பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஃபஹீமா ஜஹான் - 7

நஞ்சூட்டப்பட்ட மரம்
- ஃபஹீமா ஜஹான்


மலைச்சரிவின் பின்னால் இருந்து
சூரியன் தலைகாட்டத் தொடங்கியவுடன்
கதிர்களை இலைக் கரங்களில் ஏந்தி
நிழலை வழியவிடத் தொடங்குவாய்

எறும்புகள் போல நித்தமும் அலைகின்ற
எப்பொழுதேனும் உன் நிழலில் கூடுகின்ற
அந்தத் துடுக்குமிக்க சிறுமியரின் தலைமுடியைக்
கிளை தாழ்த்திக் கலைத்துவிட்டு
ஏதுமறியாத பாவனையுடன் அசைந்தாடுவாய்
மழை ஓய்ந்த வேளைகளில்
இலைகளில் தண்ணீரைத் தேக்கி வைத்து
அதே சிறுமியரின் முகமெங்கும்
தெளித்துக் கூத்தாடுவாய்

வானத்தைத் தாங்கிடவோவென
நெடிதுயர்ந்த கிளைகளினூடே
தூரத்திசைகளைப் பார்த்திருந்தாய்
உனது வேரடிக்கு
விஷமெடுத்து வந்த மனிதனை மட்டும் கவனியாது
கிளைகளை அசைத்தபடி மரம் போல நின்றிருந்தாய்

உனது வேர்களைத் தேடி ஆயுதங்கள் சூழ்ந்த வேளை
பற்றியிருந்த மண்ணை பறிகொடுக்கலானாய்
மண்ணையிழந்தவர் தம் படிமங்களையும்
மொழியையும் இழப்பார்களென்று
உனது நிழலில் அமர்ந்து அந்தச் சிறுமியர் படித்த
வரலாற்று நூலை
என்றோவொரு நாளில் நீயும் கேட்டிருந்தாய்

தோண்டிய கிடங்கிலிருந்தது
வேர்களால் கரையேறி வரமுடியாமற்போகவே
விஷத்தைத் திணித்து
மூச்சுத் திணறும் வரைக்கும் மண்ணிட்ட
மரணத்தின் முற்றுகைக்குள் மூழ்கினாய்

உனது வேர்களை ஒடுக்கி ஒடுக்கிச் சுருட்டிய பொழுதும்
அதிர்ந்து போயிருந்த வேர்க்கண்களுக்குப்
பதுங்கிக் கொள்ளும் இடமெதுவும்
புலப்படாமலே போயிற்றோ?

இரவுமுழுவதும் ஓடிக் கொண்டிருந்த அருவியிடம்
உனைச் சுழ்ந்திருந்த விஷத்தைக்
கழுவிக் கொண்டோடுமாறு
மன்றாடிக் கொண்டேயிருந்தாய்
எல்லைகளைத் தாண்ட முடியாத அருவி
இடர்மீட்புக் குழுவினரின்
நிராகரிக்கப் பட்ட உதவிகளைப் போல
மணற் கரைகளை நனைத்துத் திரும்பலாயிற்று

சுவர்க்கத்தின் வாயில்கள் மூடப்படட அதிகாலையில்
எங்கிருந்தோ மழையைச் சுமந்து வந்து
கருமுகில்கள் பொழிந்தன:
அந்த மழைக்குக் கருணையே இல்லாதிருந்தது

மழைநீரில் கரைந்தூறிய நஞ்சை
வேறு வழியற்று
உன் மெல்லிய வேர்களில் நிரப்பலானாய்
பின்னர்
அன்னையர் போலத் தாங்கிநின்ற கிளைகளுக்கும்
பருவமொன்றின் கனவுகளுடன் பூத்திருந்த மலர்களுக்கும்
விஷத்தை எடுத்துச் சென்றாய்
சின்னஞ்சிறு குழந்தையின் பிஞ்சுக் கரங்களை நிகர்த்த
பசிய தளிர்களுக்கெலாம் நஞ்சைப் புகட்டிய பொழுது
பிரலாபித்து அழத்தொடங்கினாய்

இரகசியமாக ஊடுருவும் உனது வேர்கள்
கட்டுமானங்களைத் தகர்ப்பதாயும்
அடர்ந்து வளர்ந்த கிளைகள்
விஷ ஜந்துக்களைப் பேணிக் காப்பதாயும்
புனையப் பட்ட கதைகளை எப்பொழுதும் ஏற்க மறுத்தாய்

உடலெங்கும் ஊர்ந்த செல்லும் மரணத்தின் எதிரிலும்
உறுதிகொண்ட வீரத்துடன் வீழாமல் நின்றாய்
வானம் கைவிட்டதையும்
பூமி சிறைப்படுத்தியதையும்
காப்பாற்றிட முடியாத சூரியன் பரபரப்புடன்
தெருவழியே அலைந்து திரிந்ததையும்
நீலம்பாரித்த இலைகளினூடாக
இறுதியாகக் கண்டிருப்பாய்

(பண்புடன் ஆண்டு விழாவுக்காக எழுதப்பட்ட கவிதை இது)

0 பின்னூட்டங்கள்: