பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - தருமி - 3

அந்த காலத்தில …
எனது "ஜாவா மஹாத்மியம்"...

- தருமி

ஜாவா எனக்குத் தண்ணி பட்ட பாடு. பிறகு என்ன, கொஞ்சமா, நஞ்சமா.. 22 வருஷத் தொடர்பு என்றால் சும்மாவா? மேலே சொல்வதற்கு முன்பே ஒரு முக்கியமான சேதி. ஜாவா என்றதும், software கில்லாடிகளாக நிறைந்திருக்கும் இந்த வலைஞர்களில் பலர் நான் 'ஜாவா'ன்னு சொன்னது JAVA என்று நினைத்திருக்கலாம்.. இல்லை..இல்லை.. நான் சொல்லவந்தது - JAWA, 1966 மாடல், 250 c.c., Made in Czechoslovakia (இப்போ அந்த நாடே இல்லையோ?!), MDA 2107, என்னிடம் வந்தபோது 'சிகப்பழகி'; பின் எனக்குப் பிடித்தவாறு 'கறுப்பழகி'யாக மாறியவள். 1970 அக்டோபர் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் நான் 'அவள்' கைப்பிடித்தேன் - I mean its 'handlebar' ! அப்போது நான் ஒரு bachelor. ஆனால், 1992-ல் -22 ஆண்டுகள் என் இன்பத்திலும், துன்பத்திலும் பங்கு கொண்ட'அவள்' என்னைவிட்டுப் பிரியும்போது எனக்கு இரு வளர்ந்த குழந்தைகள். அந்தப் 'பிரிவு' என்னைவிட என் மகள்களை மிகவும் பாதித்தது. சின்னவளுக்குக் கண்ணீரே வந்துவிட்டது.

தஞ்சையில் 4 ஆண்டுகள் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது ஏதோ ஒரு நல்ல மூடில், உள்ளூரில் வேலை பார்த்தால் ஒரு பைக் வாங்கிக்கொள் என்று அப்பா permission கொடுக்க, என் நல்ல நேரம் அமெரிக்கன் கல்லூரியில் 1970-ல் வேலை கிடைத்த உடனே அப்பாவை அனத்த ஆரம்பித்தேன். நான் அப்போது கல்லூரியில் வேலை பார்த்தது 'சித்தாள்' வேலை; அதாவது, அப்போதெல்லாம், கல்லூரிகளில் லெக்சரர் மட்டுமல்லாமல், tutor/demonstrator என்ற போஸ்ட்டும் உண்டு. ஒரே தகுதியிருப்பினும், ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டுவதால், சில பாவப்பட்ட ஜென்மங்களுக்கு அந்தப் பதவிகளே கிடைத்து, பின், உறுமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்காய் தவமிருந்து லெக்சரர் பதவி உயர்வு பெறவேண்டும். அது ஒரு சோதனைக்காலம். நான் சேர்ந்தது அப்படி 'சித்தாள்' வேலையில்தான். அப்பாவுக்கு இது ஒரு சாக்காகப் போய்விட்டது. 'பார்க்கிற வேலை என்னவோ சித்தாள் வேலை; இதில் பைக்கில் போய் இறங்கினால் ரொம்ப நல்லாவே இருக்கும்; போ..போ... பிறகு பார்த்துக்கொள்ளலாமென' சொல்ல மனம் உடைந்து, தாடி இல்லாமல் சோகம் காட்டி, பிறகு பயங்கர பலமுனைத் தாக்குதல்களைத் தொடுத்து அப்பாவைச் சரிக்கட்டினேன்.

மனம் மாறிய அப்பா அவருக்குத் தெரிந்த நண்பரிடம் இருந்த ஜாவா பைக்கை எனக்காக வாங்கி, ஒரு சனிக்கிழமை இரவு 'வண்டியை நாளைக்கு எடுத்துக்கொள்' என்று அதன் சாவியைக் கொடுத்தபோது ஒரே 'ஜிவ்'தான். ஏனென்றால், அப்போது மொத்தமே மூன்றே மூன்று வகை பைக்குகள்தான். புல்லட் 350 சி.சி.- அப்போது விலை 4,500 ரூபாய்; அந்த வண்டியைப் பார்க்க ஆசை ஆசையாகத்தான் இருக்கும். பார்க்கும்போதெல்லாம் யானை நினனவுதான் வரும். அடுத்தது ஜாவா 250 சி.சி. - விலை 3,500. பார்க்கும்போது வரும் நினைவு: முன்னங்கால்களைத் தூக்கி நிற்கும் அழகுக் குதிரை. முன்றாவது, ராஜ்டூத் 150 சி.சி. விலை 2,500. சரியான எருமை மாடு மாதிரி நிற்கும். பிடிக்காது. 'குதிரை' கிடைத்ததும் எக்கச்சக்க சந்தோஷம். என் குதிரைக்குக் கொடுத்த விலை 2,500.

அதுவரை வண்டி நன்றாக ஓட்டத்தெரியாது. தஞ்சையில் தங்கியிருந்த லாட்ஜில் வேளாண்மைத்துறையில் வேலை பார்த்த அடுத்த அறை நண்பருக்கு அளிக்கப்பட்டிருந்த 'எருமைமாடு'- அதாங்க, ராஜ்தூத்தை அவர் வெளியூர் செல்லும்போது ஆணியைப் போட்டு எல்லோரும் எடுத்து அந்த காம்பவுண்டுக்குள்ளேயே ஓட்டுவோம். அந்த அனுபவம் மட்டுமே உண்டு. அடுத்த நாள், நண்பர் ஒருவரை அழைத்துச்சென்று, நான் படித்த மரியன்னை பள்ளியில் இருந்த என் குதிரையை எடுத்துக்கொண்டு நேரே ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்குச் சென்றோம். நட்ட நடு மைதானத்தில் வண்டியை நிப்பாட்டிவிடு நண்பர் 'தம்' அடிக்க உட்கார்ந்து விட்டார். சரி வண்டியை எடு என்றார். ஸ்டார்ட் செய்தேன்; கியர் போட்டேன்; நாலைந்து சுற்று சுற்றினேன். அவ்வளவுதான், உனக்கு ஓட்டத் தெரிந்துவிட்டது என்று சொல்லி நண்பர் வீட்டில் கொண்டுவந்து விட்டு விட்டு அப்பாவிடம் நல்ல சர்டிபிகேட் கொடுத்துவிட்டு போய்விட்டார்.

ஏழுமணிக்கு முந்தி எப்பவுமே எழுந்திருக்காத நான் அடுத்த சில நாட்களுக்கு ஐந்து ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து குதிரையை நன்றாகத் துடைத்து, அப்போதெல்லாம் ஆள் நடமாட்டமே இல்லாமலிருந்த (இப்போது அங்கு ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் வந்து ஒரே மக்கள் கூட்டம்தான்) வைகை நதிக்கரையின் ஓரமாக இருக்கும் சாலையில் சைலன்சர் இல்லாத வண்டியை ஓட்டிப் பழகினேன். கொஞ்சம் தைரியம் வந்த உடன் கல்லூரிக்கு ஓட்டிப்போனது; போகும் வழியில் எல்லோருக்கும் நடப்பது போலவே, போலீஸ்காரரைப் பார்த்ததும் வண்டி நின்றுபோனது - எல்லாமே நினைவிலிருக்கிறது. இப்போ பைக் ஓட்டுபவர்களுக்குத் தெரியுமோ என்னவோ, இந்தக்காலத்து பைக்குகள் எல்லாமே கையாலேகூட ஸ்டார்ட் செய்யமுடியும். ஆனால், புல்லட், ஜாவா பைக் இரண்டுக்குமே செம உதை கொடுக்கவேண்டும். கொஞ்ச காலம் வரை இடது கால் பெருவிரலில் எப்பவுமே ரத்தக்காயத்தோடேயே அலைந்தேன். ஷூகூட போடமுடியாது.

எப்போது கோடை விடுமுறை வருமெனக் காத்திருந்தேன். விடுமுறையும் வந்தது. சொந்தஊருக்கு பைக்கிலேயே செல்ல முடிவு செய்திருந்தேன். 130 மைல்கள். ஊருக்குள் நுழைந்ததும் பைக் பின்னாலேயே ஒரு பெருங்கூட்டமாகச் சின்ன பசங்கள் எல்லோரும் ஓடிவர வீடுவந்து சேர்ந்தேன். என் அப்பம்மாவிற்குப் பெருமை பிடிபடவேயில்லை; திருஷ்டிதான் சுற்றவில்லை. நான் வீட்டுக்குள் வந்த பிறகும் சின்னப் பிள்ளைகளின் கூட்டம் குறைந்தபாடில்லை. அப்போது எங்கள் ஊர் பக்கம் நானே பைக் எதுவும், யாரும் ஓட்டி வந்தும் பார்த்ததில்லை. பசங்க கூட்டத்திலிருந்து பைக்கைக் காப்பாற்ற பாதுகாப்புப் படை ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டியதாகப் போய்விட்டது. அன்று ஊருக்குப் போனதால் என் வண்டிக்குப் புதுப் பெயர் ஒன்று கிடைத்தது. பசங்க எல்லோரும் வண்டியைச் சூழ்ந்துகொண்டும், நான் போகும்போது பின்னாலேயே கூட்டமாய் ஓடி வந்தும், 'டக்கு மோட்டார் ...டக்கு மோட்டார்' என்றார்கள். அந்தப் பெயர் மிகவும் பிடித்ததால் 'Darling Duck' என்று நாமகரணம் சூட்டினேன். ஆனால், இந்தப் பெயரைக் கடைசியில் மாற்றும்படியானது. என்ன பெயர், ஏன் அந்தப் பெயர் என்பதைப் பிறகு சொல்கிறேன்.

நான் பைக் வாங்கியபோது பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய், ஏழு பைசா !. Fill tha tank எல்லாம் எங்களுக்கு சர்வ சாதாரணம்! கால் கீழேயே பாவாது; துறையிலிருந்து காண்டீன் போகவேண்டுமானாலும், டென்னிஸ் கோர்ட் போகவேண்டுமானாலும் பைக்தான். எனக்கு டிரைவிங் சொல்லிக்கொடுத்த நண்பரும் ஜாவா வைத்திருந்தார். இரண்டுபேருமாகச் சேர்ந்தே தனித்தனி பைக்கில் சுற்றுவோம். 'சர்க்கஸ்காரங்க மாதிரில்ல சுத்துறாய்ங்க'ன்னு மற்ற நண்பர்கள் அடிச்ச கமெண்ட் ரொம்ப பெருமையா இருந்திச்சு. ஆனா, கல்யாணம், காட்சி, குழந்தை, குட்டின்னு வந்தப்புறம் இந்த நிலை மாறிப்போச்சு. எங்கள் கல்லூரி slang படி நான் ஒரு 'ஒத்தை மாட்டு வண்டி'; அதாவது, தங்கமணி அப்போது வேலை பார்க்கவில்லை; நான் மட்டுமே 'தனி மாடாக' வண்டியை இழுத்தாகணும். வாங்கும் சம்பளம் இழுத்துப் பிடித்து 'வண்டி'யை ஓட்டுவதற்கே சரியாக இருக்கும்; இதில் பைக் வேறு. அதுக்கு ஊத்தணுமே, பெட்ரோல். நிலைமை ரொம்ப 'டைட்' ஆன பிறகு, சம்பளம் வாங்கியதும் போடற பெட்ரோல் முதல் பத்து நாளைக்கோ ஒரு வாரத்துக்கோ வரும்; குடும்பத்தோடு போகவேண்டிய கடமைகளை இந்த நாட்களுக்குள் முடிப்போம். பிறகு, அடுத்த பத்து நாட்களில் அவசரத்தேவைகளுக்கு மட்டும். கடைசி பத்து நாட்களுக்கு 'நடராஜா செர்வீஸ்'தான். முதல் வாரம் 'பெட்ரோல் வாரம்'; கடைசி வாரம் 'பஸ் வாரம்'. த்சொ, த்சொ... ஐயோ, பாவம் இந்த மனுஷன் அப்டின்னு யாரும் நினைச்சீங்கன்னா, இன்னும் ஒரு விஷயம் சொல்லணும். நான் பைக் வாங்கும்போது ஏறத்தாழ 150 ஆசிரியர்கள் இருந்த எங்கள் கல்லூரியில் இருந்த இருசக்கர வாகனங்களின் மொத்த எண்ணிக்கையே பன்னிரெண்டே பன்னிரெண்டுதான்! நான் பதின்மூன்றாவது ஆள். என்ன பண்றது; அப்போ கல்லூரி வாத்தியார்கள் நிலைமை அவ்வளவுதான்.

அதோடு இப்ப எல்லாம் ரோட்ல போகும்போது அங்கங்கே இருசக்கர வாகனங்களைக் 'கூறு கட்டி' வைத்து விற்கிறார்கள். நீங்கள் வண்டி ஒன்று வாங்கலாமா என்று ஒரு கனவு கண்டால்கூட அடுத்த நாளே உங்கள் வீட்டுக்கு ஆள் வந்திடும்- 'சார், வண்டி வாங்கலையோ, வண்டி' என்று கூவிக்கொண்டு. ஆனால், அப்போதெல்லாம் வண்டிகள் வாங்க ஆட்களைத் தேடித்தான் பிடிக்கவேண்டும். இயலாமை ஒரு பக்கம்; அதைவிட இதெல்லாம் தேவையில்லை என்ற மனப்பாங்கு அதிகம். It was out and out a luxury item! பைக்குகள் வாங்க ஆள் கிடையாது; ஆனால், ஸ்கூட்டருக்கு மட்டும் கொஞ்சம் போட்டி உண்டு. அதுவும் demand-supply விதிகளால்தான்! அப்போது இருந்த வண்டிகள்: லாம்பி என்று செல்லமாக அழைக்கப்பட்ட லாம்ப்ரெட்டாவும், வெஸ்பாவும்தான். அதிலும், இந்த வெஸ்பாவுக்கு ஏக டிமாண்ட்; அதிலும், குறிப்பாக 'chetak' என்று ஒரு மாடல். அடேயப்பா, அந்த வண்டி வச்சிருந்தா அவர்மேல்தான் எத்தனை பொறாமைக்கண்கள். அப்போது, டாலரில் கொடுத்தால் இந்த வண்டி உடனே கிடைக்கும். எங்கள் கல்லூரியிலிருந்து அமெரிக்காவிற்கு வருஷத்திற்கு ஒருவராவது போய் வருவதுண்டு. போய் வந்தவர்கள் வந்த வேகத்தில் செய்வது ஒரு chetak வாங்குவதுதான். ஒரு chetak கல்லூரிக்குள் வந்து விட்டால் அதைச் சுற்றி ஓரிரு வாரங்களுக்காவது அப்பப்போ ஆசிரியர் கூட்டம் வேடிக்கை பார்க்க நிற்கும். டாலர் இல்லாமல் சாதாரண முறையில் வாங்க வேண்டுமானால், ரூபாய் 500 கட்டிவிட்டுக் காத்திருக்கவேண்டும் - எத்தனை வருடங்களுக்கு தெரியுமா? Just for 6 years! கையில் காசு இருந்தாலும் காத்திருக்கவேண்டும். அதிலும் சிலர் ஒரு வியாபாரம் செய்வதுண்டு. 500 ரூபாய் கட்டிவிட்டு, 6 ஆண்டுகள் கழித்து வண்டி அலாட் ஆனதும் அதை 'பிரிமியத்துக்கு' விற்று விடுவதுண்டு. கட்டிய 500 ரூபாயுடன் மேலும் ஆயிரம் அல்லது ஆயிரத்து ஐந்நூறு வாங்கிக் கொண்டு வண்டியைக் கொடுத்துவிடுவார்கள். இப்படி வாங்குபவர்களுக்கு கொஞ்சம் ரிஸ்க் உண்டு; ஆனாலும் இந்த வியாபாரம் வெற்றி நடை போட்டு வந்தது. இப்படி ஒரு காலத்தில் பார்த்துவிட்டு, இப்போது தெரு முனைகளில் வண்டிகளை நிப்பாட்டிகொண்டு, ' கூவி கூவி ' விற்பதைப் பார்க்கும்போது... என்னமோ போங்க..எனென்னமோ நடக்குது நாட்டிலன்னு நீட்டி முழக்கணும்போல தோன்றும்.

ஆனாலும், சும்மா சொல்லக்கூடாது என் 'டார்லிங் டக்'கை. எப்போதுமே ரொம்ப தொல்லை கொடுத்ததேயில்லை. ஏதோ, சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல அதுபாட்டுக்கு ஓடியது. குடும்பத்தில் ஒரு நபர் மாதிரிதான். ஜாவா + தோளில் ஒரு ஜோல்னா பை + கழுத்தில் அடிக்கடி ஒரு காமிரா - இதுதான் ரொம்ப நாள் என் அடையாளமாக இருந்தது. வைத்திருந்த 22 ஆண்டுகளில் அநேகமாக ஒரு 18 ஆண்டுகளுக்காவது horn இருந்திருக்காது. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதுபோல நல்ல டிரைவருக்கு எதற்கு horn! டார்லிங் டக்கில் பல இடங்களுக்கும் பயணம் - தனியாக, குழுவாக. எனக்கும் இளம் வயசு; என் பைக்குக்கும் இளம் வயசு. ஊர்சுற்ற கேட்கணுமா, என்ன? ஒரு முறை தஞ்சை பயணம். வேலைபார்த்த இடத்தில் பழைய நண்பர்களைப் பார்க்கலாமென ஒரு பயணம். காலையில் மதுரையிலிருந்து புறப்பட்டேன். திருமயம் என்று நினைக்கிறேன். அந்த ஊரிலுள்ள கோட்டையைத் தாண்டியதும் கண் முன்னே நீ...ண்...ட நெடுஞ்சாலை; நல்ல சிமெண்ட் சாலை; கண்ணுக்கெட்டிய தொலைவு உயிரினம் ஏதும் காணோம்; வேறு வாகனங்களும் இல்லை. ஒரு ஆசை; டார்லிங் டக்கின் முழு 'பலத்தையும்' டெஸ்ட் செய்துவிட ஆசை. த்ராட்டிலைத் திருகினேன்; முழுவதும் திருகியபிறகு அதன் முழுத் திறனில் வண்டி சென்றபோது - வண்டி அப்படியே மிதப்பதுபோல உண்ர்ந்தேன்; வண்டி தரையைத் தொட்டு செல்வதுபோலவே தோன்றவில்லை; மெல்ல குனிந்து ஸ்பீடாமீட்டரைப்பார்த்தேன். 102. அதைப் பார்த்த பிறகே பயம் வந்தது. மெல்ல த்ராட்டிலை விடுத்தேன். அம்மாடியோவ்! செய்தது தவறு என்று அப்போதுதான் தெரிந்தது. அதன் பிறகு 'அந்த அளவுக்கு' தவறு செய்யவில்லை. இப்போது காரில்கூட எழுபதைத் தொட்டால் பயம் வந்துவிடுகிறது.

ஏறத்தாழ பதினெட்டு பத்தொன்பது ஆண்டுகள் நான் ஒருவனே கையாண்டதாலோ என்னவோ டார்லிங் டக் நல்ல கண்டிஷனில் இருந்துவந்தது. அதன் பிறகு, நண்பர்களாக மாறிவிட்ட என் பழைய மாணவர்கள் - அதில் பலரும் பெரிய பதவிகளுக்கு வந்துவிட்டிருந்தனர் - பைக்கை 'ஆத்திர அவசரத்திற்குக்' கேட்கும்போது எப்படி இல்லை என்று சொல்வது. அதுவும் சிலர் மதுரைக்கு வந்தால் என்னோடு இருப்பதே அதிக நேரமாயிருக்கும். அவர்களுக்கு எப்படி இல்லையென்பது. அப்படி நாலைந்து நண்பர்கள். வயசும் ஆகிப்போச்சு. எல்லாமாகச் சேர்ந்து பைக் இப்போது சல சலக்க ஆரம்பித்துவிட்டது. டார்லிங் டக் என்ற பெயரை மாற்றிவிட்டு புதுப்பெயரைச் சோகமாகச் சூட்டினேன் - 'கண்ணகி' என்று. ஏன் தெரியுமா? கண்னகி சிலம்பைக் கையில் எடுத்துக்கொண்டு மதுரையை வலம் வந்தாளல்லவா, சிலம்பல்லவா கைகளில்; ஜல்..ஜல் என்று சத்தம் வந்திருக்கணுமே. என் பைக்கும் இப்போது சல சலவென மதுரையம்பதியின் தெருக்களை வலம் வருகிறதல்லவா, அதனால்தான்.

1992. 'கண்ணகி'யை விற்றுவிட்டு வேறு வண்டி வாங்க முடிவெடுத்தேன்; மனைவிக்கும் முக்கியமாக மகள்களுக்கும் இந்த முடிவு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. பிள்ளைகளுக்குப் பிறந்த போதிலிருந்தே இருந்துவந்த தொடர்பல்லவா? ஆனாலும் விற்றுவிட முடிவு செய்து, நான் வாங்கிய அதே 2,500 ரூபாய்க்கு வாங்கியவர் வந்து வீட்டிலிருந்து MDA 2107-யை / டார்லிங் டக்கை / கண்ணகியை எடுத்துச்செல்லும்போது மனதை என்னவோ செய்தது. பக்கத்தில் இருந்த சின்ன மகளின் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது.

2 பின்னூட்டங்கள்:

cheena (சீனா) said...

அன்பின் அண்ணன் தருமி,

கொசுவத்தி சுத்தறீங்களே !! நல்லா இருக்கு

யானை குதிரை எருமை மாடு - தேர்வோ குதிரை - உயர்வும் இல்லாமல் தாழ்வும் இல்லாமல் நிலையாய் உள்ள குதிரையை வாங்கியது நன்று.

சிகப்பழகி கறுப்பழகி - கைப்பிடித்து 22 ஆண்டுகள் குடும்பம் நடத்தி வாங்கிய விலைக்கே விற்ற திறமை பாராட்டுக்குரியது.

அக்காலம் இக்காலம் எல்லா அப்பாக்களும் ஒரே மாதிரி தான். என்ன செய்வது ?

டார்லிங் டக் எனச் செல்லாமாக அழைக்கப்பட்ட டக்கு மோட்டார் - பிஃல் தெ டாங்க் கெத்து - 150 ஆசிரியர்களிலே - வண்டி வைத்திருந்த 13 பேர்களிலே ஒருவரென்ற பெருமை - ஒத்தமாட்டு வண்டியானதினாலே வாரம் ஒர் வகைப்பயணம் - ஹார்ன் இல்லமால் பயணம் - 102 ( மைல் தானே ) ல் ப்புஃல் த்ராட்டல் - பயம் - வண்டி வாங்குவதின் அக்கால இக்கால ஒப்பு நோக்கு - கண்ணகி என்ற பெயர் மாற்றம் - பிரிவு - மகள்களின் வருத்தம் - அருமை அருமை.

நல்ல பதிவு

இலவசக்கொத்தனார் said...

ஆசிரியர் அளித்த கொசுவர்த்தி ஜூப்பரு!!