
மேஜை மேல் கண்ணாடிக்கோப்பைகள் பறத்தப்பட்டன
பக்கங்கள் விதிர்விதிர்க்க, ஒரு புத்தகம் அவசரமாய் தன் முகம் மூடியது
மைபுட்டி பாய்ந்து
வெற்றுத்தாள்களில் வண்ணத்தோரணங்களிட்டது
சுவற்றுச்சித்திரங்கள் ஆச்சரியத்தில்
உனை காணவென எம்பிப் பார்த்தன


மீண்டும் இப்படி
வா


என் அறையை
மூழ்கடி


ஆங்கில மூலம் :
http://india.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index....


****


மன்னித்துவிடு, சோனா


மன்னித்துவிடு, சோனா.
இம்மழையினில்
என் வரிகளின் நிலப்பரப்பினூடே
பயணிப்பது
உனக்கு அசௌகர்யமாய் இருக்கலாம்.
இங்கு பருவம் பாராது பெய்யும் மழை.
என் கவிதைகளின் குறுக்குச்சந்துகள் பெரும்பாலும் ஈரமாகவேயுள்ளன.
குழிகளில் அனேகம் சமயங்களில் நீர் சேர்ந்து கிடக்கிறது.
இங்கு தடுக்கி விழுந்தால்
உன் கால் சுளுக்கிக்கொள்ளலாம், ஜாக்கிரதை.


மன்னித்துவிடு. எனினும்....
உன் அசௌகர்யத்திற்கு காரணம்
என் வரிகளில் வெளிச்சம் சற்று மங்கலாக இருப்பது தான்.
நீ கடக்கையில்
புலப்படாது கிடக்கின்றன
வாயிற்படியின் கற்கள்
நான் அடிக்கடி இடித்து கால்நகம் பெயர்த்துக்கொள்வேன் இதில்
குறுக்குச்சாலையில் நிற்கும் தெருவிளக்கு
யுகங்களாய், எறியாமல் நிற்கிறது.
நீ அசௌகர்யப்பட்டுள்ளாய்.
மன்னித்துவிடு. இதயத்திலிருந்து கேட்கிறேன், மன்னித்துவிடு.


ஆங்கில மூலம் :
http://india.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index....


தமிழில் : சித்தார்த். வெ

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மோகன்தாஸ் - 1

இரா.முருகனின் நெம்பர் 40 ரெட்டைத் தெரு

இரா. முருகனின் இந்தப் புத்தகத்தை எந்த வகையில் வைப்பது என்று தெரியவில்லை உண்மையில், நாவல் - குறுநாவல் - சிறுகதைத் தொகுப்பு(?!) எதிலுமே வைக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன். நாவலுக்குரிய அகச்சிக்கல் என்று எதுவும் இல்லை என்பதால் நாவலாக வைக்கமுடியாது, கூர்மையிருந்தாலும் சிறுகதைக்குரிய அளவில் இல்லை என்பதால் சிறுகதைத் தொகுப்பென்றும் சொல்லமுடியாது. தன்னுடைய வயதைக் குறிக்கும் வகையில் எழுத நினைத்தாரோ என்னவோ 54 (கொஞ்சம் பெரிய)பத்திகளில் தன் பத்து வயதில் தான் வாழ்ந்த இடத்தைப் பற்றிய குறிப்புக்களை எழுதியிருக்கிறார்.

ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது; இத்தனை விஷயங்களை நினைவில் வைத்திருந்திருக்கிறாரே என்று இரா.மு.வின் அரசூர் வம்சம் படித்துவிட்டு எப்படி இவரால் இப்படி ஒரு நாவல் எழுத முடிந்தது என்று ஆச்சர்யப்பட்டது நினைவில் இருக்கிறது. அந்த ஆச்சர்யம் அப்படியே தொடர்கிறது இங்கேயும், கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார் 'அடல்ஸ் ஒன்லி' விஷயத்தில் என்பது மட்டும் ஏனென்று தெரியாவிட்டாலும். கூர்மை அப்படியே இருக்கிறது அத்தனை பத்திகளிலும், என்னமோ டைரி ஒன்றில் சிறு வயதில் இருந்து குறித்துக் கொண்டு வந்துவிட்டு இன்று இணைத்து எழுதியிருக்கிறாரோ என்று நினைக்க வைக்கிறது.

ஒரு தெரு அதைத் சுற்றி இருக்கும் வீடுகள் அதைச் சார்ந்த பள்ளி இன்ன பிற வகையறாக்கள் அதைச் சார்ந்த மக்கள் என்று மொத்தமாக எல்லாவற்றையும் பற்றிய தன் நினைவுகளை அன்றைய காலநிலையோடு, அரசியலோடு சேர்த்து எழுதியிருக்கிறார். நன்றாகவே வந்திருக்கிறது.

மொத்தமாய் படித்து முடித்த பின்னும் நினைவில் நீங்காமல் இரா.முருகனின் சில கதாப்பாத்திரங்கள் அப்படியே நின்றுவிடுகிறார்கள். பஞ்சவர்ணம் வாத்தியார் மாதிரி கடைசியில் அவர் வைக்கும் கேள்வியோடு "எல்லாக் கணக்கும், வாழ்க்கையும் தெக்கத்தி மிட்டாயாக இனிக்காமல் போக என்ன காரணம் என்று தெரியவில்லை." சீரங்கத்தம்மா போல், "அந்தக் காலத்துலே சாரட்டுலே கல்யாண ஊர்வலம் வந்தவள்டா சீரங்கத்தம்மா" இதுபோல் நிறைய நான் என் வாழ்நாளில் கேட்டிருக்கிறேன். உருவாக்குவதும் தெரியாமல் முடிப்பதும் தெரியாமல் மூன்று பக்கங்களில் இப்படி நிறைய பேரை உலவவிடுகிறார். நான் சொன்னது இரண்டு நபர்களைத் தான் ஆனால் இந்தப் புத்தகம் முழுக்க இப்படித்தான் ஆட்களாய் நிரம்பியிருக்கிறார்கள்.

புத்தகம் முழுவதும் நகைச்சுவை வழிந்து கொண்டிருக்கிறது, மெல்லியதாய், வாசிப்பை சுவாரசியப்படுத்துவதாய்.

"... தினசரியில் 'சர்ச்சில் கவலைக்கிடம்' என்று கொட்டை எழுத்தில் வந்தது. கோகலே ஹால் நூலகத்தில் பேப்பர் படித்த எனக்கு, இப்படி அரைகுறைச் செய்தியை அதுவரை படித்ததாக நினைவில் இல்லை. சர்சுக்கு யார் போனது, அதில் என்ன கவலை என்ற தகவல் ஏதும் இல்லாது, ஒரு வெள்ளைக்காரக் கிழவர் போட்டோவோடு வந்த செய்தி. படிக்கப் பொறுமையில்லாமல் 'சரோஜாதேவி தினசரி என் கனவில் வருகிறாரே' என்று முறையிடும் கேள்வி-பதில் படிக்கப் பக்கத்தைத் திருப்பினால், பேப்பர் படக்கென்று பிடுங்கப்பட்டது..." புத்தகம் முழுதும் விரவியிருக்கும் நகைச்சுவைக்கு ஒரு சோறு.

முக்கியமான இந்தி எதிர்ப்பை பதிவு செய்ய வந்தவர் நகைச்சுவையில் விழுந்திருப்பது சரியானதுதானா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் கிடையாது; அதுதான் அவரது ஸ்டைல் எண்ணும் பொழுது அப்படியே விடுவது தான் சரியானதாயிருக்கும்.

"...எனக்கும் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி மேல் இப்படி அப்படி என்றில்லாத கோபம் வந்தது. கோயில் பிரகார உத்திரத்தில் வௌவால் தொங்குகிறது போல் வரிசையாக தொங்குகிற எழுத்தோடு இந்தியைப் படித்துக் கொண்டு தினசரி காய்ச்சல்காரன் போல சுக்கா ரொட்டி சாப்பிட்டுக் கொண்டு மிச்ச வாழ்க்கையைக் கழிக்க எனக்கென்ன தலைவிதி? இந்தி இருந்த பழைய ரயில்வே கைடு புத்தகத்தை வீட்டிலிருந்து கிளப்பிக் கொண்டு வந்து எரிகிற தீயில் போட்டேன். ஒழியட்டும் இந்தி..."

பத்துவயது கதைசொல்லியின் வருத்தம் இது. கீழிருப்பது 54 வயது கதைசொல்லியின் குரல்,

"...இன்றைக்கு எனக்கு இந்தி தெரியும். மனிதர்கள் பேசிப் புழங்குகிற ஒரு மொழி என்ற மட்டில் அதன் பேரில் வெறுப்பு எதுவும் இல்லை. ஆனாலும், 'இந்தி ராஜ்பாஷா; தேசிய மொழி அதுதான்' என்று யாராவது பேச ஆரம்பித்தால், 'சரிதான் உட்காருடா' என்று மண்டையில் தட்ட மனத்தில் ஒரு சின்னப் பையன் எழுந்து வருகிறான். அவனுக்கு கோடிக்கணக்கில் சிநேகிதர்கள் உண்டு என்பதை அவன் அறிவான்..."

எல்லாவற்றிற்கும் பிறகும் இந்தப் புத்தகம் எனக்குப் பிடித்த ஒன்றாகயில்லை, அரசூர் வம்சம் என்னிடம் உருவாக்கியிருந்த பிம்பம் இரா.முருகனின் அடுத்தப் புத்தகத்தைப் பற்றி நான் வைத்திருந்த எண்ணம் எதையும் இந்தப் புத்தகம் நிவர்த்தி செய்யவில்லை. இது நாவல் பற்றிய என்னுடைய மனநிலைப் பிரச்சனையாகக் கூட இருக்கலாம், 'புலிநகக்கொன்றை' போல் நாயகன் நாயகியையோ இல்லை ஒரு பரம்பரையின் கதை பேசுவதாகவோ இந்த நாவலை நகர்த்தியிருந்தால் நான் விரும்பியிருக்கக்கூடும். ஒரு ஹீரோ ஹீரோயினைச் சுற்றி நிகழும் 'நாவல்'களை நான் கடந்துவிட்டதாகவே நினைக்கிறேன். அதை மீறியும் எதையோ இந்த நாவலில் நான் இழக்கிறேன், காரணம் தெரியவில்லை. ஒட்டுதல் வரவில்லை என்று கூட சொல்லலாம், இதுவரை என் வாழ்நாளிலேயே மிகவும் கஷ்டப்பட்டு படித்ததாக நினைக்கும் 'புளியமரத்தின் கதை'யின் மீது கூட எனக்கு ஒட்டுதல் இருந்தது. இத்தனைக்கும் சுராவின் நெருங்கவிடாத எழுத்திற்கு அப்பாலும் சென்று என்னால் நெருக்கத்தை உருவாக்க/உணர முடிந்திருந்தது ஆனால் இந்த அணைத்துச் செல்லும் வகை எழுத்தில் என்னால் அதை உணர முடியவில்லை.ஒரு வேளை லைட் ரீடிங் வகையறா எழுத்துக்கள் எனக்கு போரடிக்கத் தொடங்கிவிட்டதா தெரியவில்லை. லைட் ரீடிங் என்று நான் சொல்வது கோணங்கியின் 'இருள்வ மௌத்திகம்' ரமேஷ் - ப்ரேமின் 'சொல் என்றொரு சொல்' முதலானவற்றோடு ஒப்பிட்டே.

இந்தப் புத்தகத்தில் எனக்கு பிடிக்காத இன்னொரு விஷயம் 'கிரேஸி' மோகனின் முன்னுரை(அல்லது whatever) புத்தகத்திற்கான முன்னுரை பதிப்பகம் கேட்டு வாங்குமா எழுத்தாளர் கேட்டு வாங்குவாரா தெரியாது. என்ன கொடுமைங்க இது சரவணன். என்னமோ புத்தகக் கண்காட்சிக்காகவே கேட்டு வாங்கியது போல் ஒரு முன்னுரை. இரா.முவை விடுத்தும் அவர் மொழியின் மீதான நம்பிக்கையை விடுத்தும் புத்தகம் விற்பதற்கான இன்னொரு ஸ்ட்ராடஜியாக 'கிழக்கு' இதை முன்வைத்தார்களா தெரியாது. நான் அறியேன் பராபரமே! (இரா.முருகனுக்கு; சார் நான் எல்லாம் அறிவுரை சொல்கிற அளவிற்கு நீங்கள் வந்துவிட்டீர்கள் என்று சொல்லலை, இதற்கு முன்னுரை இல்லாமலே நீங்கள் இந்தப் புத்தகத்தை வெளிவிட்டிருக்கலாம்.) ஆனால் அவர்களும் என்ன தான் செய்வார்கள் பாவம்.
சுஜாதாவை விடவும் இரா.முருகனின் ராயர் காப்பி கிளப் பத்திகள் நன்றாக இருப்பதாக நான் சொன்ன நினைவு, ஆனால் இரா.முவை சுஜாதாவாக ஆக்க முயல்கிறார்களோ என்பதில் எனக்கு பயமே வருகிறது. உதாரணத்திற்கு இந்தப் புத்தகத்தில் இருந்து ஏகப்பட்ட உதாரணங்கள் அள்ளி வீச முடியும், எனக்கு உண்மையிலேயே தெரியாது 'கிழக்கு' உடன் காண்ட்ராக்ட் போட்டு எழுதப்பட்ட நாவலா 'ரெட்டைத் தெரு' என்று. பொலிடிகலி கரெக்ட்னெஸ் இல்லாத பத்தியே இல்லை என்று சொல்லலாம்.

குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ
குனிந்து பார்க்கலாமோ
பாதி மறைந்த ஸ்தனமும்
பாங்காய் இடுப்பில் ஒட்டியாணமும்
வாழைத் தொடையும்
வடிவான தோளுமாய்க்
குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ
குனிந்து பார்க்கலாமோ

முனிவனவன் பெண்டாட்டி
முடிஞ்சு வச்ச கூந்தலிலே
செல்லமாத் தலைப்பேனா
கள்ளப் புருசனையும்
ஒளிச்செடுத்து வந்து
ஓரமாத் தலைவிரிச்சா
கச்சு அகற்றிப் பழம் போல
கனிஞ்சு தொங்கும் தனமிரண்டும்

எழுதிய மனம் தான், செம்மீன் பற்றிய பத்தியையும் எழுதியிருக்கும் என்று சொன்னால் நான் சத்தியமாக நம்ப மாட்டேன்.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மோகன்தாஸ் - அறிமுகம்

ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள் சிறப்புடன் சென்று கொண்டிருக்கும் பண்புடன் குழுமத்திற்கும் அதன் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைச் சொல்லிவிட்டு என்னைப் பற்றிய சிறிய அறிமுகத்தைக் கேட்டார் ஆசிப். சின்னதென்ன சுயசொறிதல் என் வழக்கம் தானே, பெரிசாவே செஞ்சித்தர்றேன் என்றூ சொல்லியிருந்தேன். என் சுயசொறிதல் இப்ப,

ஆசிப்பிற்கு எப்பொழுதுமே என் மேல் தனிப்பட்ட பிரியம் உண்டென்று நினைத்து வந்திருக்கிறேன், அது உண்மையாகத்தான் இருக்க முடியும் போலிருக்கிறது. கடந்த நான்கைந்து மாதங்களில் நான் அவரிடம் செய்தது போல் ஒன்றை மற்றவர்களிடம் செய்திருந்தால் குறைந்தபட்சம் நானாய் வந்து பேசினால் பேசுவோம் என்று அளவிலாவது விட்டு விலகியிருப்பார்கள். ஆனால் ஆசிப் அந்த குறைந்தபட்ச வருத்தத்தைக் கூட தரவில்லை. ஆனாலும் ஆசிப் கேட்டும் எதையும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு அதை விட பெரியதாய் இருக்கும் என்று உணர்ந்திருப்பாராயிருக்கும். ப்ராஜக்ட் ஓரளவிற்கு முடிந்து கடைசி கட்ட டெஸ்டிங் போய்க் கொண்டிருக்கும் வேளையில் ஆசிப் பண்புடன் ஆண்டுவிழாவிற்காக எழுதணும் என்று கேட்டதும் மறுக்க முடியவில்லை.

எனக்கும் ஆசிப்பிற்குமான பழக்கம் தொடங்கியது மரத்தடியில் என்று சொல்லலாம், அத்தனை நல்லவிதமாக இல்லை தான். ஆசிப்பிற்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை. நான் எழுதிய கதையொன்றிற்கும் தனிப்பட்ட முறையில் எனக்குமாக, ஆதரவாக சிவா அண்ணன் மடல் தட்டிக் கொண்டிருந்த பொழுது எங்கிருந்தோ விழுந்த ஆசிப்பின் நக்கல் மடல் கொஞ்சம் என்னிடம் கோபத்தைக் கொண்டுவந்தது. நான் இப்பொழுதும் நினைத்துக் கொள்வதுண்டு என் கிறுத்துறுவ புத்தி சீண்ட நான் ஆசிப்பிற்கு பதில் மடல் எழுதாமல் போன விஷயத்தைப் பற்றி. என்னைப் பற்றி கொஞ்சம் தெரிந்தவர்களுக்குக் கூட அது ஆச்சர்யமான விஷயமாக இருக்கலாம். பின்னர் என் ignorance ன் விளிம்பில் ஆசிப் இருந்தார். ஆனால் சத்தமில்லாமல் நீண்ட உறக்கத்தில் இருந்த மரத்தடிக் கதவை அப்பொழுதெல்லாம் கதையெழுதி தட்டிக் கொண்டிருப்பதுண்டு. ஆனால் கதவு திறந்த கதைகிடையாது. கதைவைத் திறக்க சில சமயம் ஹைக்கூ எல்லாம் கூட எழுதியிருக்கிறேன். :) அப்படி ஒரு கதவு தட்டலில் ஆசிப்பின் பதில் வந்தது. என்னைப் போல் உங்கள் கதைகளை இன்னும் நிறைய பேர் தொடர்ந்து கொண்டிருப்பார்கள் கவலைப்படாமல் எழுதுங்கள் என்று.

எனக்கு உண்மையில் ஆசிப் கவனித்தாரா? மற்றவர்கள் கவனித்தார்களா என்ற கவலை இப்பொழுது இல்லை ஆனால் அது தந்த உற்சாகம் மெல்ல ஒழிந்து கொண்டிருந்த மரத்தடியில் இருந்து நான் வெளியேறி பதிவுகளில் கால் பதிக்க உதவியது. இதைப் பற்றி நான் இதற்கு முன் எழுதிய நினைவில்லை, எழுதாமல் விட்டதனால் உண்மையில்லை என்ற அர்த்தமும் இல்லை. பின்னர் நாங்கள் பதிவுகளில் அடித்த லூட்டி சாட்டிங்கில் பேசிக்கொண்ட அரசியல்கள் நேரில் சந்தித்துப் பேசிய விஷயங்கள் என நாங்கள் நண்பர்கள். ஒருவாறு என்னை என் பைத்தியக்காரத்தனங்களுடன் ஒப்புக்கொண்ட நல்ல நண்பர் ஆசிப். அவருடைய நகைச்சுவை உணர்வைப்பற்றியும் மற்றவர்களை அரவணைத்துச் செல்லும் பழக்கம் பற்றியும் நான் சொல்ல ஒன்றும் புதிதாக ஒன்றும் இல்லை. இந்த micro blogging காலத்திலும் ஒரு குழுமத்தை அதுவும் வெற்றிகரமாக நடத்தி வருவது அத்தனை சுலபமானது கிடையாது தான். பண்புடன் குழுமம் இன்னும் செழிக்க வேண்டுமென்றும் என்னைப் போன்ற இன்னும் பலரை ஆசிப்பும் பண்புடன் குழுமமும் வெளிக்கொண்டு வரும் என்றும் முழு மனதாக விரும்புகிறேன்.

நான் செப்புப்பட்டயம் என்ற பதிவொன்றில் தொடர்ச்சியாக எழுதிவருகிறேன். உலக சினிமா, தமிழ் இலக்கியம், நாவல் சிறுகதை ஆகியவற்றில் விருப்பம் உண்டு. ஒரு வாரத்திற்கு எழுதித் தரச்சொல்லிக் கேட்டிருக்கிறார். நிச்சயம் என்னால் முடிந்த அளவிற்குச் செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.

பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - பாவண்ணன்

வாழ்வைத் தேடி
- பாவண்ணன்


பிதுக்கித் தள்ளப்பட்ட வேப்பங்கொட்டையைப்போல நிரம்பி வழிந்த பேருந்திலிருந்து இறங்கத் தொடங்கிய கூட்டம் என்னையும் வெளியே தள்ளியது. ஆனால் புத்தகங்களும் சாப்பாட்டுப்பெட்டியும் தண்ணீர்ப்புட்டியும் கொண்ட என் தோள்பை மீட்டெடுக்கமுடியாதபடி படிக்கட்டில் நின்றிருந்த இருவருடைய இடுப்புக்குநடுவில் அகப்பட்டுக்கொண்டதால் நிம்மதியாக மூச்சுவிடமுடியவில்லை. பை பை என்று நான் போட்ட சத்தத்தை அந்தச் சந்தடியில் யாரும் பொருட்படுத்தவில்லை. அதற்குள் புதிய பிரயாணிகள் ஏறத்தொடங்கிவிட்டார்கள். "பள்ளிக்கூடப் பையன்மாதிரி ஏன்யா பையத் தூக்கிகிட்டு வந்து உயிர வாங்கறிங்க?" என்று மேல்படிக்கட்டில் நின்றிருந்தவர் என்னைப் பார்த்து சத்தம் போட்டார். ஆனாலும் எனக்காக மெனக்கிட்டு இருவருடைய இடுப்புகளையும் சற்றே விலக்கி என்னுடைய பையை உருவிக்கொள்ள உதவி செய்தார். கிளம்பிவிட்ட வண்டியில் அவருடைய முகத்தைப் பார்த்து அவசரமாக "ரொம்ப தேங்க்ஸ்" என்றேன். "ஒன் தேங்ஸ கொண்டும்போயி ஒடப்புல போடு போ" என்று சலித்தபடி முகத்தைத் திருப்பிக்கொண்டார் அவர். அந்த நடவடிக்கை எனக்கு அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது.

இப்படியுமா ஆட்கள் இருப்பார்கள் என்று மனத்துக்குள் நினைத்தபடி சோர்வாக நடக்கத் தொடங்கிய நேரத்தில் யாரோ பக்கத்தில் வந்து "ஆப்கோ ஹிந்தி மாலும் சார்?" என்று கேட்பதை உணர்ந்தேன். சோர்வின் காரணமாக அச்சொற்களை அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை என் மனம். பேருந்து நிறுத்தத்திலிருந்து உணவுக்கடைவரைக்கும் சிறிது தொலைவு நடந்த பிறகுதான் அந்தக் கேள்வியை முழுஅளவில் உள்வாங்கியது மனம். திரும்பிப் பார்த்தேன். இலைகள் உதிர்ந்த ஒரு குச்சிமரத்தைப்போல அவர் இன்னும் அங்கேயே நின்றிருந்தார். கிட்டத்தட்ட நாற்பது வயது மதிக்கத்தக்க தோற்றம். என்னிடம் கேட்ட அதே கேள்வியை தன்னைக் கடந்து செல்லும் அனைவரிடமும் அவர் முன்வைத்துக்கொண்டிருந்தார். பக்கத்தில் எலும்பும்தோலுமான தோற்றத்தில் ஒரு பெண்ணும் அவளது கையைப் பிடித்தபடி தலைகலைந்த முன்று சிறுமிகளும் ஒடுங்கி நின்றிருந்தார்கள். ஒரு கணம் வான்கோ வரைந்த உருளைக்கிழங்கை உண்ணும் சுரங்கத்தொழிலாளிகள் ஓவியம் நினைவில் வந்துபோனது.

மீண்டும் அவரருகே சென்று "என்ன கேட்டிங்க?" என்று இந்தியில் கேட்டேன். என்னுடைய இந்தி உரையாடலால் அவர் முகத்தில் ஒருவித நிம்மதி படர்வதை அருகில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப்பேழைக் குழல்விளக்கின் வெளிச்சத்தில் பார்க்கமுடிந்தது. "உங்களுக்கு இந்தி தெரியுமான்னு கேட்டேன் சார்" என்றார். "சொல்லுங்க, என்ன விஷயம்?" என்று நேரிடையாகவே விஷயத்துக்கு வந்தேன். எதுவும் பேசாமல் ஒரு கணம் தலைகுனிந்து நின்றார் அவர். விரலை உயர்த்தி கண்களைத் துடைத்துக்கொண்டார். மூக்கை உறிஞ்சியபடி மீண்டும் என் முகத்தைப் பார்த்தார்.

"மும்பையிலேருந்து காலையிலதான் வந்தோம் சார். தெரிஞ்சவங்கன்னு சொல்லிக்க யாரும் இல்ல. பாவம் புள்ளைங்க, நேத்திலேருந்து பட்டினி. உங்களால முடிஞ்ச உதவி செஞ்சா புண்ணியமா இருக்கும்."

இறைஞ்சும் அந்தக் குரலில் தொனித்த வருத்தத்தை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவருக்கருகே நின்றிருந்த சிறுமிகளின் முகங்களில் பசி தெரிந்தது. என் குறிப்பேட்டுக்குள் மடித்துவைத்திருந்த இருபது ரூபாய் தாளொன்றை எடுத்து அவரிடம் தந்தேன். "ரொம்ப நன்றி சார்" என்றபடி அவர் அதை வாங்கி தன் மனைவியிடம் தந்தார் அவர். மனைவி அந்தப் பணத்துடன் அருகில் இருந்த உணவுக்கடைக்குள் குழந்தைகளை அவசரமாக அழைத்துச் சென்றார். கீழே இருந்த மூட்டைமுடிச்சுகளுக்குக் காவலாக அவர் அங்கேயே நின்றார்.

"தெரிஞ்சவங்க யாருமே இல்லன்னு சொல்றிங்க. அப்பறம் ஏன் பெங்களூருக்கு வந்திங்க?"
"நானாக எந்த முடிவும் எடுக்கலை சார். எல்லாம் விதிவிட்ட வழி" அவர் கண்கள் சிறிதுநேரம் இருண்ட வானைநோக்கி நிமிர்ந்தன. பெருமூச்சு வாங்கியபடி பிறகு என்னைப் பார்த்தார்.
"எங்களுக்கு சொந்த ஊரு பிகார் பக்கத்துல சார். அங்க பொழைக்கறதுக்கு எந்த வழியும் கெடையாது சார். வாரத்துக்கு ஒருநாளு ரெண்டுநாளுதான் கூலிவேல கெடைக்கும். அத வச்சிகிட்டு என்ன செய்யமுடியும் சொல்லுங்க? அம்மா அப்பா பொண்டாட்டி புள்ளைங்கன்னு எல்லாரயும் எப்படி பாத்துக்கமுடியும்? பாதிநாள் பட்டினி. பாதிநாள் அரவயிறு, கால்வயிறு. இப்பிடியே காலத்த ஓட்டனோம். அம்மா அப்பா ரொம்ப வயசானங்க சார். அவுங்கள கூட்டிகிட்டு எங்கயும் வெளியூர் போவமுடியாது. அவுங்களுக்காகத்தான் அங்கயே ஒட்டிகிட்டு இருந்தோம். ஒருவழியா கடவுள்கிட்ட ரெண்டு வருஷத்துக்கு முன்னால அவுங்களும் போய் சேந்தாங்க. ஒரு வழியா நாங்களும் மூட்டமுடிச்சோட மும்பைபக்கம் போனோம். ஏற்கனவே எங்க பக்கத்து ஆளுங்க கொஞ்சம் பேரு அங்க கட்டடவேல செஞ்சி பொழைச்சிகிட்டிருந்தாங்க. எப்படியோ அவுங்களோட சேர்ந்து நாங்களும் ஒட்டிகிட்டோம். ரெண்டு வருஷமா எந்த பிரச்சனயும் இல்லாம வாழ்க்கை ஓடிச்சி."

தொடர்ந்து அவரால் பேசமுடியவில்லை. கண்களைத் திருப்பி உணவு விடுதிக்குள் சாப்பிட்டுக்கொண்டிருந்த பிள்ளைகளைப் பார்த்தார். ஒரு தட்டில் இருந்த உணவை மூன்று சிறுமிகளும் சேர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அந்த அம்மா பக்கத்தில் நின்றுகொண்டிருந்தனர். பசிவேகத்தில் அந்தச் சிறுமிகள் நிமிர்ந்துகூட பார்க்கவில்லை. எனக்கு அப்போதுதான் உறைத்தது. நான் கொடுத்த பணத்தில் அந்த ஒரு சாப்பாட்டுமட்டுமே அவரால் வாங்க முடிந்திருக்கும். உடனே அந்த அம்மாவை நெருங்கி இன்னுமொரு இருபது ரூபாய் நோட்டைக் கொடுத்தேன். அதை எடுத்துச் சென்று இன்னுமொரு தட்டில் சாப்பாடு வாங்கிவந்தாள் அந்த அம்மா. சிறுமிகள் காலியான தட்டை நகர்த்திவிட்டு அந்தத் தட்டிலிருந்து உணவை எடுத்துச் சாப்பிடத் தொடங்கினார்கள்.

"உங்க பேரு?" மறுபடியும் அந்த பீகார்க்காரரை நெருங்கிக் கேட்டேன்.

"ரகுவீர் சார்."

"மும்பை வேலையில ஏதாவது பிரச்சனையா? எதுக்காக ஏன் மும்பையவிட்டு வந்திங்க?"
"பிகார்க்காரன கண்டா அங்க யாருக்குமே புடிக்கலை சார். வேண்டா வெறுப்பா ஏதோ தெருநாய பாக்கறமாதிரி பாக்க ஆரம்பச்சிட்டாங்க சார். பிகாரும் இந்தியாவுலதான இருக்குது சார்? அப்பறம் ஏன் சார் எதிரிய பாக்கறமாதிரி பாக்கறாங்க? அசாம்ல பொழைக்க போன ஆளுங்கள கும்பல்கும்பலா சுட்டு தள்ளறாங்க. காஷ்மீர்ல உயிரோடயே வச்சி கொளுத்திட்டாங்க. தில்லியில வேறமாதிரி கத. வேல நடக்கறவரைக்கும் எல்லாருக்கும் பிகார்க்காரன் வேணும். வேல முடிஞ்சிடுச்சின்னா ஓடுடா பிகாரி ஒங்க ஊருக்குன்னு விரட்டறாங்க. நாய வெரட்டறமாதிரி வெரட்டிட்டே இருக்காங்க. மும்பையில புதுசா மகாராஷ்டிர நவநிர்மாண் சபான்னு புதுசா ஒன்னு கௌம்பியிருக்குது சார். தேடித்தேடி அடிச்சி வெரட்டறாங்க. மும்பை செல்வத்த பிகார்க்காரன் சுரண்டி எடுத்துக்கினு போயிடறானாம். இப்பிடி பேசிப்பேசியே எல்லார் மூளையும் கெடுத்து வச்சிட்டாங்க சார். அஞ்சிக்கும் பத்துக்கும் கூலிவேல செய்யறவனபோயி சுரண்டல்காரன்னு நாக்கு கூசாம சொல்றாங்க. மேடையில பேசறாங்க. பத்திரிகையில எழுதறாங்க. அத நம்பறதுக்கு ஆயிரம் பேரு காத்திருக்காங்க சார் அந்த ஊருல. அதான் சார் கொடுமை. "

"அதனாலதான் ஊரவிட்டு வந்திட்டிங்களா?"

"வேற என்ன சார் செய்யமுடியும்? கூலிகாரங்களுக்கு கைகால்தானே சார் மூலதனம். அடிக்க வர்ர ஆளுங்க கைய கால முரிச்சிட்டான்னா காலம் பூரா ஊனமா அலயணுமே சார். கைகால் நல்லா இருந்தாதானே உலகத்துல ஏதாவது ஒரு மூலையில எந்த வேலையையாவது செஞ்சி பொழைச்சிக்கலாம். பத்து நாளா எல்லாரும் கும்பல்கும்பலா ஊரவிட்டு போயிட்டே இருக்காங்க. "
"பிகாருக்கேவா?"

"அங்க என்ன சார் இருக்குது பொழைக்கறதுக்கு? மாடுகன்னு மேய்க்கலாம். அவ்வளவுதான். அதவிட்டா வேற எந்த வழியும் இல்ல. மழ இல்ல, பயிர் பச்ச இல்லன்னா அதகூட எங்க கொண்டுபோயி மேய்க்கறது? அதனால அப்படியே போபால், அகமதாபாத், ஜெய்ப்பூர்னு ரயில் கெடைச்ச ஊருக்கு போறாங்க. நாங்களும் அப்படித்தான். வந்து நின்ன நேரத்துக்கு இந்த ஊரு வண்டிதான் கௌம்ப தயாரா இருந்திச்சி. எங்க போவுதுங்க இந்த ரயில்னு பக்கத்துல இருந்தவருகிட்ட கேட்டன். பெங்களூர்னு சொன்னாரு. சரின்னு ஏறி உக்காந்துட்டோம். அப்ப கையில கொஞ்சம் பணம் வச்சிருந்தேன் சார். இங்க வந்த பிறகு, எறங்கற சமயத்துல போலீஸ்காரங்க மடக்கி புடுங்கிகிட்டாங்க. எல்லா ஊருலயும் போலிஸ்காரங்க ஒரேமாதிரிதான் சார் இருக்கறாங்க. இரக்கமே இல்லாத பாறைங்க சார். இன்னும் ஏழு ஜென்மம் எடுத்தாலும் இவுங்க செய்ற பாவம் தீராது சார்."

ரகுவீரின் மனைவியும் சிறுமிகளும் உணவுக்கடையிலிருந்து வெளியே வந்தார்கள். துணிமூட்டையிலிருந்து ஒரு பெரிய பாட்டிலை எடுத்துக்கொண்டு மறுபடியும் கடைக்குள் சென்ற ரகுவீரின் மனைவி அதை நிரப்பிக்கொண்டு வந்தாள்.

"நீங்க ரெண்டுபேரும் எதுவுமே சாப்பிடலையே?" இன்னும் கொஞ்சம் பணம் தரலாம் என பைக்குள் கையை விட்டேன். ரகுவீர் அவசரமாக என்னைத் தடுத்துவிட்டார்.
"வேணாம் சார். கொழந்தைங்க பசியால சுருண்டுசுருண்டு படுக்கறத பாக்கமுடியாம இருந்திச்சி. அந்த நெருப்ப அணச்சிங்களே, அதுவே போதும் சார். எங்களபத்தி கவல இல்ல சார். இதெல்லாம் ஓரளவுக்கு எங்களுக்கு பழகினதுதான் சார்."

"அதுக்காக வேணுமின்னே பட்டினி கெடக்கணுமா? சும்மா அரவயித்துக்காவது சாப்புடுங்க. இன்னொரு சாப்பாடு வாங்கிக் குடுக்கறதால எனக்கு ஒன்னும் நஷ்டம் வராது."
"பரவாயில்லை சார். இதுவே நீங்க செஞ்ச பெரிய உபகாரம். "

"இங்க பக்கத்துலதான் எங்க வீடு. அப்படி வந்தாலும் பரவாயில்லை. "

"இருக்கட்டும் சார், உங்களுக்கு பெரிய மனசு. இங்க பக்கத்துல கட்டடவேல எங்கயாவது நடக்குதுங்களா? உங்களுக்குத் தெரிஞ்சா அதமட்டும் சொல்லுங்களேன். "

நான் சிறிதுநேரம் யோசித்தேன். இந்திரா நகரின் தெருக்களும் வீடுகளும் என் மனத்துக்குள் நகர்ந்தன. எந்த இடத்திலும் புதிய கட்டுமானப் பணிகளைப் பார்த்த நினைவில்லை.

"அந்த மாதிரி வேலைங்களெல்லாம் இங்க எப்பவோ முடிஞ்சிபோச்சி ரகுவீர். பெங்களூரு இதத்தாண்டி இருபது கிலோமீட்டர் தூரம் வளந்துடிச்சி. இப்ப வேகவேகமா வளர்ந்துகிட்டு வர்ர இடம் மாரதஹள்ளி, காகதாஸபுர, ஒயிட்பீல்டு அந்தப் பக்கம்தான். அங்க போனிங்கன்னா எதாவது கெடைக்கலாம்."

"மாரதஹள்ளி எந்த பக்கம் இருக்குது? "

"கிழக்கு பக்கம்தான். ஆனா நடந்துலாம் போகமுடியாது ரகுவீர். ரொம்ப தூரம் போவணும். பஸ்தான் சரி. இப்படியே நேரா போனிங்கன்னா ட்ரினிடி சர்ச்னு ஒரு சர்ச் தெரியும். அந்த சர்க்கிள்பக்கத்துல நில்லுங்க . 333ன்னு ஒரு சர்வீஸ் வரும். அதுல போனா சீக்கிரமா போயி சேர்ந்துரலாம். அங்க யாராவது தெரிஞ்சவங்க இருக்காங்களா?"

"யாராச்சிம் ஒருத்தவங்க ரெண்டுபேருங்க இருந்தாலும் இருப்பாங்க. கண்டுபுடிச்சிட்டா அப்படியே அவுங்ககூட சேர்ந்துக்கலாம். பசியாறதுக்கு ஏதோ ஒரு வழி, என்ன சொல்றிங்க? "

பேசிக்கொண்டே நிறுத்தத்தை ஒட்டியிருந்த மரத்தடியில் இருட்டில் மூட்டைமுடிச்சுகளைக் கொண்டுபோய் வைத்தான் ரகுவீர். ரகுவீரின் மனைவி மூட்டையைப் பிரித்து ஒரு சாக்கை எடுத்து தரையில் விரித்தாள். குழந்தைகள் அவள் தரையில் விரித்த சாக்கில் மெதுவாகப் படுத்தார்கள். ரகுவீரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு வீட்டைநோக்கி நடக்கத் தொடங்கினேன். அவர் உரையாடலை மனம் மறுபடியும் அசைபோட்டது.

வீட்டுக்குள் அடியெடுத்துவைத்ததுமே ரகுவீரைப்பற்றிய தகவலை அமுதாவிடம் சொன்னேன். அமுதாவுக்கும் அது துயரம் தரும் செய்தியாக இருந்தது. ஆனால் பிகார் மக்கள் மும்பையைவிட்டு வெளியேற்றப்படும் செய்தி அமுதாவுக்குத் தெரிந்ததாக இருந்தது. "தாக்கரேவோ போக்கரேவோ யாரோ ஒரு ஆளுதான் எல்லாரயும் மும்பையவிட்டு கௌம்பிப்போங்கன்னு கட்சி கட்டறாராமே. ஒரு வாரமா டிவியில இதத்தானே செய்தியா காட்டறாங்க. அவுங்கவுங்க ஊருல அந்தந்த ஊருக்காரங்கதான் இருக்கணும்னு மும்பைக்காரனப்போல ஒவ்வொருத்தவங்களும் ஆரம்பிச்சாங்கன்னா, உலகத்த ஒரு ரெண்டாயிரம் மூவாயிரம் வருஷம் பின்னாலதான் உருட்டிஉடணும்" அமுதாவின் பேச்சில் வெளிப்பட்ட சலிப்பும் சீற்றமும் அந்த நேரத்தில் என் மனச்சுமையைப் பெரிதும் பகிர்ந்துகொள்ளும் விதத்தில் இருந்தன.
மறுநாள் காலை அலுவலகம் செல்ல பேருந்து நிறுத்தத்தை அடைந்ததும் ரகுவீரின் நினைவுதான் முதலில் வந்தது. ரகுவீரின் மனைவியும் சிறுமிகளும்மட்டுமே காணப்பட்டார்கள். அவ்வளவாக வெயில் இல்லையென்றாலும் முந்தானையால் தலையை முழுதாக மூடியிருந்தார் ரகுவீரின் மனைவி.

"ரகுவீர எங்க காணோம்?" நேற்று பேசிய உரிமையில் அவரிடம் நேரிடையாகவே கேட்டேன். அவருக்கும் என்னை அடையாளம் தெரிந்தது.

"இதோ வரேன்னு சொல்லிட்டு போயிருக்காங்க."

"மாரதஹள்ளிக்கா?"

"அங்கதான்னு நெனைக்கறேன்."

"புள்ளைங்க எதாச்சிம் சாப்பிட்டாங்களா?" சிறுமிகள் என்பக்கமாக திரும்பிப் பார்த்தார்கள். அவர் பதில் எதையும் சொல்லவில்லை. ஆனால் அவருடைய மௌனமே பெரிய பதிலாக இருந்தது. இருப்பவர்களிலேயே மூத்தவளாகக் காணப்பட்ட சிறுமியை அழைத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த உணவுக்கடைக்குச் சென்றேன். நான்கு பேருக்கும் இட்லிகளைப் பொட்டலங்களாகக் கட்டி வாங்கி அவளிடம் தந்தேன். அதற்குள் என்னுடைய பேருந்து வந்துவிட்டது. அவசரமாக ஓடி பேருந்துக்குள் ஏறிக்கொண்டேன்.

காவல்துறையைச் சேர்ந்த ஒரு மும்பை அதிகாரி கூறியதாக செய்தித்தாளில் படித்த செய்தியை நினைத்துக்கொண்டேன். பிகார்க்காரர்களை வெளியேறிச் செல்லுமாறு அச்சுறுத்தும் சக்திகளை தனக்கு அடையாளம் தெரியுமென்றும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் சொன்னார். உடனே ஒரு பத்திரிகைக்காரர் அப்படியென்றால் அவர்களை நீங்கள் ஏன் கைது செய்யக்கூடாது என்று அவசரமாகக் கேட்கிறார். அதன்மூலம் அவர்கள் உடனடியாகப் பிரபலமடையக்கூடும். அந்தப் பிரபலம் வேண்டித்தானே அவர்கள் அதைச் செய்கிறார்கள். நம் கைது நடவடிக்கை அவர்கள் கேட்பதை நாமாகவே வலியச் சென்று வழங்குவதைப் போல மாறிவிடும் என்று பதில் சொன்னார் அதிகாரி. பலர் அடிபட்டுள்ளார்கள், பலருடைய இருப்பிடங்கள் சூறையாடப்பட்டுவிட்டன. பலர் மருத்துவமைனையில் உள்ளார்கள். இன்னும் பலர் நம் கண்முன்னாலேயே மூட்டைமுடிச்சுகளோடு வெளியேறிக்கொண்டுள்ளார்கள். இவ்வளவு நடக்கும்போதுகூட கைது செய்யாமல் தர்க்கம் பேசிக்கொண்டிருப்பது நியாயமா சார் என்று விடாமல் பத்திரிகைக்காரரும் ஆதங்கத்தோடு கேட்டார். காவல் துறை அதிகாரி எல்லா மாநில அதிகாரிகளையும்போல ஒரு எழுத்துகூட மாறாமல் காவல் துறை தன்னுடைய கடமையைக் கட்டாயம் செய்யும். மக்களுக்கு அச்சம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு நேர்காணலை முடித்துக்கொண்டு சென்றுவிட்டார்.

மும்பையில் இந்த வெளியேற்றம் நடப்பதால் பத்திரிகைகளில் இது தலைப்புச்செய்தியில் இடம்பெற்றுள்ளது. செய்தியில் இடம்பெறாத வெளியேற்றங்கள் இன்னும் ஏராளமாக உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படிப்பட்ட செயல்கள் நடைபெறுகின்றன. மாற்றுமாநில உழைப்பாளிகளை எதிரிகளாக உருவகித்துக் கட்டமைக்கிற உள்ளூர் அரசியல்காரர்களை யாராலும் தடுக்கமுடியவில்லை. எப்படியோ அவர்களும் தன்னைச்சுற்றி ஆயிரம் பேரை திரட்டிவைத்துக்கொண்டுள்ளார்கள். அவர்களுடைய தன்னல நோக்கங்களையும் விரோதப்போக்கையும் அம்பலப்படுத்தி மக்களை சகோதரஉணர்வுடன் வாழத் தூண்டும் சக்திகளை சமூகத்தில் காண்பது மிகவும் அபூர்வமாக உள்ளது. தம் குரலே அடிமட்டத்து மக்களைப் பிரதிநிதிப்படுத்தும் குரல் என்று சொல்லி ஊடகங்களை நம்பவைக்க அவர்கள் முயற்சி செய்யும்போது, அதைத் தவறு என்று முளையிலேயே சுட்டிக்காட்ட எந்த ஊடகமும் தயாராக இல்லை. மீண்டும்மீண்டும் அவர்களை மையப்படுத்தி மையப்படுத்தி ஊடகங்களே அவர்களை வளர்க்கின்றன. இந்தியாவின் எல்லாப் பெருநகரங்களிலும் இப்படிப்பட்ட அதிகார சக்திகள் வளர்த்தெடுக்கப்பட்டு வருவது மிகப்பெரிய ஆபத்தின் அடையாளம்.

பகல்முழுதும் இப்படிப்பட்ட செய்திகளை துண்டுதுண்டாக மனத்தில் அசைபோட்டபடி இருந்தேன். சகோதர உணர்வை நாம் இழக்கும்போது இப்படிப்பட்ட வெறுப்புக்கான விதை மனத்தில் ஆழமாக விழுந்துவிடுகிறது. தன்னைவிட தன் சகோதரனுக்கு இறைவன் நெருக்கமாக இருக்கிறான் என்ற சீற்றத்தில் சகோதரனைக் கல்லால் தாக்குகிறவனைப்பற்றிய சித்திரம் இடம்பெறும் பைபிள் கதையை மனம் நினைத்துக்கொண்டது. தன்னலம் என்னும் நச்சுமரம் வேரூன்றி வளர்வதற்கான இடமாக மனிதமனம் மாறும்போது விரும்பத்தகாத விளைவுகளே காலமெல்லாம் நிகழ்கின்றன.

வீட்டுக்குத் திரும்பும்போது ஏழரையைத் தாண்டிவிட்டது நேரம். அந்த நேரத்திலும் பேருந்தில் ஏகப்பட்ட கூட்டம் நிரம்பி வழிந்தது. வழக்கம்போல பிதுக்கப்பட்ட நிலையிலேயே நிறுத்தத்தில் இறங்கினேன். ஒருகணம் ஆடைகளையும் காலணிகளையும் சரிப்படுத்திக்கொண்டு நிமிர்ந்தபோது ரகுவீரின் நினைவு வந்தது. காலையில் ரகுவீரின் மனைவியும் குழந்தைகளும் உட்கார்ந்திருந்த இடத்தைப் பார்த்தேன். காணவில்லை. அந்த இடத்தில் யாரோ ஒரு வயசாளி நின்று புகைபிடித்துக்கொண்டிருந்தார். எங்கே போயிருக்கக்கூடும் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். பசியால் துவண்டிருந்த அந்தச் சிறுமிகளின் முகங்கள் ஒருகணம் நினைவிலெழுந்தன. சிறிதுநேர சிந்தனைக்குப் பிறகு எப்படியாவது அவர்களாகவே மாரதஹள்ளியைக் கண்டுபிடித்து போயிருப்பார்கள் என்றும் யாராவது அவர்களுடைய ஊர்க்காரர்களே அங்கே தென்பட்டு, அவர்களுக்கு ஆதரவு வழங்கியிருக்கவேண்டும் என்றும் நானே பதிலும் சொல்லிக்கொண்டேன். அந்தப் பதில்தான் சற்றே மனத்துக்கு ஆறுதலாக இருந்தது.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - சுரேஷ் கண்ணன் - 7

எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?
- சுரேஷ் கண்ணன்


ரொம்ப நாட்களாக என் மனதைக் குடைந்து கொண்டிருந்த கேள்விகள் இவை. இது எனக்கு மட்டும்தான் நடக்கிறதா அல்லது பெரும்பாலோர் இதை அனுபவிக்கிறார்களா என்று தெரியவில்லை. இந்த உலகத்தில் நான் மாத்திரம்தான் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறேனோ என்கிற சுயபச்சாதாபம் தரும் வேதனையை தாங்க முடியவில்லை. சில அனுபவங்களை கேள்விகளாக இங்கே இட்டிருக்கிறேன். நீங்களும் இந்த அனுபவங்களை சந்தித்திருக்கிறீர்களா அல்லது அதிர்ஷ்டவசமாக தப்பித்து இருக்கிறீர்களா என்று சொன்னால் தேவலை.



1) நடுஇரவில் ஆவலாக பேஷன் டி.வியைப் பார்க்க அமரும் போது, நான் பார்க்கும் நேரத்தில் மாத்திரம் தடித்தடியான ஆண்கள் நடந்து போகிறார்கள். ஏன்?

2) ரயில்வே நிலையத்தில் டிக்கெட் வாங்க மலைப்பாம்பு மாதிரியான வரிசையில் எரிச்சலுடன் நின்று கொண்டிருக்கும் போது மற்றவர்களை விட்டுவிட்டு சரியாக என்னை தேர்ந்தெடுத்து "ஓரு தாம்பரம் வாங்கிக் கொடுங்க. ப்ளீஸ்" என்று கேட்கிறார்களே, ஏன்?

3) சினிமா காட்சிகளின் இடைவேளையில் சிறுநீர் கழிக்க கழிவறை நாற்றத்தை பொறுத்துக் கொண்டு அவஸ்தையோடு நிற்கும் போது என் முன்னால் நிற்பவன் மாத்திரம் பக்கெட் நிறைய சேர்கிறாற் போல் கழிந்து கொண்டு எரிச்சலை ஏற்படுத்துகிறானே, ஏன்?.

4) அலுவலகத்தில் தாமதமாகி பயங்கர பசியோடு வீடு திரும்பும் போது அன்றைக்கு பார்த்து என் எதிரிக்கும் கூட நான் சாப்பிட அளிக்க விரும்பாத 'ரவா உப்புமா'வை சைட்டிஷ் கூட இல்லாமல் மனைவி தயார் செய்து வைத்திருக்கிறாரே, ஏன்?

5) நான் எழுதும் மொக்கை பதிவுகளுக்கு கூட எதிர்பாராத விதத்தில் அதிகம் பின்னூட்டமிடும் சக வலைப்பதிவு நண்பர்கள் உருப்படியாக எழுதியிருப்பதாக நான் நினைத்திருக்கும் பதிவை முகர்ந்து கூட பார்ப்பதில்லையே, ஏன்?

6) நான் செல்லும் போது மாத்திரம் டாஸ்மாக்கில் "பீர் கூலிங்கா இல்லங்க" என்று சொல்கிறார்களே, ஏன்?

7) ஒரு குறிப்பிட்ட பாடலை கேட்கவோ அல்லது திரைப்படத்தை பார்க்கவோ தீவிர உணர்வு ஏற்பட்டு தேடும் போது மிகச் சரியாக அந்த குறுந்தகடு மாத்திரம் கிடைக்காமலிருப்பதோ அல்லது எல்லாவற்றையும் கவிழ்த்துப் போட்டு எரிச்சலடைந்த பிறகு கடைசியில் கிடைக்கிறதே, ஏன்?

8) வில்லங்கமான காட்சிகள் இருக்காது என்று நினைத்து ஆங்கில ஆக்ஷன் படங்களை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருக்கும் போது அதில் தீடீரென்று ஒருத்தி உடையை அவிழ்ப்பதும் அது வரைக்கும் இருந்த தனிமையை கலைத்து குடும்பத்தினர் யாராவது மிகச்சரியாக அதே நேரததில் அந்த இடத்தை கடந்து சங்கடத்தை ஏற்படுத்துவதும்.. ஏன்?

9) அடித்து பிடித்து பேருந்தில் ஏறி அவசரமாக இருக்கையைப் பிடித்து அமர்ந்த பிறகு நான் அமர்ந்திருக்கும் இருக்கை மாத்திரம் கிழிந்து போயோ அமிழ்ந்து போயோ அசெளகரியத்தை ஏற்படுத்துவது, ஏன்?

10) வீட்டிற்கு வந்து புரட்டிப் பார்க்கும் போது நான் வாங்கும் புத்தகத்தில் மாத்திரம் உள்பக்கங்கள் கிழிந்து போயோ அல்லது சிதைந்து போயோ எரிச்சலை கிளப்புவது ஏன்?

இன்னும் சில பிறிதொரு சந்தர்ப்பத்தில்....

இறுதியாக உங்களுக்கு.....

உருப்படியான பதிவுகள் இருக்க இந்த மொக்கை பதிவை நேரம் செலவழித்து படித்துக் கொண்டிருக்கிறீர்களே, ஏன்? :-)

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - சுரேஷ் கண்ணன் - 7

கணக்குப் பாடமும் கணையாழிக் கவிதையும்
- சுரேஷ் கண்ணன்

செப்.2005 கணையாழி இதழில் பிரசுரமாகியிருந்த ஒரு கவிதை என் பழைய நினைவலைகளை உசுப்பி விட்டது. (நினைவலைகள் அடங்கிய பதிவுகளை வெறுப்பவர்கள் - அதாவது வீட்டில் கொசுவர்த்தி சுருள் கூட பயன்படுத்தாமல் பதிலாக மேட் பயன்படுத்துபவர்கள் - உடனடியாக இதிலிருந்து விலகுமாறு கேட்டுக் கொள்கிறேன்.)

'கணக்கு என்றால் ஆமணக்கு' என்கிறார் பாரதி. இந்த விஷயத்தாலேயே பாரதியை மிக நெருக்கமாக என்னால் உணர முடிந்தது. தமிழே எனக்கு எப்போதும் விருப்ப பாடம். தங்கள் மகன்களை குமாஸ்தா வேலைக்கு தயார்படுத்தும் அந்தக் கால பெற்றோர்கள் உருவேற்றியதாலும் ஸ்டைலாக பேசுவதால் ஏற்படும் மதிப்பாலும ஆங்கிலத்தில் ஒரளவு விருப்பம் ஏற்பட்டு படிக்க முடிந்தது. வரலாறு மற்றும் புவியியலை எல்லாம் நான் அப்போது ஒரு விஷயமாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இதோ, இப்போது இணையத்தில் ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறேனே, அதை மாதிரியே எதை எழுதி வைத்தாலும் மதிப்பெண்கள் வந்துவிடும். (எங்கள் சரித்திர ஆசிரியர் மார்க் போடுவதில் தரித்திரமாக இல்லாமல், என்ன எழுதியிருக்கின்றது என்பதை பார்க்காமலேயே, கோலி விளையாடும் சிறுவர்கள் மாதிரி விடை எத்தனை ஜாண் நீளத்திற்கு நீண்டிருக்கிறதோ அத்தனை மதிப்பெண்கள் வழங்கி 'சரித்திர' சாதனை புரிவார்.)

ஆனால்.... இந்த கணக்குப் பாடம்தான் என்னை ஜென்மப் பகைவன் மாதிரி எல்லா வகுப்பிலும் துரத்திக் கொண்டே வந்தது. கணக்கு வகுப்பு என்றால் நிஜமாகவே எனக்கு ஜீரம் வந்துவிடும். அதுவும் இந்த 'அல்ஜீப்ராவை' கண்டுபிடித்தவனை எங்கு கண்டாலும் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போக அப்போது தயாராயிருந்தேன். பெண் பிள்ளைகளை துரத்திக் கொண்டும் போகும் செயல் கூட 'கணக்குப் பண்ணுவது' என்கிற பரிபாஷையில் அழைக்கப்பட்டதனாலேயே அந்த காரியம் கூட எனக்குப் பிடித்தமில்லாத ஒன்றாக இருந்தது.

()

இப்பவும் இருக்கிற பிராட்வே தியேட்டரின் (இங்குதான் தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ் என்கிற திரைப்படம் மூன்றரை வருடங்களுக்கு மேல் ஓடி சாதனை புரிந்தது) எதிரேயுள்ள புனித கேப்ரியல் உயர்நிலைப் பள்ளியில் அப்போது நான் படித்துக் கொண்டிருந்தேன். இவ்வளவு பெரிய வெள்ளைப் பாவாடையை போட்டுக் கொண்டு எப்படி கால் தடுக்காமல் நடக்கிறார்கள் என்று நான் வியக்கிற பாதர்மார்களும், காலை வெயிலில் பிரேயருக்கு நிற்கிற போது எங்கள் மேல் வெயில் படாமல் தடுத்தருள் புரிந்த பரந்து விரிந்த பாதாம் மரமும் (இந்த மரத்திலிருந்து விழும் பாதாம்காய்களை கல்லால் உடைத்து உள்ளேயிருக்கும் பருப்பை சாப்பிடுவோம். சமீபத்தில் அந்தவழி போனபோது இந்த மரம் வெட்டப்பட்டு பிரேயர் ஹால் வெளிச்சமாய் இருந்ததை பார்த்த போது என்னுள் எழுந்த உணர்ச்சியை வார்த்தைகளால் விளக்க தெரியவில்லை) தாமதமாக வந்தால் பி.டி வாத்தியார் மூன்று ரவுண்டு மூச்சிரைக்க ஓட வைக்கிற பிரம்மாண்டமான விளையாட்டு மைதானமும் இடைவேளைகளில் வெளியே போகமுடியாதபடி வாட்ச்மேன் லாசர் பூட்டிவைத்துவிட கதவு கம்பி இடைவெளியில் வாங்கின உப்பு தூவின மாங்காய் துண்டுகளும், எலந்தம் பழங்களும் அங்கேதான் அறிமுகமானது.

நான் பொதுவாக எப்போதுமே பார்டரில் பாஸ் பண்ணுகிற ஆள். பின்பெஞ்சில் மேளம் தட்டிக் கொண்டு ஒரு கோஷ்டி உட்கார்ந்திருக்குமே, அதைச் சார்ந்தவன். 'நன்றாக படிக்கிற பசங்களை' எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் கிண்டல் செய்து மட்டம் தட்டுவோம். அவர்கள் இதையெல்லாம் சட்டை செய்யாமல் கருமமே கண்ணாக இருப்பார்கள். நான் அந்த வயதில் மிகவும் பூஞ்சையாக இருப்பேன். இந்த காரணத்திற்காகவே சக மாணவர்களால் மிகவும் கிண்டல் செய்யப்பட்டிருக்கேன். "பின்னால கறியே இல்ல. நீயெல்லாம் ஏண்டா சர்ட்டை இன் பண்றே". இந்தக் குறையை மறைத்துக் கொள்வதற்காகவே வேண்டுமென்றே படிக்காத மாணவர்களிடம் சேர்ந்து கலாட்டா செய்து கொண்டிருந்தேனோ என்று இப்போது தோன்றுகிறது.
ஆனால் தமிழில் மட்டும் எப்போதும் 70 அல்லது 80 எடுத்துவிடுவேன். இதனாலேயே படிக்கிற மாணவர்கள் என்னை 'இவன் பழுதா பாம்பா' என்று தீர்மானிக்க முடியாமலிருந்தார்கள். ஒரு முறை தமிழில் உயர்ந்த பட்சமாக 93 எடுத்துவிட என்னை ஆப்ரிக்க தேசத்திலிருந்து வந்தவன் போல் விநோதமாகப் பார்த்தார்கள். ஆனால் இந்த கணக்குப்பாடம்தான்... அது என்னை விரோதியாக பார்த்ததோ அல்லது நான் அதை விரோதியாக பார்த்தேனோ தெரியவில்லை. எப்போதும் வாய்க்கா, வரப்பு தகராறுதான். நிற்க.

()

இந்த இடத்தில் நிறுத்தி எங்கள் கணக்கு வாத்தியார் அமல்தாஸைப் பற்றி கூற வேண்டும். மிகவும் கண்டிப்பானவர். இவர் வாய்விட்டு சிரித்த கணங்கள் அபூர்வமானவை. மதப்போதகர் தினகரனின் குரலை குளோனிங் செய்தது போல் அதே குரலில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பேசுவார். நானும் அதே மாதிரியே நண்பர்களிடையே ஒரு முறை வயிற்றை முக்கி பேச முயன்றதில் மூத்திரம் முட்டிக் கொண்டு வந்தததால் அதை தொடரவில்லை. மிக மெல்லிதான ஒரு பிரம்பு வைத்திருப்பார். பிரம்பு மெலிதாக இருந்தாலும் வயாகரா சாப்பிட்ட மாதிரி அதன் வீர்யம் பெரிது. கையில் அடி வாங்கி கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கு வலி கியாரண்டி.

கணக்குப் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே தீடீரென்று நிறுத்தி சரியாக என்னைக் குறிவைத்து எழுப்பி "இதோட பார்முலா சொல்லு" என்பார் நம்பியார் குரலில். அந்த பார்முலாவோ உலகம் சுற்றும் வாலிபனில் எம்.ஜி.ஆர் தேடிய பார்முலாவை விட கடினமானதாக இருக்கும். நான் "ஏ ஸ்கொயர் ப்ளஸ்.... " என்று ஏதோ மழுப்ப முயல கையை விறைப்பாக நீட்டச் சொல்லி சுளீரென்று பிரம்படி விழும். இதனாலேயே கணக்கையும் அந்த வாத்திராரையும் மிகவும் பிடிக்காமல் போய்விட்டது. 'கணக்கில் மட்டும்தான் பூஜ்ஜியம் வாங்க முடியாது. அவ்வளவு எளிதானது' இது அவர் அடிக்கடி சொல்லும் வாக்கியம். ஆனால் இந்த விஷயத்தை அவ்வப்போது சாதித்து அவரை மிகவும் எரிச்சலூட்டுவேன். படிக்கிற மாணவர்கள் அல்ஜீப்ராவை ஏதோ மாற்றான் மனைவியுடன் சல்லாபிப்பது போல் சுவாரஸ்யமாக போட்டுக் கொண்டிருக்க, நான் அவர்களை எரிச்சலோடும் லேசான பிரமிப்போடும் பார்த்துக் கொண்டிருப்பேன். அல்ஜீப்ரா என்கிற விஷயம் அல்கொய்தா போல் என்னை மிரட்டிக் கொண்டிருந்த காலமது.

()

இப்போது கூட யாராவது பேச்சு வாக்கில் "போடுங்களேன். 1 ஸ்கொயர் ·பீட் ஆயிரத்து ஐநூறுன்னா.... 435 ஸ்கொயர் ·பீட் எவ்வளவு ஆகுது? என்னும் போது என் கைகள் தன்னிச்சையாக கால்குலேட்டரை தேடும். அவரோ "இதுக்கு எதுக்குங்க கால்குலேட்டர். நானூறு இன்டு ஆயிரத்து ஐநூறு.. ஆறு லட்சம் ரூபா.. இல்லியா. அப்புறம் 35 இன்டு .. என்னா கரெக்டுதானே... என்று நானும் ஏதோ அந்த கணக்கை போட்டுக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டு அவ்வப்போது என்னை சரிபார்த்துக் கொண்டிருக்க, நான் மையமாக சிரித்துக் கொண்டே "ஆமா ஆமா" என்று அவர் சொல்லும் விடையை எந்தவித நிபந்தனையுமின்றி அப்படியே ஒப்புக் கொள்வேன். இப்போது ஆறாங்கிளாஸ் படிக்கும் பக்கத்து வீட்டு பையனின் கணக்குப் புத்தகத்தை சும்மா புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தலை லேசாக 'கிர்..ரென்றது. அப்போதைய கணக்குகளே பரவாயில்லை போல. எண்களும் நானும் ஆடிக் கொண்டிருக்கும் இந்த மல்யுத்தம் எப்போது சமாதானத்திற்கு வருமென்று தெரியவில்லை.

()

என்னுள் இவ்வளவு நினைவலைகளை எழுப்பிய அந்த கவிதையை இப்போது பார்ப்போம்.

என் கணக்குப் புத்தகம்
======================

- சிறீ.நான்.மணிகண்டன்

சூத்திரங்களாலான
என் கணக்குப் புத்தகத்தை
தொடுவதில்லை யிப்போது
தனிமங்களுக்குள்ளும்
குறியீடுகளுக்குள்ளும்
ஒரு மாயக்காரன் இருக்கிறான்.
பக்கங்களை புரட்டுகிற சமயங்களில்
சூத்திரங்களுக்கிடையே ஒளிந்தொளிந்து
தன்னுடைய உலகத்தை விரிக்கிறான்.
புதிர்கள் முளைத்த மர்ம மாளிகையாக
சூத்திரங்களின் சிக்கல்களை
அவிழ்த்தெடுக்க திராணியற்று
பிதுங்கிக் குழைகின்ற மூளைகளை
இடைவிடாமல் குழப்பமூட்டி
புத்தகத்தைத் திறக்கிற ஒவ்வொரு முறையும்
அவன் சூக்கும உடலோடு வேடம் தரிக்கிறான்.

(நன்றி : கணையாழி - செப் 2005)