பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - என்.சொக்கன் - 5

ஒரு பைத்தியக்காரன்
கலீல் கிப்ரான் - தமிழில் என்.சொக்கன்


நான் எப்படிப் பைத்தியமானேன் என்றா கேட்கிறீர்கள் ? அது பெரிய கதை !
நெடுநாள் முன்பு, இந்த உலகம் தோன்றி, கடவுள்களெல்லாம் பிறப்பதற்கு முன், நான் தூங்கி எழுந்த
ஒரு காலையில், என் முகமூடிகள் எல்லாம் திருடு போயிருப்பதைக் கண்டேன் !

என்ன கொடுமை ! ஏழு ஜென்மங்களில் நான் அணிந்திருந்த ஏழு முகமூடிகளும் மொத்தமாய்க் காணாமல் போய்விட்டன.

நான் கதறினேன், அலறினேன், கூட்டமான தெருக்களில் ஓடினேன், அவர்களில் என் முகமூடிகளைத்
திருடியவர்களுக்கு சாபம் கொடுத்தேன்.

அவர்கள் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள், சிலர், பயந்து, தங்கள் வீடுகளுள் ஓடி ஒளிந்துகொண்டார்கள். அப்போது, ஒரு வீட்டின் மாடியில் நின்றிருந்த இளைஞன் என்னைப் பார்த்து, 'பைத்தியம்' என்றான் !

நான் அவனைப் பார்ப்பதற்காக தலையை நிமிர்த்தினேன், முதன்முறையாக, முகமூடிகளற்ற என் நிர்வாண முகத்தில் சூரிய ஒளி பட்டது. அதன் ஒளியும், வெப்பமும் என்னை அரவணைக்க, உடனடியாக, என் உடலும், உள்ளமும் அந்தச் சூரியனை நேசிக்கத் தொடங்கிவிட்டது !
அதன்பின், எனக்கு முகமூடிகளே தேவையில்லை என்று நான் புரிந்துகொண்டேன் !
இப்போதும் நான் அழுதேன், ஆனால், என் முகமூடிகளைத் திருடியவர்களை, நான் வாழ்த்தினேன் !
அன்றிலிருந்து, நான் ஒரு பைத்தியக்காரனாய் அறியப்பட்டேன்.

இதில் எனக்கு சந்தோஷம்தான். 'பைத்திய' வாழ்வில்தான், சுதந்திரமும், பாதுகாப்பும் எனக்குக் கிடைத்திருக்கிறது - தனிமையின் சுதந்திரம், பிறர் நம்மைப் புரிந்துகொள்வதிலிருந்து பாதுகாப்பு !

-- பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா

0 பின்னூட்டங்கள்: