பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஜமாலன் - 1

உரையாடிகள்
- ஜமாலன்


புழுக்கம் தாங்கவில்லை என
சன்னல்களை திறக்க திறக்க
திரைகளில் அடர்கிறது
பல மூச்சுக் காற்றுகள்..

காற்றின் வாசனைகளால்
காதலிகளை அறிவதற்கு
கற்க வேண்டியுள்ளது நிறைய..

நெற்றிவகிடிலிருந்து உன்னை
இரண்டாக கிழிக்கத் துவங்கிய
எலிப்பல்லின் கூர் முனைப்பட்டு
கதறுகிறது உனது உதடுகள்.

உறவுக்கு தூரம் ஒரு பொருட்டல்ல என்றேன்
உணர்வுக்கு அது அவசியமில்லை என்றாய்
விரைப்புடனும்
வியர்வையுடனும்
எத்தனை நாளைக்கு?

பேச்சில் மைதூனம் என்றாலும்
அதுவும்
பேரின்பம்தானே என்றான்
என்னருகில் கிசுகிசுத்தப்படி
கணிப்பொறியில் கருத்தரித்த
பத்தொன்பதாவது சித்தன்.

****************************

வார்த்தைகள்
- ஜமாலன்

திரையின் நீர்மப் படிகப் பரப்பில்
சிதறிக்கிடப்பவை
உரையாடல்களல்ல.
கலைத்தலுக்கும்
கலவிக்கும்..
எஞ்சிய..
வார்த்தைகளால் கீறப்பட்ட
வலிகளின் பிசுபிசுப்பு.

நகல் உடல்களில்..
காமம் -
காவித்திரியும்
மின்பரப்பில் கீறப்பட்ட
முற்றுப்பெறா தாகங்கள்.

படபடக்கும் வேதனைகள்
படமெடுக்கும் தருணத்திற்காக
சொற்களுக்குள் நாகமென
சுருண்டிருக்கிறது.

மின்னுணர் வெளியில் நடக்கும்
மின்னுடல்கள் ஆட்டத்தில்
உணரவோ? உரைக்கவோ?
ஒன்றுமில்லை..

இந்த போதையின் எக்களிப்பு
தோல்வியின் இதம்தரும்..
தொல்மனதின் களிப்பிற்காக
என்றான்...
என்னருகில் கிசுகிசுத்தப்படி
கணிப்பொறியில் கருத்தரித்த
பத்தொன்பதாவது சித்தன்.

0 பின்னூட்டங்கள்: