பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - இளவஞ்சி - 4

என்ஃபீல்ட் புல்லட்
- இளவஞ்சி

வாழ்க்கைல நீங்க என்னைக்காவது சொர்க்க ரதத்துல போயிருக்கீங்களா? அட, கடைசியா போறப்ப போகப்போற அந்த ரதம் இல்லைங்க! வாழறப்பவே போய் வந்து அனுபவிக்கற சொர்க்கம். சிலருக்கு பென்ஸ் காராக இருக்கலாம். சிலருக்கு கான்கார்ட் பயணம் வாய்ச்சிருக்கலாம். நம்மூரு கோவை-பெங்களூர் KPN ஸ்லீப்பர் கோச்சாகக்கூட இருக்கலாம். என்னைக் கேட்டீங்கன்னா அதை நான் புல்லட் ஓட்டிய காலங்களாகத்தான் சொல்லுவேன்.

புல்லட்டை ஓட்டக்கூட வேண்டாம்! சும்மா பின்னாடி உட்கார்ந்து போகயிலயே கூட அந்த சொகுசை உணரமுடியும். ஆமாங்க! ரொம்பப் பழசான டிசைன் தான். யானை கட்டி தீனிபோடற வேலைதான். பார்க்க சின்னதா அழகா துறுதுறுன்னு இல்லாம தாட்டியா அங்கங்க புடைப்புகளுடன் ஒரு மாதிரியான தட்டையான டிசைன் கொண்ட வண்டிதான். ஒத்துக்கறேன்! ஆனால் இதையெல்லாம் ஒத்துக்கிட்ட பிறகும் எனக்கு என்னவோ அந்த வண்டி அலாவுதீன் ஒருவித அதீத விருப்பத்துக்கு ஆட்பட்டு ஒரு நாள் பொழுதுபோகாம குறுந்தாடியை சிக்கெடுத்துக்கிட்டு இருந்த பூதத்தை கெளப்பிவிட்டு மாங்குமாங்குன்னு வேலை வாங்கி அவனே அவனுக்குன்னு உருவாக்கிக்கிட்ட ஒரு வாகனம்னும், லைலாவோட ரொமாண்டிக்கா இருக்கற காலங்களில் எல்லாம் பறக்கும் கம்பளத்தை ஒரு ஓரமா தூக்கி கடாசிட்டு பூதம் பார்த்து பொகைவிட புல்லட்டுல டபுள்ஸ் போகறதுக்காக கண்டுபுடிச்ச ஒரு வண்டிங்கறதாத்தான் மனசுல இருக்கு! இல்லை ஒருவேளை புல்லட்டைத்தான் காலப்போக்குல அலாவுதீனின் ரத்தனக்கம்பளமாக ஏத்திவிட்டுட்டாங்களோ என்னவோ!? :)

புல்லட்டு பார்க்கத்தான் பெரிய வண்டியே தவிர ஓட்டறது அத்தனை சுலபங்க. ஒரு வகைல பார்க்கப்போனா யானைய பழக்கற மாதிரிதான். ரெண்டுக்குமே குழந்தை மனசு! மொதல்ல பார்க்கறப்ப கொஞ்சம் மிரட்சியாத்தான் இருக்கும். கொஞ்சமா பழகிட்டு நாம என்ன சொன்னா வண்டி பதிலுக்கு என்ன செய்யும்னு நூல் புடிச்சிட்டா அப்பறம் நாமதான் ராசா. ஸ்டார்ட் செஞ்சமா... அம்பாரிமேல ஒரு கெத்தா ஒக்கார்ந்தமா... இடமும் வலமும் மாதம் மும்மாரி பொழியுதான்னு கித்தாப்பு லுக்கு விட்டமான்னு போய்க்கிட்ட்ட்ட்ட்ட்டே இருக்கலாம். ஸ்டார்ட் செய்யறதுக்குக்கூட முரட்டுத்தனமா எதுவும் சிரமப்பட வேண்டாம்! நீளமான மெட்டல் கீசெய்ன்ல ஒரு சாவியை பாட்டரிக்கும் இன்னொரு சாவியை பெட்ரோல் டாங்க்குக்கு அடியிலும் பொருத்தி, க்ளச்சுக்கு பக்கத்துல இருக்கற சின்ன ஆம்ஸ்மீட்டர் க்ளச்சை லைட்டா அழுத்தி கிக்கரை ஒருமுறை மிதிச்சா "விசுக்"குன்னு ஒரு சவுண்டு கேக்கும். ஆம்ஸ்மீட்டரு 0 காட்டும். அப்பறம் லைட்டா கிக்கரை உதை கூட இல்லை! ஒரு செல்ல மிதி! "தட்தட்தட்.."ங்கற அந்த இன்னிசை ஆரம்பிச்சிரும்.

இப்ப வர்ற புல்லட்டு வண்டிகளுக்கு கியரை லெப்ட் சைடுக்கு மாத்திட்டாங்க. பழைய வண்டிகளுக்கு ரைட் சைடுல இருக்கும். மேல முதல் கியரு. அப்பறம் கீழாக்க மூணு கியரு. மெயின் கியர் லிவருக்கு மேலாக்கயே சின்னதா ஒரு குட்டி கியர் லிவரும் இருக்கும். இரண்டாம் மூன்றாம் நான்காம் கியர் சேஞ்சுகளுக்கு மெயின் கியர் லிவரை கீழாக மிதிக்க மிதிக்க அந்த குட்டி லிவர் மேல் நோக்கி நகரும். கியரை குறைக்க க்ளச்சைப்பிடித்து அந்த குட்டி லிவரை மெதுவாக அழுத்தினால் போதும். "க்ளக்" என்ற சத்தத்துடன் மூன்றாம் கியருக்கு நகரும். ஒரு மாதிரியான சிக்கலான டிசைன் தான். ஆனால் பழகிவிட்டால் கியர் மாற்றும் நேரங்களில் எல்லாம் உங்கள் வலது காலின் அசைவுகளில் ஒரு வித பாலே நடன நளினத்தை உணர முடிய்ம். ஆனா இன்னொன்னையும் ஞாபகம் வைச்சுக்கிடுங்க. இதெல்லாம் ரெகுலரா வண்டியை கவனிச்சு சமத்தா வைச்சுக்கிட்டா! பலகாலம் கண்டுக்காம நல்லா வேலை மட்டும் வாங்கிக்கிட்டு இருந்தா திடீர்னு யானை என்னா செய்யும் தெரியும்ல?! :)


புல்லட்டுக்கு சரியாக அந்தக் காலத்தில் ஜாவா கோலோச்சிக்கொண்டு இருந்தது. புல்லட்டு என்பது மிலிட்டரிமேனுங்க, போலீஸ்காரருங்க,கிராமத்து பணக்கார விவசாயிங்க போன்ற ஆட்களுக்கான, ஒருவித பொறுப்பை உணர்த்தும் வண்டியாகவும், ஜாவா என்பது இளமையை பறைசாற்றும் வாகனமாகவும் இருந்திருக்கக்கூடும். நம்ப தருமிசார் கூட அவர் கல்லூரி முடித்த காலங்களில் ஜாவால தான் படம் போட்டிருக்காப்புல! :) இந்த இரண்டு வண்டிகளுக்கான சத்தத்தில் இருந்தே இந்த குணாதிசியங்களை உணர முடியும். புல்லட்டின் "தட்தட்தட்..." என்பது ஒருவித ரிதத்துக்குள் கட்டுப்பட்ட, பொறுப்பை ஏற்றுக்கொண்ட கடமைக்கான மிடுக்கையும் உணர்த்துகிற விதமாகவும், ஜாவாவின் 'ட்டர்ட்டர்ட்டர்...." என்பதான ஒரு கட்டுக்குள் அடங்காத, பீட்டுகள் தவறும், சரவெடி சத்தம் இளமைக்கான அலட்சியத்தையும், கவர்ச்சியையும் பறைசாற்றுவதாக இருக்கும்.

எங்கப்பாரு 80களின் ஆரம்பத்துல இன்ஸ்பெக்டரா பதவி உயர்வு வாங்குனப்ப ஆசை ஆசையா வாங்குன வண்டி! அப்ப செவப்பு கலர்ல இருந்தது. பெட்ரோல் டாங்கு மேல என்ஃபீல்டின் ட்ரெடிஷனல் லேபில் இரும்புத் தகட்டுல பொருத்தியிருக்கும். எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து எங்கப்பாவையும் புல்லட்டையும் பிரிச்சுப்பார்க்க முடிஞ்சதே இல்லை. காலைல நாங்க பள்ளிக்கூடம் கெளம்பறதுக்கு முன்னாடியே ஸ்டேஷனுக்கு கெளம்பிருவாரு. உடுப்பை மாட்டிக்கிட்டு ச்சும்மா பளபளாங்கற பெல்ட்டையும், துணில போட்ட பாலீஷ்ல டாலடிக்கற கருஞ்சிவப்பு நிற பூட்ஸையும் போட்டுக்கிட்டு தொப்பியை பெட்ரோல் டாங்க் கவருக்குள்ளாக வைச்சுக்கிட்டு செண்டர் ஸ்டாண்டு போட்டிருக்கற வண்டிக்கு ரெண்டு சாவியையும் மாட்டி ஆம்ஸ்மீட்டரை 0ல வைச்சு லைட்டா ஒரு மிதி. விசுக்குன்னு ஒரு சவுண்டு. இதை கேக்கும்போதே எங்க மூஞ்செல்லாம் ஒரு பூரிப்பு பரவும். எங்கப்பாரு எடுப்பா கம்பீரமா ஸ்டேசனுக்கு போறப்புலங்கறது ஒன்னு. அவரு கெளம்பிட்டாருன்னா நாங்க இஷ்டம்போல அடிச்சுக்கிட்டு ஆட்டம போடலாங்கறது இன்னொன்னு! லைட்டா இன்னொரு மிதி. உடனே எங்க காது அந்த சத்தத்துக்கு ரெடியாகிரும். மூன்றாவதாக அந்த பூமிதிப்பதைப் போன்ற ஒரு கிக். அவ்வளவுதான்! "தட்தட்தட்..." அப்பறம் லைட்டா ஒரு தள்ளு. வண்டி ஸ்டாண்டை விட்டு இறங்கி கரெட்டா ஒரு அரையடி முன்னால நிக்கும். ஏறி உட்கார்ந்து முதல் கியருக்கான "க்ளக்". அப்பறம் தெருமுக்குல திரும்பி நாலாவது கியருக்கு ஆக்ஸிலரேட்டரை முறுக்கும் வரை அந்த சத்தம் ரிதமிக்காக அப்படியே தேயும்! அப்பறம் நாங்க ஹிப்... ஹிப்... ஹிர்ரே தான்! :)

அந்தக் காலத்துல எங்க காலேஜில ரெண்டே பேருதான் புல்லட்டு வச்சிருந்தோம். அதுல ஒருத்தரு என்னைக்காவது ஒரு நாள் காலேஜ் பக்கமா போற வழில தெரியாத்தனமா வந்துட்டா பஸ்டாண்டு கடைல டீக்குடிக்க மட்டும் வண்டியை நிறுத்துவாப்புல. நான் படம் போடறதுக்குன்னு மட்டுமே காலேஜிக்கு ரெகுலரா போகறவன். கோவைல இருந்து 30 கிலோமீட்டரு காலேஜ். தெனமும் வண்டிக்கு பெட்ரோல் போட்டுக்கிட்டு போகமுடியாதுன்னாலும் எப்பவெல்லாம் பெட்ரோலுக்கு காசுதேத்த முடியுதோ அப்பவெல்லாம் அவினாசி ரோட்டுல நான் மட்டும் தனிய சும்மா ஜிவ்வுன்னு ஓட்டிக்கிட்டு போவேன். சிட்டி லிமிட்டை தாண்டிட்டு ஒரே கியருல்ல சும்மா நூல் புடிச்சாப்புல 60வதுல போனம்னா அந்த "தட்தட்தட்..." சத்தம் கொஞ்சம் வேகமான சுதில சீரான தாளகதில தலைக்குமேல டால்பி சிஸ்டத்துல ஹெலிக்காப்டரு போகற எபெஃக்டைக் கொடுக்கும்! 50 கிலோ உடம்புல அந்தக்கால பேஷனான பேகிபேண்ட்டு படபடக்க, டக்-இன் பண்ணாத 42 சைசு தொளதொள சட்டை முதுகுக்கு பின்னாடி காத்து ரொம்பி புட்டுனு நிக்க, சுருள்சுருளான பங்க் ஹேர்ஸ்டைலு ( சொன்னா நம்புங்கப்பு... ஒரு காலத்துல நானும் சிகையலங்காரமெல்லாம் செஞ்சதுண்டு! ) பொடனில சிலுசிலுக்க அப்படியே மனசுல அர்னால்டு சிவனேசன்னு நினைச்சுக்கிட்டு போகறதுதான்! :)

இந்த வண்டி என் கைக்கு வந்ததே பெரிய கதைங்க! நான் காலேஜ் மூன்றாமாண்டு படிக்கையில் எங்கப்பாருக்கு மீண்டும் வேலை இடமாற்றமானது. கடலூர்ல இருந்து தூக்கி ஊட்டிக்கு போட்டாங்க. இதுக்கு பல வருஷம் முன்னாடியே நாங்க கோவைல செட்டிலாகிட்டோம். அப்பத்தான் வண்டி மீண்டும் வீட்டுக்கு வந்தது. அஞ்சாயிரம் ரூவா செலவு செஞ்சு புத்தம் புதுசா! மெட்டாலிக் சிமெண்ட் கலர் பெயிண்ட்டிங்ல. அவருக்கு பலகாலமா ஜீப் இருந்ததாலும் வண்டிய அதிகமா எடுக்கறதில்லைங்கறதாலும் சாவிய எங்ககிட்ட கொடுத்தாரு. வண்டி கிடைச்சதும் நான் செஞ்ச மொதல் வேலை மெக்கானிக்குகிட்ட எடுத்துக்கிட்டு போய் சைடுல இருந்த அந்த ரெண்டு இரும்பு பீரோக்களையும் கழட்டி எடுத்துக்கிட்டு வந்ததுதான்! அப்பவே அவருக்கு தெரிஞ்சிருக்கனும். இவனுங்க வண்டிய ஒரு வழி செய்யப் போறாங்கன்னு! இருந்தாலும் வயசுப்பசங்க. ஸ்டைலாத்தான் ஓட்டுவானுங்கன்னு விட்டுட்டாரு. மொத்தமா என் இஷ்டத்துக்கு வண்டிய மாத்த வசதி இல்லைன்னாலும் எனக்குன்னு பிடிச்ச அந்த டெர்மினேட்டர் 2 ஸ்டைல் ஹேண்டில் பார் மாத்தியும், சீட்டை கழட்டி இன்னும் கொஞ்சம் குழிவா வெட்டி வளைச்சு லெவல் இறக்கியும் ஒருவழியா ச்சாப்பர் ஸ்டைலுக்கு கொண்டுவந்தேன்.

புல்லட்டுனான எனது வாழ்வு மிக இனிமையானது. பட்டப்படிப்புக்கு அப்பறம் ஒருவருசம் நானும் மேல்படிப்பு படிக்கறேன்னு குப்பை கொட்டியபோது புல்லட்டு மேலான எனது ராஜபவனி தினத்துக்கும் என்றானது. என்னைப் பற்றியும் எனது திறமைகளைப் பற்றியுமான இல்லாத பொல்லாத இமேஜை எல்லாம் எனக்கு கொடுத்தது எனது புல்லட்டு தான். கேண்டீனிலும் டீக்கடைகளுக்கு முன்னாலும் வண்டியை விட்டு இறங்காமலேயே கால்நுனியில் சைடு ஸ்டேண்டு போட்டு அரை வட்டமிடித்து இறங்கி ஒரு டீயும் முட்டைபப்ஸும் சொல்லிட்டு அதை அரைமணி நேரமாக தின்னுக்கிட்டே யமாஹாக்களுக்கும் கேபிக்களுக்கும் நடுவில் தனித்துவமாக ஒயிலாக சாய்ந்து நிக்கும் என் வண்டியை ரசிப்பதில் எனக்கு ஒரு பெருமை. அதனை கடந்து வரும் பசங்களெல்லாம் வண்டியை ஆசையோடு பார்த்துவிட்டு பிறகு என்னை ஒரு பொகையோடு பார்ப்பார்கள் என்பதில் ஒரு கர்வம். வண்டியின் குழிவான சீட்டில் அமர்ந்து பெட்ரோல் டாங்கின் மீது கையை மடக்கி வாகாக சாய்ந்து கடந்து செல்லும் எவளையாவது பிடித்து வைத்து கடலை போடுவதில் பேரானந்தம்! ( பிகர்கள்: "எப்படிடா இந்த வண்டிய ஓட்டற? காத்தோட பறந்துட மாட்டியா?" தூர நின்னு சிங்கள் டீயும் தம்முமாய் பொகையும் கடுவன்ஸ்: "அடடா! என்னமா வறுக்கறான்?! தொழில் தெரிஞ்சவனப்பா!!" :) )

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டனும்னு ஒரு கலைக்கூத்தாடியாக வாழ்ந்த காலமது! நண்பர்ளுடன் கூத்தடிப்பதே பிரதானம். மக்கா ரசிக்கனுங்கறதுக்கா எந்த நிலைக்கும் போவதுண்டு. ஓசில ஊத்திக் கொடுப்பாங்கங்கறதுக்காக பணக்கார மக்களுடன் சேர்த்து வாட்டர்கேம்ஸ்சுக்கு அப்பறம் அவனுங்க காரை எடுத்துக்கிட்டு ஊர்வலம் வந்து ரோட்டுல கிடைக்கற பெயர்ப் பலகைகளையெல்லாம் அள்ளிக்கிட்டு வர்றது( இன்றைய ஸ்பெசல், ஆட்கள் வேலை செய்கிறார்கள், நாய்கள் ஜாக்கிரதை, 2 - பேரூர் to சிட்ரா... ), தேமேன்னு தொங்கற போஸ்ட்பாக்சை கெளப்பறது, டாபால நிக்கற லாரிகள்ல கொத்தா சாவிய லவட்டறது, காலேஜுக்குள்ள நடுராத்திரில கிளீனருக்கு ஊத்திவிட்டு காலேஜ் பஸ்சை ஓட்டறது, ஒருதாரு வாழைப்பழம் வாங்கிக்கிட்டு லேடீஸ் ஹாஸ்டலுக்குப்போய் ரூம் ரூமா லைட்டடிச்சு "எங்களுக்காடி பழம் கொடுத்தீங்க.. இந்தா வாங்கிக்குங்க..." வாழைப்பழம் வீசறது (கோவைல பழம் கொடுக்கறதுன்ன லவ் பெயிலியரு..) இப்படி சின்னச்சின்ன சமுதாயக்குற்றங்களை குறும்பு செய்யறதா நினைச்சு செஞ்சுக்கிட்டு இருந்த காலமது.

அந்தக் கும்பல்ல தான் பாலாவும் இருந்தான். எங்கப்பாவும் அவனோட அப்பாவும் ஒரே ரேங்குல வேலை பார்க்கறவுங்க. ஒரு மாதிரி பேமிலி பிரெண்ட்ஸ். கடைசி வரைக்கும் எங்க கூத்தையெல்லாம் வீட்டுக்கு தெரியாமத்தான் காத்துவந்தோம். அப்பவே அவன் மாருதி 1000ல தான் வருவான். பண விசயத்துல அவனுங்களை அடிச்சிக்கமுடியாத குறையை அவனுங்களை விட ரவுசு விடறதுல ஈடுகட்டி என் ஈகோவை சமாளிச்சுக்கிட்டு இருந்தேன். இந்த ரவுசுகளுக்கு பின்னால் படிப்பு, குடும்பம், மரியாதை,சுயகவுரவ்ம் என எதனையும் அறியாத மனசு இருந்தது. இந்த மனசு இருந்தால் மட்டுமே பசங்க காசுல ஆடிவிட்டு அந்த குறையை நிவர்த்திக்க கூத்தடித்து வாழ முடியும்! :) பெரும்பாலும் எங்க ஜமா CITய தாண்டி இருக்கற காலி கிரவுண்டுலதான் நடக்கும். தீர்த்தவாரிகளன்று ஏதாவது மெஸ்சுல முட்டை பரோட்டா, ரோஸ்ட்டு,சிப்சு, வாழைப்பழம்னு மொத்தமா கட்டிக்கிட்டு வீடெடுத்து படிக்கறதுக்கு ஹட்கோல தங்கியிருக்கற பசங்க வீட்டுல டெண்ட்டு போடறதுதான். மற்ற நாட்களில் வெட்டிக்கதைகளாக பேசி புகைகளாக ஊதி 10 மணிக்கா கெளம்பி வேற வழியில்லாம வீட்டுக்கு கெளம்புவோம். ஒருநாள் இப்படித்தான் மழைல சீக்கிரமா கெளம்பலான்னு எல்லாரும் வண்டிகளை எடுத்தானுங்க. பேட்டரில தண்ணி புகுந்து என் வண்டி கெளம்புவனாங்குது. "நிம்மி.. ஸ்ட்டார்ட்டாயிடுன்னு" படிக்காதவன் ரேஞ்சுல கெஞ்சிப்பாத்தும் வேலைக்காகலை! காரை திருப்பிக்கிட்டு வந்த பாலா "ஏண்டா, இந்த ஓட்ட வண்டிய தூக்கிப் போட்டுட்டு வேற வாங்கக்கூடாதா?"ன்னு கேட்டான். எனக்கு சுருக்குன்னு பட்டுச்சு. அதுவரைக்கும் என் வண்டியை ஓட்டைன்னு நினைச்சுக்கூட பார்த்ததில்லை. அவன் வசதிக்கு நான் இல்லைங்கறதும், அந்த மழைல கிக்கரை மிதிச்ச கடுப்பும், புதுவண்டி வாங்கமுடியாத இயலாமைன்னும் எல்லாம் சேர்ந்து வாயில "எங்கப்பனுக்கு இந்த ஓட்ட வண்டிய வாங்கிக் குடுக்க வக்கிருக்கறதே பெருசு! பேசாம போவியா!" ன்னுட்டேன். "ம்.. பொழைக்கத் தெரியாத ஆளுடா உங்கப்பா.."ன்னு சொல்லிட்டு சிரிச்சுக்கிட்டே கெளம்புனான். அதன்பிறகு வண்டிய மேடுவரைக்கும் தள்ளி பள்ளத்துல கியரைபோட்டு ஸ்டார்ட்டாகி ஒரு வழியா வீடுவந்தேன்.

சம்பள நாளைக்கு முதல்வாரத்தின் ஒரு நாளிலும் என்றாவது நண்பர்களுடனான பிரிவுபசரணையிலுமாக ஆடிக்கு ஒரு நாளும் அம்மாவாசைக்கு ஒருநாளுமாக குடிக்கும் அப்பாக்களைப் பற்றி, எந்தக்கவலையும் இல்லாது முடிந்தால் அப்பனின் காசிலும் முடியாத நேரங்களில் நண்பர்களிடம் பீராய்வதிலுமாம் குடிக்கும் மகன்களது மனநிலையை நீங்கள் என்றைக்காவது ஆராய்ந்ததுண்டா? இரண்டு பேருமே குடிகாரர்கள் இல்லை தான். அவர் அவரது மனநிறைவுக்கும் இவன் ரகளைக்கும் செய்யும் வேலைதான். இருந்தாலும் எனக்கென்னவோ அதனை மனதளவில் ஏற்றுக்கொள்ளவே முடிந்ததில்லை. தீர்த்தவாரிகளின் பின்னான எனது ஆட்டங்களும் அலும்புகளும் தண்ணியடிப்பதென்பதை இளைஞர்களுக்கான விடலைத்தன வாழ்வை அனுபவிக்கும் காரணியாகவே பட்டதால் சிறுவயதிலிருந்து பார்த்துவரும் ஒரு பொறுப்பான அன்பான அப்பா குடிப்பது என்பதினை மிக அபத்தமாகவே பார்த்த காலமது. வருடத்தில் சில நாட்கள தான்! ஆனால் அந்த நாட்களில் தோளுக்குமீறி வளந்த பசங்களுக்கு தெரியக்கூடாதெனவும், பெத்த மக்களுக்கு முன்னான அவரது தந்தையெனும் தகுதியை இறக்கிகொள்ளுகிறோமோ என்கிற சுயபச்சாதாமும் சேர்த்து அவரை ஆட்டிப்படைக்கும். அப்பங்காசுல ஊத்திகொண்ட நானெல்லாம் வீட்டிற்கும் நெஞ்சுநிமிர்த்தி நடக்க தனது சுயசம்பாதியத்தில் ஒருநாள் குடித்துவிட்டு வரும் அவர் நிலைகொள்ளாமல் தவிப்பார். சில சமயங்களில் அவரைப்பார்த்தால் "உலகம் தெரியாத அப்பா!"ன்னு பாவமாகவும் சில சமயங்களில் "உலகம் தெரியாத பசங்களா நாங்க?"ங்கற எரிச்சலாகவும் இருக்கும்.

அன்றைக்கு அப்பா ஒரு அலுவலக விழாவிற்கு பின்னாக வீட்டுக்கு வந்தார். இந்த நாட்களில் வழக்கமாக வாங்கி வரும் ராயப்பாஸ் சிக்கன் 65 பார்சல் கையில். முகத்தில் ஏனோ சுரத்தேயில்லை. என்றைக்குமில்லாத அதியசமாக 10 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து தோசை தின்னுக்கிட்டு இருந்தேன். அப்பா வீட்டிற்குள் நுழையுமுன்னான வழக்கமான அந்த இரண்டு கேள்விகள்...

"சாப்பிட்டியாடா ஜிம்மீ..." - இது எங்கள் உடன்பிறவா பைரவருக்கு!

"சாப்டீங்களாடா குட்டீ..." - இது எங்களுக்கு!


மெதுவாக வந்து என்முன்னமர்ந்தவர் ஏதோ பேச வேண்டுமென விரும்புகிறார். எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியாமல் தவிக்கிறார். அன்றைக்கு எரிச்சலில் இருந்தேன். இந்த மாதிரியான நேரங்களில் நான் மும்முரமாக தலையைக் குத்திக்கொண்டு இருப்பேன். எரிச்சலை காட்டுவதற்கும் எதிராளியை மிக எளிதாக காயப்படுத்துவதற்குமான எளிய வழி நிராகரித்தல் தான். அவர் ஏதோ பேச விரும்புவது தெரிந்தும் கணமும்முரமாய் தீஞ்ச தோசையை நோண்டிக்கொண்டிருந்தேன்.

"பைக்கெல்லாம் நல்லா ஓடுதாடா குட்டீ?"

"ம்..."

"சர்வீசுக்கெல்லாம் ரெகுலரா விடறியா?"

"ம்..."

"ஆயிலெல்லாம் செக் செய்யறியா? ஒழுங்கா ஸ்டார்ட் ஆகுதா...?

"ம்..."

"இல்ல... பேட்டரி வேணா புதுசு மாத்திக்கறயா...?"

எனக்கு ஒன்னும் புரியலை! என்னத்துக்கு தேவையில்லாம வண்டியப்பத்தி கொடயறாருன்னு எரிச்சல் கெளம்புது.

"அதெல்லாம் வேணாம். ஒழுங்காத்தான் ஓடுது..."

"இல்ல... வண்டி ஓட்ட வண்டின்னு சொன்னியாம். பாலாவோட அப்பா சொன்னாரு. கேக்கறப்ப கஷ்டமாயிருச்சு... அதான் கேட்டேன்!" தயங்கித் தயங்கி அப்பா!

எனக்கு முதலில் திக்கென்றது. அவன் நான் சொன்னதை அப்படியே கொண்டுபோய் அவங்கப்பனிடம் ஒப்பிக்க அவரு சபைல ஜோக்கு சொல்லறதா நினைச்சுட்டு எங்கப்பனை போட்டுப் பார்த்திருக்காருன்னு தெரிஞ்சதும் சுருக்குன்னது. அவன் மேல வந்த கோவம் வெளிப்படுத்தத் தெரியாம வார்த்தையா வெடிச்சது.

"இப்ப என்னத்த சொல்லிட்டாங்க? உள்ளதைத்தானே சொன்னேன்!"

இந்த வார்த்தைகளில் எங்கப்பா ஆடிட்டாரு. முகமெல்லாம் கறுத்து வாடிருச்சு. பேச வார்த்தைகள் வராமல் கொஞ்ச நேரம் தத்தளிப்பில் ஓடுது. மெதுவாக வார்த்தைகளைத் தேடியபடி குரலில் நடுக்கத்துடன்

"உங்கப்பாவுக்கு பொழைக்கத் தெரியலைன்னு நீ சொல்லலாமா? நான் இப்படி இருக்கறதுக்கு நீ பெருமைப்பட வேணாமா? புல்லட்டுல இருக்கற ஒவ்வொரு பைசாவும் நான் உழைச்சு வாங்குனது. அந்த உழைப்புக்கான மரியாதை என்னன்னு உனக்கு புரியலையா? அந்த வண்டிய உனக்கு குடுக்கும்போது எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துச்சு தெரியுமா? எம்பையன் உனக்கே என்னைப்பத்தி பெருமையா இல்லைனா வேற யாரு சொல்லிடா எனக்கு பெருமை வரப்போகுது?"ன்னு ஒருமாதிரி திக்கித்திக்கி சொல்லி அமைதியாகிட்டாரு.

ஒரு நிமிடம் திங்கறதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து அப்பாவின் முகத்தைப் பார்த்தேன். அனைத்துத் தகுதிகளும் இருந்தும் பெருமை, சந்தோசம், கர்வம், சாதனை, உழைப்புக்கான மரியாதை எல்லாத்தையும் எனக்காக ஒதுக்கிவிட்டு பெற்ற மகனிடமிருந்தான அங்கீகாரத்தை மட்டுமே எதிர்நோக்கியபடி கண்களில் இறஞ்சுதலுன் கையறுநிலையில் என் தந்தை. எல்லாத் தவறுகளையும் செய்துவிட்டு நெஞ்சு நிமிர்த்தி அமர்ந்து எச்சில்தட்டில் கைகளை அளந்தபடி கர்வமாக நான். எந்தவித புரிதலுமின்றி விளக்குதலுமின்றி இருவருக்குமிடையில் ஏதோ ஒன்று கரையத் தொடங்குகிறது. மெல்ல தலை குனிந்து தோள்கள் குளுங்க கண்களில் பொங்கிவரும் நீருடன் போட்டியிடும் சிறிய விசும்பல்களுடனுமாக அமைதியாக அழ ஆரம்பிக்கிறேன் நான். என்னிடம் எதிர்பார்த்தது கிடைக்கும் என்ற தன் வீண்போகாத நம்பிக்கையுடன் அமைதியாக ஆதூரத்துடன் பார்த்தபடி என் அப்பா!

இப்போதைக்கு இரண்டு ஆசைகள். Enfield தொழிற்சாலையை இழுத்து மூடி பலவருடம் ஆனாலும், ஊருக்கு போவதற்கு முன் இங்கே இருக்கும் Enfield என்ற ஊருக்கு ஒரு முறை பஸ்ஸ்டாண்டு வரைக்குமாவது போய்வர வேண்டும். புல்லட்டுடனான எனது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வாக இதனைச் சொல்லி பெருமையடித்துக் கொள்ள! ஊருக்குப் போனபின் புதுசாய் ஒரு Bullet Machismo 350 வாங்க வேண்டும். இப்போது நினைத்தாலும் மனதோரம் மகிழ்ச்சி கொடுக்கும் என் அந்தக்கால அலம்பலகளை நினைவுப்படுத்த இல்லாவிடினும், அப்பாவுடனான எனது வாழ்க்கையின் நினைவுகளை அந்த "தட்தட்தட்..." சத்தத்தின் மூலமாக மீட்டெடுக்கவாவது!

1 பின்னூட்டங்கள்:

Rajarajan Kannan said...

Yes. I am also a big fan of Bullet.
My friends wondered that why I am going for bullet instead of some advanced bikes ( Crusier bikes ofcourse...) But they can't see my feelings with that vehicle.

Now. Thunderbird is there Thala..