நதியறியும் கரைவிரிவு
- தமிழ்நதி
விழிப்பதற்கும் எழுவதற்குமிடையிலான
வெறுமைசூழ் வெளிநிரப்பும்
பட்டியல்களிடம்
என் நாளை
இனியும் தோற்பதற்கில்லை.
இன்று
மழை பெய்து
உலகை மலர்த்தலாம்
ஒரு அழைப்பில்
என் தொலைபேசி உயிர்க்கலாம்.
என்னாலேயே மறக்கப்பட்ட (வெறுக்கப்பட்ட)
வரிகளைச் சிலாகித்து
இன்று எவருடையவோ
மின்னஞ்சல் வரக்கூடும்.
அன்பின் யாசகத் தட்டேந்தி
எவரெவரோ பின்னலைந்து பெற்றதெல்லாம்
செல்லாத நாணயங்களே!
கண்களால் கடல் குடித்தபடி
செவிகளில் இசை குளிர
நடப்பதற்கீடில்லை
ஈரப்பசையற்ற எவனொருவனின் முத்தமும்.
வாழ்க்கை ஒரு கண்ணீர்த்துளியாய்
சிந்திவிட்டதென்று
எத்தனை காலந்தான் எழுதுவது?
"மயிரே போச்சு!"
நதியொன்றே அறியும்
தான் நடக்கும்
கரை விரிவு!
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - தமிழ்நதி - 2
மதியம் அக்டோபர் 21, 2008
பதிவு செய்தது : பண்புடன் at 10:23
பதிவு வகை : கவிதைகள், வார நட்சத்திரம்
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment