பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மிதிலா - 3

எலும்புக்கு அருகே எழுதுதல்

யுவான் வேரா, ஜிம்பாப்வே (Yvonne Vera, Zimbabwe)

தமிழில் மிதிலா

ஒரு பெண் எழுத்தாளராக இருப்பதில் இன்றியமையாத உண்மை என்று எதுவும் இல்லை. சிறந்த எழுத்தானது எல்லைகளிலிருந்தும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பாலினமற்ற வெளிகளிலிருந்தும் வருகின்றது. நான் எழுதுவதைப் பற்றிச் சொல்கிறேன், கதையைப் பற்றியோ கதைக்கருவைப் பற்றியோ அல்ல. ஒரு கதையை அறிந்திருப்பது என்பதும் அதனை எழுதுவது என்பதும் வெவ்வேறானவை.

கட்டுக்குள் அடைபடாததாக, வாசகருடன் குறிப்பிட்ட எந்தத் தொடர்பும் – அதிலும் பாலின அடிப்படையில் - கொண்டிராததாக எழுதுதலை நினைத்துக்கொள்ள விரும்புகின்றேன். அடையாளமிடப்படாத அந்த அச்சமற்ற வெளியைக் கண்டடைந்த பிறகு நான் சுதந்திரமாக எழுதுவேன், ஒரு பெண்ணாக மேலும் சுதந்திரமாக எழுதுவேன். சில வேளைகளில் எனது ஜன்னலின் வழியே வரும் ஒளிக்கற்றை நான் ஒரு பெண்ணாக இருந்து எழுதுகிறேன் என்கிற உண்மையைவிட மிக முக்கியமாக இருந்துள்ளது.

எனது எழுத்துக்கு ஒரு தீவிரமான நோக்கம் இருக்கவேண்டும், அவ்வளவே. நான் இந்த மண்ணுடன் ஒட்டுறவாயிருக்கவேண்டும். உத்வேகத்தையும் ஆற்றலையும் தரும் அந்த மூலாதாரத்தைப் பாலினம் என்று ஒருபொழுதும் என்னால் தவறாக நினைக்க முடியாது, இது நம் அனைவருக்கும் பொதுவானது. இருப்பினும், ஒருவர் தமக்கு நெருக்கமான பொருண்மைகள், உணர்வுகள், செயல்கள், நெகிழுணர்வுகள் ஆகியவை பற்றி எழுதும்போது சிறப்பாக எழுதுகின்றார் என்பதென்னவோ உண்மையே. என்னைப் பொறுத்தவரையில் நான் எழுதுகிறேன் என நினைக்க விரும்புகின்றேன். நான் ஒரு பெண். நான் எழுதுகிறேன்.

நானாக (நான் என்பதாக) இருக்கும் பெண் எழுத்தினுள் இருக்கிறாள், எழுத்தால் அரவணைக்கப்படுகிறாள், சுதந்திரமாக விட்டுவிடுதலை ஆகிறாள். என்னைப் பொறுத்தவரை எழுதுதல் என்பது ஒளி, அனைத்தையும் அழகான வடிவில் வெளிச்சம்போட்டுக்காட்டுகின்ற ஓர் ஒளிர்வு. இந்த வெளிச்சமானது தேடி ஒளியூட்டுகின்றது. நமது அனுபவத்தின் உணர்ச்சிபூர்வமான அவலத்தைத் திறந்துகாட்டக்கூடிய பாதுகாப்பான ஓர் இடம். ஒளியானது காயத்தை ஆற்றும் ஒரு கதகதப்பான பிரகாசம். இவ்வகையான ஓர் ஒளியாக இருக்கக்கூடியது எழுத்து. அதனுள் நான் என்னை மறைத்துகொள்வதில்லை. அந்த வெளிச்சத்திற்கும் அப்பால், அந்த வெளிச்சம் உண்டாக்கும் நிழலுக்குள் நான் துணிவுடன் பயணம் செய்கிறேன். அந்த இருளிலும் சுதந்திரமாக இருக்கவும் எழுதவும் ஒரு பெண்ணாக இருக்கவும் சாத்தியம் உள்ளது.

சான்றாக, வான்கோ தீட்டிய குடியானவனர் சப்பாத்துகள் (Peasant Shoes) என்னும் ஓவியத்தை அதன் வெளிச்சக் குறைவுக்காகவே எனக்குப் பிடிக்கும். மறுஅச்சுகள் குறிப்பதைவிடவும் அவை மிக இருண்டிருக்கும், பின்னணியில் இருக்கும் தெளிவான ஒரு துண்டு நிலத்தைத் தவிர்த்து எந்த வெளிச்சமும் கிஞ்சித்தும் இருக்காது. உண்மையில் அதுவும் கூட வெளிச்சமாகாது. வெளிச்சம் இன்மையை இந்த ஓவியங்களில் நீங்கள் உணரலாம். மெய்யாகவே அது உங்களையும் உங்கள் உணர்வையும் அருகில் ஈர்க்கும்; நீங்களும் உண்மையில் அதனைப் பார்வையிட விரும்புவீர்கள், புதியதொரு மகிழ்ச்சியால் கனமாக உணர்வீர்கள். அந்தச் சப்பாத்துகளைப் பார்த்து அவை எங்கே சென்றிருந்தன, சென்றிருந்தவர் யார், என்ன நடந்திருக்கும் எனவும் ஒருவேளை தனக்குள் ஓர் உயிரைக் கொண்டிருக்கூடிய, மூச்சுவிடக்கூடிய, உலகத்தின் மீது ஒருவித ஒளியைப் பாய்ச்சக்கூடிய ஏதோ ஒன்றை இந்தச் சப்பாத்துகள் எப்போதேனும் வளர்த்துள்ளனவா என்று நீங்கள் அதிசயிக்கலாம். ஆம்ஸ்டர்டாமிலுள்ள கலைக்கூட விற்பனைக் கடையில் இந்தச் சப்பாத்துகள் ஓவியத்தைக்கொண்ட அஞ்சலட்டை இருக்கிறதா என்று தேடினேன்; அதிலிருந்த மறுஆக்கம் மிகவும் பிரகாசமாயிருக்க, இதென்ன கொடுமை என்று அந்த அட்டையை வாங்க மிக விரும்பினாலும் வாங்கக் கூடாது என சொல்லிக்கொண்டேன். கலைக்கூடத்துள் சென்று மீண்டும் அந்தச் சப்பாத்துகளைப் பார்த்தேன். ஒரு பெரிய எழுச்சிகரமான ஓவியப்பரப்பு தனது சோகத்தால் கிளர்ச்சியூட்டுவதைக் கண்டேன். இது ஒளி இல்லாமல் அன்று ஒளிக்கு அப்பால் தீட்டப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொண்டேன்.

இதேபோன்று 'உருளைக்கிழங்கு உண்போர்' (The Potato Eaters) ஓவியமும் மாசுமருவின்றிப் பிம்பத்தையும் உணர்ச்சியையும் தீட்டுவதைக் கண்டேன். 'குடியானவர் சப்பாத்துகள்' ஓவியத்தைவிடவும் இருண்டது. அதில் நாலைந்து கோப்பைகள் இருந்தன. களிமண் கரைசல் போன்றிருந்த ஏதோ ஒன்று அவற்றில் ஊற்றப்பட்டபடி இருந்தது. கோப்பைகள் வெள்ளையாக ஆனால் வெளிச்சமற்று இருந்தன. முன்னணியில் இருந்த உருவம், ஒரு சிறுமியாக இருக்ககூடும், பார்ப்பவருக்கு முதுகு காட்டியபடி இருந்தாள். நின்று அவளது முதுகை நோக்கியபடி, ஏறக்குறைய வெள்ளையாக இருக்கும் கோப்பையிலிருந்து களிமண் கரைசல் போன்ற அந்த ஏதோ ஒன்றை, உருளைக்கிழங்கைத் தின்ன வேண்டியவளாகிய அவள் அருந்தப்போகின்றாள் என்பதை நினைத்தபோது கஷ்டமாயிருந்தது. ஏதோ ஒரு வகையான விளக்கு உச்சியிலிருந்து தொங்கியது அந்தக் கூட்டத்தின்மீது, ஆனால் அதன் இருப்பு நிழல்களை உண்டாக்கியது – கதகதப்பையோ அங்கீகாரத்தையோ அல்ல. அந்த ஓவியம் தன் உணர்ச்சியை வெளிப்படுத்துவதில் மிக வல்லமையுடன் இருந்த அதே நேரத்தில் அழகாகவும் ரணமார்ந்ததாகவும் இருந்தது.

ஏறக்குறைய ஆறு வயதாயிருக்கும்போது நான் எழுதக் கற்றுக்கொண்டேன். அதே சமயம் எனது உடல் எழுதுவதற்கான ஒரு மாயப் பரப்பாய் இருப்பதையும் கண்டுகொண்டேன். என் தாய் தனது மேற்படிப்பைத் தொடரச் சென்றபோது பாட்டியுடன் நான் சில ஆண்டுகள் வாழ்ந்தேன். வேறு பல குழந்தைகளும் என் பாட்டியுடன் இருந்தனர். அந்த வீடு மிகவும் சிறியது. பெரும்பாலான மதியங்களில் நாங்கள் வெளியே கிடத்தப்பட்டு உறவுக்காரப் பிள்ளைகள் சிலருடன் விழித்தெழுவோம். பெரிய உலோகக் குப்பைத்தொட்டியின் மேல் ஏறி அமர்ந்துகொள்வோம். நிலத்தில் ஊன்றக் கால் எட்டாது.

என் காலிலுள்ள தோல் வறண்டும் இறுகியும் பாரமாகவும்கூட இருக்கும். எங்கள் குளிர்காலத்தின் சில்லிப்பை அது சுமந்திருந்தது. எனது நகங்களாலோ பாட்டியின் துடைப்பத்திலிருந்து ஒடித்த காய்ந்த கீற்றைப் பயன்படுத்தியோ எனது காலில் எழுதத் தொடங்குவேன். சின்னதாயிருக்கும் எனது தொடையில் எழுதுவேன் ஆனால் அங்கு சருமம் மென்மையாயிருக்கும், சொற்களும் நீண்ட நேரம் நிலைத்து நில்லாமல் மறைந்துவிடும். ஆனாலும் அங்கு எழுதுவது வித்தியாசமான ஓர் உணர்ச்சியாக இருந்தது; கூர்மையான குறுகுறுப்பான அந்த உணர்ச்சி எங்களைச் சிரிக்க வைத்தது, ஏதோ மறைவான இடத்தில் சொற்களைக் கொண்டுவைத்தது போல உணரச்செய்தது.

எங்களது நம்பிக்கை கூடிவிட கருத்த களிமண்ணாய் காலின் தோல் உடையும் பகுதிக்குக் கீழிறங்கி வந்தோம். அங்கு எங்கள் பெயர்களை முடிவற்ற அனந்தத்தில் எழுதினோம். இங்கே நாங்கள் எலும்புக்கு அருகே எழுதினோம், அப்படியே கணுக்கால் வரை சொற்களைப் பரப்பினோம். சொற்கள் தப்பிக்க முடியாதபடி தோலுள் ஆழமாகவும் தோலுக்கு அடியிலும் எழுதினோம். இங்கே தோலானது தாகமாயிருப்பதுபோல் தோன்றியது, எங்களுக்கும் அது பிடித்தது. சொற்கள் சமைத்த சாம்பல் நிறக் குறுக்கு மறுக்கான பாதைகள் எங்கள் கற்பனையில் ஏதோ பொருள்பெற்று எங்களை விடுவித்தன. அத்துடன் எங்கள் தாய்மார்களின் சிரிப்பொலி இல்லாத வெறுமையை அவை மறக்கடித்தன. படிப்படியான வலியின் வெடிப்புகளில் முதலில் எழுதிய எழுத்துகள் உணர்வு மங்கி அந்தக் கீறல் ஏற்படுத்திய வலி மங்கும். கடைசியாய் நாங்கள் ஆழக் குடைந்து சொற்களை எழுதிய இடம் அமைதியுறாமல் இன்னும் துடித்தபடி இருக்கும்.

நாங்கள் ஏறிட்டு நோக்கிச் சிரித்தோம். எங்கள் உடலை அங்கே வரைந்து எழுத்துகளின் இடையில் பாட்டிகளின் உருவத்தை நெருக்கி வரைந்தோம். சின்னஞ்சிறிய மரப்பட்டையை உங்கள் பேனாவாகப் பயன்படுத்துவதால் ஆங்காங்கே சிறு சிறு துளிகளாகக் குருதி துளிர்க்கும் சாத்தியம் உண்டு. அத்தகைய சொற்கள் ஒருபோதும் பிரியவோ மறக்கப்படவோ கூடாதவை. இது எழுதுதல் அன்று, இரத்தம் சிந்துதல். எழுதுவது அத்தனை முக்கியமானது. பின்னர், எங்கள் உடலின் நிறவேறுபாட்டைக் கண்டால் பாட்டி வருந்துவாள் என்பதால் உள்ளே ஓடிச்செல்வதற்கு முன்பு கையளவு எச்சில் தொட்டு உடம்பைத் துப்புரவாய்த் துடைத்துக்கொள்வோம். இந்த எச்சில் கதகதப்பும் அமைதியுமான ஓர் உணர்வை எங்கள் மேல் கவியச்செய்யும்.

உடம்பின் மேல் இல்லையென்றாலும் பிறகு நிலத்தில் எழுதக் கற்றுக்கொண்டேன். வண்டலான மண்ணை எங்கள் உள்ளங்கை கொண்டு அன்பும் அக்கறையுமான அசைவுகளால் சமதளமாகப் பரப்புவோம். பிறகு எங்கள் விரல்நுனியால் எழுதுவோம். பூமியில் மூக்கு படும்வண்ணம் குனிந்து எங்களை வேறொரு உணர்வுலகத்துக்கும் உலகத்தில் எங்களுக்கான இடத்தின் புரிதலுக்கும் இட்டுச்சென்ற பெரிய சொற்களை எழுதக் கற்றுக்கொண்டோம். நிறைவாய் வேலையை முடித்ததற்குப் பெருமிதம்கொண்டு தள்ளிநின்று நாங்கள் எழுதியதைப் பார்ப்போம். ஏதோ வண்டுகளைபோல மண்ணைக் குடைந்திருந்தோம். அதனைக் கண்டு நாங்கள் மிகவும் மனநிறைவு பெற்றோம். அந்த எழுத்துகளை அங்கேயே அந்த மண்ணிலேயே விட்டுவிட்டு எங்கள் வேலைகளைச் செய்ய ஓடினோம். மழைபெய்தபின் வெற்றுப் பாதத்துடன் ஒட்டிக்கொண்டு எங்களை முழுமையாகப் பற்றிக்கொள்ளும் ஈரமண்ணில் எழுதுவது எனக்கு எப்போதும் பிடிக்கும். பிறகு தொலைவிலிருந்தும் பார்க்கக்கூடிய உருவங்களை நிலத்தில் வரைந்தோம். எங்கள் உடல், நிலம், மழையின் வாசம், வண்டுகள், எங்கள் மூக்கு இவையே எழுத்து.

0 பின்னூட்டங்கள்: