பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - தமிழ்நதி - 1

புதைந்த கனவு
- தமிழ்நதி


சவுக்கு மரங்கள் தலைசுழற்றியாடுகின்றன. அந்தக் கல்லறைத் தோட்டத்துள்
புதைந்திருக்கும் அனைவருக்குமான அமானுஷ்யமான ஒற்றைப்புலம்பலாய் காற்று
ஊளையிடும் ஓசை. அதை விடுத்து பேரமைதி…! நகரத்தின் கிராதகங்களிலிருந்து
தப்பித்த நிம்மதி அவ்விடமெங்கும் பொலிகிறது. செவ்வலரி மரமொன்று
நிறமூட்டப்பட்ட கண்ணீர்த்துளிகளாக பூக்களை உதிர்த்தபடியிருக்கிறது. கோடை
எரித்ததுபோக எஞ்சிய வேர்கள் அப்போதுதான் பெய்த மழையில் பச்சைத் தலை
நீட்டியிருக்கின்றன.

சுற்றவர இளம்புல் போர்த்திய கற்படுக்கையின் கீழ்
உறங்கிக்கொண்டிருக்கிறாள் அவள். கண்ணிமைகளை மண் அரித்திருக்கும்.
உறங்குவதற்கு இமைகள் மட்டும் போதுமானதில்லை.

அவன் வருகிறான். அகன்ற தோள்கள். கருணை விரவிய கண்கள். தோற்றத்தில் அழகன்.
மலர்க்கொத்தை உள்ளே படுத்திருப்பவளின் கால்களில் உத்தேசமாக வைக்கிறான்.
ஞாபகங்கள் கண்கள் வழியாகப் பெருக்கெடுக்கின்றன. அவளோடு கூட நடந்த
தெருக்களில் இப்போது நடந்துகொண்டிருக்கிறான். சட்டென மறைகின்றன அவளது
பாதங்கள். தனிமையின் வழி குரூரமானது.

"என்னை மன்னித்துவிடு… நீ உயிரோடு இருந்தபோது தனிமை என்னும் முட்களைத்
தந்தேன். பிரிந்த பிறகு மலர்களோடு வந்திருக்கிறேன்."

முதுகுப்பரப்பு குலுங்க, ஞாபகத்தின் காலடியில் சரிந்திருக்கிறான் சில
நிமிடங்கள். கனக்கும் இதயத்தைத் தாங்கியபடி எழுந்திருக்கிறான். சற்று
தள்ளியிருக்கும் மரத்தினடியில் போய் அமர்கிறான். இலைகளிலிருந்து
சொட்டிக்கொண்டிருக்கிறது நேற்றைய மழை.

பறவைகளின் சிறகுகோதலைச் சிதைக்கிறது மேலுமொரு சோடிப் பாதங்களின் காலடி
ஓசை. இப்போது வந்திருப்பவன் முன்னையவனிலும் இளையவன். நீண்ட விழிகள்
கலங்கிச் சிவந்திருக்கின்றன. கரிய தாடி அவன் நிறத்தை மிகைப்படுத்துகிறது.
கல்லறையில் வைத்த ஒற்றைச் சிவப்பு ரோஜாவில் பனித்துளியோ அவன்
விழித்துளியோ ஒட்டியிருக்கிறது. செல்லரித்த பாதங்களை மானசீகமாக தன்
நெஞ்சிலே பொருத்துகிறான். கால் விரலிடுக்குகளிடையில்
சொரியவாரம்பிக்கின்றன கண்கள். இதயம் முழுவதும் கண்ணீராகித் ததும்புகிறது.

"என்னை விட்டு ஏன் போனாய் என் அன்பே?"

கல்லறைகளில் மோதி மோதி எதிரொலிக்கிறது அவன் கதறல். மரங்கள்
சிலிர்த்துக்கொள்கின்றன. கண்கிறங்கி சிறகுகோதிக்கொண்டிருந்த பறவைகளின்
மணிக்கண்கள் பயத்தில் உருள்கின்றன.

"தொலைவையே சகியாமல் பாலையில் பித்துப் பிடித்துப் பிதற்றியலைந்தவன் நான்.
உன் பிரிவை எப்படித் தாங்குவேன்? காதல் என்ற அற்புதத்தை என் வாழ்வில்
நிகழ்த்தி என்னை நெகிழ்த்தினாய். நான் உன்னோடு கூட இருக்க முடியாத கோபம்
உன்னை எரித்ததா… என் கனவு மலரே! வாக்குறுதிகளுக்காக என் வானவில்லை
இழந்தேன்"

எழுந்தான். அதுவரை தன்னை உற்றுப் பார்த்திருந்தவனின் கண்களைக் கண்டான்.
இருவரது கண்களிலும் இருந்த நீரினுள் அவளே கலங்கித் தெரிந்தாள். அவன் ஏதோ
பேச உன்னுகிறான். உதடுகள் அசைந்ததன்றி ஓசையில்லை. இவன் சொற்களைத்
தேடுகிறான். இதய நரம்புகளுள் சிக்கிக்கொண்டுவிட்ட சொற்களை விடுவிக்க
இயலவில்லை.

மௌனம். மகா மௌனம்!

குற்றவுணர்வில் தலைதாழ்த்தியபடி அவர்கள் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.

அவளது புன்னகையின் ஒளி கல்லறைகளில் படர்ந்துகொண்டிருக்கிறது. அவள்
உறங்கிக்கொண்டிருக்கிறாள். வாழும்போது புறக்கணிக்கப்பட்டவளை மரணம்
கையேந்திக்கொண்டது. உறங்குவதற்கு இமைகள் தேவையென்று எவர் சொன்னது?

0 பின்னூட்டங்கள்: