பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - இளவஞ்சி - 7

எனக்கு வராத காதல் கடிதம்
- இளவஞ்சி


உங்களுக்கு ரெட்டைஜடை குமுதாவை தெரியுமா? என்னது தெரியாதா? அதானே! அதெப்படி உங்களுக்கு தெரிந்திருக்கமுடியும்? அவதான் என்னோடு +1 படிச்சவளாச்சே! (நறநறப்பவர்களுக்கு, எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியாததால இப்படி.. ஹிஹி ). ஒல்லியா, முகம் மட்டும் பூசின்னாப்படி, கொஞ்சம் மாநிறத்துக்கும் மேல, நடுவகிடு எடுத்து எப்பவும் ரெட்டை ஜடையோடவும், அதோட முனைல சிவப்புலயோ பச்சைலயோ ஒரு ரிப்பனோடவும், ஒரு சைடுல இருந்து பார்த்தா கோபிகா சாயல்ல இருப்பான்னு வச்சிக்கங்களேன்! இப்படி இல்லைனா நான் ஏன் இவளை பார்த்திருக்கபோறேன்?! எங்க 11C தமிழ்மீடியம் வகுப்புலயே இவதான் கொஞ்சம் பாக்கறமாதிரி இருப்பா! அவபேரு R.குமுதான்னாலும் நாங்க அவளை ரெட்டைஜடை குமுதான்னுதான் சொல்லுவோம். அந்த காலத்துல சைட் அடிக்கறதுன்னா ஒரு பொண்ணைபார்த்து ஓரு கண்ணைமட்டும் மூடிக்காட்டறதுன்னு நம்பிய அரைவேக்காட்டுப்பய நான். அதுனால இதுக்குமேல அவளை வர்ணிக்கற அளவுக்கு அன்றைக்கு அவளை கலைநோக்கோடு பார்த்ததில்லை. ஆனா ஒரு ஈர்ப்பான கவர்ச்சி அவமேல இருந்ததுங்க. இந்த வயசுல பொண்ணுங்க ஒரு மாதிரி தினுசா புரிந்தும் புரியாத அழகோடத்தான் இருப்பாங்க போல. பருவம் வந்தா பன்னிகுட்டியும் பத்துபைசா பெறும் சும்மாவா சொன்னாங்க? ஆனா இந்த விடலைபருவத்துல பசங்களை பார்க்கசகியாது. நொள்ளையும் நோஞ்சானுமா மொகமெல்லாம் ஒருமாதிரி ஒடுங்கி திருதிருனு அலையற கண்களோட, பருக்கள் எட்டிப்பார்க்கும் கன்னங்களோட, மொசைக் தரைல கரித்துணிய தேய்ச்சாப்புல அரைப்பரவலா மீசையோட கன்றாவியா இருக்கும். சந்தேகம் இருந்தா உங்க பழய போட்டோவ எடுத்துப்பாருங்களேன்!


வகுப்புல நாந்தான் லீடர்னாலும் அதையும் மிஞ்சி ஒரு கெத்து எனக்கு இருந்ததென்றால் அது குமுதா எங்க வீட்டுல இருந்து 6 வீடு தள்ளி இருந்ததாலதான். எனக்கு இருக்கற ஆளுமைத்திறனுக்கும் உடம்புக்கும் வாங்குன மார்க்குக்கும் நான் எப்படி லீடர் ஆனேன்னுதானே கேக்கறீங்க? அது ஒரு விபத்துங்க. எப்பவும் நான் 10வதுல லீடரா இருந்த செந்தில்குமார் கிட்டதான் உட்காருவேன். கறி தின்னே வளத்த உடம்பு அவனுது. வாரத்துல 4 நாளைக்கு அவன் டிபன்பாக்சுல கோழிவருவல் இருக்கும். மேலே நான் சொன்ன பசங்களோட சமுத்திரிகாலச்சணங்களில் இருந்து அவன் ரொம்பவும் மாறுபட்டவனில்லைனாலும் ஆளு சும்மா கருப்பு தேக்கு கட்டைல செஞ்ச அலமாரி மாதிரி இருப்பான். எனக்குத்தான் படம்போட ஒரு திறமையும் இல்லாததால ஒரு அள்ளக்கைமாதிரியே அவனோடதிரிவேன். +1 வந்தப்பறம் வாத்தியார் இந்த வருசத்துக்கு யாரு புதுலீடர்னு கேட்டப்ப என்சட்டைய கொத்தாபுடிச்சி தூக்கிவிட்டுட்டான். வாத்தியார் உட்பட எல்லார் முகத்துலயும் லயன்கிங் ரோல்ல ஒரு கொரங்கு நடிக்க வந்தாப்புல ஒரு அதிர்ச்சி! வாத்தியார் நெஜமாவே நீயாடா லீடரா இருக்கப்போறன்னு கேக்க நான் பயத்துல பேந்த பேந்த முழிக்க, அவர் ஒரு நிமிசம் யோசிச்சிட்டு சரி இந்த வேலையாவது ஒழுங்காபாருன்னு விட்டுட்டார். மொத்த வகுப்புக்கும் குசுகுசுன்னு சிரிப்புதாங்கல. என் லீடர் பொழப்பும் அவங்க சிரிக்கரமாதிரிதான் இருந்ததுன்னுவைங்களேன். ஒருத்தருக்கும் என்னைகண்டா பயம் கிடையாது. அந்த காலத்துல "பதவிய வச்சி ஏதாவது வித்தை காட்டுன... வெட்டிடுவேன்!" அப்படின்னு ஒரு ஃபேமசான மக்கள் என் பக்கம் படத்துல சத்தியராஜ் சொல்லற வசனம் இருந்தது. வகுப்புல வாத்தியார் இல்லாதபோது பேசறவங்க பேர எழுதிவச்சாலும் இந்த வசனத்தை சொல்லியே மெரட்டுவாங்க. ஏதோ செந்தில் துணைலதான் ஒப்பேத்தி போய்கிட்டு இருந்தது.

படிச்சது என்னவோ +1 ன்னாலும் அந்தகாலத்துல இப்ப இருக்கற பசங்க மாதிரி 24மணி நேரமும் படிப்பு படிப்புன்னு சுத்துனது கிடையாது. முடியலைங்கறது வேறவிசயம்!. லீவுநாள்ள கிரிக்கெட்தான் தூள்பரக்கும். காலைல 9 மணிக்கு ரப்பர்பால் பெட்மேட்ச் போட்டா சயந்தரம் 7 மணி வரைக்கும் 3 மேச்சாவது நடக்கும். செந்தில் வேற ஏரியான்னாலும் மேட்ச் நடக்கும் போதெல்லாம் எங்க ஏரியால தான் இருப்பான். மத்தியானம் எங்க வீட்டுலயே சாப்பிட்டுட்டு திரும்பவும் வெளையாட போயிடுவோம். எங்க தெரு தள்ளி ரயில்வே ட்ராக்கை ஒட்டினாப்புல இருந்த பீக்காடுதான் எங்க கிரவுண்டு. இந்த கிரவுண்டை ஒட்டினாப்புல போற ரோடுலதான் எங்க கணக்கு வாத்தியார் வீடு இருந்தது. எங்க தெருவுல இருந்து வாத்தியார் வீட்டுக்கு டியுசன் படிக்க போகனும்னா இந்த கிரவுண்டை ஒட்டிய ரோட்டுலதான் போகனும். நம்ப குமுதா வகுப்புல முதல் 5 ரேங்க்குக்குள்ள எடுத்தாலும் கணக்குக்கு மட்டும் டியூசன் போனா. எனக்குத்தான் வகுப்புலயே எல்லா பாடங்களும் படிச்சி கிழிச்சுறதுனால டியூசன் எல்லாம் போனதில்லை. எல்லாம் +2ல போய்க்கிலாம்னு வீட்டுலயும் சொல்லீட்டாங்க. தினமும் சாயந்தரம் நாங்க விளைய்யடும்போது குமுதா அந்த ரோட்டுல ஒரு ஆறு மணிக்கா டியூசன் போவா. பசங்கெல்லாம் ஒருமாதிரி அமைதியாகி யாரும் பாக்காதமாதிரி அவளை பார்த்தபடி அவள் வீதிமுனையை தாண்டறவரைக்கும் ஒரு நாடகம் நடிப்பானுங்க. அடுத்தவன் பாக்கறது தெரிஞ்சிட்டா ஒரு மாதிரி வழிவானுங்க. சிலநாள் பேச்சுவாக்குல அவளைபத்தி என்கிட்ட விசாரிப்பானுங்க. அப்பெல்லாம் ஒரு பொண்ணைப்பத்தி பேசறதே ஒரு இனம் புரியாத கிக்கா இருக்கும். நானும் அவளைப்பத்தி எனக்கு தெரிஞ்சதையெல்லாம் ஒரே பீலாவா விட்டு என் இமேஜை ஏத்திக்குவேன்.

இப்பதான் பசங்க பொண்ணுங்க எல்லாம் ஒண்னுமண்னா பழகறாங்க. எங்க காலத்துல சும்மா ரெண்டு வார்த்தை பேசுனாலே பெரிய விசயம். அந்த ரெண்டு வார்த்தை பேசரதுக்குள்ளயே பசங்களுக்கு நாக்கு தட்டிடும். அதுக்கே புள்ளைங்க கெக்கேபிக்கேன்னு சிரிப்பாளுங்க. இந்த மேட்டரும் வாத்தியாருக்கு தெரிஞ்சா அவ்வளவுதான். அவருக்கு அடிச்சும் நமக்கு அடிவாங்கியுமே கை பழுத்துரும். இந்த நேரத்துலதான் செந்தில் அந்த வேலைய ஆரம்பிச்சான். வகுப்புல அப்பப்ப யாரும் பாக்காதப்ப குமுதாவ பார்த்துக்கிட்டே இருப்பான். இண்டர்வெல்ல தண்ணி குடிக்க போகும்போதும், மத்தியானம் டிபன்பாக்ஸ் கழுவும்போதும் அவ பின்னாடியே போய் சிரிக்க ஆரம்பிச்சான். இதை கூட இருந்து பாக்க ஒரே வயித்தெரிச்சலா இருந்தது எனக்கு. அவ இவனை பாத்தாளா இல்லை சிரிச்சாளானேன்னே எனக்கு புரியலை. ஆனா அவ இவனை கண்டுக்காதமாதிரிதான் இருந்தது. இருந்தாலும் செந்தில் இப்படி செய்ய ஆரம்பிச்சதை என்னால தாங்கிக்க முடியலை. இவன் இப்படி செய்யறதனால பசங்க முன்னைப்போல அவளைப்பத்தி என்கிட்ட கேக்கறதுகொறைஞ்சதும் என் பொறாமைக்கு காரணமா இருந்திருக்கலாம். தினமும் சாயந்தரம் கிரிக்கெட் விளையாடும்போதும் அவ டியூசன் போகும்போது பின்னாலேயே போயிட்டு திரும்ப வருவான். டியூசன் முடிஞ்சி வர்றவரைக்கும் இருட்டுல கிரவுண்டுல இருப்பான். அப்படியே அவகூடவே பின்னால எங்க வீட்டுவரைக்கும் வந்துட்டு அவன் வீட்டுக்கு போயிடுவான். இதைப்பாத்து காதெல்லாம் பொகையா சுத்திகிட்டு இருந்த நான் மெல்ல அவங்க அப்பா பத்தி அவன்கிட்ட சொல்லி அவனை பயமுறுத்த ஆரம்பிச்சேன். ஆனா அவன் அதுக்கெல்லாம் மசியறமாதிரி தெரியலை.

ஒருநாள் இப்படிதாங்க நாங்க விளையாட்டு முடிச்சு வீட்டுக்கு வரவும் செந்தில் குமுதா பின்னாடியே டியூசன்மாஸ்டர் வீட்டு வரைக்கும் போகவும் இருக்க எதிர்தாப்புல குமுதாவோட அப்பா வந்துகிட்டு இருந்தார். எனக்கு என்ன தோணுச்சோ படக்குன்னு அவரை நிறுத்தி, "சார், குமுதாவ யாரோ ஒருபையன் தெனமும் டியூசன்வரைக்கும் பாலோ பன்னறான்"னு பத்தவச்சிட்டேன்! அவர் முகமெல்லாம் மாறி ஒடனே ஸ்கூட்டற திருப்பிகிட்டு அந்தவழியா போனார். எனக்கு உடம்பெல்லாம் படபடங்குது. நெஞ்சு அடிச்சுக்குது. என்ன நடக்குமோன்ற அந்த பயத்துலயும் அவனை மாட்டிவிட்டுட்டமேன்ற இனம்புரியாத ஒரு இன்பம் எனக்குள்ள. தாங்கமுடியாம ஒரு 5 நிமிசம் கழிச்சி என்சைக்கிளை எடுத்துகிட்டு அங்க போனா கிரவுண்டை ஒட்டிபோற ரோட்டுமுக்குல சின்ன கூட்டம். குமுதா ஒரு ஓரமா தலையகுனிஞ்சிகிட்டு பயத்தோட தேம்பி தேம்பி அழுதுகிட்டு நிக்கறா. அவங்கப்பா கைல ஒரு பேப்பர வச்சிகிட்டு செந்தில் சட்டைய புடிச்சு வச்சி கன்னத்துலயும் முதுகுலயும் அறைஞ்சிக்கிட்டு இருந்தார். சுத்திநிக்கறவங்க "இந்த வயசுல லெட்டர் குடுக்கறான் பாருங்க.. நல்லா போடுங்க சார்"னு ஏத்திவிடுறாங்க. செந்தில பாக்கவே பாவமா இருந்தது. நான் ஒன்னும் பேசாம அப்படியே திரும்பி வீட்டுக்கு வந்துட்டேன். விசயம் எங்க வீட்டு வரைக்கும் வந்து எனக்கும் இந்த மாதிரி பையன்கூடவா சேருவேன்னு ரெண்டு விழுந்தது. அன்னைக்கு நைட்டு எனக்கு தூக்கமே இல்லை. அதுக்கு அடுத்தநாள் அவனை ஸ்கூல்ல அவன் அப்பாவோட பார்த்ததுதான் கடைசி. குமுதாவோட அப்பா ஸ்கூலுக்கு வந்து ஹெட்மாஸ்டர் வரைக்கும் விசயத்தை கொண்டுபோய் கையபுடிச்சி இழுத்ததா ஊதி பெருசுபண்ணி அவனுக்கு TC குடுத்து அனுப்பிச்சிட்டாங்க. பிரேயர்ல வேற இதை சொல்லி அத்தனைபேருக்கும் எச்சரிக்கை விட்டாரு HM. அதுக்கு அப்பறம் அவன் திருப்பூர்ல Polytechnic Civil சேர்ந்துட்டதா தெரியவந்துச்சி.

ஒரு அஞ்சாறு வருவம் போயிருக்குங்க. BE படிச்சிட்டு வேலைதேடி சென்னை வந்து கேம்பஸ்ல TCSல சேர்ந்த ஃபிரண்டு கூட திருவல்லிக்கேணி மேன்சன்ல இருந்தேன். ஞாயித்துகிழமை மதியம் 4 மணிக்கா காலேஜ்ல படிச்சவனுங்க எல்லாம் மெரீனா பீச்சுல பாத்துக்கறது வழக்கம். Walkin interview, apptitude testனு கெடச்ச தகவல்களை பீச்சுல ஃபிகர் பார்த்த நேரம்போக பரிமாறிக்குவோம். திடீர்னு முதுகுல பளார்னு ஒரு அடி விழுந்தது. பயந்துபோய் திரும்பி பார்த்தா ஓங்குதாங்க கருவேல மரம் மாதிரி அதே வெள்ளைப்பற்கள் ஈறுவரைக்கும் தெரிய சிரித்தபடி செந்தில்! எனக்கு ஒரு நிமிசம் அப்படியே ஆடிப்போயிட்டது. அப்பறமா அவன்கூட போய் பீச்சுலயே உக்கார்ந்து என்கதைய சொல்லி அவன் கதைய கேட்டதுல அவன் Civil diploma முடிச்சி L&Tல சைட் இஞ்சினியரா இருக்கறதும், SK மேன்சன்ல இருக்கறதும் தெரிஞ்சது. அம்மா அப்பா பத்தியெல்லாம் ரொம்ப விசாரிச்சான். எனக்கு சீக்கிரம் வேலை கிடைச்சுடும்னும் நம்பிக்கையா சொன்னான். கற்பகம் மெஸ்சுல டோக்கன் மீல்ஸ் சாப்டுட்டு முக்கு கடைல பாதாம் பால் குடிச்சிட்டு அவன் ரூமுக்கு போனோம். வாச்மேன் கிட்ட கெஸ்ட் என்ட்ரி போட்டுட்டு அன்னைக்கு அவன்கூடவே இருக்கனும்னு கூட்டிகிட்டு வந்துட்டான். எதையெதையோ பேசி கடைசில நான் இதுவரைக்கும் பேசக்கூடாதுன்னு நினைச்ச அந்த விசயம் வந்தது. அன்னைக்கு அடிவாங்குனதுக்கு அப்பறம் நான் அவன்கூட பேசாம போயிட்டத பத்தி வருத்ததோட சிரிச்சிகிட்டே சொன்னான். குமுதா டாக்டருக்கு படிக்கறதையும் என்கிட்ட கேட்டு தெரிஞ்சிகிட்டான். "உன்கிட்ட ஒன்னு காட்டனும்டா மாப்ள"ன்னு கட்டிலுக்கு அடியில இருந்து ஒரு சூட்கேச இழுத்து அதுல இருந்து ஒரு பெரிய காக்கி கவர எடுத்தான். அது புல்லா அவன் சேர்த்து வச்சிருந்த ஆட்டோகிராப் புக்கும், வாழ்த்து அட்டைகளும் சின்ன சின்ன கிப்ட்களுமா இருந்துச்சு. அதுல இருந்து ஒரு மஞ்சள் கலர் பேப்பர்ல எழுதுன லெட்டரை தேடி எடுத்து சிரிச்சிக்கிட்டே படிக்க சொன்னான்.

"Love is GOD. God is Love.

Dear செந்தில்,

Many more kisses. காலையில் உன்னை ப்ரேயரில் பார்த்துபோது நீ என்னை பார்த்தும் பார்க்காததுமாதிரி போனது மனசுக்கு மிகவும் வருத்தமாகஇருந்தது. ஆனால் நீ சயின்ஸ் க்ளாஸ்போது திரும்பி என்னைபாத்து சிரிச்சது மிகவும் சந்தோசமாக இருந்தது, நன்றிகள் பல. எப்பவும் நீ இதேபோல் சந்தோசமாக சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும். நான் உன்னை என் உயிரினும் மேலாக காதலிக்கிறேன். நீயும் என்னை உன் உயிர் உள்ளவரை என்னை மட்டுமே காதலிக்கவேண்டும். எனக்காக நீ டியூசன்மாஸ்டர் வீட்டுவரைக்கும் வருவது எனக்கு ஒரு God's gift. உனக்கு கஸ்டம்தான் என்றாலும் I'm very very happy. இருந்தாலும் யாராவது பார்த்துருவாங்களோன்னு பயமா இருக்கு. இனிமேல் நீ வரவேண்டாம். நாம் ஸ்கூலிலேயே மதியம் வகுப்பில் letter கொடுத்துக்கொள்ளளாம். மற்றவை நாளை கடிதத்தில். Tons of Kisses.

Ever yours,

S. Kumutha"

ஏனோ எனக்கு கண்ணுல தண்ணி தழும்பிருச்சுங்க. அவனுக்கு தெரியாம தொடச்சுக்கிட்டேன். ஒரு ரெண்டு நிமிசம் அந்த லெட்டரையே பார்த்துகிட்டிருந்தவன் என்னநினைச்சானோ சிரிச்சுகிட்டே கிழிச்சு கசக்கி மூலைல எறிஞ்சிட்டான். அன்னைக்கு நைட்டும் எனக்கு தூக்கமே வரலைங்க.

0 பின்னூட்டங்கள்: