பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மதுமிதா - 4

ஆத்மார்த்தமான‌ உரையாடலா நேர்காணலா?
- மதுமிதா

'குழந்தைக்கு ரெண்டு வயசு இருக்குமா?''


ஆமாங்க அக்டோபர் வந்தா ரெண்டு வயசு

''இங்கே வா இங்கே வா'

கைநீட்டி அழைக்க‌ குழந்தை சிரிக்கிறது.

குழந்தையை தாயிடமிருந்து வாங்கி ஜன்னல் வழியே பின்னால் ஓடும் மரங்களைக் காட்ட ஆரம்பித்தார் எதிரில் அமர்ந்திருந்தவர். குழந்தை அந்தப் பெரியவரின் கையில் உள்ள வாட்ச்சைத் தொட்டுப் பார்த்தான். அந்தத் தொடுகையில் நரைமுடியைக் கடந்தும் அவரின் விழிகளும் பல்வரிசையும் மின்னின. அதுவரை இரயிலில் இருந்த இறுக்கம் குறைந்து சுகமான, சுமுகமான சூழல் ஒன்று உருவாக ஆரம்பித்திருந்தது. குழந்தையின் அழுகை நின்றிருந்தது. தனியாக வந்திருந்த தாய் கொஞ்சம் இயல்பாக ஆரம்பித்தார்.

'நான் டில்லியிலிருந்து வர்றேன் மதுரைக்குப் போகிறேன். எஸ்.எஸ். காலனியில வீடு

''நாங்க திண்டுக்கல்லில் இறங்கணும்'

குழ‌ந்தை இப்போது பெட்டியில் இருந்த தங்களை நோக்கி அழைத்த‌ அனைவ‌ரையும் பார்த்து பின்பு திரும்பிக் கொண்ட‌து. சென்னையில் இர‌யிலில் ஏறிய‌வ‌ர்க‌ள் விழுப்புர‌ம் க‌ட‌ந்த‌போது ச‌க‌ஜ‌மாக‌ப் பேச‌ ஆர‌ம்பித்திருந்த‌ன‌ர்.

திருச்சியைக் க‌ட‌ந்த‌போது அப்பெண்ம‌ணி சொல்ல‌ ஆர‌ம்பித்திருந்தாள்:

'பைய‌ன் ச‌ரியாக‌ பேச‌மாட்டேனென்கிறான். ப‌ய‌மா இருக்கு.

''அவன் வயதையொத்த வேறு குழந்தைகள் பக்கத்தில‌ இல்லையா?'

'வீட்டுக்குப் ப‌க்க‌த்தில யாரும் சின்ன‌ப்ப‌ச‌ங்க‌ இல்லை.'

''நீங்க‌ பைய‌னிட‌ம் பேசிக்கொண்டிருங்க‌. தானாக‌ப் பேசுவான். பேசுறீங்கயில்லியா?''

'பேசறேன். எங்க மாமா பேரன் ஒன்னரை வயசில நல்லா பேசறான். இவன் மட்டும்தான் இப்படி இருக்கிறான். ப‌ய‌மாயிருக்கு. டாக்ட‌ரிட‌ம் காட்டினோம்.'

'இந்த‌மாதிரி குழந்தைங்க‌ இப்ப‌டிதான். இப்ப‌டி பேசாம‌ இருப்பாங்க‌. திடீருன்னு பேச‌ ஆர‌ம்பிக்கிற‌ப்போ ப‌டுஸ்பீடா பேசுவாங்க. நீங்களே பாருங்க‌. மெதுவா பேசுடான்னு பெற‌கு சொல்ல‌ப்போறீங்க‌.'

'இப்ப‌டிதாங்க‌ எங்க‌ எதிர்வீட்ட‌ம்மா சொன்னாங்க‌'

'என் பொண்ணோட‌ நாத்த‌னாரு பைய‌ன் இப்ப‌டிதான் இருந்தான். அவன் பேச்சை, கேக்கிற கேள்வியை, பதில் சொல்லி முடியாதுபோங்க. அதான் சொன்னேன்.'

திண்டுக்க‌ல் வ‌ந்த‌து. இற‌ங்க‌ப் போகையில் குழந்தை பெரியவரிடம் டாடா என‌ கைய‌சைத்தான். அடுத்த‌ சீட்டில் அம‌ர்ந்திருந்த‌ இஸ்லாமிய‌ப் பெண்ம‌ணி 'பாட்டிகிட்ட‌ வா. டாடா சொல்லிட்டுப்போ' என்றார். பைய‌ன் அனைவ‌ரிட‌மும் சிரித்த‌ப‌டி விடைபெற்றான்.

இரயில் சிநேகிதம்தான் இது. ஆனால், இது இர‌யில் சிநேக‌ம் ம‌ட்டுமேய‌ல்ல‌. ஆத்மார்த்தமாக நிகழ்ந்த சந்திப்பும் நிகழ்வும் இது. இய‌ல்பாக‌ நிக‌ழ்ந்த‌ ச‌ம்பாஷ‌ணைக‌ள்தான் என்றாலும் ந‌ம்மைய‌றியாத‌ கேள்விப‌தில்க‌ளுட‌னேயே ந‌ம‌து உரையாட‌ல்க‌ள் நேர்காணலைப் போலவே நிக‌ழ்கின்றன எப்போதும், நேரிலோ தொலைபேசியிலோ, தெரிந்த‌வ‌ர்களுடன் என்றாலும் தெரியாத‌வ‌ர்க‌ளுட‌ன் என்றாலும்.

ஒவ்வொரு நேர்காண‌லிலும் இது நிக‌ழ்கிற‌து.

*

நேர்காணல் அளிப்பவருக்கும் சில சிக்கல்கள் இருக்கின்றன. நேர்காணல்கள் எடுப்பவருக்கும் சில சிக்கல்கள் இருக்கின்றன.

நேர்காணல் அளிப்பவருக்கு பணியின் சிரமங்கள், தனக்கான எந்த மனநிலையென்றாலும் கால அவகாசத்துக்குள் பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம், அளித்த நேர்காணல் பதிவுசெய்யப்பட்டிருந்தால், ஒருவேளை அதில் கூறியிருந்த பதில்களுக்கான விளக்கங்கள் சொல்ல வேண்டிய கட்டாயங்கள் இது போன்றவை இருக்கலாம்.

நேர்காண‌ல் எடுப்பவருக்கோ பேட்டி அளிப்பவரின் மனமறிந்து கேள்விகள் கேட்கவேண்டும்; இடக்கு மடக்கான கேள்விகளை, தோன்றாமல் பதவிசாக கேட்கவேண்டும்; தேர்வு செய்திருந்த கேள்விகளுக்கு அப்பாற்பட்டு பேச்சின் இடையே அது தொடர்பான இன்ஸ்டண்ட் கேள்விகளை சமயோஜிதமாக கேட்க வேண்டும்... இப்படி இது போன்றவை இருக்கலாம். அவை குறித்து இன்னும் விரிவான உதாரணங்களுடன் இன்னொருமுறை பார்க்கலாம்.

*

எனக்கு நேர்காணல் தராமல் தப்பித்துக்கொண்டிருப்ப‌வர் அவர். வெளிநாடு வாழ் இந்தியர் இவர். வானொலியில் நிகழ்ச்சியும் நிகழ்த்துவார்; அறிவிப்பாளர்; பேட்டியும் எடுப்பார். பாடல்களுக்கிடையே கொஞ்சம் பேசவும் செய்வார்; (அல்லது பேச்சினிடையே பாடலும் ஒலிபரப்புவார் என்றும் வைத்துக்கொள்ளலாம்)

இவருக்கு நேயர் கடிதங்கள் வருவதுண்டு; முக்கியமாக பெண்நேயர்களின் கடிதங்கள் அதிக அளவில் வருவதுண்டு. தொலைபேசியில் அழைத்து நிகழ்ச்சியைக் குறித்தும் பேசுவதுண்டு. பிரபலங்களிடம் கேள்வி கேட்பதுமுண்டு.

ஒருமுறை இவர் ஒரு இந்திய பிரபலத்தைப் பேட்டி எடுத்துக்கொண்டிருக்கையில் ஒரு பெண் நேயர் தொலைபேசியில் வந்துவிட்டார். பேட்டி பதிவு செய்யப்படாததாக ஆன்லைனில் நேரடியாக ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. அந்த பெண் நேயரிடம் வணக்கம் தெரிவித்து பேசிவிட்டு இவர் 'இதோ இந்தப் பிரபலம் எதிரில் இருக்கிறார். பேசுங்கள்' என்று சொல்ல, தொலைபேசியில் வந்த அவர் உங்களிடம்தான் பேசவேண்டுமென பேச ஆரம்பிக்க இவர் எப்படியோ பேசிச் சமாளித்து பேட்டியை முடித்துக் கொடுத்திருக்கிறார்.

ஆக தேசம் கடந்து வந்த ஒவ்வொரு இந்திய பிரபலமும் இவரிடம் வந்து பேட்டி கொடுத்தபிறகு இவரின் பிரபலத்தை அறிந்துகொண்டு சென்றிருக்கின்றனர். இவர் இந்தியா வரும்போது, இவரை 10 ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் பாசத்துடன் நினைவு கூர்ந்திருக்கின்றனர்.

முக்கியமான செய்தி வரப்போவது இனிதான். ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து இரு கடிதங்கள் இவருக்கு ஒருவரிடமிருந்து நிகழ்ச்சியைப் பாராட்டி, பாடல்களை ரசித்து கடிதம் வந்துகொண்டிருந்திருக்கிறது. தொடர்ந்து வரும் கடிதங்களை அறிந்ததும் அந்த நேயர் யாரென அறியும் ஆவல் அறிவிப்பாளருக்கு அதிகமாகிவிட்டது. கண்டறியப்பட்ட தகவல் அந்த கடிதம் எழுதும் நேயர் ஒரு சிறைக்கைதி. ஆர்வம் அதிகமானதில் மேலும் அறியப்பட்ட தகவல் அச்சிறைக்கைதி செய்யாத குற்றத்திற்காக சிறை சென்றிருக்கிறார். எப்போது விடுதலையாகி இந்தியா திரும்ப இயலுமென்பது எவருக்கும் தெரியாது. இது தெரிந்ததும் அறிவிப்பாளர் கைதி எழுதி அனுப்பும் விருப்பப் பாடல்களை ஒலிபரப்ப ஆரம்பித்தார்.

ஒருநாள் வந்த மடல் அதிர்ச்சியைத் தாங்கிக்கொண்டு வந்தது. அதில் கைதி எழுதியிருந்தது: 'நான் இந்த தேதியில் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன். நான் தற்கொலை செய்துகொள்ளும் நேரத்தில், இன்னின்ன பாடல்களை ஒலிபரப்புங்கள். அதைக் கேட்டுவிட்டு அதன்பின் இறக்க விரும்புகிறேன். இந்தப் பாடல்களை ஒலிபரப்புங்கள்' என சோகப் பாடல்கள் நிறைந்த லிஸ்ட்டும் சேர்த்து அனுப்பியிருந்திருக்கிறார். கடிதம் வாசித்த வானொலி அறிவிப்பாளர் அதிர்ந்து போய்விட்டார். இருந்தும் ச‌மாளித்துக்கொண்டு நிக‌ழ்ச்சியை ந‌ட‌த்திக் கொன்டிருந்திருக்கிறார்.

ச‌ரியாக‌ குறிப்பிட்ட‌ நேர‌த்தில் கைதியின் பெய‌ரைச் சொல்லி எந்த‌ த‌வ‌றான‌ முடிவுக்கும் வ‌ந்துவிட‌வேண்டாமென‌க் கேட்டுக்கொண்டு, புத்துணர்வளிக்கும், உற்சாகமூட்டும், மனதின் கலக்கத்திலிருந்து வெளிக்கொண்டுவரும் பாடல்களாக ஒலிபரப்பிக்கொண்டிருந்திருக்கிறார். இடையே தொலைபேசியில் வந்த நேய‌ர்க‌ள் அனைவருமே கைதியிட‌ம் அவரது முடிவை மாற்றிக்கொள்ளும்ப‌டி கேட்டுக் கொண்டிருந்திருக்கின்ற‌ன‌ர். அன்றைய அந்த நிக‌ழ்ச்சி முழுவதுமே அந்த‌ சிறைக்கைதிக்காக‌ அர்ப்ப‌ணிக்க‌ப்ப‌ட்டுவிட்ட‌து.

வானொலி அறிவிப்பாளரோ தனதுயிரைக் கையில் பிடித்துக்கொண்டு சமயோசிதமாயும் செயல்பட்டுக்கொண்டிருந்தார்.

தொடர்ந்த இரு நாட்களுக்கு அவர் அமைதியின்றியே இருந்தார். சிறைக்கைதியின் அடுத்த கடிதம் அவர் கையில் கிடைத்தபிறகே ஆசுவாசமானார். அதில் கைதி எழுதியிருந்ததாவ‌து:

'ஐயா அந்த நொடிமனநிலையைக் கடந்துவிட்டால் ஒரு மனிதனுக்கு மறுபடியும் உயிரை விட்டுவிடும் மனநிலை நேராது. உங்களுக்கு நன்றி. நான் வெளியில் வந்ததும் உங்களைப் பார்க்க வேண்டும். உங்களைச் சந்தித்துவிட்டு இந்தியா செல்வேன்'

இப்போது அந்த‌க் கைதி விசார‌ணையில் குற்ற‌ம‌ற்ற‌வ‌ர் என‌ நிரூபிக்க‌ப்ப‌ட்டு இந்தியாவிற்குத் திரும்பி வந்து த‌ன‌து குடும்ப‌த்துட‌ன் ம‌கிழ்வாய் உள்ளார். இன்னும் இருவ‌ரும் (கைதியும், அறிவிப்பாள‌ரும்) ச‌ந்திக்க‌வில்லை.

ஒரு நேர்காணல் எடுப்பவரின் சமயோசிதத்தால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்ட நிகழ்வை மட்டும் இங்கே சொல்லியிருக்கிறேன். ச‌ரியான‌ இட‌த்தில்தான் இதைச் சொல்லியிருக்கிறேன் என்ப‌தில் ம‌கிழ்ச்சி.

அன்புட‌ன்
ம‌துமிதா

(பண்புடன் ஆண்டு விழாவுக்காக எழுதப்பட்ட கட்டுரை இது)

0 பின்னூட்டங்கள்: