பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மோகன் தாஸ் - 5

செம்மீன்

செம்மீன் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், என் நினைவுகளை மீட்டிப் பார்த்தால் விவேக்கின் நகைச்சுவைக் காட்சியொன்றில் வரும் பாடல் வரிகளை நண்பர்களிடம் கேட்க அவர்கள் சொல்லித்தான் முதலில் அறிமுகம் ஆகியிருக்கவேண்டும். "கடலினக்கர போனோரே காணாத கர போனோரே" பாடல் மூலமாய் பின்னர் இன்னொரு படத்தில் மும்தாஜை கரெக்ட் செய்யும் பொழுது பாடும் "மானஸ மரூ". தொடக்கம் இதுதான். பின்னர் சந்திரமுகியில் வரும் பிரபுவின் அத்தை கேரக்டர் தான் செம்மீன் ஷீலா என்று சொல்ல; என்ன தாண்டா சொல்றீங்க செம்மீன் செம்மீன் என்று நினைத்துக் கொண்டேன். பின்னர் நெம்பர் 40 ரெட்டைத் தெரு படிக்கும் பொழுது 'பொலிடிகலி கரெக்ட்'(அட இதை விட முடியலை) எழுதிய மூன்று பக்கங்கள் கொஞ்சம் போல் என்னை செம்மீன் படத்தை நோக்கித்தான் திருப்பியிருக்கவேண்டும். நான் யூடியூபில் கடலினக்கர பாடலைக் கேட்டேன், உடன் வேலை செய்யும் மல்லு நண்பர்கள் படத்தைப் பார்த்ததில்லை என்று சொன்னார்கள், தகழியின் நாவலைப் பற்றி நான் கேட்கவில்லை ;). இடைப்பட்ட காலத்தில் செம்மீன் நாவலை சுரா மொழிபெயர்த்திருக்கிறார் என்று கேள்விப்பட்டிருந்தேன். ஜேஜே, மற்றும் புளியமரம் வந்து கொஞ்சம் பயமுறுத்தியதால் சரின்னு விட்டுவைத்திருந்தேன். சில நாட்களுக்கு முன் பத்ரி இதைப்பற்றி எழுதியதும் பெங்களூர் புத்தகக்கண்காட்சியில் காலச்சுவடு தவிர்த்து சொல்லிக்கொள்ளும்படி ஒரு பதிப்பகமும் வராமல் போனதும் நான் செம்மீனை வாங்கி வந்திருந்தேன்.(தோட்டியின் மகனும் தான்).

ப்ராஜக்ட் தன் முடிவை எட்டிய ஒரு வாரக்கடைசியில் கொடுமைக்கென்று ஞாயிறு காலை மின்சாரத்துக்கு தடா போட்டுவிட்ட பெங்களூருக்கு ஒரு ஓ போட்டுவிட்டு செம்மீனை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தேன். பொன்னியின் செல்வன் படித்த காலங்களில் மனதில் ஓடி மறைந்தது, பரீக்குட்டியும் கறுத்தம்மாவும் பழனியும் இறந்து போக சோகத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அல்சூர் போய் பானிபூரி சாப்பிட்டு வந்தேன். முன்பெல்லாம் இது போன்ற துக்கங்கள் வாரக்கணக்கில் மனதில் தங்கி நீண்ட ஒரு நடையையோ அல்லது இதை மட்டுமே யோசித்துக் கொண்டு தூங்காமல் வெறுமனே படுத்துக் கொண்டிருக்கும் நிலையையோ தான் உருவாக்கும். இப்பொழுதெல்லாம் ப்ராஜக்ட் பற்றிக் கவலைப்படவே நேரம் பத்தலை, பரீக்குட்டிக்காகவும் கறுத்தம்மாவிற்காகவும் வருத்தப்பட, வருத்தம் மீதமில்லை என்பதால் ஒரு நாளுடன் போனது. பத்ரி பதிவு பற்றி சொன்னேனே முதல் பத்தி மட்டும் படித்துவிட்டு அய் சுரா மொழிபெயர்ப்பு நல்லாயிருக்கும் போலிருக்கே பத்ரி படிச்சு முடிச்சேன்னு சொன்னாரே(அவர் ஜேஜே பற்றியோ புளியமரம் பற்றியோ எழுதி நான் படித்ததில்லை :() அதை ஒரு நல்ல சகுனமாக(ஹிஹி) எடுத்துக் கொண்டு விட்டிருந்தேன், படித்து முடித்ததும் 'நினைவுகளை' எழுத கூகுளை சர்ச்சிய பொழுது வந்து விழுந்த பக்கத்தில் திரும்பவும் பத்ரி தான் முதலில் இருந்தார். மீண்டும் ஒரு முறைப் போய்ப் பார்த்தேன், கதையை சுருக்கமா எழுதியிருக்கார். நாவல் படிக்க விரும்பாதவங்க கதை மட்டும் படிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் அங்கே படிக்கலாம். எனக்கு அத்தனை ஆக்கப்பூர்வமா(;)) எல்லாம் எழுத வராது.

தடுமாற வைக்காத மொழி, சட்டென்று கடற்கரை ஒன்றிற்கு அருகில் வாரக்கணக்கில் இருந்ததைப் போன்ற உணர்வை 100 பக்கங்களைத் தாண்டும் பொழுது உணரமுடிந்தது. தகழியின் எழுத்தை நல்ல விதமாக சுரா மொழிபெயர்த்திருக்கிறார். நாவல் சட்டென்று தொடங்குகிறது, நாம் உணறும் முன்னால் நாவலின் முடிச்சும் விழுந்து முடிக்கிறது. முதல் மூன்று நான்கு பக்கங்களில் முடிச்சைப் போட்டுவிட்டு கழட்டு கழட்டென்று கழட்டுகிறார் தகழி நாவல் முழுவதும் ஆனால் அந்த அளுப்பு உண்மையில் தட்டுவதில்லை என்பது தான் முக்கியம். செம்பன்குஞ்சு, சக்கி, கறுத்தம்மா, பரீக்குட்டி, பஞ்சமி, பழனி என்று உருவாக்கப்பட்டதும் சட்டென்று மனதில் பதிந்து விடும்படியான விவரணை தேவையான அளவிற்கு.

கறுத்தம்மாவைப் பற்றி - "எத்தனை எடுப்பாக இருக்கிறது அவளுடைய மார்பகம்! கணத்துக்குக் கணம் எத்தனை வளர்ச்சி! பார்வையை அங்கே குவிக்கையில் பரீக்குட்டிக்குத் தன் நரம்புகள் முறுக்கேறுவது போலிருக்கிறது. அந்த உணர்விலிருந்து தான் சிரிப்பு மூண்டதோ! அவள் ஓர் ஒற்றை வேட்டிதான் கட்டியிருந்தாள். அதுவும் மெல்லியதாகவே இருந்தது."

பரீக்குட்டி - "நிஜாரும் மஞ்சள் சொக்காயும் அணிந்து, கழுத்தில் பட்டு உருமாலும் சுற்றி, குஞ்சம் தொங்கும் தொப்பியும் அணிந்து கொண்டு, தன் வாப்பாவின் கையில் தொங்கியவாறு பரீக்குட்டி முதன்முதலில் கடற்கரைக்கு வந்தது கறுத்தம்மாவிற்கு நல்ல ஞாபகம் தான்."

செம்பன்குஞ்சு - "இப்பொழுது செம்பன்குஞ்சு மற்றவர்களின் தோணிகளில் வேலைக்குச் சென்று வருகிறான். அதற்கான கூலியும் பெற்று வருகிறான். முதலில் துடுப்புத் தள்ளும் வேலை பார்த்தான், இப்போது சுக்கான் பிடிப்பவனாக உயர்ந்துவிட்டான் செம்பன்குஞ்சுவுக்கு வாழ்க்கை லட்சியம் ஒன்று உண்டு எனவே கிடைக்கிற காசை வீணாக்கமாட்டான். அவன் கையில் கொஞ்சம் பணம் சேர்ந்திருக்கிறது. எனினும் தோணியும் வலையும் வாங்குவதற்கு அது போதாது"

சக்கி - "சக்கி அந்தப் பருவத்தைக் கடந்து வந்தவள் தான். சக்கி, கறுத்தம்மாவின் பிராயத்தில் இருந்த காலத்திலும் அந்தக் கடற்கரையில் கிட்டங்கிகளும், கிட்டங்கிகளில் சின்ன முதலாளிகளும் இருந்திருக்கலாம். கரையேற்றிப் போட்டிருக்கும் தோணியின் மறைவில் நின்றவாறு சின்ன முதலாளிகள் சக்கியையும் கலகலவென்று வாய்விட்டு சிரிக்கும்படி செய்திருக்கலாம்."

சின்ன சின்ன விவரணைகள் அழுத்தமாக நம் மனதில் பதியச் செய்துவிடும் சாத்தியம் தகழியை ஆச்சர்யத்துடன் பார்க்க வைக்கிறது. சிக்கல் இல்லாத நடை கைவசப்பட்டிருக்கிறது, தகழி வழி சுராவிற்கு. மனிதர்களை அந்த நிலத்தை, அங்கே இருக்கும் பாகுபாடுகளை அவர்களுடைய ஒழுக்கப்பாடுகளை அவர்கள் தாங்கள் கட்டுப்படுவதாய் நினைக்கும் தத்துவப் பேருண்மைகளை சிக்கலில்லாமல் பதியச் செய்துவிடுகிறார் தகழி. ஆனால் எல்லாப்பொழுதுகளில் அதில் உண்மை/உண்மையாக எத்தனை இருக்கக்கூடும் என்பதையும் கதை சொல்லி மூலம் உணர்த்திவிடுகிறார். தேவைப்படும் இடங்களில் எல்லாம் பேனாவை எடுத்துக் கொண்டு ஏகதேசமாக தகழி - கதை சொல்லியாகப் - பேசுவதை நாவல் முழுவதும் பார்க்கமுடியும். ஒருமுறை படித்துவிட்டு நாவலைப் பற்றி எழுதலாம் என்று நினைத்து மீண்டும் புரட்டிப் பார்க்கும் பொழுது கண்ணில் படுகிறது. உண்மையில் முதல் முறை படிக்கும் பொழுது இந்த இடையீடு அப்படித் தெரியவில்லை. நாவல் தனக்கான ஒரு கதைசொல்லியைக் கொண்டிருக்காமல் நாவல் எழுதுபவர் அதாவது எழுத்தாளர் கதை சொல்லியாக வரும் இவ்வகை நாவல் கொஞ்சம் அலுப்பூட்டக்கூடும் மற்ற இடங்களில் ஆனால் ஒரு தேர்ந்த கதை சொல்பவரிடம் கதை கேட்ட அனுபவமாக இந்தப் படித்த அனுபவம் இருக்கிறது.

பரீக்குட்டிக்கும் கறுத்தம்மாவிற்கும் இடையில் காதல் எங்கே எப்படி உண்டாகி பரீக்குட்டி கறுத்தம்மாவையே நினைத்து ஏங்கி பாடல் பாடிக்கொண்டு நிற்கும் நிலைமை வந்ததென்பதற்கு பெரிய ப்ளாஷ்பேக் இல்லை. சின்ன வயதில் இருந்து தோழர்கள், வயதாகி இருவரும் பருவம் எய்தியதும் காதல் சாதாரணமாக வரக்கூடியது தான் மறுக்கவில்லை ஆனால் பரீக்குட்டி அளவிற்கான காதல் சாத்தியப்படுமா தெரியவில்லை. ஒருவேளை எதிர்ப்பென்பது இருக்கும் பொழுது இயல்பாய் தோன்றிவிடும் ஈர்ப்பைப் போல் இந்தக் காதல் என்று கொள்ளலாம் தான். கறுத்தம்மாவிற்கு பரீக்குட்டி மேல் இருப்பது காதலா, பாசமா இல்லை முதலாளி பக்தியா என்று பட்டிமண்டபத் தலைப்பொன்று வைக்கலாம், இதில் கறுத்தம்மா பரீக்குட்டி மீது கொஞ்சம் பொஸஸிவ்வாக இருப்பது மட்டும் இல்லையென்றால் நிச்சயமாக காதலுக்கான லிங்க் அறுப்பட்டு இருக்கிறதென்றே சொல்லலாம். நான் கொண்ட காதல் அனுபவங்கள் கூட இப்படித்தான் காரணம் இல்லாமல் சொல்ல முடியாததாய் விளக்க முடியாததாய் பொஸஸிவ்னெஸ் இல்லாததாய் வந்தா வரட்டும் போனா போகட்டும் ரேஞ்ச் வகையறா. இதனால் கூட என்னால் ஆசிரியர் சொல்லவரும் அளவிற்கான காதலைப் பார்க்கமுடியவில்லை. கறுத்தம்மா விஷயம் நாவலாசிரியர் கூட அத்துனை வற்புறுத்துவதில்லை, அவளிடம் பழனியைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி கேட்கும் பொழுது அவள் தான் இங்கிருந்தால் பரீக்குட்டியுடன் சேர்ந்து கெட்டது செய்துவிடுவோம் என்று பயப்பட்டு முதலாளிக்கு பணம் கொடுப்பதானால் திருமணம் செய்து கொள்வதாகக் கூறுகிறாள். பருவ உணர்ச்சி தூண்டியபடி இருவரும் இருப்பதுவும் எங்கே கொஞ்சம் ஆசுபாசமாய் இருந்துவிட்டால் கெட்டது நடந்துவிடும் என்று கறுத்தம்மா முதற்கொண்டு சக்கி வரை நினைப்பதில் பெரிய பொய்யில்லை என்று தான் எனக்குப் படுகிறது. காதல் இல்லாமலா கறுத்தம்மா பரீக்குட்டியுடன் படுத்துவிடும் ஆபத்தைப் பற்றி யோசிக்கிறாள் என்கிற விஷயத்தில் இந்தப் பக்கமிருந்தும் லிங்க் ஓக்கே என்றாலும், அத்தனை வலுவாகயில்லை அதுவும் நாவலே இவர்களின் காதலை மய்யப்படுத்தி எனும் பொழுது.

இந்தக் காதலை விடுத்து நாவல் கட்டமைக்கும் ஒரு களமான கடற்கரைக் கிராமம், அவர்களது வலி சந்தோஷம் துக்கம் பசி எல்லாம் நாம் கூடயிருந்து பார்ப்பது போன்ற ஒரு பிரமையை உருவாக்குகிறது. காலநிலையைப் பொறுத்து மாறும் அவர்களுடைய நிலைமை, மீன் கிடைக்காத காலங்களில் அவர்கள் படும் பாடு - அங்கே வந்து விழும் வட்டிக்குவிடும் கும்பல், அதில் விழுந்து தோணிகளை இழக்கும் அளவிற்கு போய்விடும் காலம். எல்லாம் நாவலில் கதாப்பாத்திரங்களின் மூலம் காட்சியாய் ஓடுகிறது. ச்ச எப்படா செம்பன்குஞ்சு ஒரு தோணி வாங்குவான் என்ற ஏக்கம் நமக்கும் இயல்பாய் வந்துவிடுகிறது. ஆஹா கஷ்டப்பட்ட சக்கி இனிமேல் தோணியில் இருந்து வரும் காசை வைத்து சந்தோஷமா இருப்பாள் என்றும், கறுத்தம்மா சக்கி இருவரும் சேர்ந்து பரீக்குட்டிக்கு அவர்கள் வாங்கியப் பணத்தை தந்துவிடணும் என்றும் அடடா பழனிக்கு இப்படி ஆய்டுச்சே என்றும் கவலைப்படும் வகையில் மனதை ஆர்ப்பரிக்கிறது கட்டமைக்கப்பட்ட கதாப்பாத்திரங்களின் சூட்சமம். பெண்களின் கற்பு நிலையைப் பற்றிய பெருங்கதைகள் உருவாகி, இருந்து, நிலை நிறுத்தப்பட்ட விஷயங்களையும் அதை அப்படியே நம்பி வாழ்ந்து வரும் மக்களையும் நாம் இந்த நாவலில் காண்கிறோம்.

கறுத்தம்மாவின் மீது சந்தேகப்பட்டு பழனியை தங்கள் தோணியில் இருந்து விலக்கிவிடும் நிலையில் தொடர்ச்சியாக இதைப்பற்றி கட்டப்பட்டு வந்த கதைகளும் அவர்களின் நம்பிக்கையின் வீரியமும் நம்முன்னால் விரிகிறது. ஆனால் கதைசொல்லியின் 'இந்த வகையறா நம்பிக்கைகளின்' மீதான எண்ணம் 50:50 ஆகவே நாவம் முழுவதும் கடைசி பக்கங்களைத் தவிர்த்து இருப்பதை காணலாம். கடைசியில் பரீக்குட்டி வந்து கறுத்தம்மாவை சந்தித்து அவர்களின் ஆலிங்கனம் முடிவதும் பழனி சுறா ஒன்றை வேட்டையாட முயன்று அதில் தோற்று இறந்து போவதும். எனக்கு நேரடியாய் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாய் சொல்லப்படாமல் விட்டிருப்பதாகவே பட்டது முதல் வாசிப்பின் பொழுது. ஆனால் கதையாசிரியரின் மனதில், நிலைநிறுத்தப்பட்டிருந்த கோட்பாடுகள் எப்படியோ ஒரு வழியாய் நமக்குள்ளும் அந்த கோட்பாடுகளைத் திணிக்க வருகின்றனவா என்ற சந்தேகம் வராமலில்லை. கறுத்தம்மாவும் பரீக்குட்டியும் கூட இறந்து போய்விடுகிறார்கள், மூவரின் பிணங்களும் கரை சேர்கின்றன. நாவல் முழுவதும் இந்தக் கோட்பாடுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் கதையாசிரியர் மறுத்து வந்துள்ளதை நாவல் படிப்பவர்கள் உணரமுடியும்.

மோகமுள் யமுனா அளவிற்கு கறுத்தம்மாவை மனதில் நிலைநிறுத்தமுடியாமல் போனதற்கான காரணம் என்னவாகயிருக்க முடியும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். யமுனாவைத் தேடியலைய நினைத்த எண்ணம் கறுத்தம்மாவைப் பற்றி நினைக்கும் பொழுது வந்தாலும் அத்தனை வீரியமில்லாமல் இருப்பதற்கான காரணம் என்னவாகயிருக்கமுடியும். நினைத்துப் பார்க்கிறேன், கறுத்தம்மாவினைப் பற்றிய விவரணைகள் குறைவாக உணர்ந்ததாகயிருக்கலாம் தி.ஜா உயர்த்திப் பிடித்ததைப் போலில்லாமல் கறுத்தம்மாவின் பிம்பங்கள் தகழியால் உருவாக்கப்படவில்லை. ஆனாலும் அந்தக் கடற்கரைக் கிராமத்தை காணும் ஆவல் மேலெழுகிறது, தகழி எந்தக் கடற்கரையை முன்வைத்து இந்தக் கதையை நகர்த்தினார் அவர் மனதில் உருவாகியிருந்த பரீக்குட்டி கறுத்தம்மா எப்படிப்பட்டவர்கள். இந்தக் கதைக்கு இப்படியொரு முடிவை உத்தேசிக்க காரணம் என்ன என்ற கேள்விகள் எழாமல் இல்லை. நாவல் எழுதப்பட்ட காலத்தை முன்னிறுத்தி ஒரு நல்ல நாவல் என்று சொல்லலாம் தான், சுந்தர ராமசாமியின் மொழிப்பெயர்ப்பு நல்ல பணியைச் செய்திருக்கிறது.

0 பின்னூட்டங்கள்: