பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - சுரேஷ் கண்ணன் - 7

எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?
- சுரேஷ் கண்ணன்


ரொம்ப நாட்களாக என் மனதைக் குடைந்து கொண்டிருந்த கேள்விகள் இவை. இது எனக்கு மட்டும்தான் நடக்கிறதா அல்லது பெரும்பாலோர் இதை அனுபவிக்கிறார்களா என்று தெரியவில்லை. இந்த உலகத்தில் நான் மாத்திரம்தான் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறேனோ என்கிற சுயபச்சாதாபம் தரும் வேதனையை தாங்க முடியவில்லை. சில அனுபவங்களை கேள்விகளாக இங்கே இட்டிருக்கிறேன். நீங்களும் இந்த அனுபவங்களை சந்தித்திருக்கிறீர்களா அல்லது அதிர்ஷ்டவசமாக தப்பித்து இருக்கிறீர்களா என்று சொன்னால் தேவலை.



1) நடுஇரவில் ஆவலாக பேஷன் டி.வியைப் பார்க்க அமரும் போது, நான் பார்க்கும் நேரத்தில் மாத்திரம் தடித்தடியான ஆண்கள் நடந்து போகிறார்கள். ஏன்?

2) ரயில்வே நிலையத்தில் டிக்கெட் வாங்க மலைப்பாம்பு மாதிரியான வரிசையில் எரிச்சலுடன் நின்று கொண்டிருக்கும் போது மற்றவர்களை விட்டுவிட்டு சரியாக என்னை தேர்ந்தெடுத்து "ஓரு தாம்பரம் வாங்கிக் கொடுங்க. ப்ளீஸ்" என்று கேட்கிறார்களே, ஏன்?

3) சினிமா காட்சிகளின் இடைவேளையில் சிறுநீர் கழிக்க கழிவறை நாற்றத்தை பொறுத்துக் கொண்டு அவஸ்தையோடு நிற்கும் போது என் முன்னால் நிற்பவன் மாத்திரம் பக்கெட் நிறைய சேர்கிறாற் போல் கழிந்து கொண்டு எரிச்சலை ஏற்படுத்துகிறானே, ஏன்?.

4) அலுவலகத்தில் தாமதமாகி பயங்கர பசியோடு வீடு திரும்பும் போது அன்றைக்கு பார்த்து என் எதிரிக்கும் கூட நான் சாப்பிட அளிக்க விரும்பாத 'ரவா உப்புமா'வை சைட்டிஷ் கூட இல்லாமல் மனைவி தயார் செய்து வைத்திருக்கிறாரே, ஏன்?

5) நான் எழுதும் மொக்கை பதிவுகளுக்கு கூட எதிர்பாராத விதத்தில் அதிகம் பின்னூட்டமிடும் சக வலைப்பதிவு நண்பர்கள் உருப்படியாக எழுதியிருப்பதாக நான் நினைத்திருக்கும் பதிவை முகர்ந்து கூட பார்ப்பதில்லையே, ஏன்?

6) நான் செல்லும் போது மாத்திரம் டாஸ்மாக்கில் "பீர் கூலிங்கா இல்லங்க" என்று சொல்கிறார்களே, ஏன்?

7) ஒரு குறிப்பிட்ட பாடலை கேட்கவோ அல்லது திரைப்படத்தை பார்க்கவோ தீவிர உணர்வு ஏற்பட்டு தேடும் போது மிகச் சரியாக அந்த குறுந்தகடு மாத்திரம் கிடைக்காமலிருப்பதோ அல்லது எல்லாவற்றையும் கவிழ்த்துப் போட்டு எரிச்சலடைந்த பிறகு கடைசியில் கிடைக்கிறதே, ஏன்?

8) வில்லங்கமான காட்சிகள் இருக்காது என்று நினைத்து ஆங்கில ஆக்ஷன் படங்களை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருக்கும் போது அதில் தீடீரென்று ஒருத்தி உடையை அவிழ்ப்பதும் அது வரைக்கும் இருந்த தனிமையை கலைத்து குடும்பத்தினர் யாராவது மிகச்சரியாக அதே நேரததில் அந்த இடத்தை கடந்து சங்கடத்தை ஏற்படுத்துவதும்.. ஏன்?

9) அடித்து பிடித்து பேருந்தில் ஏறி அவசரமாக இருக்கையைப் பிடித்து அமர்ந்த பிறகு நான் அமர்ந்திருக்கும் இருக்கை மாத்திரம் கிழிந்து போயோ அமிழ்ந்து போயோ அசெளகரியத்தை ஏற்படுத்துவது, ஏன்?

10) வீட்டிற்கு வந்து புரட்டிப் பார்க்கும் போது நான் வாங்கும் புத்தகத்தில் மாத்திரம் உள்பக்கங்கள் கிழிந்து போயோ அல்லது சிதைந்து போயோ எரிச்சலை கிளப்புவது ஏன்?

இன்னும் சில பிறிதொரு சந்தர்ப்பத்தில்....

இறுதியாக உங்களுக்கு.....

உருப்படியான பதிவுகள் இருக்க இந்த மொக்கை பதிவை நேரம் செலவழித்து படித்துக் கொண்டிருக்கிறீர்களே, ஏன்? :-)

4 பின்னூட்டங்கள்:

தமிழ்க் குரல் said...

ரொம்பச் சரிங்க!!!

தமிழ்க் குரல் said...

//உருப்படியான பதிவுகள் இருக்க இந்த மொக்கை பதிவை நேரம் செலவழித்து படித்துக் கொண்டிருக்கிறீர்களே, ஏன்? :-)//

தெரியலைங்க?

அதான் யோசிச்சுட்டு இருக்கேன்.

Shakthiprabha (Prabha Sridhar) said...

People call it "Murphy's law" :)

ஆனாலும் அந்த கடைசி வரி மட்டும் சரியோ சரி. (கோவிச்சுக்காதீங்க :P )

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வில்லங்கமான காட்சிகள் இருக்காது என்று நினைத்து//



எதையும் தாங்கும் இதையம் வேண்டும்