பெரிதிற்கும், சிறிதிற்கும் நடுவே
- கலீல் கிப்ரான் தமிழில் என்.சொக்கன்
அந்த மலைக் கிராமத்தில், ஒரு ஏழைப் பெண்மணி, தன் ஒரே மகனுடன் வசித்துவந்தாள்.
ஒரு நாள், கடுமையான காய்ச்சலில் அந்தப் பையன் இறந்துபோனான்.
துயரத்தில் மூழ்கிய அந்தப் பெண், பக்கத்தில் கைகட்டி நிற்கும் வைத்தியரிடம் கதறினாள்,
'ஐயா, என் மகன் எப்படி இறந்தான் ? என் ஒரே மகனை என்னிடமிருந்து பிரித்தது எது ?
சொல்லுங்கள், சொல்லுங்கள் !'
மருத்துவர் அமைதியாக பதில் சொன்னார், 'அம்மா, காய்ச்சல்தான் உன் மகனுடைய மரணத்துக்குக் காரணம் !'
'காய்ச்சல் என்றால் என்ன ?'
'அதை என்னால் விளக்கிச் சொல்ல முடியாது', என்றார் வைத்தியர்,
'காய்ச்சல் என்பது ஒரு சிறிய, ... மிகச் சிறிய பொருள், நாம் எதிர்பாராத நேரத்தில், நம் உடம்புக்குள் புகுந்து கொண்டுவிடும், நம் மனிதக் கண்களால் அதைப் பார்க்கமுடியாது !'
இப்படிச் சொல்லிவிட்டு வைத்தியர் அந்த வீட்டிலிருந்து வெளியேறினார். அந்தப் பெண் தொடர்ந்து கதறிக் கொண்டிருந்தாள், 'நாம் கண்களால் பார்க்கமுடியாதபடி, மிகச் சிறிய ஒன்று, அதுவா என் மகனைக் கொன்றுவிட்டது ?' அன்று மாலை. அந்தப் பெண்மணிக்கு ஆறுதல் சொல்வதற்காக ஒரு சாமியார் வந்தார். அவரிடமும் அந்தப் பெண் தன் அழுகையை, ஆற்றாமையைக் கொட்டினாள், 'எனக்குமட்டும் ஏன் இப்படி நடக்கவேண்டும் ? என் ஒரே மகன் ஏன் இப்படி திடீரென்று செத்துப்போனான் ?'
'அம்மா, இதெல்லாம் கடவுள் சித்தம்', என்றார் சாமியார்.
'கடவுளா ? யார் அது ? எங்கே இருக்கிறார் அந்தக் கடவுள் ?', என்று சத்தமாய்க் கத்தினாள் அந்தப் பெண், 'அவரா என் மகனைக் கொன்றது ? சொல்லுங்கள், அவர் எங்கே இருக்கிறார் என்று சொல்லுங்கள், அவர் முன்னே சென்று நியாயம் கேட்கிறேன், அவனுக்குப் பால் கொடுத்த என் மார்புகளைக் கிழித்தெறிந்து, அந்த ரத்தத்தை அவர் காலடியில் கொட்டி, 'என் மகனைக் கொன்றது சரிதானா ?', என்று கேட்கிறேன், சொல்லுங்கள்'
சாமியார் சொன்னார், 'கடவுள் எங்கும் இருக்கிறார் அம்மா, அவர் பெரியவர், மிகப் பெரியவர், நம் மனிதக் கண்களால் அவரைப் பார்க்கமுடியாது !'
அவர் சொன்னதைக் கேட்டதும், அந்தப் பெண்ணின் கண்ணீர் அதிகரித்தது, 'மிகப் பெரிய ஒருவரின் ஆணைப்படி, மிகச் சிறிய ஒன்று என் மகனைக் கொன்றுவிட்டது,. ஆனால், இந்த இரண்டையுமே நம்மால் பார்க்கமுடியாது, அப்படியானால், அந்த மிகப் பெரியதிற்கும், மிகச் சிறியதிற்கும் இடையே, நாம் இந்த மண்ணில் எதற்காக இருக்கிறோம் ? ஏன் இருக்கிறோம் ?'
இதைக் கேட்டபடியிருந்த அவள் அம்மா, உள் அறையிலிருந்து வந்து அவளைக் கட்டிக்கொண்டாள், 'மகளே, நாம்தான் மிகச் சிறியவர்கள், நாம்தான் மிகப் பெரியவர்கள், மிகச் சிறியதிற்கும், மிகச் பெரியதிற்கும், இடையே இருக்கிற பாதையும் கூட, நம்மைப்போன்ற மனிதர்கள்தான் !'
-- பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - என்.சொக்கன் - 2
பதிவு வகை : சிறுகதை, மொழிபெயர்ப்பு, வார நட்சத்திரம்
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment