பண்புடன் ஆண்டு விழா - தீபாவளி சிறப்பு நெடுங்கதை - 4 - ஹரன் பிரசன்னா

திறப்பு : பகுதி - 4
- ஹரன் பிரசன்னா


அனுவிற்கு ஆச்சரியமாக இருந்தது. பின்பு பொறாமையாகவும் இருந்தது. அவளுக்குத் தெரிந்து ரமணனை சிறிய பையனாகப் பார்த்திருக்கிறாள். இன்று அவன் ஒருத்தியை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டான் என்று அறிந்தபோது அவளால் அதை நம்பவே முடியவில்லை. ஓர் ஆணாய்ப் பிறந்திருக்கவேண்டியதின் அவசியத்தை மீண்டும் உணர்ந்தாள்.

ரமணனிடம் எதைப் பார்த்து மயங்கி ஒருத்தி ஓடினாள் என்று தெரியவில்லை. ரமணன் படித்துக்கொண்டிருக்கிறான். ஓடிப்போனால் மறுவேளை சாப்பாட்டுக்குக்கூட உத்திரவாதமில்லை. ரமணன் மிகப்பெரிய அழகனுமில்லை. ஆறடி உயரத்தில் எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்னும் தோற்றத்தில் இருப்பான். அவன் முகத்திலேயே மூக்கு ஒன்றுதான் இருக்கும். இவனை நம்பி எப்படி ஒரு பெண் ஓடினாள்? ஆனால் ரமணனுக்கு இரண்டு கால்களும் இருக்கின்றன. ஓடிய பெண்ணுக்கும் நிச்சயம் இரண்டு கால்களும் இருந்திருக்கும்.

அன்று இரவு முழுவதும் ரமணனைத் தேடினார்கள். ரமணன் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை. ஓடிய பெண்ணின் வீட்டைச் சேர்ந்தவர்கள் ரமணனின் அப்பாவை மிரட்டிவிட்டுப் போனதாக விஜயலக்ஷ்மி சொன்னாள். அன்று இரவு ரமணன் எங்கே தங்கியிருப்பான்? எப்படியும் அன்றிரவு ரமணனும் அப்பெண்ணும் உறவு கொண்டிருப்பார்கள். இப்படி நினைத்தபோதே அனுவிற்கும் பொறாமையும் ஏக்கமும் ஒரு சேர எழுந்தன. தனக்குத் திருமணம் ஆகாதது குறித்து பெரும் வேதனைகள் அவளுக்கு இருந்தன. தன் திருமணத்தைப் பற்றி யாரும் சிந்திக்கிறார்களா என்பதுகூட அவளுக்குத் தெரியவில்லை. அம்மாவிடம் சொன்னால் அவள் தான் பார்த்த வரன்களைச் சொல்லி, 'எல்லாம் பார்த்துக்கிட்டே இருக்கோம், ஒண்ணும் அமையலை' என்று சொல்லக்கூடும்.

அம்மாவிடம் திடீரென்று தன் கல்யாணம் பற்றிக் கேட்டாள். 'பார்த்துக்கிட்டுதான இருக்கிறோம். சனிக்கிழமை சனிக்கிழமை நவக்கிரகத்துக்கு பூஜை செய்யறேன். நிச்சயம் உனக்கு இந்த வருஷத்துல வரன் அமைஞ்சிடும்' என்றாள். அனுவிற்கு எரிச்சலும் கோபமும் மண்டிக்கொண்டு வந்தது. நிதானம் இழக்கத் தொடங்கினாள்.

அனு நிதானம் இழந்தால் எப்படிப் பேசுவாள் என்பதை விஜயலக்ஷ்மி அறிந்தவள்தான். இதேபோல முன்பொருமுறை தனக்கு கல்யாணம் ஆகவில்லை என்பது குறித்து என்னவெல்லாமோ பேசத் தொடங்கினாள் அனு. அவளுக்கு அறிவுரை சொல்ல வந்த அனுவின் ஒன்றுவிட்ட தங்கையை அனு கேட்டகேள்விகள் விஜயலக்ஷ்மியையே அதிர வைத்தன. 'உனக்கு என்ன வயசு? என்னவிட ரெண்டு வயசு சின்னவதானே? உனக்கு ரெண்டு குழந்தைங்க. உனக்கு தோணினப்பல்லாம் உன் புருஷனோட படுத்துக்கலாம்ல?' வந்த பெண் கேவலமாக உணர்ந்தாள். விஜயலக்ஷ்மியிடம் 'ரொம்ப கேவலமா பேசறா. கல்யாணத்துக்காக அலையறா. பார்த்துக்கோங்க' என்று சொல்லிவிட்டுப் போனாள். உள்ளேயிருந்து அனு கத்தினாள். 'எவ அலயறா. நீ அலஞ்ச கதை எனக்குத் தெரியாதாடி முண்ட. இனிமே எனக்கு அத சொல்றேன் இத சொல்றேன்னு இங்க வா, தட்டுவாணி பல்ல ஒடைக்கிறேன். உன் புருஷன் செத்தா தெரியும்டி உனக்கு அலயறதுன்னா என்னான்னு.' விஜயலக்ஷ்மிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அனு கத்திக்கொண்டிருக்க, விஜயலக்ஷ்மி வீட்டின் கதவை அடைத்துவிட்டு கோவிலுக்குப் போனாள்.

எதாவது சொல்லி, அனு மீண்டும் அதேபோல் கத்தத் தொடங்கினால் ஆஸ்பத்திரியில் எல்லார் முன்னும் மானம் போய்விடும் எனப் பயந்து, அனுவோடு பேச்சைத் தொடராமல் ஆஸ்பத்திரியை விட்டு வெளியில் போனாள். வெளியில் ரமணாவின் அப்பா வந்துகொண்டிருந்தார். அவர் நடையில் ஒரு வேகம் இருந்தது. விஜயலக்ஷ்மியிடம் 'சீனிவாசன் இல்லியா' என்றார். 'வெளிய போயிருக்கார்' என்றாள். 'வந்தா சொல்லுங்க ரமணன் கிடைச்சிட்டான். அந்த பொண்ணை அவங்க வீட்டுலயே விட்டாச்சு. நாலு நாள் சோத்துக்கு இல்லாம அலஞ்சி வேற வழியில்லாம அவனே வந்துட்டான்...' என்றார். விஜயலக்ஷ்மி தான் இதை தன் கணவனிடம் சொல்லிவிடுவதாகவும் குழந்தையைப் பார்த்துக்கோங்க என்றும் சொல்லி அனுப்பினாள்.

ஆஸ்பத்திரிக்குள்ளே வந்து அனுவிடம் பேச்சு கொடுத்தாள். ரமணா பற்றிச் சொன்னாள். அனுவிற்கு சந்தோஷமாக இருந்தது. '19 வயசுல என்ன கல்யாணம்' என்றாள். ஆனாலும் நான்கு நாள் இரவுகளில் ரமணனும் அப்பெண்ணும் என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டாள். அவளை ஏக்கமும் காமும் சூழ்ந்தன.

விஜயலக்ஷ்மி அனுவின் கட்டிலுக்குக் கீழே ஒரு பாயை விரித்து படுத்துக்கொண்டாள். அனுவை பலவிதமான எண்ணங்கள் ஓடின. தனக்கு கால் இல்லாமல் போனது குறித்து தன் வாழ்க்கையில் லட்சத்து ஓராவது முறையாக வருந்தினாள். தான் கொஞ்சம் சிவப்பாகவாவது இருந்திருந்தால் தன் உடலைக்காட்டி யாரையாவது மயக்கியிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டாள். காலை மெல்ல வருடினாள். முழங்காலில் காய் காய்த்து சிறிய சிறிய தோல் உருண்டைகள் காய்த்துத் தொங்க, அவளுக்கே அருவருப்பாக இருந்தது. அதற்குக் கீழே கால் சூம்பித் தொங்கியது. இந்தக் கால்களுக்கு இடையில் படுத்துக்கொள்ள எவன் வருவான் என்று தோன்றியது அவளுக்கு. அவளது பெருமூச்சில் அவளது மார்பு ஒருமுறை விம்மி அடங்கியது. விஜயலக்ஷ்மி அழுவது போலத் தோன்றியது அனுவிற்கு. 'அம்மா' என்று அழைத்தாள். பதிலில்லை. மீண்டும் அனு அழைக்காமல் எதையோ யோசிக்கத் தொடங்கினாள்.

(தொடரும்)

0 பின்னூட்டங்கள்: