பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - சுரேஷ் கண்ணன் - அறிமுகம்

சுரேஷ் கண்ணன் - அறிமுகம்

வணக்கம் நண்பர்களே


ஆண்டு விழாக் கொண்டாட்டத்தை குதூகலத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் 'பண்புடன்' குழுமத்தின் உறுப்பினர்களுக்கு வணக்கம். வலைப்பூக்கள் பெருகி விட்ட இன்றைய நிலையில் பல்வேறு அலைவரிசையில் உள்ள உறுப்பினர்களை ஒருங்கிணைத்து குழுமங்களை தொடர்ந்து நடத்துவது என்பது மிகச் சிரமமான விஷயம். அதிலும் நண்பர் ஆசிப் மீரானை வைத்துக் கொண்டு ஒரு குழுமம் ஒரு வருடத்தை நிறைவு செய்திருக்கிறது என்பது நிச்சயம் ஒரு சாதனைதான்.


வேறு வழியில்லை. ஆசிப்பை நண்பர் என்றுதான் அழைக்க வேண்டியிருக்கிறது. நண்பர் என்கிற சொல்லின் நேரடி அர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டாம். 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்றொரு saying உண்டு. அந்த வகையில் அவர் எனக்கு நண்பர். 'எனக்குப் பிடிக்காதவைகள்' என்றொரு பட்டியலிட்டால் கவிதை என்கிற வஸ்துவிற்கு நிச்சயம் அதில் பிரதான இடமுண்டு. கவிதை எனக்கு எதிரி அல்லது கவிதைக்கு நான் எதிரி. ஆசிப்பும் 'கவுஜை'க்கு எதிரி என்று அறிகிறேன். எனவே...


நான் சுரேஷ் கண்ணன். ராயர் காப்பி கிளப் குழுமத்தின் மூலம் இணையத்தில் நுழைந்தேன். பின்னர் மரத்தடி. அங்குதான் ஆசிப் என்கிற சாத்தானின் நட்பு ஏற்பட்டது. (இந்த வகையில் மரத்தடியும் என்னுடைய எதிரிதான்). மிகவும் சம்பிரதாயமாக தொடங்கிய நட்பு இரண்டு பேர்களின் லொள்ளுத்தன்மை காரணமாக சற்று இறுக்கமடைந்தது. எனக்கு ஆசிப்பிடம் மிகவும் கவர்ந்தது அவருடைய பிரத்யேகமான நகைச்சுவை. அமீரக ஆண்டுவிழா மலரில் பிரசுரமான ஒரு புகைப்படத்திற்கு அவர் சொன்ன ஒரு பின்னணிக்கதையை இப்போது நினைத்தாலும் சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வரும். ஆனால் இந்த நகைச்சுவையே சற்று அதீதமாக போய்விடும் சமயங்களில் இடைவெளி ஏற்பட்டதுண்டு. அந்த இடைவெளியை மீண்டும் நிரப்பியதும் அதே நகைச்சுவைதான் என்பதொரு நகைமுரண். நகைச்சுவையைத் தாண்டியும் தீவிரமானதொரு சிந்தனைகளைக் கொண்டவர் ஆசிப் என்பது தெரியும். எனவே அந்தப் பக்கத்தை அவர் நிறைய காண்பிக்க வேண்டும் என்பது என் ஆசை. (வில்லங்கமாக ஏதும் பொருள் வரவில்லையே?)

()


www.pitchaipathriram.blogspot.com என்கிற வலைப்பூவில் 2004 முதல் எழுதி வருகிறேன். தமிழ் நவீன இலக்கியத்திலும் உலக சினிமாவிலும் ஆர்வமுண்டு. வேறெதுவும் சொல்ல இருப்பதாக தோன்றவில்லை. அவ்வளவுதான்.

0 பின்னூட்டங்கள்: