பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - என்.சொக்கன் - 1

கடவுள்
கலீல் கிப்ரான் - தமிழில் என்.சொக்கன்


பல நாள்களுக்குமுன், நான் பேசக் கற்றுக்கொண்டபோது, புனித மலையின்மேல் ஏறி, கடவுளிடம் உணர்ச்சிமயமாய்ப் பேசினேன், 'என் எஜமானே, நான் உங்கள் அடிமை, உங்கள் எண்ணம்தான் எனக்கு
சட்டம், எப்போதும் நான் அதைப் பின்பற்றியிருப்பேன் !'

கடவுள் எனக்கு பதில் சொல்லவில்லை, ஒரு பெரும் புயலாக என்னைக் கடந்து சென்றார்.

அதன்பின், ஆயிரம் ஆண்டுகள் கழித்து, நான் மீண்டும் புனித மலையின்மீது ஏறினேன், கடவுளிடம் பேசினேன், 'என்னைப் படைத்த இறைவனே, நான் உங்களால் உருவாக்கப்பட்டவன், வெறும் களிமண்ணாக இருந்த என்னை, நீங்கள்தான் வடிவாக்கினீர்கள், ஆகவே, என்னுடையவை அனைத்தும், உங்களுக்கே சொந்தம் !'

அப்போதும், கடவுள் என்னிடம் பேசவில்லை. பல ஆயிரம் இறக்கைகள் ஒன்றாய்ப் படபடப்பதுபோல், அவர் என்னைக் கடந்து சென்றார்.

இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தன. நான் மறுபடி, புனித மலையின்மேல் சென்றேன், கடவுளிடம் உரக்கப் பேசினேன், 'தந்தையே, நான் உங்கள் மகன், உங்கள் அன்பால், நீங்கள் என்னைப் பிறக்கச்செய்தீர்கள், அன்பாலும், பக்தியாலும், நான் உங்கள் ராஜ்ஜியத்தை அடைவேன் !'

கடவுளிடம் எந்த பதிலும் இல்லை. தூரத்து மலைகளை மறைக்கும் பனிப் படலமாக, அவர் என்னை வருடிப்போனார்.

மேலும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தபின், நான் மீண்டும் புனித மலைக்குச் சென்றேன், கடவுளிடம் பேசினேன், 'என் இறைவா, என் நோக்கமும் நீயே, நிறைவும் நீயே ! உன்னுடைய 'நேற்று'தான், நான், என்னுடைய 'நாளை', நீ ! பூமியில், நான் உன்னுடைய வேர், வானத்தில், நீ என்னுடைய மலர் ! நாம் இருவரும் சூரியனைப் பார்த்தபடி, ஒன்றாய் வளர்கிறோம் !'

இப்போது கடவுள் என்னைப் பார்க்கக் குனிந்தார். என் காதுகளில் இனிமையான வார்த்தைகளை உச்சரித்தார், ஒரு பெருங்கடல், தன்னிடம் சேரவரும் நீரோடையை அணைத்துக்கொள்வதுபோல், அன்போடு என்னைத் தழுவிக்கொண்டார் கடவுள் !

பின்னர், நான் புனித மலையிலிருந்து கீழிறங்கியபோது, அந்த மலையில் மட்டுமின்றி, அடிவாரத்திலும், மற்ற பகுதிகளிலும், பள்ளத்தாக்குகளிலும் கூட, கடவுள் இருப்பதைக் கண்டேன் !

-- பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா

0 பின்னூட்டங்கள்: