வாழ்வைத் தேடி
- பாவண்ணன்
பிதுக்கித் தள்ளப்பட்ட வேப்பங்கொட்டையைப்போல நிரம்பி வழிந்த பேருந்திலிருந்து இறங்கத் தொடங்கிய கூட்டம் என்னையும் வெளியே தள்ளியது. ஆனால் புத்தகங்களும் சாப்பாட்டுப்பெட்டியும் தண்ணீர்ப்புட்டியும் கொண்ட என் தோள்பை மீட்டெடுக்கமுடியாதபடி படிக்கட்டில் நின்றிருந்த இருவருடைய இடுப்புக்குநடுவில் அகப்பட்டுக்கொண்டதால் நிம்மதியாக மூச்சுவிடமுடியவில்லை. பை பை என்று நான் போட்ட சத்தத்தை அந்தச் சந்தடியில் யாரும் பொருட்படுத்தவில்லை. அதற்குள் புதிய பிரயாணிகள் ஏறத்தொடங்கிவிட்டார்கள். "பள்ளிக்கூடப் பையன்மாதிரி ஏன்யா பையத் தூக்கிகிட்டு வந்து உயிர வாங்கறிங்க?" என்று மேல்படிக்கட்டில் நின்றிருந்தவர் என்னைப் பார்த்து சத்தம் போட்டார். ஆனாலும் எனக்காக மெனக்கிட்டு இருவருடைய இடுப்புகளையும் சற்றே விலக்கி என்னுடைய பையை உருவிக்கொள்ள உதவி செய்தார். கிளம்பிவிட்ட வண்டியில் அவருடைய முகத்தைப் பார்த்து அவசரமாக "ரொம்ப தேங்க்ஸ்" என்றேன். "ஒன் தேங்ஸ கொண்டும்போயி ஒடப்புல போடு போ" என்று சலித்தபடி முகத்தைத் திருப்பிக்கொண்டார் அவர். அந்த நடவடிக்கை எனக்கு அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது.
இப்படியுமா ஆட்கள் இருப்பார்கள் என்று மனத்துக்குள் நினைத்தபடி சோர்வாக நடக்கத் தொடங்கிய நேரத்தில் யாரோ பக்கத்தில் வந்து "ஆப்கோ ஹிந்தி மாலும் சார்?" என்று கேட்பதை உணர்ந்தேன். சோர்வின் காரணமாக அச்சொற்களை அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை என் மனம். பேருந்து நிறுத்தத்திலிருந்து உணவுக்கடைவரைக்கும் சிறிது தொலைவு நடந்த பிறகுதான் அந்தக் கேள்வியை முழுஅளவில் உள்வாங்கியது மனம். திரும்பிப் பார்த்தேன். இலைகள் உதிர்ந்த ஒரு குச்சிமரத்தைப்போல அவர் இன்னும் அங்கேயே நின்றிருந்தார். கிட்டத்தட்ட நாற்பது வயது மதிக்கத்தக்க தோற்றம். என்னிடம் கேட்ட அதே கேள்வியை தன்னைக் கடந்து செல்லும் அனைவரிடமும் அவர் முன்வைத்துக்கொண்டிருந்தார். பக்கத்தில் எலும்பும்தோலுமான தோற்றத்தில் ஒரு பெண்ணும் அவளது கையைப் பிடித்தபடி தலைகலைந்த முன்று சிறுமிகளும் ஒடுங்கி நின்றிருந்தார்கள். ஒரு கணம் வான்கோ வரைந்த உருளைக்கிழங்கை உண்ணும் சுரங்கத்தொழிலாளிகள் ஓவியம் நினைவில் வந்துபோனது.
மீண்டும் அவரருகே சென்று "என்ன கேட்டிங்க?" என்று இந்தியில் கேட்டேன். என்னுடைய இந்தி உரையாடலால் அவர் முகத்தில் ஒருவித நிம்மதி படர்வதை அருகில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப்பேழைக் குழல்விளக்கின் வெளிச்சத்தில் பார்க்கமுடிந்தது. "உங்களுக்கு இந்தி தெரியுமான்னு கேட்டேன் சார்" என்றார். "சொல்லுங்க, என்ன விஷயம்?" என்று நேரிடையாகவே விஷயத்துக்கு வந்தேன். எதுவும் பேசாமல் ஒரு கணம் தலைகுனிந்து நின்றார் அவர். விரலை உயர்த்தி கண்களைத் துடைத்துக்கொண்டார். மூக்கை உறிஞ்சியபடி மீண்டும் என் முகத்தைப் பார்த்தார்.
"மும்பையிலேருந்து காலையிலதான் வந்தோம் சார். தெரிஞ்சவங்கன்னு சொல்லிக்க யாரும் இல்ல. பாவம் புள்ளைங்க, நேத்திலேருந்து பட்டினி. உங்களால முடிஞ்ச உதவி செஞ்சா புண்ணியமா இருக்கும்."
இறைஞ்சும் அந்தக் குரலில் தொனித்த வருத்தத்தை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவருக்கருகே நின்றிருந்த சிறுமிகளின் முகங்களில் பசி தெரிந்தது. என் குறிப்பேட்டுக்குள் மடித்துவைத்திருந்த இருபது ரூபாய் தாளொன்றை எடுத்து அவரிடம் தந்தேன். "ரொம்ப நன்றி சார்" என்றபடி அவர் அதை வாங்கி தன் மனைவியிடம் தந்தார் அவர். மனைவி அந்தப் பணத்துடன் அருகில் இருந்த உணவுக்கடைக்குள் குழந்தைகளை அவசரமாக அழைத்துச் சென்றார். கீழே இருந்த மூட்டைமுடிச்சுகளுக்குக் காவலாக அவர் அங்கேயே நின்றார்.
"தெரிஞ்சவங்க யாருமே இல்லன்னு சொல்றிங்க. அப்பறம் ஏன் பெங்களூருக்கு வந்திங்க?"
"நானாக எந்த முடிவும் எடுக்கலை சார். எல்லாம் விதிவிட்ட வழி" அவர் கண்கள் சிறிதுநேரம் இருண்ட வானைநோக்கி நிமிர்ந்தன. பெருமூச்சு வாங்கியபடி பிறகு என்னைப் பார்த்தார்.
"எங்களுக்கு சொந்த ஊரு பிகார் பக்கத்துல சார். அங்க பொழைக்கறதுக்கு எந்த வழியும் கெடையாது சார். வாரத்துக்கு ஒருநாளு ரெண்டுநாளுதான் கூலிவேல கெடைக்கும். அத வச்சிகிட்டு என்ன செய்யமுடியும் சொல்லுங்க? அம்மா அப்பா பொண்டாட்டி புள்ளைங்கன்னு எல்லாரயும் எப்படி பாத்துக்கமுடியும்? பாதிநாள் பட்டினி. பாதிநாள் அரவயிறு, கால்வயிறு. இப்பிடியே காலத்த ஓட்டனோம். அம்மா அப்பா ரொம்ப வயசானங்க சார். அவுங்கள கூட்டிகிட்டு எங்கயும் வெளியூர் போவமுடியாது. அவுங்களுக்காகத்தான் அங்கயே ஒட்டிகிட்டு இருந்தோம். ஒருவழியா கடவுள்கிட்ட ரெண்டு வருஷத்துக்கு முன்னால அவுங்களும் போய் சேந்தாங்க. ஒரு வழியா நாங்களும் மூட்டமுடிச்சோட மும்பைபக்கம் போனோம். ஏற்கனவே எங்க பக்கத்து ஆளுங்க கொஞ்சம் பேரு அங்க கட்டடவேல செஞ்சி பொழைச்சிகிட்டிருந்தாங்க. எப்படியோ அவுங்களோட சேர்ந்து நாங்களும் ஒட்டிகிட்டோம். ரெண்டு வருஷமா எந்த பிரச்சனயும் இல்லாம வாழ்க்கை ஓடிச்சி."
தொடர்ந்து அவரால் பேசமுடியவில்லை. கண்களைத் திருப்பி உணவு விடுதிக்குள் சாப்பிட்டுக்கொண்டிருந்த பிள்ளைகளைப் பார்த்தார். ஒரு தட்டில் இருந்த உணவை மூன்று சிறுமிகளும் சேர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அந்த அம்மா பக்கத்தில் நின்றுகொண்டிருந்தனர். பசிவேகத்தில் அந்தச் சிறுமிகள் நிமிர்ந்துகூட பார்க்கவில்லை. எனக்கு அப்போதுதான் உறைத்தது. நான் கொடுத்த பணத்தில் அந்த ஒரு சாப்பாட்டுமட்டுமே அவரால் வாங்க முடிந்திருக்கும். உடனே அந்த அம்மாவை நெருங்கி இன்னுமொரு இருபது ரூபாய் நோட்டைக் கொடுத்தேன். அதை எடுத்துச் சென்று இன்னுமொரு தட்டில் சாப்பாடு வாங்கிவந்தாள் அந்த அம்மா. சிறுமிகள் காலியான தட்டை நகர்த்திவிட்டு அந்தத் தட்டிலிருந்து உணவை எடுத்துச் சாப்பிடத் தொடங்கினார்கள்.
"உங்க பேரு?" மறுபடியும் அந்த பீகார்க்காரரை நெருங்கிக் கேட்டேன்.
"ரகுவீர் சார்."
"மும்பை வேலையில ஏதாவது பிரச்சனையா? எதுக்காக ஏன் மும்பையவிட்டு வந்திங்க?"
"பிகார்க்காரன கண்டா அங்க யாருக்குமே புடிக்கலை சார். வேண்டா வெறுப்பா ஏதோ தெருநாய பாக்கறமாதிரி பாக்க ஆரம்பச்சிட்டாங்க சார். பிகாரும் இந்தியாவுலதான இருக்குது சார்? அப்பறம் ஏன் சார் எதிரிய பாக்கறமாதிரி பாக்கறாங்க? அசாம்ல பொழைக்க போன ஆளுங்கள கும்பல்கும்பலா சுட்டு தள்ளறாங்க. காஷ்மீர்ல உயிரோடயே வச்சி கொளுத்திட்டாங்க. தில்லியில வேறமாதிரி கத. வேல நடக்கறவரைக்கும் எல்லாருக்கும் பிகார்க்காரன் வேணும். வேல முடிஞ்சிடுச்சின்னா ஓடுடா பிகாரி ஒங்க ஊருக்குன்னு விரட்டறாங்க. நாய வெரட்டறமாதிரி வெரட்டிட்டே இருக்காங்க. மும்பையில புதுசா மகாராஷ்டிர நவநிர்மாண் சபான்னு புதுசா ஒன்னு கௌம்பியிருக்குது சார். தேடித்தேடி அடிச்சி வெரட்டறாங்க. மும்பை செல்வத்த பிகார்க்காரன் சுரண்டி எடுத்துக்கினு போயிடறானாம். இப்பிடி பேசிப்பேசியே எல்லார் மூளையும் கெடுத்து வச்சிட்டாங்க சார். அஞ்சிக்கும் பத்துக்கும் கூலிவேல செய்யறவனபோயி சுரண்டல்காரன்னு நாக்கு கூசாம சொல்றாங்க. மேடையில பேசறாங்க. பத்திரிகையில எழுதறாங்க. அத நம்பறதுக்கு ஆயிரம் பேரு காத்திருக்காங்க சார் அந்த ஊருல. அதான் சார் கொடுமை. "
"அதனாலதான் ஊரவிட்டு வந்திட்டிங்களா?"
"வேற என்ன சார் செய்யமுடியும்? கூலிகாரங்களுக்கு கைகால்தானே சார் மூலதனம். அடிக்க வர்ர ஆளுங்க கைய கால முரிச்சிட்டான்னா காலம் பூரா ஊனமா அலயணுமே சார். கைகால் நல்லா இருந்தாதானே உலகத்துல ஏதாவது ஒரு மூலையில எந்த வேலையையாவது செஞ்சி பொழைச்சிக்கலாம். பத்து நாளா எல்லாரும் கும்பல்கும்பலா ஊரவிட்டு போயிட்டே இருக்காங்க. "
"பிகாருக்கேவா?"
"அங்க என்ன சார் இருக்குது பொழைக்கறதுக்கு? மாடுகன்னு மேய்க்கலாம். அவ்வளவுதான். அதவிட்டா வேற எந்த வழியும் இல்ல. மழ இல்ல, பயிர் பச்ச இல்லன்னா அதகூட எங்க கொண்டுபோயி மேய்க்கறது? அதனால அப்படியே போபால், அகமதாபாத், ஜெய்ப்பூர்னு ரயில் கெடைச்ச ஊருக்கு போறாங்க. நாங்களும் அப்படித்தான். வந்து நின்ன நேரத்துக்கு இந்த ஊரு வண்டிதான் கௌம்ப தயாரா இருந்திச்சி. எங்க போவுதுங்க இந்த ரயில்னு பக்கத்துல இருந்தவருகிட்ட கேட்டன். பெங்களூர்னு சொன்னாரு. சரின்னு ஏறி உக்காந்துட்டோம். அப்ப கையில கொஞ்சம் பணம் வச்சிருந்தேன் சார். இங்க வந்த பிறகு, எறங்கற சமயத்துல போலீஸ்காரங்க மடக்கி புடுங்கிகிட்டாங்க. எல்லா ஊருலயும் போலிஸ்காரங்க ஒரேமாதிரிதான் சார் இருக்கறாங்க. இரக்கமே இல்லாத பாறைங்க சார். இன்னும் ஏழு ஜென்மம் எடுத்தாலும் இவுங்க செய்ற பாவம் தீராது சார்."
ரகுவீரின் மனைவியும் சிறுமிகளும் உணவுக்கடையிலிருந்து வெளியே வந்தார்கள். துணிமூட்டையிலிருந்து ஒரு பெரிய பாட்டிலை எடுத்துக்கொண்டு மறுபடியும் கடைக்குள் சென்ற ரகுவீரின் மனைவி அதை நிரப்பிக்கொண்டு வந்தாள்.
"நீங்க ரெண்டுபேரும் எதுவுமே சாப்பிடலையே?" இன்னும் கொஞ்சம் பணம் தரலாம் என பைக்குள் கையை விட்டேன். ரகுவீர் அவசரமாக என்னைத் தடுத்துவிட்டார்.
"வேணாம் சார். கொழந்தைங்க பசியால சுருண்டுசுருண்டு படுக்கறத பாக்கமுடியாம இருந்திச்சி. அந்த நெருப்ப அணச்சிங்களே, அதுவே போதும் சார். எங்களபத்தி கவல இல்ல சார். இதெல்லாம் ஓரளவுக்கு எங்களுக்கு பழகினதுதான் சார்."
"அதுக்காக வேணுமின்னே பட்டினி கெடக்கணுமா? சும்மா அரவயித்துக்காவது சாப்புடுங்க. இன்னொரு சாப்பாடு வாங்கிக் குடுக்கறதால எனக்கு ஒன்னும் நஷ்டம் வராது."
"பரவாயில்லை சார். இதுவே நீங்க செஞ்ச பெரிய உபகாரம். "
"இங்க பக்கத்துலதான் எங்க வீடு. அப்படி வந்தாலும் பரவாயில்லை. "
"இருக்கட்டும் சார், உங்களுக்கு பெரிய மனசு. இங்க பக்கத்துல கட்டடவேல எங்கயாவது நடக்குதுங்களா? உங்களுக்குத் தெரிஞ்சா அதமட்டும் சொல்லுங்களேன். "
நான் சிறிதுநேரம் யோசித்தேன். இந்திரா நகரின் தெருக்களும் வீடுகளும் என் மனத்துக்குள் நகர்ந்தன. எந்த இடத்திலும் புதிய கட்டுமானப் பணிகளைப் பார்த்த நினைவில்லை.
"அந்த மாதிரி வேலைங்களெல்லாம் இங்க எப்பவோ முடிஞ்சிபோச்சி ரகுவீர். பெங்களூரு இதத்தாண்டி இருபது கிலோமீட்டர் தூரம் வளந்துடிச்சி. இப்ப வேகவேகமா வளர்ந்துகிட்டு வர்ர இடம் மாரதஹள்ளி, காகதாஸபுர, ஒயிட்பீல்டு அந்தப் பக்கம்தான். அங்க போனிங்கன்னா எதாவது கெடைக்கலாம்."
"மாரதஹள்ளி எந்த பக்கம் இருக்குது? "
"கிழக்கு பக்கம்தான். ஆனா நடந்துலாம் போகமுடியாது ரகுவீர். ரொம்ப தூரம் போவணும். பஸ்தான் சரி. இப்படியே நேரா போனிங்கன்னா ட்ரினிடி சர்ச்னு ஒரு சர்ச் தெரியும். அந்த சர்க்கிள்பக்கத்துல நில்லுங்க . 333ன்னு ஒரு சர்வீஸ் வரும். அதுல போனா சீக்கிரமா போயி சேர்ந்துரலாம். அங்க யாராவது தெரிஞ்சவங்க இருக்காங்களா?"
"யாராச்சிம் ஒருத்தவங்க ரெண்டுபேருங்க இருந்தாலும் இருப்பாங்க. கண்டுபுடிச்சிட்டா அப்படியே அவுங்ககூட சேர்ந்துக்கலாம். பசியாறதுக்கு ஏதோ ஒரு வழி, என்ன சொல்றிங்க? "
பேசிக்கொண்டே நிறுத்தத்தை ஒட்டியிருந்த மரத்தடியில் இருட்டில் மூட்டைமுடிச்சுகளைக் கொண்டுபோய் வைத்தான் ரகுவீர். ரகுவீரின் மனைவி மூட்டையைப் பிரித்து ஒரு சாக்கை எடுத்து தரையில் விரித்தாள். குழந்தைகள் அவள் தரையில் விரித்த சாக்கில் மெதுவாகப் படுத்தார்கள். ரகுவீரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு வீட்டைநோக்கி நடக்கத் தொடங்கினேன். அவர் உரையாடலை மனம் மறுபடியும் அசைபோட்டது.
வீட்டுக்குள் அடியெடுத்துவைத்ததுமே ரகுவீரைப்பற்றிய தகவலை அமுதாவிடம் சொன்னேன். அமுதாவுக்கும் அது துயரம் தரும் செய்தியாக இருந்தது. ஆனால் பிகார் மக்கள் மும்பையைவிட்டு வெளியேற்றப்படும் செய்தி அமுதாவுக்குத் தெரிந்ததாக இருந்தது. "தாக்கரேவோ போக்கரேவோ யாரோ ஒரு ஆளுதான் எல்லாரயும் மும்பையவிட்டு கௌம்பிப்போங்கன்னு கட்சி கட்டறாராமே. ஒரு வாரமா டிவியில இதத்தானே செய்தியா காட்டறாங்க. அவுங்கவுங்க ஊருல அந்தந்த ஊருக்காரங்கதான் இருக்கணும்னு மும்பைக்காரனப்போல ஒவ்வொருத்தவங்களும் ஆரம்பிச்சாங்கன்னா, உலகத்த ஒரு ரெண்டாயிரம் மூவாயிரம் வருஷம் பின்னாலதான் உருட்டிஉடணும்" அமுதாவின் பேச்சில் வெளிப்பட்ட சலிப்பும் சீற்றமும் அந்த நேரத்தில் என் மனச்சுமையைப் பெரிதும் பகிர்ந்துகொள்ளும் விதத்தில் இருந்தன.
மறுநாள் காலை அலுவலகம் செல்ல பேருந்து நிறுத்தத்தை அடைந்ததும் ரகுவீரின் நினைவுதான் முதலில் வந்தது. ரகுவீரின் மனைவியும் சிறுமிகளும்மட்டுமே காணப்பட்டார்கள். அவ்வளவாக வெயில் இல்லையென்றாலும் முந்தானையால் தலையை முழுதாக மூடியிருந்தார் ரகுவீரின் மனைவி.
"ரகுவீர எங்க காணோம்?" நேற்று பேசிய உரிமையில் அவரிடம் நேரிடையாகவே கேட்டேன். அவருக்கும் என்னை அடையாளம் தெரிந்தது.
"இதோ வரேன்னு சொல்லிட்டு போயிருக்காங்க."
"மாரதஹள்ளிக்கா?"
"அங்கதான்னு நெனைக்கறேன்."
"புள்ளைங்க எதாச்சிம் சாப்பிட்டாங்களா?" சிறுமிகள் என்பக்கமாக திரும்பிப் பார்த்தார்கள். அவர் பதில் எதையும் சொல்லவில்லை. ஆனால் அவருடைய மௌனமே பெரிய பதிலாக இருந்தது. இருப்பவர்களிலேயே மூத்தவளாகக் காணப்பட்ட சிறுமியை அழைத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த உணவுக்கடைக்குச் சென்றேன். நான்கு பேருக்கும் இட்லிகளைப் பொட்டலங்களாகக் கட்டி வாங்கி அவளிடம் தந்தேன். அதற்குள் என்னுடைய பேருந்து வந்துவிட்டது. அவசரமாக ஓடி பேருந்துக்குள் ஏறிக்கொண்டேன்.
காவல்துறையைச் சேர்ந்த ஒரு மும்பை அதிகாரி கூறியதாக செய்தித்தாளில் படித்த செய்தியை நினைத்துக்கொண்டேன். பிகார்க்காரர்களை வெளியேறிச் செல்லுமாறு அச்சுறுத்தும் சக்திகளை தனக்கு அடையாளம் தெரியுமென்றும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் சொன்னார். உடனே ஒரு பத்திரிகைக்காரர் அப்படியென்றால் அவர்களை நீங்கள் ஏன் கைது செய்யக்கூடாது என்று அவசரமாகக் கேட்கிறார். அதன்மூலம் அவர்கள் உடனடியாகப் பிரபலமடையக்கூடும். அந்தப் பிரபலம் வேண்டித்தானே அவர்கள் அதைச் செய்கிறார்கள். நம் கைது நடவடிக்கை அவர்கள் கேட்பதை நாமாகவே வலியச் சென்று வழங்குவதைப் போல மாறிவிடும் என்று பதில் சொன்னார் அதிகாரி. பலர் அடிபட்டுள்ளார்கள், பலருடைய இருப்பிடங்கள் சூறையாடப்பட்டுவிட்டன. பலர் மருத்துவமைனையில் உள்ளார்கள். இன்னும் பலர் நம் கண்முன்னாலேயே மூட்டைமுடிச்சுகளோடு வெளியேறிக்கொண்டுள்ளார்கள். இவ்வளவு நடக்கும்போதுகூட கைது செய்யாமல் தர்க்கம் பேசிக்கொண்டிருப்பது நியாயமா சார் என்று விடாமல் பத்திரிகைக்காரரும் ஆதங்கத்தோடு கேட்டார். காவல் துறை அதிகாரி எல்லா மாநில அதிகாரிகளையும்போல ஒரு எழுத்துகூட மாறாமல் காவல் துறை தன்னுடைய கடமையைக் கட்டாயம் செய்யும். மக்களுக்கு அச்சம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு நேர்காணலை முடித்துக்கொண்டு சென்றுவிட்டார்.
மும்பையில் இந்த வெளியேற்றம் நடப்பதால் பத்திரிகைகளில் இது தலைப்புச்செய்தியில் இடம்பெற்றுள்ளது. செய்தியில் இடம்பெறாத வெளியேற்றங்கள் இன்னும் ஏராளமாக உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படிப்பட்ட செயல்கள் நடைபெறுகின்றன. மாற்றுமாநில உழைப்பாளிகளை எதிரிகளாக உருவகித்துக் கட்டமைக்கிற உள்ளூர் அரசியல்காரர்களை யாராலும் தடுக்கமுடியவில்லை. எப்படியோ அவர்களும் தன்னைச்சுற்றி ஆயிரம் பேரை திரட்டிவைத்துக்கொண்டுள்ளார்கள். அவர்களுடைய தன்னல நோக்கங்களையும் விரோதப்போக்கையும் அம்பலப்படுத்தி மக்களை சகோதரஉணர்வுடன் வாழத் தூண்டும் சக்திகளை சமூகத்தில் காண்பது மிகவும் அபூர்வமாக உள்ளது. தம் குரலே அடிமட்டத்து மக்களைப் பிரதிநிதிப்படுத்தும் குரல் என்று சொல்லி ஊடகங்களை நம்பவைக்க அவர்கள் முயற்சி செய்யும்போது, அதைத் தவறு என்று முளையிலேயே சுட்டிக்காட்ட எந்த ஊடகமும் தயாராக இல்லை. மீண்டும்மீண்டும் அவர்களை மையப்படுத்தி மையப்படுத்தி ஊடகங்களே அவர்களை வளர்க்கின்றன. இந்தியாவின் எல்லாப் பெருநகரங்களிலும் இப்படிப்பட்ட அதிகார சக்திகள் வளர்த்தெடுக்கப்பட்டு வருவது மிகப்பெரிய ஆபத்தின் அடையாளம்.
பகல்முழுதும் இப்படிப்பட்ட செய்திகளை துண்டுதுண்டாக மனத்தில் அசைபோட்டபடி இருந்தேன். சகோதர உணர்வை நாம் இழக்கும்போது இப்படிப்பட்ட வெறுப்புக்கான விதை மனத்தில் ஆழமாக விழுந்துவிடுகிறது. தன்னைவிட தன் சகோதரனுக்கு இறைவன் நெருக்கமாக இருக்கிறான் என்ற சீற்றத்தில் சகோதரனைக் கல்லால் தாக்குகிறவனைப்பற்றிய சித்திரம் இடம்பெறும் பைபிள் கதையை மனம் நினைத்துக்கொண்டது. தன்னலம் என்னும் நச்சுமரம் வேரூன்றி வளர்வதற்கான இடமாக மனிதமனம் மாறும்போது விரும்பத்தகாத விளைவுகளே காலமெல்லாம் நிகழ்கின்றன.
வீட்டுக்குத் திரும்பும்போது ஏழரையைத் தாண்டிவிட்டது நேரம். அந்த நேரத்திலும் பேருந்தில் ஏகப்பட்ட கூட்டம் நிரம்பி வழிந்தது. வழக்கம்போல பிதுக்கப்பட்ட நிலையிலேயே நிறுத்தத்தில் இறங்கினேன். ஒருகணம் ஆடைகளையும் காலணிகளையும் சரிப்படுத்திக்கொண்டு நிமிர்ந்தபோது ரகுவீரின் நினைவு வந்தது. காலையில் ரகுவீரின் மனைவியும் குழந்தைகளும் உட்கார்ந்திருந்த இடத்தைப் பார்த்தேன். காணவில்லை. அந்த இடத்தில் யாரோ ஒரு வயசாளி நின்று புகைபிடித்துக்கொண்டிருந்தார். எங்கே போயிருக்கக்கூடும் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். பசியால் துவண்டிருந்த அந்தச் சிறுமிகளின் முகங்கள் ஒருகணம் நினைவிலெழுந்தன. சிறிதுநேர சிந்தனைக்குப் பிறகு எப்படியாவது அவர்களாகவே மாரதஹள்ளியைக் கண்டுபிடித்து போயிருப்பார்கள் என்றும் யாராவது அவர்களுடைய ஊர்க்காரர்களே அங்கே தென்பட்டு, அவர்களுக்கு ஆதரவு வழங்கியிருக்கவேண்டும் என்றும் நானே பதிலும் சொல்லிக்கொண்டேன். அந்தப் பதில்தான் சற்றே மனத்துக்கு ஆறுதலாக இருந்தது.
பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - பாவண்ணன்
பதிவு வகை : சிறப்பு விருந்தினர், சிறுகதை
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment