திறப்பு : பகுதி - 2
- ஹரன் பிரசன்னா
சீனிவாசனை பெண்ணுடல் இரவும் பகலும் தூக்கமின்றி அலைய வைத்தது. விஜயலக்ஷ்மியின் சிணுங்கல்கள் அவனை போதையேற்றின. அவளின் அசட்டுத்தனங்கள் எல்லாம் இரவுகளில் காமத்தில் முடிந்தன. தான் என்ன சொன்னாலும், செய்தாலும் தன் கணவனை இரவில் வீழ்த்திவிடமுடியும் என்று நம்பினாள் விஜயலக்ஷ்மி. திருமணத்தின் ஆரம்பகால மயக்கங்கள் கடைசிவரைக்கும் நிலைக்கும் என்று அவள் நினைத்தாள். திருமண நாளன்று நடந்த பல்வேறு குளறுபடிகளையும் பற்றி சீனிவாசனின் அம்மா புலம்பியதை அவன் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. அவன் இரவுக்காகக் காத்திருந்தான். சீனிவாசனின் அம்மா சீனிவாசனை வாயில் வந்தபடியெல்லாம் வைதாள். விஜயலக்ஷ்மி தன் மகனை முந்தானையில் முடிந்துகொண்டதாகச் சொன்னாள். விஜயலக்ஷ்மி எதுவுமே நடக்காதவாறு முந்தானையை விரித்து உதறி திரும்ப முடிந்துகொண்டாள். சீனிவாசனின் அம்மா கைகளை நெட்டிமுறித்து என் சாபம் சும்மா போகாது என்றாள்.
விஜயலக்ஷ்மி சீனிவாசனிடம் தன் அம்மா தன்னுடன் இருக்கவேண்டும் என்று கேட்டாள். அப்போது சீனிவாசன் விஜயலக்ஷ்மியின் மார்பில் தலைவைத்துப் படுத்து அவளின் திமிறும் இடையை அடக்கிக்கொண்டிருந்தான். அவள் என்ன சொன்னாலும் சரி என்றான். மறுநாளே விஜயலக்ஷ்மியின் அம்மா ஊர் வந்து சேர்ந்தாள். எடுத்த எடுப்பில் சீனிவாசனின் அம்மா தன் மகளை ரொம்பப் படுத்துகிறாள் என்று ஆரம்பித்தாள். விஜயலக்ஷ்மிக்கே தன் அம்மா இப்படி முதல்நாளிலேயே தொடங்குவது குறித்து கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் தன் இடையின்மீதும் முலையின்மீதும் பெரும் நம்பிக்கை இருந்தது. அதனால் தன் அம்மா சொல்வது சரி என்பதுபோல சீனிவாசனிடம் பேசினாள். சீனிவாசனுக்குக் கொஞ்சம் எரிச்சல் வரத் தொடங்கியது. விஜயலக்ஷ்மி சொல்வதற்கும் தன் மாமியார் சொல்வதற்கும் உள்ள வித்தியாசங்களை அவன் உணரத் தொடங்கினான். வீட்டின்பின்னால் இருக்கும் கன்னி தெய்வத்தின் முன்னால் உட்கார்ந்து எப்போதும் அழுதுகொண்டிருக்கும் அம்மாவைப் பார்க்கவும் கொஞ்சம் பாவமாக இருந்தது. ஒருதடவையாவது விஜயலக்ஷ்மியைக் கண்டிக்கத்தான் வேண்டும் என நினைத்துக்கொண்டான்.
வீட்டிற்குள் நுழைந்த சீனிவாசனின் கால்களில் சோற்றுப் பருக்கைகள் ஒட்டின. வீடெங்கும் சிதறிக் கிடக்கும் சோற்றுப் பருக்கைகளைக் கண்டவுடன் கடும் கோபம் கொண்டான். அவனது கோபத்தைக் கவனித்துவிட்ட விஜயலக்ஷ்மியின் அம்மா புலம்பத் தொடங்கினாள். சீனிவாசனின் அம்மாதான் உணவு பிடிக்கவில்லை என்று சிதறி அடித்தாள் என்றாள். இது எதுவுமே நடந்திராத மாதிரி கன்னி தெய்வத்தின் முன்பு உட்கார்ந்து விளக்கிட்டுக்கொண்டிருந்தாள் சீனிவாசனின் அம்மா. சீனிவாசனுக்கு யோசனையாக இருந்தது. விஜயலக்ஷ்மியை அழைத்தான். அவள் உறங்கிக்கொண்டிருப்பதாகச் சொன்னாள் விஜயலக்ஷ்மியின் அம்மா. விளக்கேற்றும் நேரத்தில் என்ன தூக்கம் என்ற கேள்வியைக் கேட்டான். பின்னாலிருந்து அவன் அம்மா பதில் சொன்னாள். 'அது ஆம்பிளைக்கான கேள்வி. உனக்கென்ன?' என்று. அவன் கோபம் தலைக்கேறியது. கல்யாணம் ஆகி நான்கு மாதங்கள் ஆகியும் தன் மகள் கர்ப்பமாகவில்லை என்பதைத்தான் அவள் குத்திக்காட்டுவதாக ஆரம்பித்தாள் விஜயலக்ஷ்மியின் அம்மா. இதைக் கேட்டதும் சீனிவாசனுக்கு உடல் பதறத் தொடங்கியது. என்ன செய்வது, யாரைத் திட்டுவது எனத் தெரியாமல், ஒட்டுமொத்த கோபமும் விஜயலக்ஷ்மியின் மீது பாய, அவள் தூங்கிக்கொண்டிருக்கும் கதவை வேகமாகத் திறந்து, அவளை எட்டி உதைத்தான். அவள் கொஞ்சமும் எதிர்பார்க்காத சமயத்தில் அவள் இடுப்பில் ஓங்கி மிதித்தான். அவள் நிலைகுலைந்து தடுமாறி கீழே விழுந்தாள். தன் கணவன் தன்னை மிதித்தான் என்பதை அவள் நம்பவே சில நிமிடங்கள் பிடித்தது. பெரும் சத்தமிட்டு அழுதாள். அவள் அழுதுகொண்டிருக்கும்போது விஜயலக்ஷ்மியின் அம்மா சொன்னாள், 'இந்த வீடு உருப்படுமா, ஒரு புள்ளத்தாச்சின்னு பாக்காம மிதிக்கிறானே கட்டயில போறவன்' என்று. சீனிவாசனுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது. முதலில் தன் அம்மா சொன்னதை, தான் ஆண்மையற்றவன் என்று சொன்னதாகத் திரித்தவள் இப்போது மீண்டும் மாற்றிப் பேசுவது ஏன் என்று யோசித்தான். ஏன் தன்னிடம்கூட விஜயலக்ஷ்மி தான் கர்ப்பமுற்றதைச் சொல்லவில்லை என நினைத்தான். அவனுக்குக் குழப்பமாக இருந்தது. ஆதரவாக விஜயலக்ஷ்மியை மெல்ல நெருங்கி தடவிக்கொடுத்தான். அவள் அவன் கையைத் தட்டிவிட்டு, 'நீங்க வந்ததும் சொல்லணும்னு இருந்தேன்..' என்றாள் அழுதுகொண்டே. இது எதுவும் நடக்காத மாதிரி அம்மா விளக்கேற்றினாள். இனி தன் மகன் அடிக்கடி மிதிப்பான் என்று நம்பினாள். விரை ஒண்ணு போட்டா சுரை ஒண்ணா முளைக்கும் என நினைத்துக்கொண்டாள். சீனிவாசனின் அப்பா அவளை மிதிக்காத நாளில்லை.
தான் அப்பாவின் வாரிசு என்பதை மிக சீக்கிரத்தில் நிரூபிக்கத் துவங்கினான் சீனிவாசன். எது எதற்கு என்றில்லாமல் எல்லாவற்றிற்கும் ஏசவும் அடிக்கவும் மிதிக்கவும் தொடங்கினான் சீனிவாசன். விஜயலக்ஷ்மி வாய் திறப்பதையே நிறுத்தினாள். கல்யாணம் ஆன புதிதில் தன்னைக் கொஞ்சிக் கிடந்த கணவன் இவன் இல்லையோ என்பது போன்ற விநோதமான கற்பனைகள் அவளிடத்தில் ஏற்பட்டன. விஜயலக்ஷ்மியின் அம்மாவால் நடப்பதைப் பார்க்கச் சகிக்கவில்லை. கர்ப்பிணியை ஒரு ஆண்மகன் மிதிப்பான் என்று அவளால் நினைக்கக்கூட முடியவில்லை. அவளது கணவன் அவளை அதிர்ந்து பேசியதுகூட கிடையாது. அவள் கடும் கோபம் கொண்ட ஒரு நாளில் தன் மாப்பிள்ளைக்கு சாபம் வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினாள். 'பொம்பளையை மிதிக்கிறவன் ஆம்பளையே இல்லை. இதுக்கெல்லாம் அனுபவிப்ப... அந்தக் கன்னி தெய்வமே வரும்டா...' என்று சொல்லிவிட்டுப் படியிறங்கினாள். சீனிவாசனின் அம்மா தான் எதுவுமே செய்யாமல் இந்த நல்ல காரியம் நடந்ததை எண்ணி சந்தோஷப்பட்டாள். உள்ளூர தன் மகன் ஒரு கர்ப்பிணியை மிதித்தது பற்றிய பயமும் இருந்தது.
விஜயலக்ஷ்மி வரிசையாகப் பிள்ளைகள் பெற்றாள். ஏதோ ஒரு நோயில் எல்லாக் குழந்தையும் இறந்தன. அவளது உடல் பெருத்து, இடைகள் வீங்கி, முலைகள் சரிந்து, முகம் விரிந்து போயிருந்தது. கல்யாணத்தில் இருந்த கொடியிடைப் பெண் தானல்ல என்றே நினைத்துக்கொள்வாள் விஜயலக்ஷ்மி. சீனிவாசனின் அம்மா இறந்த பத்தாவது மாதத்திலும் அவள் குழந்தை பெற்றாள். ஊரில் இதைப் பற்றி ஓரிருவர் கிண்டலாகப் பேசினார்கள். சீனிவாசன் காதுக்கு இவையெல்லாம் விழுந்தததாகவே தெரியவில்லை. இரவில் அவளோடு படுப்பதும், பகலில் அவளை ஏசுவதும் மிதிப்பதுமன்றி அவன் எதையும் அறிந்திருக்கவில்லை. தன் கணவனைப் பற்றி நினைக்கும்போதே அவன் ஒரு காலைத் தூக்கிக்கொண்டு மிதிக்கவரும் காட்சியே விஜயலக்ஷ்மியின் மனதில் வந்தது. அவள் கன்னி தெய்வத்துக்கு விளக்கிடும்போது மனமுருகிக் கும்பிட்டாள். 'இந்த நரகத்துலேர்ந்து என்னைக் கூப்பிட்டுக்கோ...' கன்னித் தெய்வத்தின் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. அந்த ஆண்டும் அவள் கர்ப்பமானாள். அது அவளுக்கு எட்டாவது கர்ப்பம். ஏழு குழந்தைகள் பிறந்து இறந்து போயிருந்தன. பிறந்த ஒரு மாதத்தில், ஐந்து மாதங்களில் என எல்லாம் ஏதோ ஒரு காரணத்தால் இறந்து போயிருந்தன. கன்னித் தெய்வத்தின் பழிதான் அது என்கிற நினைப்பு விஜயலக்ஷ்மிக்குத் தோன்றவும், கன்னித் தெய்வத்திற்கு விளக்கிட்டு கும்பிட ஆரம்பித்தாள். தன் மாமியார் கன்னி தெய்வத்திற்கு பூஜை செய்வதை அவள் பார்த்திருக்கிறாள். கைகளை நெட்டி முறித்து சாபமிடும் மாமியார் நினைப்பு வந்தது. தன் மாமியாரிடமும் மானசீகமான மன்னிப்புக் கேட்டுக்கொண்டாள். எட்டாவது முறையாகக் கர்ப்பமானாள். காலையில் வீடு பெருக்கி, உணவு பொங்கி, உண்பதைப் போல, கர்ப்பமும் அவளுக்கு ஒரு வேலை. அதனுள்ளே இருப்பது ஓர் உயிர் என்கிற எண்ணம் அவளுக்கு வந்ததே இல்லை. தன் வேலையை ஒழுங்காகச் செய்யும் ஓர் ஊழியன்போல அவள் பிள்ளை பெற்றாள். தொட்டால் ஒட்டிக்கொள்ளும் கருப்பில் ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு அனு என்று பெயரிட்டாள். அன்று பெய்த கடும் மழையில் கன்னித் தெய்வம் முழுவதுமாக நனைந்தது. மழையில் கன்னித் தெய்வத்திற்கு விளக்கேற்ற முடியாமல் போனது குறித்து விஜயலக்ஷ்மி விசனப்பட்டாள். அதேசமயம், மழையில் கன்னித் தெய்வம் குளிர்ந்தது என்றும் நினைத்துக்கொண்டாள்.
சீனிவாசனுக்கு உள்ளூர பயம் இருந்தது, இந்தக் குழந்தையும் இறந்துவிடுமோ என்று. அவனை ஏதோ சூனியம் சூழ்ந்துகொண்டிருப்பதாக நினைத்தான். அவன் விஜயலக்ஷ்மியைக் கல்யாணம் செய்துகொண்ட பின்பே இப்படி ஒரு நிலையில்லாமல் அலைக்கழிக்கப்படுவதாக உணர்ந்தான். அதுமுதல் விஜயலக்ஷ்மியை அடிப்பதும் மிதிப்பதும் அதிகமாகிப் போனது. விஜயலக்ஷ்மி விடாமல் கன்னித் தெய்வத்தைப் பூஜித்தாள். ஒருநாள் அவள் கனவில் ஒரு சிறிய பெண் பட்டுப்பாவாடை உடுத்தி வந்தாள். சந்தேகமே இல்லை, அது கன்னித் தெய்வம்தான். வீட்டின் வெளியில் திண்ணையில் உட்கார்ந்திருந்த கன்னித் தெய்வம் அவளைப் பார்த்துச் சிரித்தது. அவள் பலமுறை கன்னித் தெய்வத்தை வீட்டிற்குள் அழைத்தும் அக்கன்னித் தெய்வம் வீட்டிற்குள் வரவே இல்லை. கன்னித் தெய்வத்தின் கண்கள் அருள் பொங்குவதாகவும் முகம் மலர்ந்த செந்தாமரை போலவும் உடல் மென்மையாகவும் சிவந்த நிறத்திலும் இருந்தாள். யாரைப் போல் இருக்கிறாள் என்பது விஜயலக்ஷ்மிக்குப் புலப்படவே இல்லை. ஒரு சாயலில் அவளுக்கு தன் தாயைப் போலத் தெரிந்தது. இன்னொரு சாயலில் தன் மாமியார் போல இருந்தது. இன்னொரு சாயலில் தன்னைப் போலத் தெரியவும் திடுக்கிட்டு விழித்தாள். வாசலில் காற்று வீசிக்கொண்டிருந்தது. கன்னித் தெய்வத்தைக் காணவில்லை. மறுநாள் தன் கணவனிடம் கனவைச் சொன்னாள். கன்னித் தெய்வம் வீட்டிற்குள் வர மறுக்கிறது என்றால் என்னவோ பிரச்சினை இருக்கிறது என்றாள். ஏற்கெனவே சூனியம் பற்றிப் பயந்துபோயிருந்த சீனிவாசன் விஜயலக்ஷ்மி சொன்னதைக் கேட்டு இன்னும் அரண்டு போனான். உப்பு சப்பில்லாத காரணங்களுக்கு அவளை ஏசினான். ரசத்தில் புளிப்பு அதிகம் என்பதற்காக ஓங்கி மிதித்தான். குழந்தை அனு ஓடி வந்து 'அம்மாவை அடிக்காதீங்க' என்று சொல்லி, சீனிவாசனை அடித்தாள். என்ன செய்கிறோம் என்கிற நினைப்பில்லாமல் சீனிவாசன் அனுவையும் ஓங்கி மிதித்தான். வீறிட்டுக் கொண்டு தூர விழுந்த அனுவை ஓடிச் சென்று தூக்கிய விஜயலக்ஷ்மி, அழுதுகொண்டே சொன்னாள், 'பச்ச கொழந்தைய மிதிக்கிறீங்க. உங்க கால் வெளங்காமத்தான் போகும்.' தனக்கு அடிமையாக இருக்கவேண்டியவள் கொடுத்த சாபம் சீனிவாசனை மேலும் கோபம் கொள்ள வைத்தது. கைக்கு வந்தமாதிரி அவளை அடித்துவிட்டுப் போனான். மறுநாள் காலையில் ஓடி விளையாடிக்கொண்டிருந்த அனு திடீரென்று கீழே விழுந்தாள். ஒரு காலை அவளால் அசைக்கவே முடியவில்லை. டாக்டரிடம் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். விஜயலக்ஷ்மி வாய்விட்டு அழுதாள். எல்லாவற்றிற்கும் காரணம் தன் கணவன்தான் என்றாள். அவனுக்கும் இதேபோல் ஒருநாள் கால் விளங்காமல் போகும் என்றான். இருக்கும் ஒரு குழந்தைக்கும் கால் விளங்காமல் போனது ஏன் என்று யோசிக்கத் தொடங்கினாள்.
(தொடரும்)
பண்புடன் ஆண்டு விழா - தீபாவளி சிறப்பு நெடுங்கதை - 2 - ஹரன் பிரசன்னா
பதிவு வகை : சிறப்பு விருந்தினர், சிறுகதை
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment