பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - தமிழ்நதி - 6

அங்காடி நாய் அலைச்சல்
- தமிழ்நதி


அலைதலின்போது நிலைத்த இருப்பிற்கும், நிலைகொள்ளும்போது அலைதலுக்குமாக
அங்காடி நாய்போல ஓடித்திரியும் முரண்மனநிலையைத் தவிர்க்க முடிவதில்லை.
ஒரு புத்தகத்தை வாசிக்கத் தொடங்கி திடீரென அதைப் பாதியிலேயே
மூடிவைத்துவிட்டு ஒரு பயணம் கிளம்பிப்போய் மீண்டும் சில மாதங்கள் கழித்து
அதை வந்து தொடும்போது குற்றவுணர்வாக இருக்கிறது. வேரிலிருந்து
பலவந்தமாகப் பிடுங்கியெறியப்பட்டதன் பின்விளைவுகளிலொன்றே இதுவென, செலவு
குறித்த விசனம் மிகும்போதெல்லாம் சமாதானம் கொள்கிறேன். உறவுகள் மீதான
நம்பிக்கை நீர்த்துப்போகும்போது, அலைதலின் வழியாக சிதறிய சுயத்தைச்
சேகரிக்கிறேன் என்ற நெஞ்சறிந்த பொய்யையும் முயற்சித்துப் பார்த்ததுண்டு.
எது எவ்வாறு இருப்பினும், மனித நடத்தைகளின் விசித்திரங்களுக்கு நதிமூலம்
இருக்கவேண்டுமென்பதில்லையே.


கனடா அழகாகவும் சுத்தமாகவும் அமைதியாகவும் பெருந்தன்மையுடனும்
நாசூக்குடைய மனிதர்களுடனும் இருந்தது. போய்ச்சேர்ந்த காலமோ இளவேனில்.
சாலையோரங்களில் பூக்கள் நிறங்களை அவிழ்த்திருந்தன. செழித்தடர்ந்த
மரங்களின் பச்சைக்கு ஒப்புவமையில்லை. யாராவது தண்ணீர் தெளித்து
அமர்த்திச் சோறு போட்டால் மறுப்பின்றிச் சாப்பிட்டுவிடக்கூடிய அளவிற்கு
சாலைகள் சுத்தமாயிருந்தன. சாலைகளை ஒட்டிய நடைபாதைகளில் மாலை நடைக்காக
மட்டுமே நடந்த மனிதர்களையன்றி வேறெவரையும் காணேன். இலங்கை, இந்தியா என்று
ஐந்தாண்டுகளைக் கழித்துவிட்டுச் சென்ற நான், நண்பர்களையும், சாலைகளையும்
கட்டிடங்களையும் மீள்கண்டுபிடிக்க வேண்டியவளாக இருந்தேன். காலநிலையும்
ஒப்பீட்டளவில் தோலுக்கு இதமாயிருந்தது. எனினும் என்ன…சென்றதிலிருந்து
நிலைகொள்ளவில்லை. ஐந்து நட்சத்திர விடுதியின் பிரமாண்டத்தோடும்
பகட்டோடும் பளபளக்கும் மனிதர்களோடும் ஒட்டமுடியாத கிராமத்தவன்
புழுதிபடிந்த தெருக்களுக்குத் திரும்ப ஏங்குவதை ஒத்திருந்தது மனம். ஒரு
சொல்லைத்தானும் வாசிக்க முடியவில்லை.


கண்ணாடிக் கட்டிடங்களில் நெளிநிழல் படர்த்தி வாகனங்கள் விரையும்
வேகநெடுஞ்சாலையைப் பார்த்தபடி எத்தனை நேரம்தான் அமர்ந்திருப்பது?
குற்றவுலகொன்றினுள் வாழ்ந்துகொண்டிருப்பதாக அச்சுறுத்தும், அடுத்தவர்
அந்தரங்கங்களில் கிளுகிளுக்கும், போரின் குருதி கொப்பளித்து
வரவேற்பறையில் வழியும் தொலைக்காட்சியைத் திறக்கவே அச்சமாக இருந்தது. சில
நாட்கள் முன்னர்தான் தாயொருத்தி தன் குழந்தைகள் இரண்டைக் கொன்றிருந்தாள்.
தோழியின் கார்த் தரிப்பிடத்தில் ஒரு கறுப்பினச் சிறுவன் சுடப்பட்டு
இறந்து கிடந்தான். நள்ளிரவு கடந்து போதையில் திரும்புவதை காலைக்கடன் போல
தவறாது செய்துகொண்டிருந்த கணவனை விவாகரத்து செய்யவிருப்பதை
உறவுக்காரியொருத்தி அழுகையோடு தொலைபேசியூடாகச் சொல்லியபடியிருந்தாள்.
மாதக் கணக்கில் நேரத்தையும் கோடிக்கணக்கில் பணத்தையும் செலவழித்து
வாங்கிய வீடுகள் வேலைகளிலிருந்து திரும்பும் மனிதர்களுக்காக இருள்
வெறித்துத் தவமிருந்தன. வார விடுமுறைகளுக்காக வாழ்க்கை
காத்துக்கிடப்பதைக் காணச்சகிக்கவில்லை. வசதிகள் நிறைந்ததெனினும்
வாழிடத்தை அந்நியமாக உணரத்தொடங்கும்போது இயக்கம் நின்றுபோய்விடுகிறது.


ஓட்டாத மண்ணை உதறிக் கடந்தோடும் வாய்ப்பும் திமிரும் சாத்தியமும்
உள்ளவர்களில் ஒருத்தியாயிருப்பதில் நிறைவே. எனினும், தொடர்மாடிக்
குடியிருப்பொன்றை சிறுகச் சிறுக 'வீடு'ஆக்கியபின் வெளியேறுவதில்
உள்ளுக்குள் சின்ன வருத்தம் இருக்கவே செய்தது. ஆடம்பரப் பொருட்கள்
நிறைந்த, குளிரூட்டப்பட்ட வசதியான வீட்டுச்சிறைகளைத் துறப்பதற்கான துணிவை
தனிமையன்றி வேறெதனால் அளிக்கவியலும்? அங்காடி நாய் தூக்கத்திலிருந்து
விழித்துக்கொண்டுவிட்டது. பயணப்பொதிகளை அயர்ச்சியோடு அடுக்கும்போதெல்லாம்
அதை (அங்காடி நாயை) நஞ்சூட்டிக் கொன்றுவிடலாம் போலிருக்கிறது.


உலவும் வெளிகள் விரிய விரிய, பழகும் மனிதர்கள் பெருகப் பெருக
பாதுகாப்பற்றதும் சுயநலம் மிக்கதுமான உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
என்ற எண்ணம் உறுதிப்படுகிறது. அதிலும் போர் நடந்துகொண்டிருக்கும் ஒரு
நாட்டில் (அது சொந்த மண்ணே ஆனாலும்) தற்காலிகமாகப் போய்த் தங்க
நேரும்போது பயம் நிழல்போல தொடர்ந்துகொண்டேயிருப்பதை அவதானிக்க முடிகிறது.
கொழும்பின் காலி வீதியிலுள்ள சோதனைச் சாவடிகளைக்
கடந்துசெல்லும்போதெல்லாம் 'நிறுத்திவிடக்கூடாதே' என்ற பதட்டம் பரவியது.
முன்பாவது வெளிநாட்டுக் கடவுச்சீட்டு என்பதற்கு ஒரு மரியாதை (அநாவசியமான)
இருந்தது. அவசரகாலச் சட்டம் கடுமையாக்கப்பட்ட பிற்பாடு கடவுச்சீட்டாவது
கத்தரிக்காயாவது! சனக்கூட்டம் அதிகம் உள்ள பொது இடங்களுக்குப் போவதைத்
தவிர்க்குமாறு நண்பர்கள் சொன்னார்கள். எங்கே எப்போது குண்டு வெடித்து
சதைத் துண்டுகளாவோமோ என்ற பீதி நிலவுகிறது. வீதிகளில்
அலறியடித்துக்கொண்டு போகும் 'அம்புலன்ஸ்'வண்டிகளின் சத்தத்தைக்
கேட்கும்போது, 'எங்கே? எத்தனை?'என்று நம்மையறியாமல் கேட்டுவிடுகிறோம்.
உயிர்களின் மதிப்பு வெறும் இலக்கமாகிவிட்டிருக்கிறது. இறப்பின் எண்ணிக்கை
நம்மைப் பாதிப்பதும் இனம்சார்ந்த விசயமாயிருக்கிறது.


அடையாள அட்டை கையில் இல்லாமல் தெருவில் இறங்குபவர்கள் இல்லாமற்
போகிறார்கள். சில சமயங்களில் அடையாள அட்டை வைத்திருப்பவர்களும்கூட.
தெரிந்த குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனொருவன் திடீரெனக் காணாமல் போனான்.
அந்தக் குடும்பம் காவல் நிலையங்களில் காவல் கிடந்தது. தெஹிவளைக்
கடற்கரையில் பிணமொன்று கிடப்பதாகவும் வந்து உறுதிப்படுத்தும்படியும்
தகவல் வர ஓடினார்கள். அந்தப் பிணம் அவனுடையதல்ல என்று தெரிந்து தெளிந்த
பிறகு, சிறையில் எனினும் உயிருடன் இருந்தால் போதுமென்று
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.


விமான நிலையத்திலிருந்து வெளிவந்ததும் சென்னையின் போக்குவரத்து
மூச்சுமுட்டுகிறது. ஒலிப்பான்கள் காதைக் கிழிக்கின்றன. வெக்கை 'வந்தாயா
வா'என்று முகத்தில் அறைகிறது. உயிரே போவதைப் போன்ற அவசரத்தில் சாலையைக்
கடக்கும் மனிதர்கள் மாநகரம் மாநகரம் என முரசறைகிறார்கள். எனின் என்ன… வாழ
அழைக்கிறது என்னறை. எழுது மேசையின் வழி தெரியும் பூவரசு மஞ்சள் பூவோடு
காற்றில் இழைகிறது. மழை இருந்திருந்து 'வரட்டுமா… வரட்டுமா'என்று செல்லம்
பொழிகிறது. அங்காடி நாய் தற்காலிகமாகத் தூங்கவாரம்பித்திருக்கிறது. அது
எழுந்திருந்தால்தான் என்ன… அநிச்சயத்தினால்தானே வாழ்வு அழகும் பொருளும்
பொருந்தியதாயிருக்கிறது?


நன்றி: உயிரோசை இணைய இதழ்

0 பின்னூட்டங்கள்: