பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - செல்லமுத்து குப்புசாமி - 7

Gal oya வில் சிங்களர்களைப் பெருமளவில் குடியேற்றி அப்பகுதியில் இன விகிதாச்சாரத்தை வெகுவாக மாற்றிய பிறகு சிங்களருக்கென்று தனித் தொகுதி ஒன்றை உருவாக்கினார்கள். இதன் மூலம் தர்மத்திற்குப் புறம்பாக நாடாளுமன்றத்தில் சிங்களக் குரல் ஒன்று கூடுதலாக ஒலிக்க வழி செய்தனர். கிழக்குப் பிராந்தியத்தில் ஏழு தொகுதிகள் இருந்தன. 1959 தேர்தலுக்காக அம்பாறை மற்றும் Nintavur தொகுதிகள் மொத்தம் ஒன்பது இடங்களாக உயர்ந்தது. மட்டக்களப்பு மற்றும் பொட்டுவில் தொகுதிகளில் இருந்த சிங்களப் பகுதிகளை மட்டும் பிரித்தெடுத்து அம்பாறைத் தொகுதியை உருவாக்கினார்கள்.



சிங்களக் குடியேற்ற என்பது Gal oya திட்டத்தோடு நின்று விட்ட ஒற்றை நிகழ்ச்சியல்ல. தமிழ் தேசத்தின் கிராமப் புறங்களில் சிங்களக் குடியானவர்களைக் குடியமர்த்தி அவற்றிற்கு சிங்களப் பெயரைச் சூட்டினார்கள். புதிதாக பார்க்கிறவர்களுக்கு அந்தப் பகுதிகள் எல்லாம் சிங்களப் பகுதிகள் என்ற தோற்றத்தை உருவாக்குவதே அதன் நோக்கம். இப்படிச் செய்வதன் மூலம் கிழக்குப் பிராந்தியம் தமிழர்களின் பூர்வீக நிலப்பகுதி கிடையாது. அங்கே சிங்களர்களும் குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில் உள்ளனர், வேண்டுமென்றால் பெயர்களைப் பாருங்கள் அவை சிங்களத்தில் உள்ளன என்று வாதிடலாம். 'அரிப்பு' என்ற பெயர் தாங்கிய தமிழ்க் கிராமத்திற்கு Serunuwara என்ற சிங்கள சூட்டப்ப்பட்டது. கல்லாறு Somapura என்றானது. நீலப்பள்ளைக்கு Nilapola, பூநகர் என்ற ஊருக்கு Mahindapura, திருமண்காவாய் என்ற பெயருக்கு Dehiwatte எனப் பல உதாரணங்களைக் காட்டலாம்.



சிங்களக் குடியேற்றத்தை ஆரம்பித்து வைத்தது சேனநாயகா என்றாலும் அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அனைத்து சிங்கள ஆட்சியாளர்களும் தாம் எந்தக் கட்சியைச் சார்ந்திருந்தாலும் 'தேசத் தந்தை' வகுத்த பாதையில் அவரை விட வேகமாகவே நடந்தனர். சாலமன் பண்டாரநாயகா காலத்திலும் காலனியாக்கம் நடந்தது. அவரது மனைவி சிறீமாவோ 1960 இல் பிரதமராக இருந்த போது 'முதலி குளம்' என்ற தொன்மையான ஊருக்கு Morawewa என்று பெயரிட்டு Morawewa திட்டத்தைத் தொடங்கினார். அதற்கு முன்பு சிங்கள மக்கள் அறவே இல்லாத இந்த ஊரில் நடந்த 1981 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மொத்தமுள்ள 9271 பேரில் 5101 பேர் சிங்களர் என்ற அளவுக்கு இன விகிதாச்சாரமே தலைகீழாக மாறியது.



திருகோணமலை மாவட்டத்தை சிங்களமயமாக்கும் முயற்சியும் இன்னொரு பக்கம் நடந்தது. 1972 இல் நொச்சிக்குளம் என்ற அருமையான தமிழ்ப் பெயர்கொண்டு விளங்கிய ஊர் Nochiyagama வாக உருமாறியது. சுமார் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் சிங்களர் பரவினர். தமிழ்க் கிராமங்களைச் சுற்றிலும் முற்றுகை அமைப்பது போல பல இடங்களில் ஊரைச் சுற்றியுள்ள அரசு நிலங்கள் சிங்களர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்தக் கொடுமை கிழக்குப் பிராந்தியத்தில் மட்டுமல்லாமல் மலையகத்திலும் நடந்தேறியது. எப்போதெல்லாம் கொழும்பில் அரசியல் பதற்றம் நிலவுகிறதோ அப்போதெல்லாம் முற்றுகைக்கு ஆளான இந்தக் கிராமங்கள் தாக்குதலுக்கு ஆளாகும்.



1959 ஆம் ஆண்டு அம்பாறைத் தொகுதி உருவானதைப் போல திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள விகிதாச்சாரம் உயர்த்தப்பட்டதை அடுத்து அங்கும் கூட 1976 இல் Seruwila சிங்களத் தொகுதி ஒன்று பிரித்தெடுக்கப்பட்டது. கிழக்குப் பகுதியில் இப்படியெல்லாம் திட்டமிட்டு இன விகிதாச்சாரத்தை மாற்றியதன் மூலம் வடக்கு மற்றும் கிழக்கும் மாகாணங்கள் தமிழர் தேசத்தின் பாரம்பரியப் பகுதி என்ற வரலாற்று உண்மையைக் கற்பனைவாதமாக உருவகம் செய்து கேலிக்குள்ளாக்கி மறுப்பது சுலபமாகியது. அதாவது வரலாற்று ரீதியாக அமைந்திருந்த தமிழர் தேசத்தின் எல்லையை சிங்களர்கள் படிப்படியாக உள்நோக்கித் தள்ளி அந்த எல்லையைச் சுருக்கினர். அதைத் தவிர மூன்று முக்கியப் பாதிப்புகளை தமிழ் மக்கள் சந்தித்தனர். முதலாவதாக பரம்பரை பரம்பரையாக அவர்கள் வாழ்ந்து வந்த மண்ணின் இன விகிதாச்சாரம் மாறியது. இரண்டாவதாக தமிழர்களுக்கு முறையாகக் கிடைத்திருக்க வேண்டிய வளமான விவசாய நிலப்பரப்பு சுருக்கப்பட்டது. மூன்றாவதாக நாடாளுமன்றத்தில் அவர்களது பிரதிநிதித்துவம் குறைந்தது.



ஏற்கனவே குறிப்பிட்டது போல உலகிலேயே மிகவும் பாதுகாப்பான இயற்கைத் துறைமுகங்களில் ஒன்று திருகோணமலைத் துறைமுகம். அது தமிழர் பாரம்பரியப் பகுதியில், அதுவும் பெரும்பான்மையான தமிழ் மக்கள் வாழும் நகரமாக இருப்பது சிங்களர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் எந்த அளவிற்கு அதை சிங்களமயமாக்க முடியுமோ அந்த அளவிற்கு சிங்களமயமாக்கினார்கள்.



இதற்கிடையில் குடியுரிமைச் சட்டத்தின் போது தன் அமைச்சர் பதவியைத் துறந்த சுந்தரலிங்கம், தேசியக் கொடி தொடர்பான சர்ச்சையில் ஆலோசனை சொல்வதற்காக அமைக்கப்பட்ட குழு அதே கொடியைத் தொடருவதென்று 1951 இல் முடிவு செய்த போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு அக்டோபரில் வவுனியா தொகுதி இடைத் தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றார்.



சிங்கள வட்டாரங்களில் இதை விட முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் அந்த வருடம் அரங்கேறியது. உள்ளாட்சி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராகவும், அவையின் தலைவராகவும் பதவி வகித்து அரசாங்கத்தில் D.S.சேனநாயகாவுக்கு இரண்டாம் நிலையிலிருந்த சாலமன் பண்டாரநாயகா பதவியை ராஜினாமா செய்து விட்டு தனது சிங்கள மகா சபையை அப்படியே அதற்கு சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியாக மாற்றினார்.



1952 இல் குதிரைச் சவாரி செய்த போது அவரது பருமனைத் தாங்காத குதிரை கீழே விழுந்து சேனநாயாகாவும் கீழே தள்ளியது. மூர்ச்சையான முதல் பிரதமர் அதன் பிறகு கண் விழிக்கவே இல்லை. அவர் காலியானதும் அவரது மகன் டட்லி சேனநாயகா பிரதமர் ஏனார். அப்போது முதலாவது பாராளுமன்றத்தின் ஆயுளும் முடிவுக்கு வந்து இரண்டாம் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது.



தேர்தல் பிரச்சாரத்தின் போது டட்லி சேனநாயகா, "இந்திய வம்சாவழித் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலம் பிரித்துக் கொடுக்காவிட்டால் சிலோனுக்கு அரிசி தர மறுக்கிறது" என்று இந்தியாவின் மீது அபாண்டமாகக் குற்றம் சாட்டி சிங்கள மக்களிடமிருந்த இந்திய எதிர்ப்பு உணர்வையும், இந்தியாவுக்குச் சேர்ந்த மக்கள் என்று பிரச்சாரம் செய்து மலையகத் தமிழர் மீதான் எதிர்ப்பு உணர்வையும் மேலும் தூண்டினார். மேலும் ஆழமான சிங்களப் பகுதிகளில் செய்த பிரச்சாரத்தில் தனது கட்சி தொண்டமான்களையும், ராஜசிங்கங்களையும் (இவர்கள் சிலோன் இந்திய காங்கிரஸ் உறுப்பினர்களான இவர்களை ஒரேயொரு சட்டம் போட்டு) பேனா முனையில் நாடாளுமன்றத்திற்கு நுழைய விடாமல் தடுத்துள்ளது என்று பெருமையுடன் பேசி ஓட்டுக் கேட்டார்.



ஆம், வாக்குரிமையை பறிக்கப்பட்ட காரணத்தினால் மலையக மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதித்தது. கடந்த தேர்தலில் ஏழு இடங்களை வென்ற சிலோன் இந்திய காங்கிரஸ் இந்தத் தேர்தலின் போது 'நாடட்டற்றவர்கள்' என்று முத்திரை குத்தப்பட்டதால் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை. அந்த ஏழு தொகுதிகளின் சார்பில் சிங்களர்கள் உறுப்பினராயினர். நாடாளுமன்றத்தில் 67 சதவீதம் இருந்த சிங்களர் பலம் 73 சதவீதமாக உயர்ந்தது. டட்லி சேனநாயகாவின் ஐக்கிய தேசியக் கட்சி வென்றது.



தமிழரசுக் கட்சி முதன் முறையாக தேர்தலைச் சந்தித்தது. சிங்களர்களுடன் கூட்டுச் சேர்ந்து தமிழர்களுக்குத் துரோகம் செய்த பொன்னம்பலம் செல்வநாயகத்தின் செல்வாக்கின் முன் தாக்குப்பிடிக்க இயலவில்லை. தமிழர் தாயகப் பகுதியில் தந்தை செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சி பெருவாரியான இடங்களைப் பெற்றது.



தீர்க்கப்படாமல் அந்தரத்தில் விடப்பட்ட மலையகத் தமிழர்களின் நிலையைத் தீர்மானிக்கும் விதமாக 1953 ஜூன் மாதம் இலண்டனில் நடைபெற்ற எலிசபெத் ராணியின் முடிசூட்டு விழாவின் போது இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், சிலோன் பிரதமர் டட்லி சேனநாயகாவும் சந்திதுப் பேசினார்கள். நான்கு இலட்சம் பேருக்கு சிலோன் குடியுரிமை தருவதாகச் சொன்ன டட்லி, இந்தியா மூன்று இலட்சம் பேரைத் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தினார். மீதமுள்ளவர்களின் தலையெழுத்தை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றும் யோசனை தெரிவித்தார். ஆனால் நேரு இந்த அம்சங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. மூன்று இலட்சம் பேரைத் திரும்ப ஏற்பதில் சிக்கல் ஏற்படும் என்று அவர் கருதினார். மலேயா, பர்மா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சுமார் ஒன்னேகால் கோடி இந்தியக் கூலிகள் இருந்தனர். சிலோனிலிருந்து மூன்று இலட்சம் பேரைத் திரும்பப் பெற்ற மற்ற நாடுகளும் இந்தியர்களை வெளியேற்றினால் என்ன செய்வது?



பேச்சுவார்த்தையை முடித்து விட்டு டட்லி சேனநாயகா சிலோன் திரும்பியதும் தெற்காசிய வரலாற்றின் இருண்ட பக்கங்களை 1980 களில் எழுதப் போகும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா போட்ட பட்ஜெட் அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தியை உண்டாகியது. அந்த பட்ஜெட்டில் உணவுப் பொருள் மீதான மானியத்தை நீக்கி அரிசியின் விலையை மூன்று மடங்கு உயர்த்தினார். மக்களின் எதிர்ப்பு டட்லிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. மேலும் உடல்நிலை காரணமாகவும் 1953 அக்டோபரில் அவர் பதவி விலகினார். ஜான் கொத்தலவாலா பிரதமரானார்.



மலையக மக்களின் குடியுரிமைப் பிரச்சினை பற்றிப் பேசுவதற்கு நேரு விடுத்த அழைப்பை ஏற்று ஜான் கொத்தலவாலா 1954 ஜனவரியில் டில்லிக்குப் புறப்பட்டார். சிலோன் அரசுப் பிரதிநிதிகளுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திய போது தொண்டமான் உள்ளான சிலோன் இந்திய காங்கிரஸ் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் டில்லியில் இருந்தனர். பேச்சுவார்த்தையின் ஒவ்வொரு கட்டத்திலும் நேரு நிர்வாகம் இவர்களைக் கலந்தாலோசித்தது. இரு தலைவர்களுக்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. அதை இரண்டே வாக்கியங்களில் சுருங்கக் கூறி விடலாம்.



1. இது வரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதோருக்கான புதிய பட்டியல் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் அனைவர் பெயரும் சேர்க்கப்படும். இந்தப் பட்டியல் அடிக்கடி புதுப்பிக்கப்படும். அப்படி பட்டியலில் பெயர் இல்லாதோர் கள்ளத்தனமாகக் குடியேறியவராகக் கருதப்படுவார்.

2. குடியுரிமை கோரிய விண்ணப்பங்கள் இரண்டு வருடத்திற்குள் பரிசீலிக்கப்பட்டு ஆவன செய்யப்படும்.



நிம்மதிப் பெருமூச்சுடன் சிலோன் திரும்பிய தொண்டமான் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த தொண்டமான், "இந்த ஒப்பந்தம் வெற்றியடைய வேண்டுமானால் சிலோன் அரசு டெல்லிப் பேச்சில் காட்டிய வேகத்தை செயலிலும் காட்ட வேண்டும்" என்று கூறினார். ஆனால் அவரது நிம்மது வெகு நாள் நீடிக்கவில்லை.



இரு பிரதமர்களுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டை நடைமுறைப்படுத்தக் கூடாது என்ற தீர்மானத்தை எதிர்க் கட்சித் தலைவர் சாலமன் பண்டாரநாயகா நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார். உடன்படிக்கையில் படி உருவாக வேண்டிய புதிய பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதில் நிர்வாகிகள் காட்டிய மெத்தனமும், சுணக்கமும் இந்தியாவைக் கவலையடையச் செய்தது. இந்திய வம்சாவழி மலையக மக்களை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கே சிலோன் ஆர்வம் காட்டியது. அந்த ஆர்வம் "இப்போது புத்தர் இந்த நாட்டிற்கு வந்தால் கூட அவரையும் (இந்திய வம்சாவழி என்று சொல்லி) நாடு கடத்தி விடுவார்கள்" என்று சுந்தரலிங்கம் கூறுமளவுக்கு இருந்தது.



மலையகத் தமிழர் நாடகம் ஒரு புறம் நடக்க சிங்களர்-பூர்வீகத் தமிழர் முரண்பாட்டு அரசியல் இன்னொரு பக்கம் நடந்தது. 1954 ஏப்ரலில் இங்கிலாந்து ராணியும், மன்னரும் சிலோனுக்கு வந்தனர். இதற்கு முன்னர் பிரிட்டிஷ் அரச வம்சத்தினர் யாருன் இந்தத் தீவுக்கு வந்ததில்லை என்பதால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. எலிசபெத் ராணி தனது 28 ஆவது பிறந்த நாளை சிலோனில் கொண்டாடினார். அவர் சிலோன் பாராளுமன்றத்தில் உரையாற்றியதற்கு நன்றி தெரிவித்துப் பேசிய ஜே.ஆர்.ஜெயவர்த்தனா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது அச்சிட்ட உரையின் தமிழாக்கத்தை விநியோகிக்கத் தவறினார். இதை சுந்தரலிங்கம் வன்மையாகக் கண்டித்தார்.



பிரிட்டிஷ் ராணி சிலோனின் இருந்த போது சிங்கள இனத்தின் ஆதிக்க எண்ணத்தை உலகுக்கு உணர்த்தும் இன்னொரு காரியமும் நடந்தது. இரு மாதங்களுக்கு முன்னர் கவர்னர் சோலிஸ்பெரி விபத்தில் காயப்பட்ட தன் மனைவியைக் காண இங்கிலாந்து சென்றார். ராணியார் பயணித்த சமயம் தலைமை நீதிபதியாக இருந்த வெள்ளைக்காரர் ஆலன் ரோஸ் என்பவரும் சிலோனின் இல்லை. எனவே தற்காலிகத் தலைமை நீதிபதியாக இருந்த நாகலிங்கம் என்ற தமிழர் தற்காலிக கவர்னர் ஜெனரலாகவும் கடமையாற்றினார். அந்தப் பொறுப்பை ஏற்ற முதல் சிலோன் குடிமகன் என்ற பெருமைக்குரியவர். இங்கிலாந்து மகாராணி வந்திருக்கும் போது ஒரு தமிழர் கவர்னராக, ராணியின் பிரதிநிதியாகக் காட்சியளிப்பதை சிங்கள ஆதிக்கவாதிகளால் சகித்துக்கொள்ள இயலவில்லை. எனவே ஆலிவர் குணதிலகே என்ற சிங்களரை கவர்னர் ஜெனரலாக நியமிக்குமாறு கோரி பிரிட்டிஷ் அரசியாரின் ஒப்புதலைப் பெற்றனர்.



இதற்கிடையில் ஜனவரியின் பண்டித நேருவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதில் சிலோன் அரசு அக்கறை காட்டவில்லை. சிலோன் அரசாங்கம் தான் உடன்படிக்கையில் ஒப்புக்கொண்ட விஷயங்களை நிறைவேற்றத் தவறியது. 1954 ஜனவரி உடன்பாடு வெற்றியடையாமல் போனதன் விளைவாக அக்டோபரில் மீண்டும் ஒரு இந்திய-இலங்கை பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் வெளியான கூட்டறிக்கை இரு தரப்பு நிலைப்பாட்டிலும் முரண்பாடு இருப்பதாகத் தெரிவித்தது. ஆன போதும் அந்த முரண்பாட்டிற்கு எந்தத் தீர்வும் காணப்படவில்லை. மலையகத் தமிழர்களுக்கு ஒரு கெளரவமான தீர்வு காண்பதற்குக் கிடைத்த அரிய வாய்ப்பு கை நழுவிப் போனது. நாடற்றவர் என்ற அடையாளத்துடன் நாதியற்ற அம்மக்கள் தொடர்ந்தனர்.



கமல்ஹாசனும், ஜாக்கி சானும் பிறந்த அந்த 1954 ஆம் ஆண்டில் இன்னொரு முக்கியமான நிகழ்ச்சியும் நவம்பர் 26 அன்று நடந்தது. பிற்காலத்தில் சிங்களர், தமிழர், முஸ்லிம் மக்கள் என இலங்கைத் தீவில் வாழும் அத்தனை மக்கள் இல்லங்களிலும் வேறுபட்ட காரணங்களுக்காக உச்சரிக்கவிருக்கும், கொழும்பு மற்றும் சென்னைப் பத்திரிக்கைகளிலும் பரபரப்பை ஏற்படுத்தப் போகும் 'பிரபாகரன்' என்ற பெயரைத் தாங்கிய குழந்தை இலங்கையின் வடக்குக் கரையோரம் பருத்தித்துறைக்கும், காங்கேசன் துறைக்கும் இடையேயுள்ள வல்வெட்டித்துறை என்ற ஊரில் பிறந்தது.

1 பின்னூட்டங்கள்:

mrknaughty said...

நல்லா இருக்கு
thanks
mrknaughty
click here to enjoy the life