தருமி - அறிமுகம்
மனிதர்களின் தேடல்களும் அவர்களது வாழ்க்கை தரும் அனுபவங்களும் ஆளுக்கு ஆள் மாறுபடக் கூடியவை. அடுத்த மனிதனின் துயரம் கண்டு உணர்வுபூர்வமாக நாமும் அதில் பங்கு கொள்ள முடியும்போதுதான் மனிதனின் சுயம் வெளிப்படுகிறது. மனிதனின் சுயத்தை வெளிப்படுத்த அவனுக்குள் இருக்கும் குழந்தை எப்போதும் புன்னகைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்கு நமக்குக் குழந்தை உள்ளம் வேண்டும் அந்த உள்ளம் எழுத்துக்களிலும் வெளிப்பட வேண்டும் அத்தகைய எழுத்துக்குச் சொந்தக்காரரான தருமி ஐயாதான் இந்த வாரம் நமது நட்சத்திரம்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கடந்த 2003 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டாலும் உறங்கி விடாத உற்சாகத்துடன் எழுதும் இளைஞர். கடந்த காலத்தையும் இந்தக் காலத்தையும் அதனதன் நெறியோடு சீர்தூக்கி வாழ்க்கையை அனுபவிக்கின்றவர். புதிய தலைமுறையைப் புறக்கணிக்காமல் பழையவைகளைக் கழித்து விடாமல் தோளில் கை போட்டுக்கொண்டு ஒரு நண்பனிடம் உரையாடும் பாணியில் மிக இலகுவாக தனது நினைவலைகளை நம்மோடு பங்கு கொள்ள வரும் தருமி ஐயாவின் இயற்பெயர் சாம் ஜார்ஜ். மனைவியும் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். இரண்டு மகள்கள். 'நண்டும் சிண்டுமாக' மூன்று பேரக் குழந்தைகள். வசிப்பது மதுரையில். இதோ தருமி ஐயாவின் அறிமுகம் அவரது மொழியிலேயே ...............
ஒரு மணி நேர வகுப்பென்றால் முழுதாக 60 நிமிடமும் பாடத்தை மட்டும் பேசிவிட்டு, மணியடித்ததும் முடித்துவிட்டுச் செல்லும் நல்ல ஆசிரியனாக இல்லாமல், எதையும் பேசலாம் என்பதோடு, ஆண்டுமுடிந்து செல்லும்போது ஒவ்வொரு மாணவனிடமும் என் முத்திரை ஏதோ ஒன்றைப் போட்டு அனுப்ப வேண்டுமென நினைக்கிற ஆசிரியனாக 37 வருடம்….
வகுப்பு மட்டும் போதாது என்பதாக நினைத்து தனி மாணவர் குழுக்களை அமைத்து மரத்தடியில் அமர்ந்து எதையும் பேசலாம்; பேச வேண்டும் என களம் அமைத்துக் கொடுத்து என்னென்னவொ பற்றியெல்லாம் பேசி விட்டு பேச வைத்துவிட்டு … ஓய்வு பெற்ற பின் சின்னாட்கள்வரை 'பழைய நினைப்புடா பேராண்டி' என்பதாக பழகி வந்த பழைய வழி இல்லாமல் போனதால் ஏதோ ஒரு சூன்யம் கவ்வ …
நல்லநேரத்தில் வந்ததுதான் வலைப்பதிவுகள். நினைத்ததையெல்லாம் பேசிப் பழகியவனுக்கு அதையே எழுதுவதற்கு இப்போது பெரிய களம். மாணவர்களிடமிருந்து கற்றுக் கொண்டதுபோலவே இங்கும் தொடர்ந்து பாடம் பயில்கிறேன். நடு நடுவே வாத்தியார் புத்தியையும் காண்பிப்பதற்கும் வசதி. வேறென்ன வேண்டும்.
ஆனாலும் முதலிரண்டு ஆண்டுகளில் எழுதியது போல் இப்போது எழுதுவதில்லை. சட்டி காலியாகிவிட்டதா இல்லை அந்த அளவு நேரம் தருவதில்லையா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. இருந்தும் தொடருவதாகத்தான் எண்ணம், ஆசை.
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - தருமி - அறிமுகம்
பதிவு வகை : அறிமுகம், வார நட்சத்திரம்
Subscribe to:
Post Comments (Atom)
11 பின்னூட்டங்கள்:
தருமி ஐயா நட்சத்திரமாக நல்ல பல எண்ணங்களைப் பகிர்வதற்கு முன்கூட்டிய வாழ்த்துகள் !
இங்கே அப்படி இப்படின்னு தட்டு தடுமாறி அவர் வந்தது நம்ம எல்லோருக்கும் ஒரு பெரிய கொடுப்பினைன்னு கூட நான் சொல்லுவேன். நிறைய யோசிக்க வைக்கிறார், மனுசன். வாழ்க பல்லாண்டு காலம்!!
அன்புடன்,
தெகா.
தருமி சார் புகழ் மேலும் பிரகாசிக்க வாழ்த்துகள்.
நன்றி கோவி.
தெக்ஸ்,
அதென்ன 'இங்கே அப்படி இப்படின்னு தட்டு தடுமாறி அவர் வந்தது ..'
ரொம்பத்தான் கிழடாக்கிட்டீங்க .. ம்ம்..
அருமை நண்பர் தருமி ஆண்டு விழா நடசத்திரமாக ஜொலிப்பது கண்டு மகிழ்கிறேன்.
ஏதோ ஆசிரியராக இல்லாது - ஆண்டு இறுதியில் முத்திரை பதித்து அனுப்பிய நல்ல குணம் பாராட்டத் தக்கது.
குழுக்கள் அமைத்து எதையும் எப்படியும் பேசலாம் என மேடைப்பேச்செனில் பயந்து நடுங்கிய செல்வங்களிடையே பேச்சுக்கலையை வளர்த்தமை நன்று நன்று
அண்ணன் தருமியிடம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது
ஆஹா..... நல்வரவு.
எனக்குக்கூட உங்களை முதல்முதலில் பார்த்ததும் ஆசிரியர் என்ற பயம் வரலை:-)))))
மிக்க நன்றி காசி. நான் மதிப்பவரிடமிருந்து ஒரு வாழ்த்து என்றால் கொஞ்சம் கூடுதல் மகிழ்ச்சிதான்.
தம்பி சீனா,
பாராட்டுக்கு அருகதை இருக்கிறதோ இல்லையோ, அன்புக்கு மிக்க நன்றி
துளசி,
டீச்சருக்கு என்ன பயம் இன்னொரு டீச்சரிடம். ஆனா நீங்க கொஞ்சம் "பிறவி டீச்சர்" மாதிரிதான் தோணுது!
வாழ்த்துகள் பண்புடன் குழுமத்திற்கும்.
நல்ல மனிதர் ஒருவரின் எண்ணங்களை எங்களுக்குப் பகிர்ந்து அளிப்பதற்காக.
வணக்கம் தருமி சார்.
//நல்ல மனிதர் ஒருவரின் ...//
பதிவுலகில் இது ஒரு வசதி. நேரில் பார்க்காமல் பழகாமல் இருப்பதால் என்னைப் போன்றவர்கள்கூட 'நல்ல மனிதர்கள்' லிஸ்ட்டில் வந்து விடுகிறோம்!!
:)
நன்றி வல்லி சிம்ஹன்.
Post a Comment