பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - பெனாத்தல் சுரேஷ் - 2

காட்டுவழி போற தேவ் நீ கவலைப்படாதே!
- பெனாத்தல் சுரேஷ்


பசுமை! பசுமை! பார்க்கும் இடமெல்லாம் பசுமை!

நகர வாழ்க்கையிலேயே பழக்கப்பட்டிருந்த தேவுக்கு காட்டின் பசுமை புது உற்சாகம் அளித்தது. தனியாக காட்டுவழியில் செல்வதில் பயம் இருந்தாலும் இயற்கை அவன் மனதைக் குளிர்வித்தது. தன்னைத் தேடித் துரத்துபவர்கள் இங்கேயும் தொடர மாட்டார்கள் என்பதால் இலகுவாக உணர்ந்தான்.

பிரச்சினைகள் துரத்துவதால் எந்த வாகனமும் கிடைக்காமல் நடந்தே ஆகவேண்டும். இன்று இரவுவரை நடக்கவேண்டுமா? ஏன் மேலேகூட ஆகலாம். அதிலும் இந்தக் காட்டுப்பாதையில் யானைகள் திரியுமாம். "என்ன ஆனாலும் பாத்துக்கலாம்" என்ற முரட்டுத் தைரியத்துடன் தேவ் நடந்தான்.

பாதை ஊகிக்க முடியாததாக இருந்தது. சரேலேன ஏற்றம் குபீரென இறக்கம்!

"அம்மா.. ம்மா.." ஈனஸ்வரமாகக் குரல் கேட்டதும் தேவ் அதிர்ந்தான். நல்லவேளை..மனிதக் குரல்தான்!

4 அடிதான் குழி.. குழிக்குள் ஒரு இளைஞன். எப்படி விழுந்தானோ!

"இங்கே பாருங்க, கை கொடுங்க.."

வெளியே வந்ததும் தண்ணீரை எடுத்து முகத்தில் அடித்துக்கொண்டான் அந்த இளைஞன். "மிக்க நன்றி ...."

"என் பெயர் தேவ்.. அதனாலென்ன பரவாயில்லை"

"நான் அருண். இங்கே காட்டுக்குள் மாட்டினால், சில நாட்கள்கூட ஆகலாம் உதவி வர.. என் அதிர்ஷ்டம்தான் நீங்கள் உடனே வந்தது."

"என்ன செய்றீங்க அருண்?"

"இங்கதான் கிராமத்தில் ஒரு வேலையா வந்தேன்.. திரும்பிப் போகணும், இன்னும் உத்தரவு வரலை. சரி வெட்டியா இருக்கறதுக்கு ஊராச்சும் சுத்தலாமே ன்னு வந்தேன், விழுந்தேன்" வசீகரமான சிரிப்பு.

"நானும் ஏறத்தாழ அப்படித்தான்.. கிராமத்துல பெரிய்வர் இருக்காரில்ல, அவர்கிட்ட ஒரு தகவல் சொல்லணும், அதுக்குதான் வந்தேன்"

"இந்தக் காலத்தில, ஆள் மூலம் தகவலா? புறா அனுப்ப வேண்டியதுதானே!"

"எந்தக் காலமா இருந்தாலென்ன? சில முக்கியமான விஷயம் நம்பகமான ஆள் மூலம் அனுப்பறதுதான் இன்னிக்கும் பாதுகாப்பு"

"யாருக்கு? என்ன தகவல்?"

"அதை உன்கிட்ட சொன்னா நானென்ன நம்பகமான ஆள்?"

"அது சரி.. " மறுபடி அதே சிரிப்பு.

பாதையின் கடுமையும் பயமும் காணாமல் போய்விட்டது - கூட ஒரு ஆள் இருந்ததால். அவ்வப்போது தூரத்தில் கேட்ட சில மிருக ஒலிகள் முன்போல பயமுறுத்தவில்லை.

"இங்கேயெல்லாம் தனியாக வந்தா மகிழ்ச்சி இல்ல! காதலியோட வரணும்"

"ஓ, தேவ் காதல் வேற பண்றாரா?"

"ஆம்.. இப்போதுதான் கொஞ்ச நாளா! கண்டதும் காதல்!"

"சரி தகவலைத்தான் சொல்ல மாட்டே, காதலையாச்சும் சொல்லலாமில்ல?"

"அதுல ஒரு பிரச்சினையும் இல்ல.. சொல்றேன்..

"எனக்கு காஞ்சிபுரம் பக்கத்துல ஒரு கிராமம். பெரும்பாலும் காஞ்சிபுரத்துலதான் இருப்பேன். அங்கே நாங்க நண்பர்கள் நாலஞ்சு பேரு வேலை வெட்டியில்லாம ராஜவாழ்க்கை வாழ்ந்துகிட்டிருந்தோம். அப்பதான் என் நண்பன் ஆதி ஒரு வேலை சொன்னான்"

"காஞ்சிபுரம், ஆதியா?"

"தெரியுமா? பிரபலமான ஆளுதான்"

"இல்ல தெரியாது.. நீங்க மேல சொல்லுங்க"

"அவங்க அப்பாகிட்ட ஒரு தகவல் சொல்லணுமாம்.. என்னை அனுப்பினான்.. அவங்க அப்பா ஊருக்கு வந்து பாத்தா ஒரே களேபரம்! அவரு தஞ்சாவூர்லே பெரிய பசையுள்ள புள்ளி..பெரிய புள்ளின்னாலே நாலு எதிரிங்க, நாலு நண்பர்ங்க இருப்பாங்க இல்லியா? அவரைப் பாக்கவே விடல"

"அப்புறம்?"

"வேறென்ன, எப்படியாவது விஷயத்தை ஆதி அப்பாகிட்ட சொல்லிடணும்னு ஒரு தப்பு பண்ணிட்டேன்"

"என்ன தப்பு?"

"பொய் சொல்லி உள்ளே நுழைஞ்சுட்டேன்.. விஷயத்தை என்னவோ ஆதிஅப்பாகிட்டே சேத்துட்டேன்.. அவரோட நண்பர்கள், நான் என்னவோ அவரைக் கொலை செய்யத்தான் பொய் சொன்னதா நினைச்சுகிட்டுத் துரத்தறாங்க. அவரோட எதிரிங்களுக்கு, நான் அந்த ஆளை சந்திச்சதுல கடுப்பு.. என்னைப் போட்டுத் தள்ளிடணும்னு துரத்தறாங்க!"

"காதல்னு சொன்னீங்களே!"

"வரேன், வரேன்.. கிரமப்படிதானே வரமுடியும்? துரத்துனாங்களா? ஒளியறதுக்கு இடம் தேவைப்பட்டுச்சு. அப்பதான் ஆதியோட தங்கையைப் பாத்தேன்.

"பாத்ததுதான்.. முதல் பார்வையிலேயே காதல்னு முன்னாடி சொல்லியிருந்தா நம்பியிருக்கமாட்டேன்.. அருண் நீ என்ன நினைக்கிறே?"

"காதலுக்குக் கண் இல்லைன்னு"

"கிண்டலா? நீ யாரையும் காதலிக்கலையா?"

"இல்லைப்பா.. நிறைய வேலைகள்.. கடமைகள்.. அதெல்லாம் முடிஞ்சபிறகுதான் யோசிக்கமுடியும்! சரி அப்புறம்?"

"அவங்ககிட்டே எல்லாத்தையும் விலாவாரியாச் சொன்னேன்.. அவங்க என்ன சொன்னாங்க, சரி நீங்க கொஞ்சநாள் தலைமறைவா இருங்க, கிராமத்துக்குப் போயிருங்க..

"எனக்குத் தெரிஞ்சவர்தான் கிராமத்துப் பெரியவரு, அவருக்கு ஒரு கடுதாசி கொடுத்தா அவர் உங்களை இப்ப உள்ள பிரச்சினைலே இருந்து காப்பாத்துவார்"னு.. அதான் இங்க வந்திருக்கேன்..

பேசாமல் கொஞ்ச தூரம் சென்றார்கள்.. அப்புறம்தான் உறைத்தது தேவுக்கு..

"கில்லாடி அருண் நீ.. கொஞ்சம் கொஞ்சமா பேசி என்கிட்டே இருந்தே விஷயத்தையெல்லாம் கறந்துட்டியே!"

"சேசே.. கவலைப்படாதே.. நானும் நம்பகமான ஆள்தான்.. அதிலும் என்னை நீ காப்பாத்தி வேற இருக்கே"

"இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும்?"

"வந்துட்டோம் ஏறத்தாழ!.. அதோ புகை தெரியுதா?"

புகை தெரிந்தது, ஆனாலும் புகையின் ஆதாரத்தை நெருங்குவதற்குள் மாலை மங்கத் தொடங்கிவிட்டது.

"இதான் கிராமத்துப் பெரியவர் வீடு. நீ போய் உன்னை அறிமுகப்படுத்திக்கோ.. நான் துணியெல்லாம் மாத்திகிட்டு வரேன். எதாச்சும் பிரச்சினைன்னா தாராளமா நான் அருணோட நண்பன்னு சொல்லிக்க"

பெரியவர் என்ன காரணமோ தெரியவில்லை, கோபமாக இருந்தார்.

"அய்யா வணக்கம்.. என் பெயர் தேவ், காஞ்சிபுரத்திலிருந்து வந்திருக்கேன்"

"இவந்தானா தேவ்.. இவனை உடனே பிடிச்சு சிறைலே போடுங்கடா. தஞ்சாவூர்லே என்ன பண்ண நீ? கொலை பண்ண முயற்சி பண்ணிட்டு ஓடிவந்துட்டியா? எங்களுக்கு வேற வழியிலே விஷயம் வராதுன்னு நினைச்சயா?"

நான்கு பேர் உடனே தேவைச் சூழ்ந்து அவனைப் பிடிக்க முற்பட, உடை மாற்றிக்கொண்டு உள்ளே நுழைந்த அருண் சொன்னான்..

"கொடும்பாளூர் பெரிய வேளாரே! அருண்மொழி வர்மன் ஆணையிடுகிறேன். வந்தியத் தேவர் நம் நண்பர். அவரைப் பிடிக்க முயற்சி செய்யாதீர்கள். அவர் என் தமக்கை குந்தவை பிராட்டியாரிடம் இருந்து எனக்கு முக்கியமான தகவல் கொண்டு வந்திருக்கிறார்"

0 பின்னூட்டங்கள்: