பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - பெனாத்தல் சுரேஷ் - 1

Wifeology - பைனல் எக்ஸாம்!
- பெனாத்தல் சுரேஷ்


இவ்வளவு நாள் இல்லறத்தியலைப் படித்து மகிழ்ந்த இனிய மாணாக்கர்களே, நம் இல்லறத்தியல் பாடத்தை "பசுமை நிறைந்த நினைவுகளே" என்று பாடி மூட்டை கட்டுவதற்கு முன்* தேர்வு ஒன்று வைக்கவேண்டாமா?

மாதிரி வினாத்தாள், விடைகளுடன் உங்களுக்காகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. கேள்விகளையும் விடைகளையும் பார்த்து, இல்லறத்தியல் பட்டம் வாங்க நிர்வாகம் வாழ்த்துகின்றது.

மாதிரி வினாத்தாள்
பாடம்: இல்லறத்தியல்

நேரம்: 3 மணி மொத்த மதிப்பெண் - 100



I. கோடிட்ட இடங்களை நிரப்புக: (5x1 = 5)

1. எல்லா வாக்குவாதங்களிலும் சரியான கட்சி _______________ உடையதே. (மனைவி)

2. தொலைக்காட்சிப் பெட்டியில் பார்க்கக் கூடாதவை ___________ (விளையாட்டு நிகழ்ச்சிகள்)

3. இல்லற வாழ்க்கை இனிதே அமைய, தவறென்றால் ஒத்துக்கொள், சரி என்றால்? _________________________ (பொத்திக்கொள்)

4. ______________ வந்திட _______ பறந்து போம். (இல்லாள், இன்பம்)

5. சம்பளம் வரும் பின்னே, __________ வரும் முன்னே (ஷாப்பிங்)



II. ஒரு வரியில் விடையளி: (5 x 2 = 10)

1. வெற்றி பெற்ற எல்லா ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள். எப்படி?

பதில்: ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு

2. ஏன்?

பதில்: நம்மை மீறி எப்படி?

3. அபாய நண்பர்கள் யார் யார்?

பதில்: சந்தர்ப்பம் தெரியாத அரிச்சந்திரர்கள்

4. குடும்பத்தில் குண்டு வைப்பவர்கள் யார்?

பதில்: திட்டம் தீட்டியே உண்மை பேசும் தீவிரவாதிகள்.

5. தனிமையிலும் உஷாராக இருக்கவேண்டிய இடங்கள் யாவை?

பதில்: மனைவியின் நண்பர்கள் உலாவும் இடங்கள் அனைத்தும்.



III. சரியா தவறா கூறுக: 5 x 3 = 15

1. தாய்க்கும் தங்கமணிக்கும் கருத்து வேற்றுமை ஏற்படும்போது உண்மையின் பக்கம் நிற்கவேண்டும். தவறு. உண்மையா? அப்படி என்றால் என்ன?

2. உலகத்திலேயே மிகக்கஷ்டமான கேள்வி - "இந்த ட்ரெஸ்லே நான் எப்படி இருக்கேன்?" என்பதுதான். சரி. சாதா சரி இல்லை, 150% சரி.

3. நண்பர்களுடன் பார்ட்டி - மனைவியின் முழுச் சம்மதத்துடன் மட்டுமே செல்லவேண்டும். தவறு.. அய்யோடா - உங்களுக்கு என்ன வயசு? குட்டீஸ் எல்லாம் இல்லறத்தியல் படிக்க வரக்கூடாது..

4. 10 பந்தில் 10 ரன் அடித்தார்களா என்பதைவிட, அபிக்கு ஆதியால் இன்று என்ன தொந்தரவு வந்தது என்பதே முக்கியம். சரி. வேற வழி?

5. ஐந்து நிமிட ரங்கமணி மின்னரட்டை, 3 மணிநேர தங்கமணி போன் அரட்டையை விட அதிக நேர விரயம். சரி. பண்ணிப்பாருங்க சார் தெரியும்.



IV. கீழ்க்காணும் பத்தியைப் படித்து, வரும் கேள்விகளுக்கு விடையளிக்கவும். 5 x 4 = 20

தங்கமணி, ரங்கமணிக்கு குட்டி, கெட்டி என்று இரு குழந்தைகள். ஒரு திங்கட்கிழமை மாலை, குட்டியின் பள்ளியிலிருந்து ஆசிரியை அழைத்து, குட்டி ரொம்ப சுட்டித்தனம் செய்வதாகவும், கூட இருக்கும் பிள்ளைகளை வம்புக்கு இழுப்பதாகவும் புகார் கூறினார். அதே நாளில், கெட்டியின் ஆசிரியை, கெட்டி பாடத்தில் முதலாவதாக வந்ததாகக்கூறினார். அலுவலகத்தில் இருந்து திரும்பிய ரங்கமணியிடம் தங்கமணி இவற்றை விளக்கினார்.

அவ்வாறு விளக்குகையில்,

1. உங்கள் பிள்ளை என்று கூறப்படுபவர் யார்? (குட்டி)

2. என்னோட தங்கம் என்று அழைக்கப்படுவது யார்? (கெட்டி)

3. யாருக்கு ரங்கமணியின் குடும்ப குணங்கள் வம்சாவழியில் கலந்திருக்கின்றன? (குட்டி)

4. குட்டி செய்த குறும்புகளுக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? (ரங்கமணி)

5. கெட்டி நன்றாகப் படிப்பதற்கு யார் காரணம்? (தங்கமணி)



V விரிவான விடையளி - 5 x 10 = 50

1. ராஜ்கிரண் தங்கமணிகளைப் பற்றி விவரித்தது எங்ஙனம்?

"எல்லா மனுசனும் சந்தோசமா மட்டும் இருந்திரக்கூடாதுன்னுதான் ஆண்டவன் ஆபீஸைப் படைச்சான். ஆபீஸ் பாஸ் பண்ற தொல்லைலே அவன் சந்தோசத்தை மறப்பான்.. ஆனா எல்லா நேரமும் ஆபீஸ்லேயே இருந்திற முடியாதுன்னுதான் தங்கமணியப் படைச்சான்..

பாடல் தொடர்கிறது.. தெய்வம் அது தாய்க்கும் கீழேதான் ரேஞ்சில் ..

"கொடுமை அது ஆபீஸு வேலைதான்..

என், தங்கமணியும் பாஸுக்கு மேலதான்.."


2. இடம் சுட்டி பொருள் விளக்குக : "நீங்க சொல்றதுதாங்க சரி"

இடம்: மனைவி, கணவனிடம் சொல்கிறாள்.

பொருள்: கணவன், மனைவியின் ஆசையை பூடகமாக (நூறு முறை சொன்னதன் பின்) அறிந்து, அவள் ஆசையைத் தன் ஆசை போல வெளியிட்டதால், மனைவி, பெருந்தன்மையுடன் கணவன் முடிவுக்குக் கட்டுப்படுகிறாள்.

3. தங்கமணிக்கள் எப்போது குறை சொல்லாமல் இருப்பார்கள்?

தங்கமணிக்கள் எப்போதும் குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள் என்பது ஒரு தவறான பொதுமைப்படுத்தலே ஆம். ஒவ்வொரு நாளும் சுமார் 8 மணி நேரம் தூங்கும் போதும், 8 மணிநேரம் வேறு பணிகளில் தங்கமணி ரங்கமணி சந்திக்காமல் இருக்கும்போதும் எந்தத் தங்கமணியும் குறை கூறுவதே இல்லை. மீதி உள்ள சிறிது நேரத்தில் பேசுவது, காலத்தால் சிறிதெனினும் ஞாலத்தின் மாணப்பெரிதாகத் தோற்றமளிக்கிறது அவ்வளவே.

4. குறள் விளக்கம் கூறுக:

செல்லாவிடத்துச் சினம் தீது, செல்லிடத்தும் இல்லை அதனின் தீய பிற.

வள்ளுவர் கூறுகிறார், நம் கோபம் செல்லுபடியாகாத மனைவிகள் இடத்தில் கோபப்பட்டால் அதன் விளைவுகள் விபரீதமாக வீக்கமாக தீப்புண்ணாக முடியும் அபாயம் இருக்கிறது, எனவே அங்கே கோபப்படக்கூடாது. அதே நேரத்தில், அக்கோபத்தை "செல்" இடத்தில் காட்டினால், செல்போன் உடைந்து தூள்தூளாகி பெரும் பணச்செலவு வைக்கும், எனவே "செல்" இடத்தும், இல்லை அதனின் தீய பிற.


5. பழமொழி விளக்குக: மனைவி சொல்லே மந்திரம்.

கோவிலில், பூஜைகளின் போது சொல்லப்படும் மந்திரங்கள் பெரும்பாலும் நமக்குப் புரிவதில்லை. யாரைத் திட்டுகிறார்கள் யாரை வாழ்த்துகிறார்கள் என்பனவெல்லாம், பின்னாள் விளைவுகள் அல்லது விளக்கங்கள் படித்தபின்னே ஓரளவு புரிந்ததுபோல தோற்றமளிக்கும். அதேபோல், மனைவி பேசும்போதும், முதலில் நமக்கு எதுவும் புரியாது. ஆனால், அந்தச் சொல்பேச்சு கேளாமல் விட்டால் முதலில் விளக்கங்களும், அதையும் மீறினால் விளைவுகளும் வரும். இந்த ஒற்றுமையினாலேயே மனைவி சொல்லே மந்திரம் என்று சொல்லப்படுகிறது.
*************************************************************

விடைகளைக் கொடுக்காமல் தனியாகத் தரலாம் என்றுதான் நினைத்தேன். ஆனா இது என்ன தங்கமலை ரகசியமா? எல்லாருக்கும்ம் தெரிஞ்சதுதானே அப்படின்னு போட்டே விட்டேன்.

* குறிப்பு = யாரு கண் பட்டுதோ, எங்கே இருந்து போன் கால் வந்ததோ தெரியல.. தங்கமணி இதைப் படிக்க ஆரம்பிச்சு, அன்பான கட்டளையில் ஆரம்பித்து, மென்மையான மிரட்டல், விபரீதமான வேண்டுகோள் என பரிணாம வளர்ச்சி பெறத் தொடங்கும் முன், நல்லோர்க்கு அழகு சொல்லாமல் செய்தல் என்ற வாக்கின்படி, இந்தத் தொடர் முடிக்கப்படுகிறது.

0 பின்னூட்டங்கள்: