பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - இளவஞ்சி - 3

வென்றுவாடி என் மகளே!
- இளவஞ்சி







இன்னும் 4 மணி நேரத்தில் எம்பொண்னு வாழ்க்கையில் முதமுறையா பள்ளிக்கூடத்து வாசலை மிதிக்கப்போறா! அவங்கம்மா அவளுக்கு புத்தம்புது யூனிபாரத்தை போட்டுவிட்டு, சாமிய கும்பிடவைச்சு, தாத்தாபாட்டி காலுல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கிட்டு, புதுசா வாங்குன புத்தகப்பை, சோத்துப்பை, வாட்டர்பாட்டிலு எல்லாத்தையும் மாட்டிவிட்டு, நான் அவளுக்கு ஷீ போட்டுவிட்டு, வண்டில கூட்டிக்கிட்டுப் போய் கையப்பிடிச்சு நடத்திக்கொண்டு வகுப்புல விடத்தான் ஆசை! என் நேரம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்! நானே என் தொரசாமி தாத்தாவை கதறடிச்ச மொதநாளு கதைய மறக்காம கொசுவத்தி சுத்தி புளங்காகிதமாத்தான் இன்னமும் இருக்கேன்! அதுக்குள்ள எம்பொண்னு பள்ளிகூடத்துக்கு போறா! ஹிம்! காலம் போற வேகத்துல...

இந்த இனியநாள் இன்னொரு முறை எனக்கு கிடைக்குமா? தவறவிட்ட இந்த வாய்ப்புக்கான உண்மையான மதிப்பினை ஈடுசெய்ய இயலுமா? சில இழப்புகளின் முன்னால் பல இருப்புகளுக்கு அர்த்தமே இருப்பதில்லை! :( என்னால முடிஞ்சது அவளுக்கான இந்த பதிவுதான்!

போய்வாடி என் மகளே!
நம்வாழ்வை மொக்கையாக்க
மெக்காலே வடிவமைத்த
போர்க்களம்
வென்றுவாடி என் மகளே!

கூட இருக்கத்தான் ஆசப்பட்டோம்...

கள்ளநோட்டு கும்பலுக்கு
"வலைவீச" போனதால
எங்கப்பனுக்கு முடியல

துரைமாரு நாட்டுக்கு
ஆணிபிடுங்க வந்ததால
உங்கப்பனுக்கு முடியல

வெற்றிச் சிரிப்போட
எங்கப்பாரு
தினத்தந்தில வந்தாக

வெட்டிப் பதிவராக
உங்கப்பாரு
பதிவுலகில் வந்திருக்கேன்

கவலைப்படாதேயெங் கண்ணு!

எங்கம்மாவோட அப்பாரு
எங்கூட வந்தாக
உங்கம்மாவோட அப்பாரு
உங்கூட வர்றாக

என்னைக்கும் இதே கததான்!
அப்பனுங்க கதையெல்லாம்
வெறும் வாயோடு
வெளையாட்டு!



ஏபி சீடியும்
ஏப்ளஸ்பி ஹோல்ஸ்கொயரும்
இதமாத்தான் நீ படிக்க
எழுதி இருக்காக
என்பதுகிலோ புத்தகங்க

அத்தனையும் தெனம் சுமக்க
ஆசைப்படுறேன் இந்த அப்பா
படிச்சுக் கிழிக்க அல்ல
மூட்டை தூக்கியேனும்
நீ பெறவேண்டும்
உடலுறுதி
வாங்கித்தாரேன் ஹார்லிக்சு

வேற வழியில்ல கண்ணம்மா...

பப்பிஷேம் ஊருக்குள்ள
ஜட்டிபோட்டவன் லூசுப்பய
ஒம்பது டு அஞ்சுக்குள்ள
படிப்பையெல்லாம் முடிச்சுவிடு
அதன் பெறகும் படிச்சன்னா
அப்பாவுக்கு மூடவுட்டு



தோள்மீது உனைத்தூக்கி
மெரீனாபீச்சு கூட்டிப்போறேன்
அடையாறு சிக்னலிலே
மொளகாபஜ்ஜி வாங்கித்தாரேன்

வாரத்துல நாலுமுறை
புதுகாமிக்சு உனக்குண்டு
டென்னிஸோ உதைபந்தோ
கைதட்ட நானிருக்கேன்

"ஒரு குடம் தண்ணியூத்தி"
வெளையாட்டு சொல்லித்தாரேன்
"ரிங்கா ரிங்கா ரோசஸு"
உங்கிட்ட கத்துக்கறேன்


பாடங்க அத்தனையும்
மண்டைக்குள் அனுப்பிக்க
மனுசங்க அனைவரையும்
மனசுக்குள் ஏத்திக்க

பாடங்க நீ படிக்க
உங்கம்மா
ஸ்கேலோட காத்திருக்கா
அவகிட்ட நான் படிச்ச
உலகம்னு ஒன்றுண்டு
கருத்தாக படிச்சுக்க
உங்கப்பா
உவப்போடு சொல்லித்தாரேன்



காக்கா கடிபோட்டு
ஃப்ரெண்டுங்க புடிச்சுக்க
அல்லாவும் ஜீசசும்
எதிரியில்ல தெரிஞ்சுக்க

கீழே விழுகயில
சிரிச்ச மொகத்தோட
நீயாவே எழுந்துக்க
அடுத்தவனைக் கைகாட்டி
அழுது புலம்பறது
ஷேம்ஷேம்னு தெரிஞ்சுக்க

உலக உருண்டையிலே
ஒருபக்கம் நானிருக்கேன்
உன்னை
உருவாக்கும் உலகத்தின்
வாசப்படியில் நீயிருக்க
காலாண்டுப் பரிச்சைக்குள்ள
கலர்பென்சிலோட நான் வாரேன்
ரெண்டுபேரும் சோடிபோட்டு
உன் கனவுகளுக்கு
கலர் அடிப்போம்

போய்வாடி என் மகளே!
மெக்காலே வடிவமைத்த
போர்க்களம்
வென்றுவாடி என் மகளே!

0 பின்னூட்டங்கள்: