பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - பெனாத்தல் சுரேஷ் - 3

சாப்ட்வேர்காரர்கள் கிளப்பும் கலவரம்?
- பெனாத்தல் சுரேஷ்


முதலில் டிஸ்கி: நான் ஒரு சாப்ட்வேர் ஆள் கிடையாது, வேலைக்குத் தேவையான தகவல்களைப் பெற மட்டுமே கணினியைத் தொடுபவன், மற்ற நேரங்களில் ஸ்பானரும் ஆயில் கிரீஸும்தான்!

சாப்ட்வேர்காரர்களின் அதிக சம்பளத்தால் சமூகத்தில் பாதிப்பேற்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு நேரடியான விடை - ஆம் ஆகத்தான் இருக்கும்.

சென்னையில் 80களிலும் கூட தி நகர், மாம்பலம் போன்ற பகுதிகளில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு நடுத்தர வர்க்கத்தினர் வாங்கக்கூடிய விலைக்குள் இருந்தது, 90களில் ஆதம்பாக்கம், வில்லிவாக்கம் போன்ற பகுதிகள் நடுத்தர வர்க்கத்தினரின் சரணாலயமாக இருந்தது.ஆனால், 2000 - 2007ல், இது வேகமாக ஓடி, இப்போது சிங்கப்பெருமாள் கோயில் மதுராந்தகம் போன்ற இடங்கள் கூட மத்யமரின் வாங்கும் சக்திக்குள் இல்லை. இந்த மாற்றம் அதிவேகமாக நடந்ததனால், முன்னாளில் கௌரவம் எனக் கருதப்பட்ட சர்க்கார் உத்தியோகஸ்தன் கூட, ஒரு அடுக்குமமடியின் பொந்து கூட வாங்க முடியாமல் தவிக்கிறான்.

இதற்குக் காரணம், சந்தேகமே இல்லாமல் சாப்ட்வேரில் புழங்கும் அதிகப் பணம்தான். ட்ரீட் கொடுத்து, 500 ரூபாய் ஆம்னிபஸ்ஸில் பயணம் செய்தபின்னும் மிஞ்சுவது, மேற்படி சர்க்கார் உத்யோகஸ்தனின் முழுச்சம்பளத்தைவிட சில மடங்குகள் அதிகமாக இருப்பதே.
அப்பாவை விட அதிகச் சம்பளம் என்பது பையனுக்குப் பெருமையாகவும், கர்வமாகவும் இருக்கலாம். ஆனால் அப்பாவுக்கு? அப்படிப்பட்ட பையன்கள் இல்லாத ஆயிரக்கணக்கான அப்பாக்களுக்கு?

அதிகப்பணம் எங்களுக்கு மட்டும்தானா? அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கவில்லையா? சினிமாக்காரர்கள் கோடிக்கணக்கில் வாங்கவில்லையா என்ற கேள்விகளும் அர்த்தம் அற்றவையே! அரசியல்வாதிகளும், சினிமாக்காரர்களும் நடுத்தர வர்க்கத்தினரின் தினப்படி செயல்பாடுகளில் போட்டிக்கு வந்ததில்லை, அவர்களின் ஜனத்தொகையும் பொதுமக்களின் ஜனத்தொகையில் 1 சதவீதத்தைத் தாண்டியதில்லை.

விலையேற்றம் என்பது சகஜம்தான். அந்த காலத்துல 5 பைசாவுக்கு கைநிறைய பொரிகடலை கிடைச்சுது என்று சொல்வது அபத்தம். ஆனால், Burning platform என்பது இப்படிப்பட்ட திடீர் நிகழ்வுகளால் வேகமாவது, அந்த வேகத்தில் கூடச்சேராத மக்களைப் பாதிக்கத்தான் செய்யும். இங்கே பிரச்சினை விலையேற்றம் அல்ல - அதன் வேகம்!

பிரச்சினை பணம் சம்மந்தப்பட்டது மட்டும் அல்ல. வாழ்க்கைத்தரம் பற்றிய அளவுகோல்கள் வேகமாகத் திருத்தப்படுவது! இது அங்கே ஒரு அரசியல்வாதி, இங்கே ஒரு வியாபாரி என்றில்லாமல், பொது ஜனத்தொகையில் 15-20 சதமாக இருப்பதால் மிச்சமுள்ள, பேண்ட் வேகனில் ஏறமுடியாதவர்கள் 80% ஆக இருப்பதும், அவர்களின் அந்தஸ்து சடாலெனக் குறைவதும், நேற்றுவரை அவர்கள் கைக்குள் இருந்த வசதிகள் இப்போது பகட்டாகவும் ஆடம்பரமாகவும் மாறிவிட்டதுதான்.

அன்றைய தேதிக்கு விலைபோகும் படிப்பைப் படித்து, அன்றைய தேதியின் நல்ல வேலையில் சேர்ந்து, சரியான பணி உயர்வுகளும் சம்பள உயர்வுகளும் பெற்றுவரும் ஒரு ஆள், கோட்டின் மற்ற பகுதி திருத்தப்படுவதால் வாழ்க்கைத்தரம் குறைவதின் வலி, அவனுக்கு மட்டும்தான் தெரியும்.

சம்பள ஏற்றத்தாழ்வு என்பது இன்று நேற்று வந்த பிரச்சினையில்லை. ஆனால் இன்று அது உச்சத்தில் இருப்பதற்கும், பேசுபொருளாக ஆகியிருப்பதற்கும் காரணம் திடுதிப்பென மாறும் சமூக அளவுகோல்கள். 10000 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு, நகர மத்தியில் 2000 ரூபாய் வாடகை வீட்டில் இருந்துகொண்டு, கைனடிக் ஹோண்டா வைத்துக்கொண்டு பந்தாவாக வலம் வந்தவன், அந்த 2000 ரூபாய் வாடகைக்கு நகரத்திலிருந்து 30 கிமீ தூரம் அனுப்பப்படுகிறான், கைனடிக் ஹோண்டாவா? ஹோண்டா சிவிக்டா என்கிட்ட என்று வார்த்தைகள் இல்லாமல் நக்கல் அடிக்கப்படுவதாக உணர்கிறான். சமூகத்தின் ஆரம்பப்படிகளில் இருந்தவன், இப்போதுக்கு கீழிருந்து சில படிகள் மட்டுமே மேல் இருக்கிறான்.

மூன்றாம் வகுப்பு மாணவர்களை ஒரு கட்டுரை எழுதச்சொன்னாராம் ஒரு பள்ளி ஆசிரியர். ஒரு பணக்காரக் குழந்தை எழுதினாளாம்: Once upon a time, there was a very poor family, everybody in the house were poor, the parents were poor, the housemaid was poor, the gardener was poor, the car driver was poor, everybody was poor": என்று! சாப்ட்வேர்காரர்கள் எழுதும் கட்டுரைகளுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் தென்படவில்லை. வாங்கற சம்பளம் ட்ரீட் கொடுத்து, ஐ மாக்ஸில படம் பாத்து, 500 ரூபா ஆம்னிபஸ்ஸில போயி, மிஞ்சவே மாட்டேங்குது என்பது போன்ற தன்னிலை விளக்கங்கள் முன் பத்தியில் சொல்லப்பட்ட ஆளுக்கு எப்படிப்பட்ட எரிச்சலைத் தரும்?

ஆனால்!

இந்தப்பிரச்சினைக்கு சம்பளம் வாங்குபவர்களைக் காரணமாகச்சொல்வது எந்த விதத்தில் சரியாகும்?

ரஜினியை வைத்து 50 கோடிக்கு படமும் 10 கோடி சம்பளமும் கொடுக்கிறார்கள் என்றால் அந்தப்பணத்தை வசூலித்துவிடமுடியும் என்ற நம்பிக்கைதானே காரணம்?

சாப்ட்வேரை விற்றால் பணம் வராது என்ற நிலையில் 2000த்தின் ஆரம்பங்களின் டாட்காம் வீழ்ச்சியிலும் பின்னர் 2002லும் கூட எத்தனை சாப்ட்வேர் மக்கள் வேலை இழந்தார்கள்? அப்போது, மற்றவர்கள் தங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை சாப்ட்வேர்காரர்களுக்குத் தந்தார்களா? சாப்ட்வேர் படித்தவர்கள் அத்தனை பேருமா கோடியில் கொழிக்கிறார்கள்? (சிவாஜி பவுண்டேஷன் ஆரம்பிக்கிறார்கள்:-)) அனுமதிக்கப்பட்ட விலக்குகள் (வீட்டுக்கடன், சேவைகளுக்குத் தரும் நன்கொடை) நீங்கலாக அவர்கள் கடமையான வருமான வரியிலிருந்து தப்பிக்கவோ ஏய்க்கவோ முடியாமல் சோர்சிலேயே கழிக்கப்படுகிறது. மிச்சப்பணத்தை எப்படிச் செலவழிப்பது என்பது அவரவர் சௌகரியம் - அதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது.

அவர்கள் பொறுப்பில்லாமல் செலவழிப்பது மட்டுமே விலையேற்றங்களுக்குக் காரணம் என்பதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது. வியாபாரிக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்பதுதான் முக்கியமே ஒழிய, எப்படிப்பட்ட சம்பாத்தியம் என்பதெல்லாம் முக்கியம் கிடையாது. சென்னையில் பிரம்மச்சாரிகளுக்கு வீடுகிடைக்காத நிலை மாறி, பிரம்மச்சார்களுக்கு மட்டுமே வீடு கிடைக்கும் நிலை வந்திருக்கிறது என்றால், இரு பக்கமுமே குற்றமில்லை - காலம் செய்த குற்றம்தான்.

இந்த நிலையைச் சரிசெய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குத் தான் இருக்கிறது. சாப்ட்வேர் வேலைகளைப் பரவலாக்குதல், சேலம், சத்தி போன்ற நடுததர ஊர்களிலும் மென்பொருள் பூங்காக்களை அமைத்தால், சென்னையில் 100 பேர் என்பது சென்னையில் 50 மற்ற ஊர்களில் 10 - 10 என்று பிரியும், சுபிட்சம் பரவலாகாவிட்டாலும், ஓரிடத்தில் குவிக்கப்பட்டதாக இருக்காது. அதிக வரிவிதிப்பு போன்ற முறைகள் எல்லாம் அநியாயம்தான்.

சாப்ட்வேர் இளைஞர்கள் ஒரு விஷயத்தை உணரவேண்டும். தங்கள் உரிமைகள், சமூக அந்தஸ்து பறிக்கப்பட்டதாக உணரும் மக்கள்தான் பெரும்பான்மை. அதிலும், உணர்ச்சிகளுக்கு வடிகால்கள் இல்லாத, வன்முறைக்கு ஏங்கும் ஒரு இளைய தலைமுறையும் அதில் அடக்கம். அவர்கள், தங்கள் வலிக்குக் காரணமாக உங்களை நினைக்கிறார்கள் - சரியா தப்பா என்று என்னைக் கேட்காதீர்கள் - நான் தப்பு என்றுதான் சொல்வேன். இவர்கள் ஒரு ஊதுபொறிக்காகக் காத்திருக்கின்றனர். பெங்களூருவில் எதுடா சாக்கு என்று கலவரம் கிளம்புவதைக் கவனித்திருக்கலாம். உங்கள் பகட்டு இதற்குக் காரணமாகிவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

"கற்றது தமிழ்" போன்ற படங்கள் (படம் பார்க்கவில்லை), பலர் மனதுக்குள் எரிந்துகொண்டிருக்கும் இந்தப் பிரச்சினைக்கு தூபம் போட்டு பணம் பார்க்கும் முயற்சியாகவே கருதுகிறேன். அரைகுறை சைக்கோவாக இருப்பவர்களில் ஒருவர் இது போன்ற படங்களால் தூண்டப்பட்டாலும் அந்த இயக்குநர் பொறுப்பேற்கவேண்டும் என்றும் கருதுகிறேன்.

2 பின்னூட்டங்கள்:

யோசிப்பவர் said...

Agreed!

வடுவூர் குமார் said...

வீடு பிரச்சனையை இங்கு (துபாயில்) பார்க்கும் போது,மத்திய குடும்பங்கள் எங்கு போனாலும் மரண அடி தான் போலும்.