கவிஞர்கள்
கலீல் கிப்ரான் - தமிழில் என்.சொக்கன்
நான்கு கவிஞர்கள், ஒரு மேஜையைச் சுற்றி அமர்ந்திருந்தார்கள். அந்த மேஜையின்மேல், ஒரு குவளையில் ஒயின் வைக்கப்பட்டிருந்தது.
அந்தக் குவளையைப் பார்த்த முதல் கவிஞன் சொன்னான், 'நண்பர்களே, நான் என்னுடைய அகக்கண்ணால் இந்த ஒயினைப் பார்க்கிறேன், அதன் மணம், ஒரு கானகத்தில் சுற்றித் திரிகிற பறவைக் கூட்டத்தைப்போல, காற்று வெளியெங்கும் பரவி நிற்கிறது !'
அவன் அமர்ந்ததும், இரண்டாவது கவிஞன் எழுந்துகொண்டான், 'என்னுடைய அகக் காது, அந்தப் பறவைகள் சப்தமிடுவதைக் கேட்கிறது, ஒரு வெள்ளை ரோஜா, தனது இதழ்களால், வண்டைச் சிறைப்படுத்துவதுபோல, அந்த கீதம் என் இதயத்தைச் சுண்டியிழுக்கிறது !'
மூன்றாவது கவிஞன் தன் கண்களை மூடிக்கொண்டவாறு, இரு கைகளையும் மேல்நோக்கி உயர்த்தினான், 'நான் அந்தப் பறவைகளைத் தொடுகிறேன் !', என்றான், 'இதோ, அவற்றின் சிறகுகள் ! தூங்கும் தேவதை ஒருத்தி, அழகாக மூச்சுவிடுவதுபோல, அந்தச் சிறகுகள், படபடவென்று அடித்துக்கொள்கின்றன, என் கைகளை வருடுகின்றன !',
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த நான்காம் கவிஞன், சட்டென்று எழுந்தான், அங்கிருந்த ஒயின் குவளையைக் கையில் ஏந்திக்கொண்டான், 'ஐயோ, நண்பர்களே, நான் இப்படி முட்டாளாய் இருக்கிறேனே, உங்களைப்போல, எனக்கு அகக் கண் இல்லை, அகக் காது இல்லை, அகத் தொடுதல் உணர்ச்சியும் இல்லை, என்னால் இந்த ஒயினின் மணத்தைப் பார்க்கமுடியவில்லை, அதன் பாட்டைக் கேட்கமுடியவில்லை, அது தன் இறக்கைகளை அடித்துக்கொள்வதுகூட, எனக்குத் தெரியவில்லை, பாவம், எனக்குத் தெரிவதெல்லாம் இந்த ஒயின்மட்டும்தான், ஆகவே, நான் அதைக் குடித்து, என் அக சக்திகளைக் கூர்மையாக்கிக்கொள்கிறேன் !'
இப்படிச் சொல்லிவிட்டு, அவன் மளமளவென்று அந்த ஒயின் முழுதையும், ஒரு சொட்டுகூட மிச்சம் வைக்காமல் குடித்துவிட்டான்.
மற்ற மூன்று கவிஞர்களும், வாய் பிளந்தபடி, அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்கள், தாகமும், கவித்துவமற்ற வெறுப்பும், அவர்களின் கண்களில் படர்ந்திருந்தது.
--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - என்.சொக்கன் - 3
பதிவு வகை : சிறுகதை, மொழிபெயர்ப்பு, வார நட்சத்திரம்
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment