பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - தருமி - 2

அந்த காலத்தில …
ரயில் பயணங்களில் …


- தருமி


இன்றைக்கும் கூட மதுரை புகைவண்டி நிலையத்தைத் தாண்டி ஓவர் ப்ரிட்ஜ் வழியாகச் செல்லும்போது புகைவண்டிகள் வரும்போதும் கிளம்பும்போதும் அடிக்கும் அந்த மணிச்சத்தம் கேட்கும்போதெல்லாம் அடுத்த ரயில் பயணம் எப்போது என்ற ஆசை கிளர்ந்தெழுகின்றது. அது என்னவோ இன்னும் ரயில் பயணம் என்றால் ரொம்ப பிடிக்குது. விமானத்தில் போகும்போது கூட (அப்புறம் எப்படி நாங்க அமெரிக்காவுக்கெல்லாம் விமானத்தில் போயிருக்கோம் அப்டின்றதைச் சொல்றது ..) விமானத்தில் ஏறி ஓரிரு மணி நேரத்தில் செமையா போர் அடிக்க ஆரம்பிச்சிருது. அது என்ன, ஒரு ஆட்டம், குலுக்கல் இல்லாமல் நின்றுகொண்டு இருப்பதுபோலவே மணிக்கணக்கில் இருந்தால் போரடிக்காதா என்ன? ஆனா ரயிலில் பாருங்கள் .. ஓடும் சத்தம் ஒரு தொடர்ந்த B.G.M. போல் நம் கூடவே எப்போவும் வர, எப்பவும் மனுஷங்களுக்கு மத்தியில் இருக்கிறோம் அப்டின்ற நினைப்போடுதான் இருக்கணும் – ஒட்டுக் குடித்தனம் மாதிரி. ஊரும் உலகமும் நம் கூடவே பயணம் வரும். பகலோ இரவோ எந்தப் பயணமாயிருந்தாலும் அதில் ஒரு ஈர்ப்பு உண்டு. விமானப் பயணத்தில் everybody is an island அப்டின்ற உணர்வுதான் இருந்தது.


இப்போதே ரயில் பயணத்தில் இவ்வளவு ஆசையென்றால் சின்ன வயதில் கேட்க வேண்டுமா என்ன. வருடத்திற்கு இரண்டுதடவை – கிறிஸ்துமஸ் லீவு, அடுத்து கோடை விடுமுறை என இருமுறை – நெல்லை பக்கத்திலுள்ள சொந்த கிராமத்திற்குக் கிளம்பி போவதே ஒரு திருவிழா மாதிரிதான். அப்போதெல்லாம் இரவுப் பயணத்தைவிட பகல் பயணமே வாய்த்தது.


காலம்தான் எவ்வளவு மாறிப் போச்சு! இப்போவெல்லாம் முன்னமே சீட், பெர்த் எல்லாம் வாங்கிக்கிட்டு செளகரியமா போய் பழகியாச்சு. அப்போவெல்லாம் அதெல்லாம் ஏது? கூட்டமா இருந்தா சிகப்பு சட்டை போட்ட ஆளுககிட்ட கொஞ்சம் காசு கொடுத்து 'பெர்த்' வாங்கிடலாம்; அதாவது, மேலே சாமான்கள் வைக்கிற இடத்தில துண்டு போட்டு காசு வாங்கிட்டு நமக்குக் கொடுப்பாங்க. அப்போ ரயில்களில் மூன்று வகுப்புகள் இருக்கும். முதல் இரண்டைப் பத்தி எதுவும் தெரியாது; நினைத்தும் பார்த்ததில்லை. ரயில் பெட்டிகளிலும் பல மாறுதல்கள். ரொம்ப சின்னப் பையனாக இருந்த போது சீட்டுகள் இப்போ மாதிரி குறுக்காக இல்லாமல் நீளவாட்டில் இருந்தது நினைவிலிருக்கிறது. ஆனால் ரொம்ப முன்னால்தான். அதுக்குப் பிறகு இப்போதுள்ளது மாதிரி ஆகிவிட்டது. ஆனால் ஜன்னல்களுக்குக் கம்பிகள் ஏதும் இருக்காது. துண்டைப் போட்டெல்லாம் இடம் பிடிக்க முடியாது. ஆட்களே ஜன்னல் வழியே புகுந்து இடம் போடணும். அதுவே ஒரு ஹீரோ வேலைதான். அந்த ஜன்னல்களை மூடும் கதவெல்லாம் இப்போவெல்லாம் மேலிருந்து கீழே வருவதாகத்தானே இருக்கின்றன. அப்போவெல்லாம் கீழிருந்து மேலே வரும்படி இருக்கும். அதை சரியாகப் பொறுத்த தனித் திறமையே வேணும்.


ரயில் வண்டிகளின் மின்விசிறிகளில் ஏதும் மாற்றமில்லையோவென இப்போதும் ஒவ்வொரு ரயில் பயணத்திலும் தோன்றுகிறது. ஏனெனில் பார்ப்பதற்கு அப்படியே இருப்பது மட்டுமில்லாமல், அந்த விசிறிகள் எப்போதுமே அபார வேகத்தில்தான் சுற்றுகின்றன. அன்றைக்கும் அப்படித்தான். ஆனால் ஒரு முக்கிய வித்தியாசம். அப்போதெல்லாம் விசிறிகள் நம் இஷ்டத்துக்குத் திருப்பி வைத்துக் கொள்ளலாம். அதில் தான் பெரிய ட்ராமா, சண்டை எல்லாம் நடக்கும். அவரவர் இஷ்டத்துக்கு, வசதிக்கு ஏற்றாற்போல் அதை திசை திருப்புவார்கள். பல சமயங்களில் might is always right என்ற தியரி வேலை செய்யும். இல்லையென்றால் வெள்ளைச் சட்டை, ஓரிரு ஆங்கில வார்த்தைகளால் தங்களை மேல்மட்ட ஆட்களாகக் காண்பித்துக் கொள்பவர்களின் இஷ்டத்துக்கு அது வளையும். ஆனால் ராத்திரி எப்படியும் ஒரு சண்டை வரும். சாமான்கள் வைக்குமிடத்தில் எப்படியும் ஆட்கள்தான் இருப்பார்கள். ஒருவர் தூங்கியதும் எதிர்ப் பக்கத்தில் இருப்பவர் மெல்ல தன் பக்கம் மின்விசிறியை இழுத்துக் கொள்ள, இவர் தூங்கி அவர் முழித்ததும் மெல்ல அவர் தன்வழிக்கு இழுக்க … கதை தொடரும்.


இரண்டு மூன்று மணி நேரப் பயணம் முடிந்து ரயிலில் இறங்குபவர்களைப் பார்த்தாலே பாவமாயிருக்கும். நிச்சயமா சட்டையெல்லாம் கரி படர்ந்து, கண்ணெல்லாம் ரத்தச் சிவப்பாகி, தலைமுடியெல்லாம் கலைந்து ஒரு பெரிய போராட்டம் முடிந்து வருபவர்கள் போல்தான் எவரும் தோற்றம் தருவார்கள். ஏனென்றால், எல்லா ரயில்களும் கரிவண்டிகள்தான். அப்போ வச்ச பேருதான் "புகை வண்டிகள்" ! எவ்வளவு பொருத்தம் ! வண்டியில் எங்கு உட்கார்ந்து எழுந்தாலும் கார்மேக வண்ணனாகத்தான் எல்லோரும் மாறணும். எங்கும் எதிலும் கரிதான். ஜன்னல் ஓரத்தில் இடம் பிடித்து உட்கார்ந்தவர்களுக்கு இன்னொரு போனஸ்; கண்கள் எல்லாம் கரிவிழுந்து செக்கச் சிவப்பாய் ஆகிவிடும். வாழ்க்கையே போராட்டம் என்பது போல் ஒவ்வொரு ரயில் பயணமும் ஒரு போராட்டமாக அமைந்துவிடும்.


ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் எப்படியும் அங்குமிங்குமாய் குழந்தைகளுக்குத் தொட்டில்கள் தொங்கும். எங்கும் எந்த இடத்திலும் மக்கள் உட்காரத் தயங்குவதில்லை; அது பாத்ரூம் பக்கமாக இருந்தாலென்ன, நடைபாதையாயிருந்தாலென்ன. சமத்துவம் நிலவும் இன்னொரு இடமாக ரயில் பெட்டிகள் இருக்கும். இப்பவும் பொது ரயில் பெட்டிகள் அப்படித்தான் இருக்குமென நினைக்கிறேன். அதுபோல் பொது ரயில் பெட்டிகளில் பயணித்தது நாளாகிவிட்டது.


ஏறக்குறைய எல்லா ரயில்களும் எல்லா நிறுத்தங்களிலும் நின்று நின்று போனதாக நினைவு. இரவுப் பயணங்களில் மிகவும் பிடித்ததும் இன்னும் நினைவில் இருப்பதும் ஒரு விஷயம்: பல ரயில்வே ஸ்டேஷன்களில் மின்சாரம் இல்லாத காலங்களில், ஒவ்வொரு ரயில் வரும்போதும் ஒருவர் அந்த ஸ்டேஷன் பெயரைச் சத்தமாக ஒரு ராகத்தோடு நீட்டி ஒலிப்பதும், ஒரு தீப்பந்தத்தோடு கையில் ஒரு வளையத்தோடு ஒருவர் நிற்பதுவும், அதை ரயில் ஓட்டுனரில் ஒருவர் லாகவமாக அந்த வளையத்தில் கையைக் கொடுத்து அதனைக் கைப்பற்றுவதும், அதற்கு சற்று முன்பு இன்னொரு வளையத்தைத் தூக்கி எறிவதும் … இன்னும் இருள்படிந்த ஓவியமாக மனதில் நிற்கிறது.


ஏறக்குறைய கொஞ்சம் வசதியான மக்கள் ரயில் பயணம் செய்யும்போது கட்டாயம் கையோடு கொண்டுவருவது ஒரு பித்தளை கூஜா. ஒவ்வொரு குடும்பத்தலைவருக்கும் இந்தப் பயணங்களில் கட்டாயமான ஒரு வேலை எந்த நிறுத்தத்தில் நின்றாலும் இறங்கி ஓடிப் போய் அங்கிருக்கும் குழாயில் தண்ணீர் பிடித்து வருவதுதான். இப்போவெல்லாம் நீங்கள் ஒரு பாட்டில் தண்ணீர் வைத்திருக்க, எதிரில் இருக்கும் எனக்கு இல்லையென்றால் நான் உங்களிடம் தண்ணீர் ஓசி கேட்க முடியுமா? அப்போவெல்லாம் வேண்டுமாவென்று கேட்டுகொடுத்தது நினைவில் இருக்கிறது, கூஜாவைத் திறந்து அதனுள்ளேயே இருக்கும் சிறு தம்ளரில் மக்கள் தங்கள் பரோபகாரத்தைக் காண்பிப்பார்கள்.


அந்தக் காலத்தில் ரயில் பயணத்திற்கென்று போனால் முதலில் ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் வைத்திருக்கும் கரும்பலகையைத்தான் பார்க்க வேண்டும். அதில்தான் ஒவ்வொரு ரயிலும் எத்தனை நிமிடங்கள் காலதாமதமாக வரும் என்பதை எழுதி வைத்திருப்பார்கள். அதுவும் எல்லாம் நிமிடக் கணக்குதான் – ரயில் எத்தனை மணி நேரம் தாமதமாக வந்தாலும்! ரயில்கள் தாமதமாக வருவதுதான் அப்போதைய நடைமுறை. சரியான நேரத்துக்கு ஒரு ரயிலும் வந்ததாகச் சரித்திரம் இருக்காது. அதை வைத்துக் கதை – அனேகமாக எல்லோருக்கும் தெரிந்ததுதான் – உண்டு. ஆச்சரியமாய் ஒரு நாள் ஒரு ரயில் சரியான நேரத்து வர, எல்லோரும் வண்டி ஓட்டுனருக்கு மாலை போட்டார்களாம். அவரோ ரொம்பவே வெட்கப் பட்டு 'இந்த ரயில் நேற்று சரியாக இந்த நேரத்திற்கு வந்திருக்க வேண்டிய வண்டி' என்றாராம்.


மதுரையிலிருந்து ஊருக்குப் போக ரயிலில் போய் அதன்பிறகு பஸ், ஒத்தை மாட்டு வண்டி என்று கிராமத்துக்குப் பயணம் தொடரும். திரும்பி மதுரை போகும்போது ரயில் பயணத்திற்குப் பிறகு ஜட்கா பயணம். இதில் ஊருக்குப் போகும் பஸ் பயணம் ஒரு தனி ரகம்தான். ரொம்ப சின்ன வயசில் சில தடவைகள் ஸ்டீம் பஸ்களில் சென்ற அனுபவம் நினைவில் உண்டு. பஸ்ஸின் நுழை வாயிலுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய சிலிண்டர் இருக்கும். வெளிப்பக்கம் அதற்குக் காற்றடிக்க கையால் சுற்றக்கூடிய துருத்தி ஒன்று இருக்கும். பெரிய ஊர்களில் பஸ் நின்றவுடன் சின்ன பசங்க ஓடி வந்து அந்த துருத்தியைச் சுற்ற ஓடிவருவார்கள் - கிடைக்கும் காசுக்காக.


மதுரையில் இறங்கியதும் ஜட்கா வண்டிக்காகக் கட்டாயம் ஒரு பேரம் நடக்கும். எப்போதும் எனக்கு வண்டிக்காரர் பக்கத்தில் முன்னால்தான் இடம். ரொம்ப நாள் வரை ஒரு விஷயம் எனக்குப் புரிந்ததே இல்லை. ஒத்தை மாட்டு வண்டியானாலும் சரி, இரட்டை மாட்டு வண்டியானாலும் சரி, மாட்டின் மூக்கணாங்கயிறு வண்டிக்காரர் கையில் இருக்கும். அதை இழுத்து மாட்டை அல்லது மாடுகளை கன்ட்ரோல் பண்ணுவதைப் பார்த்திருக்கிறேன்.ஆனால் ஜட்கா வண்டிகளில் ஒரு கையில் வைத்திருக்கும் கயிற்றின் சிறு அசைவுகளை வைத்தே குதிரையைக் கன்ட்ரோல் செய்வது ரொம்ப நாட்களுக்குப் பிறகே புரிந்தது. அது புரிவதற்கு முன்பு எனக்குப் பெரிய ஆச்சரியமாக இருப்பது எப்படி குதிரை "தானாகவே" சரியான ரோட்டில் செல்கிறது என்பதுதான். ஒருவேளை குதிரைக்கு மதுரையில் எல்லா இடமும் தெரிந்திருக்குமோ? அதோடு நாம் பேரம் பேசும்போதே போகவேண்டிய இடத்தைத் தெரிந்து கொண்டு தானாகவே போகிறதோ என்று அதி புத்திசாலித்தனமாக நினைத்திருந்திருக்கிறேன். வெளியில் சொன்னால் வெட்கம்தான்! சரி விடுங்க, யார்ட்ட உங்ககிட்ட மட்டும்தானே சொல்கிறேன்.















குதிரை வண்டிப் பயணம்

2 பின்னூட்டங்கள்:

தருமி said...

நன்றி டாக்டர்.

புருனோ Bruno said...

//ஒரு வளையத்தோடு ஒருவர் நிற்பதுவும், அதை ரயில் ஓட்டுனரில் ஒருவர் லாகவமாக அந்த வளையத்தில் கையைக் கொடுத்து அதனைக் கைப்பற்றுவதும், அதற்கு சற்று முன்பு இன்னொரு வளையத்தைத் தூக்கி எறிவதும் … இன்னும் இருள்படிந்த ஓவியமாக மனதில் நிற்கிறது.//

இந்த வளையம் (டென்னிள் மட்டை போல்) எனக்கு கூட ஞாபகம் இருக்கிறது. அது எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு என்று நினைத்தால் வியப்பாக உள்ளது. (ஓடும் ரயிலில் இருந்து கிழே நிற்பவரிடம் ஒரு பொருளை அளிப்பது எளிது - தூக்கி எறிந்தால் போதும். ஆனால் கிழே நிற்பவர் அந்த கைப்பிடியை பிடித்து கொண்டு நிற்க, இஞ்சினில் நிற்பவர் கையில் அந்த வளையத்தை சொருக என்று கிழிலுருந்து மேல் அளிக்க ஒரு வளையம், ஒரு கைப்பிடி என்ற கண்டுபிடிப்பு எவ்வளவு அபாரமானது. இதை கண்டுபிடித்தவரின் பெயர் சரித்திரத்தில் இடம் பெறவில்லை என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்