பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - பெனாத்தல் சுரேஷ் - 6

கலைஞர் டிவி நேர்முகத் தேர்வுக்கான கோனார் நோட்ஸ்
- பெனாத்தல் சுரேஷ்


கலைஞர் டிவி ஆகஸ்ட்டில் தொடங்குகிறதாம். நேர்முகத் தேர்வுகள் நடந்து வருகிறதாம். எல்லாத் தேர்வுகளுக்கும் கோனார் நோட்ஸ் இருக்கும் இக்காலத்தில், டிவியில் பணிபுரிவோருக்கு மட்டும் இல்லாதது பினாத்தலாரை உறுத்த, அவர் தயார் செய்தேவிட்டார், முதல் பகுதியை.

எப்படிப்பட்ட கேள்விகளை எதிர்பார்க்கலாம், அவற்றுக்கு எப்படிப்பட்ட பதில்கள் பொருத்தமாக அமையும் என்ற இந்த நோட்ஸைப்படித்து தேர்வைச் சந்தித்தால் வெற்றி நிச்சயம்.

கேள்விகள்:

1. இவற்றுள் எதை தலைப்புச் செய்தியாகப் போடலாம்?

1. தமிழ்நாட்டில் பெருமழை
2. தமிழ்நாட்டில் சாதிக்கலவரம்
3. தமிழ்நாட்டிற்கு புதுத்திட்டங்கள் அறிவிப்பு
4. உதகையில் மலர்க்கண்காட்சி.

பதில்:
நான்குமே தலைப்புச் செய்தியாகப்போட தகுதி வாய்ந்ததுதான்.
1. தமிழ்நாட்டில் பெருமழை, நமது கட்சி ஆளுங்கட்சியாக இருந்தால் - விவசாயிகள் மகிழ்ச்சி என்று உபசெய்தி தரலாம். எதிர்க்கட்சியாக இருந்தால், சாலைகள் பழுதானது, மக்கள் அவதி என உபசெய்தி தரலாம்.
2. தமிழ்நாட்டில் சாதிக்கலவரம் - நமது கட்சி எதிர்க்கட்சியாக இருந்தால் மட்டுமே போடலாம். ஆளுங்கட்சியாக இருந்தால், 4 - உதகையில் மலர்க்கண்காட்சி தலைப்புச் செய்தியாக போடலாம்.
3. புதுத்திட்டங்கள் அறிவிப்பு, இது நமது கட்சி தமிழகத்தில் மட்டும் ஆளுங்கட்சியா, மத்தியிலும் ஆளும் கூட்டணியா என்பதைப்பொறுத்தது. இரண்டில் ஏதாவது ஒன்றாக இருந்தாலும் போடலாம். ஆனால், எப்படிப்பட்ட புதுத்திட்டங்கள் என்பதைப் பொறுத்தும் அமையும்.
4. பதில் 2-ஐப்பார்க்கவும்.


2. இவற்றுள் எந்தத் தொடரை எப்போது ஒளிபரப்பலாம்?
1. பாசப்பிணைப்பு
2. கலையரசி
3. உடுக்கையாத்தா
4. அறிவியல் அறிவோம்

பதில்:
1. பாசப்பிணைப்பு என்ற தொடர், 7 பெண் கதாபாத்திரங்களைக்கொண்டது, அனைவருக்கும் ஒரு காதல், அது தோல்வியடைந்து வேறொருவனைக் கைபிடித்தால் அவனுடைய காதலி / தாய் இவர்களை டார்ச்சர் செய்கிறார் என்ற வித்தியாசமான கதையம்சம் கொண்டது, பிரபல நிறுவனம் தயாரித்து, மார்க்கெட் இல்லாத முன்னாள் நடிகைகளால் நடிக்கப்படுகிறது. இதன் சரியான ஒளிபரப்பு நேரம் திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 1030 மணியிலிருந்து மதியம் 1 மணிவரை உள்ள நான் - ப்ரைம் ஸ்லாட். குடும்ப ஸ்திரீக்கள் பார்க்கும் நேரம்.

2. கலையரசி - அரசியலிலும் பிரபலமாக உள்ள கலைக்குடும்ப வாரிசு தயாரிக்கும் தொடர். திடுக்கிடும் திருப்பங்களைக்கொண்டது - எனவே, இயக்குநர் உள்பட யாருக்கும் என்ன கதை என்றே தெரியாது. பாஸ்ட் பீட்டில் டைட்டில் சாங், மாதாமாதம் மாறும் இயக்குநர்கள் கொண்டது. வேறு வழியில்லை, இதற்கு இரவு 9 மணிக்கு ப்ரைம் ஸ்லாட்தான் தந்தாகவேண்டும். குடும்ப ஸ்திரீக்கள் மட்டுமன்றி, வேலை செல்லும் ஸ்திரீக்களும் வீட்டில் வந்து செட்டிலாகிவிடும் நேரம்.

3. கொஞ்ச நாள் மார்க்கெட்டில் இருந்த பழைய நடிகை நோன்பும் விரதமும் இருந்து நடிக்கும் அம்மன் சீரியல். பல வித்தியாசமான குணம் உள்ள அம்மன்களையும் (கோடு போட்டால் தாண்டமாட்டார், பச்சைப்புடவை கட்டினால் அருள்பாலிக்க மாட்டார், ஒரு ஊரைத்தவிர மற்றொரு ஊரைப்பார்க்கமாட்டார்), அதைவிட வித்தியாசமான குணங்களைக் கொண்ட கதாநாயகிகளையும் (அம்மன் பக்தி இருந்தாலும் அடிக்கடி கோவித்துக்கொள்வார்), உலகையே ஆள எண்ணும் வில்லன்களையும் கொண்ட பக்தித் தொடர்(?!). இதற்குச் சரியான நேரம் ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம். இளவட்டங்கள் சினிமா பார்க்கப்போய்விட்டதால் பெரிசுகள் மட்டுமே வீட்டில் இருக்கும் நேரம்.

4. இப்படி ஒரு தொடரை ஒளிபரப்பவேண்டிய அவசியம் என்ன? சரி, தலைமை உறுதியாக சொல்லும் பட்சத்தில், பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை இரவு 1 மணியிலிருந்து 1.10 வரை ஒளிபரப்பலாம்.

3. புதுப்பொலிவுடன் என்றால் அர்த்தம் என்ன?

பதில்:
பல அர்த்தங்கள் உண்டு. டி ஆர் பியில் விழுந்துவிட்ட சீரியலை ஸ்பான்சரோ, டைரக்டரோ நடிகர்களையோ மாற்றி, இப்பவாவது பாருங்களேன் எனச் சொல்லவைக்கும் முயற்சி.

4. ஒரு ஹிட்டான தமிழ் சினிமாவை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம்?

பதில்:

என்னென்னவோ செய்யலாம். கொத்துக்கறி போட்டு, இப்படி பல நிகழ்ச்சிகள் நடத்தலாம்:

1.பாடல் காட்சிகளை வைத்து - புதுப்பாடல், மனதில் நின்ற ராகம், ---இசையமைப்பாளரின் ராகங்கள், __ பாடகரின் and / or பாடகியின் பாடல்கள், ___நடன இயக்குநரின் கைவண்ணங்கள், நீங்கள் கேட்ட பாடல், போன்மூலம் கேட்ட பாடல், லெட்டர் எழுதிக்கேட்ட பாடல் என்று ஒரு 100 ஆப்ஷன் இருக்கிறது.

2.நகைச்சுவைக்காட்சிகளை வைத்து - காமடி ப்ரோக்ராம், நகைச்சுவைக்காட்சி, என்றும் சிரிப்பு, மறுபடியும் சிரிப்பு, சிரிப்போ சிரிப்பு என ஒரு 100 ஆப்ஷன்.

3. சண்டைக்காட்சிகளை வைத்து சூப்பர் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள், ______ சண்டைக்காட்சி நிபுணரின் பேட்டி என பல ஆப்ஷன்கள்

4. செண்டிமெண்ட் காட்சிகளை வைத்து சூப்பர் காட்சிகள், படப்பார்வை, திரைக்கண்ணோட்டம் என பல ஆப்ஷன்கள்.

5. எல்லாக்காட்சிகளையும் வைத்து டாப் டென் பாடல், டாப் டென் படங்கள், டாப் டென் சண்டை, டாப் டென் காமெடி, டாம் டென் செண்டிமெண்ட் என விளம்பரம்.

6. ஆடி அடங்கியபின், தொலைக்காட்சியிலேயே முதல் முறையாய் என இதுவரை காட்டி இராத 2ஏ சீன்களையும் சேர்த்து முழுப்படம்.

7. விடுமுறை இல்லாத வார இறுதிகளில் மீண்டும் இதே படத்தை மீண்டும் மீண்டும் காட்டலாம்.

இவ்வாறாக, இரண்டரை மணிநேரப்படத்தை வைத்து, 2500 மணிநேரம் ஏர்டைம் செலவழிக்க முடியும்.

5. மக்கள் பேச்சு அரங்கம் நடத்த வேண்டியவரின் தகுதிகள் யாவை?

பதில்:

1. பேசினால் சிரிப்பு வருமோ இல்லையோ, பார்த்தாலே சிரிப்பு வரவேண்டிய ஆளாக இருத்தல் அவசியம்.

2. சோகமான நிகழ்வுகளைப்பார்த்தால் மூன்று மில்லிசெகண்டுகளுக்குள் கண்ணிலிருந்து நீர் வரவேண்டும்.

3. உண்டி குலுக்கிய அனுபவம் இன்றியமையாதது.

4. சார் சார் என்று கூப்பிடுவோரை ஊக்குவித்தல், பழைய சினிமாப்பாட்டுக்களை பாடுவோரை ஊக்குவித்தல், விவாகரத்து ஜீவனாம்சம் பற்றிப்பேசும் நான்கு வயதுக்குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்தல், அரைலாஜிக் அழகேசன்களுக்கு தனியிடம் கொடுத்தல் ஆகியவற்றைத் திறம்படச் செய்தல் அவசியம்.

5. உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், இயற்கைச்சூழல்களால் பாதிக்கப்பட்டோர், இவற்றில் யாருக்கு முன்னுரிமை கொடுத்து அழுவது என்பதில் தெளிவு வேண்டும்.

0 பின்னூட்டங்கள்: