பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - தருமி - 1

அந்த காலத்தில …
விலைவாசி அன்றும் இன்றும் … 1

- தருமி

அப்பா ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்த போது 20 ரூபாய் சம்பளமாம்; அதில் 10 ரூபாய் கொடுத்து மதுரை வெங்கலக்கடைத் தெருவில் இன்றும் உள்ள பாண்டியன் ஹோட்டலில் இரண்டுபேர் திருப்தியாக மதிய எடுப்புச் சாப்பாடு முடித்து விடுவோம் என்பார்கள். கேட்கும்போது ஆச்சரியாக இருந்தது. பவுன் விலை எட்டு ரூபாய் பத்து ரூபாய் என்னும்போதும் அப்படித்தான் தோன்றியது.


ஆனா இப்போ நான் கடந்து வந்த பாதையிலே அதேபோல பழங்கதையைப் பேசினா எனக்கே ரொம்பவே இன்ட்ரஸ்டிங்காகத்தான் இருக்கு. இந்தக் காலத்தோடு ஒப்பிட்டு பார்க்கிறதுக்கு ரெண்டு விஷயம் நினைவிலிருக்கு. அது இந்த நாட்டு வாழைப்பழமும் உப்பும். உப்பு வண்டிக்காரர் ரோடு வழியே தள்ளுவண்டி தள்ளிக்கிட்டு சத்தம் போட்டு கூவி வித்துட்டுப் போவார். 'ரூவாய்க்கு 20 படி உப்பே' அப்டின்னு கூவிக்கிட்டு போற சத்தம் இன்னும்கூட கேக்குது. கொஞ்ச நாள் கழிச்சி அதே வியாபாரி 'அணாவுக்கு ஒரு படி உப்பு' அப்டின்னு கத்திக்கிட்டு வித்தார். இந்த அணா விவரம் புரியாத பசங்களுக்கு விவரம் சொல்லணுமே; அதாவது ஒரு அணான்றது இன்னிய கணக்குக்கு 6 பைசா; ரூபாய்க்கு 16 அணா.


இந்த ஓரணாவுக்கு அப்போவெல்லாம் வாழைப்பழம் வாங்க அப்பா தெரு முக்குக்கடைக்கு அனுப்புவாங்க. போகும்போதே அணாவுக்கு எத்தனைன்னு கேளு; நாலு'ம்பான்; ஆறு கேளு; அஞ்சு தருவான்னு மொதல்லேயே திரைக்கதை வசனம் எல்லாம் சொல்லித் தந்துருவாங்க. கடைக்குப் போனா அதே மாதிரிதான் நடக்கும். அஞ்சு பழம் – அப்போ பொதுவா கிடைக்கிறது நாட்டுப் பழம்தான்; எப்போவாவது பச்சைப் பழம் கிடைக்கும் – அப்பா சொன்னது மாதிரி வாங்கிட்டு வருவேன். இன்னைய கணக்குக்கு ஒரு ரூபாய்க்கு 80 பழம் வாங்கிட்டு வர்ரது மாதிரி ! ஆனா இப்போ நிலவரம் நாட்டு வாழைப்பழம் ஒண்ணே ரெண்டு ரூபாயை நெருங்கியிருச்சி ! ம்ம்..ம் .. அது அந்தக் காலம்.


அது என்னவோ அந்தக் காலத்தில் குமுதம் பத்திரிகை வாங்குறவங்க கல்கண்டு பத்திரிகையையும் சேர்த்தே வாங்குவாங்க. ஏறக்குறைய மாதத்துக்கு ரெண்டு தடவையாவது வீட்டுக்கு வர்ர அண்ணன் ஒருத்தர் வாங்குற கல்கண்டுதான் நான் முதலில் வாசிக்க ஆரம்பித்த புத்தகம். துணுக்குச் செய்திகள் நிறைய இருக்கும். அதில் எத்தனை உண்மை இருந்திருக்குமே தெரியாது; ஆனா படிக்க படிக்க ஆர்வமா இருக்கிறமாதிரி துணுக்குகள். பாருங்களேன் இன்னும் என் நினைவில் இருக்கு ஒரு துணுக்கு. அதாவது மோட்டார் சைக்கிளில் வேகமா ஒருவர் போக, பக்கத்தில் சென்று கொண்டிருந்த லாரியில் இருந்து துருத்திக் கொண்டிருந்த தகரம் அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டியவரின் தலையை அப்படியே துண்டித்து விட்டதாம். ஆனாலும் தலையில்லாத அந்த உடலோடு மோட்டர் சைக்கிள் பல மைல் தூரம் சென்றதாம்!


'அந்த கரிய இருளில் கருப்பு நிற ப்யூக் கார் ஒன்று அந்த நீண்ட சாலையில் விரைந்து கொண்டிருந்தது. அதன் ஹெட்லைட் வெளிச்சம் கத்திபோல் இருளைக் கிழித்து …. ' இப்படியாகப் போகும் தமிழ்வாணனின் கதைகள். சங்கர்லாலும், மாணிக்கமும், கத்திரிக்காயும், மாதுவும், இந்திராவும், துணைக் கமிஷனர் வஹாபும் ரொம்ப வேண்டியவர்களாக , நெருக்கமானவர்களாக பலகாலம் இருந்தார்கள்.


அக்டோபர் 1966-ல் தஞ்சையருகில் உள்ள ஒரு கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்தேன். "சித்தாளு: வேலை. அதாவது அப்போதிருந்த demonstrator என்ற வேலை. விரிவுரையாளர் வேலைக்குரிய தகுதி இருந்தாலும் wire pulling போன்றவைகள் இல்லாமல் போவதாலோ, இல்லை நமது 'ராசியினாலோ' இந்த சித்தாள் வேலையில் சேருவதுண்டு. அப்படி சேர்ந்த போது முதல் மாதச் சம்பளம் 198 ரூபாய். அதில் வீட்டுக்கு வேறு கட்டாயம் 30 – 50 ரூபாய் அனுப்பணும். முடிவெட்ற கடை, சினிமா தியேட்டர்கள் தவிர எல்லாத்துக்கும் இருக்கவே இருக்க மாத அக்கவுண்ட். அதுனால கையில காசு இல்லாட்டியும் பிரம்மச்சாரி வாழ்க்கை நல்லாவே போச்சு. நானும் அறை நண்பனும் மாதச் சம்பளம் – கவரில் போட்டு ரூபாய்,பைசா கணக்கில் தருவார்கள் – வந்ததும் மாலை ரூமுக்கு வந்ததும் பெட்டை தட்டி விரித்துப் போட்டு ரூபாய் பைசா எல்லாத்தையும் அதில் பரப்பி, அதுக்கு மேல் ஹாயாக சாய்ந்து ஒரு 'தம்' இழுக்குறது அடிக்கடி நடக்கும். அதாவது, நாங்கல்லாம் அப்படி 'காசுல புரளுரோமாம்'! அடுத்த நாளிலிருந்து மறுபடி அக்கவுண்ட் தான்.


பொருட்களின் விலைகள் பற்றி பேசும்போது நினைவுக்கு வர்ர இன்னொரு விஷயம். இந்த பெட்ரோல் விலை. 1970 அக்டோபரில் ஜாவா பைக் வாங்கினேன். அப்போது ஒரு லிட்டர் விலை ஒரு ரூபாய் ஏழு காசுன்னு நினைக்கிறேன். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலையேறி மூன்று ரூபாய் சில்லரை ஆயிற்று. அதிலிருந்து முதல் தடவையாக ஒரு பெரிய ஜம்ப்; ஆறு ரூபாயும் சில்லறையுமாயிற்று. அது ஒரு பெரிய oil shock ஆக இருந்தது. பிறகு .. பழகிவிட்டது இன்றுவரை !


75-லிருந்து 90 வரை hard to meet both ends meet என்பார்களே அந்த நிலைதான். ஒரு மாதிரி வண்டி ஓடும். பல சிக்கன வழிகள் அது இதுன்னு செய்து பார்த்து வாழ்க்கையை ஓட்டணும். அதில் ஒரு முயற்சியாக ஒவ்வொரு தினச் செலவையும் எழுதி வைத்துப் பார்த்தோம். எல்லாம் ஒண்ணாதான் இருந்திச்சின்னு பிறகு அந்த முயற்சியையெல்லாம் விட்டுட்டு வாழ்க்கையை ஓட்டினோம் சந்தோஷமாக. அந்த சமயத்தில் எழுதிய கணக்கு நோட்டின் சில பக்கங்களை இன்னும் பத்திரமா வச்சிருக்கேன். அதைப் பார்க்கும்போது எனக்கே ஆச்சரியமா இருக்கு. போனா போகுது ஒண்ணுரெண்டை உங்களுக்கும் காண்பிக்கிறேன். பார்த்துக்கங்க. வேற யார்ட்டயும் சொல்ல வேண்டாம், சரியா?


படம்: 1

1975, ஜூலை சம்பளம் 600 வாங்கி 623 ரூபாய் செலவழித்து கணக்கை எப்பட்டியோ தங்கமணி டகால்டி வேலை செஞ்சு (எல்லாம் நம்ம நிதியமைச்சர்களெல்லாம் இவங்கள பாத்துதான் பட்ஜெட் போடுவாங்களோ?) 598.35-க்குக் கொண்டுவந்து பட்ஜெட்டைச் சரி கட்டியிருக்காங்க பாருங்க!








படம் 2:
அக்டோபர் 75 .. சம்பளம் 600 ரூபாய்.. முதல் தேதி அன்னைக்கி குடும்பத்தோடு வெளியே ஜாலியா போய் டிபன் சாப்பிட்டுட்டு காய்கறி வாங்கிட்டு வீட்டு வாடகை 85 ரூபாயை கொடுத்துட்டு …. அன்னைக்கி மொத்த செலவு = ரூ. 88



படம் 3 :

அந்த மாச நடுவில் இன்னொரு சினிமாவுக்கு டாக்டருக்கு அதுக்கு இதுக்குன்னு ஒரு 20ரூபாய் 60 பைசா செலவு.அனேகமா மூணு அல்லது அஞ்சு மாச தவணையில் வாங்கின சீலிங் ஃபேனுக்கு 45 ரூபாய்; ஜாவாவுக்கு பெட்ரோல் 7.50(அப்போ ஒரு காலன் ஃ 5 லிட்டர் போட்டிருப்பேன் ஆயிலோடு சேர்த்து!)



சே! பின்னிட்டம்ல … ஆகஸ்ட் மாசம் 7ரூபாய் 75 பைசா பட்ஜெட்டில் உபரித்தொகை இருந்திருக்கிறதே!

10 பின்னூட்டங்கள்:

cheena (சீனா) said...

வருகைப் பதிவு மட்டுமே - படித்தபின் மறு மொழி பிறகு

1975 வரவு செலவுக் கணக்குப் புத்தகம் என்னிடமிருக்கிறது - பதிவில் இடலாமா ?

பதிவைப் படித்த பின் முடிவு எடுக்கிறேன்

அலுவல் அழைக்கிறது - வருகிறேன்

Dr.N.Kannan said...

வாழ்த்துக்கள் தருமி சார். உங்களுக்கு என்ன சொல்லவா விஷயம் இருக்காது. நம்ம காலேஜ் பத்தியும் சொல்லுங்க. இப்ப இருக்கிற நிலையில் அந்நினைவுகள் ஓர் ஆவணமாய் கூடப்படும்!

முன்னாள் மாணவன், சகா, கவித்தோழன் - கண்ணன்

குடுகுடுப்பை said...

கணக்கு வழக்கெல்லாம் நல்லா இருக்கு சார். எதுக்கும் இந்த பதிவை ஒரு பிரிண்ட் பண்ணி வெச்சிக்கங்க பின்னாடி உதவும்.

உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிக்கும் ஆவலுடன்.

தஞ்சைக்கு அருகில் பூண்டியா சார் ?

வல்லிசிம்ஹன் said...

1975ஆ.
தருமி சார், அப்போ குழந்தைகளைப் படிப்புக் காலம்.அந்தச் செலவெல்லாம் வேற இருந்தது.
சேலத்தில் ஒரு இட்லிக்கார அம்மா
தினம் முப்பது பைசாவுக்கு ஆறு இட்லிகள் கெட்டிச் சட்டினி எல்லாம் தினம் கொண்டு வந்து கொடுப்பார் அது நினைவிருக்கிறது:)

மற்றபடி கையில வாங்கினேன் பையில போடலை கதைதான்:)

ilavanji said...

தருமி சார்,

அந்தக்காலத்துல குடும்பம் நடத்தறதுல இம்புட்டு ஒழுங்குமுறையெல்லாம் இருந்ததா?! ஆச்சரியமா இருக்கு! வாத்தியாரு குடும்பம் வேற. கனகச்சிதமான ப்ளானிங் :) ( இருந்தாலும் தீர்த்த, வெண்குழல் வகையறாக்காள் லிஸ்ட்ல இல்லயே? அது தனி பட்ஜெட்டா? :) )

இப்பல்லாம் எங்கணக்கு வழக்குகளை க்ரெடிட் கார்டு கம்பெனி காரங்களே கரெட்டா எழுதி கர்ராரா (பிடுங்கி)வாங்கிக்கறதால நாங்க கணக்கெழுதறதில்லை! :)


75ல எனக்கு வயசு 2! ஹிஹி...

தருமி said...

சீனா,
கடைசியில் வாசித்தீர்களா இல்லையா? எப்ப உங்க கணக்குப் புத்தக வெளியீட்டு விழா?

தருமி said...

சகா கண்ணன்,
காலேஜப் பத்திதான் இப்ப தனி வலைப்பூ போடும்படியாக அல்லவா ஆகி விட்டது :-(

தருமி said...

குடுகுடுப்பை,
பூண்டியேதான்!
எப்படி தெரியும்?

நம்ம வலைப்பூவிலேயே ஒரு கட்டம் கட்டிற வேண்டியதுதான்... அதைவிட பாதுகாப்பான இடம் ஏது?

தருமி said...

வல்லியம்மா,
75-லேயே படிப்புச் செலவு வந்திருச்சா...?

ஏதோ நானும் வண்டிய ஒருமாதிரி ஓட்டியாச்சின்னு நினச்சிப் பார்த்தா ..
சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கு.

தருமி said...

இளவஞ்சி,
ஒழுங்குமுறையாவது மண்ணாவது ... அப்படியெல்லாம் இருந்திருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா வந்திருக்க மாட்டோமா..
இதெல்லாம் நயினா செய்றது. நாங்க 74 கடைசியிலதான் தனிக்குடித்தனம் போட்டோம். கொஞ்ச நாள் இந்த வேலையெல்லாம் பார்த்தோம். அதன்பின் 'வந்ததை வரவில் வைப்போம்; செல்வதைச் செலவில் வைப்போம்'தான்!