பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - பெனாத்தல் சுரேஷ் - அறிமுகம்

பெனாத்தல் சுரேஷ் - அறிமுகம்

கார் கதவை ஒரு மனுசன் மெதுவா தொறந்து விடுறான்னா ஒன்னு கார் புதுசா இருக்கணும் அல்லது காருக்குள்ல இருக்குற பொண்டாட்டியோ / சின்ன வீடோ / காதலியோ புதுசா இருக்கணும்கறதுதான் நியதி. புதுசா இருக்குற வரைக்கும் எல்லாம் பிரம்மாதம்தான்.- சோடா பாட்டில் பொங்குற மாதிரி.ஆனா, தொடர்ந்து எழுதவும் எழுதுனதைப் படிக்க ஆட்களைத் தக்க வச்சுக்கறதும் பெரிய பாடு - அதுவும் நாளுக்கு நாலு பதிவுகள் வரத்துவங்கியிருக்கும் கால கட்டத்தில். பெனாத்தலைப் பொறுத்தவரைக்கும் அந்தப் பிரச்னைக்கு இடமில்லை. அவர் எழுதினால் வாசிப்பதற்கென்று மக்கள் இருக்கவே செய்கிறார்கள். ஏனென்றால் எழுதினால் வாசிக்கும்படியாக இருக்குமென்ற நம்பிக்கையை இந்த மூன்றாண்டுகளில் அவர் வளர்த்தெடுத்திருக்கிறார். இன்றைய சூழலில் இப்படி ஒரு நம்பிக்கையைப் பெறுவதென்பதே பெரிய விசயம்தானே?

கிரிக்கெட்டில் நன்றாக செட்டில் ஆகி விட்ட பேட்ஸ்மேனுக்கு கிரிகெட் பந்து ஃபுட்பால் அளவுக்குப் பெருசாகத் தெரியுமாம். பெனாத்தல் இப்போது அம்மாதிரி தமிழ்வலைப்பூவுலக வீச்சுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப தன்னை தயார்படுத்திக் கொண்டார் என்றே தோன்றுகிறது.

மோட்டுவளையை வெறித்துக் கொண்டு நவீனத்தை படுத்துபவ்ர்கள், கவிதையை வேட்டியை உருவி விடும்வரை விட்டுவிடக் கூடாது என்ற கொள்கை வைராக்கியத்தோடு வலம் வரும் கவிஞர்கள், கழுத்து வலிக்க வலிக்கத் திரும்பிப் பார்க்கும் மலரும் நினைவுகள், திரும்பத் திரும்ப மொக்கைகள் என்று ஒரே மாதிரியாகவே எழுதுபர்களுக்கு மத்தியில் சுரேஷின் எழுத்து எல்லாம் கலந்த கதம்பமாக இருக்கிறது

சிறுகதை, கவிதை, அரசியல், சமூக அக்கறை, திரைப் பார்வை, இலக்கியம் குறித்த அலசல்கள், ஃப்ளாஷ் தொழிநுட்ப உதவியுடன் கலாய்த்தல்கள் என்று பன்முகம் கொண்ட பதிவுகளாக அவை விரவிக் கிடக்கின்றன. எல்லாவற்றிலுமே வாசிப்பவர்களை ஈர்க்கும் விதம் மெல்லிய நகைச்சுவை பரவிக் கிடக்கிறது. அடிப்படையில் தனது எழுத்து எந்த சார்புநிலைக்குள்ளும் புகுந்துவிடக்கூடாதென்ற எச்சரிக்கை மனப்பான்மையோடு எழுதுவதே இதற்குக் காரணம்.


விக்கி பசங்களில் பங்களித்தாலும் சரி, வருத்தப்படாத வாலிபராக வலம் வந்தாலும் சரி; கில்லிக்கு வாசிப்புரை எழுதினாலும் சரி; இன்னமும் அவரை ஓரம்கட்டி முத்திரை குத்தி யாரும் சாத்திவிடாமல் தப்பித்துக் கொண்டு வந்திருக்கிறார் என்பதே கூட மூன்றாண்டு கால சாதனையை விட மிக உயர்ந்த சாதனைதான்.

பற்றியெரியும் சேது சமுத்திரத் திட்டமானாலும் சரி, உபி தேர்தலில் பாஜக வெளியிட்ட விசிடி பற்றிய பார்வையாக இருந்தாலும் சரி, அமீரகத்தில் இந்துக்களுக்கு எதிரான நிலை இருப்பதாகப் புரளி பரவியபோது அதனை மறுத்து எழுதிய போதும் சரி - தனது நிலையை மிகத் தெளிவாகச் சொல்லும் நேர்மை அவருக்கு வாய்த்திருப்பது பாராட்டுக்குரியது.

கவிமடத்தின் தலைமைச் சீடனாக இருந்தும் கூட கவுஜை எழுதி ஆட்களைத் தாளிக்க வேண்டுமென்ற எண்ணம் இல்லாமல் எப்போதேனும் மட்டும் கவிதையை எழுதுவதும், அந்தக் கவிதை கவிதையாகவே இருப்பதும் அதனாலேயே அவர் அதிகம் கவிதை எழுதாமலிருப்பதும் அவரது புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. அதற்காகக் கவிமடத்தின் பெருமையைக் காப்பாற்றவும் அவர் தவறியதில்லை. அவர் எழுதிய காப்பி கசக்கும் கவிதை ஒரு உதாரணம்

தேன்கூடு சிறுகதைப் போட்டியில் வெற்றி, சிறந்த தமிழ் பதிவர் , அவள் விகடனே அங்கீகாரம் தந்த அவன் விகடன் எனப் பல சிறப்புகள் இருந்தபோதும் அது பற்றிய அலட்டல் அதிகம் இல்லாமல் நல்ல பதிவுகளைக் கண்டால் ஓடிச்சென்று வாழ்த்துவதும், குறையென்று கண்டால் விவாதிப்பதும் கூட சுரேஷின் சிறப்புகளில் முக்கியமானதெனக் கருதுகிறேன்

விக்கி பசங்களுக்காக தனது துறை சார்ந்த பதிவில் மிகச் சிறப்பான தமிழில் எளிய விளக்கங்கள் அளிக்க் முடிந்த அவரால் சில பதிவுகளில் தமிங்கலத்தைத் தவிர்க்க முடியாமல் இருப்பது என்னைப் பொறுத்தவரை குறைதான்.

வித்தியாசமாக யோசிப்பது, நக்கைச்சுவை மிளிர எழுதுவது இவை இரண்டும்தான் பெனாத்தலின் மிகப் பெரிய பலம். போக்கிரி படத்தில் விஜயின் முகபாவங்களை அவர் சொல்லியிருந்த விதம் நினைத்தாலே இன்னமும் சிரிப்பை வரவழைக்கிறது. 'அம்மு'வை எல்லாரும் 'ஆஹா ஓஹோ' என்று சொல்லும்போது கூட்டத்தில் கோவிந்தா போடாமல் 'அடப் போங்கய்யா! இதெல்லாம் ஒரு படமா?' என்று கேட்கும் துணிச்சலும் சுரேசுக்கு நிறையவே இருக்கிறது

நகைச்சுவை என்பதற்காகக் கோமாளித்தனமோ வலிந்த திணிப்புகளோ இல்லாமல் இயல்பு நடையிலேயே எழுத முடிவதும் அப்படி எழுத முடியுமளவுக்கு நிறைய கற்பனை வளம் இருப்பதும் டப்பாவில் இன்னமும் பெருங்காயம் இருக்கத்தான் செய்கிறது என்பதை சொல்லிக் கொண்டே இருக்கிறது.

0 பின்னூட்டங்கள்: