நிலம் மற்றுமோர் நிலா
- தமிழ்நதி
இருபுறமும் வேகமாகப் பின்னகரும் காடுகள், கண்ணிவெடி குறித்த அபாய
அறிவிப்புப் பலகைகள், நிர்விசாரமாக மேய்ந்துகொண்டிருக்கும் மாடுகள்,
சோதனைச்சாவடிகள்… இவை தாண்டி வவுனியாவிலிருந்து 'ஏ ஒன்பது' வீதியில்
விரைந்துகொண்டிருந்தபோது, கனவின் சாலையில் பயணித்துக்கொண்டிருப்பதாகவே
உணர்ந்தேன். காரினுள் ஒலித்த பாடல்கள் வேறு, என்னைக் காலங்களுள் மாற்றி
மாற்றி எறிந்துகொண்டிருந்தன. எக்கணமும் விழி தளும்பிச் சிந்திவிடுவேன் என
அஞ்சினேன்.
முன்னொருபோதில், யாழ்ப்பாணத்திலிருந்து வரும் பேருந்தொன்று சில
மாதங்களுக்கொரு தடவை இரணைமடுச் சந்தியில் என்னை உதிர்த்துவிட்டுப்
போகும். திருவையாறு நோக்கிச் செல்லும் பாதையில் மெலிந்ததோர் சிறுபெண்ணாய்
களைப்போடு நடந்துபோவேன். அப்போது திருநெல்வேலிப் பல்கலைக்கழகத்திற்கு
அருகில் வாடகைக்கு அறையெடுத்து நாங்கள் நால்வர் தங்கியிருந்தோம்.
விடுமுறை நாட்களில் எல்லோரையும் முந்திக்கொண்டு ஆரவாரமாக நான்
கிளிநொச்சிக்குக் கிளம்பிப் போவதற்கு அப்பா-அம்மாவைத் தவிர்ந்த காரணங்கள்
சிலவும் இருந்தன. வயல்வெளி நடுவில் அமைந்த குடிசையின் முன் குருவிகள்
தத்தி நடை பழகும். சாணத்தால் மெழுகிய வாசலிலே 'எனக்கு இதைவிட்டால் வேறு
வேலையில்லை' என்ற பாவனையில் மயிலொன்று வந்து ஆடிவிட்டு தானியம்
கொறித்துவிட்டுப் போகும். அதன் கழுத்து நொடிப்பும் தோகை விசிறலும்
வித்துவக்கர்வமும் கைதேர்ந்த நாட்டியக்காரிக்குத் துளியும் குறைந்தனவல்ல.
காற்றடிக்க வயல் சிலிர்த்தடங்கும் மாலைப்பொழுதுகள், என்றோ எங்கோ
கடல்கடந்துபோனவனின் ஞாபகக்கணப்பை ஊதித் துன்பம் கிளர்த்திய நாட்கள் அவை.
இவையெல்லாவற்றையும் விட மேலதிக காரணமாய் நிலாவும் தோழிகளும்
இருந்தார்கள்.
கிழக்கில் ஏதோவொரு கிராமத்தில் படித்துக்கொண்டிருந்த நிலா வடபுலத்தை
வந்தடைந்த காரணம் அநேக தமிழர்களுக்கு நிகழ்ந்ததும் அவர்களுக்குப்
பழகிப்போனதுமான கதைதான். சம்பவங்கள் வேறுபடலாம். வலி ஒன்றுதான். எப்படியோ
அவள் எங்கள் வீட்டோடு ஒட்டிக்கொண்டாள். நிலா நல்ல உயரம். பலசாலியும்கூட.
துப்பாக்கியைத் தோளில் கொழுவிக்கொண்டு சீருடையின் கால்களை
மடித்துவிட்டபடி வயல் வரப்பிலேறி நடக்கும்போது நான் கூட கூட ஓட
வேண்டியிருக்கும். என்னைவிட இரண்டே வயது இளையவள். என்னை 'நித்திலா'என்றே
அழைத்தாள். 'அம்மா…!'என்றழைத்தபடி அந்தக் குடிசையினுள் தலையைத்
தாழ்த்திக்கொண்டு அவள் நுழையும்போது எனக்குள் ஒரு பரவச அலையடிக்கும்.
அவள் என்னால் நிகழ்த்த முடியாததையெல்லாம் நிகழ்த்திக்
காட்டுபவளாயிருந்தாள். அவளை நான் வியப்பின் கண்களால்
தொடர்ந்தவாறிருந்தேன்.
"அம்மா! நீங்கள் வைக்கிற கத்தரிக்காய்க் குழம்பு நல்லாயிருக்கு" என்று
அவர்களில் யாராவது சொல்வார்கள். அம்மாவின் கண்கள் கலங்கும். தனது சமையல்
நன்றாயிருப்பதாக யாராவது சொல்லக் கேட்பதுதான் அம்மாவின் உச்சபட்ச
சந்தோசமோ என்று நினைக்கும்படியாக நெகிழ்ந்துபோவார்.
"யார் பெத்த பிள்ளையளோ…"என்ற வார்த்தைகளைத் தொடரும் பெருமூச்சை பலதடவைகள்
நான் அவதானித்திருக்கிறேன்.
அந்தப் பெண் போராளிகளை அவர்களறியாதபடி நான் கவனிப்பதுண்டு. யாழினியையும்
அமுதாவையும் தனித்துக் காணவியலாது. அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதும்
அழுதழுது சமாதானமாவதும் வழக்கமாயிருந்தது. ஆழியாளுக்கு மோட்டார்
சைக்கிளில் ஏறி காற்றினைக் கிழித்துப் பறப்பதில் ஆனந்தம். அதற்காக
பொறுப்பாளரிடம் அடிக்கடி தண்டனையும் பெறுவாள். ஆனால் மறுபடி மோட்டார்
சைக்கிளில் ஏறியமரும் வரைதான் அது ஞாபகத்திலிருக்கும். அமுதா நன்றாகச்
சாப்பிடுவாள். அவள் வயிற்றுக்குள் பூதம் இருப்பதாக தோழிகளிடையே ஒரு
பரிகாசக் கதை உலவியது. நிலமகள் நன்றாகக் கவிதை எழுதுவாள். அதிகம்
பேசமாட்டாள். மௌனமும் சிரிப்பும்தான் பெரும்பாலும் அவளது மொழி. அடித்துப்
பிடித்து அவர்கள் பழகுவதும் சிரிப்பதும் இழப்புச் செய்திகள் வரும்போது
விக்கித்து துக்கித்துக் கிடப்பதும்.. பின் தெளிவதும்… அவர்களாக நான்
இருக்கமுடியாமற் போனதில் உள்ளுக்குள் எனக்கு வருத்தந்தான்.
"வீட்டை விட்டிட்டு இருக்கிறது கஷ்டமா இல்லையா நிலா"
அவள் சிரிப்பாள். பார்வையைத் தொலைவனுப்பி சில கணங்கள் மௌனமாக இருப்பாள்.
கண்களில் நீர் மெலிதாகத் திரையிடுவதாகத் தோன்றுவது என் கற்பனையாகவும்
இருக்கலாம். தேவதைகள் அழக்கூடுமா என்ன…?
"எனக்கு நீங்கள் எல்லாரும் இல்லையா…?"
"எண்டாலும்…."
அந்நாட்களில் நான் உடலும் மனமும் நொய்மையான நோஞ்சானாயிருந்தேன். அவர்கள்
இலாவகமாகச் சுமந்துசெல்லும் துப்பாக்கியை ஐந்து நிமிடங்களுக்கு மேல்
என்னால் தூக்கி வைத்திருக்கவியலாது. நிலாவிடம் கேட்டால் 'அதெல்லாம்
பயிற்சியும் பழக்கமும்'என்பாள்.
ஒரு தடவை விடுமுறையைக் கழிக்கவும்-களிக்கவும் வீடு சென்றிருந்தபோது
அவர்களில் எவருமே வரவில்லை. அம்மாவின் வழக்கமான பாராயணங்கள்,
முறைப்பாடுகள் எதனையும் காணோம். எதிர்பார்ப்பு மங்கித்தேய்ந்த இரவில்
அரிக்கன் லாம்பின் திரியை இழுத்து அணைத்துவிட்டு இருளில் கிடந்தேன்.
மெல்லிய விசும்பல் ஒலி… அம்மா அழுதுகொண்டிருந்தா.
"அம்மா! ஏன் அழுகிறீங்கள்?"
"அந்தப் பிள்ளை நல்லாச் சாப்பிடும். கேட்டுக் கேட்டுச்
சாப்பிடும்…மீன்குழம்பெண்டால் சரியான விருப்பம் அதுக்கு"விசும்பல்
அழுகையாக வெடித்தது.
"சண்டைக்கெண்டு மன்னாருக்குப் போன இடத்திலை வயித்திலையும் நெஞ்சிலையும்
குண்டு பாய்ஞ்சு….. உடம்பை நேரை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு
போய்ட்டினமாம்… அங்கைதான் தாய்தேப்பன் இருக்கினம்"
"அமுதா…!" அதிர்ந்தது வயிறு. காற்று கூரையை உசுப்பி உசுப்பி ஊளையிட்டது.
எழுந்து வெளியில் வந்தேன். அன்றைக்கும் இரவு அழகாகத்தானிருந்தது.
காட்டிற்குள்ளிருந்து ஏதோவொரு பறவை இடைவிடாமல் கூப்பிட்டது.
விநாடிக்கணக்கு பிசகாமல் இன்னொரு பறவை பதிலளித்துக்கொண்டிருந்தது.
"யாழினி…! நீ எவ்வளவு அழுதிருப்பாய்? தனித்துத் திரியும் அன்றில் பறவையானாயடி…!"
"ஏய்!அமுதான்ரை வயித்துக்குள்ளை பூதம் இருக்குமோ…"
அதைக் கேட்டு அவள் சிரிப்பாள். நெருக்கி நெருக்கி அமைந்த பற்கள் தெரிய
அழகிய வெள்ளந்தியான சிரிப்பு அது! அநேக கறுப்பு நிறமானவர்களுக்கு
எப்படியோ அழகிய பற்கள் வாய்த்துவிடுகின்றன என்று நான் அடிக்கடி
நினைத்துக்கொள்வதுண்டு.
நான்கைந்து நாட்கள் கழித்து, நன்றாக இருட்டியபிறகு நிலா மட்டும்
சோர்ந்துபோய் வந்தாள். மற்றவர்கள் எங்கேயென்றதற்கு 'யாழ்ப்பாணத்தில்'
என்றாள். அமுதாவின் உடலை விதைகுழியில் இறக்கியபோது யாழினி
மயங்கிவிழுந்துவிட்டதைச் சொன்னாள். சாப்பிடும்போது உள்ளிருந்து ஒரு கேவல்
வெடித்தது. பாதியில் எழுந்துவிட்டாள். எனக்கும் அழுகை வந்தது. அன்றைக்கு
வயல் வரப்பில் அமர்ந்து 'என்னை நினைத்து யாரும் கலங்கக்கூடாது'என்ற பாடலை
உரத்துப் பாடினாள். அவள் பாடிய விதம் முகம் தெரியாதவர்களிடம் சூளுரைப்பது
மாதிரியிருந்தது. குரலைக் கத்தியாக்கி சண்டை போடுகிற மாதிரியுமிருந்தது.
இந்த நேரம் ஏனிவள் பாடுகிறாள் என்று உள்ளுக்குள் கொஞ்சம் பயமாகக்கூட
இருந்தது. அந்தக் குரலில் நெஞ்சு பதைத்தது.
"இனி இஞ்சை வரக்கிடைக்குதோ தெரியாது நித்திலா"
"ஏன்…?"
"எங்கடை குறூப்பை மன்னாரிலை போய் நிக்கச் சொல்லியிருக்கு"
நெருங்கி என்னை இறுக அணைத்தாள். அந்தக் கரடுமுரடான ஆடைகளில் புல் வாசனை
வீசியது. அப்பா வயலைச் சுற்றிவரப் போயிருந்தார். அம்மாவைக் கட்டியணைத்து
விடைபெற்றுக் கிளம்பிவிட்டாள். வயல் வரப்பில் அவள் வேகமாக நடந்து
கோட்டுச் சித்திரமென இருளுள் கரைந்தது இன்றைக்கும் நினைவிலிருக்கிறது.
அதன்பிறகு கிளிநொச்சிக்குப் போவதைக் குறைத்துக்கொண்டேன். ஏதோவொரு பயம்
என்னைப் பின்னின்று இழுத்தது. அப்பாவும் அம்மாவும் எப்போதாவது வந்து
பார்த்துவிட்டுப் போனார்கள். வாழ்வு அநிச்சயத்தில் கழியும் நிலை வர வரத்
தீவிரமடைந்தது. ஊர் பயத்தில் உறைந்து கிடந்தது. இன்றைக்கு எந்த
வீட்டிலிருந்து ஒப்பாரிச்சத்தம் கேட்குமோ என்றஞ்சிக் கண்விழிக்கும்படியாக
காலைகள் பதட்டத்துடன் விடிந்தன. தெரிந்த பல இளைஞர்களை சடலங்களாகப்
பார்க்க நேரிட்டது. சில பெண்களையும். என்னோடு படித்தவர்களில் ஒருத்தி
கால்களில் குருதி ஒழுக மார்பில் பற்தடங்கள் பதிந்திருக்க விழிகள் வானம்
பார்த்து நிலைத்திருக்கக் கிடந்தாள். படிப்பு பாதியில் நின்றது. நான்
கொழும்பிற்குப் போனேன். பிறகு கனடாவிற்குப் போனேன். அப்பா-அம்மா
கொழும்புவாசிகளானார்கள். மாரிகளில் மழை ஒழுகும் இடங்களுக்கு ஓடி ஓடிச்
சட்டி வைத்து வாழ்ந்த அந்த வயல் நடுவிலான குடிசையைக் காலம் தின்றது.
ஞாபகங்களைத் தின்னும் சக்தி மட்டும் காலத்திற்கு இருந்திருந்தால் நிலாவை
நான் மறந்திருப்பேன்.
அன்றிரவு அவள் பாடியது… கடவுளே! அது என்ன குரல்! தனிமையை கோபத்தை
ஆற்றாமையை துயரத்தை ஊற்றி நெய்த குரலது!
நிலா இன்னமும் வன்னியில்தானிருப்பதாக நண்பர்களில் ஒருவர் சொல்லத்
தெரிந்துகொண்டேன். இயக்கத்தில் பெரிய பொறுப்பொன்றில் இருக்கும் ஒருவரை
மணந்துகொண்டதாகவும் அவரே சொன்னார்.
வரப்புகளில் சறுக்காமல் வேகநடை நடக்கும் நிலா… 'நித்திலா…
நித்திலா…'என்று நிமிடத்திற்கொரு தடவை பெயர் சொல்லியழைத்தே பேசும்
நிலா…தனது துப்பாக்கியை எந்நேரமும் துடைத்துத் துடைத்துப்
பளபளப்பாக்கிக்கொண்டிருந்த நிலா… இப்போது எப்படி இருப்பாள்…?
இரணைமடுச் சந்தியில் காரை நிறுத்தச் சொன்னேன். ஏதேதோ ஞாபகங்கள்
குளிர்மேகங்களைப் போல கடந்துபோயின. திருவையாறு செல்லும் பாதையில்
நடந்துபோய்க்கொண்டிருந்த மெலிந்த சிறு பெண்ணில் வாஞ்சை பெருகியது. அவள்
இறந்தகாலத்தைய என்னை ஒத்திருந்தாள். ஓடிப்போய்க் கைகளைப் பற்றிக்கொள்ள
வேண்டும் போலிருந்தது. நாகரிகமான பைத்தியம் போலிருக்கிறது என்று அவள்
நினைத்துக்கொள்ளக்கூடும்.
கிளிநொச்சி நிறையவே மாறியிருந்தது. ஒரு மாதிரிநகரம் போலிருந்தது.
காய்ச்சல் காய்ந்த பிறகு வரும் புதுத்தோலும் பொலிவுமாய் நிமிர்ந்திருந்தன
கட்டிடங்கள். வெயில் மட்டும் பொரிந்து தள்ளிக்கொண்டிருந்தது. நிலாவின்
கணவனை எல்லோருக்கும் தெரிந்திருந்தது. வழிசொல்லியவர்களின் கண்களில்
சந்தேகம் மின்னியது. ஒரு இளைஞன் எங்களைப் பின்தொடர்ந்தவாறிருந்ததையும்
அவதானிக்க முடிந்தது. மேடும் பள்ளமுமான அந்த வீதி வழியாக கார்
விழுந்தெழும்பிப் போயிற்று. அந்த வீட்டின் முன் கார் நின்றபோது ஆறு வயது
மதிக்கத்தக்க பெண் குழந்தையொன்று ஓடோடிவந்து பார்த்துவிட்டு உள்ளே
ஓடிற்று. நிலா வெளியில் வந்தாள். ஒருகணம் திகைப்பில் வாய்பொத்தினாள்.
மறுகணம் கைகளைப் பிடித்துக்கொண்டு அழவாரம்பித்து விட்டாள். சீருடையிலேயே
பார்த்துப் பழகியிருந்த என் கண்களுக்கு அவள் தோற்றம் முற்றிலும்
புதிதாயிருந்தது.
"இப்பதான் நினைவு வந்ததா…"என்ற கேள்வியை பத்துத் தடவையாகிலும் கேட்டிருப்பாள்.
"நிறத்து உடம்பு வைச்சு… அடையாளமே கண்டுபிடிக்க முடியேல்லை… நித்திலா நீ…
நீ எண்டு கூப்பிடலாமோ…"
"வேறை எப்பிடிக் கூப்பிடுறது… நீ மட்டுமென்ன… சட்டையில வேறை ஆரோ
மாதிரியிருக்கிறாய்"
நான் சிரித்துக்கொண்டிருந்தேன். கண்களில் நீர் தன்னிச்சையாக
வழிந்துகொண்டிருந்தது. இருபதின் தொடக்கத்தில் இருந்த இளம் பெண்ணொருத்தி
உள்ளிருந்து வந்தாள். அவளது இடுப்பில் இருந்த குழந்தை 'அம்மா'என்றபடி
நிலாவிடம் தாவியது. புதியவர்களைக் கண்ட மிரட்சியில் அவள் தோள்களில் முகம்
புதைத்தது.
"இது ரெண்டாவது சூரன்… சரியா அப்பா மாதிரி"
"அது என்ரை தங்கச்சி" அறிமுகப்படுத்தப்பட்டவள் சின்ன நிலா போலிருந்தாள்.
வந்தவர்களுக்குத் தேநீர் வைக்கவென்று உள்ளே போனாள்.
நான் நிலாவை வியப்போடு பார்த்தேன். அதுவரை எங்கள் இருவரையும் மாறி மாறிப்
பார்த்தபடி திண்ணையிலிருந்து குதிப்பதும் ஏறுவதுமாயிருந்த பெண் குழந்தையை
இழுத்து நிறுத்தினாள்.
"இது எங்கடை மூத்தது வானதி… நல்லாச் சித்திரம் வரைவா… ஒரு இடத்திலை
சும்மா இருக்கமாட்டா.. முதலாம் வகுப்புப் படிக்கிறா"
"இவரைத் தெரியுந்தானே உனக்கு…"அவள் தன் கணவனைப் பற்றிப் பேசத்
தொடங்கினாள். நான் வியப்போடு கேட்டுக்கொண்டிருந்தேன். அவள் கழுத்தில்
மஞ்சள் கயிறொன்று மட்டுமிருந்தது. வேறு நகைகளில்லை. பேச்சினிடையில்
அமுதாவின் பெயர் வந்தது. தேங்காய் துருவுவதை நிறுத்திவிட்டு
'ஞாபகமிருக்கா…?'என்றாள்.
"அமுதாவின்ரை சிரிப்புக் கூட நல்லா நினைவிருக்கு"என்றேன்.
"கொஞ்ச நாளிலை யாழினியும் கரும்புலியா பெயர்பதிஞ்சு போயிட்டா. ஆழியாள்
கடற்சமரிலை வீரச்சாவு. நிலமகள் திருகோணமலையில இருக்கிறதாக்
கேள்விப்பட்டன். புதுப் புதுப் பிள்ளையள் நிறையப் பேர் வந்திருக்கினம்"
நிலாவின் மகள் வானதி கையில் ஒரு பொருளோடு வந்து நின்றாள். உற்றுக்
கவனிக்க ரவைக்கூடு எனத் தெரிந்தது. குண்டுகள் அடங்கிய அதை விளையாட்டுப்
பொருள்போல கையில் வைத்துச் சுழற்றிக்கொண்டிருந்தாள். எனக்குள் வினோதமான
பயமொன்று பரவியது.
"அந்த அறைக்குள்ளை போகவேண்டாமெண்டெல்லோ சொன்னனான்"அதட்டினாள். வானதியோ
இன்னும் உசாரடைந்தவளாக ஓடிப்போய் தூக்கமாட்டாமல் இன்னொரு பொருளைத்
தூக்கிவந்தாள். நான் பதறினேன். நிலா யாரையோ விளித்து சாவதானமாகச்
சொன்னாள்.
"நிலவன்! அந்த அறையை ஒருக்காப் பூட்டிவிடுங்கோ"
இளம்வயதுப் போராளியொருவன் வந்து வானதியைத் தூக்கி உயரத்தில் எறிந்து
விளையாட்டுக் காட்டி அதை நைச்சியமாக வாங்கிக்கொண்டு போனான்.
"வானதி எண்டொரு அக்கா நல்லா கவிதை எழுதுவா. ஆரம்பகாலப் போராளிகளிலை
ஒராள். நீயும் கேள்விப்பட்டிருப்பாய்… அவவின்ரை ஞாபகத்திலை இவளுக்குப்
பெயர் வைச்சது… சரியான வால்… துறுதுறுவெண்டு எந்தநேரமும்"
ஆட்டிற்குக் குழை வைக்கவென்று எழுந்துபோனாள் நிலா. சீருடையும்
துப்பாக்கியுமாக நான் பார்த்த நிலா இல்லை இவள் என்று தோன்றியது. கண்கள்
மின்ன அன்றிரா சன்னதங்கொண்டவளாகப் பாடிய நிலாவை நான் எதிர்பார்த்து
வந்தேனா… கொஞ்சம் ஏமாற்றமாகக்கூட இருந்தது. கணவன்… பிள்ளைகள்… சமையல்…
ஆடு… தேவதைகளின் பாதங்கள் மண்ணைத் தொடுவதை சாதாரணர்கள் சகிப்பதில்லை.
சாப்பிட்டுவிட்டுப் பிள்ளைகள் தூங்கிவிட்டார்கள். 'ங்…..'என்ற
இராகமிழுத்தலோடு வயதான குரலொன்று பக்கத்து வீட்டில்
தாலாட்டிக்கொண்டிருந்தது. முற்றம் முழுவதும் ரோஜாவும் மல்லிகையுமாய்
சொரிந்திருந்தன. நட்சத்திரங்களின் ஒளி படர்ந்திருந்த அந்த நிலம்
அவ்விரவில் உன்னதக் கனவொன்றின் சாயலில் பொலிந்தது.
"எத்தினை மணிக்கு அவர் வருவார்?"நான் கேட்டேன்.
"அவர் இஞ்சை இல்லை நித்திலா… மட்டக்களப்புக்குப் போட்டார்… அங்கை சண்டை
இப்ப மும்முரம்"
"எப்ப வருவார்…?"
"மாசக்கணக்கிலை ஆகும்"
நான் வியப்போடு அவளைப் பார்த்தேன். அவள் நட்சத்திரங்களைப் பார்த்துக்
கொண்டிருந்தாள்.
"உனக்குப் பயமா இல்லையா நிலா…"தணிந்த குரலில் கேட்டேன். இருந்தும் எனது
குரல் மௌனத்தின் அழகைச் சிதைக்கவே செய்தது.
"வேறை வழியில்லை நித்திலா… எத்தினை பிள்ளையள் செத்துப்போச்சுதுகள். என்ரை
மடியிலையே நாலைஞ்சு உயிர் போயிருக்கு. அக்கா அக்கா எண்டு எனக்குப்
பின்னாலை திரியும் ஒரு பிள்ளை. மிதிலா எண்டு பேர். அதின்ரை உடம்பைக் கூட
முழுசா எடுக்க முடியேல்லை. ஒரு கை மட்டும் கிடைச்சுது… அந்தப்
பிள்ளையின்ரை அண்ணாவும் ஒரு மாவீரன். அந்தத் தாய் என்னைக்
கட்டிப்பிடிச்சுக்கொண்டு அழுத அழுகை… இப்ப நினைச்சாலும் இதெல்லாம்
விட்டுப்போட்டு எழும்பி ஓடச் சொல்லுது.. ஆனா…"நிலாவின் கைகள் மடியில்
கிடந்த மகனின் தலையைக் கோதின. விரல்கள் வழி தாய்மை சொட்டுவதைப்
பார்த்தபடியிருந்தேன்.
பக்கத்து வீட்டில் தாலாட்டின் சுநாதம் நின்றிருந்தது. தென்னோலைகள் விர்
விர்ரென ஒன்றுடன் ஒன்று உராயும் ஓசை கேட்டது.
"இவனுக்கு மூண்டு வயசாகட்டுமெண்டு பாத்துக்கொண்டிருக்கிறன். பிறகு அம்மா
வந்திருந்து பாத்துக்கொள்ளுவா."
உணர்ச்சிகளின் கண்ணாடியாகிய அந்த விழிகள் ஈரத்தில் மினுங்குவதைப்
பார்த்தேன். எனக்குள் அமுதா,யாழினி,நிலமகள்,ஆழியாள்…. சற்றுமுன்னரே
அறிமுகமான மிதிலா எல்லோரது ஞாபகமும் படம்போல வந்துபோயிற்று. சற்றுமுன்
இவளைப் பற்றி நான் என்ன நினைத்துக்கொண்டிருந்தேன் என்பது நினைவில்
வந்தது. விம்மி விம்மி அந்த இரவை நனைத்து அழவேண்டும் போலிருந்தது.
நிலாவின் விரல்களைப் பற்றிக்கொண்டு வெப்பியாரம் வழியும் குரலில் ஒன்றை
மட்டுமே சொல்ல முடிந்தது.
"எனக்கு என்னைப் போலை ஆக்களை நினைக்க வெக்கமா இருக்கு நிலா"
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - தமிழ்நதி - 5
பதிவு வகை : வார நட்சத்திரம்
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment