பண்புடன் ஆண்டு விழா - தீபாவளி சிறப்பு நெடுங்கதை - 3 - ஹரன் பிரசன்னா

திறப்பு : பகுதி - 3
- ஹரன் பிரசன்னா


விஜயலக்ஷ்மிக்கு கதை கேட்பது போலிருந்தது. சீனிவாசனின் சின்ன தாத்தா தனது நடுங்கும் குரலில் சொன்னதையெல்லாம் கேட்கும்போது அதிக பயமும் கொஞ்சம் ஆர்வமும் இருந்தன. ஆனால் அவளால் அதைக் கேட்காமல் இருக்கவோ நம்பாமல் இருக்கவோ முடியவில்லை.

'நிறைமாச கர்ப்பிணி. தூக்கிக்கிட்டு ஓடினாங்க. மாட்டுவண்டிலதான் கொண்டு போனாங்களாம். மாட்டை அடி அடின்னு அடிச்சான் மாட்டுவண்டிக்காரன். மாடுங்க பயந்து வெறிபிடிச்சு ஓடிச்சுங்க. அவ உள்ள இருந்து வலி தாங்காம கத்துறா. முதல்நாள் நல்ல மழை வேற. அப்பல்லாம் கரண்ட்டு வேற கிடையாது. பிரசவம் பாக்க பக்கத்துக்கு ஊருக்குத் தூக்கிக்கிட்டு ஓடணும். போற வழியெல்லாம் தண்ணி, மேடு பள்ளம். கொண்டு போறதுக்குள்ள உயிர் போயிடும்னுதான் பயந்திருக்காங்க. பனிக்குடமும் உடைஞ்சிடுச்சு போல. கூட இருந்த அவ அம்மா வேண்டாத தெய்வம் பாக்கியில்ல. பக்கத்து கிராமத்துல மருத்துவச்சி வீட்டுக்கு கொண்டு போகும்போது அவளுக்கு நினைப்பே இல்லை. எப்படியோ குழந்தை பொறந்தது. அவ தன் குழந்தையைப் பார்க்காமயே மயங்கிட்டா. பெண் குழந்தை. அதைப் பார்த்தவங்க பயந்து போயிட்டாங்க. அப்படி ஒரு விகாரமான முகம். இதை எப்படி இவ வளர்க்கப்போறான்னு பயம். மெல்ல ஊருக்குள்ள சாமி குத்தம்தான் அப்படி பொறந்திருக்குன்னு பேச்சு பரவிப்போச்சு. பெத்தவனுக்கு என்ன செய்றதுன்னே தெரியலை. ஆனா ஒரு மணி நேரத்துல அந்தக் குழந்தை செத்துப்போச்சு. அதை வீட்டுக்குப் பின்னாடியே பொதைச்சிட்டாங்களாம். அந்த இடத்துலேர்ந்து ஒரு கல்லை எடுத்து வெச்சி கும்பிட ஆரம்பிச்சாங்களாம். என்ன சாமி குத்தம் இருந்தாலும் மன்னிச்சுக்கோமான்னு சொல்லி அதையே கும்பிட ஆரம்பிச்சாங்களாம். அதுதான் கன்னி தெய்வம். இதெல்லாம் முன்னூறு நானூறு வருசத்துக் கதை. அது கல்லுதான். ஆனா நினைச்ச உருவத்துல வரும். சிவப்புப் பாவாடை காட்டிக்கிட்டு சின்ன பொண்ணா நானே பார்த்திருக்கேன்.' அவர் உடல் விக்கித்துப்போய் இருந்தது.

பின்னாலிருக்கும் புளியமரமும் கிட்டத்தட்ட நானூறு வருடங்களாக அங்கிருக்கிறது என்ற ஒரு கதையைக் கேட்டிருக்கிறாள். இரவுகளில் கருப்பசாமி அங்கே வந்துவிட்டுப் போகும் என்றும் ஒரு கதை உண்டு. சிலர் அதைப் பொய் என்று மறுத்தார்கள். 'எப்படி கன்னித் தெய்வம் இருக்கிறப்ப கருப்பசாமி வரும்' என்பது அவர்கள் கேள்வி. இரண்டு காவல்தெய்வங்கள் தங்கள் எல்லைகளை மீறுவதில்லை என்று நம்பினார்கள். இதுபோன்று பல கதைகளைக் கேட்டு வளர்ந்தவள் விஜயலக்ஷ்மி. இந்தக் கதைகளுக்குப் பின்னர் கன்னித் தெய்வத்தின் மீது அவளுக்கு ஒரு பயம் வந்தது. தன் மாமியார் விடாமல் கன்னித் தெய்வத்துக்கு செய்து வந்த பூஜையை அவளும் செய்யத் தொடங்கினாள்.

ஆஸ்பத்திரியில் விஜயலக்ஷ்மி அனுவின் அருகில் உட்கார்ந்துகொண்டிருந்தாள். டாக்டர்கள் அனுவின் இடுப்பெலும்பு பலமிழந்து போய்விட்டதாகச் சொன்னார்கள். அவள் கைகளை ஊன்றி நடப்பதால் உடலின் எடை முழுவதும் இடுப்பெலும்பில் இறங்கி, இடுப்பெலும்பு நொறுங்கிவிட்டது என்றார்கள். தலையில் அடி பட்டால் எப்படி இடுப்பெலும்பு தேயும் என்று விஜயலக்ஷ்மி ஒன்றும் புரியாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். அனு இரண்டு கைகளையும் குறுக்கக் கட்டிப் படுத்துக்கொண்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். சீனிவாசன் வெளியே யாரோ ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் பெயர் ராமச்சந்திர ராவ். விரை வீங்கிப்போய் ஆபரேஷனுக்காக முதல்நாள்தான் அட்மிட் ஆகியிருந்தார். எதிர் படுக்கையில் கொஞ்சிக்கொண்டிருந்த ஜோடிகள் டிஸ்ஜார்ஜ் ஆன அன்று சீனிவாசன் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

வெளியில் ராவும் சீனிவாசனும் பேசிக்கொண்டிருந்தார்கள். ராவுக்குத் தெரியாத விஷயங்களே இருக்காதோ என்று அதிசயப்பட்டுப் போனார் சீனிவாசன். எதைச் சொன்னாலும் அதிலிருக்கும் நியாய, அநியாயங்களை ராவ் பிரித்தெடுத்து வைத்து, இரண்டுக்குமான காரணங்களை அடுக்கியபோது அவன் ஒரு மகான் என்று கூட நினைத்துக்கொண்டார். ஒரு மகானுக்கு ஏன் ஓதம் தள்ளவேண்டும் என்றும் நினைத்தார். ஆனால் உடனே அந்த நினைப்பைப் போக்கிகொண்டார். என்ன இருந்தாலும் அவரும் ஒரு மாத்வர்.

ராவ் ஜோதிடத்தில் பெரும் நம்பிக்கையுள்ளவர் என்பது அவர் பேசிய இரண்டொரு நிமிடங்களில் தெரிந்துவிட்டது. எல்லாவற்றிற்கும் ஒரு ஜோசியம் சொன்னார். காரணங்கள் சொன்னார். சீனிவாசனின் பிறந்த நாள் தேதியைக் கேட்டுவிட்டு, அந்த எண்ணைக் கூட்டி என்னவோ மனதில் நினைத்துக்கொண்டு, 'நீங்க பிறந்த தேதி சரியில்லை, வேற தேதியில பிறந்திருக்கணும்' என்றார். நியூமரலாஜியும் அவருக்குத் தெரியும். சீனிவாசனும் விஜயலக்ஷ்மியும் தாலி கட்டிக்கொண்ட நாள் சரியில்லை என்றும், அதற்கு பிராயசித்தமாக மறுதாலி கட்டவேண்டும் என்றும் சொன்னார் ராவ். தனது எழுபதாவது வயதில் மறுதாலி கட்டி என்ன ஆகப்போகிறது என்று யோசித்தார் சீனிவாசன். 'கொழந்தைங்களுக்கு நல்லது இல்லையா' என்றார் ராவ். ராவ் சொன்னதிலும் விஷயம் உண்டு என்று எண்ணிக்கொண்டார் சீனிவாசன்.

பேச்சு சீனிவாசனின் பெற்றோர்கள் பக்கம் திரும்பியது. சீனிவாசன் தன் கதைகளை எல்லாம், தன்மீது தவறில்லாதவாறு சொன்னார். அனுவின் நிலைமையையும் அதற்கான தன் வருத்தங்களையும் சொன்னார். சட்டென்று கேட்டார் ராவ். 'பித்ருக்கள் காரியமெல்லாம் செய்றீங்கள்ல?' சீனிவாசன் உதட்டைப் பிதுக்கினார். தனது தந்தைக்கும் பித்ருக்களுக்குக் காரியம் செய்யும் வழக்கமில்லை என்றார். உடனே பிடித்துக்கொண்டார் ராவ். எல்லாவற்றிற்கும் பித்ருக்கள் சாபமே காரணம் என்றார். ஏழு குழந்தைகள் பிறந்து இறந்ததும், எட்டாவது குழந்தை நன்றாகப் பிறந்தும் கால் சரியில்லாமல் போனதும் என எல்லாமே பித்ருக்கள் சாபம் என்றார். 'நாம நல்லது செஞ்சா அது எப்படி நம்ம சந்ததிக்கு வருதோ நம்ம பாவங்களும் அப்படியே அவங்களுக்குத்தான் வருது. வண்டி வண்டியா பாவம் செஞ்சு வெச்சிருக்கிறீங்க. உடனே காரியமெல்லாம் செய்ங்க' என்றார். சீனிவாசனின் தாய் தந்தை இறந்த திதிக்களைக் கண்டுபிடித்து, எந்த எந்த நாளில் திதி செய்யவேண்டும் என எழுதிக்கொடுத்தார். தனக்கு இந்த வயதில் இப்படி ஒரு நண்பரா என ஏகத்துக்கும் சந்தோஷப்பட்டுப் போனார் சீனிவாசன். இப்படி ஒருத்தன் தன் வயசுக்காலத்திலேயே இருந்திருந்தால் தனக்கு உபயோகமாக இருந்திருக்கும் என நினைத்துக்கொண்டார்.

ராவ் தனக்குத் தெரிந்த ஐயரையே ஏற்பாடு செய்துகொடுத்தார். அனுவைத் தான் பார்த்துக்கொள்வதாகச் சொல்லி, விஜயலக்ஷ்மியையும் சீனிவாசனையும் வீட்டுக்கு அனுப்பிவைத்தார். வீட்டில் ஹோமங்கள் வளர்த்து, மந்திரங்கள் சொல்லி, பிண்டம் வைத்தார் சீனிவாசன். தனது அம்மாவையும் அப்பாவையும் மானசீகமாக வணங்கினார். அம்மாவிடம் பலவாறாக மன்னிப்புக் கேட்டார். கன்னித் தெய்வம் குளிர குளிர அன்றும் மழை பெய்தது.

(தொடரும்)

0 பின்னூட்டங்கள்: