திறப்பு : பகுதி - 1
- ஹரன் பிரசன்னா
அனு ஆழ்ந்த மயக்கத்திலிருப்பதாக சீனிவாச ராவும் விஜயலெக்ஷ்மியும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அனுவின் மூச்சு சீராக இயங்கிக்கொண்டிருந்தது. பெரியதாக திறந்துகிடந்த பழங்கால மருத்துவமனையின் ஓர் ஓரத்தில் உள்ள படுக்கையில், பச்சை நிறப் போர்வை மூடி, அனு செயலற்றுக் கிடந்தாள். ஜன்னல்கள் வழியே வரும் காற்று அங்கிருப்பவர்களின் எண்ணங்களைக் கலைத்துப் போட்டுக்கொண்டிருந்தது. அனுவைப் பார்க்க வருபவர்களிடமெல்லாம் சீனிவாசன் தன் மகளைப் பற்றி டாக்டர்கள் சொன்னதை கொஞ்சம் இட்டுக்கட்டி கூடுதலாகச் சொல்லிக்கொண்டிருந்தார். விஜயலெக்ஷ்மி நொடிக்கொருதடவை வராத கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். போலியோவால் பாதிக்கப்பட்டு சூம்பிக் கிடக்கும் அனுவின் ஒரு காலை அனிச்சையாகத் தடவிக்கொண்டிருந்தாள் விஜயலெக்ஷ்மி. அனு தன் வயிற்றில் பிறந்ததே தேவையற்றது என்று பலமுறை நினைத்துக்கொண்டிருக்கிறாள். அப்போதும் அவளுக்கு அதே எண்ணமே ஓடிக்கொண்டிருந்தது. அனுவால் தானும் தன் கணவனும் என்ன சந்தோஷப்பட்டுவிட்டோம் என்று யோசிக்கத் துவங்கினாள். இதில் ஆஸ்பத்திரியில் தங்கவேண்டியதும் இங்கேயே படுத்து உறங்கி இங்கேயே இருக்கவேண்டியிருப்பது குறித்த தீராத எரிச்சலும் விஜயலெக்ஷ்மிக்கு ஏற்பட்டிருந்தது. அனு இங்கு வந்து சேர்ந்து 5 நாள்கள் ஓடிவிட்டிருந்தது. அன்றைக்கு கக்கூஸை ஒழுங்காகக் கழுவியிருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருந்திருக்காது. அனு ஐயோ என்ற சத்தத்தோடு விழுந்தாள். தலையில் ரத்தம் சொட்ட அவளைத் தூக்கிக்கொண்டு இங்கு ஓடிவந்தார்கள்.
சீனிவாசனின் வாழ்க்கை அந்த அந்த நிமிடங்களின் நினைப்பிலேயே கழிந்துவிடும். அப்போது அந்த நிமிடத்தில் ஜன்னலில் அங்குமிங்கும் ஓடும் அணிலைப் பார்த்துக்கொண்டிருந்தார். தன் கையில் பணமில்லாதது பற்றியோ, அனுவிற்கு அந்த மருத்துவமனையில் அளிக்கப்படும் மோசமான சிகிச்சை பற்றியோ அவர் யோசிக்கவில்லை. இப்படி அனுவைப் பார்த்துக்கொண்டு, அணிலைப் பார்த்துக்கொண்டு, சதா அழுகை முகத்தோடு எங்கேயோ வெறித்துக்கொண்டிருக்கும் விஜயலெக்ஷ்மியைப் பார்த்துக்கொண்டு இருப்பது அவருக்கு பெரும் எரிச்சல் தந்தது. அந்த எரிச்சல் பழக்கப்பட்டும் விட்டது. எதிர் படுக்கையிலிருந்த சிறுமியுடன் தங்கியிருக்கும் அவளது அம்மாவும் அப்பாவும் ரொம்ப அன்னியோன்யமாக இருந்தது காரணமில்லாமல் அவருக்கு எரிச்சலைத் தந்தது. எப்போது இந்த ஆஸ்பத்திரியை விட்டுப் போவோம் என்றிருந்தது.
அனு அவளைச் சுற்றி நடப்பதையெல்லாம் உணர்ந்துகொண்டிருந்தாள். தலைமாட்டில் அணில் ஓடிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. தன் அம்மா தன் காலைத் தடவிக்கொண்டிருக்கிறாள் என்று உணர்ந்தாள். தான் பிறந்த முப்பந்தைந்து வருடத்தில் அவள் தன் சூம்பிப் போன காலைத் தடவியதாக நினைவில்லை. அதனால் தன் அம்மா இப்போது தன் காலைத் தடவிக்கொண்டிருப்பது பற்றி ஆச்சரியமாக இருந்தது. சந்தோஷப்படவேண்டுமா என்று யோசித்தாள் ஏதேனும் வேறு நினைவில் அவள் காலைத் தடவிக்கொண்டிருக்கலாம் என்றும் நினைத்தாள். எதிர் படுக்கையிலிருக்கும் சிறுமியின் அப்பாவும் அம்மாவும் இப்போதும்கூட ஏதேனும் பேசி சிரித்துக்கொண்டிருப்பார்களோ என்று எண்ணம் ஓடியது. டாக்டர் வந்து ஊசி போடும்போது 'இன்னும் எத்தன நாள் இப்படி' என்று கேட்க நினைத்தது நினைவுக்கு வந்தது. ஒரு காலை ஊன்றி, இன்னொரு காலை இழுத்துக்கொண்டு நடக்கும்போது, ஒரு கால் வழுகிவிட்டால் இப்படித்தான் விழவேண்டியிருக்கும். விழுந்து விழுந்து நடை பழகி, பின்பு நடக்கும்போதெல்லாம் விழுவதைப் பழக்கமாக்கிக் கொண்டவள். வயதுக்கு வந்த மறுநாள் திடீரென தான் ஒரே நாளில் பெரிய மனுஷியாகிவிட்ட தோரணையில், இந்த உலகமே சுருங்கிப் போய் சாதாரண விஷயமான நினைப்பில் நடந்துகொண்டிருந்தபோது, பஸ் ஸ்டாண்டில் அவளையொத்த சிறுவர்கள் முன்னிலையில் திடீரெனக் கீழே விழுந்தாள். அவள் கட்டியிருந்த பாவாடையும் மேலேயேறி சூம்பிப் போன காலும் கன்னங் கரேலென தொடையும் வெளியில் தெரிந்தபோது, எத்தனை நாளானாலும் தான் பெரிய மனுஷியாகமுடியாது என்கிற எண்ணம் வந்தது. இப்போதும் நினைத்துக்கொண்டாள், தான் பெரிய மனுஷியில்லை. பெரிய மனுஷி என்றால், கல்யாணம் ஆகியிருக்கவேண்டும். குழந்தை இருக்கவேண்டும். அதட்டவும் திட்டு வாங்கவும் திட்டவும் கணவன் இருக்கவேண்டும். குறைந்தபட்சம் நல்ல காலாவது இருக்கவேண்டும்.
கக்கூஸைக் கழுவி விடச் சொல்லிச் சொல்லி அனு அலுத்த நாளில்தான் நிலைதடுமாறிக் கீழே விழுந்தாள். 'கால் முடியாது, சரி. அதுக்காக சின்ன சின்ன வேலையயும் பாக்கக்கூடாதா? ஒரு பொண்ணுக்கு இது நல்லதில்லம்மா' என்கிற அம்மாவின் ஜபத்தின் எரிச்சலில் வேகமாக நடந்தபோதுதான் விழுந்தாள். காலில்லை என்கிற சலுகையே எரிச்சலாக மாறிப்போன வீட்டில் இருக்கவே அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அனுவிற்கு அவள் வீட்டை விட்டு வேறு வீட்டிற்கு நிரந்தரமாகப் போகும் நேரமே வாய்க்கவில்லை.
சூம்பிப் போன கால்களுக்கு மேல் பெருத்துப்போன தொடைகளுடன் பெருத்துப்போன உடலுடன் கன்னங் கரிய நிறந்த்தில் லட்சமணற்ற தனது முகத்திற்கு திருமணம் நடக்காது என்பதை அனு மெல்லவே புரிந்துகொண்டாள். உடலைத் தூக்கி நடக்கமுடியாத நேரத்தில், சோம்பேறித் தனத்தில் அப்படியே அவள் தவழும்போது, சீனிவாசன் தலையில் அடித்துக்கொண்டு, 'கொட்டிக்காத, கொஞ்சமா தின்னுன்னா புத்தி இருக்குதா. இப்ப பாரு, ஒடம்பு பெருத்துப் போய் இருக்கிற ஒரு கால வெச்சும் நடக்க முடியல' என்று சலித்துக்கொள்வார். "நானாதான இழுத்துக்கறேன், உன்ன கூப்பிடலயே." "வாய்க்கு ஒண்ணும் கம்மியில்ல, இன்னும் கொஞ்சம் உடம்பு பெருத்துச்சுன்னா, நாந்தான் அள்ளிப் போடணும்." இரண்டு கைகளைச் சேர்த்து சைகையில் காண்பித்தபடியே சொன்னார். அனுவிற்கு இப்படி உடம்பை இழுத்துக்கொண்டு போவதைக் காட்டிலும், படுக்கையில் விழுந்துவிட்டால்கூட நல்லது என்று தோன்றியது.
தன் கால்மாட்டில் அம்மாவின் பேச்சுச் சத்தம் கேட்டது. மெல்ல கண்களை திறக்க எத்தனித்தாள். எத்தனை முயன்றும் அவளால் கண்களைத் திறக்கமுடியவில்லை. அம்மாவின் பேச்சிலிருந்து, பக்கத்து வீட்டுப் பையன்கள் வந்திருக்கவேண்டும் என்பது புரிந்தது. இந்த உலகத்தில் பிரச்சினையில்லாதது ஆண்களாகப் பிறந்துவிடுவது. அனுவிற்கு தான் பெண்ணாகப் பிற்ந்ததுகுறித்த பெருத்த அவமானம் எப்போதும் இருந்தது. அதிலும் அழகான கால்களுடன், சிவப்புத் தோலுடன், எடுப்பான மார்போடு கர்வத்துடன் நடக்கும் பெண்களைக் கண்டுவிட்டால், அவளுக்கு தன் பிறப்பைப் பற்றிய அவமானம் பிடுங்கித் தின்றுவிடும். ஆனால் ஆண்களாகப் பிறந்துவிட்டால் அசிங்கமாக இருந்தாலும் பிரச்சினையில்லை. காலில்லாவிட்டால் கூட பிரச்சினையில்லை. ஆண்களை இந்த உலகம் கண்டிப்பதில்லை. அவன் வயசுக்கேற்ற விஷயங்களை அவன் செய்துகொண்டிருக்கலாம். வயசுக்கு ஒத்துவராத விஷயங்களைக் கூடச் செய்யலாம். யாரும் கேட்கப்போவதில்லை. தன் 35 வயதில், முழு நிர்வாணமாக ஓர் ஆணின் படத்தைக்கூட அவள் பார்த்ததில்லை. ஆனால் அன்றொருநாள் தற்செயலாக பக்கத்துவிட்டு ஜன்னல் வழிப் பார்த்தபோது, பையன்கள் உட்கார்ந்து டிவியில் ஏதோ படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். படத்தில் யார் உடலிலும் ஒட்டுத்துணி கூட இல்லை. அவளுக்கு அங்கேயே நிற்பதா, போய்விடுவதா என்கிற எண்ணம் ஒரு நிமிடம் எழுந்தது. அதற்குள் ஒரு பையன் வந்து திறந்திருந்த ஜன்னலை மூடி விட்டுச் சென்றான். சட்டென அந்த இடத்தில் இருந்து விலகி வீட்டிற்கு வந்தாள். அந்த ஒரு நிமிடத்தில் கண்ணில் பட்ட காட்சி அன்று முழுவதும் அனுவை அலைக்கழித்தது. ஆண்களாகப் பிறந்திருந்தால் இந்த அலைச்சல் இல்லை. எப்படியும் குறைந்தது ஒரு பெண்ணையாவது அவன் அனுபவிக்கலாம். இப்படி ஆண் வாசனை என்ன என்றே அறியாமல், கண்ணில் பட்ட ஒரு காட்சியை காலம் முழுவதும் மனதில் இருத்தி கற்பனை செய்துகொண்டிருக்கவேண்டியதில்லை. திடீரென வாசலில் சத்தமும் சண்டையும் கேட்டது. பக்கத்து வீட்டுப் பையனின் அண்ணன் அவன் தம்பியை ஓங்கி செவிட்டில் அறைந்தான். மற்ற பையன்கள் அவமானம் பிடுங்கித் தின்ன அங்கே நின்று கொண்டிருந்தார்கள். அன்று அனுவிற்கு சந்தோஷமாக இருந்தது.
பையன்கள் தன் அம்மாவிடம் சொல்லிவிட்டுப் புறப்படுவது தெரிந்தது. ஆண்களாகப் பிறந்தால், எந்த அவமானம் நேர்ந்தாலும் அடுத்து ஒன்றுமே நடக்காததுபோல் இருக்கலாம். அவளுக்கு அப்போதும் தான் ஏன் ஓர் ஆணாகப் பிறக்காமல் போனோம் என்று தோன்றியது. பெண்ணாகப் பிறந்ததில் கூட பிசகில்லை, கால் நன்றாக இருந்திருந்தால், ஒரு கல்யாணமாவது ஆகியிருந்திருக்கலாம்.
இருபது வயதாக இருக்கும்போது எப்படியும் தனக்கு கல்யாணம் நடக்கும் என்றே நம்பினாள் அனு. 35 வயதில் அந்த நம்பிக்கை மறைந்து, காண்போரிடமெல்லாம் அது எரிச்சலாக வந்து விழ ஆரம்பித்து, உலகத்தில் அவளுக்கு யாரையும் பிடிக்காமல் போனது. தன்னையும் யாருக்கும் பிடிக்காது என்றே நினைத்தாள்.
பக்கத்துவீட்டுப் பெண்ணிடம் சில வருடங்களுக்கு முன்யு ஒருநாள் பேசிக்கொண்டிருந்தாள். உடல் பெருத்துப் போயிருப்பதால் நடக்கமுடியவில்லை. முதுகு வலிக்கிறது. வயிற்றின் கீழ்ப்பகுதியில் எப்போதும் ஒருவித வலி இருக்கிறது. இரவு படுத்தால் தூக்கம் வருவதில்லை. இப்படி பல வியாதிகள் அவளுக்கு இருப்பதாக அவள் சொல்லிக்கொண்டாள். அதைக் கேட்டுக்கொண்ட அந்த பக்கத்து வீட்டுப் பெண், 'காலா காலத்துல கல்யாணம் ஆயிட்டா இந்த நோயெல்லாம் வராது' என்றாள். அனுவிற்குக் கேட்கவே சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. 'அப்படியா சொல்ற? கல்யாணம் ஆயிட்டா சரியாயிடுமா?' 'பின்ன. நைட் ஒழுங்கா தூக்கம் வரும். இந்த மத்த பிரச்சினையெல்லாம் வராது. சீக்கிரம் உங்க வீட்டுல கல்யாணம் பண்ணச் சொல்லு.' இப்படி பேசியதிலிருந்து தன் பிரச்சினைகளுக்கான மிக எளிய வைத்தியமான திருமணத்தை ஏன் தன் வீட்டார்கள் சிரமேற்கொண்டு செய்வதில்லை என்கிற எரிச்சலும் அனுவிற்குச் சேர்ந்துகொண்டது. பக்கத்துவீட்டுப் பெண் கல்யாணமாகி, கர்ப்பமாகி, குழந்தை பெற்று, இரண்டாவது கர்ப்பமாகி... அவளைப் பார்க்கப்போவதையே தவிர்த்துவிட்டாள் அனு.
டாக்டர் ஊசி போடுவது தெரிந்தது. அணில்களும் பையன்களும் பக்கத்துவீட்டுப் பையன்களும் மெல்ல அவள் நினைவிலிருந்து மறைந்தார்கள்.
(தொடரும்)
பண்புடன் ஆண்டு விழா - தீபாவளி சிறப்பு நெடுங்கதை - 1 - ஹரன் பிரசன்னா
பதிவு வகை : சிறப்பு விருந்தினர், சிறுகதை
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment