பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - தமிழ்நதி - 3

புத்தக வாசனை
- தமிழ்நதி


அப்பாவின் வேலை காரணமாக, பன்னிரண்டாம் வகுப்புவரை நான் பதினொரு
பள்ளிக்கூடங்களில் படிக்க நேர்ந்தது. நாங்கள் வீடு மாறி வேறு
ஊர்களுக்குச் செல்லும்போதெல்லாம் தளபாடங்களுக்கு அடுத்தபடியாக
அழிச்சாட்டியமாக இடத்தைப் பிடித்துக்கொண்டு கனமான மலத்தியோன் பெட்டிகளும்
விடாப்பிடியாக வரும். 'அப்பாவின் புத்தகங்கள்'என்பதன்றி அதற்கு
முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அலைந்து திரிவது சிறுவயதிலிருந்தே எனக்கு
விதிக்கப்பட்டுவிட்டதோ என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது. வீட்டுச்
சாமான்களுக்கு நடுவில் அந்தப் பெட்டிகள் மீது ஒய்யாரமாய் அமர்ந்து வேறூர்
சென்ற நாட்களில் எனது கவலையெல்லாம் புதிதாகக் குடியமரப் போகும் வீட்டில்
மரங்கள் இருக்குமா என்பதுதான். சின்ன வயதிலிருந்தே மரங்கள் மீது
அப்படியொரு ஆசை. இயற்கையின் மீதான விருப்புத்தான் வாசிப்பிற்கும்
எழுத்திற்கும் ஒருவகையில் உந்து கருவியாக இருந்திருக்க வேண்டும்.
இப்போதும் மரங்களற்ற வீடுகளை உயிரற்றவையாகவே உணரமுடிகிறது.

விருத்தெரிந்த காலத்தில் மலத்தியோன் பெட்டிகளுள் மனிதர்கள் இருப்பதைக்
கண்டுபிடித்தேன். காகிதங்களில் வரிவடிவில் இருந்த அவர்கள் அழுதார்கள்@
சிரித்தார்கள்@ காதலித்தார்கள்@ வஞ்சித்தார்கள்@ நேர்மையாயிருந்து
வறுமையில் வாடினார்கள்@ கொலைகளும் தற்கொலைகளும் செய்தார்கள்.
பூரணி-அரவிந்தனும்(குறிஞ்சி மலர்) வந்தியதேவன்-குந்தவையும் (பொன்னியின்
செல்வன்), வேதா-நச்சியும் (ஜீவகீதம்), தாரணி-சூர்யாவும்(அலையோசை),
தியாகு-ஸ்வப்னா(தாயுமானவன்) என்னோடு வாழத்தொடங்கினார்கள். அது வேறொரு
உலகம். நான் கதைமாந்தர்களைப் போல வாழ ஆசைப்பட்டேன். கனவு செறிந்த
கண்களுடன் சுற்றியிருப்பவர்களை விட்டு விலகியிருக்க ஆரம்பித்தேன்.
சிறுவயதில் வாசிப்புடன் தர்க்கிக்கப் போதிய அறிவு இருக்காது. ஆதலால்
வாசிப்பினால் மனிதர்கள் கட்டமைக்கப்படுவது தவிர்க்கவியலாததாகிறது. பொய்யே
பேசாத, இரக்கமே உருவான, அறிவின் சுடரொளி கண்கூசவைக்குமொரு பெண்ணாயெனைக்
கற்பனித்ததுண்டு.

அந்நாட்களில், புத்தகத்தைத் திறந்தால் புறவுலகு மூடிக்கொள்ளுமளவிற்கு
இறகின் மென்மையாயிருந்தன பொழுதுகள். சாப்பிடவோ கடைக்கு அனுப்பவோ
அழைக்கும் குரல்கள் எனையெட்டும் முன்னரே கரைந்துபோகலாகாதா எனப்
பரிதவிப்பேன். ஒரு புத்தகத்தை வலுக்கட்டாயமாக மூடி, மீண்டும்
கையிலெடுக்கும்வரை அந்தப் பாத்திரங்களின் குரல்கள் உள்ளே
ஒலித்துக்கொண்டிருந்தன. தெருவில் நடந்துபோகும்போது அவர்களும் என்னுடன்
கூடவே வருவார்கள். அவர்கள் அடுத்து உதிர்க்கப்போகும் வார்த்தைகள் எனது
சின்ன மனதின் கற்பனையில் சிக்காதனவாக இருந்தன. கனவுகளின் இழையறுக்க
கையில் கத்தியோடு வந்தது யதார்த்தம். வாசித்த புனைவுகளுக்கும்
யதார்த்தத்திற்குமிடையிலான இடைவெளி நினைத்ததைக் காட்டிலும் மிகப்பெரிதாக
இருந்தது. விழிகளில் திரையிட்டிருந்த கனவுப்புகை கலைந்து
'மனிதர்கள்'தெளிவாயினர்.

ஆனாலும், நூலகங்கள் மற்றும் புத்தகக் கடைகளின் மாயவசீகரம் இன்னதென்று
இன்னுந்தான் புலப்படவில்லை. புத்தகத்தைக் கையிலெடுத்து புரட்டவோ ஒரு வரி
வாசிக்கவோ கூட வேண்டியதில்லை. மின்விசிறிகள் மட்டும்
அனத்திக்கொண்டிருக்கும் அமைதியான அந்த நீள மண்டபங்களின் மர
அலமாரிகளுக்கிடையில் புத்தகங்களின் பின்முதுகைப் பார்த்தபடி ஊடாடித்
திரிதலே போதுமாயிருக்கும். மூக்குக் கண்ணாடிக்கப்பால் தூக்கம்
வழிந்தோடிக்கொண்டிருக்க, தன் வீட்டுப் பொருளை யாரோ திருடிக்கொண்டு போக
அனுமதி கேட்பதான எரிச்சலோடிருக்கும் நூலகர்கள் சிரிப்பதேயில்லையோ என
சின்னவயதில் நினைத்திருக்கிறேன். அவர்களின் சிடுமூஞ்சித்தனத்தையும்
பொறுத்துக்கொள்ளவைத்தது புத்தகங்கள் மீதான காதலே.

உங்களில் பலருக்கு 1980களின் தொடக்க காலம் நினைவிருக்கலாம்.
மும்முரமாகவும் புதிது புதிதாகவும் இயக்கங்கள் தோன்றி தீவிரமாக
'இயங்கிய'காலமது. அந்நாட்களில் புதிய வாசிப்புக்குப் பழக்கப்பட்டோம்
அன்றேல் பழக்கப்படுத்தப்பட்டோம். இலங்கை அரசின் அடக்குமுறைக்கெதிரான
வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் இரவோடிரவாக சுவர்களில் முளைத்திருக்கக்
கண்டோம். அவற்றுட் சில கவித்துவமிக்க வரிகளோடிருந்ததாக ஞாபகம். அதைவிட
'துண்டுப் பிரசுரங்கள்'என்று சொல்லப்பட்ட சிறு கையடக்கப் புத்தகங்கள்
இரகசியமாக விநியோகிக்கப்பட்டன. அவை பெரும்பாலும் கறுப்பு,சிவப்பு இரண்டு
மைகளாலும் மாறி மாறி எழுதப்பட்டிருக்கும். எழுச்சிமிகு அவற்றின்
வாசகங்களால் ஈர்க்கப்பட்டுப் போராடப் போனவர்கள் அநேகர். மேலும்,
'மரணத்துள் வாழ்வோம்'போன்ற கவிதைத் தொகுப்புகளும் வாசிக்கக் கிடைத்தன.
சமாதான காலமென அவ்வப்போது தலைகாட்டிச் செல்லும் காலங்களில் அப்பேர்ப்பட்ட
புத்தகங்களுக்கும் விடுதலை. அவற்றைப் பகிரங்கமாக வாசிக்க முடிந்தது.
ஆனால், இரகசியமாக வாசிக்கும்போதிருந்த குறுகுறுப்பை அவை தரத்தவறின.
துரதிர்ஷ்டவசமாக 'சமாதான'காலங்களும் அடிக்கடி வருவதில்லை. ஆகவே நாங்கள்
அத்தகைய புத்தகங்களை வீட்டுச் செத்தைகளுக்குள் ஒளித்துவைக்க
வேண்டியிருந்தது. எரியூட்டவும் நேர்ந்தது. நெருப்புத் தின்னக் கொடுக்க
மனம் வராதோர் 'பொலித்தீன்'பைகளில் இட்டு கிடங்கு கிண்டிப் புதைத்தனர்.
எங்கள் நிலங்களுள் கண்ணிவெடிகள் மட்டுமல்லாமல் புத்தகங்கள், நகைகள்,
எலும்புகள், போராளிகளின் புகைப்படங்களும் புதைக்கப்பட்டிருக்கின்றன.
அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அவை புதையலாகலாம்.

இந்தியப் படைப்புகள் இலங்கைக்குள் வாராது நின்றிருந்த ஒரு காலத்தில்
வீரகேசரிப் பிரசுரத்தினூடாக கணிசமான நாவல்கள் வெளிவந்தன. செங்கை
ஆழியானின் 'கங்கைக் கரையோரம்'வாசித்துவிட்டு இரவிரவாக விம்மி வெடித்து
அழுதது நினைவிருக்கிறது. இன்றெனில் யாரோ இழந்த காதலுக்காக கண்ணீரை
இறைத்திருக்கமாட்டேன் என்றே தோன்றுகிறது. 'காட்டாறு'ம் அப்படித்தான்.
செங்கை ஆழியான் எப்போதும் ஒரு வாக்கியத்தில் என்னை ஏங்கியழச் செய்பவராக
இருந்தார். பாலமனோகரனின் 'நிலக்கிளி'பதஞ்சலி கற்பனைக் கதாபாத்திரம் என்று
நினைக்கமுடியாதபடி உயிரோட்டமாயிருந்தாள். அவள் தண்ணீரூற்றில் இன்னமும்
வாழ்ந்துகொண்டிருப்பாள் என்ற நினைவு(முட்டாள்தனமான)மாறாதிருக்கிறது.

நமதெல்லோருக்குமான வாசிப்புத்தளம் இப்போது மாறிவிட்டது. அம்புலி
மாமா-கல்கி-அகிலன்-லஷ்மி-சிவசங்கரி-செங்கை ஆழியான்-
பாலகுமாரன்-சுஜாதா-தி.ஜானகிராமன்-ஜெயகாந்தன்-லா.சா.ரா.-அசோகமித்திரன் - எஸ்.பொ. -பிரபஞ்சன் - அம்பை - ராஜம் கிருஷ்ணன் - ஆ.மாதவன் - சுந்தர ராமசாமி - ஜி.நாகராஜன், கோணங்கி - ஜெயமோகன் -அ.முத்துலிங்கம் - எஸ்.ராமகிருஷ்ணன் - நாஞ்சில் நாடன் என நீள்கிறது. புத்தகச் சந்தையில் குறிப்பிட்ட பெயர்களைக் கண்டால், நீரில் துள்ளும்
மீனைப் பாய்ந்து கவ்வும் கொக்கினைப்போல கையில் எடுப்பதுண்டு. வாங்கும்
வேகம் வாசிப்பதில் இருப்பதில்லை.

"மோகித்து ஒருமுறை சுகித்தபின்
முகம் திருப்பிக் கடக்கிற
நெஞ்சின் அதிர்வை நினைவுறுத்துகின்றன
கட்டிலில் காத்திருக்கும் புத்தகங்கள்"

என்ற வரிகளுக்கிணங்க புத்தகங்கள் ஆண்டாண்டுகளாகக் காத்திருக்கின்றன. அவை
தூண்டும் குற்றவுணர்வோ அபரிமிதமானது. ஆனாலும், அவற்றை இழக்கவும் மனம்
ஒப்புவதில்லை. என்றோ வரப்போகும் ஓய்விற்காக வாசிப்பினை
ஒத்திப்போட்டுக்கொண்டிருப்பதே நீள்கிறது. நம் உள்மனசுக்குத் தெரியும்@
வாசிக்க, எழுத முடியாமைக்கான காரணங்களைச் சிருஷ்டிக்கும் தந்திரங்கள்.
வீட்டின் எல்லா அறைகளிலும், அலமாரியிலும், ஆரம்பித்து முடிக்க முடியாமல்
மூலை மடித்த புத்தகங்கள் நூற்றுக்கு மேலுண்டு. புதுப் புத்தகங்களுக்கென
ஒரு வாசனை உண்டு. காகித வாசனையோ… மை வாசனையோ… பிரித்தவுடன் மண்மணம் போல் நாசிக்குள் மணம்பரவும். முதலில் இடையிடையே பிரித்துப் படித்தபின்தான்
முழுவாசிப்பிற்கென அமர்வது. முன்னுரைகளை முதலில் கண்ணெடுத்தும்
பார்ப்பதில்லை. 'இந்த மலர் இப்படித்தான் மணக்கும்'என்று மூன்றாமவர்
சொல்வதைப் போலொரு உணர்வு. நாமே நுகர்வதே நல்லது. 'நாவல்களென்ன
கிரந்தத்திலா எழுதப்பட்டிருக்கின்றன முன்னுரை படித்து உள்நுழைய?' என்பது
மேதாவிகளுக்கு உவப்பளிக்கத் தவறலாம். முன்னுரையே எப்போதும் என்வரையில்
பின்னுரையாயிருந்திருக்கிறது. நாமொரு பக்கம் வாசிக்க நமக்குள்ளிருக்கும்
'சட்டாம்பிள்ளை'யும் தன் வேலையைத் தொடங்கிவிடும். தர்க்கிக்குமொரு குரல்
கண்களின் கூடக் கூடப் போய்க்கொண்டிருக்கும். யார் வெல்வது என்பதைப்
புத்தகத்தினதும் வாசகனதும் தரமே தீர்மானிக்கின்றது. முன்முடிவில்
உறுதியாயிருக்கும் குரலின் நச்சரிப்பு தாங்காமல் மூடிவைத்து
எழுந்ததுமுண்டு. குரலை 'சும்மா கிட நாயே'என அதட்டி தன்னோடு கூட்டிப்போன
புத்தகங்கள் நிறையவுண்டு.

எனதுடமை எனதுடமை என உறவு, நகை, பொருளை மட்டும் இறுக்கிக்கொள்வதில்லை.
புத்தகங்களும் அதில் அடக்கம். இரவல் கொடுப்பது -அதிலும் புத்தகங்களை
இரவல் கொடுப்பது இழப்பதற்கு ஈடான துக்கமாகத்தானிருந்தது. 'நீங்கள் அறிவை
மறுக்கிறீர்கள்'என்றொரு நண்பர் சொன்னதைக் கேட்டபிறகு யார் கேட்டாலும்
எழுதி வைத்துக்கொண்டு தூக்கிக்கொடுத்து விடுவதே வழக்கம். என்றாலும்
திரும்பி வருமா என்ற பதைப்பையும் சேர்த்தே கொடுக்கிறேன். பிள்ளையை
சிறுவர் காப்பகத்தில் விட்டுக் கையுதறி வேலைக்கு ஓடும் தாயின்
மனமாயிருக்கலாம் அது.

நிச்சய இருப்பு மறுக்கப்பட்டலையும் எங்களைப்போன்றவர்களுக்கு புத்தக
சேகரிப்பும் புலிப்பால்தான். ரொறன்ரோவின் நிலக்கீழ் அறையொன்றில் குளிருள்
நடுங்கியபடி இன்னமும் காத்திருக்கின்றன என்னுடைய புத்தகங்கள். இன்னுஞ்
சில ஈழத்தில் பூட்டப்பட்ட தூசிபடிந்த அறையொன்றின் அலமாரியுள்
சிறையுண்டிருக்கின்றன. கடவுச்சீட்டின் பெரும்பாலான பக்கங்களை
நிறைத்திருக்கும் இந்திய விசா இனிவருங்காலம் மறுக்கப்படில், இத்தனை
புத்தகங்களையும் எங்கு, எப்படிக் காவிச்செல்வது என்பதே தலையுடைக்கும்
இப்போதைய தலையாய கேள்வி. ஒத்திவைக்கப்பட்டிருக்கும் வாசிப்பு ஒருக்காலும்
நிறைவேறாமற் போகவும் சாத்தியங்களுள்ளனதாம்.

உயிரின் ஒரு நுனியை இவ்வுலகிலிருந்து அறுத்துவிட்டுப் போகமுடியாமல்
அங்குமிங்குமாக ஊசலாடிச் சேடமிழுத்தபடி கிடக்கும் வயோதிபர்கள் சிலரின்
வாயில் பொன்னைக் கரைத்தூற்றி 'போ'வெனச் சொல்வதுண்டாம். சிலருக்கு மண்ணே
கடைசிச் சொட்டாம். அவ்வாறு நேரின், என்னைப் போன்றோர்க்கு புத்தகம்
பொசுக்கிய சாம்பல் கரைத்தூற்றாது போகாது உயிர்க்காற்று.

0 பின்னூட்டங்கள்: