பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - தமிழ்நதி - 4

ஞாபக மழை
- தமிழ்நதி


இங்கு மழைக்காலம் ஆரம்பமாகிவிட்டது. சிறுதுளியாய் தொடங்கி பெருமழையாய்
பிய்த்துக்கொண்டு கொட்டுகிறது. இடியும் மின்னலுமாய் வானம்
அதகளப்படுகிறது. நீர்க்குழந்தையாய் செல்லம் கொண்டாடி உள்ளே குதித்த மழையை
யன்னல், கதவுகளைப் பூட்டி நிறுத்திவிட்டேன். எதைப் பூட்டி உன் நினைவுகளை
வெளியில் அனுப்புவது என்று தெரியவில்லை. பெருகிப் பெருகி வழிகிறது.
விடிந்ததும் வடிந்துவிடும் வெள்ளம்போல பிரிந்ததும் ஞாபகங்களும்
மறந்துபோனால் எவ்வளவு நன்றாகவிருக்கும். ஒளிவாளால் வானைப் பிளக்கும்
மின்னலென பளிச்சென்று பதறி ஓடுகிறது உன் நினைவு.

அந்தக் கட்டிடத்தின் வராந்தாவில் நானும் நீயும் மழை வெளிக்கக்
காத்திருக்கிறோம். உன்னோடு தனித்திருக்கும் ஒரு நிமிடத்தையும் இழக்க
விரும்பாமல் நான் 'போவோம் போவோம்'என்கிறேன். நீயோ எனக்கு காய்ச்சல்
வந்துவிடும் என்கிறாய். 'காதலைவிடப் பெரிய காய்ச்சல் இருக்கிறதா
என்ன?'என்று மனசுக்குள் நினைத்துக்கொள்கிறேன். மழை அன்றைக்கென
அடம்பிடித்துப் பொழிகிறது. அரை மணிக்குள் சாலைகள் நதிகளாகிவிட்டன. பகல்
இருட்டிவிட்டதாய் பாவனை பண்ணுகிறது. ஈற்றில் நனைந்தபடி அறையை அடைகிறோம்.
விடுதியறை விளிம்புகளில் அமர்ந்து வட்டக் கருமணிக் கண்களை உருட்டி
உருட்டி புறாக்கள் சிறகுலர்த்துகின்றன. ஒன்றின் சிறகினுள் மற்றது
தலைவைத்து குளிர்காய்கிறது. யன்னல் வழி தெரிந்த ஈரச்சாலையில் தலைகீழாக
நெளிந்தோடுகின்றன வாகனங்கள். நாமிருவரும் அன்று புறாக்களாயிருக்க
ஆசைப்பட்டோம்.

விரையும் பேருந்தின் கண்ணாடிகள் மீது அவசரமாய் மழை
எழுதிக்கொண்டிருக்கிறது. வழுக்கி வழுக்கிச் செல்லும் தண்ணீர்ப் பாம்புகளை
நினைவுறுத்துவதாக நான் உன்னிடம் சொல்கிறேன். கடலினுள் விழும் மழையைச்
சற்றுநேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு எழுதுதாள் கேட்கிறாய் என்னிடம்.
'நீ பெரிய கவிஞனாக்கும்'என்று நான் வழக்கம்போல உன்னைக் கேலி செய்கிறேன்.
'நீ மட்டுமென்ன…?'என்ற உன் விழிகளுள் இறங்கிக் காணாமல் போய்விடவேண்டும்
போலிருந்தது.

அன்றொருநாள் இரவு எனது வீட்டின் படிகளில் நீ இறங்கிச் சென்றபோதும் மழை
பொழிந்துகொண்டிருந்தது. கையசைத்துவிட்டு காரில் ஏறுகிறாய். பல்கனியில்
நின்று மற்றவரறியாதபடி உன் கண்களைப் பார்க்கிறேன். நீண்ட விழிகளின்
கரையூறிய ஈரம் மழைத்துளிதான் என்று என்னை நான் தேற்றிக்கொண்டேன்.
தொலைபேசியில் உன் கண்ணீரை ஒப்புக்கொண்டாய். ஆண்கள் அழக்கூடாதென
இவர்களெல்லாம் சொல்லும் விதியை அடிக்கடி முறிப்பவன் நீயாகத்தானிருக்கும்.

இருபுறமும் மரங்கள் தலை வளைத்து முத்தமிடும் சாலையில் காரில்
விரைந்துகொண்டிருக்கிறோம். அடை மழை. வெளிப்புறத்தை மறைக்கிறது கனத்த
நீர்த்திரை. வயல்கள், மரங்கள், நீர்நிலைகள் எல்லாம் மறைந்து நிறமழிகிறது
உலகு. அன்றைக்குப்போல் என்றும் அத்தனை விரைவாய் அந்நகரைச்
சென்றடைந்ததில்லை என்று நாம் பிறகு பேசிக்கொண்டோம்.

அங்கே மழை பொழிகிறதா? அடிக்கடி என்னை நினைத்துக்கொள்கிறாயா? அந்தப் பாலை
வெளியிலும் புறாக்கள் தத்தித் திரிகின்றனவா? அவற்றின் ரோஜா நிறத் தந்தக்
கால்களை கண்களில் ஒற்றிக்கொள்ள வேண்டும் போலிருப்பதாக நாம்
பேசிக்கொண்டதுன் நினைவில் வருமே…! மழை மண்ணைக் கிளர்த்துவதுபோல மனசையும்
கிளர்த்துகிறது. நம்வரையில் மழை என்பது மழை மட்டுமில்லை. பிரிவும்
அப்படித்தான் இல்லையா என் அன்பே!

2 பின்னூட்டங்கள்:

N Suresh said...

அன்புள்ள தமிழ்நதி,

வணக்கம்.

ஞாபக மழை என்ற இந்த உங்களின் படைப்பை நான் ரசித்து வாசித்தேன்.

வார்த்தைகளால் நினைவுகளை எடுத்து சித்திரமாக்கி வாசகனுக்கு தந்துள்ளீர்கள். அருமை!!

எல்லா வரிகளையும் சேர்த்து - மழை, நினைவுகள், பிரிவு மீண்டும் மழையென மிக அழகாக
எழுதியுள்ளீர்கள்.

பிரிவின் நினைவுகள் இல்லாதோர் என்று யாரும் இருக்க முடியாது. ஆகையால் இதை வாசிப்போர் யாவரும் என்றோ பிரிந்த ஒரு நேசத்தை நினைத்து மழைத்தூறலா அல்லது கண்களிலிருந்து வந்த கண்ணீரா தங்களின் கண்களில்....என்று சந்தேகம் வரும்
நிலைக்கு எழுதியுள்ளீர்கள்.

நீங்கள் இன்னும் பல எழுதவேண்டும் என பாராட்டி மகிழ்கிறேன்.

தமிழ்நதி என்ற இந்த எழுத்தாளரை பண்புடனில் நட்சத்திரமாக அறிமுகப்படுத்தின
பண்புடன் ஆண்டுவிழா குழுவினர்களுக்கு எனது பணிவான நன்றிகள் பல!!!

என் சுரேஷ்

Unknown said...

ஆற்றொழுக்காய் வார்த்தைகள், நல்ல நடை. படிப்பதே நல்ல அனுபவமாய்