ஆங்கிலேயர்கள் கண்டி மலை நாட்டைக் கையகப்படுத்தி இலங்கையை ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்த சமயத்தில் இன்னொரு வரலாற்றுத் திருப்பமும் ஏற்பட்டது. 1823 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 12 கூலிகளின் உழைப்பில் காஃபி பயிரிட்டு 600 பவுண்ட் சம்பாத்ததில் திடீர் கதாநயகன் ஆன வெள்ளை முதலாளி ஆரம்பித்து வைத்த திருப்பம் அது. மலிவான கூலிக்கு உழைக்கும் மக்களை இறக்குமதி செய்யும் வரலாறு தொடங்கியது. 1827 ஆம் ஆண்டு Sir Edwards Barnes என்ற ஆங்கில கவர்னர் கண்டி மலைப் பிரதேசத்தில் காஃபித் தோட்டங்களை நிர்மாணித்து அவற்றில் வேலை செய்வதற்காக சென்னை மாகாணத்தில் இருந்து 300 தொழிலாளர்களை வரவழைத்தார். இந்த எண்ணிக்கை காலப் போக்கில் பன்மடங்கு பெருகியது.
மலைப் பிரதேசத்தைச் சீர்திருத்திச் செப்பனிட்டு பயிரிடுவதற்கு ஏற்றதாக மாற்றுகிற கடினமான வேலையில் ஈடுபட உள்ளூர்ச் சிங்கள மக்களுக்கு முதுகு வளையவில்லை. அதனால் இந்தியாவில் நிலவிய வறுமையைப் பயன்படுத்தி, வஞ்சகமில்லாமல் உழைக்கிற இந்தியர்களை ஆங்கிலேய எஜமானர்கள் தருவித்தனர். இந்தியாவாக இருந்தாலும், இலங்கையாக இருந்தாலும் யாவுமே ஒரே பேரரசின் கீழ் உள்ள காரணத்தினால் எல்லா இடத்திலும், எல்லோரும் அடிமைகள் என்ற அடிப்படையில், அனைவரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் குடிமக்கள் என்ற எதார்த்தத்தில் அவர்களும் கண்டிக்குப் புறப்பட்டனர்.
இலங்கைக்குத் தொழிலாளர்கள் ஏற்றுமதி செய்யப்படுவதையும், அங்கே அவர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதையும் எதிர்த்து இந்தியாவிலும் இலங்கையிலும் மனிதாபிமானிகள் குரல் எழுப்பினர். அதன் விளைவாக பிரிட்டிஷ் இந்திய அரசு 1839 இல் பயிற்றுவிக்கப்படாத தொழிலாளர்களின் ஏற்றுமதியைத் தடை செய்தது. ஆனால் சில அடிப்படை உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படும் என்று இலங்கை அரசும், தோட்ட முதலாளிகளும் உறுதியளித்ததன் தொடர்ச்சியாக 1847 இல் இத்தடையை பிரிட்டிஷ் இந்திய அரசு நீக்கியது. மலையகத் தோட்டங்களில் பணியாற்றும் இந்திய வம்சாவழித் தமிழர்கள் விவகாரத்தில் இந்தியா அடிக்கடி தலையிட்டு அவர்களின் அடிப்படைத் தேவைகளை உத்திரவாதப்படுத்த முனைந்தது. மருத்துவ வசதிச் சட்டம், கல்வி சகாயச் சட்டம், தொழிலாளர் சட்டம், சம்பளச் சட்டம் ஆகியவை 1912 முதல் 1927 வரை இலங்கை அரசினால் நிறைவேற்றுவதை இந்தியா உறுதிப்படுத்தியது.
மனிதர்கள் முன்பு செல்லாத அடர் காடுகளை நோக்கிய மலையக மக்களின் காலடியும், அந்தக் காட்டைப் பண்படுத்திய கைகளும் இல்லாவிட்டால் அங்கே தோட்டங்கள் உருவாகியிருக்காது. கடுமையான சூழலுக்குள் தம் உடலை நிலத்தில் உரமாக்கியபடிதான் இலங்கையின் முதல் ஏற்றுமதி வருவாயை ஈட்டித் தரும் உற்பத்தியை உருவாக்கினார்கள். அவர்கள் கால் படதா, கை தொடாத, உடல் விதையாகாத மலையகம் எதுவுமில்லை. இந்த மண்ணை வளமாக்கிய போது இறந்தவர்களில் எண்ணிக்கை கணக்கற்றது. 1926 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கட்டளைச் சட்டம் ஒன்றின் படி ஆரம்பத்தில் மலையகம் வந்தவர்களின் 100 க்கு 40 பேர் சூழல் சார்ந்து இறந்ததை உறுதி செய்கின்றது. 1841 க்கும் 1849 க்கும் இடையில் எழுபதாயிரம் பேர், அதாவது 25 சதவீதத்தினர் துர்மரணம் எய்தியதாக கொழும்பு அப்சர்வர் தனது பத்திரிக்கைச் செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. (1980 முதல் இலங்கையில் நடந்து வரும் விமானத் தாக்குதல்களும், நிலக் கண்ணி வெடிகளும் நிரம்பிய ரத்த மயமான இனப்போரினால் இறந்த மக்களைக் காட்டிலும் இந்தத் தொகை அதிகம்) 1837 ஆம் வருடம் 4,000 ஏக்கராக இருந்த காஃபித் தோட்டத்தின் பரப்பு 1881 இல் 2,56,000 ஏக்கராகப் பெருகியது. இதற்கிடையில் 1860 இல் தேயிலை பயிரிடுதல் சிறு அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1870 களில் பூச்சிகள் தாக்கி காஃபி பயிருக்குப் பெரும் சேதம் விளைவித்த போது அவை ஒட்டுமொத்தமாக தேயிலைத் தோட்டங்களாக மாற்றம் கண்டன. 1917 இல் தேயிலை உற்பத்தி 4,26,000 ஏக்கராக ஏற்றம் கண்டது.
அதற்கு முன்பாக சிலோனின் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பல வேலைகளில் இந்த மக்கள் ஈடுபட்டனர். பாலங்கள், சாலைகள், இருப்புப் பாதை நிர்மாணம் ஆகியவற்றில் இவர்களின் உழைப்பு பயன்படுத்தப்பட்டது. காஃபி மற்றும் தேயிலை சாகுபடி மூலம் ஈட்டப்பட்ட ஒவ்வொரு காசிலும், அவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் முன்னேற்றங்களின் பின்னாலும் மலையக மக்களின் வரலாறு ஓசையின்றிப் பதிந்திருக்கிறது. உலகெங்கும் பருகிய மற்றும் பருகும் காஃபி மற்றும் தேநீரின் சுவையில் இந்த மக்களின் இரத்தத்தின் வெப்பமும், வியர்வையின் கசப்பும் கலந்திருக்கின்றது. இந்தத் தகவல்களை எல்லாம் எதற்காக இங்கே குறிப்பிட வேண்டியிருக்கிறது என்றால், இத்தகைய அளப்பரிய தியாகம் செய்து இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, அந்தத் தீவின் ஏற்றுமதிக்கு மாபெரும் தூணாக விளங்கும் தேயிலை சாகுபடியை உருவாக்கிய மலையக மக்களுக்குப் பிற்காலத்தில் எத்தகைய துரோகம் இழைக்கப்பட்டது என்பதை உணர்ந்து கொள்வதற்காகத்தான்.
ஆக இலங்கையின் தற்போதுள்ள தமிழர்களை பாரம்பரிய ஈழத் தமிழர்கள் என்றும், தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்வதற்காக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட 'இந்திய வம்சவழித் தமிழர்கள்' என்றும் பெரும்பான்மை சிங்களர்கள் வகைப்படுத்துகின்றனர். ஈழத் தமிழர்கள் இலங்கையில் வடகிழக்குப் பகுதியான தமிழர்களில் பாரம்பரிய நிலப்பகுதியில் வசிக்கிற அதே வேளை இந்திய வம்சாவழித் தமிழர்கள் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு நடுவில் மலையகத்தில் வசிக்கின்றனர். இது தவிர இலங்கையில் கிழக்குப் பகுதியில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். தாய் மொழியாக தமிழே இருந்த போதும் தங்களைத் தனியான கலாச்சார அடையாளம் கொண்ட ஒரு இனக் குழுவாகவே உணர்கின்றனர். இப்படி இலங்கைத் தீவில் உள்ள அனைத்துத் தமிழ் பேசும் மக்களையும் ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் என்று தனித்தனியே பிரித்துப் பேசி விட்டு மண்ணின் மைந்தர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் சிங்கள இனம் எது?
சிங்கம் ஒன்று இளவரசி ஒருத்தியோடு உடலுறவு கொண்டு அதன் மூலம் தோன்றிய இனம்தான் சிங்கள இனம் என்று சிங்களப் புராணங்கள் ஒரு பக்கம் கூறினாலும், சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் கி.மு. 486 ஆம் ஆண்டு சிங்கள இனம் உருவானதாகத் தெரிவிக்கின்றனர். மொட்டையடித்து நாடு கடத்தப்பட்ட விஜயன் என்ற இளவரசன் கி.மு. 486 இல் தனது எழுநூறு ஆதரவாளர்களுடன் இலங்கைத் தீவில் வந்திறங்கினான். தமிழ் மன்னன் எல்லாளன் வீழ்வதற்க்கு முன்னூறு ஆண்டுகள் முன்னர் இது நடந்தது. மகாவம்சம் முதலிய பிராதனச் சிங்கள நூல்களே கூட விஜயன் வருகைக்கு முன்பே நாகர்கள், யாக்கர்கள் என்ற பெயரில் திராவிட அரசுகள் இலங்கைத் தீவில் இருந்ததை வேண்டா வெறுப்பாக உறுதி செய்கின்றன. கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தது போல சிங்கள மக்களைப் பொறுத்த வரை இலங்கைத் தீவைக் "கண்டுபிடித்தது" விஜயன்.
ஆக அசோகச் சக்கரவர்த்தி புத்த மதத்தைத் தழுவும் முன்னரே விஜயன் இலங்கைத் தீவை அடைந்து சிங்கள வம்சத்திற்கு வித்திட்டான். விஜயன் இலங்கையில் அடியெடுத்து வைத்து சிங்கள இனத்தை உருவாக்கிய 59 ஆண்டுகளுக்குப் பிறகு அசோகச் சக்கரவர்த்தியின் மைந்தன் மகிந்தன் புத்த மதத்தைப் பரப்புவதற்காக கி.மு.427 இல் இலங்கையை அடைந்தான். இவ்வாறாக புத்த மதம் இலங்கைத் தீவிற்கு அறிமுகமானது.
எது எப்படியோ, தமது நிர்வாக வசதிக்காக ஆங்கிலேயர் இலங்கையை ஒரே தேசமாகத் தைத்துக் கோர்த்தனர். பல மன்னர்கள், ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்து இந்தியா என்ற தேசத்தையும் அவர்கள் அப்படித்தான் உருவாக்கினார்கள். ஆனால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் ஒரு கனத்த வேறுபாடு இருந்ததை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. இந்தியத் துணைக் கண்டத்தில் பல மொழி பேசுகிற, பல ராஜாக்களால் ஆளப்பட்ட, பல இன மக்களையும் ஒரே நிர்வாகக் குடையின் கீழ் கொணர்ந்தனர். மேலும் இந்து மதம் தேசம் முழுமைக்கும் பொதுவாக இருந்தது. அதே போல முஸ்லிம் மக்களும் இந்தியா முழுவதும் பரவியிருந்தனர். ஆனால் இலங்கை அப்படியல்ல. அங்கு தமிழன் ஒருவனை பெளத்தனாகக் காண்பது அரிது. அதே போல சிங்களவனில் ஒருவன் கூட இந்து கிடையாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இரு ராஜ்ஜியங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டே இருந்தன. சிங்கள வரலாறு நெடுகிலும் தமிழர்களை எதிரிகளாகவே சித்தரித்து வந்திருந்தது. இருவருக்கும் தனித்தனி மொழி, கலாச்சாரம், சமயம், ராஜ்ஜியம் என்று ஒன்றுகூட ஒத்து வராத முரண்பாடு. ஆங்கில ஆட்சியின் கீழ் ஒரே தேசமாக இலங்கை மாறினாலும் அந்த முரண்பாடு ஆழமாக ஓடிக்கொண்டுதான் இருந்திருக்க வேண்டும் என்று பின்னர் நடந்த நிகழ்வுகள் புலப்படுத்தின.
ஆனால், இயற்கை எழில் கொஞ்சும் இலங்கையின் பொழிலும், இந்தியாவின் பாதுகாப்பிற்கான அதன் பிராந்திய முக்கியத்துவமும், இங்கிலாந்திற்கும் ஏனைய ஐரோப்பாவிற்கும் புத்துணர்ச்சியளித்த சிலோன் தேயிலையின் தனித்துவமும் இலங்கைக்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுத் தந்தது. ஆங்கிலப் பேரரசின் மணிமகுடமாக இந்தியா விளங்கியது. இலங்கையை 'இந்தியப் பெருங்கடலின் முத்து' என்று ஆங்கிலேயர் சொல்லி மகிழ்ந்தனர்.
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - செல்லமுத்து குப்புசாமி - 2
பதிவு வகை : கட்டுரை, வார நட்சத்திரம்
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment