பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - என்.சொக்கன் - 7

தேடல்
கலீல் கிப்ரான் - தமிழில் என்.சொக்கன்


இரண்டு தத்துவ ஞானிகள், ஒரு மலைச்சரிவில் சந்தித்துக்கொண்டார்கள். ஒருவர் மற்றவரிடம் கேட்டார், 'நீங்கள் எங்கே போகிறீர்கள் ?'

'நான் இளமையைத் தேடிச் செல்கிறேன்', என்றார் மற்றவர், 'இந்த மலைகளைத் தாண்டி, எங்கோ, இளமையின் ஊற்று இருப்பதாகப் படித்திருக்கிறேன். அதைக் கண்டுபிடிப்பதற்காக நான் போகிறேன்'
இப்படிச் சொல்லிவிட்டு, அவர் முதலாமவரிடம் கேட்டார், 'நீங்கள் எதைத் தேடிச் செல்கிறீர்கள் ?'

'நான் மரணத்தின் மர்மத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன்'

இளமையைத் தேடிச் செல்லும் தத்துவக்காரருக்கு, இதைக் கேட்டதும் சிரிப்பு வந்துவிட்டது, 'யாராவது மரணத்தைத் தேடுவார்களா ?' என்று அவர் கிண்டல் செய்யத் துவங்கினார்.

மரணத்தைத் தேடுபவருக்கு, இந்தக் கிண்டல் பொறுக்கவில்லை, 'நீதான் முட்டாள், இளமை பொங்கும் ஊற்று என்று ஏதேனும் இருக்கமுடியுமா ? பைத்தியக்காரத்தனமாக அதைத் தேடிக்கொண்டிருக்கிறாயே !' என்று அவர் கத்தினார்.

இப்படி இவர்கள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி, சத்தமாய்க் கத்தி, சண்டையிட்டுக் கொண்டிருப்பதை, ஒரு கிராமத்தான் பார்த்தான், அவர்களின் ஆக்ரோஷமான தத்துவ வாதங்களை சில நிமிடங்களுக்குப் பொறுமையாய்க் கேட்டான் அவன்.

பின்னர், அவர்கள் அருகே சென்று, 'நண்பர்களே, தயவுசெய்து சண்டையிடாதீர்கள்', என்றான் அவன், 'நீங்கள் இருவரும் ஒரே விஷயத்தைதான், வெவ்வேறு வார்த்தைகளில் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். நமக்குள்ளே இளமையும், மரணமும் ஒன்றாய் இருக்கின்றன, அப்படியானால், இவை இரண்டைத் தேடுவதும் ஒன்றுதானே !'
சிரித்தபடி இதைச் சொல்லிவிட்டு அந்த கிராமத்தான் தன்வழியே சென்றான்.

தத்துவ ஞானிகள் இருவரும், ஒருவரையொருவர் மௌனமாய்ப் பார்த்துக்கொண்டார்கள். பின்னர், அவர்களும் சிரித்தார்கள்.

ஒருவர், மற்றவரிடம் சொன்னார், 'சரி நண்பரே, இனிமேல், இளமையையும், மரணத்தையும், நாம் இருவரும் சேர்ந்தே தேடுவோம் !'

--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா

0 பின்னூட்டங்கள்: