பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மிதிலா - 1

ஆனந்தக் கூத்து
- மிதிலா

இதழ் பிரியாத குறுஞ்சிரிப்புடனும்
ஒளிரும் மழலைக் கண்களுடனும்
தளர்நடைபோட்டு வந்தான் ஆனந்தன்
உபந்யாசம் கேட்க கூடிய பெருங்கூட்டத்தில்
அங்குமிங்கும் ஓடிச்சென்று
தவமின்றி வரமருளும் கடவுளாய்
தன் தொடுகையால் புத்துயிர் அளித்தான் அனைவருக்கும்
விடுத்தவர் கையை மீள வந்தடையும் பூமராங்காய்
எங்குச் சென்றாலும் தாயிடமே வந்து
அவள் முகம்பார்த்து விகசித்தான்
மடியில் ஏறி நின்று காதில் ரகசியம் பேசினான்
அதட்டிய அக்காளிடம் செல்லமாய்ச் சண்டையிட்டான்

சுருக்கிய புருவமும் சற்றே பிளந்த வாயுமாய்
கேள்வி உறைந்த பாவனையுடன் நோட்டமிட்டான்
சட்டென மீளவும் தாய்முகம் பார்த்து
பூரித்த சிரிப்புடன் கழுத்தைக் கட்டிக்கொண்டான்
தான் கவனிக்கப்படுவதை உணர்ந்து வெட்கி
தாயின் தோளில் முகம் மறைத்து
கண்ணாமூச்சி ஆடினான் சில கணங்கள்
தன்னைச் சீண்டிய பெண்ணின் கையைக் கடித்து
பொய்யாய் அவர் அழுதது கண்டு
அச்சம் மேவ திகைத்துப் பின் சகஜமானான்

விளையாட்டுகள் எல்லாம் அலுத்துப்போன கட்டத்தில்
நேரம் மிக நீண்ட சலிப்பின் உந்துதலால்
யாரும் கேட்கத் துணிவற்ற கேள்வியை
'முடிஞ்சுதாம்மா' என ஒற்றைச் சொல்லில்
மழலையாய் வினவி
பிரசங்கத்தில் கட்டுண்டிருந்த அனைவரையும்
நொடியில் விடுவித்துச் சிரிக்கவைத்தான்
இறுகிய சூழல் கலகலப்பாக
பரவிய அலையின் அதிர்வை உணராது
ஆழ அமிழும் கல்லாய்
உறங்கிவிட்டான்
ஆனந்தனின் குறு விளையாடல்களின் முன்
வசீகரமிழந்து போனது சமயப் பெருங்கதையாடல்.


--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா

0 பின்னூட்டங்கள்: