தகர்ப்பமைப்பும் அமைப்பின் தகர்ப்பும் - பேரண்டபட்சிகளின் கதைகூறல்கள் : பகுதி - 2
- ஜமாலன்
பிறகான-நவீனத்துவம் குறித்து சுருக்கமாக விளக்க முனைவதால், பல வார்த்தைகளை புதிய அர்த்தங்களில் முந்தைய பகுதியில் விளக்கப்படவில்லை. அதற்காக அவற்றிற்கு பழகிய அர்தங்களை பயன்படுத்த முடியாது. உதாரணமாக கோட்பாடு என்பதை நாம் ஒரு மையத்துவ சிந்தனை போன்று புரிந்து கொள்கிறோம். கோட்பாடு என்பது இயல்பானதாக மக்கள் விளங்கிக் கொண்டிருக்கும் பொதுபுத்தியை கேள்விக்குட்படுத்தி, அது இயல்பற்றதுதான், வரலாற்றில் கட்டமைக்கப்பட்டதுதான் என்பதை அம்பலப்படுத்தி மற்றொரு புதிய ஒழுங்கை முன்வைப்பது. (இவ்வறையறையில் எல்லா சித்தாங்கள், தத்துவங்கள், இஸங்களையும் பொறுத்திக் கொள்ளலாம்.) அவ்வொழுங்குகள் மக்களிடம் புழக்கத்திற்கு வந்தபின் நாளடைவில் அதுவே இயல்பானதாக மாறி தனது கட்டமைவு வரலாற்றை மறைத்துவிடும். உண்மையில் இப்படி மறைவாக இயங்கும் கட்டமைப்புகளை உடைத்து வெளிப்படுததுவதுதான் தகர்ப்பமைப்பு ஆய்வுமுறை. அதற்கு மொழி என்பது ஒரு கட்டுமானம் என்கிற அடிப்படையிலிருந்து துவங்குகிறது.
தெரிதா தகர்ப்பமைப்பு வாதமும் தகர்பபமைப்பிற்கு உட்பட்டதே என்பதை ஏற்றுக் கொண்டே உள்ளார். (மார்க்ஸ்கூட் மார்கஸியம் தேவையற்ற ஒரு சமூகமே தேவை என்கிறார்.) இதன்பொருள் மதங்களின் புனிதமறைகளும், சரொஜாதேவி (தெரியாதவர்கள் பிறகான -நவீனத்துவத்தை படிப்பதே பயனற்றது. :)) கதைகளும் மொழிக்கட்டுமானங்களே. அதனால் சரோஜதேவி தாழ்ந்தது, புனிதமறை உயர்ந்தது என்பது அதிகாரம். சரோஜாதேவி ஒருவகைக் கதைக்கூறல் என்றால் புனிதமறைகள் பிறிதொருவகைக் கதைக்கூறல்களே. புனிதமறைகளை உண்மையாகவும். சரோஜாதேவியை கதைகளாகவும் கருதுவது நமக்குள் இயங்கும் கருத்தியலின் செயல்பாடே. "என்னை பின்பற்றுங்கள்" என்கிற இறைவாக்கும், "அந்த உடலின் அம்மணம் என்னை கிளர்ச்சியுறச் செய்தது" என்கிற சரோஜாதேவியின் வாக்கும் அடிப்படையில் மொழியால் உருவாக்கப்படுவதுதான். அவற்றினை புனிதமானதாகவும் புனிதமற்றதாகவும் புரிந்துகொள்வது சமூக மதிப்பீடுகள் சார்ந்ததே. இந்த மதிப்பீடுகள்தான் ஆளும் கருத்தியல் அடிப்படையில் தீர்மாணமாகிறது. ஆக, இந்த புனிதக் கட்டமைப்புகள உடைத்தெறிவோம் என்கிற புரட்சிகர நிலைப்பாடே தகர்ப்பமைப்பு.
இன்று நம் பழக்கத்தில் இயல்பானதாக உள்ள ஆண், பெண் பாலின வேறுபாடு தொடங்கி தேசியம், குடிமகன், வாழ்க்கை போன்ற பல விஷயங்கள் இப்படித்தான் ஒரு வரலாற்று கட்டமைவுகள் என்பதை பிறகான-அமைப்பியல் அம்பலப்படுத்துகிறது. (எனது மற்றொரு பதிவில் பாலினக் கட்டுமானம் (gendor construction) பற்றியும் பாலியல் கட்டுமானம் (sexual constructions) பற்றியும் விளக்கியுள்ளேன்.) இப்படி பழகிய வழக்கங்கள் நவீன தொன்மமாக கருதி அதனை எதிர்க்கும் அல்லது அவற்றில் இருந்து விலகும் நிலையை பிறகான-நவீனத்துவம் எடுக்கிறது. இதன் எதிர்விளைவாக உருவாகும் அரசியல் நிலைபாடுகளே இந்து மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதங்கள். (மேலதிக விளக்கம் இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து ஒரு விரிவான கட்டுரை எனது நூலில் மற்றும் பதிவில் உள்ளதால், அதனை விடுகிறேன் இங்கு.)
குறிப்பாக இதுவரையிலான சிந்தனைகள் மனிதனை மையமாக கொண்டு வெளிவந்தவை என்பதால் மனித மனத்தில் உட்செறிக்கப்பட்ட வன்முறை என்பது ஏதோ ஒரு வடிவில் சமூகத்தில் வெளிப்பட்டு வருகிறது. அதனால் மனிதமுதல்வாத அல்லது மனிதமையவாத சிந்தனைகளுக்கு பதிலாக உள்ளார்ந்துள்ள-அமைப்புகளை சிதைத்து மையமிழக்கச் செய்யும் ஒரு இயக்க நிலையிலான சிந்தனையே தேவை என்ற நிலையிலும், அதுவே ஒரு ஒழுங்குமுறையாக மாறிவிடாத இயக்கநிலையில் இருப்பதான சிந்தனையாகவுமே தகர்ப்பமைப்பு தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. அதாவது மனிதன் என்பதை ஒரு சொல்லாடலாகவும் வரலாற்று கட்டமைப்பாகவும் அல்லது ஒரு பிரதியாகவும் பார்க்கிறது. (இங்கு சொல்லாடல், வரலாற்று கட்டமைப்பு மற்றும் பிரதி ஆகிய சொற்கள் பிறகான-அமைப்பியல்வாதிகளின் புதிய அர்ததங்களில் பிரயோகிக்கப்படுகிறது என்பதை நினைவில் வைக்கவும்.) இதனை பிறகான-நவீனத்துவம் தனது ஆய்விற்கான முறையியலாக பயன்படுத்துகிறது.
தெளிவாகச் சொன்னால், பிறகான-நவீனத்தவம் என்பது ஒரு காலகட்டத்தை குறிக்கும் சொல் என்கிறார் பிரடெரிக் ஜேம்சன். அதாவது முதலாளித்தவத்தின் ஒரு குறிப்பிட்ட வகையான பண்பாட்டு உருவாக்கமே நவீனத்துவம் மற்றம் பிறகான-நவீனத்துவம் என்பது. இங்கு மார்க்சீயம் முன்வைக்கும் சமூகம் என்கிற கட்டமைப்பு பற்றிய புரிதல் அவசியம். சமூகம் என்பது பொருளியல் அடித்தளம் மற்றம் பண்பாடு உள்ளிட்ட இதர அமைப்புகளைக் கொண்ட மேற்கட்டுமானம் என்கிற அமைப்பைக் கொண்டது. அதாவது பொருளியல் அடித்தளத்தின் மேல்தான் எந்த ஒருபண்பாட்டு அமைப்பும் நிற்கமுடியும். அல்லது பண்பாட்டு அமைப்பு என்பது பொருளியல் அடித்தளத்தால்தான் உருவாக்கப்படுகிறது. முதலாளியம் 3 முக்கிய கட்டங்களில் தனது குறிப்பான பண்பாட்டு அமைப்புகளை உருவாக்கிக் கொண்டது.
1. சந்தை முதலாளியம் (market capitalism) - 18 துவங்கி 19-ஆம் நூற்றாண்டு இறுதிவரை - இக்காலகட்டத்தில் உருவான தொழில் நுட்பங்கள் அதாவது நீராவி எஞ்சின் போன்ற எந்திரங்கள் அதற்கான அழகியலாக உருவாக்கிக் கொண்டதே யதார்த்தவாதம். இதனை செவ்வியல் காலம் - classical age (before 18-th centuary) என்பார்கள்.
2. எதேச்சதிகார முதலாளியம் (monopoly capitaliam)-இது 19-ஆம் நூற்றாண்டின் இறதியிலிருந்து இரண்டாம் உலகப்போர்வரை- இது மின் மற்றும் மின்காந்த ஆற்றல் சார்ந்த தொழிற்நுட்பச் சாதனங்களை உருவாக்கியது. இது நவீனகாலம் modern age (after french revelotion - birth for renaisence என்கிற modernism காலமாகும்.
3. பண்ணாட்டு அல்லது நுகர்வு முதலாளியம் (multinational or consumer capitalism) - இது தற்காலம். இது மின்னணுவியல் மற்றும் உட்கருவியல் (eloctronics and nuclear technology) சார்ந்த தொழில்நுட்ப காலகட்டம். இதுவே பிறகான-நவீன காலம்-postmodern age (current period - starts with failure of 1968 students revolution in France).
இவையெல்லாம் ஐரோப்பிய சிந்தனை என்று நாம் ஜல்லியடிக்க முடியாது. காரணம், வெள்ளையர் ஆதிக்கம் அல்லது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உருவானதற்கு பிறகு உலகம் என்பது ஒரு பொதுமைப்படுத்தலுக்கு வந்துவிட்டது. அதனை உலகமயமாக்கல் என்பது தீவிரப்படுத்திவிட்டது. உலகச் சிந்தனைகளின் பாதிப்புகள் இல்லாமல் எந்த ஒரு தனிமனிதனும் இல்லை. அதிலும் குறிப்பாக கணிப்பொறி யுகத்தில் அறிவு என்பது மிகச்சாதரணமாகப் பெற்றுக் கொள்ளும் ஒரு கடைவிரிப்பாக கடைக்கோடி மனிதனுக்கும் சென்றடையும் நிலையை அடைந்துள்ளது. அறிவின் தன்மை அதை அடையும் முறை ஆகியவை முற்றிலும் மாறியிருப்பதை உணரலாம். பிறகான-நவீனத்துவம் என்பது கனிப்பொறிக் காலக்கட்டத்தின் ஒரு கொட்பாட்டு வர்ணனை என்றுகூடக் கூறலாம்.
இன்றைய பின்காலனீயச் சூழலில் அமேரிக்க-ஐரோப்பிய மேலாண்மை என்பது பண்பாட்டு ஏகாதிபத்தியமாகவும், மறைமுகமாக உலக நிதிமூலதன அமைப்புகள் (IMF, World Bank and WTO, டங்கல் மற்றும் காட் ஒப்பந்தங்கள்) மூலமும் உலகை ஆண்டு வருகிறது. உலகெங்கிலும் தேசிய இனப்போராட்டங்கள், மத அடிப்படைவாதங்கள், சூழலியல் போராட்டங்கள், உலக பயங்கரவாதம் (Global Terrarisam) போன்றவற்றை இவை வளர்த்து வருகின்றன. இந்த உலகச் சூழலை எதிர்கொள்வதற்கான ஒரு முறைப்படுத்தப்பட்ட பார்வையோ தத்துவமோ இல்லை என்பதுடன் அப்படி ஒன்று சாத்தியமே இல்லை என்கிறது பிறகான-நவீனத்துவம். காரணம், நீட்ஷே கூறியதுபோல "நாம் கடவுளை கைவிட முடியும் என்று தோன்றவில்லை. காரணம் நாம் இன்னும் இலக்கணத்தை கைவிடவில்லை." கடவுள் இற்ந்துவிட்டார் என்று அறிவித்த நீட்ஷேதான் இதனையும் கூறினார். இலக்கணம் என்பது ஒழுங்கமைக்கப்பட்ட மொழி. அதைதான் பெரியார் கறைபடிந்த மொழி என்றார். ஆக. இன்றைக்கான இலக்கண அமைதிகளாக கட்டமைக்கப்பட்ட உலகை அதன் கட்டமைப்பை புரிந்துகொள்வதே பிறகான-நவினத்துவத்தின் முயற்சி ஆகும்.
மனித குலத்தின் அதீத வளர்ச்சி தனது ஆதிக்க வெறியால் மிருகங்களைவிட கேவலமான இரண்டு உலக யுத்தங்களை நடத்தி மனிதகுலத்தை அழித்து ஓய்ந்தது. இனி மனிதகுலம் தழைப்பதற்கான மகிழ்வுடன் வன்முறையற்று வாழ்வதற்கான எந்த ஒரு அடிப்படை தர்க்கமும் இல்லை என்கிற சூழல். மனித விடுதலை பேசிய அனைத்து தத்துவங்களாலும் இப்பேரழிவுகளை தடுக்க முடியவில்லை. மனிதன் நம்பிக்கை கொள்வதற்கான எந்த மையமும் இல்லை. இதையே பிறகான-நவீனத்துவ சூழல் என்கிறோம். இதன்பொருள் பிறகான-நவீனத்துவாதி என்கிற நிலைப்பாட்டை யாரும் எடுக்கமுடியாது என்பதுதான். காரணம், பிறகான-நவீனத்துவம் என்பது ஒரு சமூகவடிவம். இதில் தனது தன்னிலையை மையமற்றதாக வைத்துக் கோள்ளும் தந்திரங்களை கண்டடைந்தவர்களே பிறகான-நவீனத்துவவாதிகள். இதில்தான் மனப்பிறழ்ச்சியாளர்கள் துவங்கி சித்தர்கள்வரை அடங்குகிறார்கள். மற்றபடி அழகியல்ரீதியான சோதனை முயற்சிகளில் ஈடுபடும் பிரதியில் செயல்பாடுகள் என்பது பின்-நவீனத்துவ நிலையே ஆகும். இது பிறகான-நவினத்துவ சமூக அமைப்பினை புரிந்து கொள்வதற்கான ஒரு மனத்தயாரிப்பு எனலாம்.
இந்த பிறகான-நவீனத்துவ சூழலை மார்க்சிய விமர்சகர்கள் ஏகாதிபத்தியத்தின் உச்சகட்ட விளைவாக பார்க்கிறார்கள். இது ஏகாதிபத்திய எதிர்ப்பு போருடன், அதனை அழித்து ஒழிப்பதின் மூலமே சாத்தியம் என்கிறார்கள். ஆனால், பிறகான-நவீனத்துவ ஆதரவாளர்கள் மார்க்சியமும் ஒரு பெருங்கதையாடல் என்று அதன் முறைமைகளையும் மறுக்கிறார்கள். பிறகான-நவீனத்துவத்தை மார்க்சியத்திற்குள் வைத்து புரிந்து கொண்டு தங்களது உரையாடலை நடத்தும் மார்க்சிய அறிஞர்களும் இருக்கிறார்கள். இவர்கள் பிறகான-மார்கியர்கள் (post-marxist) என்று அழைக்கப்படுகிறார்கள்.
இப்படி நாம் விளக்கியவுடன் எழும் கேள்வி அப்போ இந்த விளக்கம் எல்லாமே ஒரு மையம்தானே. அதாவது "மையம் இல்லை என்கிற மையம்" என்பதாக. ஒன்றை விளக்கிவிட்டாலே அது மையம் உள்ள சிந்தனை என்பதாக புரிந்து கொள்ளக்கூடாது. அப்படி என்றால், மையமற்ற சிந்தனை என்பதை மொழியால் விளக்க முடியாததாகத்தான் இருக்கும். அப்படி ஒன்று சாத்தியமே இல்லை. மொழி என்பது ஒரு மனித உறுப்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நினைவிழி மனம் என்பது மொழியால் அல்லது மொழிபோல கட்டமைக்கப் பட்டுள்ளது. (இங்கு நினைவிலி மனம் என்றால் என்ன என்பது குறித்து விரிவான புரிதல் அவசியம்.) வேறுவிதமாக கூறினால், நினைவிலி என்பதே மொழிதான். அல்லது மொழி நினைவிலியாக உள்ளது. அதனால் பேசப்படும் மொழி பேசாத மொழியால்தான் கட்டமைக்கப்படுகிறது. அல்லது பேச்சு என்பது நமது தன்னிலையின் தேர்வுப்பரப்பின் அடிப்படையில் பலவற்றை தேர்விலிருந்து விலக்கியே உருவாகுகிறது. இதைதான் பேசாப்பொருளை பேசுதல் என்பார்கள். பெருங்கதையாடல்களுக்கான காலம் மறைந்து விட்டதை அறிவிப்பதே பிறகான-நவீனத்துவ காலகட்டம் என்றால் மிகையாகாது.
ஆனால் இக்கருத்தை மறுக்கிறார் பிரடெரிக் ஜேம்சன் என்கிற மார்க்சியவாதி. பெருங்கதையாடல்கள் மறைவதில்லை, அவை மறைவாக இயக்கம் கொள்கின்றன என்றும் இம்மறைவியக்கத்தை அரசியல் நினைவிலி என்கிறார். சான்றாக, மார்க்சியம் என்பது பெருங்கதையாடல் என்றும் இன்று பெருங்கதையாடலுக்கான காலம் ஒழிந்துவிட்டது என்றும் கூறும்போது சுற்றிவளைத்து மார்க்சியம் காலவதியாகிவிட்டது என்பதுபோன்ற கருத்துநிலையே முன்வைக்கப்படுவதை அவதானிக்கலாம். ஆனால், மார்க்சியம் ஒரு அரசியல் நினைவிலியாக மாறிவிட்டது எனும்போது.. இன்றைக்கான அரசியல் என்பது மார்க்சியத்துடன் ஒரு உரையாடலை செயவதாகவும், மார்க்சியம் அந்த அரசியலை நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் கட்டுப்படுத்தும் ஒன்றாக சமூகத்தின் மொழி சார்ந்த நினைவில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதே பொருள்.
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஜமாலன் - 3
பதிவு வகை : கட்டுரை, வார நட்சத்திரம்
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment